களிமண் கொண்டு பூக்கூடை செய்வது எப்படி?

தேதி: February 2, 2010

5
Average: 4.2 (5 votes)

 

களிமண்(chemical clay or any setting clay)
ஃபேப்பரிக் க்ளு
ஃபேப்பரிக் பெயிண்ட்
ஃபேப்பரிக் பேர்ல் பெயிண்ட்
ப்ரஷ்
க்ராஃப்ட் கத்தி
பூ செய்யும் கம்பி

 

பூக்கூடை செய்வதற்கு கொடுக்கப்பட்டுள்ள தேவையானப் பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும். கடைகளில் கிடைக்கும் கெமிக்கல் க்ளே வாங்கிக் கொள்ளலாம் அல்லது சாக் பவுடருடன் வெள்ளைப்பசை கலந்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து எடுத்துக் கொள்ளவும். ப்ரெட்டை தூளாக்கி அதனுடன் கார்ன் ஃப்ளார், பசை கலந்தும் க்ளே தயாரிக்கலாம். எந்த வகை க்ளே என்றாலும் தேவைக்கு மட்டும் வெளியில் வைத்துக் கொண்டு மீதியை காற்றுப்புகாத டப்பாவில் வைத்து மூடவும். இல்லையென்றால் க்ளே இறுகி வீணாகி விடும்.
சிறு பட்டாணி அளவு க்ளே எடுத்து உருட்டி அதை பெருவிரலுக்கும் ஆள்காட்டி விரலுக்கும் இடையில் வைத்து அழுத்தி வட்டமாக்கவும். அதன் நடுவில் பூ செய்யும் கம்பியை பசை தடவி வைக்கவும். வட்டவடிவின் இரு ஓரங்களையும் மத்தியை நோக்கி மடித்து விட்டால் ரோஜாப்பூவின் நடுப்பகுதி கிடைக்கும்.
முதலில் செய்தது போலவே வட்டங்கள் செய்து ரோஜாப்பூவின் நடுப்பகுதியை சுற்றி அழகாக அடுக்கி விட்டால் ரோஜாப்பூ ரெடியாகி விடும். 3 இதழ்கள் வைத்தால் லேசாக விரிந்த ரோஜாப்பூவும், 5 இதழ்கள் வைத்தால் நன்றாக மலர்ந்த ரோஜாப்பூவும் கிடைக்கும்.
சிறு சுண்டைக்காய் அளவு க்ளே எடுத்து அதை முதலில் திலகம் வடிவில் உருட்டிக் கொள்ளவும். கத்திரியால் தடிமனான பகுதியை குறுக்கும் நெடுக்குமாக ஒரு முறை வெட்டினால் நான்கு இதழ்கள் உருவாகும். நான்கு பகுதிகளையும் லேசாக விரலால் அழுத்தி இதழ் வடிவை சரி செய்து கொண்டு நடுவில் சிறு உளுந்து அளவு க்ளே எடுத்து உருட்டி அழுத்தினால் இன்னொரு பூ வடிவம் தயார். பூச்செய்யும் கம்பியை 1.5 இன்ச் நீளத்திற்கு வெட்டி பசை தடவி மலரின் அடிப்பகுதியில் சொருகி விடவேண்டும்.
முன்பு செய்தது போலவே திலகம் வடிவில் க்ளேயை உருட்டிக்கொண்டு உள்ளங்கையில் வைத்து பெருவிரலால் அழுத்தினால் இலை வடிவம் கிடைக்கும். மிளகு அளவு க்ளே எடுத்து கம்பு போல் உருட்டிக் கொண்டு இலையின் அகலமான கீழ்பகுதியின் நடுவில் வைத்து இலையின் இரு ஓரங்களையும் நடுவில் உள்ள கம்பை நோக்கி லேசாக மடித்து விட்டால் அந்தோரியம் மலர் ரெடி. பூச்செய்யும் கம்பியை 1.5 இன்ச் நீளத்திற்கு வெட்டி பசை தடவி மலரின் அடிப்பகுதியில் சொருகி விடவேண்டும்.
அந்தோரியம் மலர் செய்ய இலைவடிவம் செய்தது போலவே செய்து கத்தியால் லேசாக அழுத்தி இலையின் நரம்புகள் போல் செய்ய வேண்டும். கத்தியால் இலையின் ஓரங்களில் லேசாக வெட்டுவது போல் அழுத்தி எடுத்தால் செம்பருத்தி இலை போன்ற வடிவம் கிடைக்கும். இதற்கும் பூச்செய்யும் கம்பியை 1.5 இன்ச் நீளத்திற்கு வெட்டி எடுத்து பசை தடவி மலரின் அடிப்பகுதியில் சொருகி விடவும். சில இலைகளை பின்புறமாக லேசாக மடித்து விடவேண்டும். அப்போதுதான் இயற்கையாக இருக்கும்.
மிகச்சிறிய அளவு க்ளே எடுத்து நீளமான மெல்லிய கம்பியாக உருட்டி அதை ப்ரஷின் பின்பக்கம் இரண்டு மூன்று முறை சுற்றிய பின் பிரஷை மெதுவாக உருவி எடுத்தால் கொடியின் க்ரீப்பர்கள் போல் கிடைக்கும். இது போல் இரண்டு மூன்று செய்து காய விடவும்.
இதுப்போல் தேவையான அளவு பூக்கள், இலைகள் செய்து நன்றாக காய வைத்து பேர்ல் ஃபேப்பரிக் கலர் கொண்டு வண்ணம் தீட்டவும். சாதாரண ஃபேப்பரிக் வண்ணமும் பயன் படுத்தலாம். பேர்ல் கலர் பயன்படுத்துவதால் பூக்கள் பளபளப்பாக இருக்கும்.
சிறு நெல்லிக்காய் அளவு இரு உருண்டைகள் எடுத்து அதை நீளமான மெல்லிய கம்பிகளாக தரையில் வைத்து உருட்டவும். பின் இரண்டு கம்பிகளையும் இணையாக வைத்து ஒன்றோடொன்று முறுக்கவும். இரு முனைகளையும் பிடித்துக்கொண்டு எதிரெதிர் திசையில் முறுக்கினால் எளிதாக இருக்கும்.
எலுமிச்சை அளவு க்ளே எடுத்து அதை நீள்வட்டமாக கையால் பரத்தவும். முன்பு முறுக்கி வைத்த கம்பியை நீள்வட்டத்தின் ஓரத்தில் பசை தடவி ஒட்டவும். நீள்வட்டத்தின் ஏதேனும் ஒர் ஓரத்தில் ஆரம்பித்து அங்கேயே முடித்தால் ஜாயின்ட் செய்யும் இடம் வெளியில் தெரியாமல் இருக்கும்.
இதே போல் கம்பிகள் போல் முறுக்கி ஒன்றன் மீது ஒன்றாக பசை தடவி தேவையான உயரம் வரும் வரை ஒட்டவும். ஒவ்வொரு அடுக்கும் காயும் முன்னரே அடுத்தை ஒட்டி விட வேண்டும். (இதில் நான்கு அடுக்கு ஒட்டப்பட்டுள்ளது). கைப்பிடிக்கும் இதே போல் கூடையின் உள்பக்கம் ஒட்டும் அளவு செய்து வெளியில் வளைத்து வைத்து காய விடவும்.
கைப்பிடி நன்றாக காய்ந்ததும் அதை கூடையின் உட்புறம் சிறிது க்ளே மற்றும் பசை கொண்டு ஒட்டி விடவும். எல்லாம் நன்கு காய்ந்ததும் மூங்கில் கூடை போன்ற வண்ணம் தீட்டவும். மஞ்சள், டெரகோட்டா(டார்க் ஆரஞ்ச்) மற்றும் ப்ரஷின் நுனியில் சிறிது கறுப்பு வண்ணம் கலந்தால் மூங்கில் கூடையின் வண்ணம் கிடைக்கும்.
கூடையின் உட்புறம் எலுமிச்சை அளவு களிமண் எடுத்து வைத்து கைகளால் பரத்தி வண்ணம் தீட்டிய பூக்களையும், இலைகளையும் சொருகி காய வைக்கவும். கூடையின் உட்புறத்தில் நிற்கும் அளவு தெர்மாகோல் அட்டை அல்லது ஃப்ளோரல் ஸ்பாஞ்ச் வெட்டி வைத்தி அதிலும் பூக்களை சொருகலாம். இப்படி செய்வதால் நம் விருப்பப்படி எப்போது வேண்டுமானாலும் பூக்களை மாற்றி அமைக்கலாம்.
களிமண் கொண்டு செய்யக்கூடிய அழகிய பூக்கூடை ரெடி. கூட்டாஞ்சோறு பகுதியின் மூலம் தனது சமையல் குறிப்புகளை பகிர்ந்து கொண்டிருக்கும் திருமதி. கவிசிவா அவர்கள், இந்த களிமண் பூக்கூடை செய்முறையை அறுசுவை நேயர்களுக்காக வழங்கியுள்ளார்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

கவி,

லவ்லி, லவ்லி, லவ்லி. ;)

இமா

‍- இமா க்றிஸ்

குறிப்பை அழகாக வெளியிட்ட அட்மினுக்கும் அறுசுவை குழுவினருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

நன்றி இமாம்மா

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

கொள்ளை அழகுதான் உங்கள் பூக்கூடை....
அருமையாய் விளக்கியுள்ளீர்கள்.....சூப்பர்..!!

எத்தனை திறமைகள் கைவசம் வைத்திருக்கிறீர்கள்.!!!

எனக்கு கைவேலைகள் டீயூசன் சொல்லித்தரமுடியுமா?

:-)
என்ன விலையென்றாலும் கொடுக்க ரெடியாக இருக்கிறேன்....:-)

அன்புடன்
இளவரசி
புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

உங்கள் கைவண்ணம் அருமையாக இருந்தது

வாழ்த்துக்கள்
அன்புடன்
ஜெயா

ரொம்ப அழகா இருக்கு கவி!!

கவி உண்மையிலேயே உங்களிடம் நிரைய
கை வேலை யென்னும் திறமை ஒளிந்து
இருக்கு. ஒவ்வொன்றாக ச்ய்து காட்டி
வெளிச்சத்திற்கு வரவும்.ஆர்வம் உள்ளவர்களுக்கும்
மிகவும் உபயோகமாக இருக்கும்.

சூப்பர் கவி.அழகோ அழகு.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

கவி,
உங்க களிமண் பூக்கூடை ரொம்ப ரொம்ப அழகா இருக்கு! பட்டிமன்ற வாதத்தில் என்றில்லை, வேற நிறைய திறமைகளும் ஒளித்து வைத்திருக்கிங்க போல! : ) அருமையான வேலைத்திறன், வாழ்த்துக்கள் கவி!

அன்புடன்
சுஸ்ரீ

அன்புடன்
சுஸ்ரீ

பார்க்க மிக அருமையாக இருக்கிறது. பாராட்டுகள். இது போல இன்னும் நிறைய செய்து காட்டுங்கள்.

நன்றி இளவரசி! வாங்க கண்டிப்பாக எனக்கு தெரிந்ததை உங்களுக்கு சொல்லித்தருகிறேன். ஃபீஸ் எல்லாம் வேண்டாம் குருதட்சிணை மட்டும் போதும் :-)

நன்றி ஜெயா உங்கள் அன்பான பின்னூட்டத்திற்கு!

ரொம்ப நன்றி மேனு! எப்படி இருக்கீங்க? இந்தப்பக்கம் அதிகமா பார்க்க முடியவில்லையே!

மிகவும் நன்றி திருமதி கோமு! பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சிகளில் பார்ப்பதை சற்று மாற்றி என் கற்பனைக்கேற்ப செய்கிறேன் அவ்வளவுதான் :-)

ஊக்கமளிக்கும் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி ஆசியா!

நன்றி சுஸ்ரீ! அப்பறம் ஒரு ரகசியம் சொல்லவா பட்டிமன்ற வாதமெல்லாம் எழுத்தில் மட்டும்தான். மேடையேற சொன்னால் ஒரே உதறல்தான். வெறும் காத்து மட்டும்தான் வரும் :-)

நன்றி அனிஷா! கண்டிப்பாக எனக்கு தெரிந்ததை பகிர்ந்து கொள்கிறேன். சில பொருட்கள் இங்கே கிடைப்பது சிரமமாக இருப்பதால் எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்ள முடியவில்லை.

ஊக்கமளித்த தோழிகள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்! அறுசுவைக்கு நன்றிகள்!!!

அன்புடன்
கவிசிவா

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

நிஜமாகவே அது பிரம்புக் கூடை என்றுதான் நினைத்தேன்...ரொம்ப அழகாக இருக்கிறது.

கவி, உங்க பூக்கூடை ரொம்ப பிரமாதம்..... அதோடு கலர் கலர் பூக்களோடு பார்க்கவே ரொம்ப அழகா இருக்கு....

அநேக அன்புடன்
ஜெயந்தி

கவிசிவா... ரொம்ப சூப்பரா இருக்கு. எப்படிங்க இவ்வளவு அழகா க்ளே ஷேப் பண்றீங்க..... திறமை அதிகம் வேணும். :) வாழ்த்துக்கள். நேரம் கிடைக்கும்போது நிச்சயம் செய்து பார்க்கிறேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

கவிசிவா ரொம்ப அழகா சூப்பரா இருக்கு.வாழ்த்துக்கள்

நன்றி தேன்மொழி! எனக்கு பிரம்பு(மூங்கில்) கூடைகள் என்றால் ரொம்பவே பிடிக்கும். அதனால்தான் களிமண்ணிலும் அதே போன்ற கூடை :-)

நன்றி ஜெயந்தி! நீங்களும் செய்யலாம். மிகவும் எளிதுதான்

நன்றி வனி! க்ளே ஷேப் செய்வதெல்லாம் கஷ்டமே இல்லை வனி. முதலில் குழந்தைகள் விளையாடும் ப்ளே டோ கொண்டு வடிவங்கள் செய்து பழகினால் மிகவும் எளிதாகி விடும். இக்கூடை செய்ய காய வைக்கும் நேரம் தவிர ஒரே மணிநேரத்தில் முடித்து விடலாம்.

வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி சாய் அனிதா!

அன்புடன்
கவிசிவா

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

வாவ் நல்ல அழக்கா இருக்கு. நல்ல பொருமையா இவ்வள்வு அழகா செய்திருக்கிங்க. ஆமாம் இங்கு எல்லாம் அவனில் வைத்து பேக் செய்து எடுக்கிறாங்க. அதே போல் இது செய்யலாமா, இல்லை வெயிலில் வைத்து தான் எடுக்கனுமா. என் கிட்ட கொஞ்சம் க்ளே இருக்கு. சின்ன பூ செய்யனும் இந்த முறையில் செய்து பார்கக ஆசை. மேலும் நிறய்ய க்ராப்ட்ஸ் குடுங்க கவி.

நான் நல்லாயிருக்கேன்பா.நீங்க நலமா?பொண்ணு வால்தனம் அதிகமாயிடுச்சு அதான் வரமுடியல முன்பு மாதிரி.இருந்தாலும் தினமும் ஒரு பார்வை பார்த்துடுவேன்.இந்த பூக்கூடை செய்யனும்னு ஆசையாயிருக்கு.பொருட்கள் வாங்கினதும் செய்து பார்க்கனும்.

நன்றி விஜி! செராமிக் க்ளே பயன் படுத்தினால் அவனில் வைத்து பேக் செய்வார்கள். மற்ற வகை க்ளேக்களுக்கு அது தேவையில்லை. கெமிக்கல் க்ளே(எம் சீல் போன்றவை) என்றால் சீக்கிரம் காய்ந்து விடும். மற்ற எந்த வகை க்ளேயில் செய்தாலும் செய்திருக்கும் பொருட்களின் தடிமனைப் பொருத்து 1மணிநேரம் முதல் ஒரு நால் வரை ஆகும். சும்மா காற்றோட்டமாக வைத்தாலே போதும் காய்ந்து இறுகி விடும். வெயிலில் எல்லாம் வைக்க வேண்டாம்.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

மேனு நாங்க நலமே! பொண்ணு நல்லா சேட்டை செய்யறாங்களா? குழந்தைகள்னா அப்படித்தான் இருக்கணும். கவி ஆன்டி நல்லாவே சேட்டை செய்ய சொன்னாங்கன்னு சொல்லிடுங்க :-)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

கவிசிவா....எப்படி இருக்கீங்க...வீட்டில் அனைவரும் நலம்தானே....?
உண்மையிலேயே கவி தங்கள் பூக்கூடை வேலைபாடை வர்ணிக்க வார்த்தை இல்லை.அவ்வளவு ஒரு அழகு கவி.
உங்கள் திறமையை கண்டு நான் வியக்கிறேன்.அழகான செய்முறை விளக்கம்.
வாழ்த்துக்கள் கவிசிவா....
அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

இந்த செய்முறையை பார்த்து திருமதி. வனிதா வில்வாரணிமுருகன் அவர்கள் செய்த களிமண் பூக்கூடையின் படம்

<img src="files/pictures/kaliman poo koodai - vanitha.jpg" alt="picture" />

நன்றி அப்சரா. சாரி இப்பதான் உங்கள் பதிவைப் பார்த்தேன்.
திறமையெல்லாம் பெரிசா இல்லை அப்சரா. எல்லாம் பல இடங்களில் பார்த்தும் படித்தும் கேட்டும் கற்றுக் கொண்டதுதான்.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

வனி பூக்கூடை ரொம்ப அழகா நேர்த்தியா இருக்கு.உங்க கை பட்டா எல்லாமெ அழகாயிடுது.

பென் ஸ்டாண்டும் சூப்பர். அங்கே கருத்து தெரிவிக்க ஓப்பன் ஆக மாட்டேங்குது. அதான் இங்கேயே சொல்லிட்டேன்

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

படத்தை இணைத்தமைக்கு மிக்க நன்றி அட்மின்.
மிக்க நன்றி கவிசிவா. எல்லாம் நீங்க கத்து குடுத்தது தான்... ;) இந்த பூக்கூடை, பென் ஸ்டாண்ட் எல்லாம் என் தங்கையின் ஆபீஸில் உட்கார்ந்திருக்கு இப்போ.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

கவி உங்க பூக்கூடை ரெம்ப அழகா இருக்கு,,அழகா செய்து இருக்கீங்க,வாழ்த்துக்கள்.கூடை பார்க்கவே நிஜம் போல இருக்கு..வெரி நைஸ்

பிரெட் க்ளேயில் செய்தால் நல்லா இருக்குமா?ப்ரெட் வீணா போகாது.ரெம்ப நாள் தாங்குமா?விளக்கம் தாங்க கவி.

வீடு மாறியதாள நெட் கனெஷ்சன் இல்லை.புதன் கிழமை தான் வந்தது,அறுசுவை எனக்கு இப்ப தான்
வந்தது.அதான் உடனே எதும் சொல்ல முடியல.:)

அன்புடன்
ரேணுகா

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

super kavisiva,kalakkareenga...eppola irundhu ithellam..good work keep it up...

நன்றி ஷார்னிதா :-). அதெல்லாம் எப்போ இருந்தோ ஆரம்பிச்சாச்சு :-).

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

ஹாய் ரேணு நான் இப்பதான் உங்க பதிவை பார்க்கிறேன். நன்றிபா! கோகுல் எப்படி இருக்கிறான்? ப்ரெட்க்ளேயில் செய்து முடித்து கலர் செய்த பின் க்ளியர் வார்னிஷ் அடித்து விட்டால் கெட்டுப்போகாது

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

கவி பூக்கூடை அழகா இருக்கு. நான் சாக் பவுடர் வச்சு செய்யலாமனு இருக்கேன்.
சப்பாத்தி மாவு பதத்துக்கு பிசைய சாக் பவுடர், கம் எவ்வளவு அளவு எடுத்துக்கனும்.

ஹலோ செல்லம்
என் பெயர் binta உள்ளது
உங்கள் சுயவிவர மிகவும் அழகாக ஏனெனில் நான், இன்று உங்கள் சுயவிவரத்தை பார்த்தேன் நீங்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக பெற, இங்கே என் மின்னஞ்சல் முகவரி (bintajaafar@yahoo.com) நான் நீங்கள் என் புகைப்படங்கள் அனுப்ப மற்றும் இன்னும் சொல்ல என்று என்னை ஒரு மின்னஞ்சல் அனுப்ப தயவு செய்து உள்ளது என் சுய பற்றி,. தூரம் நினைவில், நிறம், மதம் அல்லது பழங்குடி பிரச்சினையில்லை ஆனால் விஷயங்களில் மிகவும் நேசிக்கிறேன் இல்லை (bintajaafar@yahoo.com) எனக்கு மின் அஞ்சல்.
binta முத்தம்
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

Hello Dear
My name is binta
I saw your profile today and get interested to know you, because you look very nice in your profile, here is my email address (bintajaafar@yahoo.com) please send me an email so that i will send you my photos and tell you more about my self,mail me at(bintajaafar@yahoo.com).Remember distance,color,religion or tribe does not matter but love matters a lot.
kiss binta