பையா

பையா


Movie reviewதனது யதார்த்தமான, நகைச்சுவை இழைந்தோடும் எழுத்து நடையால், வலைப்பதிவுலகில் பிரபலமாகி, இணைய பயனீட்டாளர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து இருக்கும் நாகை. சிவா அவர்கள், நடுநிலையான திரை விமர்சனங்களை இந்த பகுதியில் தொடர்ந்து வழங்கவிருக்கின்றார்.

ரன் மற்றும் சண்டைக்கோழி படங்களின் வெற்றியின் தாக்கத்தில் இருந்து வெளிவராத லிங்குசாமி, அதே மாதிரியான காதல், இளமை, திகட்டும் அளவு சண்டை என்று பக்கா கமர்ஷியல் பேக்கேஜ் உடன் பையாவில் களம் இறங்கி உள்ளார். அதில் ஒரளவு வெற்றியும் கண்டுள்ளார் என்பதும் உண்மை.

பெங்களூரில் வேலை தேடும் கார்த்திக், தமன்னாவை கண்டதும் காதல் கொள்கிறார். எதிர்பாராத நேரத்தில் தமன்னாவே தன்னை மும்பையில் இருக்கும் தன் பாட்டி வீட்டில் விட முடியுமா என்று கேட்க, மகிழ்ச்சியுடன் கார்த்திக் காரில் தமன்னாவை அழைத்து செல்கிறார். இதில் தமன்னாவை ஒரு கும்பல் துரத்தி வர, அதில் இருந்து தப்பிக்கும் சமயத்தில், ஏற்கனவே மும்பையில் கார்த்திக் க்கு இருக்கும் வில்லன்களும் களத்தில் குதிக்கிறார்கள். கார்த்திக் தமிழ் சினிமா ஹீரோ இலக்கணப்படி ஒற்றை ஆளாக இரு தரப்பு வில்லன்கள் அனைவரையும் அடித்து துவம்சம் செய்து, கடைசியில் தமன்னாவையும் கைப்பிடிக்கிறார்.

அலட்சியமான இளைஞனாக கார்த்திக் வரும் ஆரம்ப காட்சியை கண்டு இருக்கையில் நன்கு சாய்ந்து உட்காரும் நம்மை, தமன்னாவை mall லில் கண்டு, நண்பர்களிடம் ஆயிரம் நிலவு போல, நட்சத்திரம் போல என்று கவிதை போடப் போகிறார் என்று நினைக்கும் நேரத்தில், என்னை மாதிரியே ஒருத்தனை பார்த்தேன் என்று கூறும் இடத்தில் நம்மை "அட..!" போட வைத்து நிமிர வைக்கும் இயக்குனர், நேராக முதல் கியரில் இருந்து டாப் கியர் போட்ட மாதிரி இடைவேளை வரை காட்சிகளால் பரவசப்படுத்துகிறார். 'மும்பையில் உங்களுக்கு வேண்டியவங்க இருக்காங்கன்னு சொன்னீங்க, அங்க எனக்கு வேண்டாதவங்க கொஞ்ச பேர் இருக்காங்க' என்று பரபரப்பை பறக்க அடிக்கும் இயக்குனர், அதற்கு ஒரு சப்பை ப்ளாஷ்பேக் வைத்து அந்த பரபரப்பை சிதற அடிக்கிறார்.

பின் பாதியில் மும்பையே நடுங்கும் வில்லன் என்று ஏகப்பட்ட பில்டப் கொடுத்து (அதே ரன், சண்டைக்கோழி வில்லன்களை போலவே) ஹீரோவின் ஒத்த அடியில் வீழும் வில்லன் மற்றும் ஆந்திராவில் இருந்து சதை மலைகளாக வந்து ஹீரோவிடம் வேண்டுதல் போல் அடி வாங்கி வீழும் காட்சிகளை வைத்து, இரண்டாவது கியரிலே படம் முடியும் வரை இழுத்து நம்மை படுத்துகிறார்.

paiyaa

கார்த்திக் தன் அழுக்கு சட்டைகளை துறந்து நவநாகரீக இளைஞனாக கலக்கி உள்ளார். முகபாவனைகளிலும் சிரிப்பிலும் முதல் பாதியில் ஸ்கோர் பண்ணும் கார்த்திக், பிற்பாதியில் தன் அதிரடியால் ஸ்கோர் பண்ணுகிறார். தலைசாய்த்து பார்க்கும் இடங்களில் மட்டும் பருத்தி வீரனை நினைவுப்படுத்துகிறார். பயணத்தின் போது காரை நிறுத்தும் இடத்தில் எல்லாம் நண்பர்களுக்கும் போன் செய்து 'காதல் பீலிங்ல சாரு இப்ப என்ன பண்ணாற தெரியுமா' னு லந்து கொடுக்கும் இடங்களில் எல்லாம் திரை அரங்கில் சிரிப்பு வெடிகள். மாஸ் ஹீரோவாகவும் தன்னால் பெயர் வாங்க முடியும் என்று இந்த படத்தில் நிரூபித்து இருக்கிறார்.

அழகாக அறிமுகம் ஆகி, ஆங்காங்கே அழகாக தெரியும் தமன்னா பாடல் காட்சிகளில் மிக அழகாக தெரிகிறார். சோகமாக தெரியும் காட்சிகளில் அய்யோ பாவம் என்று சொல்ல வைகிறார். வில்லனாக வருபவர்கள் எல்லாம் வந்து நன்றாக அடி வாங்கி செல்கிறார்கள். 'யாரு பெத்த பிள்ளையோ.. இவ்வளவு பெரிய உடம்பை வைச்சுக்கிட்டு ஒரு அடி கூட கொடுக்காம இப்படி வந்து அடி வாங்கி போகுதே..' னு யோசிக்க வைக்கிறார்கள். ஸாரி ஜெண்டில்மென்ஸ்.

சில காட்சிகளில் மட்டும் வந்தாலும் தன் டைமிங் காமெடியால் நச் என்று தெரிபவர் ஜெகன். அவர் வரும் காட்சிகளில் எல்லாம் திரை அரங்கு சிரிப்பால் அதிருகிறது. பார்த்து பார்த்து சலித்த நண்பர்கள் கூட்டமாக இல்லாமல் ப்ரஷாக வரும் கார்த்திக் நண்பர்களும் அவர்களின் யதார்த்த நடிப்பும், வசனமும் நம்மை கவருகின்றது.

விசயமே இல்லாத படத்தை முழுவதுமாக தாங்கி பிடித்து இருப்பது ஒளிப்பதிவு தான். காரில் பயணம் செய்யும் கதை என்பதால் ஒரு சேஸிங் காட்சி இருக்கும் என்று எதிர்பார்க்க, இடைவேளைக்கு முன்பு வரும் அந்த சேஸிங் சிறிது நேரமே என்றாலும் படமாக்கிய விதமும், கேமிராவும் பாராட்டுதலுக்குரியது. ஆங்காங்கே மிளிரும் ஷார்ப் வசனங்கள் பளிச். காரில் ஏறி லந்து கொடுக்கும் ஒருவனை இறக்கி விடும் போது பிடிக்கலையா என தமன்னா கேட்கும் போது, புரியவேவில்லைங்குறேன் என்ற இடமும், காரில் விழுந்து இருந்தால் கூட இவ்வளவு அடி இருக்காது போன்று பல இடங்களில் பிருந்தா சாரதியின் வசனங்கள் கவனிக்க வைக்கிறது.

paiyaa

படத்தில் குறிப்பிட்ட சொல்ல வேண்டிய விசயம் இசை. முதல் தடவை கேட்கும் போதே பல பாடல்கள் இனிமையாக இருக்கிறது. நா. முத்துக்குமாரின் வரிகளும் அதற்கு ஒரு ப்ளஸ் பாயிண்ட். அடடா மழை டா & என் காதல் சொல்ல நேரமில்லை பாடல்கள் இன்னும் சில காலத்திற்கு சன் மயூசிக் & இசையருவிகளில் வலம் வரும். பின்னணி இசையிலும் தன் திறமையை காட்டியுள்ளார் யுவன்.

இரு வில்லன் கோஷ்டிகளும் சந்திக்கும் போது 'பொண்ணு உனக்கு, அந்த பையனை நாங்க கொன்னுடுவோம்' என்று பேசும் காட்சியில் எரிச்சல் வருவதை தவிர்க்க முடியவில்லை. ஹிந்தி, தெலுங்கு, ஆங்கிலம், தமிழ் என கலந்து கட்டி பேசினாலும் கார்த்திக் எல்லாரிடமும் தமிழிலே பேசுகிறார். கார்த்திக்கை அடித்து போட்டு தமன்னாவை இழுத்து போகும் காட்சியில் அய்யோ அடுத்து சென்னைக்கு வேறவா என நாம் பதறும் முன்னே கார்த்திக் எழுந்து விடுகிறார். நம்மிடம் இருந்து ஒரு நிம்மதி பெருமூச்சு. போனில் கத்துவதோடு முடித்துக் கொள்ளும் சித்தி கேரக்டர் நமக்கு ஆறுதல் தரும் மற்றொரு விசயம்.

மும்பை போகும் வழியில் கேரளாவில் உள்ள அருவியில் தமன்னாவை ஆட விடும் இயக்குனர், காடு என்று ஸ்டூடியோவில் ஒரு பாடல் வைத்ததை தவிர்த்து இருக்கலாம். கடைசி வரை கார்த்திக் தன் காதலை தமன்னா விடம் சொல்லாததும், கார்த்திக் நண்பர்கள் வந்து சொன்னவுடன் தமன்னாவிற்கு கார்த்திக் மீது காதல் பொங்குவதும், சுத்த அக்மார்க் தமிழ் சினிமாத்தனம். ஹைவேயில வில்லனங்கள் கண்ணில் படாமல் குடை வைத்து தப்பிக்கும் இடத்தில் ஆஹாவ்வ்வ்வ்வ்வ்.

முதல் பாதி 20/20 யூசப் பதானின் சரவெடி, இரண்டாம் பாதி சத்தம் மட்டுமே. மொத்ததில் முதல் பாதியில் போட வைக்கும் ச"பாஷ்" ஆல் பாஸ் ஆகிறான் சம்மர் டீரிட் பையா.

படம் : பையா (2010)
தயாரிப்பு : திருப்பதி பிரதர்ஸ்
நடிப்பு : கார்த்திக், தமன்னா, ஜெகன் மற்றும் பலர்
இசை : யுவன் சங்கர் ராஜா
பாடல்கள் : நா. முத்துக்குமார்
ஒளிப்பதிவு : மதி
சண்டை : கனல் கண்ணன்
வசனம் : பிருந்தா சாரதி
கதை, திரைக்கதை, இயக்கம் : லிங்குசாமி

Comments

விமர்சனங்களிலிருந்து மிக நல்ல படம் எனத் தெரிகிறது.
உங்கள் விமர்சனத்திற்கு நன்றி ...

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

good film it looks very decent film. no vilations and no indecent scenes.
good film nice acting for karthick. he looks very handsom.

with regards
"He who has health has hope. And he who has hope has everything.” - Arabian proverb
sumithra vijayakumar

எதார்த்தை முற்றிலும் நிராகரிக்கும் இப்படம் - கமர்ஷியல் குப்பை. பாட்டும், நடிகையும், நடிகனும், சண்டையும் இருந்தால், அப்படம் நல்ல படம் என்று சொன்னால் நாம் குண்டுச் சட்டிக்குள் குதிரையோட்டிக் கொண்டிருக்கிறோம் என்று தான் அர்த்தமாகும்.

என்னைப் பொறுத்தவரையில் இப்படம் குப்பையிலும் சேர்க்க முடியாத தரமுடையது.

சிவா.... எனக்கும் படத்துக்கும் சம்பந்தமே இல்லை. ஆனாலும் இந்த விமர்சனம் படிக்க வைத்தது. நல்ல விமர்சனம்.... அதில் இருக்கும் '+', '-' இரண்டையும் நீங்கள் சொல்லி இருப்பது நன்று. வாழ்த்துக்கள். முடிஞ்சா நம்ம "அங்காடி தெரு" பற்றி சொல்லுங்க, தங்கை பார்க்க ஆசை படறா... அவ போய் அழுதுகிட்டே வருவாளோ'னு ஒரு பயம். ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நேத்து தான் இந்த படம் பார்க்க நேரம் கிடைச்சது. படம் படு கமர்ஷியல். கார்த்திக்க அலுக்கு டிரஸ்லயே பார்த்து பார்த்து இதுல வித்தியாசமா தெரிகிறார். யுவன் மியுசிக் சூப்பர். வழக்கமான நக்கல் நையாண்டியோட ஜகன் வரும் சீன்கள் நல்லா இருந்துச்சு. ஒளிப்பதிவுக்கு ஒரு ஓஓஓஓ..... போடலாம். நான் உங்க விமர்சனத்தை படிச்சுட்டு தான் படத்துக்கே போனேன் உங்க விமர்சனம் ரொம்ப சரியா இருந்துச்சு.

good film it looks very decent film. no vilations and no indecent scenes.
good film nice acting for karthick. he looks very handsom.

ஹாய் நாகைசிவா, உங்களோட திரைப்பட விமர்சனம் ரொம்ப நல்லா இருக்கு. கோடியா கோடியா போட்டு எடுக்கற படத்தை, சும்மா மேலோட்டமா பார்த்துட்டு சிலர் விமர்சனம் எழுதுவாங்க. பிரபலமான வாரப்பத்திரிக்கைகளில் வரும் விமர்சனங்களைக் காட்டிலும் நன்றாக இருக்கிறது.ஒரு திரைப்படத்தின் நிறை குறை இரண்டையும் விமர்சித்து எழுதுவதுதான் சரியான விமர்சனமாகவும் இருக்க முடியும். ஒரு முறை ஒரு பிரபலமான பத்திரிக்கையில், அவர்கள் பழைய புத்தகத்தையும் இலவச இணைப்பாக கொடுத்திருந்தபோது, அதில் அப்போது விமர்சனம் எழுதியவருக்கு இளையராஜா இசை பிடிக்காதோ என்னவோ தெரியவில்லை. அந்த (பழைய)படம் சூப்பர் ஹிட் ஆனதற்கு ஒரு முக்கிய காரணம் இளையராஜா இசைதான். அதுவுமில்லாமல் அந்த படத்து பாடல்களும் சரி ஹிட் அப்போது. ஆனால் விமர்சனத்தில் ஒரு வரியில் கூட அதனை குறிப்பிடவில்லை. இது போல் அதே பத்திரிக்கையில் இரண்டொரு முறை படித்திருக்கிறேன். அப்படி இல்லாமல் நீங்க எழுதி இருக்கற விதம் பாராட்டுதலுக்குரியது. இதுவரை தங்கள் எழுத்துக்களை படித்ததில்லை. முதல் முறை படிக்கும்போதே எழுத்து நடையில் தங்களின் திறமை தெரிகிறது. பாராட்டுக்கள்.

சிறந்த பொழுது போக்கு சாதனமான சினிமாவில் எல்லாருமே நிறைய சம்பாதிப்பதும் இல்லை. வயதான காலத்தில் சொகுசாகவும் இல்லை. அதனாலேயே அதிகம் பணம் வைத்துக் கொண்டு என்ன செய்வது என்றே தெரியாமல், தான் எப்படி இருக்கிறோம், நடிக்கிறோம் என்ற அடிப்படை விஷயம் கூட யோசிக்காமல் படம் எடுக்கும் பிரேம், ரித்திக் போன்றோரின் படங்களைக்கூட, படத்தைப் பார்த்து விழுந்து விழுந்து சிரித்தது உண்டே தவிர, இவனெல்லாம் எதுக்கு பணம் எடுக்கிறான் என்று சொல்லத் தோணாது. ஏன்னா சினிமாவில் இருக்கற சின்ன சின்ன காமெடியன்ஸ், ஸ்டண்ட் மாஸ்டர்லாம் இந்த ஆளுங்க படத்துல மெயினா இருப்பாங்க. ஏதோ அதுங்களுக்கு காசாவது கிடைக்குதேன்னு தோணும். வீடு படத்தில் நடிச்ச சொக்கலிங்க பாகவதர் சென்னையில் வேகாத வெயிலில் ரோட்டில் உட்கார்ந்து சின்ன சின்ன பொம்மை விற்றுக் கொண்டிருப்பதையும் பார்த்திருக்கிறேன். வரும் வராது என்று சொல்லும் என்னத்த கன்னையா முகத்தில் வறுமைதான் முதலில் தெரிகிறது. அதனால சில மோசமான படங்களைப் பார்க்கும்போது அதுக்கு பின்னாடி கூட நிறைய பேர் சாப்பாட்டு பிரச்சனை தீர்ந்திருக்கிறதுன்னு நினைச்சா திட்டத் தோணாது. கமர்ஷியல் படம் பிடிச்சவங்க ஆர்ட் படங்களை அழுமூஞ்சி படம்னு சொல்றதும், அவங்க இவங்களை குப்பைன்னு சொல்றதும் மக்களின் வேறுபட்ட ரசனையைத் தான் காட்டுது.

அறுசுவை தோழிகளே, இதுவரை பெண்கள் அதிகம் எழுதிய அறுசுவையில் தனக்கென ஒரு புதிய பகுதியை அழகான எழுத்தால் அசத்தலாக ஆரம்பித்த நாகை சிவாவுக்கு நமது வாழ்த்துக்களை கூறி பாராட்டுவோம்.

@ All - ஊக்கமும், வாழ்த்துக்களுக்கும் தெரிவித்த அனைவருக்கும் என் நன்றிகள்.

@ நந்தா - கமர்ஷியல் படம் உங்களுக்கும் பிடிக்காமல் இருக்கலாம். நீங்கள் தரமான தமிழ் சினிமாவை எதிர்பார்க்கும் நபராக தெரிகிறது. நானும் உங்கள் கட்சி தான். ஆனால் எல்லாரும் அதே போல் படம் எடுக்க வேண்டும், அதை தான் எல்லாரும் ரசிக்க வேண்டும் என்று யாரையும் கட்டாயப்படுத்த முடியாது. மற்ற மசாலா கமர்ஷியல் படங்களுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது குத்து பாட்டு, இரட்டை அர்த்த வசனங்கள், அருவருக்கதக்க ஆபாச காட்சிகள், குடும்பத்துடன் பார்க்கும் போது சில காட்சிகளில் சீட்டில் நெளிய வைக்கும் காட்சிகள் போன்றவை இல்லாமல் வந்து இருக்கும் பையா பல மடங்கு தேவலாம். என்னால் இந்த படத்தை குப்பை என்று ஒதுக்க முடியவில்லை.

அது போக இது மிக நல்ல படம் என்று எந்த இடத்திலும் கூறவில்லை. ஒரு விமர்சனம் எழுதும் போது என்னுடைய ரசனையை வைத்து அந்த படத்தை மதிப்பீட்டால் அது சரியான மதிப்பீடாக இருக்காது என்பது என் கருத்து. எனக்கு பிடித்தது உங்களுக்கு பிடிக்காமல் இருக்கலாம். உங்களுக்கு பிடித்தது எனக்கு பிடிக்காமல் இருக்கலாம். ரசனை ஆளுக்கு தகுந்த மாதிரி மாறுப்பட தானே செய்யும். நம் ரசனை வைத்து அடுத்துவர்களை ரசனை குறைந்தவர்கள் என்று கூறுவது சரியாக இருக்காது என்பதும் என் கருத்து. புரிதலுக்கு நன்றி.

நட்புடன்
நாகை சிவா

"Follow your heart and your dreams will come true."

@ வனிதா - நன்றிங்க. அங்காடி தெரு இன்னும் பார்க்கவில்லை. இந்த வாரம் தான் பார்க்கும் எண்ணம். பார்த்தவுடன் கண்டிப்பாக என்னுடைய விமர்சனம் வெளிவரும்.

@ஹரிகாயத்ரி - என் விமர்சனத்தை நம்பி படம் பார்க்க சென்றதுக்கு ரொம்ப நன்றிங்க. இனி தான் நான் விமர்சனம் எழுதும் போது ரொம்ப கவனமாம இருக்கனும் என்று நினைக்குறேன். :)

@ தேவா - உங்கள் பாராட்டுதலுக்கு மிக்க நன்றிங்க. சினிமாவின் மூலம் பல குடும்பங்கள் வாழ்கிறது என்பது 100 % நிதர்சனமான உண்மை தான். ஆனால் சினிமா எடுப்பவர்களுக்கும் சமுதாயத்தில் மிக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் மீடியாவில் இருக்கிறோம் என்பதை நினைவில் வைத்து படம் எடுத்தால் நன்றாக இருக்கும். பணம் பிரதானம் தான் ஆனால் தான் எடுத்த படம் முதலில் தனக்கு மனநிறைவை தருகிறதா என்று அவர் அவர்கள் கேள்வி கேட்டு கொண்டாலே நல்ல சினிமாகள் நமக்கு கிடைக்கும் என்று நம்புகிறேன்.

நட்புடன்
நாகை சிவா

"Follow your heart and your dreams will come true."

அன்பு சிவா,
வணக்கம். நல்ல சினிமா என்னவென்பதை நாம் மறந்து விட்டோம் அல்லது நமக்குத் தெரியவில்லை என்பது தான் உண்மை. ஆபாச காட்சிகள், இரட்டை அர்த்த வசனங்கள், குத்துப் பாட்டு இல்லாத சினிமாக்களைப் பார்க்கலாம் என்பது சரிதான். ஆனால் அது நல்ல சினிமாதான் என்பது சரியான வாதமாக ஏற்க முடியாது. எது நல்ல சினிமா என்பது பற்றி ஒரு பதிவு எழுதவிருக்கிறேன். பின்னர் பேசலாம்.

அன்புடன்
தங்கவேல் மாணிக்கம்
கோயமுத்தூர்

இங்கு படித்துவிட்டுதான் படமே பார்த்தேன். ;)
அழகாக விமர்சித்து இருக்கிறீர்கள். கீழே விபரங்கள் எல்லாம் கொடுத்து இருப்பது பிடித்து இருக்கிறது. பாராட்டுக்கள் சிவா.

(அது சரி, படத்துக்கு டிக்கட் அறுசுவை கணக்கு தானே!!) ;)

‍- இமா க்றிஸ்