இந்தோனேஷிய அனுபவங்கள் - பகுதி 8

batam pulau galang

பரேலாங் பாலத்தின் கடைசி தீவான காலாங் தீவில் உள்ள ஒரு வரலாற்று சுற்றுலா தளம் வியட்னாம் வில்லேஜ் எனப்படும் வியட்னாம் அகதிகள் முகாம். வியட்னாமில் உள்நாட்டு போர் நடந்த காலகட்டங்களில் மக்கள் அங்கிருந்து புகலிடம் தேடி கப்பல்களில் வந்தார்கள். சிலர் வரும் வழியிலேயே மடிந்து விட சிலர் இந்தோனேஷிய தீவுகளில் கரை சேர்ந்தனர். பாதுகாப்பு காரணங்களுக்காக 1979ல் ஐநா வும் இந்தோனேஷிய அரசும் இணைந்து காலாங் தீவில் அந்த மக்களுக்கான முகாம் அமைத்தது, பள்ளி மருத்துவமனை, வழிபாட்டுத்தலங்கள் என சகல வசதிகளுடன்  வெளியுலகிலிருந்து முற்றிலுமாக பிரித்து வைக்கப்பட்டிருந்தனர். 2,50,000 அகதிகள் அந்த முகாமில் இருந்தனர். 1979லிருந்து 1995 வரை 16 ஆண்டுகள் அந்த முகாம் செயல் பட்டது. பலரும் பிறநாடுகளின் குடியுரிமை பெற்று சென்றுவிட்டனர். தற்போது அந்த பகுதி நினைவுச்சின்னமாக பாதுகாக்கப் படுகிறது. அந்த முகாமில் தங்கியிருந்தவர்களும் அவர்களின் வாரிசுகளும் அவ்வப்போது இங்கே வந்து செல்கின்றனர். 

பத்தாமில் கடலோர ரிசார்ட்டுகள் அதிகம். அவற்றில் முக்கியமானவை நோங்சா பாய்ன்ட் அன்ட் மரினா ரிசார்ட்(Nongsa point and Marina Beach Resort), தூரி பீச் ரிசார்ட்(Turi Beach Resort), ஹாரிஸ் ரிசார்ட்(Harris Resort), பத்தாம் வியூ பீச் ரிசார்ட்(Batam Beach View Resort), கேடிஎம் பீச் ரிசார்ட்(KTM Beach Resort), சிஜோரி பீச் ரிசார்ட்(Sijori Beach Resort)… இன்னும் பல ரிசார்ட்டுகள் இருக்கின்றன. 

 Beach

இந்த ரிசார்ட்டுகள் அனைத்திலுமே நீர் விளையாட்டுகளான வாட்டர் ஸ்கூட்டர், பாரா க்ளைடிங், வாட்டர் ஸ்கீயிங் என சாகச விளையாட்டு பிரியர்களுக்கு ஒரே கொண்டாட்டம்தான். ஐயோ இதெல்லாம் எனக்கு பயம்னு சொல்ற என்னை மாதிரி ஆட்களுக்கு இருக்கவே இருக்கிறது பீச். பீச் னு சொன்னதும் மெரினா பீச் மாதிரி ஆர்ப்பரிக்கும் அலைகள் அடிக்கும்னு நினைச்சுடாதீங்க. அமைதியான  கடல். லேசான அலைகள் காலை ஸ்பர்சிக்கும். கடலில் இறங்கி பயமின்றி குளிக்கலாம். ஆனால் இந்த பகுதியில் கப்பல் போக்குவரத்து அதிகம் என்பதால் கடல் தண்ணீரில் சில நேரங்களில் எண்ணெய்ப்படலங்கள் மிதக்கும். ஏராளமான சிப்பிகள் கிடைக்கும். சிப்பிகள் சேகரித்துக் கொண்டே கடலில் ஆட்டம் போடலாம்.

இந்த ரிசார்ட்டுகளில் தங்கினால் நீச்சல் குளத்தில் ஆட்டம் போடலாம். ஆனால் நீச்சல் உடை கட்டாயம். இதெல்லாம் வேண்டாம் முழுவதுமாக ரிலாக்ஸ் செய்ய வேண்டும் என்றால் பாடி மசாஜ் செய்யலாம். நிச்சயம் இந்த இடம் பாதுகாப்பானது. தாய்லாந்து போலவே இந்தோனேஷியாவும் மசாஜுக்கு பிரபலம். ஒருமுறை மசாஜ் செய்தால் உங்கள் உடலை அவ்வளவு இலேசானதாக உணர்வீர்கள். 

ரிசார்ட்டுகளில் தங்கவில்லை, பத்தாம் நகரப்பகுதிகளில் உள்ள ஹோட்டலில் தங்கினாலும் பாதுகாப்பான மசாஜ் நிலையங்கள் உள்ளன. பெண்களுக்கு நான் பரிந்துரைப்பது “Mustika Ratu” அல்லது “Tiara Mustika”. இவை இரண்டும் அழகு நிலையங்கள். இந்தோனேஷியாவில் பிரபலமனவை. பாதுகாப்பானவை. இல்லை எனக்கு உடல் மசாஜ் வேண்டாம் என்றால் தலைக்கு மட்டும் செய்து கொள்ளலாம். என்னடா மசாஜ் பண்ணாம விட மாட்டேங்கறாளே ன்னு நினைக்கறீங்களோ . அவ்வளவு ரிலாக்சிங் ஆக இருக்கும். பத்தாமில் இருந்த வரை மாதம் ஒருமுறை தலை மட்டுமாவது மசாஜ் செய்து விடுவேன். ஃபுட் ரிஃப்ளெக்சாலஜி எனப்படும் கால் மசாஜும் பிரபலம். 

 Golf and Country clubs

கை வேக்சிங் கால் வேக்சிங் கேள்வி பட்டிருப்பீங்க. காது வேக்சிங் தெரியுமா. நம்மை சரிந்து படுக்க சொல்லிவிட்டு. காதில் அதெற்கெனவே செய்யப்பட்ட  ஹாலோ கேன்டிலை காதில் சொருகி அந்த கேண்டிலை பற்ற வைத்து விடுவார்கள். அது எரிந்து கொண்டிருக்கும் போதே காதைச் சுற்றியும் கன்னப்பகுதியிலும் இலேசாக மசாஜ் செய்வார்கள். காதில் உள்ள அழுக்குகள் கேன்டிலின் உள்ளே சேர்ந்து விடும், வித்தியாசமான அனுபவமாக இருக்கும்.
 
எங்களுக்கு பிடித்த இன்னொரு ப்ரைவேட் பீச் பாம் ஸ்ப்ரிங் கோல்ஃப் அன்ட் கன்ட்ரி க்ளப்(Palm Spring Golf and Country Club). அமைதியான பீச். ஏகாந்தமாக இருக்க வேண்டும் என்றால் இங்கே செல்வோம். பீச் சைட் சேரில் படுத்துக்கொண்டு வானையும் கடலையும் பார்த்துக் கொண்டே இருந்தால் நம்மையே மறந்து விடுவோம். எங்களையும் சில ஊழியர்களையும் தவிர யாரும் இருக்க மாட்டார்கள். கோல்ஃப் கோர்சை பேட்டரி காரில் சுற்றிவருவது எனக்கு பிடித்தமான விஷயம்..
ரிசார்ட்டுகளில் தங்கினால் நகர பகுதிகளில் சுற்றிவருவது சற்று சிரமம். காரணம் ரிசார்ட்டுகள் எல்லாமே நகரத்தில் இருந்து குறைந்தது 1மணிநேரமாவது பயணம் செய்ய வேண்டி இருக்கும். அதனால் ரிலாக்சிங் செய்ய வருபவர்கள் மட்டுமே ரிசார்ட்டுகளில் தங்குவது நல்லது. சுற்றிப்பார்க்க விரும்புபவர்கள் நகரில் உள்ள ஹோட்டல்களில் தங்குவது நல்லது.

இன்னிக்கு நிறைய இடம் சுற்றிப் பார்த்தச்சு. நல்லா ரெஸ்ட் எடுத்துட்டு வாங்க நாளை புத்தர் கோவிலுக்கு செல்லலாம். 

- கவிசிவா

இந்தோனேஷிய அனுபவங்கள் - பகுதி 7

Comments

ஆஹா! அடுத்த பாகம் நாளையா! சூப்பர் ஸ்பீட்ல போறீங்க கவீஸ்.

‍- இமா க்றிஸ்

நன்றி இமாம்மா! இப்போ கொஞ்சம் ஸ்லோ ஆயிட்டேன் :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

என்னம்மா மசாஜ் பண்ணறேன் சுத்தி காண்பிக்கிறேன்னு காதுல மெழுகுவர்த்தி ய விடறீங்க.

Be simple be sample

ஹா ஹா... மசாஜ் பண்ணினதை மறந்துட்டீங்களே :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!