நவராத்திரியின் ஒன்பது தினங்களும் என்ன செய்ய வேண்டும், எப்படி செய்ய வேண்டும் என்பதை இந்தப் பகுதியில் பார்க்கலாம்.
முதல் நாள் - இரண்டு வயது குழந்தை தொடங்கி, பத்து வயது சிறுமி வரை வீட்டுக்கு அழைத்து, ‘குமாரி பூஜை’ செய்யலாம். ’குமாரி பூஜை’ என்பது, குறிப்பிட்ட வயதுக் குழந்தையை வீட்டுக்கு அழைத்து, (அல்லது நம் வீட்டுக் குழந்தைக்கும் செய்யலாம்) , ஒரு கோலமிட்ட பலகையில் கிழக்குப் பார்த்து உட்கார வைக்க வேண்டும். சந்தனம், குங்குமம், பூ கொடுக்க வேண்டும். சுண்டல், இனிப்பு, ஏதேனும் பரிசு தட்டில் வைத்து, வெற்றிலை, பாக்கு, பழம், பூவுடன் கொடுக்க வேண்டும். முடிந்தால் பொருத்தமான உடைகள் கூடக் கொடுக்கலாம்.
இவ்வளவுதான் குமாரி பூஜை. இந்த குமாரி பூஜையின் பலனை ஆயிரம் நாவைக் கொண்ட ஆதிசேஷனாலும் அளவிட்டுக் கூற முடியாதாம், அந்த அளவுக்கு நற்பலன்கள் கிடைக்குமாம்.
நாள் |
சிறுமி வயது |
தேவதா பெயர் | பூஜா பலன் |
1 | 2 | குமாரிகா | தரித்திர நாசம் |
2 | 3 | திரிமூர்த்தி | தன தான்ய வளம் |
3 | 4 | கல்யாணி | பகை ஒழிதல் |
4 | 5 | ரோகிணி | கல்வி வளர்ச்சி |
5 | 6 | காளிகா | துன்பம் நீங்குதல் |
6 | 7 | சண்டிகா | செல்வ வளர்ச்சி |
7 | 8 | ஸாம்பவி | ஷேம விருத்தி |
8 | 9 | துர்க்கா | பயம் நீங்குதல் |
9 | 10 | ஸுபத்ரா | ஸர்வ மங்களம் உண்டாதல் |
பரிசுப் பொருட்களுக்கான யோசனைகள்:
ரவிக்கைத் துணி, ஸ்டிக்கர் பொட்டு, மருதாணி கோன், ஹேர் பாண்ட், கிளிப்கள், சிறிய பூஜை புத்தகங்கள், சிறிய கண்ணாடி, சீப்பு, கண் மை, ஐப்ரோ பென்சில், ஐ லைனர், சிறிய லேடீஸ் கர்சீப்கள், பேனா, பென்சில்கள், ஸ்டேஷனரி பொருட்கள், குளிக்கும் சோப்கள், லிக்விட் சோப்கள், சென்ட் பாட்டில்கள், பார்பி பொம்மைகள், அலங்காரப் பொருட்கள் போன்றவை.
தினமும் இரவு படுக்கப் போகு முன், மஞ்சள் பொடி, சுண்ணாம்பு கலந்த ஆரத்தி எடுக்க வேண்டும். இதை, கால் படாத இடத்தில்(செடியின் கீழ்) ஊற்றி விட வேண்டும். தெய்வத்துக்கு எடுக்கும் ஆரத்தியை, கால் படாத இடத்தில் ஊற்ற வேண்டும். மனிதர்களுக்கு எடுக்கும் ஆரத்தியை, வாசலில் கோலத்தில் ஊற்ற வேண்டும்.
ஒன்பது நாட்களும் கொலுவின் முன்னால் ஒன்பது வகையான கோலங்கள் இடலாம். அவை என்ன மாதிரியான கோலங்கள், எதனைக் கொண்டு கோலமிடுவது என்ற பட்டியலை கீழே தந்துள்ளேன்.
நாள் 1 - அரிசி மா - பொட்டுக் கோலம்
நாள் 2 - கோதுமை மா - கட்டம்
நாள் 3 - முத்து - மலர் வடிவம்
நாள் 4 - அட்சதை - படிக்கட்டு
நாள் 5 - கடலை - பறவையினம்
நாள் 6 - பருப்பு - தேவி நாமம்
நாள் 7 - மலர் - திட்டாணி
நாள் 8 - காசு - பத்மம்(தாமரை)
நாள் 9 - கற்பூரம் - ஆயுதம்
ஒன்பது நாட்களிலும் வீட்டுக்கு வரும் சுமங்கலிப் பெண்களுக்கும், கன்னிப் பெண்களுக்கும் அவர்கள் நீராடுவதற்காக பச்சிலை, பூலாங்கிழங்கு, சண்பக மொட்டு, கஸ்தூரி மஞ்சள், திரவியப் பட்டை, காசுக்கட்டி, லாஷாரசம், கஸ்தூரிகாபத்ரம், கோரோசனம் மற்றும் எண்ணெய், மஞ்சள், குங்குமம், பன்னீர், சந்தனம், வாசனைத் தைலம், நலங்கு மஞ்சள், மருதோன்றி, புஷ்ப நீர் இவற்றில் எதெல்லாம் கொடுக்க முடிகிறதோ அவற்றைக் கொடுக்கலாம்.
தாம்பூலத்துடன் வாழை, மாம்பழம், பலா, கொய்யா, மாதுளை, நாரத்தை, பேரீச்சைப் பழம், திராட்சை, நாவற்பழம் இவற்றை அனைவருக்கும் கொடுக்கலாம்.
நவராத்திரி ஒன்பது நாட்களும், அக்கம்பக்கத்தில் இருக்கும் பெண்கள், குழந்தைகளை நம் வீட்டுக் கொலுவுக்கு வரும்படி அழைக்க வேண்டும்.
குழந்தைகளுக்கு நல்ல உடை உடுத்தி, கையில் சந்தனம், குங்குமம் கொடுத்து, மற்றவர்களை அழைக்கச் சொல்லலாம்.
குழந்தைகளுக்கு ராதை கண்ணன், ஆண்டாள், கிமானோ ட்ரஸ் இப்படியெல்லாம் வேடம் போட்டு விடலாம்.
பட்டுப்பாவாடை உடுத்தி, தலையில் பூ தைத்து விடலாம். நவராத்திரியின் போது, தினமும் வீட்டுக்கு வரும் பெண்கள், குழந்தைகளுக்கு எந்த விதமான வித்தியாசமும் இல்லாமல், தாம்பூலமும் நைவேத்திய பிரசாதமும் கொடுக்க வேண்டும். வீட்டில் வேலை செய்யும் பணிப்பெண்களுக்கும் தாம்பூலம், பரிசு வழங்க வேண்டும். வித்தியாசம் பார்க்கக் கூடாது.
நவராத்திரியின் ஒன்பது நாட்களுக்குமான நைவேத்தியங்கள் என்ன செய்யலாம், எப்படி செய்யலாம் என்பதை அடுத்த பாகத்தில் பார்க்கலாம்.
நவராத்திரி - கொலு வைக்கும் முறை முதல் பாகத்தில் விளக்கப்பட்டுள்ளது.
Comments
நவராத்திரி
அடுத்த பாகம் எப்போ என்று காத்திருக்கிறேன் சீதா. ஆரத்தி எங்கே ஊற்றுவது என்பதெல்லாம் கூட எனக்குத் தெரியாத விடயங்கள். நான் வரப்போறேன் கொலுவுக்கு. ஆசையா இருக்கு உங்கள் இடுகையைப் படிக்க.
- இமா க்றிஸ்
seethamma
நானும் கொலு வைக்கிறேன் அம்மா. இந்த பதிவு எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. அடுத்த பதிவிற்காக காத்துக் காெண்டிருக்கிறேன்..
இதுவும் கடந்து போகும்..
அன்புடன்
ரேவதி உதயகுமார்
சீதா
திட்டாணி என்றால் என்ன?
- இமா க்றிஸ்
திட்டாணி என்றால்
அன்பு இமா,
பாராட்டுக்களுக்கு நன்றி.
திட்டாணி என்றால் மலர்களால் போடப்படும் கோலம். பெரும்பாலும் வெள்ளை மலர்களால் கோலம் இடுவார்கள்.
அன்புடன்
சீதாலஷ்மி
அன்பு ரேவதி
அன்பு ரேவதி,
வருகைக்கும் பதிவுக்கும் நன்றி.
அன்புடன்
சீதாலஷ்மி
திட்டாணி
நன்றி சீதா. :-) எனக்கு அவசியம் இல்லாத விடயம். ஆனால் நிறையக் கற்றுக் கொள்கிறேன் உங்கள் இடுகையிலிருந்து. வெகு சிலரது ஆன்மீகக் கட்டுரைகள் தான் என்னைக் கவரும். :-) உங்களது அவற்றுள் ஒன்று. என் பொது அறிவு வளர்கிறது.
- இமா க்றிஸ்