குட்டிக் குட்டி கசப்புகள் - கிறிஸ்மஸ் ராபர்ட்ஸ்

அந்த இரண்டு நாள் மழையில் கோடைகால காலநிலையிலும் மாற்றம் வந்து குளிர ஆரம்பித்து விட்டது. கடந்த நாலுநாளாய் ஜலதோசம், தும்மல், இருமல், தலைவலியென ஒரே அவஸ்தைதான்

அவஸ்தை உடலில் மட்டும் அல்ல, மனசிலும் தான்.

காரணம் வருவோர், போவோர் எல்லாம், 'என்னமா, அடிக்கடி இருமுற, பாத்துமா, அங்கங்க ஃபுளு காய்ச்சல், டெங்கு காய்ச்சல்ன்னு வருதாம் பார்த்துக்க' என்றனர்.

"ஒரு வேளை அப்படியா இருக்குமோ, அதான் நாலுநாளாய் இருக்கோ?" என்னையே கேள்வி கேட்டுக் கொண்டு, விடை தேட கூகிள் வந்தேன்.

முதலில் ஃபுளுகாய்ச்சல் - தொண்டையில் வலி, மூக்கில் நீர்வடிதல், சளி தொல்லை, சாப்பாடு மீது வெறுப்பு, மூச்சு விட சிரமம், வாந்தி எடுத்தல் இருந்த அறிகுறிகள் அதில் பத்தில் எட்டு பொருத்தம் எனக்கு. (அவருக்கும், எனக்கும் கூட எப்போதும் ஏழாம் பொருத்தம் தான்)

டெங்கு பொருத்தத்தையும் பார்த்து விடுவோம். கடும் காய்ச்சலுடன் கடுமையான மூட்டுவலி, தசைவலி, தலைவலி, தோல் நமைச்சல் படித்ததும், பெரும் மூச்சுவிட்டேன் "அப்பாடா இது இல்ல"

ஓய்வு எடுப்பிலே நேரம் கழிந்து மாலை வந்தது. அவர் அலுவலகம் முடிந்து வர, குட்டி வாண்டும் இருமல், தும்மலுடம், மூக்கை உறிந்து கொண்டே வந்தாள்.

"என்னங்க, நாளைக்கு நான் ஆஸ்பிட்டல் போறேன். குட்டி வாண்டையும் கூட்டிட்டு போறேன். நான் நெட்ல எச்1. என்1 சளிக்காய்ச்சல் அறிகுறிகள் படிச்சேன், நாலுநாளாய் ஜலதோசம் கொஞ்சம் பிரச்சனையாம். கூடவே சளி, மூச்சு விட சிரமம், பரவுமாம். குட்டி வாண்டு வேற என் கூடவே படுக்கிறா, மூக்கு உறிரா. அல்ரெடி நான் ஸ்கூலுக்கு ஒருநாள் லீவ் போட்டாச்சி. அதனால நாளைக்கு போய்ட்டு வந்திடுறேன்." முடித்தேன்.

ஆஸ்பத்திரி போய்ட்டு வா, பிரச்சனை இல்ல. ஆனா, நார்மல் ஜலதோசம் என்னைக்கு நாலுநாள்ல போயிருக்கு. ஒரு வாரம் இருக்கும். ( ம்ம்..ம் பெரிய டாக்டருன்னுநினைப்பு )

எனக்கு அவங்க போட்ட அறிகுறி எல்லாம் மேட்ச் ஆகுது.

"எது, ஜலதோசம் வந்தா, சளிவரும், சளி வந்தா மூச்சுவிட கஷ்டமா இருக்கும், தலைவலிக்கும், உடம்பு வலிக்கும், டயர்டா இருக்கும், டேஸ்ட் தெரியாது, சாப்பிட பிடிக்காது." என பொருத்தத்தை அடுக்கினார்.(நாம படிச்ச வெப்சைட்ட இவரும் படிச்சிருப்பாரோ?)

ஒரு வேளை இவர் சொல்லுற மாதிரி இருக்குமோ. ம்ம்.. ஊஹும், இந்த காலத்துல எதையும் நம்ப முடியாது. (நான் சளி, காய்ச்சல தான் சொன்னேன்) அதிகமாச்சின்னா யார் மாத்திர சாப்பிடுறது. ஏனென்றால் எனக்கும், மாத்திரைக்கும் அதிக தூரம். சிறு வயதில் ஒரு பெரிய மாத்திரையை சாப்பிட, அது தொண்டையில் சிக்கி அப்பப்..பா. பிறகு ஹாஸ்பிட்டல் சென்று தான் சரியானது. அதை இப்போது நினைத்தாலும் பயம் தான்.

'இல்ல, நான் எதுக்கும் போய்ட்டு வந்திடுறேன். டேய்.., குட்டி உனக்கு நாளைக்கு ஆஃப்டே லீவ். மத்தியானம் போய்டலாம் சரியா'

'உங்க கூட ஆஸ்பத்திரிக்கா. அதுக்கு நான் ஸ்கூலுக்கே போலாம். நான் போகலப்பா.. எதையாவது சொல்லி ஊசி போடவச்சிடுராங்க'

'சளி, இருமல் இருக்கு. எதுக்கும் ஒரு சின்ன செக்கப் பண்ணிடலாம். இந்த வாட்டி கண்டிப்பா நானா ஊசி போட சொல்ல மாட்டேன். ஆனா, டாக்டர் செக் பண்ணி போட சொன்னா போடணும் சரியா' அமைதியானாள். (எல்லாம் நம்ம ஆரோக்கிய ஆர்வம் தான்)

மறுநாள் ஆஸ்பத்திரி,

'வாங்க, வாங்க குறும்பு பொண்ணு, என்ன.. இந்த பக்கம். உடம்புக்கு ஏதும் பண்ணுதா' ஏகமாய் வரவேற்றார் டாக்டர்

"அய்யோ... எனக்கு ஒண்ணுமில்ல. அம்மாக்குத்தான். நான் சும்மா துணைக்குத்தான்." அவளை பார்த்தேன் ஒரு ஊசிக்கு பயந்து, என்னமா ரீல் விடுறா.. ம்ம்

செக் பண்ணிய பின் டாக்டர், "இது நார்மல் சளிதாம்மா. இன்னும் இரண்டு நாள்ல சரியாயிடும். இந்த மாத்திரைகளை மட்டும் ஒரு மூணு வேளை எடுத்துக்கோங்க" பார்த்த எனக்கு பீதியானது.ஒரு வேளைக்கு நான்கு மாத்திரைகள்.

'இதுல்லாம் என்ன மாத்திரை டாக்டர்'

'சும்மா, ஒண்ணு வைட்டமின் மாத்திரை. ஒண்ணு சளிக்கு, ஒரு அன்டிபயாட்டிக், உடம்பு வலி இருக்குல்ல அதனால ஒண்ணு.'

'நார்மல் சளின்னா அது வைரஸ்னால வர்றது தான? அப்புறம் எதுக்கு அன்டிபயாட்டிக் சும்மா, சும்மா அன்டிபயாட்டிக் எடுத்தா நோய் எதிர்ப்புசக்தி குறைஞ்சிடும்ன்னு படிச்சிருக்கேன்’ பாடம் எடுக்க ஆரம்பித்தேன் டாக்டருக்கு.

'இல்லமா.. இப்ப கொஞ்சம் சுவைன் ஃப்ளு, டெங்கு நடமாடுதுல்ல அதுக்கு தான்'

"சுவைன் ஃப்ளு கூட வைரஸ் தான டாக்டர். சளிக்கு டானிக், வைட்டமின் டானிக் இருக்குல்ல," நான் மாத்திரை எண்ணிக்கையை குறைப்பதிலே குறியாய் இருந்தேன்.

ஆன்டிபயாட்டிக் ஒரு சேப்டிக்கு தான் போடுறோம் போடலாம். சளிக்கு டானிக் இருக்கு, வைட்டமின் டானிக் கூட இருக்கு

அப்படின்னா.. எல்லாத்துக்கும் டானிக்கே குடுத்திருங்க டாக்டர். என்றேன் அவசரமாக. முறைத்தாள் குட்டி வாண்டு, "இதுக்கு தான் உன்கூட வரமாட்டேன்னேன்"

“டானிக்ல, டோஸ் கம்மியா இருக்கும். குழந்தைக்கு மாத்திரை கசக்கும்ன்னு சாப்பிட மாட்டாங்க அவங்களுக்கு டானிக் சரி. பெரியவங்களுக்கு மாத்திரை ஓகே. ஓகேவா” மாத்திரையை தள்ளிவிட உறுதியாய் இருந்தார். யோசித்தேன்... பெருமூளையால் மட்டுமல்ல, அவசரத்தில் யோசிக்கும் தண்டுவடத்தையும் துணைக்கு இழுத்துக் கொண்டேன்.

ஐடியா,

"இல்ல டாக்டர், டானிக் கொடுத்தா குட்டி வாண்டுக்கும் யூஸ் ஆகும்"

"சும்மா, சும்மா டானிக் எடுத்தா நோய் எதிர்ப்பு சக்தி குறைஞ்சிடும்ன்னு நானும் படிச்சிருக்கேன்" கவுத்தேவிட்டாள் குட்டிவாண்டு.

"உங்களுக்கு இரண்டு நாள் மாத்திரை போதும். குழந்தைக்கு வேணுமின்னா, கால் அல்லது அரை மாத்திரை குடுங்க" (அவர் கிட்ட கைவசம் டானிக் இல்லையோ) மனதில் நினைத்தேன் நான்.
நாம மாத்திரைய கரைச்சி குடிக்கிறது அவருக்கு எப்படி தெரியும். ஸ்கூல்ல இருக்கும் போது தலைவலிக்கு யாரும் மாத்திரை தந்தால், இல்ல, நான் தேவையில்லாம மாத்திரை போடுறதில்ல அப்படின்னு பெருமையா சொல்லிட்டு நைசா ஒதுங்கிறது இவருக்கு எப்படிதெரியும்

ம்ம்.. ம் தலையசைத்து வாங்கிக் கொண்டேன்.
இப்போது சளி பற்றிய பயம் போய் மாத்திரை பயம் வந்தது. குட்டி வாண்டுக்கு ஒரு மாத்திரை கூட இல்லை. உண்மையிலே ஆஸ்பத்திரியில் இருக்கும் வரை இருமலே இல்லாமல் இருந்தாள். (ஏதோ தில்லு முல்லு பண்ணிருக்கா)

எல்லாம் முடிந்து வெளியே வந்து, அவருக்கு போன் செய்து, நாலு மாத்திரை விவரம் சொன்னேன்.

இரவு சாப்பாட்டுக்கு பின், 'நான் அப்பவே சொன்னேன் கேட்டியா, சாதாரண சளி இன்னும் ரெண்டு நாள்ல சரியாயிடும்ன்னு. இப்ப நாலு மாத்திரை. சாப்பிடு'

'நல்ல வேளை நான் வாய்க்குள்ள மிட்டாய் போட்டு, இருமல கண்ட்ரோல் பண்ணினேன். இருமி இருந்தால், எதையாவது சொல்லி எனக்கு ஊசி போட்டுருப்பாங்க'. குட்டிவாண்டு

டீசெண்டா, மாத்திரை சாப்பிட தெரியாதுன்னு உண்மைய சொல்லி டானிக் வாங்கிருக்கலாம். இப்போது எப்படி நான்கு மாத்திரை சாப்பிடுவது? கசப்பை நினைத்து, கரைத்து குடிக்கவும் பயம் வந்தது. மாத்திரைகளை பார்க்க, பார்க்க அவைகள் பூதாகரமாக, உருவில் பெரிதாய் மாறிக் கொண்டே வருவதாய் தெரிந்தது எனக்கு.

வேறு வழியேயில்லை என் கடைசி அஸ்திரத்தை எடுத்து விட வேண்டியது தான். ஆமாம் அது தான் சரி. எடுத்தே விட்டேன் அதை…

"என்னங்க, எனக்கு நாலு வாழைப்பழம் வாங்கிட்டு வாங்களேன் "

Comments

Periya leave eduthutinga arusuvaila... adhuku leave letter kadhai formatla vandhiruku ;) ippodhu nalamnu padikumbodhe theriyudhu. Take care. Udambu sari illama namma thondai voice ponaalum unga mind voice adanga maatangudhe... appavum comedy pannudhu.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

கதையை வெளியிட்ட அறுசுவை டீமுக்கு நன்றிகள்.

உன்னை போல் பிறரை நேசி.

தும்மல் போட்டாலும், கையாள கும்பிட்டுக்கிட்டே தான் போடுவோம் கதைய படிச்சி, கமெண்ட் போட்டதால. நன்றி வனி சிஸ்.

ஒரு சந்தேகம், இப்பல்லாம், கொஞ்ச நாளா, கமெண்ட் இங்கிலிஷ்லயே வருதே. ரொம்பவும் தட்டுனதால லேப்டாப் ரெஸ்ட் கேட்டிடிச்சோ??

உன்னை போல் பிறரை நேசி.

Laptop leave la irukuradhum unmai... kudave enaku ippo laptop eduka nerame illai enbadhum mukkiya karanam.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

கதையில், உங்க‌ ஸ்டைல் அருமை!
மாத்திரை சாப்பிடுவதில் என் பையனைவிட‌ மோசமா இருப்பீங்க‌ போல‌.....:))
அவனுக்கு காய்ச்சல் வந்துடுத்தே என்கிற‌ கவலையைவிட‌, எப்படி மாத்திரை சாப்பிட‌ வைக்கப்போறோம்ங்கிற‌ கவலைதான் எனக்கு அதிகமா இருக்கும்!

உடம்பைப் பார்த்துக்கோங்க‌.....அடிக்கடி அறுசுவைக்கு வாங்க‌...

(சளி, இருமலுக்கு......கூகுளையும், டாக்டரையும் பார்ப்பதைவிட‌, நம்ம‌ சமையலறை அஞ்சரைப்பெட்டியையும், ஆயுர்வேதத்தையும் அதிகமா நம்பலாம்):))
4 வாழப்பழம் எதுக்கு? 4 மாத்திரைக்கா? :))))

க்றிஸ்மஸ் எப்பவுமே உங்க கதைல நகைச்சுவையை தீபாவளி பட்டாசு போல அங்கிங்கெனாத படி எல்லா இடத்திலும் வெடிச்சிருப்பீங்க. உடல்நலக் குறைவையும் அதே போல கதையாக்கிய விதம் அருமை.
//அதில் பத்தில் எட்டு பொருத்தம் எனக்கு. (அவருக்கும், எனக்கும் கூட எப்போதும் ஏழாம் பொருத்தம் தான்) // :)))))))))

உடம்பை பாத்துக்கோங்க.
ஆமா 4 மாத்திரை முழுங்க 4 வாழைப்பழம் சாப்பிட்டா, வயறு ஒத்துக்குமா? அப்புறமா அதுக்கு டாக்டர் கொடுக்கிற மாத்திரைய எப்பிடி சாப்பிடுவீங்க? :))

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

கதை வழக்கம் போல‌ நல்ல‌ நகைச்சுவையா எழுதி இருக்கீங்க‌.
கதையில் யாருக்கும் பேரே இல்லியேன்னு நினைச்சேன். உங்க‌ வீட்டுக் கதை போல‌.:)
நான் மாத்திரையை நாலா உடைத்து விழுங்குவேன். அது கொஞ்சம் ஈசியா இருக்கும் க்றிஸ்.
நாலு மாத்திரைக்கு நாலு வாழைப்பழமா'..... வயிறு தாங்காது........
பாவம் வயிறு...................:))

கதையை படித்து, பாராட்டினதுக்கு நன்றி.
என்..ன..து உங்க பையன் மாத்திரை சாப்பிட மாட்டேங்கிரானா. எல்லாத்துக்கும் டானிக் இருக்கு. பாராசிட்டமால் டானிக், சளி டானிக். சாப்பிடுறது ரொம்ப ஈசி.

கண்டிப்பா, நானும் அஞ்சரைப்பெட்டியையும், ஆயுர்வேதத்தையும் பயன்படுத்திக்கிட்டு தான் இருக்கேன். பிரச்சனை ஸ்லோ க்யூர்.

உன்னை போல் பிறரை நேசி.

நன்றி, நன்றி. கதையை படிச்சதுக்கு.
உண்மையை சொல்லனும்னா, இந்த கதை நகைசுவைல எனக்கு அவ்வளவா திருப்தி இல்ல. இருந்தாலும் சுவைன் ஃப்ளு, டெங்கு பத்தி ஏதோ இன்பார்மேசன் கொடுத்த மாதிரி தோணியது. அதான் அனுப்பிட்டேன்.

\\4 மாத்திரை முழுங்க 4 வாழைப்பழமா\\ அப்படீல்லாம் இல்ல. ஒரு பழத்திலே 4 மாத்திரையையும் சாப்டிடுவேன். (குப்புற விழுந்தாலும் முஞ்சில கை வச்சிட்டேதான் விழுவோம்)

உன்னை போல் பிறரை நேசி.

நன்றி, நன்றி. கதையை படிச்சி, கமென்ட் பண்ணினதுக்கு.
கதையில் கதா பாத்திரத்துக்கு பேர் கொடுக்கலாம் தான். ராஜேஷ்குமார் அவர்களோட விவேக், ரூபலா மாதிரி. அவரோட கதை பாத்திரம் துப்பறிது, ஆனா என்னோடது காமெடி பண்ணுது.

நான் கதைல பேர போட, அதே பேர் உள்ளவங்க நீநிமன்றம் போய் 'என்னோட இமேஜ ஸ்பாயில் பண்ணிட்டாங்கன்னு' சொல்லிட்டா. இப்ப உள்ள பிசில, கோர்ட், கேஸ்ஸுன்னு அலைய முடியாது. அப்புறம் அனு சிஸ்டர் சொன்னமாதிரி, அடிக்கடி அறுசுவை வர முடியாது. அதான் கதாபாத்திரத்துக்கு பேர் போடுறதில்ல. ( சும்மாக்கும்... சமாளிபிகேசன். .. )

உன்னை போல் பிறரை நேசி.

சிறு வயதில் எனக்கும் மாத்திரை என்றால் அலர்ஜி தான் க்றிஸ். எனக்கு ஒரு மாத்திரை கொடுப்பதற்க்கு குறைந்தது 2 பேர் வேணும். கால் கைகளைப் பிடித்துக் கொண்டு தொண்டைக்குள் திணிப்பார்கள். சத்தம் போட்டு ஊரையே வேற கூட்டி விடுவேன். ஊசி எத்தனை வேண்டுமென்றாலும் போட்டுக் கொள்வேன். ஆனால் வளர்ந்த பின் மாத்திரை பயம் போயே விட்டது.
ஆனால் என் மகள் சிரப் கொடுக்கும் போதெல்லாம் நீங்க மட்டும் மாத்திரை சாப்பிடுறீங்க, எனக்கு மட்டும் சிரப்பா ? எனக்கு எப்போ மாத்திரை கொடுப்பீர்கள் என்றே கேட்ப்பாள் :))
ஒரு காமெடி படத்தில தேவ்யானி பெப்பர் பாட்டில் மூடிய கையில் வைச்சிக்கிட்டு "இவ்வளோ பெரிய மாத்திரை" அப்படின்னு சொல்வாங்களே அதே போன்று உங்களை தேவ்யானி இடத்துல வைச்சி கற்பனை பண்ணிப் பார்த்தேன் :)) குலுங்கி குலுங்கி சிரிக்கிறேன்:)))))))))))))
சர்க்கரை போட்டுக் கொண்டு மாத்திரை போடுவது ஒரு வகை.
உங்க வாழைப் பழ காமெடியும்....... சாரி வாழைப் பழ ஐடியாவும் நல்லாத்தான் இருக்கு. :))
உங்க வீட்டு குட்டியும் அடுத்த காமெடியனா உருவாகிக்கொண்டிருக்காங்க போல :))

ஒரு சின்ன விஷயத்தைக் கூட சிரிப்பா சொல்கிற உங்க ஸ்டைல் சூப்பரோ சூப்பர். குட்

பி.கு
\\குப்புற விழுந்தாலும் முஞ்சில கை வச்சிட்டேதான் விழுவோம்)// அட இது புதுசா இருக்கே. !!

குட்டிக் குட்டி கசப்புகள் எல்லாரும் அனுபவிச்ச‌ ஒரு விசயம்,
நானும் உங்கள போல‌ தான் இன் ஜெக்சன் கூட‌ போட்டுப்பேன், மாத்திரை அதுவும் நானும் ரொம்ப‌ தூரம் ஒத்தே வராது, அம்மா ரொம்ப‌ தொல்லை பண்ணி சாப்பிட‌ சொல்லும் போது வாய்க்குள்ள போடுற‌ மாதிரி ஆக்சன் பண்ணிட்டு பாத்ரூம் ல‌ போட்டு தண்ணி ஊத்திருவேன்,

இருந்தாலும் கிறிஸ் டீச்சருக்கு கற்பனை அதிகம் , இது இந்த‌ நோயோட‌ சிம்டம்ஸா நினைச்சு நினைச்சு பயந்துருக்கீங்க‌, உங்களுக்கு குட்டிவாண்டு எவ்ளோவோ தேவலாம்......

இதுலேயும் காமெடி ...

வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் ‍சுபி *

ரொம்ப‌ நல்லா நகைச்சுவையா இருக்கு. நீங்க‌ use பண்ணிருக்குற‌ வார்த்தைகள் (குட்டி வாண்டு....) எதார்த்தமா இருக்கு.

******* Always Smile *******

வாணி சிஸ்டர், கதையை படித்து பதிவிட்டதுக்கு, பாராட்டுக்கு நன்றி. தாமதமான நன்றிக்கு வருத்தம்.

உன்னை போல் பிறரை நேசி.

/வாய்க்குள்ள போடுற‌ மாதிரி ஆக்சன் பண்ணிட்டு பாத்ரூம் ல‌ போட்டு தண்ணி ஊத்திருவேன்\ சுபி சிஸ்டர் இப்படி பண்ண கூடாதுல்ல. நன்றி. படித்துக் கமென்ட் போட்டதுக்கு.

உன்னை போல் பிறரை நேசி.

சத்ய லஷ்மி , கதையை படித்து பாராட்டுக்கு நன்றி.

உன்னை போல் பிறரை நேசி.

கதை சூப்ப்ப்ப்பர் க்றிஸ். நாலு மாத்திரைக்கு நாலு பழமா????? அப்ப ஒரு நாளைக்கு 12 யப்பா... பாத்து க்றிஸ் டாய்லெட்லயே இருக்க வேண்டி வந்துறபோகுது. :)

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

கதையில் ஓடும் நகைச்சுவை அருமை. அன்றாட‌ நிகழ்ச்சிகளைக்கூட‌ ரசித்து எழுதியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.

கிறிஸ்மஸ் மேடம் உங்க கதையோட தலைப்பு மாதிரியே மாத்திரையையும் குட்டிக் குட்டி கசப்புகள் நு சாப்பிட்டு இருக்கலாமே.. ;-)
கதை நல்லா இருக்கு..:-)

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

கிறிஸ்மஸ் உங்கள் கதைகள் யாவும் படிக்கையில் இனிக்கின்றன.உங்கள் வார்த்தைகளில் வண்ணாத்திப் பூச்சியின் படபடப்பு காண்கிறேன். வாழ்த்துக்கள்.

நிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.

ஹா.. ஹா எனக்கும் மாத்திரை எல்லாம் பயமே.. கடைசில நீங்க சொன்னது மாதிரி வாழைப்பழம் ல வச்சுதான் மாத்திரை சாப்டுவேன்.. உண்மைலேயே நான் தான் அந்த கதாபாத்திரம்

ஹா.. ஹா எனக்கும் மாத்திரை எல்லாம் பயமே.. கடைசில நீங்க சொன்னது மாதிரி வாழைப்பழம் ல வச்சுதான் மாத்திரை சாப்டுவேன்.. உண்மைலேயே நான் தான் அந்த கதாபாத்திரம்

kathai super

ஹி ஹி ஹி கேரக்டர் எங்க அக்கா மாதிரியே இருக்கு.