இந்தோனேஷிய அனுபவங்கள் - பகுதி 2

இந்தோனேஷிய அனுபவங்கள்

பாகம் 2

சிங்கப்பூரில் ஹார்பர் ஃப்ரன்ட் (Harbour Front) மற்றும் தனா மேரா ஃபெரி டெர்மினல் (Tanah Merah ferry  terminal) என்னும் இரு இடங்களில் இருந்து பத்தாமுக்கு கப்பல் சேவைகள் இருக்கின்றன. இவற்றில் தனா மேரா டெர்மினலில் இருந்து பத்தாமின் நோங்சா புரா என்னும் இடத்திலுள்ள ரிசார்ட்டுக்கு செல்ல முடியும். ஹார்பர் ஃப்ரன்டில் இருந்துதான் பத்தாமிலுள்ள பிற நான்கு முனையங்களுக்கு செல்ல முடியும். அவை. பத்தாம் சென்டர் (Batam Centre), செக்குப்பாங் (Sekupang), ஹார்பர் பே (Harbour Bay) மற்றும் வாட்டர் ஃப்ரன்ட் (Water Front). நாம் தங்கப்போகும் இடத்துக்கு அருகில் உள்ள ஃபெரி டெர்மினலை தேர்வு செய்து அங்கு செல்ல டிக்கெட்டுகள் ஹார்பர் ஃப்ரென்டிலேயே பெற்றுக் கொள்ளலாம். 3 அல்லது 4 ஃபெரி நிறுவனங்கள் சேவை வழங்குகின்றன. சுமார் அரைமணி நேர இடைவெளிகளில் ஃபெரி சேவைகள் இருக்கின்றன. 

சிங்கையிலிருந்து பத்தாம் செல்ல 0 நிமிடங்கள் போதும். பத்தாமிலிருந்து இங்கே வரத்தான் 2 மணி நேரம் ஆகும். என்னடா இது குழப்பறாளேன்னு காண்டாகிடாதீங்கோ. சிங்கைக்கும் பத்தாமுக்கும் இடையேயான நேர வித்தியாசம்தான் இதற்கு காரணம். சிங்கையிலிருந்து ஒரு மணி நேரம் பின்னால் இருக்கிறது பத்தாம். அதாவது சிங்கையில் காலை 9 மணி என்றால் பத்தாமில் காலை 8 மணி. கப்பல் பயணம் சுமார் 1 மணி நேரம். இப்போ கணக்கு போடுங்க. சிங்கையில் 1 மணிக்கு புறப்பட்டால் 2 மணிக்கு (சிங்கப்பூர் நேரம்) பத்தாம் போய் சேரலாம். அப்போது பத்தாமில் நேரம் 1 மணி. சிங்கையில் 1 மணிக்கு புறப்பட்டால் பத்தாமில் 1 மணிக்கு போய் சேர்ந்துடலாம். பயணத் திட்டமிடல் செய்யும் போது இந்த நேர வித்தியாசத்தையும் கணக்கில் கொள்ள வேண்டும். அதனால்தான் விளக்கமாக சொன்னேன்.

ஃபெரி டிக்கெட் வாங்கிட்டு பெட்டிகளை செக் இன் செய்து பாதுகாப்பு சோதனைகள், குடிநுழைவு (Immigration) எல்லாம் முடித்து நமக்கான கப்பலில் ஏறும் அழைப்பு வந்ததும் சென்று ஆடும் கப்பலில் ஏறி ஜன்னலோரம் இருக்கை பிடிச்சு உட்கார்ந்துட வேண்டியதுதான். அப்படியே அசதியிலே சாய்ந்து தூங்கிடாதீங்க. இயற்கையும் செயற்கையும் அழகில் ஒன்றோடொன்று போட்டியிடுவதை ரசிக்க வேண்டாமா! ஆனால் எப்போதும் போல் இயற்கையே ஜெயிக்கும். 

போ….ய்ய்ய்ய்…ங்ங்ங்…..ஒலியோடு ஃபெரி புறப்பட்டதும் விவோ சிட்டி வணிக வளாகம், மற்றும் செந்தோசா தீவை இணைக்கும் நடைபாதை கண்ணில் தெரியும். மேலே தொங்கும் கேபிள் கார்களில் மக்கள் மவுன்ட் ஃபேபரில் இருந்து செந்தோசாவுக்கும் மறுமார்க்கத்திலும் பயணம் செய்து கொண்டிருப்பார்கள். யுனிவெர்சல் ஸ்டுடியோவின் சில பாகங்களும் கண்ணில் தெரியும். அப்படியே செந்தோசா தீவின் அழகை ரசித்துக் கொண்டே சென்றால் பெரிய பெரிய சரக்கு கப்பல்கள் அங்கும் இங்கும் சென்று கொண்டிருக்கும். ஜன்னல் வழியே பார்ப்பதை விட ஃபெரியின் பின்புறம் உள்ள திறந்த வெளியில் நின்று பார்த்தால் முழு அழகையும் ரசிக்க முடியும். பயணங்களில் வாந்தி வருவோர் இங்கு செல்லாமல் இருப்பது நல்லது. கையில் ப்ளாஸ்டிக் பையோடு சீட்டில் அமர்ந்து கொள்ளலாம். கடல் பயணத்துக்கே உரிய அசைந்தாடலுடன் ஃபெரி செல்லும்.

Indonesia Travel

படிப்படியாக சிங்கப்பூரை விட்டு ஃபெரி அகன்று தூரமாக செல்லும் போதே வழி நெடுக சரக்கு கப்பல்களும் பிற பயணிகள் ஃபெரியும் சென்று கொண்டிருப்பதை காணலாம், ஒரு முறை முழுவதுமாக மணல் நிரப்பிய கப்பல் ஒன்று சென்றதை பார்த்தேன். குட்டி குட்டி தீவுகளும் தென்படும். நமக்கு அதிர்ஷ்டம் இருந்தால் ஃபெரியில் இருந்து சூரிய அஸ்தமனத்தையும் காண முடியும். நான் சில முறைகள் பார்த்திருக்கிறேன். குமரி முனையில் காணும் அஸ்தமனமும் ஃபெரியில் இருந்து பார்க்கும் சூரிய அஸ்தமனமும் இரு வேறு அனுபவங்கள். 
குமரி முனையில் மேகங்கள் மட்டுமே அவ்வப்போது சூரியனை மறைக்கும். இந்தியப்பெருங்கடல் மட்டுமே பிரம்மாண்டமாக தெரியும். அதன் பிரமிப்புடன் கூடிய சூரிய அஸ்தமனம் குமரி முனையில். இங்கே சூரியன் தீவுக்கூட்டங்கள் பின்னே மறையும் பின்னர் வெளியே வந்து நம்மோடு கண்ணாமூச்சி விளையாடும்.

அதிர்ஷ்டம் இருந்தால் சூரிய அஸ்தமனத்தையும் ரசித்து பத்தாம் தீவில் ஃபெரி நங்கூரம் இட்டதும் ஃபெரியில் இருந்து இறங்கி குடிநுழைவுக்கு செல்ல வேண்டும். அங்கே on arrival visa பெற தனியே ஒரு கவுன்டர் இருக்கும் அங்கே விசாவுக்கான நடைமுறைகள் முடிந்து வெளியே வந்தால் அடடே இந்த இடம் நம்ம ஊர் மாதிரியே இருக்கேன்னு தோணும். 

இந்தோனேஷியாவில் நம்ம ஊர் ரூபாயோ சிங்கப்பூரின் டாலர்களோ செல்லுபடியாகாதே… இந்திய அல்லது சிங்கப்பூர் கரன்சிகளை (எந்த ஊர் கரன்சியும்) இந்தோனேஷிய ரூப்பியாவாக ஹார்பர் ஃப்ரன்ட் அல்லது பத்தாமில் இறங்கும் ஃபெரி டெர்மினல்களில் உள்ள Money Changerகளிடம் மாற்றிக் கொள்ளலாம். அந்த ரூப்பியாவைப் பற்றி அடுத்த பகுதியில் பார்க்கலாம்.

- கவிசிவா

 

இந்தோனேஷியா, சிங்கப்பூர் அனுபவங்கள் - கவிசிவா

Comments

என்னனவோ சொல்லறீங்க. ஜன்னல் சீட் நான் முதல்ல வந்து பிடிச்சுட்டேன் :)

Be simple be sample

அப்படியே ஜன்னல் ஓரமா உட்கார்ந்து தூங்கிடாதீங்க ரேவ்ஸ்... பின்னாடி டெக்ல நின்னு இயற்கையை ரசிச்சுட்டே வாங்க :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

என்னென்ன பெயரே சாெல்றீங்க.. கப்பலில் பாேனால் அது அசையுற அசையில ஆம்லெட் பாேட்டுவாங்களாமே.. நிச்சயம் எனக்கு ஒரு கவா் தேவைப்படும் பாேலவே..

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

நீங்க எழுதுற அழகு... அருமை. :-) தொடர்ந்து படிச்சுட்டே இருக்கலாம்.

‍- இமா க்றிஸ்

நன்றி ரேவா. நானும் முதல்ல போகும் போது இந்த பேரெல்லாம் எனக்கும் இப்படிதான் தோணுச்சுது. ஜன்னல் சீட்ல உட்கார்ந்து தூங்கிடாதீங்க :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

நன்றி இமாம்மா. யூ ஆர் சோ ஸ்வீட் :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

ஃபெரி பயணம் மிக அருமை .///ஜன்னல் வழியே பார்ப்பதை விட ஃபெரியின் பின்புறம் உள்ள திறந்த வெளியில் நின்று பார்த்தால் முழு அழகையும் ரசிக்க முடியும்/// நான் இங்க இருந்து இயற்கையை
ரசிக்கப்போறேன் . அடடே கப்பல் உந்தித்தள்ளும் நீரின் அழகைப் பாருங்களேன் . அப்படியே ஃப்ரீஸ் பண்ணினால் பல வகைகளில் பனிச்சிற்பங்கள் கிடைக்கும் .