சிரியா ஒரு இனிய அனுபவம் - 2

Umayyad Mosque of Damascus


Syria


வீட்டுக்கு வந்ததும், இங்க இருக்குற ஒரு இந்தியர் வீட்டில இருந்து மதிய உணவுக்கு அழைப்பு வந்துச்சு. சரி நல்லதா போச்சு.. இப்ப இருக்கிற தூக்க கலக்கத்துல எங்க சமைக்கிறதுன்னு கிளம்பி போய் நல்லா சாப்பிட்டுட்டு வந்தோம். சாப்பிட்டு முடிஞ்ச பிறகு... வேற என்ன.. தூக்கம் தான். சாயங்காலம் எழுந்திரிச்சப்ப இராத்திரி சாப்பாட்டுக்கு எதாவது செய்யணுமே.. என்ன செய்யறதுங்கிற யோசனை வந்துச்சு. காய்கறி, மத்த பொருள் எல்லாம் வாங்கணும். சரி, வெளியே போய் வரலாம்னு முடிவு பண்ணினோம். அப்போதான் ஆரம்பமாச்சு, எங்க ஊர் சுற்றும் படலம்.

சிரியா உண்மையிலேயே ஒரு சின்ன நாடு. 'சிறியா' ன்னு தமிழ்ல எழுதினா ரொம்ப பொருத்தமா இருக்கும். பொறுமையா ரெடியாயி இரண்டு பேரும் ஊர் சுத்த கிளம்பினோம். அது செப்டம்பர் மாசம். வெயில் காலம் முடிஞ்சு குளிர் காலம் ஆரம்பமாகுற சமயம். பொதுவா அங்க இருக்கிறவங்க சொல்றது, "சிரியாவை சுத்திப் பார்க்க சரியான நேரம் செப்டம்பர், அக்டோபர் அப்புறம் மார்ச், ஏப்ரல் மாசம் தான்.."

வெளியே நடக்க ஆரம்பிச்ச பிறகுதான் அது எத்தனை உண்மைங்கிறது புரிஞ்சது. நடந்து போறப்ப அவ்வளவு இனிமையா இருந்துச்சு. பாலைவனமா இப்படி காட்சி தருதுங்கிற ஆச்சரியம் ரொம்ப நேரத்துக்கு என்னைவிட்டு போகலை. குளிர்ச்சியான காத்து, ஒருவிதமான பூ வாசம் ஊர் முழுக்க பரவி இருந்துச்சு. ரோடு ஓரம் முழுக்க முழுக்க மல்லிகை பூவா உதிர்ந்து கிடக்குது. நடைபாதை கழுவி விட்டது மாதிரி சுத்தம். இன்னும் கொஞ்ச தூரம் போன பிறகுதான் தெரிஞ்சது.. உண்மையிலேயே இந்த ஊரை தண்ணி ஊத்தி கழுவி விடுவாங்கன்னு. ஒரு பெரிய லாரி நிறைய தண்ணி கொண்டு வந்து, ஊத்தி சுத்தம் செய்றாங்க.. பாவி மக்கா... எங்க ஊருல குடிக்க தண்ணி இல்லாம கஷ்டபடுறானுங்க... நீங்க என்னடான்னா பாலைவனத்துல இருந்துகிட்டு, எப்படிடா இப்படி ஊத்தி, ஊத்தி கழுவறீங்கன்னு அவனை இரண்டு போடணும் போல இருந்துச்சு.

Barada river

அப்பத்தான் என்னவர் சொன்னார். "இங்க மனித வாழ்க்கை ஆரம்பமாக காரணமே இது தான்.. நல்ல வளம் இருக்கு இங்க. பராதா'னு ஒரு ரிவர் தான் இந்த ஊருக்கு முதல் அஸ்திவாரம்"னு. அதை பார்க்கணும்னு அப்பவே ஆசை ஒட்டிகிட்டுது.

இன்னும் கொஞ்ச தூரம் போனோம்.. பெரிய மார்க்கட் ஏரியா அது. மெஸ்ஸே ஜபல் னு பேரு. ('ஜபல்' ன்னா 'மலை' ன்னு அர்த்தம்). ஒரு காய்கறி கடை கண்ணில பட்டது. பார்க்க நம்ம ஊர் கடை மாதிரியேதான் இருக்கு. ஆனா காயெல்லாம் கழுவி, சுத்தமா அழகா அடுக்கி வச்சிருந்தாரு. என்ன காய் இருக்குன்னு பார்த்துட்டு இருந்தேன். அழகான குட்டி, குட்டி வெண்டைக்காயைப் பார்த்ததும் கிட்ட போயி கையில எடுத்துப் பார்த்தேன். சத்தியமா சொல்றேன்.. அந்த வெண்டைகாயை பார்த்தா அதை யாரும் "லேடீஸ் பிங்கர்"னு சொல்ல மாட்டாங்க.. "பேபீஸ் பிங்கர்"னுதான் சொல்வாங்க. அத்தனை பொடிப் பொடியா இருந்தது. ஆனா, வெண்டைக்காய் உயரத்துக்கு காம்பு இருந்துச்சு..! இதை வாங்கி, நான் எதை கட் பண்ண, எதை குழம்பில போட..?!

எதுக்கு வம்பு.. அடுத்து கத்திரிக்காய்... நிஜமாவே குண்டு குண்டு கத்திரிக்காய். ஒரு கத்திரிக்காய் வெட்டி ஒரு கல்யாணத்துக்கு சமைக்கலாம் போல.. அந்த சைஸ்க்கு இருந்துச்சு. நம்ம ஊருல நாட்டுக்காய்ன்னு சொல்ற வெரைட்டிஸ்ல இங்க கத்திரிக்காய் தவிர வேற எதுவும் கிடைக்காது. வெண்டைக்காய் ஒரு குறிப்பிட்ட மாசத்துல மட்டும் வந்து காணாம போயிடும். இப்படி சீசன்ல கிடைக்கிற காய்களையெல்லாம், இங்க உள்ளவங்க காய வச்சு, இல்லேன்னா ஃப்ரீஸ் பண்ணி வச்சிக்கிறாங்க. எனக்கு அப்போ இது எல்லாமே புதுசு. கிடைச்ச காய்களை வாங்கிக்கிட்டு அப்படியே ஹாயா நடந்து வீட்டுக்கு வந்தோம்.

வாங்கி வந்ததை சமைச்சு, சாப்பிட்டுட்டு கொஞ்ச நேரம் உட்காரலாம்னு, வீட்டில திறந்த பகுதியில வந்து உட்கார்ந்தோம்.. அடடா..! காணக் கண் கோடி வேணும்னு சொல்வாங்களே.. இங்க கோடி கூட பத்தாது. கோடி கோடியா வேணும் அந்த மலையோட அழகை இராத்திரி பார்க்கிறதுக்கு.!! அவ்வளவு அழகு.. மலை மேல எல்லாம் வீடுகள். இராத்திரி லைட் போட்டு இருக்க.. இங்க இருந்து பார்க்கிறப்ப, வானத்துல கலர் கலரா நட்சத்திரங்களை பார்க்கிறது மாதிரி இருந்துச்சு. கொள்ளை அழகு.

Qassioun hill

அதை பார்த்தா எங்க ரோடு இருக்கு, எப்படி அந்த வீட்டுக்கு எல்லாம் போறாங்கன்னு தோணுச்சு. அப்படி கொச்ச கொச்சன்னு வீடுங்க. "என்ன மலை இது... நம்ம வீட்டுக்கு இவ்வளவு பக்கத்துல இருக்கு?"னு என்னவரை கேட்டேன். "இது தான் காசியூன் மலை. இது சாதாரண மலை இல்லை, இந்த ஊரில இருக்கவங்களுக்கு இது புனிதமான மலை. காரணம் அந்த மலை மேல ஏசு கிருஸ்துவும், மொஹமத் ப்ராஃபட்டும் ஏறியதா புராணங்கள் சொல்லுது" னார்.. கேக்க ஆச்சரியமா இருந்துச்சு! "இதுக்கே இப்படி முழிச்சா எப்படி? இன்னும் இந்த ஊருல இது மாதிரி நிறைய விசேசங்கள் இருக்கு' ன்னார். அந்த அளவுக்கு புனிதமானதா நினைக்கப்படும் மலை என் கண் முன்னால.. அதுவும் நடந்து போற தூரத்தில..! எனக்கு சந்தோசம்னா சந்தோசம்.. அவ்வளவு சந்தோசம்.

பகல் நேரத்தில எங்க வீட்டு இன்னொரு பக்கத்தில இருந்து பார்த்தா, இந்த நாட்டின் ப்ரெசிடெண்ட் பேலஸ் தெரியும். அப்படி ஒரு முக்கியமான இடத்தில இருந்துச்சு எங்க வீடு. ரோட்டுல போற கார் எண்ணிக்கையில அடங்காது.. நம்ம ஊரில கொஞ்சம் அரிதா பார்க்கிற Benz, BMW, Opel, Audi, VolksWagon எல்லாம் இங்க சர்வ சாதாரணமா பார்க்கலாம். ஆனா ரெண்டு சக்கர வாகனம் கண்ணில படுறது ரொம்ப கஷ்டம்.

வாகனங்கள் அதிகம் இருந்தாலும், ரெண்டு சக்கர வாகனத்துக்கெல்லாம் நகரத்துக்குள்ள அனுமதி கிடையாது. கிராமங்கள்ல மட்டும்தான் அனுமதி. எல்லாம் சைனா மேக்கா இருக்கும். இங்க வாகனம் வாங்குறதும் அவ்வளவு ஈஸி கிடையாது. கிட்டத்திட்ட வாகனத்தோட விலையை வரியா கட்டணும். சொந்தமா கார் இல்லேன்னா கொஞ்சம் கஷ்டம்தான். ஊருக்குள்ள பிரச்சனை இல்லை. டாக்ஸி நிறைய இருக்கும். நம்ம ஊர் ஆட்டோ மாதிரி, மீட்டர் டாக்ஸிஸ் இங்க அதிகம். அப்புறம் சர்வீஸ்னு சொல்வாங்க. அது வேற ஒண்ணுமில்லை. நம்ம ஊர் வேன் தான். டவுன் உள்ளே எங்க போகனும்னாலும் நம்ம ஊர் பணம் 5 ரூபாய்தான் செலவு.

நாங்களும் ஊர் சுத்திப்பார்க்க ஒரு டாக்ஸ் பிடிச்சோம். என்னவர் மொபைல்ல எதையோ பார்த்துக்கிட்டு இருக்கிறப்ப, அந்த டாக்சி ட்ரைவர் என்னைப் பார்த்து, "ஹிந்தி" அப்படின்னு கேட்டார். அட இவருக்கு நம்ம ஊர் பாஷை கூட தெரிஞ்சிருக்கேன்னு நினைச்சுக்கிட்டு, நான் "நோ நோ.... தமிழ்" ன்னு சொன்னேன். என்னவர் என் கையை ஒரு அழுத்து அழுத்தினார். "ஐவா" னு (அராபிக்கில் ஆமாம் என்று அர்த்தம்) அந்த டிரைவர்கிட்டே சொன்னார். எனக்கு ஒண்ணும் புரியல. "மக்கு, அவர் உன்னை இந்தியனா?'னு கேக்குறார். (ஹிந்தி ன்னா இந்தியர் ன்னு அர்த்தமாம்) நீ என்னடான்னா நோ நோ.... தமிழ்ன்னு விளக்கம் கொடுக்கிற.." ன்னார்.
"ம்... நேரம்.. ஏதோ 4 நாள் அராபிக் படிக்க ஸ்கூல் போயிட்டு, நம்மை வாருரதை பாரு" ன்னு வாயை மூடிகிட்டேன்.

ஒரு வழியா கொண்டு போய் விட்டார் ஒரு மார்க்கெட் ஏரியால. பேரு சூக் ஹமீதியா (சூக் என்றால் கடை வீதி). நம்ம ஊரு மார்க்கெட் மாதிரி இல்லை. ஒரு பெரிய ரோட்டுக்கு ரெண்டு பக்கமும் வரிசையா கடைகள். ரோட்டுக்கு மேலே இரும்பு கூரை. உள்ளே போனா குளிர், வெயில் எதுவும் தெரியாது. உள்ளே நுழைஞ்சதுமே அங்க ஒரு ஷோகேஸ் பொம்மையா மாறிட்டேன். எல்லாரும் திரும்பி திரும்பி பார்த்தாங்க. பயந்து போய் என்னவர் கையை பிடிச்சது தான். அந்த இடத்தை விட்டு வெளியே வர்ற வரைக்கும் விடவேயில்லை. கடைக்காரர்கள் எல்லாம் ரொம்ப அன்பா கூப்பிட்டாங்க. எங்களுக்குன்னு நிறைய ஸ்பெஷல் டிஸ்கவுண்ட்ஸ் எல்லாம் கொடுத்தாங்க. இந்தியர்கள் மேலே இங்க உள்ளவங்களுக்கு அவ்வளவு விருப்பம்.

அந்த மார்கெட்டோட கடைசியில "ஒமாயித் மசூதி" இருந்துச்சு. இந்த நாட்டில இருக்கிற பழமை வாய்ந்த மசூதி. அங்க எல்லாருமே போகலாம். நாங்களும் போனோம். வெளியே இருந்த ஒரு ஆள் என்னவோ கையை ஆட்டி சொல்ல, ஒண்ணும் புரியாம செருப்பு போட்டுட்டு போகக்கூடாதுன்னு சொல்றாரோ என்னவோன்னு, நாங்க செருப்பை கழட்டிட்டோம். அவர் 'இல்லை, செருப்பை போட்டுக்கோங்கோ' ன்னு மறுபடியும் சைகை காமிச்சு, திரும்பவும் முன்ன மாதிரியே எதையோ சைகையில சொன்னார். கொஞ்ச நேர குழப்பத்துக்கு அப்புறம்தான் புரிஞ்சது, அவர் என்னை தலையில துணியை போட்டுக்கிட்டு போகச் சொல்றாருன்னு.

அவர் சொன்னபடி செஞ்சுக்கிட்டு, உள்ளே நுழைஞ்சோம். அடடா.. என்ன ஒரு பிரமாண்டமான வேலைப்பாடு! நம்ம ஊரு கோயில்கள்ல ஓவியங்கள் எல்லாம் பார்த்து இருப்பீங்க. அந்த மாதிரி ஒரு அற்புதமான வேலைப்பாடு. எல்லாமே ரொம்ப நேர்த்தியா, பிரமாண்டமா இருந்துச்சு. ஆனா, அதை பார்க்கிறதுக்கு மசூதி மாதிரி இல்லாம, ஒரு கிறிஸ்துவ ஆலயம் மாதிரி இருந்துச்சு. என்னன்னு கேட்டப்ப, உள்ளே இன்னமுமே ஒரு கிறிஸ்துவ ஆலயத்தோட ஒரு பகுதி இருக்கிறதா சொல்லி ஆச்சரியப்படுத்தினாங்க. வேற மதத்துகாரங்களுக்கு உள்ளே அனுமதி இல்லாததால, அதை பார்க்க முடியலை.

மசூதியை விட்டு வெளியே வந்ததும் குறுக்கே ஒரு தெரு போச்சு. என்னவர் சொன்னார்.. "இது சாதாரண தெரு இல்ல. இந்த ரோடு பேரு 'Straight Street'. இதைப் பத்தி பைபிள்ல குறிப்புகள் இருக்கு. அது மட்டும் இல்லாம, டமாஸ்கஸ் நகரமே இந்த இரண்டு ரோட்டை மையமா வச்சுத்தான் வடிவமைக்கப்பட்டிருக்கு"

நான் ஆசையா கேட்டேன்.. "இதைப் பத்தி பைபிள்ல என்ன இருக்கு?!"

அதை அடுத்த வாரம் சொல்றேன்..

Comments

வனித்தா மேடம் உங்ககூடயே நாங்களும் சுத்திபார்க்கற மாதிரி இருக்கு. நன்றி.

Don't Worry Be Happy.

வனிதா உங்கள் சுற்றுலா பற்றி படித்ததும், எனக்கும் ஒருமுறை அந்த நாட்டுக்கு போகவேண்டும் போல் உள்ளது.
நன்றாக ரசித்து பார்த்து அனுபவித்ததை, இங்கே தந்துள்ளீர்கள்.பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.
உங்கள் ஊரைவிட வெண்டக்காய் சிறிது.ஆனால் கத்தரிக்காய் பெரிது.அதன் வர்ணனை பார்த்து சிரிப்புத்தான் வந்தது.
நன்றாக எழுதியுள்ளீர்கள், வாழ்த்துக்கள்.தொடருங்கள் மிகுதியையும், தொடர்ந்து நானும் வருவேன்.

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

ஜெயலக்ஷ்மி... மிக்க நன்றி. இதுலயே சுத்தி பார்த்துடாதிங்க, நேரில் போய் வாங்க. சிரியாவை பார்க்க போறது சுலபம்... :) மற்ற நாடுகள் போல் இல்லாமல் செலவு குறைவு, விசா கிடைப்பது சுலபம், ஏமாற்று வேலை இருக்காது... இப்படி சொல்லிட்டே போலாம்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

யோகராணி... மிக்க நன்றி. அவசியம் போய் வாங்க சிரியா'கு. எப்போ போறதுன்னு திட்டம் போட்டுட்டு சொல்லுங்க. :) தொடர்ந்து படியுங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனி நாங்களும் உங்க கூட நல்லா சிறியாவை ஒரு ரவுண்டு வந்ததை போல இருக்கு.உங்க வர்ணிக்கும் தோரணை அப்படி.உண்மையிலேயே அந்த நாட்டின் அழகை சொல்றதுக்கும் ஒரு அழகிய ரசனை வேணும்.அது உங்க கிட்ட நிறையவே இருக்கு.
வனி இதை படிக்கும் போது நான் முதன் முதலில் துபாய் வந்து இறங்கியப்ப ஏற்ப்பட்ட நிகழ்வுகளை அப்படியே யோசிக்க வச்சிடுச்சு தெரியுமா...
வனி யாரு.....சிறந்த எழுத்தாளர்ன்னு நிருபிச்சிட்டாங்கல்ல....எல்லோரும் ஒரு ஓ போடணும்.
ம்ம்ம்.....அடுத்த பகுதியின் ஆவலை தூண்டுவதை போல முடிச்சு இருக்கீங்க.நாங்களும் அதே ஆவலோட மனசில்லாமல் இந்த பக்கத்திலிருந்து வெளியாகுறோம்.சரியா.....?

என்றும் அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

அப்சரா... மிக்க நன்றி. :) நேரம் ஒதுக்கி அத்தனை அன்பா மனதில் இருந்து போகாத பின்னூட்டம் தர எப்படி உங்களால் முடியுது???!!! உங்க ஒவ்வொரு பின்னூட்டமும் அத்தனை அன்பை காட்டுது. ரொம்ப நன்றிங்க. தொடர்ந்து என் கூடவே சுத்துங்க சிரியாவை. ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹாய் வனிதா, உங்க கட்டுரையைப் படிச்சா, செலவே இல்லாமல் சிரியாவை சுற்றிப் பாக்கற மாதிரி இருக்கு. ரொம்ப விளக்கமா, அதே சமயம் எதார்த்தமா எழுதறீங்க. படிக்க சுவாரஸ்யமா இருக்கு. இப்படி பயணக்கட்டுரை படிப்பது நல்லா இருக்கு. சிரியாவை எப்ப வந்து சுத்திப் பாக்கப்போறேனோன்னு தெரியல. ஆனால் இப்ப யாராவது கேட்டால் அங்கேயே ரொம்ப நாள் தங்கி சுத்தின மாதிரி தகவல்களை அள்ளி விட்டுடலாம். அத்தனை தெளிவா சொல்லி இருக்கீங்க. பாராட்டுக்கள்.

தேவா மேடம்... மிக்க நன்றி. உங்களை போல் அனுபவம் உள்ளவர்கள் பின்னூட்டத்தை படிக்கும்போது மகிழ்ச்சியை சொல்லவே வேண்டாம்.... தொடர்ந்து படியுங்க... உங்க கருத்துக்களை பதியுங்க. மிக்க நன்றி. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

Hi Mrs.vanitha.. really interesting .. issue ur third part soon. seems like navel. really u have talent to showcase ur experience in an interesting way ;-)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

நீங்க இந்த நாட்டை பற்றி சொன்ன விதம் மிக அருமை, எனக்கும் பர்க்கணும் போல் இருக்கிறது, Straight Steet பற்றி , சீக்கிரம் சொல்லுங்கள், தெரிந்துகொள்ள ஆசையாக இருக்கு.

எப்பொ அடுத்த பாகத்த வெளியிட போறீங்க ... சீக்கரமா அனுப்புங்க பா......

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

ரம்யா... மிக்க நன்றி. தாமதமான பதிலுக்கு மன்னியுங்கள். பார்க்காமல் விட்டிருக்கேன். அடுத்த பாகம் சீக்கிரம் வந்துடும். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மனோ பாரதி... மிக்க நன்றி. :) நான் உங்க பதிவை கவனிக்கலப்பா, அதான் பதிலுக்கு தாமதமாயிட்டுது. மன்னிச்சுடுங்க. அடுத்த பாகம் விரைவில் வந்துடும். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அன்பு வனிதா,

இன்னிக்குதான் எல்லாருக்கும் பதில் பதிவு கொடுத்துட்டு இருக்கேன்.

உங்க எழுத்து நடை ரொம்ப சரளமாக இருக்கு. வாழ்த்துக்கள்!

அடுத்த பகுதி எப்போ? அந்த ஐஸ்கிரீம்(இடித்து செய்கிற ஐஸ்கிரீம்)பற்றிப் படிக்க ஆவலோட காத்துட்டு இருக்கேன்.

ஒரு சின்ன வேண்டுகோள் - புகைப் படத்தின் அடியில் அதைப் பற்றிய குறிப்பு கொடுங்களேன். மேலே இருப்பது உங்க வீட்டில் இருந்து எடுத்ததா?

அன்புடன்

சீதாலஷ்மி

அன்புடன்

சீதாலஷ்மி

அன்பு சீதாலக்ஷ்மி... உங்க ஆலோசனை நன்றாக இருக்கிறது... மிக்க நன்றி. நான் அண்ணா'விடம் கேட்கிறேன். அடுத்த பகுதி எப்போ வெளியிடுவதுன்னும் அண்ணா தான் முடிவு பண்ணனும். ;) தொடர்ந்து படித்து கருத்து சொல்லுங்க... ரொம்ப சந்தோஷமா இருக்கு உங்க பின்னூட்டம் பார்க்க. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

சிரியாவுக்கு ஷாம் அப்டின்டு பழைய பேரு இருக்காம். அது உண்மையா?
என் மகன் பேருக்கு அர்த்தம் தேடும் போது ஒரு புக்கில் பார்த்தேன்.
(என் மகன் பெயர் ஷாம்)

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

அமினா... ஆம் Damascus'ஐ al-sham or cham என்று அராபிக்கில் சொல்வார்கள். ஷாம் என்று சொல்லும்போது சிரியா மட்டும் அன்றி லெபனான், இஸ்ரேல், பாலஸ்தீன், ஜோர்டான் பகுதிகள் எல்லாம் சேர்ந்து வரும். இப்போ இருக்க 'சிரியா' என்பதே ஆங்கில பெயர் தான். அராபிக்கில் 'சூர்யா' என்றே அழைப்பார்கள்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ரொம்ப நாட்களாக கேள்வி மேல் விழி வைத்து காத்திருந்தேன்.பதிலுக்கு மிக்க நன்றி!!!!!! மிக்க நன்றி!!!!!!!

(10 நாட்களுக்கு பிறகு இப்ப தான் பதில் போடணும்டு தோணுச்சா மேடம்.)

அன்புடன்,
ஆமினா.

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

தாமதத்துக்கு மன்னிக்கனும். இன்று தான் பார்த்தேன் உங்க கேள்வியை. பகுதி 3'ல் கேட்டிருந்தால் உடனே பார்த்திருப்பேன்... சமீபத்திய பதிவுகள் பார்ப்பது இப்போது சிரமமாக இருப்பதால் இதை மிஸ் பண்ணிட்டேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

சிரியா என் கண் முன்னால்....நன்றாக சுவாரசியமாகவும் எளிமையான எழுத்து நடை. எனக்கு ஒரு கேள்வி. கல்யாணம் ஆகி எவ்ளோ நாள் ஆகிறது? ஒவ்வொரு நிகழ்ச்சியையும் எப்படி இப்படி நினைவு கொண்டு அழகாக எழுதுறீங்க.....???

வாழ்த்துகள்.
லாவண்யா

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

லாவண்யா... மிக்க நன்றி. இதை எழுத ஆரம்பித்த போது திருமணம் ஆகி 2 வருடம். நினைவு வைத்து எழுத முடியும் காரணம் ஒன்று தான்... அந்த இடம் மனதுக்கு பிடித்து போனது, முதன் முதலில் திருமணம் ஆகி என்னவரோடு நான் வாழ்க்கையை துடங்கிய இடம். நடந்த ஒவ்வொரு நிகழ்வும் கண் முன் இன்றும் இனிமையாக இருக்கிறது :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

இருந்தாலும் வெண்டைகாய்க்கும் கத்தரிக்காய்க்கும் விளக்கம் குடுத்தீங்கலே சிரிச்சு வயிரே வலிக்குது ( எதை கட் பண்ண, எதை குழம்பில போட..?!)

மிக்க நன்றி. விடாம எல்லா பகுதியும் படிச்சு முடிச்சுட்டீங்க போலிருக்கே :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஆமா வனி எனக்கும் சந்தோஷம்.;) நான் பைபிள் லில் படித்த நாட்டை பற்றி தெரிஞ்சுகிறது எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு;)))) ரொம்ப நன்றி வனி;)

உன்னை போல பிறரையும் நேசி.

மிக்க நன்றி. அப்படின்னா என்னைவிட உங்களுக்கு அந்த இடம் பற்றி அதிகமா தெரியும்... :) தகவல் சொல்லுங்களேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா