குழந்தை குறித்து

எனக்கு 30வயதாகிறது. திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள்.
எனது கணவரின் தம்பிக்கு திருமணம் ஆகி மூன்று ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை. அவரது மனைவியை பரிசோதித்த டாக்டர் அவரால் குழந்தை பெற முடியாது என்று கூறிவிட்டார்.

அவருக்கு வேறு திருமணம் செய்ய முயற்சி செய்து வருகின்றனர்.

இதனைத் தடுக்க ஏதாவது செய்ய முடியுமா

சட்டப்படி விவாகரத்து ஆகாமல் எப்படி இன்னொரு திருமணம்!

நீங்கள் உங்கள் சகலைக்கு என்ன பிரச்சினை என்பதைச் சொல்லவில்லை. செயற்கைக் கருத்தரிப்பும் பயன்படாது என்பது மருத்துவர்களது அபிப்பிராயமா! மருத்துவர்கள் சொல்லும் காரணம் என்ன?

‍- இமா க்றிஸ்

கொழுந்தனுக்கு உடல்ரீதியாக எந்த பிரச்சனையும் இல்லை.அவரது மனைவியை பரிசோதித்த டாக்டர் அவரது கருப்பை சிதைவு நோய் காரணமாக அவரால் தாய்மை அடைய முடியாது என்று கூறிவிட்டார்.

இதனால் வீட்டில் என் கணவரிடம் பேசி அவரது தம்பி sperms எனக்கு தந்து (artificial insemination)கருவை உருவாக்க வேண்டும் என்று கூறுகிறார்கள்.
கணவரும் தனது தம்பி மலடன் இல்லை என்று நிரூபிக்க என்னை பயன்படுத்தி கொள்ள சொல்கிறார்கள்.

அன்புச் சகோதரிக்கு,

இன்னொருவர் பயன்படுத்திக்கொள்ள நீங்கள் பொருள் அல்ல. உயிர்.

உங்கள் உடல், உங்கள் உடமை. உங்கள் வாழ்க்கை, உங்கள் தனிப்பட்ட உரிமை. நீங்கள் மேலே சொல்லியுள்ள விடயம் பற்றி - இன்னொருவர் - அவர் உங்கள் கணவரோ தாயோவாக இருந்தாலும் கூட - தீர்மானிக்க உரிமை கிடையாது. நீங்களாக மனமுவந்து, தெளிந்த சிந்தனையுடன் முடிவு எடுபீர்களானால் தொடர்ந்து செல்லலாம். உங்களுக்கு அதற்கான மனவலிமை போதாது என்று தோன்றுகிறது. அது இருந்திருந்தால் இங்கு வந்து கேளாமல் நீங்களாகவே உங்கள் கணவரிடம் உங்கள் முடிவு எதுவாக இருந்தாலும் சொல்லியிருப்பீர்கள்.

உங்கள் கணவர் வேறு நீங்கள் வேறு. மணமான காரணத்தால் கணவர் / அவரது வீட்டார் சொல்லும் அனைத்திற்கும் உடன்படவேண்டியது இல்லை. அப்படி உடன்பட்டு ஆகவேண்டும் என்று எந்தச் சட்டமும் சொல்லாது. உங்கள் இஷ்டத்துக்கு விரோதமாக நீங்கள் எதையும் செய்யத் தேவையில்லை.

ஆனால், அரை மனதாக செயற்கைக் கருத்தரிப்பு என்று போவீர்களானால், பிற்பாடு, அவர்கள் உங்களை வற்புறுத்தினார்கள் என்று ஒரு போதும் சட்டத்தின் உதவியை நாட முடியாது. எதற்காக இதைச் சொல்கிறேன் என்றால், குழந்தைக்கு எல்லாவிதத்திலும் 'தாய்' நீங்களாக இருப்பீர்கள். அது உங்கள் கருமுட்டையிலிருந்து உருவாகப் போகும் குழந்தை. உங்கள் / உங்கள் பெற்றோர் & சகோதரர்கள் குணாதிசயங்களைக் கொண்டிருக்கும். அதற்கு மேல்... நீங்கள் மசக்கை & மீதி உடல் உபாதைகள் அனைத்தையும் அனுபவிக்கப் போகிறீர்கள். அதோடு உங்கள் வாழ்க்கையையும் குடும்பத்தையும் சேர்த்துப் பார்த்துக் கொள்ளப் போகிறீர்கள். கடைசியில் பிரசவம், அதன் சிரமங்கள் அல்லது சிசேரியன் என்றால் அது தொடர்பான அனைத்தையும் அனுபவிக்கப் போகிறீர்கள். நீங்கள் பாலூட்டி வளர்க்கப் போகிறீர்கள்! குழந்தையை வேண்டாம் என்று அவர்களுக்கே கொடுத்துவிடப் போகிறீர்களா?

இது மிகவும் சிக்கலான விடயம். நீங்கள் பெற்றெடுக்கப் போகும் குழந்தை ஒன்றில் உங்களைப் பெரியம்மா என்று அழைத்துக் கொண்டு உங்கள் கண் பார்வையில் வளரும் அல்லது உங்களை அம்மா என்றும் உங்கள் கணவர் அல்லாத ஒருவரை அப்பா என்று அழைத்து, உங்கள் கணவரைப் பெரியப்பா என்று அழைத்து.... :-) குழப்பம் இல்லையா! குழந்தை வளர்ந்தபின் அதற்கும் வீண் மன உழைச்சல். வாழ்க்கை யாருக்குமே நன்றாக இருக்கப் போவது இல்லை.

உங்கள் பெற்றோர் என்ன சொல்கிறார்கள்! நீங்கள் சொல்வது நடந்தால், பிறக்கப் போவது உங்கள் பெற்றோருக்கும் பேரக் குழந்தை. அதை இன்னொரு குடும்பத்திற்கு விட்டுக் கொடுப்பார்களா?

இது உங்கள் கொழுந்தனாரது குடும்பப் பிரச்சினை. இதை உங்கள் பிரச்சினையாக மாற்றிக்கொள்ளாதீர்கள். அவர்களே தீர்த்துக் கொள்ளட்டும். ஒரு குழந்தையைத் தத்து எடுக்கலாம். அல்லாவிட்டால், உங்கள் சகலையின் தாய் அல்லது சகோதரி முறையான யாராவது வாடகைத் தாயாக இருக்க முடியாதா! அவர்கள் அதை ஏற்க முடியாது என்பதற்கு ஏதாவது காரணங்கள் சொல்வார்களாக இருந்தால், நீங்கள் முடியாது என்பதை யாருமே பிழை சொல்ல முடியாது.

உங்களுக்கு எத்தனை குழந்தைகள்? கர்ப்ப காலம் எப்படி இருந்தது? எந்தச் சிரமுமே இல்லாமல் சாதாரணமாக முன்பு போலவே போயிற்றா? பிரசவம் - குழந்தை எந்தத் தொந்தரவும் கொடாமல் ஜம்மென்று உரிய நாளில் வெளியே வர, நீங்கள் உடனே கட்டிலை விட்டு இறங்கி உங்கள் அன்றாட வேலைகைப் பார்க்கக் கிளம்பினீர்களா? இல்லையல்லவா?

நீங்கள் உடலழகு பராமரிப்பில் கரிசனம் கொண்ட ஒருவராக இருந்தால், ஒவ்வொரு கர்ப்பமும் உடலமைப்பை மாற்றும் என்பதை அறிந்துவைத்திருப்பீர்கள். கர்ப்பமும் பிரசவமும் பெண்னின் உடலில் நிரந்தரமான அடையாளங்களை விட்டுச் செல்லும் நிகழ்வுகள். அதை விட அதிகமாக மனதில் அதன் அடையாளம் ஆளமாகப் பதிந்திருக்கும்.

இன்னும் நிறையக் கேள்விகள் என் மனதில் இருக்கின்றன. இது போதும் உங்களைச் சிந்திக்க வைக்க. சிந்தியுங்கள்.

உங்கள் கணவர் சிந்திக்காமல் சட்டென்று ஒரு எண்ணத்தில் கேட்டிருக்கலாம்,. பிறகு அது தவறு என்பதை உணர்ந்து அமைதியாகிவிடலாம். அப்படித்தான் நடக்கும் என்று நினைக்கிறேன். அல்லாமல் பிடிவாதமாக இருந்தால் உங்கள் பெற்றோர் உதவியை நாடுங்கள். இது பற்றிய மருத்துவச் சட்டம் / இந்தியச் சட்டம் பற்றிய அறிவு எனக்கு இல்லை. அவை என்ன சொல்கின்றன என்பதை முதலில் அறிந்துகொள்ளுங்கள். நீங்கள் சம்மதித்தாலும், சட்டப்படி என்னென்ன செய்ய வேண்டுமோ அவை எல்லாம் செய்யதபின்பே சிகிச்சைக்குள் போக வேண்டும்.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்