| |
| பாண்டிச்சேரி மாநிலத்தை சேர்ந்த,
தனி மாவட்ட அந்தஸ்து பெற்றுள்ள காரைக்கால், ஃப்ரான்ஸ் நாட்டு குடியுரிமை
பெற்றவர்கள் அதிகம் வசிக்கும் பகுதி. காரைக்கால் நகரம் நாகப்பட்டினத்தில்
இருந்து சுமார் 18 கிலோ மீட்டர் தொலைவில் இருந்தாலும், காரை மாவட்ட
எல்லை, நாகையில் இருந்து சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவிலேயே (நாகூரை
ஒட்டி) ஆரம்பித்துவிடுகின்றது. உலகப் பிரசித்திப் பெற்ற திருநள்ளாறு
சனீஸ்வரத்தளம் இம்மாவட்டத்திலேயே அமையப் பெற்றுள்ளது. புகழ் பெற்ற
இந்நகரில், ரினைய்சன்ஸ் ட்ரஸ்ட், காரைக்கால் பசுமை நகரம் அரிமா சங்கம்
ஆகிய அமைப்புகளுடன் சேர்ந்து அறுசுவை இணையத்தள நிர்வாகம், 17-7-2005,
ஞாயிற்றுக்கிழமை அன்று, மாவட்ட அளவிலான சமையல் போட்டியை நடத்தியது. |
| ரினைய்சன்ஸ் ட்ரஸ்டின் நிர்வாகி திரு.
கண்ணப்பன் மற்றும் ட்ரஸ்டின் சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் திரு. வீரபாண்டியன்
அவர்களும் இப்போட்டி நடத்துவதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும்
செய்ததோடு மட்டுமல்லாமல், பரிசுகளுக்கான செலவுத் தொகையையும் ஏற்றுக்கொண்டனர்.
போட்டி குறித்த விளம்பரம், விண்ணப்பங்கள் வழங்குதல், பூர்த்தி செய்யப்பட்ட
விண்ணப்பங்களை சேகரித்தல் ஆகிய பொறுப்புகளை, காரைக்கால் பசுமை நகர
அரிமா சங்கத்தினைச் சேர்ந்த திருமதி. ராஜேஸ்வரி மற்றும் திருமதி. சுதா
செல்லப்பன் ஆகியோர் எடுத்துக் கொண்டு, திறம்பட செய்து முடித்து இருந்தனர். |
| போட்டியில் பங்கு கொள்ள, காரைக்காலைச்
சுற்றியுள்ள கிராமப் புறங்களைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் மிகவும் ஆர்வம்
காட்டியது இப்போட்டியின் சிறப்பு. காரைக்காலுக்கு அருகில் உள்ள ஊர்களான
நிரவி, வாஞ்சியூர், போலகம், திருப்பட்டினம், திருநள்ளாறு, விழுதியூர்,
கோட்டுச்சேரி, காரைக்கால் மேடு, கிளிஞ்சல் மேடு ஆகியவற்றில் இருந்து
நிறைய பெண்கள் கலந்து கொண்டனர். கிட்டத்திட்ட ஐம்பது சதவீதத்திற்கு
அதிகமானவர்கள், புறநகர் பகுதியைச் சேர்ந்தவர்களாக இருந்தனர். இவர்கள்
உணவு அலங்காரத்தில் அதிகம் அக்கறை செலுத்தவில்லை என்றாலும், குறைந்த
செலவு, சத்தான உணவு என்ற அம்சத்திற்கு நிறைய முக்கியத்துவம் கொடுத்து,
உணவினை தயாரித்து வந்திருந்தனர். |
| போட்டி வளாகம் |
| இப்போட்டியானது காரை நகரின் மையப்பகுதியில்,
பாரதியார் சாலையில் அமையப்பெற்றுள்ள, நேஷனல் கேட்டரிங் கல்லூரியில்
நடைபெற்றது. கேட்டரிங் கல்லூரி நிர்வாகி திரு. எ.கோவிந்தராசு அவர்கள்
இதற்கான ஏற்பாடுகளை மிக அருமையாக செய்து கொடுத்து இருந்தார். அக்கல்லூரி
மாணவர்கள் மட்டுமன்றி பணியாற்றும் பயிற்சியாளர்களும் இப்போட்டிக்காக
தங்கள் நேரத்தை ஒதுக்கி, தேவையான அனைத்து உதவிகளையும் செய்து கொடுத்து,
விழா சிறப்பாக நடைபெற பெரிதும் துணையாக இருந்தது நன்றியுடன் பாராட்டப்பட
வேண்டிய விசயம். |
| நடுவர்கள் |
| இப்போட்டிக்கு நடுவர்களாக பணியாற்றியவர்களை
பற்றி சிறிய அறிமுகம் |
 |
திருமதி.
சாந்தா வில்லியம்ஸ் காரைக்கால் நகர திட்ட அலுவலராக பணியாற்றிக்
கொண்டிருக்கும் இவர், நியூட்ரீசியன் துறையில் வல்லுநர். ஆரோக்கிய
உணவுகள் குறித்து நிறைய எழுதியுள்ள இவர், உணவு சம்பந்தமான பல்வேறு
செயல் விளக்க நிகழ்ச்சிகளை, மகளிர் குழுக்களுக்காக நடத்தி வருகின்றார்.
பல சமையல் போட்டிகளுக்கு நடுவராக பணியாற்றி முன் அனுபவம் நிரம்பப்
பெற்றவர். |
 |
திருமதி. பத்மஜா
இப்போட்டி நடைபெற பெரிதும் துணையாய் இருந்த ரினைய்சன்ஸ்
ட்ரஸ்டின் செயலாளர். இவர் வங்கி ஒன்றில் பணியாற்றி வருகின்றார்.
சமையலில் மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளவர். ஏராளமான சமையல் புத்தகங்கள்
இவர் வீட்டு நூலகத்தில் உள்ளன. விதவிதமாக சமைத்து சாப்பிடுவதுதான்
எனது பொழுதுபோக்கு என்று கூறும் இவர், மல்லிகா பத்ரிநாத்தின் தீவிர
ரசிகை. |
 |
திரு. வி. கருணாநிதி
காரைக்கால் நகரில் மிகவும் புகழ் வாய்ந்த முத்துப்பிள்ளைஸ் ரொட்டிக்கடையின்
உரிமையாளர். உணவுத்துறையில் நீண்ட அனுபவம் கொண்டவர். பேக்கரி தொழில்
குறித்த ஆழ்ந்த ஞானம் கொண்டவர். காரைக்கால் நகர மக்களுக்கு நன்கு
அறிமுகமான, தொண்டார்வம் மிக்க சேவையாளர். |
 |
திரு. எ. கோவிந்தராசு
அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், கிழக்காசிய நாடுகள் என்று பல நாடுகளில்
சமையல் கலை நிபுணராக பணியாற்றிய இவர், கடந்த 11 வருடங்களாக, நாகூரில்
நேஷனல் கேட்டரிங் கல்லூரி என்ற பெயரில் சமையல் கலைப் பயிற்சி கல்லூரியினை
நடத்தி வருகின்றார். இந்த வருடம் காரைக்கால் நகரிலும் அதே பெயரில்
ஒரு கல்லூரியினைத் தொடங்கியுள்ளார். இந்த சமையல் துறையையே சுவாசித்துக்
கொண்டிருப்பவர். |
| விழாவின் தலைவர் |
 |
திரு. ஆர். மோகன் காரைக்கால்
திட்ட ஆராய்ச்சி மையத்தில் இணை இயக்குநராக பணிபுரிபவர். பெரிய பதவியில்
இருந்தாலும் மிக எளிமையாய் இருப்பவர். கிரிக்கெட் ஆர்வலர். மிகச்
சிறந்த பேச்சாளர். மெல்லிய குரலில் மென்மையாய் பேசும் இவர் பேச்சில்,
நகைச்சுவை இழைந்தோடும். காரைக்கால் நகரில் இப்போட்டி நடைபெற எல்லா
வகையிலும் துணை நின்று உதவியவர். |
| சிறப்பு விருந்தினர் |
 |
திரு. பால மணிவாசகம்
காரைக்காலைச் சேர்ந்தவர் என்றாலும் தற்போது வசிப்பது ஃப்ரான்ஸில்.
அங்குள்ள ஃப்ரான்ஸ் வாழ் இந்திய குடிமக்கள் சங்கம் ஒன்றிற்கு தலைவராக
இருப்பவர். சிறந்த தொண்டார்வலர் |
| இரண்டரை மணியளவில் போட்டி துவங்கியது.
முதல் சுற்றில் தேர்ந்தெடுக்கப்பட்ட 100 பெண்களில் 85 பேர் மட்டும்
உணவினைத் தயார் செய்து எடுத்து வந்து இருந்தனர். ஒவ்வொரு உணவிற்கும்,
அதனைத் தயாரிக்க ஆகும் செலவு, அதில் அடங்கியுள்ள சத்துக்கள், ருசி
மற்றும் அலங்காரம் ஆகிய நான்கு அடிப்படை விசயங்களுக்கு நடுவர்களால்
மதிப்பெண்கள் வழங்கப்பட்டன. மதிப்பெண்கள் அடிப்படையில் ஒவ்வொரு பிரிவிலும்
முதல் இரண்டு இடங்களைப் பிடித்தவர்கள் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டனர். |
| உணவு தேர்வு நடந்து கொண்டிருக்கும்
சமயம், போட்டியாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் பயனுறும் வண்ணம், நேஷனல்
கேட்டரிங் கல்லூரியினைச் சேர்ந்த பயிற்சியாளர்கள், உணவு குறித்த சுவையான
தகவல்களை அளித்துக் கொண்டிருந்தனர். பல சமையல் குறிப்புகளையும் வழங்கினர்.
பார்வையாளர்களும் தங்களுக்கு உள்ள சந்தேகங்களைக் கேட்டு விளக்கம் பெற்றனர்.
இது பலரும் பாராட்டிய நிகழ்ச்சியாய் அமைந்தது குறிப்பிடத்தக்கது. |
| பரிசளிப்பு விழா |
| மாலை 5 மணியளவில் பரிசளிப்பு விழா
துவங்கியது. திரு. ஆர். மோகன் அவர்கள் விழாவிற்கு தலைமை வகித்து, சிறப்புரையாற்றினார்.
நடுவர்கள் ஒவ்வொருவரும் இப்போட்டியில், உணவுத் தேர்வின் போது தங்களுக்கு
கிடைத்த அனுபவத்தை பகிர்ந்து கொண்டு, பங்குபெற்றவர்களை வாழ்த்தினார்கள்.
பிறகு அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து இருந்த போட்டி முடிவுகளை அறுசுவை
நிர்வாகி திரு. பாபு அவர்கள் அறிவித்தார். |
| இப்போட்டியில் காரைக்கால் அவ்வையார்
மகளிர் கல்லூரியினைச் சேர்ந்த மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டிருந்தனர்.
கல்லூரி மாணவிகள் பரிசு பெறும் போதெல்லாம் அரங்கமே அதிரும் வண்ணம்,
சக மாணவிகள் உற்சாகமாக கைத்தட்டி பாராட்டுகளைத் தெரிவித்தனர். வெற்றி
பெற்ற 20 பெண்களுக்கு பரிசுகளும், கோப்பைகளும் வழங்கப்பட்டது. அதனைத்
தொடர்ந்து போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும், வீட்டு உபயோகப் பொருட்கள்
அடங்கிய பை ஒன்று பரிசாக வழங்கப்பட்டது. இறுதியில் தேசிய கீதத்துடன்
விழா இனிதே நிறைவுற்றது. |
| |
| |
| பரிசளிப்பு
விழா படங்கள் சில.. |
| |
| போட்டியில்
வெற்றி பெற்ற உணவுகளின் செய்முறைக் குறிப்புகள் மற்றும் படங்கள் |
| |
| ஆறுதல்
பரிசு பெற்ற உணவுகளின் செய்முறைக் குறிப்புகள் |
| |
| இதரப்
போட்டிகள் பக்கங்களுக்குச் செல்ல.. |
| |
| |