இந்தோனேஷிய அனுபவங்கள் - பகுதி 5

Pura Agung Amertha Buana

இந்தோனேஷியா மக்கள் தொகையில் பெரும்பான்மையானவர்கள் இஸ்லாமியர்கள். உலகிலேயே அதிக இஸ்லாமிய மக்கள்தொகை கொண்ட நாடு. சீனர்களும் இருக்கிறார்கள். இங்கே பாலி தீவுகளில் மட்டும் இந்துக்கள் பெரும்பான்மை மக்கள். மேடான் என்னும் இடத்தில் இந்திய வம்சாவழியினர் குறிப்பாக தமிழர்கள் அதிக எண்ணிக்கையில் இருக்கின்றனர். மேடானில் மட்டும் சுமார் 40 தமிழர் முறைப்படி அமைந்த கோவில்கள் இருக்கின்றன. பாலி இந்துக்களின் கோவில்களை புரா (Pura) என்றும் தமிழர்கள் முறைப்படி அமைந்த கோவில்களை குய்ல் (Kuil) என்றும் அழைக்கின்றனர். 
 
பாலி தீவை சேர்ந்த இந்துக்கள் குறைந்த எண்ணிக்கையில் பத்தாம் தீவில் வசிக்கின்றனர். அவர்களின் வழிபாட்டிற்காக பத்தாமின் “செய் லாடி” (Sei Ladi) பகுதியில் “புரா அகுங் அமிர்த புவனா கோவில் (Pura Agung Amertha Buana) அமைக்கபட்டுள்ளது. பத்தாமின் நகர  பகுதியான நகோயா (Nagoya) வில் இருந்து 10 நிமிட பயண தூரத்தில் இருக்கிறது.

கார் நிறுத்துமிடத்தில் இருந்து 54 படிக்கட்டுகள் நம்மை இக்கோவிலுக்கு இட்டுச் செல்லும். கார் நிறுத்தும் இடத்திலேயே ஒரு உணவகமும் இருக்கிறது. இந்தோனேஷிய உணவு வகைகள் கிடைக்கும்.

மேரு மலையை மத்தாகவும் வாசுகி நாகத்தை கயிறாகவும் கொண்டு பாலாழி கடைந்து அமிர்தம் எடுத்த அமைப்பில் இந்த கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் நமது ஊரில் அமைந்துள்ள ஆலயங்கள் போல் அல்லாமல் ஒரு கோபுரம் போன்ற அமைப்பு (மேரு மலை) அதைச் சுற்றி வாசுகி நாகம், மேலே ஏறிச்செல்ல படிக்கட்டுகள். வேறு சாமி விக்ரகங்கள் ஏதும் கிடையாது. முன்புறம் ஒரு  மண்டபம். அதில் இறைவனுக்கு படைக்க பழங்கள் மற்றும் பூக்கள். ஊதுபத்தி ஏற்றி வழிபடுவார்கள். 

பாலி இந்துக்கள் விநாயகர், சரஸ்வதி தேவி, விஷ்ணு, சிவன் என இந்து தெய்வங்களை வணங்குவர். இந்த பாலி கோவிலில் ஆதிவிநாயகர் சிலையை வைத்தும் வழிபட ஆரம்பித்தனர். 2002 அல்லது 2003ம் ஆண்டுகளில் நாங்களும் அங்கே சென்று வழிபட ஆரம்பித்தோம். பாலி இந்துக்கள் பாலினீஸ் மொழியில் இறைவனை வழிபடுவதோடு காயத்ரி மந்திரமும் தமிழில் விநாயகர் அகவலும் அருமையாக சொல்வார்கள். ஆனால் தமிழில் ஒரு வார்த்தை கூட அவர்களுக்கு தெரியாது. இப்படி எல்லா வெள்ளி கிழமைகளும் இந்தியர்களும் அங்கே சென்று வழிபட ஆரம்பித்தோம். 

ஒருநாள், நமது முறையிலும் வழிபடும் வகையில் அந்த ஆதி விநாயகருக்கு ஆலயம் அமைக்கலாமா என்ற எண்ணம் இந்தியர்களுக்கு வந்தது. பாலி இந்துக்களோடு ஆலோசனை செய்த போது அவர்களும் சம்மதித்தார்கள். அரசின் அனுமதி பெறவும் உதவி செய்தார்கள். விநாயகர் ஆலயமாக அமைக்க எண்ணி பின்னர் மஹா லலிதா திரிபுரசுந்தரி அம்மனையும் பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்று முடிவு செய்து பத்தாமில் வாழும் இந்தியர்கள் மற்றும் சிங்கப்பூர் மலேஷியா பக்தர்களின் நிதி உதவியோடு 2005ம் ஆண்டு கோவில் கட்டி கும்பாபிஷேகம் செய்தோம். தமிழகத்தை சேர்ந்த திரு. பிரகாஷ் அவர்கள் இந்த கோவிலை நிர்வகித்து வருகிறார். புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை என்பதால் கோவிலின் புகைப்படம் சேர்க்கவில்லை.

பத்தாமில் வாழும் இந்தியர்களுக்கு இந்த கோவில் வழிபடவும், வெள்ளிக்கிழமைகளில் வழிபாட்டோடு நண்பர்கள் ஒருவரையொருவர் சந்திப்பதற்கும் அருமையான இந்திய உணவு உண்ணவும் குழந்தைகள் ஓடியாடி விளையாடும் இடமாகவும் அமைந்தது. 2005 காலகட்டத்தில் பத்தாமில் வீட்டைத் தவிர வேறு எங்கும் இந்திய உணவு கிடைக்காது. பேச்சிலர்கள் வெள்ளிக்கிழமைகளுக்காகவே காத்திருப்பார்கள். கோவில் அமைந்த ஆரம்ப கால கட்டங்களில் நாங்கள் சில பெண்கள் சேர்ந்து சுமார் 30 பேருக்கு சமையல் செய்வோம். கோவிலின் எல்லா பணிகளையும் செய்வோம். ஒருவரோடொருவர் பேசிக்கொண்டும் சிரித்துக் கொண்டும் வேலை செய்வது தெரியவே செய்யாது. அப்போது எங்களுக்கு அது ஒரு ரெஃப்ரெஷ்மென்ட். பேச்சிலர்களுக்கு சுவையான உணவு. மனதிற்கும் புத்துணர்ச்சி. இப்போது பணியாட்கள் இருக்கிறார்கள்.

இந்துக் கோவில் மட்டும் இல்லை. இந்திய கிறிஸ்தவர்களுக்கும் அங்கே உள்ள தேவாலயங்களில் தனி பிரார்த்தனைகள் நடக்கும். அங்கேயும் சென்று வாலன்டியர்களாக பணிகள் செய்வோம். நிதி வசூலிக்க உணவு திருவிழா நடத்துவார்கள். அப்போது அங்கே சென்று கடை போட்டு விடுவோம். மிளகாய் பஜ்ஜி, உருளை பஜ்ஜி, பூரி கிழங்கு, தோசை. இட்லி சாம்பார் சட்னி என ஆளுக்கொன்றாக சமைப்போம். பிலிப்பினோக்கள், தாய்லாந்து மக்கள் மற்றும் ஐரோப்பியர்களும் ஸ்டால் வைத்திருப்பார்கள். ஆனால் நமது கடைகளில் தான் கூட்டம் மொய்க்கும், இந்தியர்கள் பஜ்ஜி கடையை மொய்க்கும் போது பிற இனத்தவர்கள் தோசைக்கடையில் டேரா அடித்து விடுவார்கள். அதிக வசூல் இந்தியர்களின் கடைகளில்தான். அத்தனை பணமும் சமூகசேவைக்கு அளிக்கப்படும்.

மொத்தத்தில் இந்தியர்கள் ஒன்று சேர்ந்து கொண்டாட எந்த வாய்ப்பு கிடைத்தாலும் விடுவதில்லை. தமிழர், மலையாளி, தெலுங்கர், ஹிந்திகாரர் என்ற பாகுபாடெல்லாம் அப்போது இருந்ததில்லை. ஏனென்றால் அப்போது பத்தாமில் வாழ்ந்த இந்தியர்களின் எண்ணிக்கை குறைவு. அதில் தமிழர்கள் எண்ணிக்கை சற்று அதிகம். இந்தியர்கள் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கிய போது மொழிவாரி பிரிவினையும் கொஞ்சம் வந்து விட்டது.

இந்த கோவில் குன்றின் மீது இருப்பதால் அங்கே இருந்து பார்த்தால் சிங்கப்பூரின் உயரமான கட்டிடங்கள் தெரியும். அன்றைய காலகட்டத்தில் இப்போது போல வாட்சப்பில் சொந்தங்களை அழைத்து பேச முடியாது. இந்தோனேஷியாவிலிருந்து இந்தியாவுக்கு பேச கட்டணம் மிக அதிகம். அதனால் சிங்கப்பூர் சிம் வாங்கி தொலைபேசி அட்டைகளும் (Calling cards) வாங்கி வைத்துக்கொள்வோம். இந்த கோவிலில் நிற்கும்போது சிங்கப்பூர் சிக்னல் கிடைக்கும். அங்கே இருந்து உறவினர்களை அழைத்து பேசுவோம். இப்போது நினைத்தவுடன் வாட்சப்பில் பேச முடிகிறது. ஒருவாரம் காத்திருப்பிற்கு பின் பேசும் போது கிடைக்கும் மகிழ்ச்சியை வார்த்தையில் சொல்ல முடியாது. கோவிலுக்கு போவது என்ற ஒற்றைக்கல்லில் பல மாங்காய்கள் அடிப்போம்.

காலையிலேயே எதுவும் சாப்பிடாமல் கோவிலுக்கு வந்துட்டோம். பிரசாதம் சாப்பிட்டாலும் பசிக்குமே. இந்தோனேஷியாவின் பிரபலமான உணவுகள் மற்றும் பத்தாமில் பிரபலமான உணவுவிடுதிகள் இவைகளைப் பற்றி அடுத்த பாகத்தில் பார்க்கலாம்.

- கவிசிவா

 

இந்தோனேஷிய அனுபவங்கள் - பகுதி 4

Comments

அருமை அருமை இந்தோனேஷிய தமிழர் கோயில் அனுபவம் மிக அருமை. எங்களை நேரிலேயே அழைத்து சென்று காட்டியதுபோல இருந்தது. மிக்க நன்றி.

கட்டுரை அருமை கவி.

கான்ஸ் போயிருந்த சமயம் தான் முதல் முதலில் பாலினீஸ் உணவு சாப்பிட்டேன். பிடித்திருந்தது. மீண்டும் போக நினைத்தேன், கிடைக்கவில்லை. ஒரு இரவு பாலினீஸ் விடுதியில் தங்கினோம். அவர்களது கலாச்சாரத்தை ஓரவு புரிந்துகொள்ள முடிந்தது. மேலும் அறிந்துகொள்ள வேண்டும் என்று நினைத்திருந்த சமயம் உங்கள் தொடர் கட்டுரை வெளியாக ஆரம்பித்தது. மிக்க நன்றி.

‍- இமா க்றிஸ்

நன்றி ரேணு!
//எங்களை நேரிலேயே அழைத்து சென்று காட்டியதுபோல இருந்தது. //

எனக்கும் மீண்டும் அங்கேயே சென்ற உணர்வு :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

நன்றி இமாம்மா!
இந்திய கலாச்சாரம் போலவே இந்தோனேஷியாவிலும் அந்தந்த மாநிலங்களுக்கான உணவு மற்றும் கலாசாரம் வேறுபாடானவை. இந்தியர்களின் உடை என பொதுவாக புடவையை சொன்னாலும் உடுத்தும் விதத்தில் வித்யாசம் உண்டு. அது போலவே அவர்களிடயேயும் வித்யாசங்கள் உண்டு. நாம் ஒருவரை பார்த்ததும் இந்த மாநிலத்துக் காரர்கள் என்று சொல்வதைப் போல அவர்களும் அவர்களிடையே கண்டுபிடித்து விடுவார்கல். நமக்கு எல்லோரும் ஒரு போலவே இருப்பார்கள் :)

பாலினீஸ் உணவுகள் எனக்கும் பிடிக்கும்.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

கோவில் அனுபவம் சூப்பர். உங்கள விட சூப்பர் கைட் வேற எங்கயும் கிடைக்கமாட்டாங்க :) .

Be simple be sample

நன்றி ரேவ்ஸ்! கைடா போயிடலாமோ... திங்கிங் :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!