இனியொரு பணி செய்வோம் - 6

சொந்த தொழில்Work from home

அன்புத் தோழிகளுக்கு,

எப்போது உங்களுக்கு நாமும் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் வருகிறது?

விலைவாசி மிகவும் அதிகரித்து விட்டது, செலவுகள் கூடியிருக்கு, கணவரின் சம்பளம் உயரவில்லை என்று தோன்றும்போது..

எவ்வளவுதான் கணவரின் வருமானம் அதிகரித்தாலும், இன்னும் அதிக வருமானம் இருந்தால் குழந்தைகளுக்கு இன்னும் கொஞ்சம் தரமான கல்வி, நல்ல உடைகள் என்று வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்ளலாமே என்று நினைக்கும்போது..

சொந்த வீடு இருந்தால் நன்றாக இருக்கும், இப்போது கொடுக்கும் வாடகையோடு இன்னும் கொஞ்சம் அதிகப் பணம் சேர்த்து இ.எம்.ஐ. கட்ட முடிந்தால், கொஞ்ச வருடத்தில் வீடு நமக்கு சொந்தமாகி விடும். அல்லது வெகு நாட்களுக்கு முன்னால் வாங்கிப் போட்ட இடத்தில் வீடு கட்டினால் நன்றாக இருக்கும். ஆனால் வங்கிக் கடனுக்கு மாதாமாதம் பெரிய தொகை கட்ட வேண்டுமே, என்ன செய்யலாம் என்று யோசிக்கும்போது..

இப்போ பையனுக்கும் பெண்ணுக்கும் ஸ்கூல் செலவுகள் சமாளிக்கவே சிரமமாக இருக்கு. இன்னும் கொஞ்ச வருஷம்தான், இப்பவே பணம் சேமிக்க ஆரம்பித்தால்தான் இன்சினீயரிங், மெடிக்கல் என்று பல லட்சங்கள் கொடுத்து சேர்க்க முடியும். நாமும் சும்மா இருக்காமல் ஏதாவது உருப்படியாக செய்யணும் என்று திட்டமிடும்போது..

தங்கம் விலை நாளுக்கு நாள் ஏறிக் கொண்டே போகிறது. என் அம்மா அப்பா அவர்களிடம் இருந்த நகை, அப்பாவின் ரிடையர்மெண்ட் சேமிப்பு எல்லாம் கொடுத்து என் கல்யாணத்தை நடத்தினார்கள். நம் பெண்ணுக்கு நகை வேண்டுமென்றால் மொத்தமாக லட்சக் கணக்கில் கொடுத்து வாங்க முடியுமா? இப்போதிலிருந்தே சேமித்தால்தானே, கொஞ்சம் கொஞ்சமாக வாங்க முடியும் என்று கவலைப் பட ஆரம்பிக்கும்போது..

நாம் இருப்பது வெளிநாட்டில். வருடம் ஒரு முறையாவது தாய் நாட்டுக்குப் போக வேண்டும். சும்மா போக முடியுமா – இரண்டு பக்கத்து சொந்தக்காரர்கள், நண்பர்கள் எல்லோருக்கும் பரிசுகள் வாங்கியாகணும். மிகப் பெரிய தொகை விமான டிக்கட்டுக்கு, அப்புறம் தாய் நாட்டில் கால் டாக்ஸி, ஆட்டோ, செய்ய வேண்டிய பிரார்த்தனைகள், விசாரிக்க வேண்டிய கல்யாணங்கள் – இப்படி பணம் தண்ணீராக – இல்லையில்லை – ஆவியாக எவாப்ரேட் ஆகி விடுகிறதே.. கையில் தாராளமாக இருந்தால் மனம் கோணாமல் செலவு செய்யலாம் என்று பெருமூச்சு விடும்போது..

தங்கை கல்யாணம், தம்பியின் படிப்பு, அண்ணன் குழந்தை கைக்கு தங்கக் காப்பு, வெள்ளியில் கொலுசு, அம்மா, அப்பாவுக்கு அவங்களுக்குப் பிடித்த உடைகள் மற்றும் புத்தகங்கள், அவங்களுக்கு கம்ப்ளீட் ஹெல்த் செக்கப் என்று பிறந்த வீட்டிற்கு செய்து, நம் பெற்றோருக்கு நம் நன்றிக் கடனின் ஒரு பகுதியையாவது அடைக்கலாமே! கணவர் மற்றும் புகுந்த வீட்டினர் முழு மனதுடன், அன்பாக இதையெல்லாம் அனுமதிக்கிறாங்க.. ஆனால் கணவரின் குடும்பத்திற்கும் இது போல செய்ய வேண்டிய கடமைகள் இருக்கே. அவர் ஒருத்தர் சம்பாத்தியத்தில் முடியுமா, நாமும் சம்பாதித்தால் நல்லதுதானே என்ற எண்ணமிடும்போது..

போதுமான அளவு வருமானம் வந்து கொண்டிருந்தாலும், இந்த மாதிரி சிந்தனைகள் அடிக்கடி தலைகாட்டும் இல்லையா!

இன்னும் கொஞ்சம் சூழ்நிலைகளை பார்ப்போம்.

எந்த மாதிரி நேரங்களில் – அடடா!! இத்தனை நாட்களை வீணாக்கி விட்டோமே.. கொஞ்ச காலத்துக்கு முன்னாலேயே நாமும் சம்பாதிக்கிற வழிகளைப் பார்த்திருக்கலாமே என்று தோன்றும்?

திடீரென்று ரிஸஷன் என்று ஒரு அலை அடித்து, எதிர்பார்த்த சம்பள உயர்வு கிடையாது.. வந்து கொண்டிருந்த சம்பளத்திலேயே இத்தனை பெர்ஸண்டேஜ் கட் என்ற நிலையில்..

பல நாட்களாக சொந்த ஊரில், நிலத்தில், வீட்டில் இருந்து – குத்தகைப் பணமாக, வாடகையாக, சாப்பாட்டுக்கு அரிசியாக – இப்படியெல்லாம் வருமானம் வந்துகிட்டிருந்தது. பெரியவங்க இருக்காங்க, மெயிண்டெயின் செய்து நமக்கு பணம் காசு அப்படின்னு அனுப்பிட்டு இருக்காங்க.. அப்படின்னு கொஞ்சம்(!) சொகுசாக இருக்கும்போது – அவங்களால முடியலை, அல்லது பாகப் பிரிவினை.. இப்படி எத்தனையோ சிக்கல்கள் – அல்டிமேட்டாக தெரிவது – இனி அந்த அடிஷனல் வருமானம் கிடையாது என்ற போது..

கையில, பாங்க்ல சேமிப்பு இருக்கு, அவசர ஆத்திரத்துக்கு உதவும், பிள்ளைகள் காலேஜ் படிப்பு, கல்யாணம் இதுக்கெல்லாம் இன்னும் நாள் நட்சத்திரம் இருக்கு, அதுக்குள்ள தேவைப்பட்ட அளவு பணம் சேர்த்து விடலாம் அப்படின்னு கொஞ்சம் அசால்டாக இருக்கும்பொழுது எதிர்பாராமல் மருத்துவ செலவு, ஏதோ ஒரு விதத்தில் வந்து எல்லா சேமிப்பும் அதிலேயே செலவாகி விட்டால் ... இந்த தொகை சேர்க்கவே இவ்வளவு வருடங்கள் ஆனதே, இனி திரும்பவும் சேமிக்க ஆரம்பித்தால் எத்தனை வருடம் ஆகுமோ, போட்டு வைத்த திட்டங்கள் எல்லாம் ஓ.கே. ஆகுமா என்று திகில் ஆகும்போது..

அருமையான வீடு ஒன்று விலைக்கு வருகிறது. விற்கிறவர் நமக்குத் தெரிந்தவர் – உங்களுக்காக என்றால் இவ்வளவு குறைந்த விலையில் தருகிறேன் என்கிறார். இது மாதிரி ஒரு ஆஃபர் – போனால் வராது.. பொழுது போனால் கிடைக்காது. இப்போ வாங்கிப் போட்டால் சில வருஷங்கள் ஆனதும் சூப்பராக மதிப்பு அதிகமாகும். மாதா மாதம் வாடகையாக வருமானம் வரும் அல்லது இப்போ கொடுக்கிற வாடகை அப்படியே மிச்சம் ஆகும். என்ன செய்ய? கையில் இருக்கும் சேமிப்பு போதாதே.. நாமும் ஏதாவது செய்து, பணம் சேர்த்திருந்தால் இப்போ எவ்வளவு உதவியாக இருந்திருக்கும்.... என்று ஆதங்கப்படும்போது

சரி, மேலே சொன்ன மாதிரி எந்த சூழ்நிலையும் கிடையாது. தாராளமாக வருமானம் வருகிறது. சேமிப்புக்கும் சொத்து சுகத்துக்கும் குறைச்சலில்லை என்று இருக்கும் பெண்களாக இருந்தாலும் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றத்தான் செய்யும்!

எப்போது??

உங்களுடன் படித்த அல்லது தெரிந்த பெண்கள், பல வருடங்களுக்கு முன் அப்பாவி தங்கமணி, அசட்டு அம்மணி, படிப்பில் சுமார், எப்படித்தான் இது தேறப் போகிறதோ என்று உங்களால் எடை போடப்பட்டவர்கள் - இப்போது நல்ல வேலையில் இருக்கிறார்கள். கை நிறைய சம்பாதிக்கிறார்கள். சுய சம்பாத்தியமும், வெளி உலக அனுபவமும் அவர்களை எப்படியெல்லாம் பக்குவப்படுத்தி மெருகேற்றி இருக்கின்றன என்று பார்க்கும்போது – முதலில் ஒரு ஆச்சரியம்.. அப்புறம் – இந்தப் பெண்ணே இவ்வளவு முன்னேறி பலரது பாராட்டுக்கும் வியப்புக்கும் ஆளாகி இருக்கும்போது நானெல்லாம் எவ்வளவு சாதித்து இருக்க முடியும்.. இத்தனை நாளாக டைம் வேஸ்ட் பண்ணிட்டேனே என்று பெருமூச்சு விடும்போது..

என்னதான் பெற்றோரும் கணவரும் என்னை கண்ணுக்குள் வைத்துத் தாங்கினாலும், எனக்கென்று ஒரு SELF IDENTITY வேண்டும். நான் ஏதாவது செய்தால்தான் என் மீது எனக்கே ஒரு மதிப்பு வரும் என்று தீர்மானிக்கும்போது..

”இரும்பும் சரீரமும் இருந்தால் கெடும்” “சும்மா இருக்கும் மனம் சாத்தானின் இருப்பிடம்” நாள் பூரா டி.வி.யில் அழுகாச்சி சீரியல்களையும், பழி வாங்கும் புரட்சிகளையும் பார்த்துக் கொண்டு, ஃபோன் பில் கணவரின் அலுவலகத்தில்தானே கட்டுகிறார்கள், அதனால் தினமும் தோழிகள், உறவினர்கள் என்று யாருக்காவது பேசி, ஊர் உலகத்தில் இருக்கிற வம்புகளை கலெக்ட் செய்து, எல்லார் தலையையும் உருட்டிக் கொண்டு – இப்படியெல்லாம் வெட்டிப் பொழுது போக்க என்னால் முடியாது.. உருப்படியாக ஏதாவது செய்தால் வருமானமும் வரும். பொழுதும் நல்லபடியாகப் போகும் என்று முடிவெடுக்கும்போது..

சாதாரணமாகவே நான் சுறுசுறுப்பாக ஏதாவது செய்துகிட்டு இருப்பேன். வீட்டில் சும்மாவே இருந்தால் வெயிட்தான் அதிகமாகிறது. ஏதாவது வேலையில் என்னை கமிட் செய்து கொண்டால் மனசு, உடம்பு எல்லாமே நல்லா இருக்கும் என்று யோசிக்கும்போது..

மேலே சொன்னவற்றை படிக்கும்போது – அடேடே, அப்படியே என்னைப் பற்றி, என் மனசில் இருக்கிறதைப் பற்றி எழுதின மாதிரி இருக்கிறதே என்று தோன்றுகிறதா, அல்லது கிட்டத்தட்ட இது மாதிரிதான் என்று நினைக்கிறீர்களா?

அப்படியானால் நீங்கள் வேலைக்குப் போவதைப் பற்றியோ, சொந்தமாக தொழில் தொடங்குவதைப் பற்றியோ சிந்திக்க ஆரம்பிக்க இது HIGH TIME.

என்ன செய்யலாம், எப்படி செய்யலாம் என்று உடனே, இப்பொழுதே, திட்டமிட ஆரம்பியுங்கள்.

வேலைக்குப் போவதாக இருந்தாலும் சரி, சொந்தமாக பிஸினஸ் செய்வதாக இருந்தாலும் சரி, எத்தனை ஆப்ஷன்ஸ் உங்களுக்குத் தோன்றுகிறதோ, அத்தனையையும் மனதிற்குள் அலசுங்கள். சம்பந்தப்பட்ட விவரங்கள் சேகரியுங்கள். பின் தீர்மானியுங்கள்.

இது எதுவுமே எனக்குப் பொருந்தாது. நன்றாகப் படித்தேன். நல்லபடியாகக் கல்யாணம் ஆகி விட்டது. புகுந்த வீட்டுக்கும் பிறந்த வீட்டுக்கும் என் கடமைகளை சரியானபடி செய்துகிட்டு இருக்கேன். குழந்தைகளை என் நேரடி கவனிப்பில் அற்புதமாக வளர்த்து இருக்கிறேன். மனசுக்குப் பிடித்ததை சமைக்கிறேன். எனக்குப் பிடித்த மாதிரி அழகாக உடுத்துகிறேன். வீட்டை பிரமாதமாகப் பராமரிக்கிறேன். நல்ல விஷயங்களைப் படிக்கிறேன், கேட்கிறேன், வாழ்க்கை நிறைவாக இருக்கிறது. இன்னும் எனக்கு என்ன வேணும்? வேலைக்குப் போவதற்கோ, பிஸினஸ் என்று ஆரம்பித்து சம்பாதிப்பதற்கோ – இப்படிப்பட்ட தேவையே எனக்குக் கிடையாது என்று நிச்சயமாக சொல்கிறீர்களா!!

வெரி குட்!! நீங்கள்தான் உண்மையிலேயே ஒரு தொழிலதிபராக மலர்வதற்கு முழுவதும் சரியான நபர். சீக்கிரமே செயல்பட ஆரம்பியுங்கள்!

என்ன குழப்பமாக இருக்கிறதா?

வாழ்க்கையில் இது வரை எல்லாமே சரியாக நடந்தது, நடக்கிறது என்றால் அது ஏதோ தன்னிச்சையாக நடந்தது அல்ல.. எல்லா விஷயங்களும் சரியாக நடக்கும்படி டியூன் செய்ததில் உங்களுடைய முக்கிய பங்கு இருந்திருக்கிறது.

ஆங்கிலத்தில் SOFT SKILLS என்று சொல்வார்கள்.

மக்கள் தொடர்பு,

பேச்சாற்றல்,

பிரச்னைகளை சமாளித்தல்,

தலைமை தாங்குதல்,

பொறுப்பு ஏற்றுக் கொள்ளுதல்,

வாய்ப்புகளை சரிவர பயன்படுத்திக் கொள்ளுதல்,

சரியான நேரத்தில் சரியான முடிவெடுத்தல் போன்றவையெல்லாம் அலுவலகத்துக்கும் பிஸினஸுக்கும் மட்டுமல்ல, குடும்பத்திற்கும் அவசியமானவைதான்.

இந்தத் திறமைகளையெல்லாம் எங்கெங்கு தேவையோ அங்கே எல்லாம் நீங்கள் அழகாக பயன்படுத்தியிருக்கிறீர்கள் என்றுதான் அர்த்தம்.

ஒருவேளை நீங்கள் இவற்றையெல்லாம் அலசி ஆராயாமல் இருந்திருக்கலாம், இது நாள் வரை.

அவசியம் சம்பாதிக்க வேண்டும் என்ற சூழ்நிலையின் வற்புறுத்தல் காரணமாக, சாதித்துக் காட்டும் பெண்களைப் போலவே, சம்பாதிக்க வேண்டும் என்று எந்த கட்டாயமும் இல்லாத பெண்களாலும் – மிகவும் ரிலாக்ஸ்ட் ஆக பணியாற்றி, வெற்றி பெற முடியும்.

நீங்கள் வெற்றி பெறுவதால், சாதிப்பதால், உயர்வதால், நேரடியாக உங்கள் குடும்பமும் நீங்களும் பயனடைகிற அதே சமயம் – இன்னும் பல பேரின் முன்னேற்றத்துக்கும் உங்கள் உழைப்பும் சாதனையும் ஒரு மறைமுகமான காரணமாக இருக்கும்.

“என்ன சொல்கிறீர்கள், நான் வேலை செய்வதால், சொந்தத் தொழில் தொடங்குவதால், எனக்கும் என் குடும்பத்துக்கும் நன்மை என்பது ஓ.கே., முதலில் நான் முன்னேறுகிறேனா என்பதைத்தானே பார்க்க வேண்டும். இதில் இன்னும் பல பேரை நான் முன்னுக்குக் கொண்டு வருவதா?”

இப்படியெல்லாம் கேட்கத் தோன்றுகிறதா?

வறுமையான நிலையில் உள்ள, படிப்பு மிக மிகக் குறைவான பெண்கள், குடும்பக் கஷ்டம், எதிர்பாராத பிரச்னை என்று வந்தால் சட்டென்று முடிவெடுத்து – குடும்பத்தைத் தாங்குவது தன் பொறுப்பு என்று வேலையில் இறங்கி விடுவார்கள். வீட்டு வேலை, சமையல், காய்கறி விற்பனை, கட்டிடக் கூலி வேலை என்று துணிந்து இறங்கி, உழைப்பார்கள். இவர்களது கண் முன்னே நிற்பது முதலில் வயிற்றுப்பாடு, பிறகே மற்றவை எல்லாம்.

ஓரளவு படித்த, எதிர்காலத்தைப் பற்றி திட்டமிடுகிற, குடும்பப் பின்னணியில் இருந்து வரும் பெண்கள் – தங்களுடைய பொருளாதார பலம், கல்வியறிவு, திறமை இவற்றுக்குத் தகுந்தாற்போல உள்ள வேலைகளைத் தேர்ந்தெடுத்து, அதில் வெற்றியும் பெறுகிறார்கள்.

டாக்டர், இஞ்சினீயர், பாங்க் வேலை, கல்லூரி ஆசிரியை என்று படிப்புக்கும், உழைப்புக்கும் ஏற்ற கௌரவமான பொசிஷன் கிடைக்கிறது அவர்களுக்கு.

சரி, இதிலெல்லாம் சேராமல் எத்தனையோ ஆயிரக்கணக்கான பெண்கள் இருக்கிறார்கள். இவர்களை உங்கள் தினசரி வாழ்வில் பல இடங்களில் நீங்கள் பார்த்திருப்பீர்கள்.

பள்ளி இறுதிப் படிப்பு, டிப்ளமா, பொதுவான டிகிரி என்று படித்திருப்பார்கள். வேலைக்கு செல்வதும் சம்பாதிப்பதும் இவர்களுக்கு மிக மிக முக்கியம். இன்றைக்கு இருக்கிற மார்க்கெட் டிரெண்ட் என்ன, எந்த வேலைக்கு யாரை அணுக வேண்டும், என்ன சம்பளம் கிடைக்கும் என்று கூட இவர்களுக்குத் தெரியாது. யாரையும் கேட்கவும் கூச்சப்படுவார்கள்.

தனக்கு இங்கிலீஷில் பேசத் தெரியவில்லை.. நல்ல உடைகள் இல்லை.. அழகாக இல்லை என்பது போன்ற குறைகள் இவர்கள் முன்னால் மலையாகத் தோன்றி தடுக்கும்.

நேர்மையான எண்ணங்கள், செயல்பாடுகள், பல மணி நேரம் தொடர்ந்து சோர்வில்லாமல் உழைப்பது, இப்படி தங்களிடம் இருக்கும் மிக முக்கியமான பிளஸ் பாயிண்டுகள் அவர்களுக்கே தெரியாது.

மால்களில், சூப்பர் மார்க்கெட்களில், சிறிய நிறுவனங்களில், நர்சரிப் பள்ளிகளில், மிகவும் குறைந்த சம்பளத்திற்கு நேர்மையாக, உண்மையாக நாள் பூராவும் பாடுபட்டு உழைத்துக் கொண்டிருப்பார்கள்.

உங்களைப் போன்ற தலைமைப் பண்பு நிறைந்த பெண்கள், ஒரு நல்ல லாபகரமான தொழிலைத் தொடங்கி, வெற்றிகரமாக நடத்துவதின் மூலம் இப்படிப்பட்ட பல பெண்களுக்கு வழிகாட்டியாக இருக்க முடியும். அவர்களுக்கு வேலை தர முடியும். அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த முடியும்.

இந்த சமுதாயத்துக்கு உங்களின் சிறந்த பங்களிப்பாக இது இருக்கும்.

இதன் தொடர்ச்சியை அடுத்த வாரம் பார்ப்போம்..

அன்புடன்
சீதாலஷ்மி

Comments

அன்பு சீதாலக்ஷ்மி

இந்த பகுதி 6 ல் நீங்க கொடுத்த உற்சாகமே போதும் மற்ற பகுதிகளை படிக்கவே தேவையில்லை போல உள்ளது. படிக்க படிக்க மனதில் தீப்போறி போல நம்பிக்கை பிறக்கிறது.வெறும் வார்த்தைக்காக சொல்லவில்லை. உண்மையாகவே நீங்கள் இதை பற்றி என்ன அடுத்த பகுதியில் சொல்லப் போகிறீர்கள் என பார்த்துகொண்டுள்ளேன். நீங்கள் கேட்டதற்காகவே காரண பெயர் என ஒரு தலைப்பு தொடங்கியுள்ளேன். பார்த்துவிட்டு பதிவு போடுங்கள். உங்களை போன்றவர்களின் பதிவு இன்னும் அனைவருக்கும் பயனுள்ளதாகவே இருக்கும்.

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

உங்கள் தொடர் படிப்பது தன்னம்பிக்கை தருவதாக இருக்கிறது.

உண்மையில் அறிவு மற்றும் அனுபவபூர்வமாக வாழ்க்கையின் நிதர்சனத்தை பிட்டு பிட்டு வைத்திருக்கிறீர்கள்!!அதுவும் அழகாக சொல்லியிருக்கும் விதம்...அருமை..

"வாழ்க்கையில் பெண்கள் வேலைக்கு போவதே..பணத்தின் மேல் உள்ள பேராசையால் ...இல்லையென்றால் அவளுக்கு நிலைமை..பாவம்..எனக்கெல்லாம் நான் சம்பாதித்துதான் சாப்பிடவேண்டும் என்ற
நிலைமையோ,அவசியமோ கிடையாது "

என பந்தாவாக அலட்டி கொள்ளுகின்ற சில பெண்களை பார்க்கும்போது ஒரு பக்கம் கோபம் வந்தாலும்,மறுபக்கம் அவர்களின் பக்குவமின்மையை நினைத்து..சிரிப்புதான் வரும்.....இந்த காலத்தில் கூட இப்படி சில பெண்கள் இருக்கிறார்களே என...ஆச்சரியமாக கூட இருக்கும்...

இப்போது நினைக்கிறேன்....இந்த தொடர்,இந்த பகுதி அப்படிபட்ட எண்ண ஓட்டம் உள்ள ஒரு சிலர் கண்ணிலாவது பட்டு அவர்களின் எண்ண ஓட்டம் மாறினால் அதுவே உங்கள் வெற்றியாக இருக்கும் என்று...

உங்களின் எண்ணங்கள்,கருத்துகுவியல்கள் அத்தனையும் முத்துக்கள்..!!
அறுசுவையில் நான் இவரை சந்தித்திக்க முடியுமா..??.. என ஆவலுறும் ஒரு சில தோழிகளில் நீங்களும் ஒருவர்.....

Hats off to u.......madam...!!

அன்புடன்
இளவரசி

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

சீதாலக்ஷ்மி மேடம்,
உங்களது தொடர்களை நான் படித்து வருகிறேன்
உங்களது சிந்தனைகள் அற்புதம் எனக்கு வேலைக்கு செல்ல ரொம்ப பிடிக்கும்
ஆனால் இப்போது நான் அமெரிக்காவில் h4 விசாவில் இருப்பதால் செல்ல முடியாது ,எந்த தொழிலும் செய்யவும் முடியாது
ஆனால் நான் இங்கு ஸ்பானிஷ்,பிரெஞ்சு ,பிசினஸ் administration படித்து வருகிறேன் softskills பற்றி நான் ஒரு workshop இல் கலந்து கொண்டு இருக்கிறேன் அதனை பற்றி மேலும் பல தகவல்கள் அறிய ஆசை படுகிறேன்
தொடரட்டும் உங்கள் பணி பாராட்டுகள்

என்றும் அன்புடன்,
கவிதா

சூப்பர்!!! கைல அற்புதமான அழகான பூவால் செய்த சாட்டை வச்சிருக்கீங்க.. அடிச்சா வலிக்கும் தான் .. அதுவும் இதமா இருக்கு....

கவிதா! உங்களுக்கு ஒரு ஐடியா சொல்கிறேன்.. எனக்கு பேச்சுதிறமை வளர்க்கணும் என்று டோஸ்ட்மாஸ்டர்ஸ் என்ற ஒரு அமைப்பில் சேர்ந்து இருந்தேன்... முடிந்தா உங்க வீட்டுக்கு பக்கத்தில இருந்தா சேருங்க...

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

ரொம்ப நாளாகவே இதை எழுத நினைத்து தள்ளிப் போய்க்கொண்டே இருக்கும் விஷயம். உங்களின் இரண்டு தொடர்களையும் தொடர்ந்து படித்துக் கொண்டிருகிறேன். என் கணவரும் உங்களின் தீவிர வாசகன். குறிப்பாக உங்களின் இனி ஒரு பணி செய்வோம் பற்றி அடிக்கடி சொல்வார்.

நல்ல எழுத்து நடை, சுலபத்தில் கிட்டாத அரிய கருத்துகள், நிறைய ஆலோசனைகள், தன்னம்பிக்கை ஊட்டும் வாக்கியங்கள்ன்னு ரொம்ப கலக்கலா எழுதிகிட்டு இருக்கீங்க. பிரமிப்பா இருக்கு. எப்படி இவ்வளவு விசயங்கள இவ்வளவு தெளிவா, எளிய நடையில, எல்லோருக்கும் புரிகிற மாதிரி, ஒரு கோர்வையா எழுதுறீங்கன்னு ஆச்சர்யாமா இருக்க. உங்களுடையத் தொடர் இந்த தளத்தையே அடுத்த நிலைக்கு எடுத்துக்கொண்டு போவதாக நிச்சயமாக நம்புகிறேன்.

மனமார்ந்த பாராட்டுக்கள்.

அன்புடன்,
இஷானி

how to add my own recepie in arusuvai? can u please tell me Ishani akka.

Think Positively

சீதாலஷ்மி... வார்த்தையே வரல பாராட்ட!!! அத்தனை உற்சாகமூட்டும் எழுத்து. அற்புதமான எழுத்து படிக்கும் ஒவ்வொருவொருக்கும் தன்னம்பிக்கை தரும், புரியாதவருக்கும் புரியும் விதமாக அமைந்திருக்கு. வாழ்த்த வயதில்லை.... அனுபவம் அனுபவம் தான்!!!

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

சீதாலஷ்மி அக்கா, சூப்பர். அசத்தலா எழுதி இருக்கீங்க. படிக்கவே உற்சாகம் வருது.

இலா, டோஸ்ட்மாஸ்டர்ஸ் பற்றி கொஞ்சம் சொல்ல முடியுமா??
நேரம் கிடைக்கும் போது முடிந்தால் email அனுப்புங்கோ.
வாணி

அன்பு ரம்யா

உங்களுக்கு இந்தப் பகுதி பிடிச்சிருந்தது ரொம்ப மகிழ்ச்சி. நீங்க அழகான தமிழில் தப்பில்லாமல் பெரிய பதிவாக கொடுப்பீங்க, ஆச்சரியமாக இருக்கும். எனக்கு இப்பதான் கொஞ்சம் தட்டச்சு வேகம் கூடியிருக்கிறது.

உங்க எல்லா இழைகளிலும் ஒரு பதிவாவது கொடுக்கணும்னு நினைப்பேன், அப்படியே நேரம் போயிடும். ஆனால் எப்படியும் படிச்சுடுவேன்.

நீங்க திருப்பூரில் வேலை செய்யறதாக சொல்லியிருந்தீங்க. அதைப் பற்றி முடிந்தால் ஒரு தனி இழை ஆரம்பிக்க முடியுமா? எவ்வளவோ வேலை இல்லாத் திண்டாட்டம் இருந்த காலங்களில் கூட, திருப்பூரில் மட்டும் “வேலைக்கு ஆள் தேவை” போர்டு எல்லா தொழிற்சாலைகளிலும் காணப்படும்னு சொல்லுவாங்க.
இது வெகு நாட்களுக்கு முன் நான் படிச்ச தகவல். இப்பவும் அங்கே வேலை வாய்ப்பு நன்றாக இருக்கா?

யு.எஸ்.ல கிடைக்கும் காட்டன் மற்றும் டி.ஷர்ட்ஸ் பெரும்பாலும் திருப்பூரில் இருந்து ஏற்றுமதியாவதுதான்னு சொல்றாங்களே, நிஜமா? எக்ஸ்போர்ட் பிஸினஸ் பற்றியும் தகவல்கள் சொல்லுங்கள்.

உங்களுக்கு நேரம் இருக்கறப்போ ஆரம்பிங்க போதும், இங்கே இழைகளில் பலர் கேள்வி கேட்டு, அவங்களுக்குத் தெரிந்த தகவல்கள் சொல்லி, இப்படி உரையாடல் வடிவத்தில் தெரிந்து கொள்ளும்போது, நன்றாக மனதில் பதிகிறது. அதனால்தான் சொன்னேன்.

அன்புடன்

சீதாலஷ்மி

அன்புடன்

சீதாலஷ்மி

அன்பு ரீம்,

தொடர்ந்து படிச்சு, பின்னூட்டம் தருகிறீங்க, ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கு.

உங்க சகோதரருடைய பிஸினஸ் தேனியில் தொடங்கிட்டாங்களா? நீங்க சென்றிருந்தீர்களா?

அன்புடன்

சீதாலஷ்மி

அன்புடன்

சீதாலஷ்மி

அன்பு இளவரசி,

பெண்கள் வேலைக்குப் போகலைன்னாலும் பரவாயில்லை, பிற பெண்கள் வேலைக்குப் போவதை பெரிய பாவம் செய்வதைப் போல டிஸ்கரேஜ் செய்வது, அதோட அவளுக்கென்ன, கை நிறைய அவள் சொந்தப் பணம், சொகுசாக இருக்கா, என்று வஞ்சப் புகழ்ச்சி பேசறது எல்லாம் இன்னும் நடந்துக்கிட்டுதான் இருக்கு. பெண்கள் படிப்பு என்பது முழுமையாக accept ஆன அளவுக்கு, வேலைக்குப் போவதுங்கற விஷயம் ஆகலைன்னுதான் சொல்லுவேன். அது பக்குவமின்மை அல்ல, பர்பஸ்ஃபுல் ஆக pull down செய்வது!

இந்தப் பிரச்னை பற்றி ஒரு பட்டிமன்றம் அளவுக்குப் பேசலாம். ஆனா இந்த இழையில் பாசிடிவ் ஆன விஷயங்கள் மட்டும் பேசலாம்னு நினைக்கிறதால இதோட நிறுத்திக்கறேன். But அடுத்தடுத்து நிறைய விஷயம் தோணுது(:

இன்னும் வேறு வேறு இழைகளிலும் சம்பாதிக்கும் பெண்களுக்குக் கிடைக்க வேண்டிய, கிடைக்காமல் போகிற, மாரல் சப்போர்ட் பற்றி பேசலாம்னு நினைக்கிறேன். இது பற்றி உங்க கருத்துகளையும் சொல்லுங்க, சரியா.

எனக்கும் எல்லாத் தோழிகளையும் நேரில் சந்திக்க ஆசைதான். அட்மின் அவர்கள்தான் மனசு வைக்கணும். சென்னையில் கெட்-டு-கெதர் பற்றி ஏற்கனவே சொல்லியிருந்தார்.

நிச்சயம் எல்லோரும் சந்திக்கலாம்ங்கற நம்பிக்கை இருக்கு.

அன்புடன்

சீதாலஷ்மி

அன்புடன்

சீதாலஷ்மி

அன்பு கவிதா,

முதலில் உங்களுக்கு என் பாராட்டுகளும் வாழ்த்துகளும்!

இப்போ உங்களுக்குக் கிடைக்கும் நேரத்தை மிக நல்ல முறையில் உபயோகிக்கிறீங்க. புதிய ஒரு மொழி கற்றிருப்பது என்பது மிக முக்கியமான அடிஷனல் குவாலிஃபிகேஷன். அதோட பிஸினஸ் சம்பந்தமாகவும் படிக்கிறீங்க. யு.எஸ்.ல கற்றுக் கொள்ளும் முறை வித்தியாசமாக இருக்கும். நிறைய அஸைன்மெண்ட் கொடுப்பாங்க, என்று படித்திருக்கிறேன். உங்களுக்கு இங்கே கல்லூரியில் படித்த விதமும் அங்கே படிக்கும் விதமும் கம்பேர் செய்து சொல்லுங்க. தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கு.

சாஃப்ட் ஸ்கில்ஸ் பற்றியும் சில உதாரணங்களுடன் ஜெனரலாக(அடுத்த பகுதிகளில்) கொஞ்சம் பேசலாம்னு நினைக்கிறேன்.

உங்களுடைய கருத்துகளை பகிர்ந்து கொள்ளுங்கள், நிறைய டிஸ்கஸ் செய்யும்போது எல்லோருக்கும் புதிய தகவல்கள் கிடைக்கும்.

பாராட்டுகளுக்கு மிகவும் நன்றி கவிதா,

அன்புடன்

சீதாலஷ்மி

அன்புடன்

சீதாலஷ்மி

அன்பு இலா,

இன்னும் கொஞ்சம் ஸ்ட்ராங்காக எழுதி வைத்திருந்தேன் முதலில், Instant Money Making is not possible அப்படிங்கற மாதிரி, அப்புறம் படிச்சு பாத்துட்டு, positive toneல மாற்றி எழுதினேன்:)

பேச்சுத் திறமை பற்றி நீங்க சொன்னதும் நான் ஸ்டேஜில் பேசி, திணறியது எல்லாம் நினைவுக்கு வருகிறது.

திரு.கு.ஞானசம்பந்தம்தான் நான் கலந்து கொண்ட பட்டிமன்றத்துக்கு நடுவராக இருந்தார். மேடையேறிப் பேச வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக எல்லோரும் பயன்படுத்திக் கொள்ளுங்கள், சின்னக் கூட்டம், பெரிய கூட்டம் என்றெல்லாம் வித்தியாசம் பார்க்காதீர்கள், நாங்கள் எல்லாம் கோவில் திருவிழாக்களில் நடக்கும் பட்டிமன்றங்களில் கூட பேசித்தான் இந்த அளவுக்கு வளர்ந்திருக்கிறோம் என்று எளிமையாக சொன்னார்.

இங்கே சென்னையில் எல்லாவற்றுக்கும் வகுப்புகள் நடக்கிறது. அதைப் பற்றியும் கூட தனிப் பகுதியாக எழுதலாமான்னு நினைக்கிறேன்.

தொடர்ந்து உங்க பதிவுகளை எதிர்பார்த்துட்டு இருப்பேன். அவசியம் உங்க கருத்துகளை சொல்லுங்க.

அன்புடன்

சீதாலஷ்மி

அன்புடன்

சீதாலஷ்மி

அன்பு இஷானி,

அறுசுவையின் சீனியர் தோழி நீங்க, பட்டிமன்றங்களிலும் மற்ற இழைகளிலும் அசத்தற நீங்க இவ்வளவு பாராட்டுவது ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கு.

இங்கே எல்லோருடனும் பேசுவதில் நான்தான் நிறையப் பலனடைகிறேன்னு நினைக்கிறேன். எனக்குத் தெரிந்தது ரொம்ப ரொம்பக் கொஞ்சம்தான். அதை முடிந்த வரை சிம்பிளாக எழுத முயற்சிக்கிறேன்.

நான் சில விஷயங்களைப் பற்றி மட்டும் சொல்லி, ஆரம்பிச்சுதான் இருக்கேன். பல்வேறு துறைகளில் அனுபவம் உள்ள தோழிகள் இங்கே நிறையப் பேர் இருக்கிறீங்க. இந்தத் தலைப்பில் இன்னும் நிறையத் தோழிகள் பேசணும், எழுதணும், நானும் இன்னும் நிறைய தெரிஞ்சுக்கணும், அதுதான் என் ஆசை.

நாவல்கள் பற்றி எழுதுவதும் உங்களுக்குப் பிடிச்சுருக்கு என்பது எனக்கு கூடுதல் போனஸ் ஆக சந்தோஷம்.

உங்க கணவருடைய பாராட்டுகளுக்கும் என் நன்றியைத் தெரிவியுங்கள்.

அன்புடன்

சீதாலஷ்மி

அன்புடன்

சீதாலஷ்மி

அன்பு சூர்யா,

இஷானி இந்தப் பக்கத்தை பார்வையிட வரும்போது மேலதிகத் தகவல்கள் கொடுப்பாங்கன்னு நினைக்கிறேன்.

முகப்புப் பக்கத்தின் கீழே, தொடர்புக்கு, கேள்வி பதில் என்று இருக்கும், அதில் விவரம் கொடுக்கப் பட்டிருக்கு, அல்லது arusuvaiadmin@gmail.com மெயில் ஐ.டி.க்கு முதலில் உங்கள் குறிப்புகளை அனுப்புங்க, அட்மின் உங்களுக்கு எப்படி குறிப்புகள் சேர்ப்பது என்பது பற்றி சொல்வார்.

அன்புடன்

சீதாலஷ்மி

அன்புடன்

சீதாலஷ்மி

அன்பு வனிதா

எப்படி இருக்கீங்க? கை வலி சரியாகி விட்டதா? எப்பவும் உங்களுடைய பின்னூட்டம்தான் முதலில் இருக்கும். இந்தத் தடவை கை வலி வில்லனாகி விட்டது.

சாதாரணமாக மாணவர்கள்தான் “மிஸ், ஐ ஃபர்ஸ்ட்” அப்படின்னு சொல்லுவாங்க. ஆனா இங்கே எங்க வனிதா டீச்சர்தான் “ஐ ஃபர்ஸ்ட்”!

எதிலே?
எல்லோரையும் பாராட்டி உற்சாகப் படுத்துவதிலே:)

ரொம்ப நன்றி, வனிதா

அன்புடன்

சீதாலஷ்மி

அன்புடன்

சீதாலஷ்மி

அன்பு வாணி,

பாராட்டுக்கு ரொம்ப ரொம்ப நன்றி, மிகவும் மகிழ்ச்சி.

அடுத்தாற்போல கதை அனுப்பி இருக்கீங்களா? படிக்கக் காத்துகிட்டு இருக்கோம்.

இலா ஒரு புதிய தகவல் சொல்லியிருக்காங்க, எனக்கும் அதைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கு. நீங்கள் இந்த கோர்ஸ் முடித்த பின் உங்க அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

அன்புடன்

சீதாலஷ்மி

அன்புடன்

சீதாலஷ்மி

சீதாலக்ஷ்மி

நீங்கள் பெரிய பின்னூட்டம் கொடுக்க வேண்டும் என்று தேவையே இல்லை. நான் பின்னூட்டம் மட்டுமே கொடுத்து அறுசுவையில் பிழைத்துக் கொண்டு இருப்பவள் ;).ஒரு வார்த்தையில் நீங்கள் பாராட்டினாலே அது பெரியது எனக்கு. நீங்கள் கூறியது போல எக்ஸ்போர்ட் பற்றி கண்டிப்பாக இழை தொடங்குகிறேன். நான் ஹெச் ஆர், கம்ப்ளைன்ஸ் மற்றும் அட்மின் மேனேஜராக உள்ளேன். எம் எஸ் அப்பேரல் அட்மின் படித்துள்ளேன்.கண்டிப்பாக எனக்கு தெரிந்தவற்றை விரிவாக கூறுகிறேன்.

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

மேடம் நாங்க எல்லாம் உங்க எழுத்தைப்படித்து பின்னூட்டம்
மட்டும்தான் கொடுக்கமுடியும். உங்க திரைமையான எழுத்துக்கு
முன்னால எங்களால நிக்கக்கூட முடியாது. அவ்வளவு நல்லா
எழுதறீங்க. ஆன்னா நாளும் நினைப்பு உண்டு. நல்ல எழுதனும்
என்று. அடிக்கடி உங்க எழுத்துக்களை படித்து வந்தாலே எங்களுக்கும்
நல்லா எழுத வந்துவிடும். பின்னூட்டம் கொடுத்த அனைவருக்கும்
மறக்காம பதில் பதிவும் அழகாக அனுப்பிவிடுகிறீர்கள். உங்க அருமையான
எழுத்துக்களால் எங்க எல்லரையும் உற்சாகப்படுத்தி வரவும்.

என்ன ஒரு ஆக்கபூர்வமான கட்டுரை, இதை படிக்கும் ஒவ்வொருவருக்கும் ஏதாவது சாதிக்க வேண்டும்ங்கிற உத்வேகமும் உற்சாகமும் நிச்சயம் வரும் அதில் சந்தேகமேதுமில்லை. அப்படியே ஒவ்வொரு குடும்ப தலைவியும் தங்கள் மனதுக்குள் நினைத்துக் கொண்டிருக்கும் விஷயங்கள் படம்பிடித்து காட்டியது போல துல்லியமாக சொல்லி இருக்கீங்க மேடம். எளிமையான வார்த்தைகளில், அழகான எழுத்து நடையுடன், ஆழமான கருத்துக்களுடன் படிக்கவே ரொம்ப புத்துணர்ச்சியா இருக்கு. பாராட்ட வயதில்லைனாலும் என்னுடைய வாழ்த்துக்கள். மற்ற சகோதரிகளின் பதிவின் மூலம் நிறைய விஷயங்கள் கத்துக்க முடியுது. அடுத்த பதிவை எதிர்நோக்கி காத்திருக்கிறேன்

சீத்தாமா! எப்படி இருக்கீங்க? எனக்கு தெரிந்ததை சொல்கிறேன். இங்க பலரும் பேச தயக்க காண்பிப்பது எப்படி ஆரம்பிகரதுன்னு தான். இந்த டோஸ்ட்மாஸ்டர்ஸ் கிளப் ( மெம்பர்ஷிப் வருடத்துக்கு 26 டாலர் ‍= மாதம் ஒரு முறை அல்லது இருமுறை கூடும்) மூலம் எப்படி இந்த ஐஸ்பிரேக்கிங் பேச்சு பேசணும் என்று கத்துக்கலாம். அது போல திடீர்ன்னு ஒரு டாப்பிக் கொடுத்து பேச சொல்வார்கள் அப்படியான் இம்ப்ராம்டு ஸ்பீச் ஒன்னுமே அந்த சப்ஜெக்டில தெரியலன்னாலும் ஒரு வழியா சமாளிச்சு பேச கத்துக்கலாம். அப்புறம் ஒரு கிராமாரியன் இருப்பாங்க ( ரொட்டேஷனல் டியூட்டி) . கூட்ட முடிவில் செய்த தவறான கிராமர் சுட்டி காமிப்பாங்க. அப்புறம் ஒருவர் கவுன்டர் ஆக இருப்பார் அவரோட முக்கியமான வேலை ரொம்ப காமெடி.. எத்தனை முறை அங்கிருப்பவர்கள்... ஊம்... ஆங்... ஹூக்கும்.. இப்படி பேச்சுக்கிடையில் வரும் தேவையில்லாத சப்தங்கள் ( பில்லர்ஸ்) வந்தது என்று சொல்வார்கள்.. நமக்கே தெரியும் அங்ங்ங்க்க ந்னு வடிவேல் மாதிரி சத்தம் போட்டது நான் தான்னு...

பேச‌ க‌த்துக்க‌ ப‌டிப்ப‌டியான‌ ஒரு கைட் கொடுப்பார்க‌ள். அதில் க‌த்துக்குட்டி முத‌ல் கைதேர்ந்த‌ பேச்சாள‌ர் வ‌ரை ஒரு கூட்ட‌த்துக்கு 3 மெயின் ஸ்பீச்சும் அப்புற‌ம் டேபிள் டாப்பிக்ஸ் என‌ப்ப‌டும் இம்ப்ராம்டு பேச்சும் இருக்கும். ப‌ன்னிரெண்டு வித‌மான‌ பேச்சுமுறையை ப‌டிப்ப‌டியாக‌ க‌த்துக்க‌லாம்.

இதில் ரொம்ப‌ எளிதான‌ விச‌ய‌ம் என்ன‌வென்றால்... ஒரு க‌ம்பெனியில் 20 பேர் இருந்தாலே போதும் அவ‌ங்க‌ க‌ம்பெனியில் ஒரு டோஸ்ட்மாஸ்ட‌ர் கிள‌ப் ஆர‌ம்பிக்க‌லாம். நானும் க‌ண‌வ‌ரும் தொட‌ர்ந்து சென்றுகொண்டிருந்தோம். இப்போ வேற‌ ஊர் மாறி வ‌ந்த‌தால் சேர‌வில்லை.

கூட்ட‌ முடிவில் 3 பேச்சாள‌ர்க‌ளுக்கும் கூட்ட‌த்தில் இருக்கும் அனைவ‌ரும் ஊக்க‌/முன்னேற்ற‌ குறிப்புக‌ள் கொடுக்க‌லாம். என்னுடைய‌ பின்னூட்ட‌ துண்டு சீட்டுக‌ள் இன்னும் இருக்கு . அப்புற‌ம் ந‌ல்லா பேசின‌ டேபிள் டாப்பிக் பேச்சாள‌ருக்கு ரிப்ப‌ன் கொடுப்பார்க‌ள். இடையில் ஸ்னாக்/கூல் டிரிங் எல்லாம் ஒவ்வொருவ‌ரும் சுழ‌ற்சி முறையில் கொண்டு வ‌ர‌ வேண்டும்...

அது இல்லாமல் எப்படி எலிவேட்டர் பிட்ச் செய்வது என்றும் கத்துகிட்டேன்.. நீங்கள் எலிவேட்டர் ( லிஃப்ட்) செல்லும் போது உங்கள் மேலதிகாரி கூட வந்தால் எப்படி சுமுகமாக பேச வேண்டும் . ரெண்டு பேரும் எந்த ப்ளோர் வருதுன்னு பாத்துட்டே இருக்காம ஒரு ஹலோ சொல்லி பேசலாம்.

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

dear mam
all the issues are super mam .mam please guide some more online jobs that we do it in home .i m in chennai .i searched online home based jobs through net but i dont know how to do it any traning center or company for that in chennai mam

regards
barathi

சீதாலக்ஷ்மி மேடம்,
இங்கு படிப்பது ரொம்ப சுலபான (flexible ) ஒன்று
நான் பார்ட் டைம்மில் தான் business administration படிக்கிறேன்
நான் கற்பது certification program தான் ஆனால் இங்கு நிறைய assignment ,assessment டெஸ்ட்,presentations எல்லாம் தர வேண்டும் கண்ணை முடி திறப்பதற்குள் program முடிய போகிறது இங்கு certification வாங்க credits பெற வேண்டும் கடைசியில் தேர்வு நடக்கும் நான் போன ஜனவரியில் சேர்ந்தேன் இப்போது வரவிருக்கும் செப்டெம்பரில் தேர்வு நடுநடுவே tests ,presentations கொடுக்க வேண்டும்
இங்கு அனைத்தையும் practical oriented methodology இல் கற்று தருகிறார்கள்
நிறைய guest lectures ,experts வருவார்கள்.கிளாஸ் நன்றாக பொய் கொண்டு இருக்கிறது
நான் bsc கணிதம்,mca படிக்கும் போதும் கல்லூரியில் வறுத்து எடுப்பார்கள் ஆனால் அங்கு நாம் கல்லூரியில் வெறும் ஏட்டு கல்வி தான் படிப்போம்.assignments ,presentations இருந்தாலும் இவ்வளவு விஷயம் நுணுக்கமாக பயில மாட்டோம் இங்கு நிறைய resources ,பணம்,facility ,டெக்னாலஜி எல்லாம் இருக்கிறது நாமும் அவர்களுக்கு சளைத்தவர்கள் அல்ல இங்கு இந்தியர்கள் என்றாலே ஒரே மதிப்பு தான்
இங்கு பல்வேறு மொழிகளையும் கற்றுக்கொள்ள நிறைய source உண்டு அதனால் அதையும் படிக்கிறேன்

என்றும் அன்புடன்,
கவிதா

இளவரசி மேடம்,
டோஸ்ட் மாஸ்டர்ஸ் கிளப் பற்றி நானும் அறிவேன்
நான் வசிக்கும் இடத்தில இருந்து nearly 11 மைல்ஸ் போக வேண்டி இருக்கிறது ஏற்கனவே என் கணவர் என் படிப்பிற்காக சின்ன மகளை பார்த்து கொள்கிறார் மேலும் சிரமம் கொடுக்க பிடிக்கவில்லை
கொஞ்சம் ஸ்கூல் போக ஆரம்பித்ததும் போகலாம் என்று இருக்கிறேன் உங்களுடைய பதிவு ரொம்ப உபயோகமாக இருக்கு ரொம்ப நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

சீதாலக்ஷ்மி மேடம்

நீங்க சொல்லிருக்கிற ஒவ்வொரு விஷயமும் ஆழ்ந்த கருத்துள்ளதா இருக்கு, என் மனசில இருக்கிறத அப்படியே சொன்னமாதிரி இருக்கு. எல்லாரும் இப்படி தான் நினைத்திருப்பார்கள்.அந்த அளவுக்கு எல்லாருக்கும் பொருந்துவது மாதிரி நீங்க சொல்லிருக்கீங்க மேடம்.

நீங்க சொன்னதுல நான் கடைசி ரகம். வேலைக்கு போவது பற்றி நான் அடிக்கடி யோசிப்பேன். யாராவது வேலைக்கு போவோர்களைப் பார்த்தால் பொறாமையாக இருக்கும். பிறகு சிறிது நேரம் கழித்து வேலைக்கு போகும் எண்ணம் மாறிவிடும். நாம நம்ம குடும்பத்த பாத்துகிட்டா போதாதா? அப்படினு தோணும். என் பையனை நான் நன்றாக வளா்க்கவேண்டும். நான் வேலைக்கு போனா குடும்ப சூழ்நிலை என்ன ஆகும் என்று யோசிக்க ஆரம்பித்துவிடுவேன்.நான் நினைப்பது தவறா?, தயவுசெய்து கூறுங்கள். எனக்கு வேலைக்கு போயே ஆக வேண்டும் என்று எந்த கட்டாயமும் இல்லை. ஆனால் என் உறவினா்கள் எல்லோரும் என்னை கேலி செய்கிறார்கள். உன்னை உன் பெற்றோர் கஷ்டப்பட்டு Engineering(Textile) படிக்க வைத்தும் நீ எந்த வேலையும் செய்யாமல் இருக்கிறாய் என்று. இதை கேட்கும் போது மிகவும் கஷ்டமாக உள்ளது. அவா்கள் சொல்வதும் நியாயம் தான் என்று தோன்றும். நான் University gold medalist. ஆனால் இந்த படிப்பை நான் வீணாக்கிக்கொண்டு இருக்கிறேன் என்று மட்டும் தெளிவாக தெரிகிறது.

நான் இப்பொழுது இந்தியாவிலும் இல்லை. வீட்டில் இருந்தபடியே ஏதாவது செய்யலாம் என்றால் என்ன செய்வது என்று தெரியவில்லை. வாழ்க்கை நன்றாக சென்றாலும் நாம் நம் வாழ்வில் எதுவும் செய்யவில்லையே என்ற வெறுமை இருந்து கொண்டுதான் இருக்கிறது.

எனக்கு என் குடும்பம், எனது வீட்டு வேலைகள் என்று நிறைவாக உள்ளது. இதில் நான் 100% முழுமனதுடனும், முழு ஈடுபாட்டுடனும் செய்து வருகிறேன். ஆனாலும் வேலைக்கு போக வேண்டும் என்ற எண்ணமும் அடிக்கடி எழுந்துகொண்டு இருக்கிறது. இதற்கு நீங்கள் தான் எனக்கு அறிவுரை கூற வேண்டும். பதிலை ஆவலோடு எதிர்பார்க்கும்

ராதா ஹரி

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

முதலில் தாமதமான பதிவுக்கு மன்னிப்பு கேட்டுக்கறேன். நானும் உங்களுக்கு பதிவு ஓடலாம்னு பார்த்தால் ஆபிசில் சரி பிசி. இந்தப் பகுதியை படிச்சதும் நான் என்னலாம் சொல்ல வந்தேனோ அதையெல்லாம் மத்த எல்லாருமே சொல்லிட்டாங்க. ராதா ஹரியின் மனநிலை அப்படியே என்னோடது. இளவரசி சொல்லி இருந்த மாதிரி நானும் நினைச்சவதான். ஒவ்வொருத்தருக்கும் பதில் சொல்ற மாதிரி நச்சுன்னு எழுதி இருக்கீங்க. எழுத்தில் அனுபவம் தெரியுது. ஒவ்வொண்ணும் ரொம்ப சரியான கருத்துக்கள். நானும் வேலைக்குப் போகாமல் வீட்டை கவனிச்சுக்கிட்டு அதுதான் நிம்மதின்னு சொல்வேன். ஆனாலும் அப்பப்ப படிச்ச படிப்பை வேஸ்ட்டாக்குறியேன்னு அம்மா திட்டும்போது மட்டும் மனசுக்குள்ள சின்னதா கவலையா இருக்கும். படிப்பு என் அறிவை வளர்க்க, சம்பாதிக்க இல்லைன்னு சொல்வேன். ஆனாலும் மனசில் ஒரு ஓரத்தில், அப்ப நாம முதல் மார்க் எடுத்ததெல்லாம் வேஸ்ட்டா, எதுக்கு அப்படி கஷ்டப்பட்டு படிச்சோம்னு தோணும். நம்மளைவிட குறைச்சலா படிச்சவங்க கூட இவ்வளவு சம்பாதிக்கறாங்களேன்னும் தோணியிருக்கு. ஆனால் வேலைப் பாக்காம இருந்தாலும் அப்ப என்ன லேட்டஸ்ட் டெக்னாலஜி, ஐடியில் என்ன போன்ற விஷயங்களை மட்டும் படிச்சு தெரிஞ்சுப்பேன். வாரத்தில் இரண்டு நாள் அவருக்கு நைட் ட்யூட்டி இருக்கும்போது எல்லா பாடப் புத்தகங்களையும் நைட் முழுக்க படிச்சுட்டு இருப்பேன். காலேஜில் படிக்கும்போது சர்க்யூட் தியரி, எலக்ட்ரிகல் டெக்னாலஜி, C எல்லாமே மார்க் வாங்கன்னு படிச்சது போய், மறுபடி சும்மா படிக்கும்போதுதான் அதை தெளிவா புரிஞ்சுக்கிட்டேன்னு சொல்லணும். அதோட மலேஷியாவில் இருந்தப்ப கூட அங்கே உள்ள இண்டஸ்ட்ரீஸில் பர்மிஷன் வாங்கி, இரண்டு மூணு நாள்னு முக்கியமா அவங்களோட Control System பத்தி அங்கே இருந்த சீனியர் எஞ்சினியர்கிட்ட ரியல் டைம் ட்ரெய்னிங் மாதிரி ப்ராக்டீஸ் பண்ணிக்கிட்டேன். இதெல்லாம்தான் இன்னைக்கு நான் வேலைப் பாக்கறதுக்கு அடித்தளமா இருந்தது. என்கிட்ட அட்வைஸ் யாராவது கேட்டாலும் இதைத்தான் சொல்வேன். வேலைக்காக படிக்காம நீங்க இதுவரை படிச்சதை, இப்ப ஒரு முறை படிச்சு தெளிவா புரிஞ்சுக்குங்க. தைரியமா வேலையில் சேரலாம்னு. எங்கேயுமே வேலையில் சேர்ந்ததும் கொஞ்சம் நாம அவங்க பிசினசை புரிஞ்சுக்க டைம் கொடுப்பாங்க. ஆனால் பேசிக்கே தெரியாமல் இருந்தால் அதோ கதிதான்.

நான் சின்ன வயசிலிருந்தே பேச்சுப் போட்டின்னா முதல் ஆளா இருப்பேன். மாநில அளவில் இரண்டு முறை முதல் பரிசு வாங்கி இருக்கேன். அதுவும் இலா சொன்ன மாதிரி அரை மணி நேரத்துக்கு முன்னாடிதான் டாபிக் கொடுப்பாங்க. அதெல்லாம்தான் இண்டர்வ்யூவில் ரொம்பவே ஹெல்ப் பண்ணி இருக்கு. ஏற்கனவே ஆஸ்திரேலியாவில் வேலை பாதி பேச்சு மீதிதான். ஒண்ணுமில்லாத விஷயத்துக்கு கூட பேச்சு பேச்சுன்னு அத்தனை பேச்சு பேசுவாங்க.

நம்ம சொசைட்டியில் இன்னும் வேலைப் பார்க்கும் பெண்களுக்கு ஏற்ற செளகரியங்கள் இல்லை. அதையெல்லாம் மாற்ற முடிந்தால் பெண்களின் மனநிலையும் நிச்சயம் மாறும். முக்கியமாக மகளிர் மட்டும் படத்தில் வருவது போன்ற குழந்தைகளுக்கான டே கேர் செண்டர் ஒவ்வொரு ஆபிசிலும் கட்டாயமாக இருக்க வேண்டும். இங்கே எல்லா பிட்னஸ் செண்டர்களிலும் அப்படி உண்டு. ஆனால் ஆபிஸ்களில் ஒன்றிரண்டில் மட்டுமே அப்படி உள்ளது. எல்லா அம்மாக்களுமே தங்கள் குழந்தைகளை சாக்கிட்டுத்தான் முதலில் வேலைக்குப் போக பிடிக்கலன்னு சொல்றாங்க. வேலை ஓரிடம், குழந்தை ஓரிடம்னு இருந்தால் மனசு நிச்சயம் வேலையில் இருக்காது. தன்னால் லஞ்ச் டைமில் தன் குழந்தையை பார்க்க முடியும், எமர்ஜென்சின்னா உடனே பாக்கலாம்னு இருந்தால் நிச்சயம் வேலை பார்க்கும் பெண்களின் எண்ணிக்கை கூடும். இந்த ஒரு காரணத்தினாலேயே என் பையன் பிறந்த பிறகு நான் இரண்டரை வருஷம் போல வேலையைப் பற்றி நினைக்காமல் இருந்தேன். இங்கே சில ஆபிஸ்களில் லேடீஸ்க்கு ஒரு 10 நிமிஷம் தூக்கம் போட ரெஸ்ட் ரூம், மாலையில் ஆபிசிலேயே பிட்னஸ் ட்ரெய்னர் வந்து ட்ரெயினிங் கொடுப்பதுனு இருக்கு. ஆனால் எல்லா இடங்களிலும் கிடையாது. இப்போதுதான் மெட்டர்னிடி லீவை 6 மாசமாக சம்பளத்தோடு தர சட்டம் கொண்டு வந்தார்கள். இங்கே வெளிநாட்டில் உள்ளதைப் போன்று நம்ம நாட்டிலும் ஆண்களுக்கு கட்டாயமாக சமையல் தெரிந்திருக்க வேண்டும். எனக்குத் தெரிந்து இங்கே வந்தும், இன்னமும் மனைவிக்கு வீட்டு வேலைகளில் உதவி செய்வதை கேவலமாக நினைக்கும் இந்திய ஆண்கள் உண்டு. பெற்றொர்களும் ஆண், பெண் என பிரித்துப் பார்க்காமல் இரண்டு பேருக்குமே படிப்பு, வேலை பொதுன்னு சொல்லி வளர்க்கணும். அட்லீஸ்ட் பெண்கள் சமைப்பதை, வீட்டு வேலை செய்வதை மட்டும் செய்து கொண்டிராமல் தனக்கென்று ஒரு கலையை, தொழிலை வளர்த்துக் கொள்ள நினைக்க வேண்டும்.

என்னுடைய பல கனவுகளை நீங்கள் உங்கள் எழுத்துக்களில் சொல்லி இருக்கீங்க. இப்போ வேலைப் பார்த்துட்டு இருந்தாலும் எப்பவும் மனசில் பிசினஸ் ஆரம்பித்து பலருக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்த வேண்டும்னு ஆசை உண்டு. சக்தி மசாலாவில் உடல் ஊனமுற்றவர்களுக்கு வேலை வாய்ப்பு அளிப்பதை பார்த்து நெகிழ்ச்சியாக இருந்தது. இங்கே ஒருத்தர் மளிகை கடை வெச்சிருக்கார். ரொம்ப நாளா அவர் அதிகம் படிக்காதவர்னு நினைச்சிருந்தேன். உடை, பேச்சு எல்லாமே ரொம்பவே எளிமை. ஆனால் ஒரு நாள் தெரியவந்தது அவர் Double M.E. முடிச்சவர். இங்கே யுனிவர்சிட்டியில் ப்ரொபசராக வேலை பார்த்தவராம். இப்போ அவரோட கடையின் ஒரு நாள் லாபம் மட்டுமே 16,000 டாலர்கள். அவர் என்கிட்ட ஒருநாள் சொன்னார், நீங்க ஒரு இடத்தில் வேலைப் பாக்கும்போது உங்களோட ஒட்டுமொத்த உழைப்பையும் சினிசியரா அங்கே கொட்டுவீங்க. ஓவர் டைம், ஹார்ட் ஒர்க்னு. அதையே உங்க சொந்த தொழிலில் செஞ்சா எவ்வளவோ உயருவீங்க. ஆனால் நிறைய பேருக்கு இது தெரியறதில்லைன்னு. உண்மைதான்னு தோணுச்சு. அப்படியே சொந்த தொழில் ஆரம்பிச்சாலும், எவனுக்கோ பயந்து நாம செஞ்ச உழைப்பை, நாமதானே பாஸ்னு செய்யாம விடறவங்கதான் அதிகம். உங்க ஓவ்வொரு தொடரும் இங்கே உள்ள பெண்களுக்கு நிச்சயம் நிறைய மனமாற்றத்தையும், தைரியத்தையும் உண்டாக்கும். நிறை குறைகளை அலசி நீங்கள் எழுதியிருக்கும் விதம் ரொம்ப பாராட்டுக்குரியது. ஒவ்வொரு மனநிலையையும் தனித்தனியா பிரிச்சு எழுதியிருக்கும் ஸ்டைல் நன்றாக இருக்கிறது. தொடரட்டும் உங்கள் பணி எங்கள் வாழ்த்துக்களோடு.

டியர் சீதாலக்ஷ்மி மேம்,உங்க கருத்துக்கள் ஒவ்வொன்றும், பச்சை மரத்தில் ஆணி அடித்ததுபோல் உள்ளது.வேலைக்கி போகனும்ங்கிற ஏக்கம் கொஞ்சநஞ்சம் அல்ல 4 வருடங்களாக உள்ளது.என்னோட கணவருக்கு நான் வேலைக்கு போவதில் கொஞ்சம் கூட விருப்பம் இல்லை,காரணம் எனக்கு அதிக சமத்து போதவில்லை என்பதுதான்.அதனால் வீட்டிலிருந்தபடியே MT யாவது படித்து பண்ணலாம்னு நினைக்கிறேன்(Medical Transcription).MT கன்சல்டன்சி ஆன்லைனில் படிக்க ஐடியா குடுங்க பிளீஸ்.குறிப்பு நான் பஹ்ரைனில் உள்ளேன்,இங்கு இருந்தே படிக்க உதவி பண்ண முடியுமா?

மேலும் எனக்கு டிராப்டிங், Access கொண்டு Quickbook போலவே செய்து கொடுக்கும் jobs படிப்பதற்க்கும்,வேலை பார்ப்பதற்க்கான Guidance குடுக்க முடியுமா?

அன்பு ரம்யா

திருப்பூர் வேலை வாய்ப்புகளை Specific ஆக aim செய்து படிக்க்ணும் என்றால் என்ன படிக்கணும் என்று பின்னலாடை நகரம் இழையில் கேட்கணும்னு நினைத்து இருந்தேன். இப்ப உங்களுடைய முதுநிலைப் பட்டம் பிரத்யேகமாக, சிறப்புப் பாடமாக எடுத்துப் படித்து இருக்கீங்கன்னு தெரியுது. நீங்க எழுதும்போது இதைப் பற்றியும் எழுதுங்க. படிக்க ஆர்வமாக இருக்கு.

அன்புடன்

சீதாலஷ்மி

அன்புடன்

சீதாலஷ்மி

அன்பு உமா

நாம் எல்லோருமே இங்கே நமக்குத் தெரிஞ்சதை பகிர்ந்து கொள்கிறோம், இலா ஒரு இழையில் அழகாக சொல்லியிருந்தாங்க. எல்லோருக்கும் எல்லாம் தெரிஞ்சிருக்காது என்று.

உங்ககிட்ட இருந்தும் நாங்க நிறைய கற்றுக் கொள்ள முடியும்ங்கற நம்பிக்கை எனக்கு இருக்கு. முதலில் உங்களுடைய மனப் பக்குவம், அதுவே கற்றுக் கொள்ள வேண்டிய விஷயம். உங்களுடைய வாழ்க்கையை நீங்க எதிர்கொள்ளும் விதத்தை படித்த எல்லோருமே இனிமேல் சின்ன சின்ன விஷயத்துக்கெல்லாம் மூட் அவுட், அப்செட், டிப்ரஷன், ஃப்ரஷ்ட்ரேஷன் அப்படின்னு பெரிய பெரிய வார்த்தையெல்லாம் உபயோகிக்கறதை நிச்சயமாக யோசித்துதான் சொல்லுவாங்க.

சொல்ல விரும்பறதை, சரளமாக, நேரே பேசுவது போல எழுதறீங்க. அதுவே உங்களுக்குன்னு ஒரு தனி ஸ்டைல் உருவாக்கியிருக்கு. தொடர்ந்து எழுதுங்க. பல ஊர்களில் இருந்திருக்கீங்க. எத்தனையோ அனுபவங்கள் உங்களுக்குக் கிடைத்து இருக்கும். நீங்க ஒரு இழை ஆரம்பிச்சீங்கன்னா, எல்லோரும் அது சம்பந்தமாக அவங்களுக்குத் தெரிந்ததை, கேட்டதை எழுதுவாங்க.

அன்புடன்

சீதாலஷ்மி

அன்புடன்

சீதாலஷ்மி