ஆழ்மனம் - நல்வாழ்வின் திறவுகோல்

ஆழ்மனம்Nalvalvin Thiravukol

ஆழ்மனம்

எண்ணங்கள் ஏற்படுத்தும் வியக்கத்தக்க விளைவுகளைப் பற்றித் தெரிந்துகொள்ளுமுன், ஆழ்மனம் பற்றி அறிதல் அவசியம். நம் மனமானது, இரண்டு தளங்களில் செயல்படுகிறது. சிந்தனைகளைத் தோற்றுவிப்பதும், கேள்வி கேட்பதும், ஆராய்ச்சி செய்வதும், அறிவுபூர்வமான முடிவுகளை எடுப்பதும், புறமனத்தின் வேலை. எந்தக் கேள்வியும் கேட்காமல், புறமனம் இட்ட கட்டளைகளை செய்துமுடிக்கும் சக்திதான் ஆழ்மனம். மனதின் இந்தப் பகுதி, சர்வ வல்லமை வாய்ந்தது. அண்டங்கள் அனைத்தையும் வழிநடத்தும் பிரபஞ்ச சக்தியின் சிறுதுளிதான் நம் ஆழ்மனம். அளவிடமுடியாத சக்திகளைத் தன்னுள் அடக்கி, அமைதியாக உறங்கும் இந்த ஆழ்மனம்தான், கடவுள் மனிதனுக்குக் கொடுத்த மிகப்பெரிய வரம். இதன் ஆற்றலைப் பயன்படுத்தி சாதிக்க முடியாத செயல் எதுவுமே இல்லை எனலாம். உலகின் மிகப்பெரிய சாதனையாளர்கள் அனைவரும் இந்த ரகசியத்தை அறிந்திருந்தார்கள்.

இத்தனை சக்திகளைத் தனக்குள் அடக்கியிருந்தாலும், ஆழ்மனம் பகுத்தறியும் வல்லமை அற்றது. இதை நவீன அறிவியலின் ரோபோ அல்லது கம்ப்யூட்டரோடு ஒப்பிடலாம். அதாவது, மனிதனால் செய்ய முடியாத பல அற்புதமான வேலைகளை ஒரு ரோபோ அல்லது கம்ப்யூட்டர் கண்ணிமைக்கும் நேரத்தில் செய்து முடிக்கும். ஆனால், அவற்றை ஆட்டுவிக்கும் சக்தி, மனிதன்தானே? மனிதன் இடும் கட்டளைகளைத்தானே அவை செய்து முடிக்கின்றன? அப்படித்தான், நம் புறமனம் இடும் கட்டளைகளை அற்புதமாய் நிகழ்த்தி முடிக்கும் ஆழ்மனம், சுயமாக எதையும் சிந்திப்பதில்லை. அதுமட்டுமல்ல… நம் புற மனத்தின் தலையீடே இல்லாமல், உடலின் உள் உறுப்புகளை இயக்கி, நம்மை உயிருடன் வைத்திருப்பதும் இந்த ஆழ்மனத்தின் செயல்தான். நாம் தூங்கும்போது நம் புறமனம் சிந்தனைகளை நிறுத்திவிட்டு ஓய்வெடுத்துக் கொள்கிறது. ஆனால் நம் ஆழ்மனம் உறங்கிவிடுமானால், மறுநாள் நாம் கண்விழிக்க மாட்டோம். நம் பிறப்பில் தொடங்கி இறப்புவரை ஓய்வின்றி நமக்காகப் பல அற்புதப் பணிகளை செய்துகொண்டிருக்கும் விசுவாசமான ஊழியன்தான் ஆழ்மனம்.

மனதின் இந்த இரு தளங்களுக்குமான உறவு எப்படிப்பட்டது, புறமனமானது ஆழ்மனத்திற்கு எப்படிக் கட்டளைகளை அனுப்புகிறது, என்பதுதான் மிக மிக முக்கியமான கேள்வி. இதற்கான விடையை நாம் புரிந்து கொண்டால், நினைத்ததை எல்லாம் அடையக் கூடிய சர்வ வல்லமை நமக்கு வந்துவிட்டது என்று பொருள்! ஆம், அலாவுதீனின் அற்புத விளக்கு பற்றிக் கேள்விப் பட்டிருப்பீர்கள் அல்லவா? அது உங்கள் கைவசம் வந்தது போலத்தான், உங்கள் ஆழ்மனத்தின் சக்திகளை முற்றிலும் உங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவருவதும்!

புறமனம் ஆழ்மனத்தோடு தொடர்பு கொள்ள மொழிகளைப் பயன்படுத்துவதில்லை. உணர்வுகளைப் பயன்படுத்துகிறது. அதிலும் மிக முக்கியமான உணர்வு, நம்பிக்கை. எதையெல்லாம் உங்கள் புறமனம் உண்மையென்று நினைக்கிறதோ, நடக்குமென்று நம்புகிறதோ, அதையெல்லாம் உங்கள் ஆழ்மனம் கட்டளைகளாக பாவிக்கிறது. உடனே தன் எஜமானனின் கட்டளையை நிறைவேற்றத் தன் சர்வ வல்லமையையும் பயன்படுத்திச் செய்து முடிக்கிறது. ஆனால், இப்படி ஒரு அலாவுதீன் பூதம் நமக்குள் கை கட்டிக் காத்து நிற்பதை நம் புறமனம் அறிவதில்லை. நாம்தான் அறிவாளிகளாயிற்றே! எது சரி, எது தவறு, எது சாத்தியம், எது சாத்தியமில்லை, எது உண்மை, எது பொய், என்றெல்லாம் பகுத்தறிவைப் பயன்படுத்தி அலசி ஆராய்ந்துதானே எதையும் நம்புவோம்! அப்படியிருக்க, “வருங்காலத்தில் தமிழகத்தின் சூப்பர்ஸ்டார் நீங்கள்தான்” என்று யாராவது சொன்னால், அதை நாம் நம்பி விடுவோமா என்ன? நடக்குமென்ற எண்ணம் கூட நம்மை நெருங்காதே? அப்படிப்பட்ட நம்பிக்கை, ஒரு பெரிய டைரக்டரின் மகனுக்கு வரலாம். ஒரு பெரிய நடிகரின் மகனுக்கு வரலாம். குறைந்தபட்சம், ஒரு பெரிய பணக்காரரின் மகனுக்குக் கூட வரலாம். ஆனால் ஒரு கண்டக்டருக்கு வந்ததே! எப்படி வந்தது அந்த நம்பிக்கை? ஒருவேளை, அவருக்கு இந்த ஆழ்மனதின் அதிசயம் பற்றித் தெரிந்திருக்கலாம்.

ஒரு எண்ணம் உருவான உடனே அது ஆழ்மனத்தைச் சென்றடைவதில்லை. அப்படி நடக்குமானால், நம் மனதில் உதிக்கும் பயங்கர எண்ணங்கள் உடனே உண்மையாகிவிடக் கூடிய அபாயம்தான் அதிகம். அதனால்தான் கடவுள் இந்தப் பாதுகாப்பு ஏற்பாட்டை வைத்தார் போலும். ஒரு எண்ணம் தீவிர நம்பிக்கையாக மாறும்வரை, அது ஆழ்மனத்தைச் சென்றடைவதில்லை. ஆனால் அது சென்றடைந்துவிட்டால், நீங்கள் நினைத்தது நடந்தே தீரும் என்பதுதான் விதி. அதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. எண்ணத்தை நம்பிக்கையாக மாற்றும் கலைதான் நாம் கற்க வேண்டிய ஒன்று. அதன் முதல் படிதான், போன பகுதியில் சொன்ன பயிற்சி. அதாவது, எண்ணங்களை முதலில் நம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவது. இதுநாள்வரை, எண்ணங்கள்தான் நம்மைத் தம் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தன. இப்போது நாம் அவற்றின் போக்கில் குறுக்கிட்டு, அவை நமக்குத் தேவையான எண்ணங்கள்தானா என்பதை ஆராய்ந்து, தேவையற்றதெனின் திசைதிருப்பவும் முயற்சி செய்வோம். இதில் தேறினால்தான், அடுத்த பயிற்சியைத் தொடங்க முடியும். இன்னும் ஒரு வாரம் இருக்கிறது. முயலுங்கள். உங்களால் முடியாதது எதுவுமில்லை. நினைத்ததையெல்லாம் செயலாக்கும் ஆற்றல் நமக்கு வருமுன், நல்லதை மட்டுமே நினைக்கப் பழகுவோம். வாழ்த்துக்கள்.

..தொடரும்

Comments

கட்டுரை அருமையாகப் போகிறது. தொடருங்கள்.

‍- இமா க்றிஸ்

கனிப்ரியா மேடம்,

அடுத்த பகுதி இன்னும் அருமை,
ஒவ்வொரு வரியும் மனதை ஆழ்ந்த சிந்தனைக்கு உள்ளாக்குகிறது, நீங்கள் அதை விளக்கி இருக்கும் விதம் ரொம்ப தெளிவாக இருக்கு. எளிதில் புரியும்படியாக எழுதி இருக்கீங்க.
இப்படி எண்ணங்கள் தூய்மையானால் கெடுதலே நடக்காது.

கனி மேடம்..

இரண்டாவது பாகம் மிக மிக அருமை. வாழ்த்துக்கள்...

-> ரம்யா

உங்கள் நேரத்தை ஒதுக்கிப் படித்தமைக்கும் பாராட்டுக்கும் மிக்க‌ நன்றி இமா...

உங்கள் இனிய‌ பாராட்டு மனதுக்கு சுகமாக‌ இருக்கிறது தேவி. புரியும்படியாக‌ நான் எழுதுகிறேன் என்பதை விட‌, புரிந்துகொள்ளத் தேவையான மனப் பக்குவம் உங்களுக்கு இருப்பதே நீங்கள் விரும்பிப் படிக்கக் காரணம். மிக்க‌ நன்றி!

தொடர்ந்து நேரம் ஒதுக்கிப் படித்துப் பாராட்டு தெரிவித்தமைக்கு மிக்க‌ நன்றி ரம்யா... :)

ஹாய் கனிப்ரியா உங்கள் கட்டுரை மிக அருமையாக உள்ளது முதல் பதிவும் பிரமாதம்... வாழ்த்துக்கள் தோழி

கனிப்ரியா அவர்களுக்கு,
மனம் பற்றிய‌ கட்டுரை மிகவும் அருமையாக‌ உள்ளது. தங்களின் தெளிவான‌ வரிகள் மனதை தொடும்படியாகவும் சிந்திக்கவும் வைக்கின்றன‌. புறமனத்தோடு பேசி எண்ணங்களை சீர்படுத்தி ஆழ்மனத்தை அடிமையாக்கும் வித்தைகளும் சூப்பர்ப். முயற்சிக்கிறோம். நன்றி!

வாழ்க்கை முடிவற்ற வாய்ப்புகளை கொண்டது!!!!

உங்கள் நெரத்தை ஒதுக்கிப் படித்துப் பாராட்டியமைக்கு மிக்க‌ நன்றி தீபா. தொடர்ந்து படிக்க‌ வேண்டுகிறேன்.

உங்கள் வார்த்தைகள் எனக்கு மிகுந்த‌ ஊக்கமூட்டுகின்றன‌. தொடர்ந்து படித்து கருத்துக்களைத் தெரிவிக்க‌ வேண்டுகிறேன்.
//வாழ்க்கை முடிவற்ற வாய்ப்புகளை கொண்டது!!!!// இந்தத் தத்துவம் என் கட்டுரையை ஒரு வரியில் சுருக்கியது போல் உள்ளது. வாழ்த்துக்கள்.

இரண்டாம் பாகம் ரொம்ப ரொம்ப நல்லாயிருக்குங்க.
நிறைய புதுமையாகவும் மேலும் படிக்க சுவாரஸ்மாக இருக்குங்.

நட்புடன்
குணா

Really great mam i want learn more and more about the book
Thanks
John selvaraj
9940583597