படித்தவை ரசித்தவை – 9

அமரர் எஸ்.வி.வி


Books Review


அன்புத் தோழிகளுக்கு

சென்ற பகுதியில் அமரர் திரு.எஸ்.வி.வி. அவர்களைப் பற்றி எழுதுவதாக சொல்லியிருந்தேன் அல்லவா, இதோ அவரைப் பற்றியும், அவரது படைப்புகள் பற்றியும்..

ஏராளமான வாசகர்களைப் போல எனக்கும் என் அபிமான எழுத்தாளர்களில் முதன்மையானவராக இருப்பவர்கள் அமரர் கல்கி அவர்களும், சுஜாதா அவர்களும்தான். சுஜாதா ஒரு கட்டுரையில், நகைச்சுவையாக எழுத நினைப்பவர்கள், தேவன், எஸ்.வி.வி. இவர்கள் எழுதியதை முதலில் படிக்க வேண்டும் என்று சொல்லியிருந்தார். லைப்ரரியில் புத்தகங்கள் எடுக்கும்போது, திரு.எஸ்.வி.எஸ் அவர்கள் எழுதிய ஒரு நகைச்சுவைக் கதைத் தொகுப்பு ஒன்று கிடைத்தது. இவர் எஸ்.வி.வி அவர்களின் மகன் என்று தெரிந்தது. தொடர்ந்து எஸ்.வி.வி.யின் புத்தகங்களைத் தேட ஆரம்பித்தேன். ஒன்றிரண்டு கிடைத்தன. சமீபத்தில் இன்னும் சில புத்தகங்களும் படிக்கக் கிடைத்தன. இத்தனை நாள் இவர் எழுதியதைப் படிக்காமல் இருந்தோமே என்ற எண்ணமும், இப்போதாவது படிக்க முடிந்ததே என்ற மகிழ்ச்சியும் ஒரு சேர உண்டாயிற்று.

திரு எஸ்.வி.வி அவர்கள் தி ஹிந்து பத்திரிக்கையில் நகைச்சுவை கட்டுரைகள் எழுதி வந்தார். இவரது எழுத்துகள் தமிழில், ஆனந்த விகடனில் வரவேண்டும் என்று நினைத்த திரு.கல்கியும். திரு வாசனும், திருவண்ணாமலையில் அவரது வீட்டுக்கே நேரில் சென்று பேசினார்கள். பின்னர் அவர் தமிழிலும் நிறைய கதைகள், கட்டுரைகள், நாவல்கள் எழுதினார். அவர் ஆங்கிலத்தில் எழுதிய அனைத்தும் தி ஹிந்து பத்திரிக்கையில் மட்டுமே, அதே போல தமிழில் எழுதியது அனைத்தும் ஆனந்த விகடனில் மட்டுமே. இவரைப் பற்றி தி ஹிந்து பத்திரிக்கையில் இரண்டு முறை தலையங்கம் வெளி வந்ததாம்.

திரு எஸ்.வி.வி. பற்றி நான் படித்த தகவல்களை சுருக்கமாக சொல்லியிருக்கிறேன். உண்மையில் இவரது எழுத்துகளை நாம் ரசிப்பதற்கு இத்தனை பெரிய முன்னுரையெல்லாம் தேவைப்படாது. படிக்க ஆரம்பித்ததுமே, நம்மையும் அறியாமல் ஒரு சின்னப் புன்னகை நம் உதடுகளில் தோன்ற ஆரம்பித்து விடும்.

சில பேர் சின்னக் குழந்தைகளுக்கு கதை சொல்லும்போது பார்த்திருப்போம், பெரியவர்கள் நடந்த ஒரு சம்பவத்தை மற்றவர்களிடம் திரும்பவும் அப்படியே சொல்லுவதை கேட்டிருப்போம். கேட்பவர்கள் திறந்த வாய் மூடாமல், எதிரில் சொல்லுபவர் வர்ணிப்பதை, தங்கள் மனக் கண்ணில் படமாகப் பார்த்தவாறு, கேட்டுக் கொண்டிருப்பார்கள். சுற்றிலும் என்ன நடக்கிறது என்பதில் கவனம் போகாது. கேட்டு முடித்தபின்னும் அவர்கள் சொன்னதையே மனம் திரும்பவும் எதிரொலித்துக் கொண்டிருக்கும். அவ்வளவு ஏன், அதே விஷயத்தை வேறு இடத்தில் கேட்கும்போது கூட, இவர் குரலும், முகமும்தான் மனதில் பதிந்திருக்கும். அப்படி ஒரு ஒன்றுதல் ஏற்படுகிறது எஸ்.வி.வி. அவர்களின் எழுத்தைப் படிக்கும்போது.

கதையை சொல்லும்போது, அந்த சூழ்நிலையின் விளக்கத்தையும் போகிற போக்கில் ஒரு அபிப்ராயமாக சொல்லி விடுகிறார் எஸ்.வி.வி. “HIGHLY ATTACHED, TOTALLY DETACHED” என்று சொல்வார்களே, அது போல, கதையின் ஓட்டத்துடன் ஒன்றிப் போய் எழுதியிருக்கிறார், நம்மையும் அதில் ஒன்ற வைக்கிறார். அதே சமயம், அதிலிருந்து விலகி, தள்ளியிருந்து பார்த்து, அபிப்ராயம் சொல்லவும் முடிகிறது அவருக்கு.

இவருடைய படைப்புகளை அலையன்ஸ் பதிப்பகத்தார் வெளியிட்டிருக்கிறார்கள் .www.appusami.com தளத்திலும் சில கட்டுரைகள் வெளியிடப்பட்டிருக்கின்றன.

இனி, எஸ்.வி.வி. அவர்களின் ”சம்பத்து” என்ற நாவலைப் பற்றி கொஞ்சம் சொல்கிறேன்.

சம்பத்து இண்டர்மீடியட் பரீட்சை எழுதியிருக்கிறான். மிகவும் வறுமை. அப்பா சாகக் கிடக்கிறார். தாய் மாமன் சுந்தரத்திடம் உதவி கேட்பதற்காக வருகிறான். மாமன் மகள் ஜனகமும் தாயில்லாப் பெண். ஜனகம் மனசில் சம்பத்தைத் தவிர வேறு யாருக்கும் இடமில்லை. சுந்தரம் உலக மகா கஞ்சன். பணத்தாசையைத் தவிர வேறு எதுவும் முக்கியமில்லை அவருக்கு. ஒரே பெண் ஜனகத்தை, தன் நண்பர் வேதாந்ததுக்கு திருமணம் செய்து கொடுத்தால், பணத்தோடு பணம் சேரும் என்று கணக்கு போடுகிறார் என்றால் அவர் குணத்தைப் பற்றி வேறு என்ன சொல்ல! வேதாந்தம் ஜனகத்தின் அப்பா வயது உடையவர். கருமித்தனம், கருணையற்ற மனம் இப்படி எல்லாவற்றிலும் சுந்தரத்தைப் போன்றவர்தான்.

உதவி கேட்டு வரும் சம்பத்திடம் பணம் இல்லையென்று சொல்லி விடுகிறார். ஜனகம் ஆனது ஆகட்டும் என்று கை வளயலை கழட்டி, சம்பத்திடம் கொடுத்து அனுப்புகிறாள். ஆனால் சம்பத்து ஊர் போய்ச் சேர்வதற்குள் அவன் அப்பா இறந்து விடுகிறார். அந்த அதிர்ச்சியில் அம்மாவும் இறந்து விடுகிறாள்.

அவன் ஊருக்கு வரும் வழியில் இண்டர்மீடியட் பரீட்சையில் பாஸாகி விட்டான் என்று தெரிந்து கொள்கிறான். அதைப் பற்றி சந்தோஷப்படக்கூட அவனால் முடியவில்லை. சம்பத்தின் பக்கத்து வீட்டில் இருக்கும் ராமானுஜ ஐயங்காருக்கு சம்பகா என்று ஒரு அசட்டுப் பெண். அவரிடம் ஓரளவு வசதி உண்டு. சம்பத்து நல்ல புத்திசாலி. அவனை இஞ்ஜினீயரிங் படிக்க வைத்து, தன் மகளைக் கல்யாணம் செய்து வைத்து விடலாம் என்று கணக்குப் போடுகிறார் அவர்.

தங்கையும் தங்கை கணவரும் இறந்த செய்தி கேட்டு, துக்கப்படுவது போல நடிக்கிறார் சுந்தரம். அவனுடைய வீட்டையும் நிலத்தையும் தந்திரமாக எழுதி வாங்கிக் கொள்கிறார். ராமானுஜ ஐயங்காரோ, சம்பத்துக்கு காலேஜுக்கு பணம் கட்டி விட்டு, சம்பத்தின் பெற்றோர் இறந்த மறு நாளே அவனிடம் அவன் தன் பெண்ணைக் கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்று TRAP செய்கிறார். சுபாவத்தில் சாதுவான சம்பத்து, சம்மதிக்கிறான். ஆனாலும் அவன் மனதில் நிம்மதியில்லை. ஜனகத்தை விட்டு விட்டு, இப்படி இன்னொரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள எப்படி சம்மத்தோம் என்று தன்னைத் தானே நொந்து கொள்கிறான்.

ஜனகத்தின் வீட்டில் வேலை பார்க்கும் தம்பதியினரின் பெண் தெய்வானை. துணிச்சலுக்கும் மன தைரியத்துக்கும் பணம், வசதி, படிப்பு தேவையில்லை என்று நிரூபிக்கும் பெண். ஜனகம் தனியே இருக்கும்போது அவளிடம் பேச முயற்சிக்கும் வேதாந்தத்தை கிண்டல் செய்கிறாள். அவளுக்கு ஜனகத்தின் மனம் தெரியும்.

சம்பத்தின் கல்யாண ஏற்பாட்டைக் கேட்டு, ஜனகம் வேதனைப் படுகிறாள். அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் இருக்க முயற்சிக்கிறாள். பின் சம்பத்திடம் தைரியமாக சம்பகாவின் அப்பாவிடம் முடியாது என்று சொல் என்கிறாள்.

ஆனால் சம்பத்து திடீரென்று காணாமல் போய் விடுகிறான். ஜனகம் தெய்வானையிடம் அவனைத் தேடிப் பார்க்க சொல்கிறாள்.

ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள ஒரு கிராமத்தில் ராகவன் என்றொரு இன்ஸ்பெக்டர். அவனிடம் ஒரு ஏட்டாக வேலை செய்கிறான் சம்பத்து. ராமானுஜ ஐயங்காரிடமிருந்து தப்பிக்க, ஓடி வந்தவன், இங்கே இப்படி ஒரு அடிமையாக இருக்கிறான். ராகவன் ஷூவை அவன் முகத்தில் விட்டெறிந்தாலும் அவனுக்கு கோபம் வருவதில்லை. ஒரு மாதிரியாக செட்டில் ஆகி விட்டான் என்றே சொல்ல வேண்டும்.

ராகவன் பெரிய இடத்துப் பையன். அப்படி சொல்லும்போதே அதற்குண்டான அத்தனை அம்சங்களும் உண்டு என்பதைத் தெரிந்து கொள்ளலாம். நன்றாக ஊரை சுற்றுவான், செலவு செய்வான். தகப்பனாரின் சொத்தை ஒன்றுமில்லாமல் ஆக்கி விட்டான். திருமலாச்சாரியார் என்ற பணக்காரரின் பெண் லலிதாவும் ராகவனும் காதலர்கள். ஆனால் ராகவனின் உண்மையான குண விசேஷம் எதுவும் லலிதாவுக்குத் தெரியாது. அப்பா எடுத்துச் சொன்னாலும் அவள் நம்ப மறுக்கிறாள்.

தக்குபாடு ஸ்டேஷனுக்கு சம்பத்தை விசாரித்து கடிதம் வருகிறது. அவன் மாமா சுந்தரம் இறந்து விட்டாரென்றும், அவருடைய சொத்துகள் அனைத்துக்கும் அவனை வாரிசாக நியமித்திருக்கிறார் என்றும், இம்பீரியல் பாங்க் வந்து, தேவைப் பட்ட விவரங்கள் தந்தபின், அவற்றை அவன் சொந்தமாக்கிக் கொள்ளலாம் என்றும் தெரிகிறது.

சம்பத்து திகைக்கிறான். சொத்து தன் பேரில் என்றால், ஜனகம் என்ன ஆனாள்? மாமா இப்படி செய்யக் கூடியவரில்லையே என்று தவிக்கிறான்.

ராகவன் சம்பத்தின் திடீர் அதிர்ஷடத்தை நினைத்து பொறாமைப் படுகிறான். அங்கே போலீஸ் க்வார்ட்டர்ஸில் இருக்கும் ஏழை ஜனங்களுக்கு சம்பத்திடம் மிகவும் அன்பு. அவர்கள் அவனை சந்தோஷமாக வழியனுப்பி வைக்கிறார்கள்.

சென்னைக்கு வந்த சம்பத்து, ஜனகத்தைத் தேடுகிறான். தெய்வானையை சந்திக்கிறான். அவள் ஜனகம் காணாமல் போய் ஒரு வருஷத்திற்கும் மேல் ஆகி விட்டதாக சொல்லி, அவன் வந்தால் கொடுக்க சொன்னதாக ஜனகத்தின் கடிதம் ஒன்றையும் தருகிறாள். ஜனகம் தன் மனதில் உள்ள உறுதியையும், சம்பத்தின் மேல் அவளுக்கு இருக்கும் மாறாத அன்பையும் அந்தக் கடித்ததில் வெளிப்படுத்தி இருக்கிறாள். அப்பா கட்டாயக் கல்யாணத்துக்கு ஏற்பாடு செய்ததால் வீட்டை விட்டு தான் வெளியேறுவதாக குறிப்பிட்டு இருக்கிறாள். சம்பத்தின் கோழைத்தனம் தனக்கு வருத்தத்தை தந்தாலும், அவன் மேல் எதுவும் கோபமில்லை என்று எழுதியிருக்கிறாள்.

சம்பத்து மனம் கலங்குகிறான். எப்படியாவது ஜனகத்தைத் தேடிக் கண்டு பிடித்து, அவளிடம் அவள் சொத்துகளை ஒப்படைக்க வேண்டும் என்று தீர்மானித்துக் கொள்கிறான்.

ஆனால் விதி, அவனை திருமலாச்சாரியார் குடும்பத்திடம் நட்பை ஏற்படுத்தித் தருகிறது. திருமலாச்சாரியாரின் பெண் லலிதாவின் அழகு அவனை பிரமிக்க வைக்கிறது. அவர்கள் வீட்டின் ஆடம்பரமும், சொகுசும் அவனை மயக்குகிறது. தானும் அதே போல நாகரிகமானவனாக ஆக வேண்டும் என்று நினைக்கிறான். கையில் பணம் இருக்கும்போது நினைப்பு நடப்பாக மாற முடியாதா என்ன? சம்பத்து நாகரிகம் அடைகிறான். கார் வாங்குகிறான். எல்டாம்ஸ் ரோடில் பங்களா வாங்குகிறான். எல்லாம் மாமா சுந்தரம் எழுதி வைத்த சொத்தில் இருந்துதான்.

திருமலாச்சாரியாரின் குடும்ப நண்பரின் பெண் சாரு. பெற்றோரை இழந்த பின், இவர்களுடனேயே தங்கி விடுகிறாள். லலிதா இனிமையான பெண். சாருவை மிகவும் அன்பாக நடத்துகிறார்கள் லலிதாவும் அவள் அப்பாவும். ஆனால் சாருவின் மனதில் லலிதாவின் மேல் பொறாமைதான் இருக்கிறது.

லலிதாவின் குடும்பத்தினரின் நட்பு சம்பத்தை இழுக்கிறது. இடையே ஜனகத்தைத் தேடவும் ஏற்பாடு செய்கிறான்.

சாரு தனது சாகசப் பேச்சால், சம்பத்தின் மனதில் இரக்கத்தை உண்டாக்கி, தன்னைத் திருமணம் செய்து கொள்ள சம்மதிக்க வைக்கிறாள். வழக்கம் போலவே சம்பத்து தடுமாறுகிறான். ஜனக்த்தை நினைத்தா – இல்லை, சாருவை கல்யாணம் செய்து கொள்வதற்கு பதில் லலிதாவை கல்யாணம் செய்து கொள்ள முடிந்தால் .. என்று ஏங்குகிறான். லலிதா தன்னை விரும்புவதாக தப்புக் கணக்கு போடுகிறான்.

சாருவும் சம்பத்தும் திருமணம் செய்து கொள்ளப் போவதாக தெரிந்ததும் லலிதா மனப்பூர்வமாக சந்தோஷப்படுகிறாள். அதே சமயம் அவள் மனதில் வேறு கவலைகள். ராகவன் கடிதம் மூலம் அவளை திருமணத்துக்கு வற்புறுத்திக் கொண்டிருக்கிறான். திருமலாச்சாரி எதிர்க்கிறார். அத்துடன் முக்கியமாக இப்போது திருமலாச்சாரிக்கு மிகக் கடுமையான பண நெருக்கடி. வெளியில் சொல்ல முடியாமல் தவிக்கிறார், தற்கொலைக்கு முயற்சிக்கிறார். லலிதா தடுத்து, ஆறுதல் சொல்கிறாள். திருமலாச்சாரிக்கு சம்பத்துக்கு லலிதாவை திருமணம் செய்து கொடுத்து, தன் பணக் கஷ்டத்தையும் தீர்த்துக் கொள்ளலாம் என்ற எண்ணம் இருந்தது. இப்போது சாருவின் அறிவிப்பு அவருக்கு எரிச்சலையும் சலிப்பையும் தருகிறது.

லலிதா தன் அப்பாவுக்கு பண உதவி செய்ய முடியுமா என்று சம்பத்திடம் கேட்கிறாள். சம்பத்து சம்மதிக்கிறான். அதே சமயம் அவன் லலிதாவின் மேல் உள்ள அன்பை உளற, அங்கு வந்த சாரு, அதைக் கேட்டு விட்டு, இரண்டு பேரையும் திட்டித் தீர்த்து விட்டு, வீட்டை விட்டு வெளியேறி விடுகிறாள். லலிதா சம்பத்திடம் அவன் நினைப்பது தவறு என்று சொல்ல, சம்பத்து அவமானமாக உணர்கிறான்.

சம்பத்தின் பண உதவியால் தலைக்கு வந்த ஆபத்திலிருந்து தப்பித்த திருமலாச்சாரி, லலிதாவிடம் பேசி, அவள் மனதை மாற்றுகிறார். சம்பத்திற்கும் லலிதாவிற்கும் திருமண ஏற்பாடு நடக்கிறது. குழம்பிய மன நிலையில் லலிதா சம்மதிக்கிறாள்.

சம்பத்து திருமலாச்சாரியின் பிஸினஸில் பார்ட்னராகிறான். அவன் புத்திசாலித்தனம் நன்கு எடுபடுகிறது. சீக்கிரமே வியாபாரத்தை கற்றுக் கொள்கிறான்.

எதிர்பாராமல் இரண்டு பேர் “லலிதா மாளிகை”க்கு வருகிறார்கள். ஒருவன் ராகவன். இன்னொருவர் லலிதாவின் உறவினரான சேஷாத்ரி. இவர் ராகவனை விட உயர் பதவியில் போலீஸ் இலாகாவில் இருப்பவர். மனைவியை இழந்தவர். ஒரு காலத்தில் லலிதாவுக்கும் இவருக்கும் திருமணம் செய்ய பெரியவர்கள் பேசியதுண்டு. அது நடக்கவில்லை. எனினும், இப்போது நடக்கலாம் என்ற எண்ணம் அவருக்கு.

ராகவன் தக்குபாடில் ஒரு ஏழைப் பெண்ணை பொய்க் குற்றம் சாட்டி, அவளிடம் தவறாக நடக்க முயற்சித்தால், சஸ்பெண்ட் செய்யப்பட்டு, சென்னை வந்திருக்கிறான். சம்பத்தின் வீட்டில் தங்கிக் கொண்டு, அதிகாரம் செய்கிறான். லலிதாவிடம் பேசிப் பேசி, அவள் மனதை மாற்ற முயற்சிக்கிறான். ரகசியமாகத் திருமணம் செய்து கொள்ளலாம் என்று யோசனை சொல்கிறான்.

சேஷாத்ரி அவனை அங்கே சந்திக்கிறார். தக்குபாடு ஸ்டேஷனுக்குதான் தன்னை போஸ்டிங் போட்டிருப்பதாக சொல்கிறார். லீவில் வந்திருப்பதாக எல்லோரிடமும் சொல்லியிருக்கும் ராகவன், தன் குட்டு வெளிப்பட்டு விடுமோ என்று பயப்படுகிறான். அவன் ஏற்கனவே பல கேஸ்களில் மாட்டி, தப்பித்த கதையை சேஷாத்ரி மூலம் லலிதா தெரிந்து கொள்கிறாள்.

திடீரென்று ஜனகம் கிடைத்து விட்டாள் என்று தகவல் கிடைக்கிறது. சம்பத்து அவளை சந்திக்கிறான். தன்னுடன் வந்து அவள் தந்தையின் சொத்துகளைப் பெற்றுக் கொண்டு, தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று வேண்டுகிறான்.

ஜனகம் அமைதியாகக் கேட்கிறாள். சம்பகா, சாரு, லலிதா இவர்களுடன் எல்லாம் நடந்த அவனுடைய திருமண ஏற்பாடுகள் என்ன ஆயிற்று என்று!

ஜனகம் இத்தனை நாள் எங்கு இருந்தாள், அவள் எப்படி கிடைத்தாள், ராகவனுக்கும் லலிதாவுக்கும் திருமணம் நடந்ததா, சாரு என்ன ஆனாள், இவற்றுக்கெல்லாம் பதில் கிடைக்கிறது.

இந்தக் கதையில், ‘லலிதா மாளிகை’ பற்றிய வர்ணனை, அங்கே நடக்கும் டென்னிஸ் விளையாட்டு மற்றும் பார்ட்டிகள், இதெல்லாம் என்னை வியக்க வைத்த பகுதிகள்.

அதே போல, திருமண விஷயத்தில் மாற்றி மாற்றி நான்கு முறை முடிவெடுக்கும் சாதாரண மனிதனாக சம்பத்தையும், நன்கு படித்த, பணக்காரப் பெண்ணான லலிதாவும் அவனைப் போலவே தன் திருமண விஷயத்தில் முடிவெடுக்க தடுமாறுவதையும் வெகு இயல்பாக சித்தரித்திருக்கிறார் எஸ்.வி.வி.

இவருடைய மற்ற படைப்புகளில், வசந்தன், உல்லாச வேளை, வாழ்க்கையே வாழ்க்கை, பொம்மி போன்றவற்றையும் ரசித்துப் படித்தேன். இவர் ஆங்கிலத்தில் எழுதியவையும் நூல்களாக வெளிவந்திருக்கின்றன. “AT A DINNER”, “SOAP BUBBLES”, “MARRIAGE” அவற்றில் சில. இன்னும் படிக்க சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. அவசியம் படித்து விட வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன்.

தோழிகள், உங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொள்ளுங்கள், ஆவலுடன் காத்திருக்கிறேன்.

அன்புடன்

சீதாலஷ்மி

Comments

சீதாம்மா..
இப்படி கதை சொல்லி சஸ்பென்ஸ் வைத்துவிட்டீர்களே.. இப்போது என்ன செய்வது. ஜனகம் இத்தனை நாள் எங்கிருந்தாள்.. சம்பத்தை கல்யாணம் செய்து கொள்ள சம்மதித்தாளா? சாரு என்ன ஆனாள்? எங்கு போனாள்?, லலிதாவின் நிலை என்ன? எதுவுமே புரியவில்லை. எல்லாம் அந்தரத்தில் தொங்குகிறது. இந்தக்கதையின் புத்தகம் லைப்பரரியில் இருக்கிறதா என்று பார்க்கிறேன். முடிவு தெரியாமல் தலை சுற்றுகிறது. புதிது புதிதாக எழுத்தாளர்களை பற்றி நீங்கள் கூறும் போது இத்தனை காலம் இந்த எழுத்தாளர்களின் நுால்களை எல்லாம் ஏறெடுத்தும் பார்த்ததில்லையே என்று தோன்றுகிறது.

நேரம் கிடைக்கும்போது பதில் போடுங்கள்.
நானும் நேரம் கிடைத்தால் லைப்ரரி சென்று இவரின் புத்தகங்களை தேடிப்பாரக்கிறேன். நன்றி.. சீதாம்மா.

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

எஸ்.வி.வி.அவர்களின் புத்தகத்தை படித்தது மட்டுமின்றி கருத்துக்களை எம்மோடு பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிகள் சீதா
பல விடயங்களை உள்ளகத்தே கொண்டிருகிறது.
தாமதமாக இன்றுதான் தங்களின் இந்த அருமையான பதிவைக் கண்டேன்.
மிக நல்ல பதிவு....வாழ்த்துக்கள்.

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

அன்பு ராதா,

சாதாரணமாகவே நாம அந்தக் காலத்து எழுத்தாளர்களின் நாவல் என்றால், எழுத்து நடை சரளமாக இருக்காதேங்கற தயக்கத்துல, படிக்கறதுக்கு யோசிப்போம். ஆனா, தேவன், எஸ்.வி.வி. இவங்களுடைய நாவல்கள், படிக்கறதுக்கு ரொம்ப சுவாரசியமாக இருக்கும். டைம் இருக்கறப்போ, படிச்சுப் பாருங்க.

அன்புடன்

சீதாலஷ்மி

அன்புடன்

சீதாலஷ்மி

அன்பு யோகராணி,

பாராட்டுகளுக்கு மிகவும் நன்றி, எனக்குப் பிடித்ததை, நான் ரசித்ததை, உங்க அனைவருடனும் பகிர்ந்து கொள்ள முடிவது, மிகவும் மகிழ்ச்சியாக இருக்கு.

வாழ்த்துகளுக்கு மிகவும் நன்றி, யோகராணி.

அன்புடன்

சீதாலஷ்மி

அன்புடன்

சீதாலஷ்மி

சீதா மேடம்,

கதையோட suspense என்ன ?தாங்க முடியவில்லை ..சொல்லுங்க.. நீங்க ஒவ்வொரு எழுத்தாளர் பற்றி எழுதும் போது நான் இந்தியாவில் இருக்கும் போது இதையெல்லாம் மிஸ் பண்ணிட்டேன்னு தோணுது அங்கே இருந்த போது தெரியவில்லை எனக்கு இப்போ இதெல்லாம் படிக்கணும் போல இருக்கு இந்த முறை இந்தியா சென்றால் கண்டிப்பாக ஒரு ரவுண்டு இதெல்லாம் படிக்க வேண்டும்.

வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

அன்பு கவிதா,

எப்படி இருக்கீங்க? பரீட்சை எல்லாம் நல்லபடியாக முடிச்சுட்டீங்களா? இந்தப் பகுதி உங்களுடைய ஆர்வத்தை அதிகப்படுத்தியிருப்பது, மகிழ்ச்சியாக இருக்கு.

ரொம்ப நாளாச்சு, உங்க சமையல் குறிப்புகளை முகப்பில் பார்த்து, இனி எதிர்பார்க்கலாம்தானே.

அன்புடன்

சீதாலஷ்மி

அன்புடன்

சீதாலஷ்மி

உங்களின் படித்தவை, ரசித்தவை பகுதி, படித்துத்தான் என் தமிழ் படிக்கும்
ஆர்வத்தை வளர்த்துக்கொண்டிருக்கிரேன். ஒவ்வொரு கதாசிரியர் பற்றியும்
அவர்களின் நாவல்கள் பற்றியும் தெளிவாகச்சொல்லி வருவது மிகவும்
பயனுள்ளதாக இருக்கு. தொடரட்டும் உங்கள் சீரிய பணி.

அன்பு கோமு,

இன்னிக்குதான் உங்க பதிவு பார்த்தேன், வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி, கோமு.

அன்புடன்

சீதாலஷ்மி