உறவுகள் - நல்வாழ்வின் திறவுகோல்

உறவுகள்Nalvalvin Thiravukol

உறவுகள்

மன நிம்மதியை நாடுபவர்களுக்கு முக்கியத்தேவை, சுற்றத்தாரோடு சுமுகமான உறவு. ஒருவருக்குக் கோடான கோடி பணமிருந்தாலும், உடல் நல்ல ஆரோக்கியத்தோடு இருந்தாலும், கணவன் மனைவி இடையே நல்ல புரிதல் இல்லையென்றால், அண்ணன் தம்பியுடன் அடித்துக் கொண்டால், தந்தைக்கும் மகனுக்கும் ஆகாது என்றால், அது என்ன வாழ்க்கை? மனதில் நிம்மதியும் நல்ல எண்ணங்களும் எப்படி ஊறும்? நல்லெண்ணங்களின் தாயே அன்புதான். ஒருவரை வெறுப்பதன் மூலம், நீங்கள் அவருக்கு செய்யும் தீங்கை விட, உங்களுக்கு செய்து கொள்ளும் தீங்கு தான் அதிகம்.

எனவே, ஆரோக்கியமான உறவுகளை சாதிக்காவிட்டால், நீங்கள் இந்தப் பயிற்சியை மேற்கொள்வதே வீண். உங்களுக்குள் காத்திருக்கும் அலாவுதீன் பூதத்துக்கு ஆணையிடும் தகுதியை நீங்கள் அடையவே முடியாது. உறவுகளை வெல்வது அப்படி ஒன்றும் கஷ்டமல்ல. உங்கள் மனம் உங்கள் கட்டுப்பாட்டில் இருக்குமானால், எண்ணங்கள் காட்டில் முளைக்கும் புல்பூண்டு போலல்லாமல் பண்பட்ட நிலத்தில் விளையும் பூச்செடிகள் போல் மலருமானால், உறவுகள் அத்தனையும் உங்கள் காலடியில் – உங்களை தெய்வமெனத் துதிபாடும். அதற்கான இரண்டு எளிய மந்திரங்களை உங்களுக்கு இங்கே கற்றுத்தருகிறேன்.

முதல் மந்திரம், மன்னிப்பு.

உங்கள் ஆன்மாவுக்கு, இதைவிட சுகம் தரும் அருமருந்து இந்த உலகில் இல்லை எனலாம். கோபம், காழ்ப்புணர்ச்சி, துவேஷம், பகை, பழியுணர்ச்சி, வெறுப்பு – இந்த எல்லா விஷங்களையும் இந்த ஒரு சொல் முறித்துவிடும். ஒரு உதாரணம் பார்க்கலாம். மாமியாரும் மருமகளும் ஒன்றாக வாழும் வீட்டை எடுத்துக் கொள்ளுங்கள் (கொஞ்சம் அரிதுதான், ஆனாலும் தமிழ் சீரியல்களிலாவது பார்த்திருப்பீர்கள்). ஏதோ ஒரு சர்ச்சையில் இருவருக்கும் மனஸ்தாபம். ஒருவரை ஒருவர் மனம் நோகும்படிப் பேசியும் ஆயிற்று. இப்போது தனித்தனியே அவர்களது மனநிலை எப்படி இருக்கும் என்பதை சொல்லவே வேண்டாம்.

திரும்பத்திரும்ப அந்தக் கொடுஞ்சொற்கள் (அடுத்தவர் பேசியது மட்டும்தான்!) மனதில் ஒலித்துக் கொண்டே இருக்கும். இப்படி சொல்லியிருக்கலாமே, அப்படி பதிலடி கொடுத்திருக்கலாமே, என்று பல்வேறு சாதுர்யமான சாத்தியங்களை மனம் அலசி ஆராயும். சொல்லாமல் விட்ட வார்த்தைகளைப் பயன்படுத்துவதற்காக அடுத்த சந்தர்ப்பத்தை நோக்கி ஆவலாகக் காத்திருக்கும். வெவ்வேறு ஏற்ற இறக்கங்களோடு மனதுக்குள் ஒத்திகை நடக்கும். ஏற்கனவே நாம் கனவுகளின் சக்தி பற்றிப் பார்த்தோம். நீங்கள் மனதுக்குள் நடத்திப் பார்க்கும் சண்டை ஒத்திகை எவ்வளவு சக்தியோடு வேலை செய்கிறது என்பது உங்களுக்குத் தெரியாது.

விளைவு? நிச்சயம் நீங்கள் ஆவலோடு எதிர்பார்த்த அடுத்த சந்தர்ப்பம் கூடிய விரைவில் வந்து சேரும். மீண்டும் கடுஞ்சொற்களின் பரிமாற்றம்… மீண்டும் அதே மனப் போராட்டம்… இது ஒரு முடிவற்ற சுழல். இதனால், நீங்கள் உங்கள் மாமியாருக்கோ, அல்லது மருமகளுக்கோ நிம்மதியைக் குலைக்க விரும்பி, உங்களுக்கே முடிவில்லாக் கேடுகளை வரவழைத்துக் கொள்கிறீர்கள். வெறும் குப்பைகளை ரீசைக்கிள் செய்யும் இயந்திரமா உங்கள் மனம்? வைரங்களையும் ரத்தினங்களையும் உருவாக்கும் மந்திரக்கோல் அல்லவா அது? அதை நீங்கள் உபயோகப் படுத்துவதற்கு உங்கள் மாமியாரின் தயவு தேவையா என்ன? நிச்சயம் இல்லை.

ஒருமுறை, ஒரே ஒருமுறை, உங்கள் மனதுக்குள் இப்படி சொல்லிப் பாருங்கள். “நான் என் மாமியாரை மனமார மன்னித்து விட்டேன். அவர் மனப் பக்குவம் இல்லாதவர். கொடிய எண்ணங்களின் பிடியில் சிக்கி அவதிப் படுகிறார். பாவம். அதற்கான விளைவுகளை அவர் சந்தித்துவிட்டுப் போகட்டும். நான் மேன்மையானவள். எண்ணங்களைக் கையாளத் தெரிந்தவள். என் நிம்மதியை மற்றவர் குலைக்க நான் அனுமதிக்க முடியாது. எனவே, நான் என் மாமியாரை மனப் பூர்வமாக மன்னித்துவிட்டேன். இந்த நிமிடம் முதல் என் மனதில் இருந்த குப்பைகளை வெளியே எறிந்து நான் தூய்மையடைந்துவிட்டேன். என் மனம் மீண்டும் அமைதி அடைந்து விட்டது. நான் மகிழ்ச்சியாய் இருக்கிறேன். என் மாமியாரும் இவ்வாறே பகை மறந்து நிம்மதி அடையட்டும் என்று நான் கடவுளை வேண்டுகிறேன்.”

இப்படி நினைத்து முடித்த மறுகணம், உங்கள் மனதில் ஏற்படும் உணர்வை விவரிக்க வார்த்தையே கிடைக்காது. அப்படி ஒரு தெய்வீக விடுதலை உணர்வை அதற்கு முன் நீங்கள் அனுபவித்திருக்க மாட்டீர்கள். இது என் கற்பனையல்ல. என் அனுபவம். அந்த உணர்ச்சி என் கண்களில் ஆனந்தக் கண்ணீரையே வரவழைத்திருக்கிறது. சத்தியமாய் நான் சந்தோஷத்தில் அழுதிருக்கிறேன்.

ஒவ்வொரு முறையும் பழைய நினைவுகள் உங்களைத் தொல்லை செய்யும்போதெல்லாம், இதை மனதுக்குள் மீண்டும் மீண்டும் சொல்லிக் கொள்ளுங்கள். கூடிய விரைவில் நீங்கள் உங்கள் மாமியாரிடம் அன்பு செலுத்தத் தொடங்கிவிடுவீர்கள். அதன்பின் அவரைக் காயப்படுத்தும் எண்ணம் காணாமல் போய் விடும்.

(ஒருவேளை படிப்பது மாமியாராக இருந்தால், மருமகள் என்று மாற்றிப் படிக்கவும். இது ஓர் உதாரணம் மட்டுமே. இந்த உணர்ச்சியை யாரும் யாரிடம் வேண்டுமானாலும் வரவழைத்துக் கொள்ள முடியும். வெறுப்பின் பிடியிலிருந்து உங்கள் ஆன்மா விடுபடும் ஆனந்தம் எல்லையில்லாதது.)

இரண்டாவது மந்திரம், நன்றியுணர்வு.

அடுத்தவரிடம் காட்டும் வெறுப்பு எப்படி உங்களையே அதிகம் பாதிக்கிறதோ, அப்படியே அடுத்தவரிடம் காட்டும் நன்றியுணர்வும் முதலில் உங்களுக்குத்தான் அதிக நன்மை தரும். நன்றியை எப்போதும் வார்த்தைகளில் சொல்லிக் கொண்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை. அடிக்கடி சொன்னால், அது வெறும் சம்பிரதாயமாக, அல்லது நடிப்பாகக் கூட மற்றவர்களுக்குத் தோன்றும். மனதுக்குள் எண்ணுங்கள். அந்த எண்ணம் ஏற்படுத்தும் நல்லுணர்வை அனுபவியுங்கள். அது போதும். மேலும் மேலும் அது போன்ற தருணங்களை உங்கள் ஆழ்மனம் உருவாக்கிக் கொடுக்கும். நல்லுணர்வு நிரந்தரமாக உங்கள் மனதில் நிற்கும்.

காலையில் கண்விழித்ததும், புதிய நாளைக் கொடுத்ததற்காக இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள். திரும்பிப் பக்கத்தில் உறங்கும் குடும்பத்தினரைப் பாருங்கள். உங்கள் வாழ்க்கைக்கு அர்த்தம் கொடுத்த உறவுகளுக்காக நன்றி கொள்ளுங்கள். மழை பெய்தால் இயற்கைக்கு நன்றி சொல்லுங்கள். வெயில் காய்ந்தால் சூரியனுக்கு நன்றி சொல்லுங்கள். தினம் தினம் உங்கள் வாழ்வில் நடக்கும் ஆயிரக்கணக்கான நிகழ்வுகளில், நன்றி கொள்ள வேண்டிய விஷயங்கள் ஏராளமாக இருக்கும். எதையுமே விட்டு வைக்காதீர்கள். உங்கள் வேலைகளைப் பகிர்ந்துகொள்ளும் வேலையாட்கள், உங்கள் திறமைகளைப் பாராட்டும் மேலதிகாரிகள், ஒரு ஜோக் சொல்லி சிரிக்க வைக்கும் சக ஊழியர்கள், உங்கள் துன்பங்களைப் பகிர்ந்துகொள்ளும் நண்பர்கள், சரியான சில்லறை கொடுக்கும் கண்டக்டர், இப்படி எத்தனை எத்தனையோ சந்தர்ப்பங்கள் – நாம் அவற்றை ஒரு நன்மையாகக் கூட மதிப்பதில்லை. ஆங்கிலத்தில், “Take it for granted” என்பார்களே, அது போன்று, ஏதோ நமக்குக் கிடைக்கவேண்டிய சட்டபூர்வமான சலுகைகளாக அவற்றை எண்ணிக் கொள்கிறோம். அப்படித்தான் இருக்கட்டுமே! அதற்காக உள்ளுக்குள் ஒரு சின்ன சந்தோஷம் – இது எனக்குக் கிடைத்தற்காக நான் மகிழ்ச்சியடைகிறேன் என்ற எண்ணம் – அது போதுமே! மேலும் மேலும் அது போன்ற நல்ல சலுகைகளை அந்த எண்ணம் உங்களுக்காக இழுத்துவரும் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள் – அந்தப் பழக்கத்தை வலிய ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.

இந்தப் பழக்கம் எப்படி உங்கள் உறவுகளை மேம்படுத்த உதவுகிறது எனப் பார்ப்போம். இந்த முறை உதாரணத்துக்கு கணவன் மனைவி உறவை எடுத்துக் கொள்வோம். உங்கள் கணவருக்கும் உங்களுக்கும் ஏதோ சண்டை என்று வைத்துக் கொள்ளுங்கள். முதலில் சொன்னது போல் திரும்பத் திரும்ப அவர் சொன்ன வார்த்தைகளை அசை போட்டுப் பார்த்து மனதில் கோபத்தை வளர்த்துக் கொள்வதற்கு பதிலாக, அவரை மன்னித்து விடுங்கள்.

அதன் பிறகும் உங்கள் மனம் சண்டித்தனம் செய்தால், திருமணமான புதிதில் உங்கள் கணவர் உங்களிடம் அந்நியோன்னியமாக இருந்த சமயங்களை நினைத்துப் பாருங்கள். உங்கள் சமையலை, உங்கள் அழகை, உங்கள் பொறுமையை, அவர் பாராட்டிய தருணங்கள் எதையாவது நினைவுக்குக் கொண்டுவாருங்கள். ஒருவேளை பாராட்டும் இயல்பே இல்லாதவரா? சரி விடுங்கள். நீங்கள் நெகிழ்ந்து போகும்படியாக சில காரியங்களை அவர் எப்போதாவது செய்திருப்பார். உங்கள் தாய்வீட்டினருக்கு நீங்கள் கேட்காமலேயே உதவியிருக்கலாம். உங்கள் தவறுகளை மாமியார் முன்னிலையில் விட்டுக் கொடுக்காமல் மறைத்திருக்கலாம். எதிர்பாராமல் உங்களுக்குக்குப் பிடித்த ஒரு பொருளை வாங்கி உங்களுக்குப் பரிசளித்திருக்கலாம். அல்லது உங்கள் உடம்புக்கு முடியாமல் இருந்த வேளைகளில் முகம் சுளிக்காமல் உங்களுக்குப் பணிவிடைகள் செய்திருக்கலாம். இப்படி பொக்கிஷமாய் நீங்கள் பாதுகாக்கும் நினைவுகள் எவ்வளவோ இருக்கும். உங்களை உருகச் செய்த அந்த நினைவுகளை இப்போது கோபமாக இருக்கும்போது வலுக்கட்டாயமாக இழுத்து வாருங்கள். கோபம் காணாமல் போய்விடும். சின்னச் சின்ன விஷயங்களுக்கெல்லாம் நன்றி பாராட்டும் குணம் உங்களிடம் இருந்தால், இந்த வேலை மிகச் சுலபமாக முடியும்.

மாமியார் மருமகளாக இருந்தால், நன்றி உணர்வை மனதுக்குள் வைத்துக் கொள்ளாமல் அவ்வப்போது வாய் திறந்து சொல்லுங்கள். “அத்தை, நீங்க வச்ச பாவக்காய் புளிக்குழம்பு அருமை. எங்க ஆஃபீஸ்ல எல்லாரும் கேட்டு வாங்கி சாப்பிட்டாங்க. எனக்குக் கூட பத்தாமப் போச்சு.” என்று ஒரு நாள் பாரட்டிப் பாருங்கள். மருமகளுக்குப் பிடிக்குமே என்று உங்கள் அத்தை மீண்டும் ஆசை ஆசையாய் செய்து தருவார். நீங்கள் மாமியாராக இருந்தால், உங்கள் மருமகளின் காதில் விழும்படியாக, “என் மருமகள் சமையலை சாப்பிட்ட வாய்க்கு வேற எங்க சாப்பிட்டாலும் பிடிக்கிறதில்லை.” என்று அடுத்தவரிடம் சொல்லிப் பாருங்கள். உடம்பு சரியில்லை என்றால் கூடப் பொருட்படுத்தாமல் எழுந்து சமைப்பாள் உங்கள் மருமகள். இப்படிப் பட்ட சந்தர்ப்பங்கள், என்றாவது உங்களுக்கிடையே மனஸ்தாபம் வரும்போது உங்கள் மனதை சமாதானப் படுத்தத் தேவையாக இருக்கும்.

சுருங்கச் சொன்னால், சிறு சிறு விஷயங்களுக்காக சந்தோஷப்படுவதும், நன்றி பாராட்டுவதும், கோபம் தலையெடுக்கும் போதே எதிரியை மன்னித்து உங்கள் மனதுக்கு நிம்மதியை மீட்டுத்தருவதும், அற்புதமான உறவுகளை உங்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்கும். உறவுகள் திருப்தியாக அமைந்துவிட்டால், உங்கள் பயிற்சியில் பாதி தேறி விட்டீர்கள் என்று பொருள். வாழ்த்துக்கள்.

..தொடரும்

Comments

கனிப்ரியா
உங்கள் பதிவு அழகாக‌ செல்கிறது..நான் உங்கள் இந்த‌ பதிவுகளை படிப்பது மட்டுமில்லாமல் பின்பற்றவும் செய்கிறேன் .ரொம்ப‌ நன்றி .நன்றாக‌ நல்லாக‌ புரியும்படியும் எழுதுகிறீர்கள்.. Thanks கனிப்ரியா

பரணிகா:)

நல்ல கட்டுரை. தெளிவாக இருக்கு வரிகள் எல்லாம். எல்லோருக்குமே ரொம்பவே அவசியமான கட்டுரை. வாழ்த்துக்கள் கனி.

மாற்றம் ஒன்றே மாறாதது

அபி

வழக்கம் போல... கட்டுரை வெகு அருமை கனிப்ரியா. இன்னும் நிறைய‌ எதிர்பார்க்கிறேன்.

'மன்னிப்பு' எனும் தலைப்பின் கீழ் உள்ள‌ நான்காவது பந்தியில் சொல்லப்பட்டிருக்கும் சில‌ விடயங்களோடு எனக்கு உடன்பாடு இல்லை.

//அவர் மனப் பக்குவம் இல்லாதவர். கொடிய எண்ணங்களின் பிடியில் சிக்கி அவதிப் படுகிறார். பாவம். அதற்கான விளைவுகளை அவர் சந்தித்துவிட்டுப் போகட்டும்.// என்னும் வரிகள் தான் அவை.

விபரித்துச் சொல்லத் தெரியவில்லை. ஆனால்... இன்னொருவரை மனப்பக்குவம் இல்லாதவர் என்பேனானால்... நானும் மனப் பக்குவம் இல்லாத‌ ஆள் என்று ஆகாதா!!

//அதற்கான விளைவுகளை அவர் சந்தித்துவிட்டுப் போகட்டும்.// என்று நினைப்பேனானால்... அது மன்னிப்பாகாது என்று தோன்றுகிறதே!

அப்படியானால்... எப்படி //என் மனதில் இருந்த 'குப்பைகளை' வெளியே எறிந்து நான் தூய்மையடைந்துவிட்டேன்.// என‌ முடியும்!! !!

எந்த‌ எண்ணங்களும் எழாமல்... 'மன்னித்தேன்,' என்று என்னால் சொல்ல‌ இயல வேண்டும். 'இந்த‌ நிகழ்வால் அவருக்குத் தீங்கு எதுவும் நடக்காமலிருக்க‌ வேண்டும்,' என்று சிந்திக்காது போனாலும், //அதற்கான விளைவுகளை அவர் சந்தித்துவிட்டுப் போகட்டும்.// எனும் எண்ணம் என் மனதில் எழாதிருத்தல் வேண்டும் என்று தோன்றுகிறது.

ஒவ்வொருவரும் தனித்துவமானவர்கள்; எவரையும் அவராக‌ மட்டும் மதித்து மன்னிக்க‌ முடிய‌ வேண்டும் என்னால்.

சிந்திக்க‌ வைத்தீர்கள்; சுயபரிசோதனைக்கு ஒரு சந்தர்ப்பம் அமைத்துக் கொடுத்தீர்கள். அதற்காக‌ நன்றி கனிப்ரியா.

தொடர்ந்து எழுதுங்கள். படிக்கக் காத்திருக்கிறேன். நல்ல‌ தமிழ் உங்களது. நிறுத்தற்குறிகள் எல்லாம் அழகாகப் பயன்படுத்தி எழுதியிருப்பதால் படிப்பதற்கு சுகமாக‌ இருக்கிறது. வாழ்த்துகள் சகோதரி.

//மனமாற// இது... 'மனமார‌' அல்லவா! அல்லது 'மனம் ஆற‌' மன்னித்ததாக‌ எழுதியிருக்கிறீர்களா? இதுவும் நன்றாகத்தான் இருக்கிறது. ;-)

‍- இமா க்றிஸ்

மன்னிப்பு குறித்த‌ உங்கள் தத்துவம் அருமை... உங்கள் எண்ணங்கள் எந்த‌ அளவுக்குப் பண்பட்டவை எனப் புரிகிறது. எடுத்த‌ எடுப்பில் இப்படி நினைக்க‌ முடிந்தவர்களுக்கு, இந்தக் கட்டுரையால் எந்தப் பயனும் இல்லை. மிகவும் உயர்ந்த‌ மனநிலைக்குச் சென்ற‌ பின் இது சாத்தியம். சற்றுக் கீழே, பழிவாங்கத் துடிக்கும் மனநிலையில் உள்ளவர்க்கு, கொஞ்சம் கடினம். அந்த‌ நிலையில் உள்ளவர்க்கு, "நான் அவரை விட‌ மேலான மனநிலையில் உள்ளேன். அதனால் அவரை என்னால் மன்னிக்க‌ முடியும்" என்ற‌ சுய‌ பிரகடனம் தேவை இமா. போட்டியில் இறங்கத் துடிக்கும் மனதுக்குக் கடிவாளம் போல‌. இந்த‌ நிலைகளைத் தாண்டி வந்தவர்களால் தான் இதையெல்லாம் உணர‌ முடியும். ஒருவேளை உங்களுக்கு அது போன்ற‌ சந்தர்ப்பங்கள் வராமல் போயிருக்கலாம்.
//ஒவ்வொருவரும் தனித்துவமானவர்கள்; எவரையும் அவராக‌ மட்டும் மதித்து மன்னிக்க‌ முடிய‌ வேண்டும் என்னால்.//
மன்னிப்பு பழகிப்போய், ஒருவரது சுபாவமாக‌ மாறியபின், இது சாத்தியம். நீங்கள் அந்த‌ நிலையில் தான் இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.
//இன்னொருவரை மனப்பக்குவம் இல்லாதவர் என்பேனானால்... நானும் மனப் பக்குவம் இல்லாத‌ ஆள் என்று ஆகாதா!!//
நிச்சயம் ஆகாது. மனப்பக்குவத்தில் வெவ்வேறு நிலைகள் உள்ளது உண்மை. பழிவாங்குபவரை விட‌, மன்னிப்பவர் மேல் என்று உணராமல் போனால், அடுத்த‌ நிலைக்கு எப்படிச் செல்ல‌ முடியும்? இந்த‌ வித்தியாசத்தை நமக்குள் உணர‌ வேண்டும் என்றுதான் சொல்கிறேனே ஒழிய‌, அவரிடம் போய் சொல்ல‌ வேண்டும் என்று சொல்லவில்லையே!... அப்படிச் செய்வது நிச்சயம் ம‌னப்பக்குவமில்லாத‌ செயல்தான்.ஆனால் நான் அடுத்த‌ நிலைக்குப் போய் விட்டேன் என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டால்தான் என்னால் அந்த‌ நிலையில் நிலைத்திருக்க‌ முடியும்.
//அதற்கான விளைவுகளை அவர் சந்தித்துவிட்டுப் போகட்டும்.// இங்கு வார்த்தை அமைப்பில் பிழை நேர்ந்து விட்டது. "விளைவுகளைச் சந்திக்க‌ 'நான்' தயாராக‌ இல்லை" என்ற‌ பொருள் அங்கு வரவேண்டும்.
"பகை உணர்ச்சியை அவர் மாற்றிக் கொள்ளாமல் போனால், அதற்கான‌ விளைவுகளை சந்திக்க‌ நேரிடும்" என்ற‌ எண்ணம், தனக்குத் தானே கொடுத்துக் கொள்ளும் ஒரு "warning". அவ்வளவுதான். :) அதிலிருந்து அவர் விடுபடவேண்டும் என்ற‌ விருப்பத்தைத்தான் "என் மாமியாரும் இவ்வாறே பகை மறந்து நிம்மதி அடையட்டும் என்று நான் கடவுளை வேண்டுகிறேன்" என்ற‌ வரிகளில் சொன்னேன். :). தவறைச் சுட்டிக் காட்டியமைக்கு மிக்க‌ நன்றி...

//மனமாற// இது... 'மனமார‌' அல்லவா!//
நீங்கள் சுட்டிக்காட்டிய‌ பின்புதான் கவனித்தேன். இதுநாள் வரை, மனம் ஆற‌ என்பதன் சுருக்கமாகத்தான் இதை நினைத்திருந்தேன். யோசிக்கும்போதுதான், 'மனமார‌' என்ற‌ பிரயோகமே எல்லோராலும் பயன்படுத்தப் படுவதாகத் தோன்றுகிறது. மீண்டும் நன்றி.:)

சம்பிரதாய‌ பாராட்டுக்களை விட‌, இது போன்ற‌ அலசல்கள் எனக்கு மிகவும் பிடித்திருக்கின்றன‌ இமா... தொடர்ந்து செய்யுங்கள்.

//நிறுத்தற்குறிகள் எல்லாம் அழகாகப் பயன்படுத்தி எழுதியிருப்பதால் படிப்பதற்கு சுகமாக‌ இருக்கிறது// ‍‍‍‍‍_ எனக்கும் இந்த‌ வரியைப் படிக்க‌ சுகமாகத்தான் இருக்கிறது. நன்றி. :)

படித்துவிட்டுப் போகாமல் பாராட்டிய‌ பெருந்தன்மைக்கு மிக்க‌ நன்றி அபி...
தொடர்ந்து உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்.

நடு இரவில் கூட‌ தூக்கம் துறந்து படித்துப் பாராட்டியிருக்கிறீர்கள் பரணிகா... உங்களுக்கு நன்றி சொல்ல‌ வார்த்தகளே இல்லை... :)
//நான் உங்கள் இந்த‌ பதிவுகளை படிப்பது மட்டுமில்லாமல் பின்பற்றவும் செய்கிறேன்//
இந்த‌ வார்த்தகளுக்காகத்தான் கஷ்டப்பட்டு எழுதுகிறேன். மிக்க‌ மகிழ்ச்சியாக‌ இருக்கிறது பரணிகா... வெற்றி பெற‌ வாழ்த்துக்கள்.
=கனிமொழி=

உங்களுடைய‌ உறவுகள் கட்டுரையை எதிர்பார்த்து காத்திருந்தேன். அருமையான‌ கட்டுரை.
உறவுகள் சீராக‌ அமைய‌ மன்னிப்பு மிகவும் அவசியம். அதனால் தான் 'குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை' என்று சொல்லுவாங்க‌.
//அவர் மனப் பக்குவம் இல்லாதவர்// போனால் போகட்டும் என‌ எண்ணி நாம் பிறரை மன்னிப்பதனால் நம் மனம் லேசாகிறது. ஏற்றி வைத்த‌ மனச்சுமை நீங்குகிறது. ஒரு தெளிவு, சந்தோசம் கிடைக்கிறது.

//அதற்கான விளைவுகளை அவர் சந்தித்துவிட்டுப் போகட்டும்.// இந்த‌ வரி முழுமனதோடு மன்னிக்காமல் சபிப்பது போல‌ எனக்குத் தோன்றுகின்றது... //பாவம்// என்று கூறிவிட்டு அப்புறம் ஏனிப்படி.........

நன்றியுணர்வு குறித்து மிகவும் ஆனந்தத்துடன் அனுபவித்து எழுதியிருப்பது போல‌ மகிழ்வான‌ உணர்வூட்டுவதாக‌ இருக்கிறது.
ஆஹா !! மழை பெய்தாலும், வெயில் அடித்தாலும் கூட‌ ......
படிக்கும் போதே ஏதோ ஒரு ஆனந்தம் .

உங்கள் கட்டுரையை நானும் முடிந்தவரை கடைப்பிடிக்கிறேன்..

நானும் ஒன்றைக் கூறலாமா?
எதிர்பார்ப்பை குறைத்துக் கொண்டால் மனம் லேசாகி உறவுகளுடன் சிக்கலின்றி வாழலாம்.
அன்பு, மன்னிப்பு, நன்றியுணர்வு ..ஆம் எதையுமே எதிர்பார்க்காமல் வாழப் பழகுவோம். ஆனால், நாம் பிறருக்கு இவற்றை வாரி வழங்குவோம்.
நம் குழந்தைகட்கு நல் உறவுகளை விட்டுச் செல்வோம்.

.

//நானும் ஒன்றைக் கூறலாமா?// இந்தக் கட்டுரையை இங்கு வெளியிடக் காரணமே உங்கள் மேலான கருத்துக்களை அறியும் ஆவலில்தான் நிகிலா. அதிலும் உங்கள் கருத்து கட்டுரைக்கு மெருகேற்றுவதாக‌ அமைந்திருப்பது மிக்க‌ மகிழ்ச்சி.
//எதிர்பார்ப்பை குறைத்துக் கொண்டால் மனம் லேசாகி உறவுகளுடன் சிக்கலின்றி வாழலாம்.
அன்பு, மன்னிப்பு, நன்றியுணர்வு ..ஆம் எதையுமே எதிர்பார்க்காமல் வாழப் பழகுவோம். ஆனால், நாம் பிறருக்கு இவற்றை வாரி வழங்குவோம்.
நம் குழந்தைகட்கு நல் உறவுகளை விட்டுச் செல்வோம்.//
அருமையான‌ வரிகள்...மிக்க‌ நன்றி.
//அதற்கான விளைவுகளை அவர் சந்தித்துவிட்டுப் போகட்டும்.//இந்த‌ வரிகளின் வார்த்தை அமைப்பில் பிழை நேர்ந்து விட்டதை நான் இமாவின் இடுகைக்கான‌ பதிலிலேயே ஒப்புக் கொண்டேன் நிகிலா. இந்த‌ வரிகளில், "பகையை விரும்பினால் விளைவுகளை நானும் சந்திக்க‌ வேண்டும்." என்ற‌ எச்சரிக்கையை தனக்குத் தானே சொல்ல‌ விரும்பினேன். சரியாக‌ யோசிக்காமல் எழுதி, சரியாக‌ படித்தும் பார்க்காமல் வெளியிட்டதால் அப்படி ஆகிவிட்டது. இனிமேல் வெளியிடுவதற்கு முன்பாக‌ உங்களைப் போன்ற‌ தோழிகளுக்கு அனுப்பி கருத்துக் கேட்பது இது போன்ற‌ தவறுகளைத் தவிர்க்க‌ உதவும் என்று எண்ணுகிறேன். :)
எனக்கு வடிவேலுவின் "Be careful!" - "நான் என்னைச் சொன்னேன்" என்ற‌ joke இங்கே நினைவுக்கு வருகிறது... :)
//நன்றியுணர்வு குறித்து மிகவும் ஆனந்தத்துடன் அனுபவித்து எழுதியிருப்பது போல‌ மகிழ்வான‌ உணர்வூட்டுவதாக‌ இருக்கிறது.//
என்னதான் அனுபவித்து எழுதினாலும், அனுபவித்துப் படிக்கவும், நட்புடன் கருத்துக்களைக் கூறவும் உங்களைப் போன்ற‌ தோழிகள் தேவை நிகிலா.
மிக்க‌ நன்றி. தொடர்ந்து உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்.

1ஸ்ட் சூப்பர், ரொம்ப அருமையான பதிவு,அனைவருக்கும் தேவையான பதிவும் கூட, அதை ரொம்ப அழகா பிரெசன்ட் பண்ணிருக்கீங்க வாழ்த்துக்கள்.

உங்களோட மத்த பதிவுகளும் ரொம்பவே நல்லா இருக்கு.
அதற்கும் எனது வாழ்த்துக்கள்.

மன்னிப்பு : அழகான விளக்கம் சொல்லிருக்கீங்க.

அதே போல எனக்கு தெரிந்தது,
எப்பவுமே நம்முடைய மனது ஏனோ நல்லதை விட கெட்டதையே
அதிகமா யோசிக்கும், அதையே நினைச்சு நிம்மதியை இழந்து தவிக்கும், அப்படி தவிக்காம நிம்மதியா இருக்கதுக்கு இந்த மன்னிப்பு ரொம்ப அவசியம்,
அடுத்தவர்கள் செய்தது தப்பாவே இருந்தாலும் அதுக்கு பதிலா நாமளும் திருப்பி அதே தவறை செய்துவிட கூடாது, கஸ்டம் தான் இருந்தாலும் மன்னிக்க பழகிகிட்டா மன அமைதிக்கு ரொம்ப நல்லது.

இதை நீங்க அழகா நான் நல்லவள்னு மனசுல பதியவைக்க சொல்றீங்க.

2) நன்றியுணர்வு : இதுவும் ரொம்ப நல்லவிசயம், சின்ன சின்ன விசயத்துல கூட இந்த மாதிரி மென்டாலிட்டி இருந்தா மனசு ரொம்ப ஹாப்பியா இருக்கும், அடிக்கடி கடவுளுக்கு நன்றி சொல்றது மூலமா நாம கடவுள் கிட்ட ரொம்ப க்ளோஸா இருக்கது போல பீல் கிடைக்கும்,
நம்மகூட பழகுறவங்களுக்கும் இது பொருந்தும், பாராட்டுறதும் ரொம்ப நல்ல விசயம்.

நல்ல பதிவுக்கு நன்றி,

நிறைய பதிவுகள் தொடர்வதற்கு என்னுடைய வாழ்த்துக்கள்......

வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் ‍சுபி *

உங்கள் பாராட்டுக்கு மிக்க‌ நன்றி சுபி... சொன்னவற்றை அழகாகப் புரிந்து கொண்டு உங்கள் பார்வையில் அதற்கான‌ விளக்கமும் கொடுத்து அசத்துகிறீர்கள். உங்களைப் போன்ற‌ வாசகர்கள் தான் எனக்கு ஊக்கமருந்து... நிச்சயம் உங்கள் ஆதரவோடு நிறைய‌ எழுதுவேன். வருகைக்கும் பதிவுக்கும் நன்றி... தொடர்ந்து படியுங்கள்...

அன்புள்ள‌ கனிப்பிரியாவிற்கு.
நல்ல‌ கருத்துக்களை நயமுற‌ எடுத்துரைத்தமைக்கு பாராட்டுக்கள்.
"அதற்கான‌ விளைவுகளை அவர் சந்தித்து விட்டுப் போகட்டும்"
இது தவறு இதைச் செய்யாதே, இதைச் செய்தால் இதன் விளைவு இப்படித்தான்
அமையும் என்று எச்சரிப்பது நம் கடமை. பட்டு அறிவதை விட‌ த்ருஷ்டாந்த‌
அறிவு (பிறரின் பட்டு அறிந்த‌ அனுபவத்தை நாம் அறிவது) கால‌ விரயத்தினைத்
தவிர்ப்பதோடு செயலின் விளைவினால் இருபக்கங்களிலும் ஏற்படுகின்ற‌ எதிர்
மறையான‌ விளைவுகளை (அனர்த்தங்கள்) நமக்குத் தெள்ளத் தெளிவாக‌ உணர்த்தும். " இடிப்பாரை இல்லா ஏமரா மன்னன் கெடுப்பாரிலானும் கெடும்",
"கடிது ஓச்சி மெல்ல‌ எறிக‌", "இளையதாக‌ முள்மரம் கொல்க‌ களையுனர் கை
கொல்லும் காழ்த்த‌ இடத்து" என்ற‌ வள்ளுவரின் கருத்துக்களின் அடிப்படையில்
"அதற்கான‌......... என்ற‌ உங்கள் கருத்து தவறு என்று என்னால் தவறானதாகக்
கருத‌ முடியவில்லை. " நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண் மேற்சென்று
இடித்தற் பொருட்டு " இது தானே நல்ல‌ நட்பின் இலக்கணம்.
சிலருக்கு எனது இக்கருத்து பிடிக்காது போகலாம். எனில் அவர்கள் என்னை
மன்னிக்க‌ வேண்டுகிறேன்.
அன்புடன் பூங்கோதைகண்ணம்மாள்.

" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.

பூங்கோதை கண்ணம்மாள் அவர்களின் தமிழுக்கு முதலில் தலை வணங்குகிறேன். தங்கள் விளக்கம் துவண்டிருந்த என் மனதுக்குப் புத்துயிர் அளித்தது. நன்றி சொல்ல வார்த்தைகளே இல்லை அம்மா. எழுதும்போது இயல்பாகத் தோன்றும் என் எண்ணங்களை முதலில் அப்படியே எழுதிவிடுவேன். பிறகு படித்துப் பார்க்கும்போது பிழையாகத் தோன்றினால் சரி செய்வேன். மேற்குறிப்பிட்ட வரிகள் எனக்குப் பிழைபோல் தோன்றாமல் போனது ஏன் என்று மிகவும் குழம்பிப் போயிருந்தேன். ஏனென்றால், எழுதும்போது அந்தச் சூழ்நிலையை மனதில் நிறுத்தி, முதலில் மன்னிக்கும் மனநிலையை மனமார உணர்ந்து, பின்பு தானாகத் தோன்றிய வார்த்தைகளைத்தான் எழுதினேன். அப்படியிருந்தும் அந்த வார்த்தைகளுக்குத் தவறான பொருள் ஏற்பட என்ன காரணம் என்று குழம்பிப் போனேன். எனக்கு விளங்க வில்லை. ஒருவேளை தனக்குத் தானே சொல்லிக் கொள்ள நினைத்த எச்சரிக்கையின் விளைவாக அந்த வார்த்தைகள் வந்திருக்கலாம் என்ற முடிவுக்கு வந்தேன்.எனக்கே விளங்காமல் குழம்ப வைத்த என் எழுத்துக்கு அழகாக அர்த்தம் சொன்ன அறிவுநுட்பத்துக்கும் அனுபவத்துக்கும் ஆயிரமாயிரம் நன்றிகளை உரித்தாக்குகிறேன். உங்களைப் போன்ற கற்றுணர்ந்த நல்லோரின் ஆசிகளும் வழிகாட்டலும் எனக்கு என்றும் தேவை. தொடர்ந்து தங்கள் மேலான கருத்துக்களின் மூலம் என் கட்டுரைக்குப் பெருமை சேர்க்க வேண்டுகிறேன்.
அன்புடன்,
கனிப்ரியா

வணக்கம் தோழிகளே,,, உங்கள் கருத்து மிக ௮ருமை

kirai sapiduvathu udal ratha oatam athigam agum

தோழி வழக்கம் போல கட்டுரை மிக அருமை... பாராட்டுக்கள் தோழி.. நன்றியுணர்வு குறித்து மிக அழகாக நேர்த்தியாக கூறியுள்ளீர்கள்...

உங்கள் தொடர்ந்த‌ ஆதரவுக்கு மிக்க‌ நன்றி தீபா... :)

உங்கள் பாராட்டுக்கு என் மனமார்ந்த‌ நன்றி பூர்ணி. :)

தவறான‌ பக்கத்தில் கருத்தைப் பதிவு செய்து விட்டீர்கள் என்று நினைக்கிறேன் narawsengiv.v. உங்கள் பெயரை உச்சரிக்கவே தெரியவில்லை எனக்கு. :)