குஷ்பூ இட்லி

தேதி: April 27, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (4 votes)

 

இட்லி அரிசி - 6 கப்
கறுப்பு (அ) முழு வெள்ளை உளுந்து - ஒரு கப்
மாவு ஜவ்வரிசி - ஒரு கைப்பிடி
வெந்தயம் - ஒரு தேக்கரண்டி
உப்பு - 4 தேக்கரண்டி (தேவைக்கேற்ப)


 

அரிசியை நன்றாக களைந்து, வெந்தயத்தைச் சேர்த்து மூழ்கும் அளவிற்கும் சற்று அதிகமாக‌ தண்ணீர் ஊற்றி ஊற வைக்கவும். உளுந்தையும் நன்றாகக் களைந்து, மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி 4 அல்லது 5 மணி நேரம் ஊற வைக்கவும். மாவு ஜவ்வரிசியை தனியாக‌ தண்ணீர் ஊற்றி ஊற‌ வைக்கவும்.
ஊறியதும் முதலில் மாவு ஜவ்வரிசியை சிறிது தண்ணீர் சேர்த்து பாதியளவு மசியும்படி அரைக்கவும்
ஜவ்வரிசியுடன் பாதி அளவு உளுந்து சேர்த்து அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி 10 முதல் 15 நிமிடங்களுக்கு நன்கு அரைக்கவும். இடையில் 2 நிமிடத்திற்கு ஒரு முறை திறந்து ஒரு கைப்பிடி தண்ணீர் தெளித்து வழித்து விடவும். உளுந்திற்கு நன்கு தண்ணீர் சேர்த்து அரைத்தால் நன்கு பொங்கி மாவு நிறைய‌ உபரி காணும். மிக‌ முக்கியமானது உளுந்து அரைத்து முடிக்கும் வரை பாதியில் கிரைண்டரை நிறுத்த‌ கூடாது. முழுவதும் அரைப்படும் வரை தொடர்ந்து ஓட‌ வேண்டும். இல்லையெனில் மாவு அடைந்து பொங்கி வராது.
உளுந்து மாவை தண்ணீரில் போட்டால் பந்து போல மிதக்கும். இது தான் உளுந்து மாவிற்கு சரியான பதம். இந்த‌ பத‌த்தில் உளுந்து முழுவதும் மசிந்ததும் எடுத்து விடவும்.
மீதி பாதி உளுந்தை போட்டு அரைக்கவும். இப்படி 2 ஈடாக‌ அரைக்கும் போது உளுந்து நல்ல‌ உபரி கிடைக்கும். மீண்டும் 2 நிமிடத்திற்கு ஒரு முறை திறந்து ஒரு கைப்பிடி தண்ணீர் தெளித்து 10 முதல் 15 நிமிடங்களுக்கு நன்கு அரைக்கவும்.
உளுந்தை எடுத்த‌ உடன் அரிசி மற்றும் வெந்தயத்தை ஒரே ஈடாக‌ போட்டு 10 நிமிடங்களுக்கு அரைக்கவும். மையாக அரைக்காமல் சற்று கொரகொரப்பாக‌ அரைக்கவும். மைய‌ அரைந்தாலும் பரவாயில்லை.
வழித்த‌ உளுந்து மாவுடன் அரிசி மாவையும் சேர்த்து உப்பு சேர்த்து கையால் நன்கு கலந்து வைக்கவும்.
மாவை பெரிய‌ பாத்திரத்தில் ஊற்றி ஃப்ரிட்ஜில் வைக்கவும். சிறிய பாத்திரத்தில் தேவையான‌ அளவு எடுத்து வெளியில் வைத்து 8 மணி நேரம் (குறைந்தது 2 (அ) 4 மணி நேரமாவது வெளியில் வைத்து) புளிக்க‌ விட்டு பின்னர் இட்லி ஊற்றவும். காலையில் ஊற்றுவதாக‌ இருந்தால் இரவே வெளியில் வைக்கலாம். மாவு பாத்திரத்தில் பாதி அளவு மட்டும் எடுத்து வைக்கவும். இல்லையெனில் பொங்கி கீழே ஊற்றி விடும்.
இட்லி பானையில் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து சூடுப்படுத்தவும். நன்கு சூடானதும் இட்லி தட்டை வைத்து மாவை ஊற்றவும். எந்த‌ மாவாக‌ இருந்தாலும் இட்லி ஊற்றும் போது சற்று மேலே இருந்து தூக்கி ஊற்றினால் மாவுக்கு இடையில் குமிழ் உருவாகி பஞ்சு போல் (சாஃப்டாக‌) வரும். பின்னர் மூடி வைத்து மிதமான‌ தீயில் வேக‌ வைக்கவும்.
10 நிமிடங்கள் கழித்து திறந்து குச்சி விட்டு பார்க்கவும். குச்சியில் மாவு ஒட்டாமல் வந்தால் வெந்து விட்டது என‌ தெரிந்துக் கொள்ளலாம். அதன் பிறகு எடுத்து பரிமாறலாம்.
சாஃப்டான பஞ்சு போன்ற‌ குஷ்பூ இட்லி தயார்.

நைலான் ஜவ்வரிசியை விட‌ மாவு ஜவ்வரிசி தான் இட்லிக்கு நன்றாக‌ இருக்கும்.

உளுந்துடன் சரியான‌ அளவு தண்ணீர் (2 நிமிடத்திற்கு ஒரு முறை ஒரு கைப்பிடி போதுமானது) சேர்க்க‌ வேண்டும். அதிகமாக‌ சேர்த்தால் மாவு நீர்க்க‌ இருக்கும். அப்படி உளுந்து மாவு நீர்க்க‌ அரைத்து விட்டால் அரிசி மாவை சற்று கெட்டியாக‌ அரைத்து எடுக்கவும்

உளுந்தை 2 ஈடாக‌ அரைக்கும் போது நிறைய உபரி வரும். அப்படி அரைக்க‌ தெரியாதவர்கள் 4 கப் அரிசிக்கு ஒரு கப் உளுந்து சேர்க்கலாம்.

இட்லி பானையில் தண்ணீர் கொதித்த‌ பின் இட்லி ஊற்றவும். இட்லி ஊற்றும் போது ஒரு கரண்டி மாவு எடுத்து கரண்டியை சற்று தூக்கி மேலே இருந்து ஊற்றவும்.

இட்லியை சரியான‌ அளவு வேக‌ விடவும். அதிகமாக‌ வேக‌ விட்டால் அடைந்த‌ மாதிரி ஆகி விடும். 10 முதல் 15 நிமிடங்கள் போதுமானது.

வழக்கமான‌ இட்லி மாவு முறை தான். இதில் மாவு ஜவ்வரிசி சேர்ப்பது மட்டும் புதிது.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

Idly super. Kushbu idly ku aamanaku serpaanganu ketiruken... javvarisi mattume serpadhu pudhidhu.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

balanayagi enaku romba usefull enaku idly nallave varathu.unga idly romba softa parthathum sapidathonuthu thanks

குறிப்பை அழகாக‌ வெளியிட்ட‌ அட்மினுக்கு நன்றிகள் பல‌.

எல்லாம் சில‌ காலம்.....

இந்த‌ இட்லிக்கு ஜவ்வரிசி போட்டலே போதும். மாவிலேயே வித்யாசம் தெரியும். நல்ல‌ சாஃப்டாக‌ (நுரை ) பஞ்சு மாறி இருக்கும். இட்லி சூப்பரா வரும்.

எல்லாம் சில‌ காலம்.....

இட்லிக்கு மாவு அரைப்பதில் தான் பக்குவம் உள்ளது. உளுந்து அரைக்கும் போது பக்கத்தில் நின்று அரைக்கவும். குறைந்தது 15 நிமிடம் அரைக்க‌ வேண்டும். இது மாறி செய்து பாருங்க‌ சூப்பரா வரும்.

எல்லாம் சில‌ காலம்.....

இதுபோல அழகான இட்லிசுடற வரைக்கும் எனக்கு தூக்கமே வராது.அப்படியே எடுத்து சாப்பிடணும் போல இருக்கு

Be simple be sample

மாவை தூக்கி ஊற்றனுமா? புதுசா இருக்கே
இனி ஜவ்வரிசி சேர்த்து செய்யனும். சூப்பர்

நன்றி ரேவ்'ஸ் அடுத்த‌ தடவ‌ மாவு அரைக்கற‌ அப்போ ஜவ்வரிசி சேருங்க‌. இட்லியும் சூப்பரா வரும். அப்றம் தூக்கமும் சூப்பரா வரும்.

எல்லாம் சில‌ காலம்.....

ஆமாம் நிகி. நீங்க‌ உங்க‌ நார்மல் மாவுலயே அப்டியே தூக்கி ஊற்றி பாருங்க‌. அமுக்கி ஊற்றுவதற்கும் தூக்கி ஊற்றுவதற்கும் வித்யாசம் தெரியும்.

எல்லாம் சில‌ காலம்.....

குஷ்பூ இட்லி மல்லிகைப் பூ மாதிரி நல்லா இருக்கு பாலா :))

Innaiku enga veetil kutty kushbu dhaan ;) mixie la potume nallaa vandhirukku. Thanks for the recipe bala.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நன்றி வாணி. அதான் குஷ்பூவும் மல்லிகை பூ மாறி இருக்காங்களோ? ஹிந்தில‌ குஷ்பூ னாலே வாசனை தான‌? அப்போ மல்லிகை பூ தான்.

எல்லாம் சில‌ காலம்.....

குட்டி குஷ்பூ இட்லியா? அப்டினா ஹன்சிகா இட்லினு சொல்லுங்க‌. அவங்க‌ தான் குட்டி குஷ்பூ. இதுவும் கூட‌ பேர் நல்லா இருக்கு. வனி அக்கா பாராட்டினா வையகமே பாராட்டின‌ மாறி. நன்றி அக்கா.

எல்லாம் சில‌ காலம்.....

குஷ்பு இட்லி ச்சும்மா கும்முன்னு இருக்கு :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

**ச்சும்மா கும்முன்னு இருக்கு**

குஷ்பூ மாறியேவா? நீங்க‌ இந்த‌ இட்லி உங்க‌ வீட்லயும் பண்ணுங்க‌. உங்க‌ வீட்டுக்கும் குஷ்பூ வருவாங்க‌ (ச்சும்மா கும்முனு).

எல்லாம் சில‌ காலம்.....

பாலநாயகி, இட்லி மாவு பொங்கியதும் இட்லி ஊற்றும்போது தண்ணீர் சேர்த்து கலக்கி அப்புறமாக இட்லி ஊற்றுவீர்களா?? ஏன் கேகக்றேன்னா //ஒரு கரண்டி மாவு எடுத்து கரண்டியை சற்று தூக்கி மேலே இருந்து ஊற்றவும்.// என்று சொல்லியிருக்கீங்க..நான் அரைத்துவைக்கும் மாவு பொங்கியதும் கரண்டியால் எடுத்து ஊற்றும்படியாக இருக்காது, மாவை கலக்காமல் அப்படியே அள்ளி எடுத்து இட்லி தட்டில் ஊற்றித்தான் நான் இட்லி செய்வது வழக்கம். [இட்லி சாஃப்டாத்தான் வரும்னு வைங்க..இருந்தாலும்..,] "இட்லி ஊற்றும் போது ஒரு கரண்டி மாவு எடுத்து கரண்டியை சற்று தூக்கி மேலே இருந்து ஊற்றவும்."-ந்னு நீங்க சொல்வதைப் பார்த்து ஒரு க்யூரியாஸிட்டி!! :) டைமிருக்கும்போது பதில் சொல்லுங்க. நன்றி!

அன்புடன்,
மகி

இட்லி மாவு நன்கு பொங்கி இருக்கும். அப்படியே நன்கு கலக்கி இட்லி ஊற்றலாம். தண்ணீர் சேர்க்க‌ வேண்டாம். தோசைக்கு தான் மாவு நீர்க்க‌ இருக்க‌ வேண்டும். இட்லிக்கு சற்று கட்டியாக‌ தான் இருக்க‌ வேண்டும். எனவே தண்ணீர் சேர்க்க‌ தேவையில்லை. அப்படியே நன்கு கலக்கி ஒரு கரண்டி மாவு எடுத்து கரண்டியை சற்று தூக்கி மேலே இருந்து ஊற்றவும். கலக்காமல் ஊற்றும் போது புளித்து உளுந்து மாவு மேலே இருக்கும். அரிசியின் மாவு அடியில் தங்கி அடி மாவின் இட்லி சிறிது அழுத்தமாக‌ இருக்கும்.

எல்லாம் சில‌ காலம்.....

நன்றி பாலநாயகி!

அன்புடன்,
மகி

நீங்க சொன்னது போல் இட்லி செய்தேன் நன்றாக இருந்தது நன்றி

குறிப்பை செய்து பார்த்து கருத்து வெளியிட்டமைக்கு நன்றி நஸ்ரின்.

எல்லாம் சில‌ காலம்.....

எப்பொழுதும் மாவில் ஜவ்வரிசி சேர்த்துக் கொள்ளலாம். இல்லை விசேசங்களுக்கு மட்டும்தான் பயன்படுத்தனுமா. அப்படி எப்பொழுதும் சேர்த்துக்கொண்டால் எந்த‌ சைடுஎபைக்டும் இல்லையா

எல்லாம் நன்மைக்கே