கவிதைகள் - இளவரசி ஆனந்தராஜா

மறக்க முடியவில்லை..!

அன்பில் அமுதசுரபியாய்
நீ காட்டிய பாசம்
மறக்க முடியவில்லை..
வயல்வெளிகளில் உன்
விரல்பிடித்து நடந்த நாட்கள்
மறக்க முடியவில்லை..
ஆசைஆசையாய்
நீ உரித்து கொடுத்த
வேர்க்கடலையும், நுங்கும்,
இன்றுவரை இனிக்கும் இளநீரும்
மறக்க முடியவில்லை..
மடியமர்த்தி நீ சொன்ன
மகாபாரத இராமாயண
மகத்துவங்கள்
மறக்க முடியவில்லை..
நிலா முற்றத்தில்
நகைச்சுவை பொங்க
நீ சொல்லிய
அக்பர், பீர்பால் கதைகள்
மறக்க முடியவில்லை..
தள்ளாத வயதிலும்
தளராமல் உழைத்த
உன் சுறுசுறுப்பை
மறக்க முடியவில்லை..
மறுபிறவி உண்டென்று
நீ சொன்னதும்
மறக்க முடியவில்லை..
அது உண்மையெனில்..
மறுபடியும் வருவாயா..?
ஆம்..
நெஞ்சில் நிழற்படமாய்
சிரிக்கும் என்னருமை
தாத்தாவே..!
உம்மைத்தான்
அழைக்கிறேன்
மறக்காமல் வாருங்கள்..
மறக்க முடியவில்லை..

- ரசிராஜா

உனக்காக ஒரு கடிதம்..

அன்பே.. எனக்கொரு ஆசை
உனக்கு இடைவிடாமல்
எழுதிக் கொண்டேயிருக்கவேண்டும்..
எழுதும் சக்தியை என்
விரல்கள் இழக்கும் வரை.
உன் குரலை
கேட்டுக் கொண்டேயிருக்க வேண்டும்..
கேட்கும் சக்தியை என்
செவிகள் இழக்கும் வரை.
உன் முகத்தை
பார்த்துக் கொண்டேயிருக்க வேண்டும்..
என் இமைகள் மூடும் காலம் வரை.
நான் எப்போதும் உயிர் வாழவேண்டும்..
நான் சுவாசிப்பது
உன் நினைவுகளாய் இருக்கும் வரை.
மரணம் கூட மகிழ்ச்சிதான்
என்னோடு நீ இருக்கும் வரை..
மகிழ்ச்சிகூட மாயைதான்.
நான் உன்னோடு சேரும் வரை.
வானம் கூட எனக்குக் கீழே
நீ என்னோடு வாழும் வரை.
என் வெற்றிகூட தோல்விதான்
நீ என்னை வாழ்த்தாத வரை
என் தோல்வி கூட வெற்றிதான்
நீ என்னை ஆறுதல்படுத்தும் வரை.
உன்னில் உனக்காய் உன்னோடு
வாழும்போது எனக்கு
பாலைவனம்கூட சோலைவனம்தான்.!
நினைவால் உன்னை
நெருங்கி வாழ்கிறேன்..
கனவால் உன்னில்
கரைந்து போகிறேன்..
என்னை தொலைத்துவிட்டு
உன்னில் தேடிக்கொண்டிருக்கிறேன்..
எனக்குள் வினா எழுப்புபவனும் நீதான்..
அதற்கு விடையாய் இருப்பவனும் நீதான்..
எனக்குள் அனல் மூட்டுபவனும் நீதான்..
என்மேல் அருவிநீர் ஊற்றுபவனும் நீதான்..
என்னை உறங்கவைக்கும் தாலாட்டும் நீதான்..
என் உறக்கம் திருடும் கள்வனும் நீதான்..
என் பலமும் நீதான்..
என் பலவீனமும் நீதான்..
என் செல்லமும் நீதான்..
என் செல்களிலும் நீதான்..
என் மூச்சும் நீதான்..
என் முன்னேற்றமும் நீதான்..
என் இதயமும் நீதான்..
அதன் இயக்கமும் நீதான்..
என் கவிதையும் நீதான்..
அதன் காரணமும் நீதான்..

- ரசிராஜா

 
கனவும் நிஜமும்..

இமைகளை பிரிக்கவே பிடிக்கவில்லை
கனவுகள் கலைந்துவிடுமோ என்ற
கவலைதான்.
கனவில் மட்டும்
மணிக்கணக்காய் பேசுகிறோம்
நிஜத்திலோ
மௌனமே மொழியாகி போனதே
கண்கள் நடத்தும் கவிதை வாசிப்பை
உதடுகள் தடுத்துவிடும் என்பதாலோ..!

- ரசிராஜா

 

Comments

அன்பு இளவரசி,

கவிதைகள் அருமையாக இருக்கின்றது. எனக்கு அந்த "மறக்கமுடியவில்லை" கவிதையே பாராட்டியே ஆக வேண்டும், இது வரை அம்மா, அப்பா,காதலி, மனைவி,குழந்தை பற்றி அதிகம் படித்திருக்கிறேன். இது தான் நான் படிக்கும் முதல் தாத்தாவின் அன்பை உணர்த்தும் கவிதை. அருமைப்பா.......இதில் உள்ள பல வரிகள் இன்னும் என் வாழ்வில் நடந்து கொண்டிருப்பதால், படிக்கும் போதே கண்ணீர் வரவைக்கிறது. உண்மையிலும் உண்மை மறக்க முடியுமா???.

வாழ்த்துக்கள் ......எதிர்பார்கிறேன்.....

with love

நலமா இருக்கீங்களா?

மகள் நலமா?ஹஸ் நலமா?

தங்கள் கருத்துக்கு என் நன்றியும் மகிழ்ச்சியும்

தப்பா எடுத்துக்காதீங்க போனில் பொழுதுபோக அரட்டை அடிப்பதை நான் விரும்புவதே இல்லை.(உங்களிடம் கூட ஒருமுறை சொல்லியிருக்கிறேன்..)

எல்லாரும் பணம் முக்கியமென்பார்கள்...

நான் பணத்தைவிட நேரத்தை அதிகம் முக்கியமாய் நினைப்பேன்..

ஏனெனில் செலவிடுகின்ற நேரங்கள் நமக்கு திரும்ப கிடைப்பதில்லையே......

அதனால் எப்போதாவது முக்கியமான விசயமென்றால் நீங்கள் தாராளமாக பேசலாம்....

மற்றபடி கோபம் அல்லது வேறு காரணங்கள் ஏதுமில்லை

என்றும் அன்புடன்
இளவரசி

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

அன்புள்ள இளவரசி,

நீங்கள் சொல்லியப்படி நேரம் மிக முக்கியமான ஒன்று தான் அதை மறுக்கமுடியாது.

ஆனால் அரட்டை அடிப்பதற்க்காக போன் பண்ணவில்லை, தவறாக நினைக்க வேண்டாம்.....பணியில் இருப்பதால் எனக்கும் அதற்கு நேரமில்லை.....நட்புக்காக மட்டுமே......

நேரம் முக்கியமானது தான்....என்னை பொறுத்தவரை அதை நட்புக்காக செலவிடுவதை வீணாக கருதமாட்டேன்....:-)))

மன்னிக்கவும்....

with love

அன்புடன் இளவரசிக்கு! உங்கள் கவிதை அழகாகவும், அர்த்தமுள்ளதாகவும் இருக்கின்றது.
அருமையான வார்த்தைகள்.கவிதைகள் இப்படி வார்த்தைகள் குறைந்து இருக்கும் போது
படிக்க இலகுவாக இருக்கும்.வாழ்த்துகின்றேன்.தொடர்ந்து படையுங்கள் உங்கள் கவிதைகளை.
அன்புடன் ராணி

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

உங்களுடன் பேசி வெகு நாள் ஆகிறது.கவிதைகள் அருமை.மனம் இதமாக இருக்கும் பொழுது வரிகள் வந்து தானாக விழும்.பாராட்டுக்கள்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

யோகாராணி,உங்கள் வாழ்த்துக்கு நன்றி...நல்லா இருக்கீங்களா?
உங்கள் பெயரை எப்போது பார்த்தாலும் என் பள்ளித்தோழி யுவராணியின் முகம் மனதிற்குள் கண்சிமிட்டும்.அந்த ஞாபகத்தில்தான் யுவராணி என ஒருமுறை சொல்லிவிட்டேன்....உங்கள் கலக்கல் கலாட்டா அவ்வப்போது அங்கங்கே பார்க்கிறேன்...:-)

மீண்டும் சந்திப்போம்

அன்புடன்
இளவரசி

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

நல்லா இருக்கீங்களா?அவ்வப்போது உங்களை இங்குவிசாரித்து கொள்வேன்...:)
ப்ளாக் எப்படி போகிறது.

உங்கள் இமெயில் முகவரி உள்ளது..முடியும்போது நீண்ட மடல் அனுப்புகிறேன்..:-
உங்கள் அன்பான கருத்துக்கு என் நன்றி

அன்புடன்
இளவரசி

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

கவிதைகள் அனைத்துமே ரொம்ப அருமை. மூன்று கவிதையுமே நல்லா இருக்குது. அதிலும் மறக்கமுடியவில்லை தலைப்பில் இருக்கும் கவிதை சின்ன வயசு சேட்டைகளையும் தாத்தா பாட்டி வீட்டையும் நியாபகப்படுத்திட்டு. நன்றி இளவரசி பழைய நினைவுகளை உசுப்பிவிட்டதற்கு. தொடரட்டும் உங்க கவிதை பயணம்.
உங்கள் கவிதைகளை எதிர்நோக்கும் ஒரு வாசகி நான்.

உங்களின் பாராட்டிற்கு என் நன்றி....

என் வரிகள் உங்களின் நினைவலைகளை கிளறிவிட்டிருப்பதில் மகிழ்ச்சி..
மறுபடியும் சந்திப்போம்

அன்புடன்
ரசிராஜா

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

என்னங்க இது, இப்படி கலக்கறீங்க? இந்த கவிதைத் தொகுப்பை நான் இப்பதான் கவனிச்சேன். இத்தனை திறமையை வெச்சுட்டு ரொம்ப அடக்கமா பேசறீங்க. ஆச்சரியமா இருக்கு. ரொம்ப நல்லா இருக்கு எல்லா கவிதையும். என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.

உங்கள் பாராட்டுக்கு நன்றிங்க...
உங்க பதிவுகள் அனைத்தும் படித்தேன்...வெரி யூஸ்புல்...நானும்கூட ஒரு பதிவு போட்டிருந்தேன்....முடியும்போது பதில் போடுங்கள்...

என்றும் அன்புடன்
இளவரசி

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

இளவரசி இப்பதான் உங்கள் கவிதைகளைப் படித்தேன். அருமை. தாத்தாவைப் பற்றிய கவிதை எனக்கு ரொம்பவும் பிடித்திருக்கிறது.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

உங்கள் பாராட்டுக்கு நன்றி...மெயில் அனுப்பினேன்.பார்த்தீங்களா?

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

ஹாய் இளவரசி அக்கா நலமா ?எல்லா கவிதையும் ரொம்ப நல்லா இருக்கு

தங்களின் மனமுவந்த பாராட்டிற்கு என் மனமார்ந்த நன்றி

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

இலா ..உங்க கவிதைகளை இப்போதான் படித்தேன்..தாத்தா கவிதை ரொம்பவே நல்ல இருந்தது...அடுத்து பாட்டி கவிதை plz ...தரமான தமிழ் படிக்க நல்லா இருக்கு...வாழ்த்துக்கள் இளவரசி..

Madurai Always Rocks...

உங்களின் பாராட்டிற்கு நன்றி.....கவிதையே..என் கவிதையை பாராட்டுகிறது.....:-..அதனால் மகிழ்ச்சியும்கூட :-
:-
ஆனந்தி,நான் இளவரசிதான்..இலா இல்ல ..ஏன்னா இலான்னு வேறொருதோழியும் இருக்காங்க அறுசுவையில.........
நீங்களும் தொடர்ந்து எழுதுங்க

அன்புடன்
இளவரசி

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

dear friend elavarasi,
very nice kavithai....wrote continuosly...my best wishes...

Mr.Sowmiyan,very much thanks for ur comments..and feedback!!

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

இளவரசி................................
இனிமையான கவிதைகள்.
இப்போதுதான் படித்தேன்.
அனுபவித்து ரசித்தேன்
அணு அணுவாய் ருசித்தேன்.
தாத்தா பற்றிய கவிதை,நெஞ்சை நெகிழ வைத்தது.
கீழ் காணும் வரிகள்,மனதில் இடம் பிடித்தன.

\மௌனமே மொழியாகி போனதே
கண்கள் நடத்தும் கவிதை வாசிப்பை
உதடுகள் தடுத்துவிடும் என்பதாலோ..!/
அன்புடன்
தேன்மொழி

சிரிப்பே சிறந்த மருந்து

உங்கள் ரசனைக்கும்,பாராட்டுக்கும் என் உளமார்ந்த நன்றி...

சில நேரங்களில் கற்பனையைவிட நிஜங்கள் கவிதைக்கு சுவாரஸ்யம் தருகின்றன

என் கவிதையின் நிஜம் உங்களை நெகிழவைத்ததில் மகிழ்ச்சி

அன்புடன்
இளவரசி

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.