முன்தினம் பார்த்தேனே

முன்தினம் பார்த்தேனே


Movie review


சில நேரங்களில், சில கனவுகள் நனவாகாமலே இருந்து இருக்கலாம் என்ற ஒற்றை வரி கவிதையுடன் (கதையுடன்) வெளியாகி உள்ள படம் முன்தினம் பார்த்தேனே.

சஞ்சய் நவநாகரீக சென்னை இளைஞன். ஐ.டி. துறையில் நிறைவான வேலை. கொஞ்சம் மாடர்ன், கொஞ்சம் குடும்ப பெண்ணாக, அளவற்ற காதலுடன் ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்துக் கொள்ள வேண்டும் என்ற கனவுடன் இருக்கிறார். அந்த கொள்கைப்படி 'பூஜா'வை கண்டதும் காதலிக்கிறார். ஆனால் அவர் ஏற்கனவே நிச்சயிக்கப்பட்ட பெண். அதன் பிறகு, சுற்றி இருப்பவர்களால் தவறாக பேசப்படும் ஏக்தா மீது காதல் வயப்படுகிறார். ஏக்தா ஏற்கனவே ஒருவரை காதலித்தார் என்றும், அதன் மூலம் அவருக்கு ஒரு குழந்தை உண்டு எனவும் தவறாக புரிந்துக் கொண்டு, அவசர அவசரமாக தன்னுடன் பணிபுரியும் லிஸ்னா விடம் தன் காதலைச் சொல்லி, அவரையே கல்யாணமும் செய்கிறார். ஆனால் ஏக்தா வை பற்றிய உண்மை அறிந்து அவரை மறக்க முடியாமல் தவிக்கிறார்.

அழகான நாவலை போல் தெரியும் இந்த படம் ஒரு நாவல் படிக்கும் அனுபவத்தையே தருகிறது. 23 ல் இருந்து 30 வயதுக்குள் இருக்கும் இன்றைய இளைஞர்களால் இந்த படத்தில் நன்றாக இயல்பாக ஒன்றிப்போக முடியும். இன்றைய இளைஞர்களின் வாழ்வை மிக இயல்பாகவும், அழகாகவும் படமாக்கி உள்ளார் இயக்குனர் மகிழ்திருமேனி. இவர் கெளதம்மேனனிடம் உதவியாளராக இருந்தவர்.

mundhinam parthenலண்டனில் இருந்து சஞ்சய் ப்ளாஷ்பேகில் தன் கதையை தானே சொல்வது போல் ஆரம்பிக்கும் படம், அவர் தன் கதையை சொல்லி முடிப்பதோடு முடிகிறது. நல்ல முயற்சி. ஆனால் இந்த உத்தி எத்தனை பேருக்கு புரிந்து, கதையோடு ஒன்றி போக முடியும் என்று தெரியவில்லை. பல இடங்களில் வசனங்கள் பெருவாரியாக படத்திற்கு கை கொடுக்கிறது. நம் வாழ்வில் நடக்கும் நிகழ்வுகளுடன் இந்த படத்தின் வசனங்களை ஒப்பிட்டுக் கொள்ள வைக்கிறது. "சில கனவுகள் கனவாகாமலே இருந்து இருக்கலாம்", "நாம் அதிகம் நேசிக்கிற விஷயத்தை நாமே கொன்று விடுகிறோம்" போன்ற சிலவற்றை குறிப்பிடலாம்.

ஹீரோவாக சஞ்சய் (அறிமுகம்) சில இடங்களில் தன் யதார்த்த நடிப்பால் கவருகிறார். சில இடங்களில் ஒத்துழைக்கும் அவரின் முகம், பல இடங்களில் உணர்ச்சியே இல்லாமல் இருப்பது பலவீனம். இருந்தாலும் தன் வேலையை சரியாக செய்து உள்ளார். ஒரே நாள் பார்த்த பெண்ணிற்காக 40,000 ரூபாய்க்கு ஹேண்டி கேமிரா வாங்கி தருவது எல்லாம் டூ மச். நண்பர்களுடன் அடிக்கும் லூட்டியில் அவருக்கு காமெடியும் சிறிது கை கொடுத்து இருக்கிறது.

மூன்று கதாநாயகிகளில் ஏக்தா விற்கு மட்டும்தான் வேலை. மற்றவர்களுக்கு பாடல் காட்சிகளில் மட்டும்தான் வேலை. பூஜா வருகிறார். சஞ்சய் தன்னை காதலிப்பது தெரிந்து அவருடன் சுத்துகிறார், ஒரு பாடலுக்கு ஆடுகிறார். பின் நிச்சியக்கப்பட்டவனை திருமணம் செய்து கொண்டு மறைகிறார். ஏக்தாவிற்கு டான்ஸ் மாஸ்டர் வேடம். படம் முழுவதும் ஏக்தா தன் கோவம், ஆதங்கம், காதல், தோல்வி, ஈகோ போன்ற அனைத்து உணர்ச்சிகளையும் தன் முகத்தில் காட்டி, முழுவதுமாக ஸ்கோர் பண்ணுகிறார். ரயிலில் ஏக்தாவை சஞ்சய் சந்திக்க வரும் காட்சியில் சஞ்சய், ஏக்தா இருவருமே ஒரு வார்த்தை கூட பேசாமல் அற்புத நடிப்பை வெளிப்படுத்தும் காட்சியில், சஞ்சய் போன பிறகு ஏக்தா விடும் ஒரு சிரிப்பில் கண்டிப்பாக விரக்தியை காணலாம். Conduct Certificate கொடுத்து எல்லாம் லவ் பண்ண முடியாது என்று பிடிவாதம் பிடிக்கும் காட்சியிலும் நம் மனதில் நிற்கிறார். முயன்றால் தமிழில் நடிக்க தெரிந்த நடிகையாக வெற்றி பெற ஒரு வாய்ப்பு உள்ளது. லிஸ்னா சிரித்த முகத்துடன் வருகிறார். சஞ்சய் தன் காதலை கூறியதும் சந்தோஷத்துடன் ஏற்றுக்கொண்டு பண்பான மனைவியாக ஆகின்றார்.

mundhinam parthenஒளிப்பதிவு நன்றாக உள்ளது. வின்செண்ட் கேமிரா லண்டன், ஊட்டி என பல ஊர்களுக்கும், தேசங்களுக்கும் பறந்து நமது கண்களுக்கு பசுமையான விருந்து படைக்கிறது. பாடல்கள் எல்லாம் ஆவரேஜ் ரகம்தான். மோசம் என்று கூற முடியாவிட்டாலும் பாடல் காட்சிகளில் திரைஅரங்கு கேண்டீன்களில் விற்பனை ஜோர் தான். பின்னணி இசையும் ஓகே ரகம். குறிப்பிட்டு சொல்லவும், குறை கூறவும் வாய்ப்பு ஏதும் இல்லை.

அழகிய நாவல் போன்ற காட்சியமைப்பில் ஆங்காங்கே ஏற்படும் தொய்வை சரி செய்வது சஞ்சய்யின் நண்பர்களாக வரும் கதாபாத்திரங்கள் தான். அதிலும் சாய் பிரசாந்த். பல இடங்களில் அவர் மேனரிஸம் மற்றும் நடிப்பால் குபீர் என சிரிக்க வைக்கிறார். டான்ஸ் கிளாஸ்ல் மற்றும் ஹோட்டலில் ஒரு பெண்ணை காண போகும் இடங்களில் குலுங்க வைக்கிறார். தண்ணியடித்து புலம்பும் அந்த இளைஞனும், ஓவராக அலட்டல் காட்டும் அந்த பெண்ணும் கவனிக்க வைக்கிறார்கள்.

இவ்வளவு நல்ல விசயங்கள் இருந்தாலும், சஞ்சயின் எந்த காதலுக்கும் போதிய அழுத்தம் இல்லாததும், காட்சிகள் கோர்வை இல்லாததுபோல் தோன்ற வைக்கும் எடிட்டிங்கும், காதல், காதல், காதல் தவிர்த்து வேற ஏதும் இல்லை என்பது போன்ற காட்சி அமைப்புகளும், முகம் கூட மனதில் பதிய மறுக்கும் மற்ற இரு கதாநாயகிகளும் படத்திற்கு மிக பெரிய மைனஸ்.

எந்த ஒரு மசாலாத்தனமும் சேர்க்காமல் இன்றைய இளைஞனின் வாழ்வை, ஏற்ற இறக்கம் இல்லாமல் மிக அழகாக படமாக்கியதற்காகவும், அவசரத்தில் சரியாக விசாரிக்காமல் எடுத்த ஒரு முடிவால் வாழ்க்கை முழுவதும் பாரமாக மாறும் சோகத்தை கண் முன் நிறுத்துவதற்கும் இயக்குனரை பாராட்டலாம்

மொத்தத்தில் ஒரு 'Feel Good Movie" யாக இருந்திருக்க வேண்டிய படம். அதற்கான முயற்சியாக மட்டுமே மிஞ்சுகிறது. இந்த முயற்சிக்காக வேண்டுமானால் இந்த படத்தை பார்க்கலாம்.


படம் : முன்தினம் பார்த்தேனே (2010)
நடிகர்கள் : சஞ்சய், ஏக்தா, பூஜா, லிஸ்னா, சாய்
இசை : தமன்
ஒளிப்பதிவு : வின்செண்ட்
இயக்கம் : மகிழ் திருமேனி
தயாரிப்பு : செவன்த் சானல்

Comments

நம் வாழ்வில் நடக்கும் நிகழ்வுகளுடன் இந்த படத்தின் வசனங்களை ஒப்பிட்டுக் கொள்ள வைக்கிறது. "சில கனவுகள் கனவாகாமலே இருந்து இருக்கலாம்", "நாம் அதிகம் நேசிக்கிற விஷயத்தை நாமே கொன்று விடுகிறோம்"....

நல்ல வசனம். நீங்க சொல்றது உண்மை தான். இப்படி ஒரு படம் வந்ததே தெரியல :( எனக்கு. அத்தனையும் புது முகமா? ஒரு பேரு கூட கேட்ட மாதிரி இல்லை. இருந்தாலும் முயற்சியாது மிஞ்சி இருக்கே... அந்த அளவுக்கு தரமான படம்'னாலே பாராட்டுக்கு உரியது தான். நீங்க சொன்ன மாதிரி முயற்சி செய்திருக்காங்கன்னா அதுக்காகவே பார்த்துடறேன். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அன்பு நாகை சிவா

நிறைய படம் வந்திருக்கிறதே, உங்கள் விமரிசனங்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.

அன்புடன்

சீதாலஷ்மி

அன்புடன்

சீதாலஷ்மி

சிவா அவர்கள் அவசர காரணமாக இந்தியப் பயணம் மேற்கொண்டு, இப்போதுதான் மீண்டும் அவர் பணி புரியும் நாடு திரும்பி இருக்கின்றார். அடுத்த சில நாட்களில் அவரது திரை விமர்சனங்கள் தொடரும். :-)