சுற்றுலா போக‌லாம்‍‍‍ ‍‍ 1

கடந்த‌ மே மாதம் அக்கினி வெயிலை சமாளிக்க‌ எங்காவது நல்ல‌ இதமான‌ க்ளைமேட் உள்ள‌ இடமாகப் பார்த்து டூர் செல்ல‌ திட்டமிட்டோம்

ஹாங்காங் போவதென்று கடைசியில் முடிவானது. அப்படியே போற‌ வழியில் இலங்கை செல்ல‌ தீர்மானித்தோம்.

ஒரு சுபயோக‌ தினத்தில் வீட்டிலிருந்து கிளம்பி இலங்கை சென்றடைந்தோம். ஏர்போர்ட்ல‌ இறங்கி உள்ளே போனதும் நமோ புத்தாய‌ என்று எழுதப்பட்ட‌ பெரிய‌ புத்தரின் திரு உருவச் சிலை வரவேற்றது.

அதன் முன்பு ஒரு தட்டில் மலர்கள் வைக்கப்பட்டிருந்தன‌. அவை நான் இதற்கு முன்பு பார்த்திராத‌ மலர்கள். இவை என்ன‌ மலர்கள் என்று தெரிந்தவர்கள் கூறுங்களேன். நானும் தெரிந்து கொள்வேன்.

ஹோட்டலில் சற்று நேரம் இளைப்பாறி விட்டு முதலில் புத்தரின் கோவில் ஒன்றுக்கு அழைத்து சென்றனர்.

"இமாவின் ஊராச்சே !! அவங்க‌ வீடு எங்கே இருக்கும்?' 'என்னோட‌ தாத்தா கடை வைத்திருந்தது இங்கே தானே?'

இப்படி பலப்பல‌ நினைவுகளுடன் சாலையை வேடிக்கை பார்த்து கொண்டே வந்தேன்.

நாங்கள் சென்ற‌ அன்று புத்த‌ பூர்ணிமா. அதை வைஷாகி விழாவாக‌ இலைங்கை முழுவதும் வெகு விமரிசையாக‌ கொண்டாடுகின்றனர். சாலை, ஹோட்டல், பீச் எங்கெங்கு காணினும் அலங்கார‌ தோரணங்கள். விழாக்களும் கொண்டாட்டமும் நம்மை மகிழ்வுறச் செய்வதற்கு தானே.

அங்கிருந்து பீச்சிற்கு சென்றோம். மனிதன் எத்தனை வானுயர்ந்த‌ கட்டிடங்களை கட்டினாலும், உலக‌ அதிசயங்களை உருவாக்கினாலும் இறைவன் படைப்புக்கு முன் அவை எம்மாத்திரம்.

எவ்வளவு நேரம் நின்றாலும் அலுக்காத‌ இடம் பீச் தான். அங்கே குட்டீஸ்லாம் விதவிதமா பட்டம் விட்டு குதூகலித்தனர்.

இந்த‌ கடல் மட்டும் நம்மை பிரிக்கவில்லையெனில் நாம் ஒரே நாடாக‌ இருந்திருப்போமென்று தோன்றியது.

பீச்சில் இறால் வடை விற்றுக் கொண்டிருந்தது. இறால் மீனை தலை , கால் எல்லாம் நீக்காமல் அப்படியே முழுசாக‌ வைத்து வடை சுட்டிருந்தார்கள்.

அப்புறம் ஒரு ஷாப்பிங் மால். இலங்கை ஃபேமஸ் டீத்தூள் மட்டும் வாங்கிக் கொண்டேன்.

மியூசியம் போனோம். அழகிய‌ தமிழில் 'தேசிய‌ நூதனசாலை தினைக்கனம்' என்று எழுதியிருந்தது. தூய‌ தமிழுக்கு அவர்களை மிஞ்ச‌ முடியாது. ஆங்காங்கே தூய‌ மொழிபெயர்ப்பில் தமிழ் மொழி கொஞ்சியது.

மியூசியம் உள்ளே புகைப்படம் தடை செய்யப் பட்டிருந்தது. வேலைப்பாடமைந்த‌ வெற்றிலைத் தட்டு ஒன்று மிக்க‌ அழகாக‌ இருந்தது. நீரை ஃபில்டர் செய்யும் பழங்கால‌ கல் தொட்டியும் பிரமிக்கும் விதத்தில் வடிவமைக்கப்பட்டிருந்தது. அனைத்தையும் கண்டு களித்தோம்.

இப்படி ஒரு வலை தளத்தில் எழுதுவோம் என்றோ, உங்களுடன் பகிர்ந்து கொள்ள‌ வாய்ப்பு கிடைக்குமென்றோ அப்போது எனக்கு தோன்றவில்லை. எனவே குறிப்பு எடுத்துக் கொள்ளவோ, ஸ்பெஷலாக‌ படமெடுக்கவோ இல்லை. மேலும் இது ஹாங்காங் செல்லும் வழியில் ஒரு நாள் டூர் தான்.

மறுநாள் அங்கிருந்து ஹாங்காங் புறப்பட்டு சென்றோம். அதைப் பற்றி அடுத்த‌ பதிவில் பார்க்கலாம். அதுவரை இங்கேயே இருப்போமே.

5
Average: 5 (6 votes)

Comments

நல்ல‌ தொடக்கம். இயல்பாக‌ எழுதுகிறீர்கள். எனக்கு ரொம்ப‌ பிடிக்குது. வாழ்த்துக்கள் : ) //இவை என்ன‌ மலர்கள் என்று தெரிந்தவர்கள் கூறுங்களேன். நானும் தெரிந்து கொள்வேன்.//இதன் பெயர் நாகலிங்க மலர் என்று சொல்லி கேள்விப்பட்டு இருக்கிறேன். மேலே ஆயிரம் தலை நாகம் போலவும் அதன் உட்புறம் மிகவும் சிறிய‌ சிவலிங்கம் போலவும் இருக்கும்.
அன்புடன்
தயூ

நல்லது செய்த லாற்றீ ராயினும்
அல்லது செய்த லோம்புமின்!!!

//என்ன‌ மலர்கள்//
சிங்களத்தில் சல்மல்.
தமிழ் - நாகலிங்கப்பூ - காரணம் தயூ சொல்லி இருக்காங்க.
சென்னைல இருக்கு. எழும்பூர் அருங்காட்சியகப் பக்கம் பார்த்து இருக்கிறேன். பூண்டி கோயில்லயும் இருக்காம். சின்னமலையில் இருந்து அடையாறு போகும் வழியில் உள்ள AIR ட்ரெய்னிங் சென்டர் பகுதியிலும் இருக்கிறதாம். யார் சொன்னாங்கன்னு கேட்கப்படாது. ;))) மனோ அக்கா கூட 'முன்பெல்லாம் தெருவுக்குத் தெரு இருக்கும்,' என்று சொன்னாங்க. நீங்க எப்படி சென்னைல காணாமல் போனீங்க! இந்தியால நிறைய இருக்கும் நிச்சயம்.

ஆங்கிலம் - பழத்தின் வடிவம் & அளவு காரணமாக - cannonball tree
தாவரவியற்பெயர் - Couroupita guianensis

‍- இமா க்றிஸ்

//இமாவின் ஊராச்சே !!// இல்லை... நான் திருகோணமலை. நீங்கள் போனது கொழும்பு. ;)

வெசாக் நான் மிஸ் பண்ணும் விஷயங்களில் ஒன்று. வெசாக் என்றதும் எனக்கு மொஹிதீன் பெக் பாடிய 'புத்தம் சரணம் கச்சாமி' பாடல்தான் நினைவுக்கு வருகிறது. அந்தக் கணீர் குரல், பாவம். அதை மிஞ்ச இன்னொரு பாடல் வரப் போவதே இல்லை. பாடலைத் தேடிப் பிடித்துக் கேட்டுக் கொண்டேதான் இதைத் தட்டுகிறேன். :-)

இப்போது முன்பு போல இல்லை எதுவும். முன்பு சிங்களவர் வெசாக்குக்கென்றே வீடுகளில் வெளிச்சக் கூடுகள் கட்டுவார்கள். இப்போது மின்சாரம்... ரெடிமேட் தான் அதிகமாக இருக்கிறது. ;(

பந்தல் அலங்காரங்கள் பார்க்கப் பிடிக்கும். நின்று, மாறும் காட்சிகளைப் பார்த்து கூடவே ஒலிக்கும் கதையையும் கேட்கவேண்டும். அப்போதுதான் முழுமையாக ரசிக்க முடியும். இனியெல்லாம் மே மாதம் இலங்கைக்குப் போவேனா என்று தெரியாது.

//அலுக்காத‌ இடம் பீச்// Galle Face!!
//இறால் மீனை தலை , கால் எல்லாம் நீக்காமல்// முதல்ல றால் - மீன் இல்லை. 'இஸ்ஸோ வடே' சாப்பிட்டிருக்கிறீங்க. எங்கள் ஸ்பெஷல். சுவை எப்படி! சூப்பர் இல்ல!

‍- இமா க்றிஸ்

//அழகிய‌ தமிழில் 'தேசிய‌ நூதனசாலை தினைக்கனம்' என்று எழுதியிருந்தது. தூய‌ தமிழுக்கு அவர்களை மிஞ்ச‌ முடியாது. ஆங்காங்கே தூய‌ மொழிபெயர்ப்பில் தமிழ் மொழி கொஞ்சியது.//
;)))))))) என்னால முடியலயே நிகிலா!! ஏன் இந்தக் கொலைவெறி!! ;))))))) பயங்கரமா காலை வாரி விட்டிருக்கிறீங்க. அழுதுருவேன். ;((

//தினைக்கனம்// ஒரு வேளை.. உள்ளே 'தினை' சேமிப்புக் கிடங்கு இருக்கிறதோ என்னவோ! போய்ப் பார்த்தீங்களா? ;)) தமிழையே நூதனம் ஆக்கி விட்டிருப்பதால் நிச்சயம் அது நூதனசாலைதான். ;D சரியான வார்த்தை 'திணைக்களம்' - தி..ணை..க்க..ள..ம்.

//மொழிபெயர்ப்பில் தமிழ் மொழி கொஞ்சியது.// 'கெஞ்சியது' என்று போட நினைத்து இப்படிப் போட்டிருக்கிறீங்க, அதுதானே! :-) ம்... இது தமிழர் குற்றம் இல்லை. அந்தப் பெயர்ப்பலகை நிச்சயம் ஒரு சிங்களத் தயாரிப்பு.
சிரிக்கப்படாது எங்கள் பரிதாபமான நிலையைப் பார்த்து. கர்ர்ர். ;(((

அது தமிழ் சீர்திருந்தும் முன்னால் எழுதிய பலகையாகத் தெரிகிறது. அப்படி இருந்தும் இத்தனை காலம் கண்டவர்கள் யாரும் சரிசெய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. முன்பு ஒரு இடத்தில்... சிகிரியாவில் என்று நினைக்கிறேன், ஆண்கள் கழிப்பிடம் என்பதைக் குறிக்க - Male - 'மேல்' என்று தமிழில் எழுதியிருந்தார்கள். அப்படியானால் பெண்கள் பக்கம்!! போக வேண்டாம் என்று திரும்பிவிட்டேன். தமிழ்க்கொலையை... தமிழ்ப் பாடநூல்களின் ஆரம்பப் பக்கங்களில் கூடக் காணலாம். இதுவும் தமிழர் தவறு அல்ல. ஆயிரம் பெரிய விடயங்கள் அந்தரத்தில் நிற்க இவற்றைத் திருத்துவது மட்டும் எப்படி முடியப் போகிறது! நினைத்தால் வலிதான் மிஞ்சும். ;( தமிழ், சிங்களம் என்று பாகுபாடு பார்க்காத எனக்கே இந்த மாதிரி விஷயங்களைப் பார்க்க வலிக்கிறது. ;(

‍- இமா க்றிஸ்

நிகிலா... அழகான பதிவு. :) நாங்க 2 வருடம் முன் திருமண நாள் கொண்டாட இலங்கை போன நினைவு வருது. அங்க தான் நானும் முதல்ல இந்த பூவை கண்டேன். அதன் பின் அது சென்னை, பெங்களூர்ன்னு எல்லா இடத்திலும் சர்வ சாதாரணமா கண்ணில் படுது. :) //சின்னமலையில் இருந்து அடையாறு போகும் வழியில் உள்ள AIR ட்ரெய்னிங் சென்டர் பகுதியிலும் இருக்கிறதாம்.// - ம்ம். இருக்கு... பெரிய மரம் உண்டு. பெங்களூரில் ரொம்பவே அதிகம்.

தமிழ்... அவங்க கொலை பண்ணாலும் வனிக்கு புரியப்போறதில்லை ;) இமா சொன்னது எனக்கு புது தகவல். நான் அந்த போர்ட் பார்த்திருந்தா நிகிலா சொன்ன மாதிரி... “இது தான் இதுக்கு சரியான தமிழ் பெயர் போல”னு நினைச்சுகிட்டு வந்திருப்பேன். உண்மையில் என் இலங்கை பயணத்தில் நான் இதை தான் பண்ணேன், எல்லா இடத்திலும் இருக்கும் சுத்த தமிழ் சொல் எல்லாம் வாயில் நுழையாம படிச்சு பேன்னு பார்த்தேன். சத்தியமா ஒரு வார்த்தையும் நினைவில் இல்லை.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

//ம்ம். இருக்கு... பெரிய மரம் உண்டு.// அதான் எனக்குத் தெரியுமே! ;)) நீங்கதான் சொன்னீங்க வனி. ;))

‍- இமா க்றிஸ்

ஹாய்,

நாகலிங்க‌ பூ போட்டோ அழகாக‌ இருந்ததுங்க‌. பயணத்தை தொகுத்து பதிவிட்டதும் அழகுப்பா.

ரஜினிபாய்

கடல் அளவு ஆசை
கையளவு மனசு

ஹாய் நிகி.அழகான தொடக்கம். .இந்த பூ இங்க எங்க ஸ்கூலில் பெரிய மரம் இருக்கும் .அதில் பார்த்திருக்கேன். எடுத் பார்போம்.அழகா உள்ளே சிவலிங்கம் மாதிரி இருக்கும்

Be simple be sample

//நீங்கதான் சொன்னீங்க வனி. ;))// - ம்ம்... என்ன என்னமோ சொல்லி வைக்கிறேன் ஒன்னும் நினைவில் இருப்பதில்லை. வயசாகுதில்ல. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

//நல்ல‌ தொடக்கம். இயல்பாக‌ எழுதுகிறீர்கள். எனக்கு ரொம்ப‌ பிடிக்குது.//
மிக்க‌ நன்றி தயூ
//இதன் பெயர் நாகலிங்க மலர் என்று சொல்லி கேள்விப்பட்டு இருக்கிறேன். மேலே ஆயிரம் தலை நாகம் போலவும் அதன் உட்புறம் மிகவும் சிறிய‌ சிவலிங்கம் போலவும் இருக்கும்.//
அப்படியா. லிங்கமும்,நாகமும் மாதிரி தோன்றுவதால் இந்த‌ பெயரா.
தகவலுக்கு நன்றி தயூ.

ஆகா.. விரிவான‌ விடை அளித்திருக்கீங்க‌ இமா. .நான் சென்னையில் பார்த்ததில்லை.
ஆங்கிலத்தில் cannonball tree ஆ... கூகுள் ல‌ பார்த்தேன். நன்றி.
தாவரவியற் பெயரெல்லாம் சொல்லி டீச்சர்னு நிரூபிச்சீட்டீங்க‌.
சல்மல் சிங்களப் பேரு நல்லாருக்கே.

//இல்லை... நான் திருகோணமலை. நீங்கள் போனது கொழும்பு. ;)// இலைங்கை முழுவ‌தும் எனக்கு இமாவின் ஊரு தான்.:)

//முன்பு சிங்களவர் வெசாக்குக்கென்றே வீடுகளில் வெளிச்சக் கூடுகள் கட்டுவார்கள். இப்போது மின்சாரம்... ரெடிமேட் தான் அதிகமாக இருக்கிறது. ;(//
ஓ அது பேரு வெளிச்சக் கூடா? எங்கே பார்த்தாலும் அது தான் க‌ண்டோம்.
என்ன‌ செய்வது இமா .யாருக்கும் பொறுமை இல்லை.எனவே எல்லாம் ரெடிமேடு ஆயிடுச்சு.
Galle face சூப்பரான‌ இடம் இமா.(கூகுள் உபயம்)
//இறால் - மீன் இல்லை. 'இஸ்ஸோ வடே' சாப்பிட்டிருக்கிறீங்க. எங்கள் ஸ்பெஷல். சுவை எப்படி! சூப்பர் இல்ல!//
ஊஹூம்.எங்க‌ ஆத்துக்காரர் வாங்கி தரலை.தலை,காலோடு இருக்குன்னு சொல்லிட்டார். நீங்க‌ செய்முறை சொல்லுங்க‌.செய்து சாப்பிடுறேன். இமா

//தமிழையே நூதனம் ஆக்கி விட்டிருப்பதால் நிச்சயம் அது நூதனசாலைதான். ;D சரியான வார்த்தை 'திணைக்களம்' - தி..ணை..க்க..ள..ம்.//
மியூசியத்தில் நூதனமான‌ பொருட்கள் இருப்பதால் அது நூதனசாலை சரி தான்.
தினைக்கன‌(ள‌)ம் ???என்னை புலம்ப‌ விட்டுட்டீங்க‌ இமா.
சும்மா சொல்லப்படாது.எங்களுக்கு ஆங்கிலம் கலவாத‌ தூய‌ தமிழ் என்றால் அது உங்களோட‌ தமிழ் தான்.
//Male - 'மேல்' என்று தமிழில் எழுதியிருந்தார்கள். அப்படியானால் பெண்கள் பக்கம்!!//
சிரித்து சிரித்து வயிறெல்லாம் வலிக்க‌ ஆரம்பித்து விட்டது.

பாராட்டுக்கு நன்றி வனி.:)

//அங்க தான் நானும் முதல்ல இந்த பூவை கண்டேன்.// அப்படீன்னா எப்பவும் இதே நாகலிங்க‌ மலரைத் தான் படைப்பாங்கன்னு நினைக்கிறேன்.
எனக்குப் புதிது.நான் இது வரை பார்த்ததில்லை வனி.
//நான் அந்த போர்ட் பார்த்திருந்தா நிகிலா சொன்ன மாதிரி... “இது தான் இதுக்கு சரியான தமிழ் பெயர் போல”னு நினைச்சுகிட்டு வந்திருப்பேன். உண்மையில் என் இலங்கை பயணத்தில் நான் இதை தான் பண்ணேன் எல்லா இடத்திலும் இருக்கும் சுத்த தமிழ் சொல் எல்லாம் வாயில் நுழையாம படிச்சு பேன்னு பார்த்தேன். சத்தியமா ஒரு வார்த்தையும் நினைவில் இல்லை//
நூறு சதம் உண்மை வனி.பஸ் நிறுத்தத்தில் ஒரு வார்த்தையை புதிதாக‌ படிச்சேன். நல்ல‌ மொழிபெயர்ப்பு என்று வேறு எண்ணிக் கொண்டேன்.சுத்தமா இப்போ அது நினைவுக்கு வரலை.

ரொம்ப‌ நன்றி ரஜினி. தொடர்ந்து வாங்க‌.. இன்னும் இருக்கு.

உங்க‌ ஸ்கூல்லேயே இருக்கா??
இனி சென்னை வரும்போது கட்டாயம் நேரில் பார்க்க‌ வேண்டும். கூகுள் ல‌ பார்த்தேன்.காய் எல்லாம் பெரிய‌ தேங்காய் சைஸ் ல‌ இருக்கு.
பாராட்டுக்கு மிக்க‌ நன்றி ரேவா

நிகிலா... இந்த மரத்துக்கு புத்தருக்கும் தொடர்பு இருக்குன்னு சொல்றாங்க. அதனால் புத்தருக்கு தாமரையும், நாகலிங்க பூவும் வைத்து வழிபடுவாங்கன்னு சொன்னாங்க. அதனால் தான் புத்த ஆலயங்கள் இருக்கும் இடத்தில் இந்த மரங்கள் காணப்படுகிறது.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஆமாம் வனி. சல்மல், தாமரை இன மலர்கள் (அரும்பாகப் பறித்து பிறகு கையால் விரிப்பார்கள்.) தேமா (plumeria) இவற்றைத்தான் படைப்பார்கள். இப்போது நித்தியகல்யாணியும் வேறு மலர்களுக் கூட சேர்ந்து இருக்கிறது.

//வார்த்தையை புதிதாக‌// & //நல்ல‌ மொழிபெயர்ப்பு// அது யாழ்ப்பாணம், வவுனியா பகுதிக்குப் போனீர்களானால் நம்பலாம் நிகிலா. கொழும்பில்... ம்ஹும்! போலிகளைக் கண்டு ஏமாறாதீர்கள். ;D

‍- இமா க்றிஸ்

பயண அனுபவங்கள் ரொம்ப அருமைங்க. ..
பூக்களின் படங்களும் நல்லாயிருக்குங்க..

நட்புடன்
குணா

. புத்தருக்கு தாமரையும், நாகலிங்க‌ மலரும் வைத்து வழிபடுவாங்களா...அப்படீன்னா புத்த‌ ஆலயங்களில் கட்டாயம் இருக்கும். . .தகவலுக்கு நன்றி வனி.

Plumeria -- ம் இது எங்க‌ ஸ்கூல்ல‌ இருக்கு. மட்டரளி நு சொல்லுவோம். மர‌ மல்லின்னும் சிலர் சொல்றாங்க‌.
// யாழ்ப்பாணம், வவுனியா பகுதிக்குப் போனீர்களானால் நம்பலாம்// //போலிகளைக் கண்டு ஏமாறாதீர்கள்.// அப்படீன்னா யாழ் தமிழ் தான் அசலா.
இலங்கை வானொலியின் தூய‌ தமிழுக்கு நான் ரசிகை.
நன்றி இமா

பயண‌ அனுபவங்கள் இன்னும் இருக்கு. தொடர்ந்து வாங்க‌.
மிக்க‌ நன்றி சகோ குணா.

சூர்ய‌ நமஸ்காரம் முடிந்து, இலங்கைக்கு கூட்டிட்டு போயிட்டீங்க‌.
ஹாங்காங் எப்போ வரும்னு எதிர்பார்ப்போட‌ இருக்கேன்.
பதிவு அருமை.

அட்மின் அண்ணாவோட‌ பதிவு, உங்கள் இலங்கை பதிவு, இமாம்மாவின் பதிவு எல்லாவற்றையும் படிக்கும்போது, நாம் பேசுவது, எழுதுவது எல்லாம் உண்மையில் தமிழ்தானா என்றே சந்தேகமா இருக்கு நிகிலா!

நன்றி அனு .
ஹாங்காக் வந்திடுச்சி. படித்து விட்டு சொல்லுங்க‌ அனு.
எங்கும் தமிழ்; எதிலும் தமிழ் ‍‍_ இதிலென்ன‌ சந்தேகம்
தமிழ் என்றால் சும்மாவா ‍‍ திருக்குறள் தந்த‌ மொழியாச்சே. ‍‍

அன்பு நிகிலா,

கிட்டத்தட்ட 2 வாரமாக, நெட் கனெக்‌ஷன் இல்லை:(, நேத்திக்குத்தான் சரியாச்சு.

ஒவ்வொன்றாகப் படித்து, பதிவிட ஆரம்பிச்சிருக்கேன்.

இலங்கை - அவசியம் சென்று வர வேண்டுமென்று நான் கனவு காணும் இடங்களில் ஒன்று.

உங்கள் பதிவைப் படித்ததும், மீண்டும் அந்த ஆசையைப் புதுப்பித்துக் கொண்டிருக்கிறேன்.

தொடருங்கள், படிக்கக் காத்திருக்கிறோம்.

அன்புடன்

சீதாலஷ்மி

இலங்கையில் எல்லா இடமும் பார்க்க‌ முடியவில்லை. ஆனால்,புத்த‌ பூர்ணிமா என்றதால் ஜே ஜே என்று இருந்தது.
உங்கள் ஆசை விரைவில் நிறைவேறும் சீதா.
நன்றி