வயிற்று வலி

எனக்கு ஒரு வருடமாக அடிக்கடி மேல் வயிற்றில் வலி வருகிறது. மருத்துவரிடம் காண்பித்து எல்லாம் ஒன்றும் இல்லை வெறும் காஸ்டிரிக் அல்சர் தொந்திரவு தான். வேறு பிரச்சனை இல்லை என்று மருந்து கொடுத்திருக்கிறார்கள்.இருந்தாலும் அடிக்கடி வலி வருகிறது. இதற்க்கு நிரந்தர தீர்வு இல்லையா? என்னால் வலி வரும்பொழுது என் மகன்களையும் கவனித்துக் கொள்ள முடியவில்லை.பதில் கூறுங்கள் தோழிகளே.

மருந்தை ஒரு வருடமாகத் தொடர்ந்து எடுக்கிறீர்களா? மருத்துவரிடம் திரும்பப் போய்க் கேட்கவில்லையா? ஒரு தடவை போய், 'மருந்து எடுத்தும் இப்படி ஆகுகிறது,' என்பதைச் சொல்லுவது 'அவசியம்' என்று எனக்குப் படுகிறது.

அல்சருக்கு மாத்திரை எடுப்பது மட்டும் போதாது. உங்கள் உணவுப் பழக்கத்தில் பெரிய மாற்றம் வேண்டும். அதுதான் 'நிரந்தரத் தீர்வு'.

வயிற்று வலி அல்சருக்கு மட்டும் தான் வரும் என்பது இல்லை. பயப்பட வேண்டாம். ஒரு எச்சரிக்கைக்காகச் சொல்கிறேன். கான்சருக்கும் ஆரம்பத்தில் அல்சர் போலவே தான் குணாதிசயங்கள் காட்டும். ஈஸியாக எடுக்காமல் ஒரு முறை போய்க் கேட்டுவிட்டு வந்துவிடலாம்.
¬¬¬¬¬¬¬
இழைத் தலைப்பை 'வயிற்றுவலி' என்று மாற்றி விடுங்கள்.

‍- இமா க்றிஸ்

என் இளைய மகனுக்கு 1 வயது 4 மாதம் ஆகிறது. அறுவை சிகிச்சை செய்தது தொற்று ஏற்பட்டு மிகவும் சிரமப்பட்டு பிழைத்தேன். அப்போது கொடுக்கப்பட்ட வீரியமான மருந்தினால் வயிற்றில் புண் உள்ளது. சரியான உணவு முறை இல்லாமல் அது இப்படி தொல்லை கொடுக்கின்றது என்று மருத்துவர் கூறுகின்றார்.தற்போது அவற்றை 1 வாரமாக பின்பற்றி வருகின்றேன். வலி சிறிதளவு குறைந்திருக்கிறது. பதில் அளித்ததற்கு நன்றி அம்மா .

எனக்கு மருத்துவமனையில் நான்கு வாரங்கள் அடியோடு உணவே இல்லாமல் இருந்தது தான் ஆரம்பித்து வைத்தது. பிறகு மாத்திரைகள். சேலைன் இரைப்பையை நிரப்பாது. :-) என்ன செய்வது! ஒன்றுக்கு விலையாக இன்னொன்றைக் கொடுத்துத் தானே ஆகவேண்டும்!

அப்போது சரியாகப் பிடிபடவில்லை. சாப்பாட்டில் ஏதோ ஓரிரண்டு விடயங்களை மட்டும் கவனித்துக் கொண்டு மீதி உணவுகள் குழப்பி வைக்க ஜெலுசில் போட்டுக் கொண்டு காலம் கடத்தினது வீண். சிம்பிளாக ஒரு தீர்வு இருந்திருக்கிறது எனக்கு. புரிந்துகொள்ளாமல் அவஸ்தைப்பட்டிருக்கிறேன். :-) இங்கு வந்த பின்னால் எப்போ காணாமல் போனதென்றே தெரியவில்லை. ஒரே காரணம் எண்ணெய் & காரம் சேர்ப்பது குறைந்து போனது. தேவை & தேவையின்மை கருதி தன்னால் மாறிய உணவுப் பழக்கம் எனக்கு உதவி இருக்கிறது.

இன்னொரு விஷயம் உணவைப் பின் போட வேண்டாம், வயிற்றைக் காய விட வேண்டாம். 3 வேளை மட்டும் உண்பதை விட சின்னச் சின்னதாகப் பிரித்து உள்ளே அனுப்புவது நல்லது. அமிலத் தாக்கம் குறைவாக இருக்கும். நான் எங்கு பயணப்பட்டாலும் ஒரு பிஸ்கட் பாக்கெட்டாவது வைத்துக் கொள்வேன். முகமன் பார்ப்பதில்லை. நல்ல கடை தேடி மற்றவர்கள் காத்திருப்பார்கள். காரணத்தைச் சொல்லி ஒரு மன்னிப்புக் கோரி விட்டு நான் சாப்பிட ஆரம்பித்துவிடுவேன். மற்றவர்களிடம் நீட்டுவேன். புரிந்துகொண்டு விட்டுவிடுவார்கள். எனக்கு வதைப்பு ஆரம்பித்தால் அது கூடப் பயணிப்பவர்களையும் தான் பாதிக்கும்.

வலி குறைகிறது என்று விட்டுவிட வேண்டாம். முற்றாக நிறு போனதாகத் தெரிந்தாலும் என்றோ ஒரு நாள் ஒரு வேளை உணவு மீண்டும் பிரச்சினையை ஆரம்பித்து வைக்கலாம். குறைந்தது இரண்டு வருடங்கள் சிரமம் இல்லாமல் கடத்த முடிந்தால் பிறகு உங்களுக்கே புரியும் எதைச் செய்தால் நல்லது என்பது. பிரச்சினை இல்லாமல் காலம் போகும். எனக்கு இப்போ அடியோடு சிரமம் இல்லை. எத்தனை நிம்மதியான விடயம் இது!

‍- இமா க்றிஸ்

உண்மை தான் அம்மா .என் உணவுப் பழக்கம் மற்றும் நேரம் கடத்தி உணவு உண்பது என்று என் உடல் நிலையை நானே கெடுத்துக் கொண்டேன்.ஆனால் நல்ல பாடம் கற்றுக் கொண்டேன் வலியோடு!மருத்துவரும் அதையே கூறினார். உங்கள் பதிலால் ஒரு மன அமைதி ,தெளிவு கிடைக்கிறது.அதனால் தான் உங்கள் பதிலை எதிர்பார்த்தேன்.எனக்கு வீட்டில் இதைப் பற்றி பேச ஆள் இல்லை. பதிலுக்கு மிக்க நன்றி அம்மா..

மேலும் சில பதிவுகள்