| |
| இந்தியா முழுவதும் கொண்டாடப்படும்
ஒரு இந்து பண்டிகை இந்த விநாயகர் சதுர்த்தி. பிள்ளையார் எல்லோராலும்
வணங்கப்படும் சற்று எளிமையான தெய்வம். இவருக்கு உருவம் கொடுத்தல்
மிகவும் எளிது. எட்டு அரச இலைகளைக் கொண்டு கொடுக்கப்பட்ட பிள்ளையார்
வடிவம், இன்று உலகம் முழுவதிலும் பிரபலமாகி இருக்கின்றது. |
பிள்ளையார்
சதுர்த்தி என்றதும் முதலில் நினைவிற்கு வருவது மோதகம் என்று
அழைக்கப்படும் கொழுக்கட்டைதான். அரை வட்ட வடிவில் சற்று நீளமாக
உள்ளதை கொழுக்கட்டை என்றும், உருண்டையாக மேற்புறம் குவித்து
செய்யப்படுவதை மோதகம் என்றும் சொல்கின்றார்கள். வடிவங்களில்தான்
மாற்றம். மற்றபடி செய்முறை, சேர்க்கப்படும் பொருட்கள் எல்லாம்
ஒன்றுதான். மோதகம் செய்து படைக்கும் வழக்கம் தென்னிந்தியாவில்தான்
அதிகம் இருக்கின்றது. வட இந்தியர்கள் லட்டு செய்து படைக்கின்றனர். |
| இங்கே 20க்கும் அதிகமான பூரண
வகைகள் செய்முறை விளக்கத்தினை தொகுத்துக் கொடுத்துள்ளோம். வெறும்
பூரணம் செய்முறை மட்டுமல்லாமல், முழு கொழுக்கட்டை செய்முறையையும்
கொடுத்துள்ளோம். கொழுக்கட்டை மேல் மாவு என்பது பொதுவாய் ஒரே
மாதிரி தயார் செய்வதுதான். சில வகைகளில் மட்டும் மாற்றங்கள்
இருக்கும். பூரணம் என்றில்லாமல், கொழுக்கட்டை என்ற பெயரில் குறிப்புகளைக்
கொடுத்துள்ளதால், ஒவ்வொரு குறிப்பிலும் மேல்மாவு செய்முறையும்,
வேக வைக்கும் முறையும் மீண்டும் மீண்டும் இடம் பெறும். |
சாதாரணமாக
கொழுக்கட்டை மேல்மாவு, பச்சரிசியை இடித்து கிடைக்கும் அரிசி
மாவில் செய்யப்படுகின்றது. பச்சரிசியை சில மணி நேரங்கள் ஊற வைத்து,
பிறகு நீரை வடித்து நிழலில் சற்று நேரம் உலர்த்தி, அதன் பிறகு
அவற்றை மிக்ஸியில் அரைத்து மாவு தயார் செய்யப்படுகின்றது. உரலில்
இடித்து தயாரிக்கும் அரிசி மாவு, நல்ல சுவையைத் தரக்கூடியது.
இருந்தாலும், இன்றைய காலக்கட்டத்தில் கிராமங்களில் வசிப்போரே
உரல்களை மறந்து, மிக்ஸிக்குத் தாவி விட்ட நிலையில், நாமும் அதனை
மறந்து விடலாம். இன்று கொழுக்கட்டை மாவு தயார் நிலையில், கடைகளில்
ஏராளமாய் கிடைக்கின்றன. இது நமது வேலைப் பளுவை இன்னும் சற்று
குறைக்கின்றது. |
| கொழுக்கட்டையின் சுவையை மேல்மாவுதான்
பெரும்பாலும் நிர்ணயிக்கின்றது. மேல் மாவு பதமாக இருக்கவேண்டும்.
நாம் வீட்டில் இடித்தோ, அரைத்தோ தயாரிக்கும் மாவினை, முதலில்
இட்லி பானையில் ஒரு தட்டில் வைத்து 3 நிமிடங்கள் வேக வைத்து
எடுத்துக் கொள்ளவும். பிறகு அதில் போதுமான அளவிற்கு உப்பு கலந்த
தண்ணீர் விட்டு வெண்ணெய் பதத்திற்கு பிசைந்து கொள்ளவும். (பொதுவாக
மாவின் அளவில் ஒன்றரை அல்லது இரண்டு பங்கு தண்ணீர் விட வேண்டியிருக்கும்.)
வேக வைத்து எடுத்த மாவு சூடாக இருப்பதால், வெந்நீர் விட்டு பிசைய
வேண்டிய அவசியம் இல்லை. தேவையெனில் சற்று பதமான வெந்நீர் விட்டு
பிசைந்து கொள்ளலாம். |
| பாத்திரத்தில் நீர் ஊற்றி,
உப்பு போட்டு கொதிக்க வைத்து, அதில் நேரடியாக மாவினைக் கொட்டி
சில நிமிடங்கள் வேக வைத்து, பிறகு இறக்கி, பிசைந்து மேல்மாவு
செய்வதும் உண்டு. இதற்கு சற்று அனுபவம் வேண்டும். எடுத்துக்
கொள்ளும் நீரின் அளவு அதிகமாகிவிடக் கூடாது. பொதுவாய் ஒரு கோப்பை
மாவிற்கு ஒண்ணேகால் கோப்பை தண்ணீர் எடுத்துக் கொள்ள வேண்டும்.
நீர் கொதித்தவுடன் மாவினைக் கொட்டி, சுமார் 15 நிமிடங்கள் வேக
விடவும். பிறகு இறக்கி, சிறிது நீர் தெளித்து, கெட்டியாக பிசைந்து
கொள்ளவும். |
| கடைகளில் கிடைக்கும் மாவுகள்
பொதுவாய் வறுத்து, பிறகு பைகளில் அடைக்கப்பட்டிருக்கும். அவற்றை
மீண்டும் ஆவியில் வேக வைக்க வேண்டிய அவசியம் இல்லை. அந்த வகை
மாவுகளில், உப்பு கலந்து வெந்நீரை ஊற்றி அந்த சூட்டிலேயே, மாவினை
பிசைந்துவிட வேண்டும். வெந்நீரானது மிகவும் ஆறியிருக்கக் கூடாது.
அதே சமயம் அதிக சூடாகவும் இருக்கக் கூடாது. இந்தப் பதம்தான்
மாவின் இளகுத்தன்மையை நிர்ணயிக்கின்றது. |
| மாவு பதமாக இல்லாவிடில், கொழுக்கட்டைகள்
வேக வைத்த பிறகு வெடித்தும், விரைத்தும் இருக்கும். மிருதுவாக
இல்லாமல் சற்று கரகரப்பாக இருக்கும். |
| கொழுக்கட்டைகளை வாழையிலையில்
தட்டியும் செய்யலாம். பெரும்பாலும், பழக்கப்பட்டவர்கள் கைகளில்
தட்டியே செய்து விடுகின்றனர். கைகளில் மாவு ஒட்டாமல் இருக்க
சிறிது எண்ணெய்யை உள்ளங்கைகளில் தேய்த்துக் கொள்ளுதல் நலம்.
மாவினை தட்டி விரிக்கும் போது எல்லா இடங்களிலும் ஒரே தடிமனில்
மாவு இருத்தல் வேண்டும். அதே போல், பூரணம் வைத்து மூடும் போது
இடைவெளி இல்லாமல்,நன்கு ஒட்டி மூட வேண்டும். இல்லையெனில் வேக
வைக்கும்போது ஓரங்கள் வெடித்து, பூரணம் வெளி வந்துவிடும். அதோடு
மட்டுமன்றி, பூரணத்தில் நேரடியாகப் படும் நீராவி, அதன் சுவையை
மட்டுப்படுத்தி விடும். |
| மேலே குறிப்பிடப்பட்டுள்ள விசயங்களில்
சற்று கவனமாய் இருந்தால் போதும். மற்றபடி, கொழுக்கட்டை செய்வது
மிகவும் எளிதான ஒன்றுதான். வகை வகையான பூரணங்கள் கொண்டு செய்யப்படும்
கொழுக்கட்டைகள் பலவற்றைக் கீழேக் கொடுத்துள்ளோம். இந்த விநாயகர்
சதுர்த்தியை வித்தியாசமான சுவைகளுடன் கொண்டாடி மகிழ எங்களின்
வாழ்த்துக்கள். |
| |
| பலவகையான பூரணக் கொழுக்கட்டைகள் |
| |
|
| கடலைப்பருப்பு
கொழுக்கட்டை |
எள்ளு
கொழுக்கட்டை |
| உளுத்தம்பருப்பு
கொழுக்கட்டை |
வெஜிடபிள்
கொழுக்கட்டை |
| பொட்டுக்கடலை
கொழுக்கட்டை |
பிடி
கொழுக்கட்டை |
| பட்டாணி
கொழுக்கட்டை |
தேங்காய்
பூரணம் கொழுக்கட்டை |
| உப்பு
கொழுக்கட்டை |
வேர்க்கடலை
கொழுக்கட்டை |
| பயற்றம்பருப்பு
கொழுக்கட்டை |
கருப்பட்டி
கம்பங்கொழுக்கட்டை |
| பால்
கொழுக்கட்டை |
உளுந்து
கொழுக்கட்டை |
| ரவா
கொழுக்கட்டை |
மசாலா
கொழுக்கட்டை |
| ரவா
காய்கறி கொழுக்கட்டை |
கேழ்வரகு
கொழுக்கட்டை |
| கடலைப்பருப்பு
கார கொழுக்கட்டை |
அவல்
கொழுக்கட்டை |
| ஜவ்வரிசி
கொழுக்கட்டை |
பப்பாளி
கொழுக்கட்டை |
| தேன்
கொழுக்கட்டை |
உலர்ந்த
பழ கொழுக்கட்டை |
| ரவா
பால் கொழுக்கட்டை |
கோதுமை
மாவு கொழுக்கட்டை |
| |
|
| |
|