| |
 |
| எந்த உணவுப் பொருளும் முதலில்
கண்ணைக் கடந்துதான் நாவினைத் தொடுகின்றது. கண்ணுக்கு இனிமையான
உணவு, நாவிற்கு கூடுதல் சுவையளிக்கின்றது. இதற்காகத்தான் உணவுகளை
அலங்கரித்துப் பரிமாறுகின்றனர். மற்ற எல்லா உணவுகளை விடவும்,
கேக் பிஸ்கட் வகைகளுக்கு அலங்காரம் என்பது இன்றியமையாதது. அதிலும்
குறிப்பாய் கேக்குகளுக்கு அலங்காரம் செய்வது என்பது இன்றைய தேதியில்
ஒரு தனிப் பெரும் கலையாக ஆகிவிட்டது. வருடக் கணக்கில் கற்றுக்
கொள்ள, இதற்கென வகுப்புகளும் வந்து விட்டன. |
| நாம் வீட்டில் தயாரிக்கும்
கேக் வகைகளுக்கு அலங்காரம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
கேக் அலங்காரத்திற்கு முக்கியமானது, ஐசிங் (icing) என்று சொல்லக்கூடிய
சர்க்கரை-வெண்ணெய் கலவை. இதனைப் பொதுவாக மூன்று வகை ஐசிங்களாகப்
பிரிக்கலாம். |
1. வாட்டர் ஐசிங் (Water Icing)
2. பட்டர் ஐசிங் (Butter Icing)
3. ராயல் ஐசிங் (Royal Icing) |
| ஐசிங் செய்வதற்கு ஐசிங் சர்க்கரை
(icing sugar) தேவைப்படுகிறது. இது வெள்ளை வெளேரென்று மிருதுவாக
இருக்கும். பூவேலை செய்வதற்கு ஐசிங் சிறிது கெட்டியாக இருத்தல்
வேண்டும். அப்பொழுதுதான் மேலே போட்ட பூக்கள் நெகிழ்ந்து போகாமல்
விறைப்பாக இருக்கும். |
| வாட்டர் ஐசிங் (Water Icing) அல்லது
கிளேஸ் ஐசிங் (Glaze icing) செய்ய: |
| சுமார் ஒரு பவுண்டு கேக்கின்
மேல் செய்வதற்கு 250கிராம் ஐசிங் சர்க்கரை, ஒரு தேக்கரண்டி கோகோ,
2 மேசைக்கரண்டி தண்ணீர் தேவை. இந்த அளவு 10 கேக்கின் மேல் விடலாம்.
இம்மூன்றையும் ஒரு பாத்திரத்தில் போட்டுச் சேர்த்து கலக்கவும்.
அடுப்பின் மேல் வைத்து சற்றுக் கிளறவும். கை பொறுக்கும் சூடு
ஆனவுடன் கீழே இறக்கி உடனே கேக்கின் நடுப்பாகத்தில் விடவும்.
இது தானாகவே கேக்கின் மேல்பாகம் முழுவதிலும் பக்கவாட்டிலும்
பரவிவிடும். பக்கவாட்டில் சமமாக பரவாவிடில் பட்டைக் கத்தியால்
சரி செய்யவும். |
முக்கிய
குறிப்புகள்:
- இந்த ஐசிங் சீக்கிரமாக இறுகிவிடும்
- இந்த கலவையை கேக்கின் மேல் விடும்போது கத்தியைப் பயன்படுத்தக்
கூடாது. தானாகவே பரவிவிடும்.
- இந்த ஐசிங்கை கொதிக்க விடக்கூடாது. கொதிக்க விட்டால்
இதன் பளபளப்பு குறைந்து விடும்.
- அதிக அளவு தண்ணீர் கலந்தால் ஐசிங் கேக்கின் மேல் ஒட்டாமல்
போய்விடும்.
- மிகுந்த கெட்டியாக இருந்தால் ஐசிங் கேக்கின் மேல் பாகத்தில்
பரவாமல் அப்படியே இறுகிவிடும். பதமாக இருக்க வேண்டும்.
இது கேக்கின் மேல் தடவுவதற்குத்தான் உபயோகம்.
|
| வாட்டர் ஐசிங்கில் சிலவகைகள்: |
| 1, ஆரஞ்சு
அல்லது எலுமிச்சம்பழ ஐசிங் (Orange or Lemon Icing)
தேவையான அளவு சர்க்கரையுடன் 2 தேக்கரண்டி ஆரஞ்சுப் பழரசம்,
2 துளிகள் ஆரஞ்சு கலர் போட்டு மேற்சொன்னபடி செய்யவும். எலுமிச்சம்பழரசம்
அரை தேக்கரண்டி, 2 தேக்கரண்டி தண்ணீர், 2 துளிகள் மஞ்சள் கலர்
சேர்த்து முன் சொன்னமாதிரியே செய்யவும்.
2, பைனாப்பிள் ஐசிங் (Pineapple icing)
பதப்படுத்தப்பட்ட பைனாப்பிள் டின்னில் உள்ள ஜுஸ் 2 மேசைக்கரண்டி,
2 துளிகள் பைனாப்பிள் எசன்ஸ், 2 துளிகள் பச்சைக் கலர் சேர்த்து
மேற் சொன்னபடி செய்யவும்.
3, ராஸ்ப் பெர்ரி ஐசிங் (Rasperry Icing)
ராஸ்ப் பெர்ரி எசன்ஸ் சில துளிகள், ராஸ்ப் பெர்ரி கலர் 2 துளிகள்,
2 மேசைக்கரண்டி தண்ணீர் சேர்த்து முன் சொன்னமாதிரி செய்யவும். |
| வெண்ணெய் ஐசிங் (Butter Icing) |
தேவையானவை:
வெண்ணெய்=100 கிராம்
ஐசிங் சர்க்கரை=250 கிராம்
தேவையான கலர்கள்(காய்கறி கலர்) |
செய்முறை:
வெண்ணெயை நன்றாக மரக்கரண்டியினால் குழைக்கவும். ஐசிங் சர்க்கரையை
சிறிது சிறிதாகச் சேர்த்து குழைக்கவும். பிறகு தேவையான கலர்
சேர்க்கவும். வெண்ணை ஐசிங் செய்வதற்கு கேக் நன்றாக ஆறவேண்டும்.
முதலில் குழைத்த கலவையை பட்டைக் கத்தியினால் கேக்கின் மேல் பாகத்திலும்
பக்கவாட்டிலும் சமமாகத் தடவ வே ண்டும். பிறகு தேவையான அச்சினால்
பூ வேலைகள் மேலே செய்யவும். பட்டர் ஐசிங் கலவை தளர்த்தியாக இருந்தால்
சர்க்கரையை சிறிது அதிகம் சேர்க்கவும். அதிகம் கெட்டியாக இருந்தால்
வெண்ணெய் சிறிது கூட சேர்க்கவும். ஐசிங் கலவை கையில் ஒட்டாமல்
இருத்தல் வேண்டும். |
| வெண்ணெய் ஐசிங்கில் சில மாறுதல்கள்: |
1, சாக்லெட்
ஐசிங் (Chocolate icing)
மேற் சொன்ன கலவையில் 2 தேக்கரண்டி கோகோ சேர்க்கவும். 2,
காபி ஐசிங் (Coffee icing)
இன்ஸ்டன் காபிப் பொடி அரை தேக்கரண்டி சேர்க்கவும். 3,
குக்கிங் சாக்லெட் ஐசிங் (Cooking chocolate icing)
25 கிராம் சாக்லெட், 50 கிராம் வெண்ணெய், ஒரு மேசைக்கரண்டி தண்ணீர்,
2 தேக்கரண்டி கோகோ. சாக்லேட்டைச் சிறு துண்டுகளாக்கி வெண்ணெயுடன்
சேர்த்து, தண்ணீருடன் கோகோவும் சேர்த்து ஒரு பாத்திரத்தில்
போடவும். பாத்திரத்தை கொதிக்கும் தண்ணீரில் வைத்து உருக்கிக்
கொள்ளவும். பிறகு ஆற வைத்து ஐசிங் சர்க்கரையை கையில் ஒட்டாமல்
வரும் வரை சேர்த்துக் கொள்ளவும். பிறகு கேக்கின் மேல் பட்டைக்
கத்தியினால் தடவவும். வெண்ணை ஐசிங்கை கேக்கின் மேல் சமமாகத்
தடவ கத்தியை குளிர்ந்த நீரில் தோய்த்து உபயோகிக்கவும். |
| ராயல் ஐசிங் (Royal icing) |
| சுமார் 8 அங்குல விட்டம் 3
அங்குல உயரமும் உள்ள கேக்கிற்குத் தேவையானவை |
ஒரு முட்டையின் வெண்கரு
சர்க்கரை=400 கிராம்
எலுமிச்சம்பழ சாறு=சில துளிகள் |
செய்முறை:
ஐசிங் சர்க்கரையைச் சலித்துக் கொள்ளவும். முட்டை வெள்ளை கருவை
ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும். ஐசிங் கலப்பதற்கு பீங்கான்
கிண்ணத்தை உபயோகிப்பது நல்லது. முட்டை வெள்ளையில் ஐசிங் சர்க்கரையை
சிறிது சிறிதாக சேர்த்துக் கொண்டே தொடர்ந்து அடிக்கவும். எலுமிச்சம்
பழச்சாற்றையும் சேர்க்கவும். சுமார் 10 நிமிடங்கள் வரை இதை
நன்றாக அடிக்க வேண்டும். இந்த ஐசிங் கலந்து வைத்தால் மேலே
ஈரத்துணியால் மூட வேண்டும். கேக்கின் மேல் தடவவும் இந்தக்
கலவை சிறிது தளர்த்தியாக இருக்க வேண்டும்(இட்ட்லி மாவைப் போல்)
கலவை மிகவும் தளர்ச்சியாக இருந்தால் கேக்கின் மேல் ஒட்டாது.
இந்த ஐசிங் தடவுவதற்கு கேக்கின் மேல் பாகம் நன்றாக பளபளப்பாக
இருக்க வேண்டும். இந்த ஐசிங் கலவையை கேக்கின் மேல் பாகத்திலும்
செய்ய பட்டைக் கத்தியை இளஞ்சூடான தண்ணீரில் தோய்த்து மேலே
சமமாக ஆகும்வரை தடவவேண்டும்.
இந்த ஐசிங்கில் பூ வேலை செய்ய கலவை சற்று விறைப்பாக இருக்க
வேண்டும். பூ வேலை செய்யும் அச்சினால் கேக்கின் மேல்பக்கத்திலும்
ஓரங்களிலும் கீழ்பக்கங்களிலும் பூ வேலை செய்யவும். |
| ஐசிங் செய்யாமல் கேக்குகளை அழகு செய்தல்: |
பருப்பு
வகைகளினால் அழகு செய்தல்:
பருப்பு வகைகள் ருசியைக் கூட்டும் பாதாம், அக்ரூட், முந்திரி
பருப்பு முதலில் வகைகளை உபயோகப் படுத்தலாம், பாதாம் பருப்பை
வெந்நீரில் போட்டு தோலை நீங்கி வைத்துக் கொள்ளவும். பேக் செய்வதற்கு
முன்பே கேக்குகளின் வைத்து அழகு செய்வதாக இருந்தால் முட்டை வெள்ளையை
பாதாம் பருப்பின் மேல் பிரஷ்ஷால் தடவவும். கேக் பேக் ஆனவுடன்
வைப்பதாக இருந்தால் சிறிது ஜாம் தடவி ஒட்டி விடவும். |
பிளாஸ்டிக்
வட்டத்தின் மூலம் அழகு செய்தல்:
சாப்பாட்டு மேசையின் மேல் வைக்கும் பூவேலையுடன் கூடிய பிளாஸ்டிக்
வட்டம் தேவை. அதை கேக்கின் மேல் வைத்து ஐசிங் சர்க்கரையை சிறிது
சிறிதாக சலிக்கவும். 10 நிமிடங்களுக்கு பிறகு மறுமுறை சலிக்கவும்.
அந்த வட்டத்தை ஜாக்கிரதையாக மேல் நோக்கி எடுக்கவும். பக்கவாட்டில்
எடுத்தால் சர்க்கரை எல்லாம் கலந்துவிடும். |
| ஐசிங் செய்வதற்கு பயன்படும் அச்சுக்கள்
சில: |
 |
| |
|
| கிறிஸ்துமஸ்
சிறப்புப் பக்கத்திற்குச் செல்ல.. |
| |
|
| |
| |
|