மனுஷி - ஜெ மாமியின் சிறுகதை

தலைக்குக் குளித்துவிட்டு அலமாரியில் வைத்திருந்த வைரத்தோட்டையும், மூக்குத்தியையும் எடுத்த பார்வதி கை தவறி கீழே விழுந்த பெட்டியை எடுத்தாள். ‘’என்ன இது! இன்னிக்கு வெள்ளிக்கிழமை. பெட்டியில இருக்கற ஊசி மருந்து திங்கக்கிழமை சாயங்காலம் வரைக்கும் தானே வரும். தினமும் ரெண்டு ஊசி போடணுமே. எப்படி மறந்து போனேன். முத்து ஏன் இன்னும் மருந்தை கொண்டு வந்து கொடுக்கல. இந்த மாதிரி நடந்ததே இல்லயே. கிழக்க உதிக்கற சூரியன் கூட மேற்க உதிக்கலாம். ஆனா முத்து வரது தவறினதே இல்லையே. ஒரு நாளா, ரெண்டு நாளா, பத்து, பன்னிரண்டு வருஷம் கிட்ட ஆயிடுத்தே.’ அவள் எண்ண ஓட்டத்தைத் தடை செய்தது வாசலில் இருந்து வந்த குரல்

“அம்மா, அம்மா”

“யாரது காலங்கார்த்தால”

“நான் தாம்மா, கௌரி”

“கௌரியா?”

வாசலுக்கு வந்து படியில் பூக்கூடையுடன் அமர்ந்திருந்தவளைப் பார்த்து, “ஓ பூவா, ஏம்மா நேத்து வரல?”

“தடுப்பு ஊசி போட்டுக்க ஆஸ்பத்திரிக்குப் போயிருந்தேம்மா. திரும்பி வர ரொம்ப நேரம் ஆயிட்டதால வரல. அதனால தான் இப்ப கொண்டு வந்தேன்”

“தடுப்பு ஊசியா, எதுக்கு”

“என்னம்மா மாசம் ஆறு ஆச்சு இல்ல. அதான்”
லேசாக பம்மென்றிருந்த அவள் வயிற்றைப் பார்த்து மனதுக்குள் ,’சே! என்ன மனுஷி நான். நாலு புள்ள பெத்திருக்கேன். இவள தினமும் பாக்கறேன். இதக்கூட கவனிக்கலயே. எப்பவும் மருந்து, மாத்திரை, ஊசி, இதே நினைப்பு தான். நினைச்சா எனக்கே வெக்கமா இருக்கு.’

“இது முதல் குழந்தையா?”

“இல்லம்மா, ரெண்டாவது, முதல்ல பொண்ணு, மூணு வயசு ஆகுது. போன மாசம் கூட என் பொண்ண அழச்சிட்டு வந்தேனே”.

மறுபடியும் மனதிற்குள் தன்னையே நொந்து கொண்டாள். பூவை வாங்கிக் கொண்டு காசைக் கொடுத்தவள், ‘கொஞ்சம் இரு வரே’ன்’ என்று சொல்லி விட்டு உள்ளே போய் இரண்டு புடவைகளைக் கொண்டு வந்து கொடுத்துவிட்டு ‘இந்தா மோர் குடி’ என்று ஒரு குவளையைக் கொடுத்தாள்.

”குழந்தை பிறந்ததும் சொல்லி அனுப்பு” என்றாள்.

“நான் இன்னும் ரெண்டு, மூணு மாசம் பூ எடுத்துட்டு வருவேம்மா.
அம்மா, புடவை புதுசா இருக்கே”

“அதனால் என்ன. நான் இப்ப எல்லாம் ஆறு கெஜம் கட்டறது இல்ல. ஒன்பது கெஜம் தான். இது என் பசங்க ஊரிலிருந்து வாங்கிக் கொடுத்தது. ஏன் நீ புதுசு கட்டக் கூடாதா”

“அதுக்கில்ல…..சரிம்மா, நான் வரேன்”, அவள் செல்வதையே பார்த்துக் கொண்டிருந்தாள் பார்வதி. இத்தனை நாள் கௌரியை கவனிக்காததற்கு பிராயச்சித்தம் செய்தது போல் ஒரு அல்ப திருப்தி அவளுக்கு.
கௌரி கண் பார்வையிலிருந்து மறைந்ததும், அவள் மனம் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிய வேதாளமாய் ஊசி மருந்து, முத்து என்று சுற்றிச் சுற்றி வந்தது.
*****

மெல்ல உடம்பில் எட்டிப் பார்த்த சர்க்கரையை நாவை அடக்கி விரட்டாமல் விட்டதால், அதன் ஆதிக்கம் அதிகமாக, அதிகமாக, கோப தாபங்கள் குறைந்து, நடமாட்டமும் குறைந்து, பேச்சும் நின்று போய் பார்வதியின் கணவர் படுக்கையில் விழுந்து ஆயிற்று பத்து, பன்னிரண்டு வருடங்கள் முடிந்து விட்டன. மூச்சு மட்டும் சீராக ஓடிக் கொண்டிருக்கிறது. இவள் பேசினால் புரிந்து கொள்வார். புரிந்து கொண்டதன் அடையாளமாக ஒரு தலையாட்டல். அவ்வளவுதான். பார்வதியின் உலகமே கணவனுக்கு காலையில் ஓட்ஸ் கஞ்சி, மதியம் அரிசிக் கஞ்சி, இரவு கோதுமை கஞ்சி, மருந்து வந்ததா, கணவனை குளிப்பாட்டி சுத்தம் செய்து விடும் பையன் வந்தானா என்று செக்கு மாடு போல் சுத்திச் சுத்தி வந்தது. ஆரம்பத்தில் இருந்த பயம் போய் அவளே கணவனுக்கு இன்சுலின் ஊசி போடும் அளவிற்கு கற்றுக் கொண்டும் விட்டாள்.

நிலம், நீச்சு என்று எதற்கும் குறைவே இல்லை. இரண்டு பையன், இரண்டு பெண்கள் எல்லோருமே குடும்பத்துடன் வெளிநாடுகளில் உத்தியோகம் பார்த்து அந்தந்த நாட்டு குடிமக்களாகவே ஆகிவிட்டனர். நாலு, ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை எல்லோரும் ஒன்றாக வந்து ஒரு மாதம் தங்கிவிட்டு செல்வார்கள். அந்த நாட்களில் மட்டும் தான் பார்வதி சமையலே செய்வாள். மூத்த பிள்ளையுடன் படித்த, டவுனில் மருந்துக் கடை வைத்திருக்கும் முத்து மாதத்திற்கு ஒரு முறை மருந்துகளைக் கொண்டு வந்து கொடுத்து விட்டுச் செல்வான்.

பார்வதி கடவுளிடம், உன்னிடம் ”மாங்கல்யப் பிச்சை மடிப்பிச்சை தாருமம்மா
சந்தானப் பிச்சையுடன் தனங்களும் தாருமம்மா“ என்று கேட்டேனே
“சுற்றி நிறைய சுற்றத்தாரைத் தாருமம்மா, அதுவும் அவர்களை அண்டையிலேயே வையுமம்மா” என்று கேட்க விட்டு விட்டேனே என்று தனக்குத்தானே சொல்லிக் கொள்வாள்.

சனி, ஞாயிறு இரண்டு நாட்களும் முள் மேல் இருப்பது போல் இருந்தது பார்வதிக்கு. எப்படியும் திங்கள் காலை யாரையாவது பிடித்து டவுனுக்கு அனுப்பி மருந்தை வாங்கி வரச் சொல்ல வேண்டியதுதான். யோசிக்க, யோசிக்க குழம்பித்தான் போனாள் அவள். ஒரு வேலையிலும் மனம் ஓடவில்லை.

ஞாயிறு இரவு 7 மணிக்கு வாசல் கதவு திறக்கும் சப்தம் கேட்டு வெளியே வந்து பார்த்தால் முத்து. “வா முத்து, நீ எப்படியும் வந்துடுவன்னு எனக்கு தெரியும்.” என்று சொல்லிக் கொண்டே மருந்துப் பெட்டிகளை வாங்கிக் கொண்டவள். “அது சரி, ஏன் முத்து உன்னை பத்து, பதினைந்து நாட்களாகக் காணவே இல்லை” என்று கேட்டாள்.

“அது வந்துங்கம்மா, என் ஒரே பையன், கொஞ்சம் மூளை வளர்ச்சி இல்லாதவன் போயிட்டாம்மா. இன்னிக்கு தான் காரியம் எல்லாம் முடிஞ்சுது. அதனாலதாம்மா வர முடியல”

”என்ன முத்து சொல்லற. உன் புள்ளைக்கு மூளை சரியில்லயா?”

“ஆமாம்மா, என்ன செய்ய. கல்யாணம் ஆகி பத்து வருஷத்துக்கு அப்புறம் தவமிருந்து பெத்த புள்ள. இப்ப அதுவும் இல்லன்னு ஆயிடுத்து. நான் வரேம்மா. காரியத்துக்கு வந்த ஜனங்க எல்லாம் கிளம்பிட்டாங்க. வீட்டுல அவ தனியா இருப்பா”

முத்துவின் பேச்சைக் கேட்டு ஆடித்தான் போய் விட்டாள் பார்வதி.

”கல்யாணம் ஆகி அறுபது வருஷம் நன்னா சீரும், சிறப்புமா வாழ்ந்துட்டோம். குறை என்று சொல்லிக் கொள்ள ஒன்றுமே இல்லை. இருந்தாலும் என்னப் பத்தியே கவலை பட்டுண்டு இருக்கேனே. என்ன சுத்தி என்னென்னமோ நடக்கறது. இப்படியா ஒரு சுயநலப் பேயா இருப்பேன். இனிமேலாவது மனுஷியா நடந்துக்கணும்” என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டவள் கம்பீரமாக நடந்து ஒரு மனுஷியாக வீட்டிற்குள் சென்றாள்.

Comments

மாமி ,

மிகவும் அருமை !!வாழ்த்துக்கள்!!

நன்றி
ரேவதி..

Love is God!!!

nalla kathai mattun alla ...karuthum ullathu ...nandraga ullathu

கதை அருமை.

உன்னை போல் பிறரை நேசி.

கதையும் கருத்தும் ரொம்ப நல்லாயிருக்குங்க.
பொருத்தமான தலைப்பும் அருமைங்.

நட்புடன்
குணா

எம்மைச் சுற்றி நடக்கும் நிறைய விடயங்கள் எங்கள் பார்வையிலிருந்து தப்பித்தான் போகின்றன. சுயநலம் என்று சொல்ல முடியாது அக்கா. எதற்கு முதலில் முக்கியத்துவம் கொடுப்பது என்பதில் ஆரம்பித்து... அப்படியே அதிலேயே மூழ்கிப் போகிறோம். :-) இப்படி எப்போதாவது திடீரென்றுதான் மனது விழித்துக் கொள்கிறது. கதை அருமை அக்கா.

‍- இமா க்றிஸ்

நல்ல‌ கருத்துள்ள‌ கதை மனுஷி! இப்பொழுது நிறையபேரோட‌ நிலமை இப்படித்தான் இருக்கு .....

கதையும், செய்தியும் அருமை :))

//பார்வதி கடவுளிடம், உன்னிடம் ”மாங்கல்யப் பிச்சை மடிப்பிச்சை தாருமம்மா
சந்தானப் பிச்சையுடன் தனங்களும் தாருமம்மா“ என்று கேட்டேனே
“சுற்றி நிறைய சுற்றத்தாரைத் தாருமம்மா, அதுவும் அவர்களை அண்டையிலேயே வையுமம்மா” என்று கேட்க விட்டு விட்டேனே என்று தனக்குத்தானே சொல்லிக் கொள்வாள்.//
வேறு வழியில்லை மாமி . அண்டை அயலாரை உறவினராக‌ ஏற்றுக்கொள்ள‌ வேண்டியது தான்.

கதையின் கரு ஆத்மார்த்தமாக‌ உள்ளது.