படித்தவை, ரசித்தவை.. சீதாலஷ்மி

தில்லானா மோகனாம்பாள்


Books Review


சென்ற வாரம் “தில்லானா மோகனாம்பாள்” நாவலைப் பற்றி எழுதுவதாகச் சொல்லி இருந்தேன் அல்லவா, அது பற்றி ..

சாதாரணமாக நாவல்கள் பத்திரிக்கைகளில் தொடராக வரும் போது பெறும் வரவேற்பை, அவை திரை வடிவம் பெறும் போது பெறுவதில்லை. இதற்கான காரணங்கள் பற்றி ஆராய்ச்சிக் கட்டுரையே சமர்ப்பிக்கலாம். இந்த நாவல் ஒரு சிறப்பான விதி விலக்கு. தொடராக வெளி வந்த போது மகத்தான ஆதரவைப் பெற்றதாகப் படித்து இருக்கிறேன். அதே போல திரைப்படமாக வந்த போதும் மிகப் பெரிய வெற்றிப் படமாக இது அமைந்தது.

இந்தப் படத்தை பல முறை பார்த்து இருக்கிறேன். சிவாஜி, பத்மினியின் நடிப்பு, பத்மினியின் நடனம், மனோரமாவின் வசன உச்சரிப்பு(டேய் ராசு, ராசப்பா, ஐயாவுக்கு டேஜிலேயே ஒரு சேரைப் போட்றா.. ) நாகேஷின் சவடால் நடிப்பு, பாலையாவின் நுணுக்கமான முக பாவங்கள், இசை, அவ்வளவு ஏன் - சி.கே.சரஸ்வதியும் பத்மினியும் கட்டிக் கொண்டு வரும் பட்டுப் புடவைகள் அவற்றின் வண்ணக் கலவைகளைக் கூட ரசித்துப் பார்த்து இருக்கிறேன்.

கதாநாயகன், நாயகியின் கலைத் திறமையின் பின்னணி, மோதலில் ஆரம்பிக்கும் அவர்களது சந்திப்பு, இருவரும் தங்களுக்குள் ரசிகர்களாவது, நாயகனின் கோபம், ஈகோ, சந்தேகம், அந்த சந்தேகத்தின் அடிப்படை அன்புதான் என்பதைப் புரிந்து கொள்ளும் நாயகி, இப்படி எழுத்தில் பக்கம் பக்கமாக எழுதக் கூடிய உணர்வுகளை - ஜஸ்ட் லைக் தட் - தங்கள் அனுபவத்தினால் திரையில் கொண்டு வந்திருந்தார்கள் சிவாஜியும் பத்மினியும்.

இந்தப் படத்தை பல முறை ரசித்துப் பார்த்தது உண்டு. பார்க்கும் ஒவ்வொரு முறையும் நாவலை எழுத்து வடிவில் படித்ததில்லையே என்ற எண்ணம் எழும். நம் தோழிகளில் பலர் பொன்னியின் செல்வன் நாவலைப் படித்து இருக்கலாம். அந்த நாவலைப் படித்த அனைவருமே கண்டிப்பாக அவரவர்களுக்குப் பிடித்த நடிக நடிகையரை வைத்து அந்த நாவலை (கற்பனையில்தான்) படமாக்கி மகிழ்ந்து இருப்பீர்கள்.

திரு சுஜாதா “விக்ரம்’ படத்துக்கு கதை, வசனம் எழுதிய போது, அது படமாகும்போதே ”குமுதம்” பத்திரிக்கையில் தொடராக வெளி வந்தது. வில்லனைப் பற்றி அவர் எழுதிய பகுதி வந்ததுமே, அந்த வேடத்துக்கு திரு சத்யராஜ் அவர்கள்தான் பொருத்தமானவர் என்று ஏராளமான வாசகர்கள் கடிதம் எழுதினார்கள். அதே போல், படத்திலும் அவர்தான் நடித்தார்.

இந்த நாவலை முதலில் எழுத்து வடிவில் படித்து, பின் திரைப்படமாகப் பார்த்திருந்தால் எந்த அளவில் ரசித்து இருக்க முடியும் என்று எண்ணியது உண்டு.

சமீபத்தில்தான் நாவலைப் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. உண்மையில் கதையை மிகக் கச்சிதமாக சுருக்கி, திரை வடிவம் ஆக்கித் தந்து, ரசிக்க வைத்த மிகச் சிறந்த கலைஞரான திரு.ஏ.பி. நாகராஜனின் திறமையை எண்ணி தலை வணங்கத் தோன்றுகிறது.

வெறும் கதையாக மட்டும் அல்லாமல், அந்த கால கட்டத்தின் வாழ்க்கை முறையும் ஒரு சரித்திரப் பதிவாகவே தெரிந்து கொள்ள முடிந்தது. இதை படிக்கும் போது எனக்கு முக்கியமாகத் தோன்றிய ஒன்று - அப்போதெல்லாம் தமிழிசைதான் இசையிலும் நடனத்திலும் ஆட்சி செய்து வந்திருக்கிறது என்பதுதான். அதே போல ஒவ்வொரு ராகத்தை பற்றியும், பாடல்கள் பற்றியும் திரு.கொத்தமங்கலம் சுப்பு அவர்கள் அதிலேயே உருகி, மூழ்கி, தோய்ந்து, எழுதி இருப்பதைப் படித்த போது, நமக்கு இசை பற்றி அதிகமாக தெரியவில்லையே, இசையை முறையாகக் கற்றிருந்தால் இன்னும் ஆழமாக ரசிக்கலாமே என்ற ஏக்கமே எழுந்து விட்டது.

கதையில் இடம் பெறும் நீதி மன்றக் காட்சிகள் படத்தில் கிடையாது. இன்னும் சிங்கபுரம் மைனர், அவரது மனைவி, மாமனார், இவர்களது பகுதி நாவலில் அதிகம். நடேசன் போன்ற சில கதாபாத்திரங்களை நாவலில் மட்டுமே சந்திக்க முடிந்தது. ஜில் ஜில் ரமாமணியின் கதா பாத்திரம் படத்திலும் நாவலிலும் சித்தரிக்கப் பட்டுள்ள விதம் வித்தியாசமாக இருந்தாலும், இரண்டுமே மனதில் சித்திரமாகப் பதிந்து போய் விட்டது.

சிக்கல் சண்முகசுந்தரம்-மோகனாம்பாள் திருமணக் காட்சி, மோகனாம்பாள் தனது மகளின் திருமணத்தை எண்ணிக் கலங்குவதைப் வர்ணித்து இருக்கும் விதம் - எப்படி சொல்ல!

தாசி குலத்தில் பிறந்த தன் மகள் திருமணம் செய்து கொண்டால் மற்றவர்கள் எப்படி பேசுவார்களோ என்று ஒரு எண்ணம், அவளது நடனக் கலை திருமணத்துக்குப் பின் தொடருமா என்ற கவலை, மாப்பிள்ளை பணம் படைத்தவன் அல்லவே என்ற வருத்தம், இவை அனைத்தையும் மீறி, மகளுக்கு திருமணம் என்ற மகிழ்ச்சியுடன் அவளுக்கு எல்லா நகைகளையும் அணிவித்து அழகு பார்த்து ரசிக்கும் விதம், - திரும்பத் திரும்பப் படித்தேன், ரசித்தேன்.

வாய்ப்பும் நேரமும் கிடைத்தால் நீங்களும் படித்து, ரசிக்கலாமே.

அன்புடன்
சீதாலஷ்மி

Comments

anbu seethalakshmi nan unaludaia pathivai padithen unmayil thillanamoganambal padam frame by frame rsithu parthen ponniyin selvan neengal sonnathu pole kathapathirangalukku poruthamana nadigarkalai manadhil vaithu padithean migaum nandraga irunthathu.see u.

life is short make it sweet.

சீதாலஷ்மி மேடம்,
உங்க‌ளோட‌ முத‌ல் ப‌குதியை ப‌டித்து நேற்றுதான் (ஸாரி மேம், நான் கொஞ்சம் லேட்டா சொல்றேன்.) அங்கே ஒரு ப‌திவு போட்டுவிட்டு வந்தேன். (உங்க‌ளுக்கு நேர‌ம் கிடைக்கும்போது ப‌குதி 1 பின்னூட்ட‌த்தையும் பாருங்க‌ள்!.)

உங்க‌ளுடைய‌ ப‌குதி 2‍-ம் அருமை. 'தில்லானா மோக‌னாம்பாள்' ப‌ட‌ம் பார்த்திருக்கிறேன், ரசித்திருக்கிறேன்!. அது முத‌லில் க‌தையாக‌ வந்த‌‌தே என‌க்கு தெரியாது மேட‌ம். நீங‌க‌ள் சொல்லித்தான் அறிகிறேன். உங்க‌ள் எழுத்துக்க‌ளில் இருந்து, கதையும் படத்தை போலவே, ப‌டிப்ப‌த‌ற்கு ரொம்ப‌ அருமையா, சுவாரசியமா‌ இருக்குமென்று இப்போது தெரிகிற‌து. சந்த‌‌ர்ப்ப‌ம் கிடைத்தால் க‌ட்டாய‌ம் ப‌டிக்கிறேன் மேட‌ம். தொடர்ந்து எழுதுங்க‌. ந‌ன்றி!

அன்புடன்
சுஸ்ரீ

அன்பு கீதாஜி,

பின்னூட்டத்துக்கும் மிகவும் நன்றி.

பொன்னியின் செல்வன் நாவல் கல்கியில் மூன்று முறை வெளியிடப் பட்டது. இரண்டாம் முறை ஓவியர் வினு வரைந்தார். மூன்றாவது முறை ஓவியர் மணியம் அவர்களின் படங்ளுடனேயே வெளியிட்டதாக நினைவு. ஒவ்வொரு முறையும் சர்க்குலேஷன் மிக அதிகரித்ததாக சொல்வார்கள்.

இந்த நாவலைப் படமாக்கும் உரிமை திரு எம்.ஜி.ஆர் மற்றும் திரு கமலஹாசன் முதலியோர் வாங்கி இருந்தார்களாம். (தங்கப் பதக்கம்)திரு.மகேந்திரன் அவர்கள் திரு எம்.ஜி.ஆரின் வீட்டிலேயே சில காலம் தங்கி, இந்த நாவலுக்கு திரைக் கதை வடிவம் அமைத்துத் தந்ததாக ஒரு பேட்டியில் படித்தேன்.

கல்கி அவர்களின் மகன் திரு இராஜேந்திரன் அவர்கள் இந்த நாவலை படமாக்கும் உரிமையைத் தரும் போது அதில் ஒரு நிபந்தனை சேர்த்து இருப்பாராம், அதாவது – குறிப்பிட்ட காலத்துக்குள் படமாக்காவிட்டால், உரிமை மீண்டும் தன்னிடமே வந்து விடும் என்று. அதனால்தான் திரைப் படமாக்கும் உரிமை பலரிடம் கை மாறியது.

இப்போது கல்கியின் படைப்புகள் நாட்டுடைமை ஆக்கப் பட்டு விட்டன. இரு வேறு நிறுவனங்கள் தொலைக் காட்சி தொடராகத் த்யாரிக்க ஆரம்பித்ததாக செய்திகள் வந்தன. என்ன ஆச்சு என்று தெரியவில்லை. “லாண்டர்ன்” என்ற நாடகக்குழுவும் மற்றும் சில குழுக்களும் நாவலின் சில பகுதிகளை மட்டும் மேடையேற்றினார்கள் என்று தகவல்.

பள்ளி, கல்லூரி விழாக்களில் ஷேக்ஸ்பியரின் நாடகங்களை மேடையேற்றுவதை பழக்கமாக வைத்து இருக்கிற மாதிரி, இந்த நாவலின் சில பகுதிகளையாவது நாடகமாக மேடையில் அளித்தால் நன்றாக இருக்கும்.

அன்புடன்

சீதாலஷ்மி

அன்புடன்

சீதாலஷ்மி

அன்பு சுஸ்ரீ,

உங்கள் பின்னூட்டம் பார்த்து ரொம்பவே சந்தோஷமாக இருக்கு. பொறுமையாக 2 பாகத்திலும் கொடுத்து இருக்கீங்க. மிகவும் நன்றி.

/அப்பா அறிமுகப் படுத்தி/ என்று நீங்கள் சொல்லி இருக்கும் போது – அதிலே செண்டிமெண்ட் அட்டாச்மெண்டும் தெரிகிறது. கரெக்டா?

ராஜேந்திரகுமாரின் “ வால்கள்” சிறுகதைகள் படிச்சு இருக்கீங்களா? ரொம்பவே ஜாலியான கதைகள். சென்னைத் தொலைக் காட்சியில் 13 வாரத் தொடர்கள் வர ஆரம்பித்த புதிதில் இந்தக் கதைகளை தொடராக எடுத்தால் நன்றாக இருக்குமே என்று நினைத்தது உண்டு. அவருடைய கதைகளில் ஹீரோ எப்பவுமே “கீழ் வரிசைப் பற்கள் தெரிய” சிரிப்பார், அப்புறம் கண்டிப்பாக ”ஙே” என்று விழிப்பார். இந்த எழுத்தை கம்பாசிடர் இவர் கதைக்கு மட்டும்தான் பயன் படுத்துவார் என்று ஜோக் சொல்வதுண்டு.

பாக்கெட் நாவல்கள் பற்றியும் பேச வேண்டும் என நினைத்து இருக்கிறேன்.

நான்கு வருடங்களுக்கு முன் சுஜாதா சாரை புத்தகக் கண்காட்சியில் சந்தித்து, அவரது “ஸ்ரீரங்கத்து தேவதைகள்” புத்தகத்தில், அவரது கையெழுத்து வாங்கி, அவருடன் புகைப் படமும் எடுத்துக் கொண்டு இருக்கிறேன். நீங்கள் குறிப்பிட்டு இருக்கும் அத்தனை கதைகளையும் நிறைய தடவை, மீண்டும் மீண்டும் படித்து இருக்கிறேன்.

சந்தர்ப்பம் கிடைத்தால் “தில்லானா மோகனாம்பாள்” நாவலை அவசியம் படியுங்கள். இது ஆனந்த விகடனில் தொடராக வாரா வாரம் வெளி வந்த போது, இரயிலில் புத்தகக் கட்டு பிரிக்கும் இடத்துக்கே வந்து, காத்து இருந்து, அங்கேயே வாங்கி உடனே படிப்பார்களாம் வாசகர்கள். அவ்வளவு வரவேற்பு இருந்ததாம். நான் கொஞ்சம்தான் எழுதி இருக்கிறேன். நல்ல ரசனை உள்ள உங்களைப் போன்ற தோழிகளால் அதன் சிறப்பு பற்றி, இன்னும் நிறைய இங்கே பேசலாம். விவாதிக்கலாம்.

அன்புடன்

சீதாலஷ்மி

அன்புடன்

சீதாலஷ்மி

நான் இந்த நாவலில் ஒரு இரண்டு அத்தியாயம் போலதான் படித்திருக்கிறேன். அதுவும் கூட 6 வது படிக்கும்போது, ஏதோ பைண்ட் செய்த புத்தகத் தொகுப்பில் அந்த இரண்டு அத்தியாயம் மட்டுமே இருந்தது. இப்போது நீங்கள் எழுதியிருப்பதைப் பார்த்ததும் உடனே படிக்கணும்னு ஆசையா இருக்கு. எந்த எழுத்தாளரின் பேட்டியைப் படித்தாலும் இந்த கதையைப் பற்றி சிலாகித்து சொல்லி இருப்பாங்க. நீங்க ரொம்ப ரசிச்சு சொல்லி இருக்கீங்க. மென்புத்தகமாக கிடைக்கிறதான்னு தேடிப் பார்க்கணும். இன்னும் இது போல நிறைய புத்தகங்களைப் பற்றி நீங்கள் எழுத, படிக்கறதுக்கு ஆவலா இருக்கு. இப்படி ஒரு புத்தக ரசனை உள்ளவங்ககிட்ட நாள் முழுக்க பேசிட்டு இருக்கணும்னு தோணுது. இன்னும் நிறைய புத்தகங்கள் பற்றி எழுதுங்க. மிகவும் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்.

அன்பு சீதா லக்ஷ்மி சரித்திர கதைகள் ,கல்கி ,சாண்டில்யன்,பற்றி சொல்லுங்கள்.

life is short make it sweet.

சீதாலக்ஷ்மி... எனக்கு ரொம்ப பிடிச்ச படம்... உங்க எழுத்தை படிக்கும்போது அப்படியே படத்தை ஒருமுறை கண் முன் கொண்டு வந்துட்டுது.... :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

சீத்தாமா! ரொம்ப அருமையான பகுதி! என்னைப்போல புத்தக பிரியைகளுக்கு இன்னும் பல புத்தகங்களை அறிமுகப்படுத்துங்க. ஊருக்கு வரும் போது வாங்க வேண்டிய புத்தக லிஸ்ட் அதிகமாகிட்டே போகுது. எனக்கு பிடித்த அந்த கால நாவல் "பிரதாப முதலியார் சரித்திரம்" எங்கயோ கூகுளித்துக் கொண்டு இருந்த போது பிடிஎஃப் ஆக கிடைத்தது. அந்த காலத்திலே எப்படி இப்படி நகைச்சுவையா எழுதமுடியுதுன்னு ரொம்ப ஆச்சரியபட்டு இருக்கிறேன்...எனக்கு ஒரு பழக்கம்.. தமிழ் புத்தகம் மட்டும் நான் சுட்டால் திரும்பி வராது :))

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

சீதாலஷ்மி மேடம்! நீங்க இந்த தில்லானா மோகனாம்பாள் மூலமா எனக்கு என் அம்மாவை நினைவுபடுத்தி விட்டீர்கள்! இந்த கதை விகடனில் தொடராக வந்தபோது ஒரு வாரம் தவறாமல் படித்திருப்பதாக சொல்லியிருக்கிறார்கள்.எத்தனை முறை T.V யில் போட்டாலும் பார்ப்பார்கள்.ஆனால் இன்னைக்கு அவங்க உயிருடன் இல்லை.

அன்பு சீதாலஷ்மி, உங்கள் இந்தப் பகுதியை ரசித்துப் படிக்கிறேன். ;)

‍- இமா க்றிஸ்

இந்த படத்தை நான் ஒரு 5 அல்லது 6 முறை பார்த்து இருப்பேன். ஒவ்வொரு முறையும் ரொம்ப ரொம்ப ரசிச்சு ரசிச்சு பார்த்த படம். நானும் இந்த புத்தகத்த ரொம்ப தேடிட்டேன் இன்னும் கிடைக்கவே இல்லை ஆனாலும் தேடல் தொடரும். இன்னும் நல்ல நிறைய புத்தகங்களை எங்களுக்கு அறிமுகம் செய்து வைங்க மேடம்.ரொம்ப ஆவலுடன் இருக்கிறேன். எப்படியும் இந்த புத்தகத்தை கண்டு பிடிச்சுடுவேன்.

அன்பு தேவா,

நானும் மற்ற எழுத்தாளர்கள் பல பேட்டிகளில் சொன்னதை வச்சுதான் இந்தக் கதையைப் படிக்கணும்னு தேடிப் பிடிச்சுப் படிச்சேன். நான் சொல்லியிருப்பது கொஞ்சம்தான். இன்னும் பாரி நாயனம், திருவாரூர் நாயனம் வாசிப்பதைப் பற்றிய மரபு, இன்னும் நுணுக்கமாக, நாதஸ்வரம் வாசிப்பவர்கள் செய்யும் அசுர சாதகம், அதனால் அவர்களுக்கு வரக் கூடிய நெஞ்சு வலி போன்ற உடல் நலக் குறைவு(இயல்பாகவே கலைஞர்கள் எமோஷனல் ஆக இருப்பதும் கூட), சிக்கல் சண்முக சுந்தரத்துக்கு வரும் உடல் நல பாதிப்பு, கலைஞர்களை ஆதரிக்கும் பெரிய மனிதர்கள் – சிலர் செய்யும் ஹீரோ(யின்) வொர்ஷிப், சிலர் அவர்களை கடைச் சரக்காக நினைப்பது – இப்படி இரு வேறு எல்லைகளிலும் இருக்கும் ரசிகர்கள் – அவர்களால் கிடைக்கும் உதவிகள், பாதிப்புகள் என்று ஒவ்வொரு பக்கத்திலும் நாமும் சண்முகசுந்தரம், மோகனா எல்லோருடனும் கூடவே திருவாரூர், நாகபட்டினம், கொழும்பு என்று போய், எல்லா அனுபவங்களயும் கூடவே இருந்து பார்த்த உணர்வு வருகிறது.

எனக்கு உங்கள் அளவு நிறைய தட்டச்சு செய்ய முடியவில்லை தேவா, அதுதான், நிறைய எழுத முடியலை, பேசச் சொன்னீங்கன்னு வச்சுகோங்க, போதும் போதும்னு சொல்ற அளவு பேசிடுவேன்:)

தொடர்ந்து படிச்சு, பின்னூட்டம் குடுங்க, ப்ளீஸ்,

அன்புடன்

சீதாலஷ்மி

அன்புடன்

சீதாலஷ்மி

அன்பு கீதாஜி,

தமிழில் தட்டச்சு செய்யத் தொடங்கி விட்டீர்கள், வாழ்த்துகள். கல்கியின் அத்தனை நாவல்களையும் படித்திருக்கிறேன். கொஞ்சம் மற்ற எழுத்தாளர்களின் படைப்புகளைப் பற்றி எழுதி விட்டு, அப்புறம் எழுதலாமேன்னு யோசனை. சாண்டில்யனின் சரித்திர நாவல்களை விட அவர் எழுதிய சில சமூக நாவல்கள் என்னைக் கவர்ந்ததுண்டு. குறிப்பாக ‘மது மலர்’ என்ற நாவல் – டிபிகல் தமிழ் சினிமா மாதிரியே இருக்கும், படிக்கும் போது நல்ல விறுவிறுப்பு. நீங்க படிச்சு இருக்கீங்களா?

அன்புடன்

சீதாலஷ்மி

அன்புடன்

சீதாலஷ்மி

அன்பு வனிதா,

நாவல்கள் எப்படி படிக்க ரொம்ப விருப்பமோ, அதே மாதிரி, சினிமாக்களையும் ரொம்ப ரசிச்சு பார்ப்பேன். அதை விட, சில சினிமா விமரிசனங்கள் இன்னும் மனசில நிக்குது. ‘ஆண் பிள்ளை சிங்கம்’ என்று ஒரு நகைச்சுவைப் படம் – அதில சுஜாதா(அவர் அப்போ டாப் ஹீரோயின், இப்ப சீரியல்ல பெண்கள் அழறதைப் போல நூறு பங்கு, படங்கள்ல அழுது தீர்த்து விடுவார்) கௌரவ வேஷத்தில் நடித்து இருந்தார் – அதைப் பற்றி விமரிசனத்துல “ அவர் ரொம்ப நல்லா நடிச்சு இருக்கார், ஆனால் புளிக் குழம்பில முந்திரிப் பருப்பு போட்ட மாதிரி, இந்த படத்துல அவர் எதுக்கு” அப்படின்னு எழுதியிருந்தாங்க. அதைப் படிச்சதுல இருந்து, புளிக் குழம்பு வச்சாலும் சரி, முந்திரிப் பருப்பு வறுத்தாலும் சரி, அந்த விமரிசன வரிகள் ஞாபகம் வரும்!

அன்புடன்

சீதாலஷ்மி

அன்புடன்

சீதாலஷ்மி

அன்பு இலா,

இன்னும் நிறைய நிறைய இந்தப் பகுதியில பகிர்ந்து கொள்ள ஆசை. பிரதாப முதலியார் சரித்திரம் நாவல் நானும் படிச்சு இருக்கேன். தமிழின் முதல் நாவல் ஆச்சே,(இதுதான் முதல் நாவலா அப்படின்னு ஒரு காண்ட்ரவர்ஸி இருக்குன்னு நினைக்கிறேன்) ரொம்ப இலக்கணத் தமிழ் ஆக, படிக்க சிரமமாக இருக்குமோன்னு பயந்துகிட்டே படிக்க ஆரம்பிச்சேன், ஆனா, ரொம்ப நல்லா இருந்தது. வேகமா படிக்க முடிஞ்சது. வேற எந்த எழுத்தாளர் பிடிக்கும்னு சொல்லுங்க, பேசலாம். அதே போல, ஒவ்வொரு எழுத்தாளர் பற்றியும் நாம எல்லாருக்கும் ஒவ்வொரு விதமான ரசனை இருக்கும், அதைப் பற்றியும் சொல்லுங்க. நாம படிக்கும் போது ரசிச்சது ஒரு விதம், நண்பர்கள் சொன்ன பிறகு, இன்னும் ஒரு தடவை வேற ஒரு கோணத்தில் ரசிச்சுப் படிக்கத் தோணும் இல்லையா!

அன்புடன்

சீதாலஷ்மி

அன்புடன்

சீதாலஷ்மி

அன்பு திவ்யா,

அம்மாவைப் பற்றி எழுதி இருந்தீங்க, நமக்கு ரசிப்பதற்கு நேரமும் இருக்கு, வாய்ப்புக்களும் இருக்கு, அவங்க அந்தக் காலத்துல, எத்தனையோ குடும்பப் பொறுப்புகளுக்கு மத்தியில,(அப்போதெல்லாம் வாரப் பத்திரிக்கை படிப்பதே ஒரு ஆடம்பரமான விஷயமாக நிறைய வீடுகளில் நினைத்த காலம்) கலா ரசனை அப்படிங்கற விஷயத்தை பாதுகாக்க முடிஞ்சது பெரிய விஷயம். நல்ல பாடல்கள், எழுத்துக்கள், இதெல்லாம் ரசிக்க கற்றுக் கொண்டது நம் பெற்றோர்களால் மற்றும் நண்பர்களால்தான்னு நினைக்கிறேன்.

அன்புடன்

சீதாலஷ்மி

அன்புடன்

சீதாலஷ்மி

அன்பு இம்மா,

உங்க பிஸியான நேரத்த்தின் மத்தியிலும் மறக்காமல் பின்னூட்டம் கொடுக்கறீங்க. ரொம்ப நன்றி. உங்களுக்குப் பிடித்த நாவல், எழுத்தாளர் பற்றியும் நேரம் இருந்தால் சொல்லுங்களேன்.

அன்புடன்

சீதாலஷ்மி

அன்புடன்

சீதாலஷ்மி

அன்பு கௌரிலஷ்மி,

நானும் ரொம்ப நாளாகத் தேடி, சமீபத்தில்தான் கிடைச்சுது. சென்னையில் கன்னிமாரா லைப்ரரியில் மெம்பரானதுதான் மிச்சம் – அங்க இந்தப் புத்தகங்கள் எல்லாம் ரொம்பப் பழசா, கடைசி சில பக்கங்கள் இல்லாம – இப்படித்தான் இருந்தது. தனியார் லைப்ரரியில், புத்தம்புதிய பதிப்பாக, நிறைய புத்தகங்கள் கிடைச்சுது. அவ்வளவுதான், படிச்சுத் தள்ள ஆரம்பிச்சுட்டேன். இங்கேயும் கூட, நான் தேடுகிற பல எழுத்தாளர்களின் புத்தகங்கள் கிடைக்கவில்லை, இன்னும் தேடணும்.

அன்புடன்

சீதாலஷ்மி

அன்புடன்

சீதாலஷ்மி

டியர் சீதாலக்ஷ்மி மேடம், நீங்க கேக்காமலிருந்தாலும், நிச்சயம் உங்களுக்கு என்னோட பதிவு எப்படியும் இருக்கும். ஏன்னா நான் ஒரு புத்தக பிசாசு. படிக்கறது, படிக்கறது, படிக்கறது இதுதான் எப்பவும் பிடிச்ச வேலை. அம்மா திட்டுவாங்க, தட்டில் என்ன இருக்குன்னு கூட பாக்காம புக் படிச்சுட்டு சாப்பிடறியேன்னு. இங்கேயே ஒரு சின்ன சைஸ் லைப்ரரி வைக்கற அளவு புக்ஸ் தேத்திட்டேன். எப்படியும் ஊரில் இருக்கற்ற என்னோட மத்த புக்ஸையும் சேர்த்து வீட்டில் ஒரு ரூம் லைப்ரரி மாதிரியே செட் செய்யணும்னு ஆசை இருக்கு. பிரெண்ட்ஸ்க்கு புக்ஸ் கொடுத்தால் கூட வாங்கற வரைக்கும் அந்த நாவல்களின் பெயரை மறக்காமல், அவங்க கூட போன் பேசும் போதெல்லாம் ரிடர்ன் தர்றதை கன்பர்ம் பண்ணிப்பேன்(இலா கவனிக்க). என் பையனுக்கு நிச்சயம் தமிழ் படிக்க தெரியணும். அவன்கூட சேர்ந்து இந்த நாவல்கள் பத்தியெல்லாம் பேசணும்னு கூட நினைச்சுப்பேன். நேத்துதான் என் கணவர் லைப்ரரியிலிருந்து 10 நாவல்கள் எடுத்துட்டு வந்து கொடுத்தார். நீங்கள் சொன்ன ராஜேந்திரகுமார் நாவல் அதில் ஒன்று. நீங்க சொன்ன அதே வர்ணனை இருக்கன்னு படிச்சு சிரிக்கணும்.

நான் நிறைய டைப் அடிக்கறது, அடிக்கடி பதிவுபோட முடியாம இருக்கறதால ஒரே பதிவில் எல்லாத்தையும் அடிச்சுட நினைக்கறதாலதான். நாம் நேரில் சந்திக்கும்போது நிறைய பேசலாம். முக்கியமா தில்லாமா மோகனாம்பாள் இப்போதைக்கு எப்படியாவது தேத்தணும்.

மனிதர்களின் சுவாரசியங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும்...அந்த

மனிதர்களையும்தான்...எழுதுவது ஒரு திறமை என்றால் அப்படி எழுதுவதை

படித்து ரசித்து அதை மற்ரவர்கள் ரசிக்கும் வண்ணம் சொல்வதற்கு...கவிதை

போன்ற அழகான ரசனையான மனசு வேண்டும்...உங்கள் மனதில் கொட்டி

குவிந்திருக்கும் ரசனை பூக்களை அள்ளி விடுங்கள்...நாங்களும் முகர்ந்து பார்க்கிறோம்..

தேவா,நானும் புத்தகபிசாசு.....அம்மாவிடம் அர்ச்சனை நிறைய வாங்குவேன்..
உங்களைப்போல சேம்...பிஞ்ச்.....புத்தகம் ரிடன் வாங்குவதிலும்தான்..:-

சீதா மேடம்..எனக்கு நினைவு தெரிந்து எழுத்து கூட்டி படிக்க ஆரம்பித்த அந்த நாட்களிலேயே..எங்களூர் லைப்ரரிதான் எனக்கு பொக்கிஷம்...

சிறு வயதில் சாண்டில்யன் புத்தகங்கள்,மணியனின் புத்தகங்கள்...லஷ்மியின் நாவல்கள்..நிறைய படித்த ஞாபாகம்..பெயர்கள் நினைவில் இல்லை ...யாரும் சொன்னால் ஞாபகம் வரும்..:-)

அப்புசாமி ,சீதாபாட்டி ரசித்து சிரிப்பேன்,..அது எல்லா பாகங்களும் படித்திருக்கிறேன்..அது ராணியில் கூட தொடர்கதையாக வந்தது இல்லையா?

ராணியில் வந்த வேறோரு தொடர்கதை(ரேணுகா,மீரா,ரவி...கதாபாத்திரங்கள்)
கதையின் பெயர் மறந்துவிட்டது..

வாரத்தில் ராணி வரும் நாளுக்காய் வெயிட் பண்ணி படித்திருக்கிறேன்

நிறைய ஒவ்வொன்றாக அவ்வப்போது சொல்கிறேன்...

அன்புடன்
இளவரசி

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

அன்பு சீதாலஷ்மி,நான் சாண்டில்யனின் சமூக நாவல்களை படித்ததில்லை. இனிமேல் வாங்கி படிக்கிறேன்.

life is short make it sweet.

அன்பு தேவா,

எனக்கும் சாப்பிடும்போது பக்கத்திலேயே படிக்கறதுக்கு புக் வேணும். இதுக்காக நிறைய திட்டும் வாங்கியிருக்கேன். படிக்கக் கூடாதுன்னு சொல்ல மாட்டாங்க, சாப்பிட்டு முடிச்சதும் படி அப்படிம்பாங்க. ’சாந்தி நிலையம்’ படத்தில் ஒரு காரக்டரை அறிமுகப் படுத்தும் போது நாகேஷ் சொல்வார் – ‘இவ பேப்பர்ல இங்க் தெளிச்சு இருந்தால் கூட அதையும் எழுத்துன்னு நினைச்சு படிச்சுட்டே இருப்பா’ என்று. அந்த வசனத்தை சொல்லி என்னை எல்லோரும் கிண்டல் செய்வார்கள்!

வீட்டில நான் வச்சு இருக்கற பைண்ட் கலெக்‌ஷன் பாத்துட்டு, எதிர் வீட்டுல இருந்தவங்க அவங்க வேற வீடு மாறிப் போகும்போது, அவங்ககிட்ட இருந்த சில புக்ஸ் குடுத்துட்டுப் போனாங்க. ’உங்களுக்குப் பிடிக்கும், நீங்க விரும்பிப் படிச்சு, பத்திரமா வைத்திருப்பீங்க’ அப்படின்னு அவங்க சொன்னப்போ சந்தோஷமா இருந்தது.

அன்பு இளவரசி,

அழகா ரசிச்சு சொல்லியிருக்கீங்க, ரொம்ப நன்றி.

ரொம்ப சின்ன வயதில் ராணி பத்திரிக்கை ரொம்ப ஃபேவரைட். அதில சிறுவர் பகுதியில் வரும் விடுகதைகளுக்கு ஆன்ஸர், அந்தப் பக்கத்திலேயே தலைகீழாகக் கொடுத்து இருப்பாங்க. முதல் விடுகதைக்கு விடை பாக்கறப்பவே, ரெண்டாவது விடுகதைக்கு உண்டான விடையையும் பாத்து வச்சிட்டு, அப்புறம் விடுகதையைப் படிக்கறது ஒரு த்ரில். இப்போ நினைச்சா வேடிக்கையா இருக்கு.

மணியன், லஷ்மி கதைகள் பற்றி எழுத ரெடியாக எடுத்து வச்சு இருக்கேன். அப்புறம் சீதாப் பாட்டி, அப்புசாமி கதைகள் குமுதத்தில்தான் முதலில் வந்தது. எழுதியவர் பாக்கியம் ராமசாமி என்ற ஜ.ரா.சுந்தரேசன். சமீபத்தில் இவரது சகோதரர் திரு.ஜே.ஆர்.கிருஷ்ணமூர்த்தி (மருத்துவப் பணிக்காக) பத்மஸ்ரீ விருது பெற்றிருக்கிறார்.

அன்பு கீதாஜி,

பின்னூட்டத்துக்கு நன்றி.

அன்புடன்

சீதாலஷ்மி

அன்புடன்

சீதாலஷ்மி

நான் தில்லானா மோகனாம்பாள் கதையை ஹாஸ்டலில் தங்கி இருந்து வேலைக்கு சென்றபோது படித்தேன் :-) நல்ல கதை ஆனால் படத்தை பல தடவை பார்திருப்பதாலோ என்னவோ, எனக்கு படம் தான் பிடித்திருந்தது.

அப்போதெல்லாம் நான் ஒரு நாளுக்கு ஒரு புக் படிப்பேன்... லென்டிங் லைப்ரரியில் நிறைய பழைய கதைகள் கிடைக்கும்... அப்படி படித்த இன்னுமொரு கதை அரு.ராமநாதன் எழுதிய குண்டுமல்லிகை. 1960's வெளி வந்த கதை ஆனாலும் ரொம்பவே மாறுபட்ட கதை... கதையில் ஹீரோவை விட ஹீரோயினுக்கு வயது அதிகம்... :-) கதையும் நன்றாக தான் இருந்தது ஆனால் முழு கதை நினைவில் இல்லை.

திரும்ப படிக்க வேண்டும் என்று நானும் கொஞ்சம் வருடங்களாக தேடுகிறேன் கையில் கிடைக்க மாட்டேங்குது :( இப்போது புதிய பிரசுரம் வெளி ஆகி இருக்கிறது, இந்தியா சென்றால் கட்டாயம் வாங்கி படிக்க வேண்டும் :)

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

அன்பு பிந்து,

அரு ராமனாதன் ‘காதல்’ என்ற பத்திரிக்கைக்கு ஆசிரியராக இருந்தார். அந்தக் காலத்தில் இந்தப் பத்திரிக்கையை வீடுகளில் வாங்கவே யோசிப்பார்கள் :) அந்த அளவுக்கு - காதல் என்ற வார்த்தையைப் பார்த்து பயம் :)

அரு ராமனாதன் மிகச் சிறந்த எழுத்தாளர். ராஜ ராஜ சோழன் இவர் எழுதிய நாடகம். டி.கே.எஸ் சகோதரர்கள் மேடையேற்றி வெற்றி பெற்ற ஒன்று. தம்பி டி.கே.எஸ்.பகவதி - தந்தை ராஜ ராஜ சோழனாகவும், அண்ணன் டி.கே.எஸ்.சண்முகம் - மகன் ராஜேந்திர சோழனாகவும் நடித்தார்கள்.

சிவாஜி கணேசன் நடித்து, திரைப்படமாகவும் வந்தது.

குண்டு மல்லிகை நாவல் படிக்க ஆசை. தகவலுக்கு மிகவும் நன்றி.

அன்புடன்

சீதாலஷ்மி

ஓஹோ அப்படியா? ஒருவேளை அதனால் தான் அவர் கதை கிடைப்பது கஷ்டமாக இருக்கிறதோ? நான் பழைய கதை, அதுவும் பைன்ட் செய்த புத்தகம் என்றால் ரொம்பவே விரும்பி படிப்பேன். அப்படி கையில் கிடைத்தது தான் இந்த கதை :-)

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

இப்போதான்ம்மா பார்க்கிறேன். ரொம்ப ரொம்ப லேட்டா பார்த்தாலும் இப்படிபட்ட ஒன்றை மிஸ் பண்ணாம படிக்க செய்ததற்கு மிக்க நன்றி. இந்த பகுதியையும் ரொம்ப அழகாக எழுதியிருக்கீங்க. நீங்க எழுதியதை பார்க்கும் போதே தெரிகிறது நீங்கள் ஒவ்வொரு புத்தகம் படிக்கும் போதும் எப்படி ரசித்து படிப்பீங்கன்னு புரியுது. நீங்க சொல்லிதான் தெரியுது தில்லானா மோகனாம்பால் மற்றும் விக்ரம் படம் ஏற்கனவே புத்தகமாக வந்தது என்று நீங்க சொல்லும் அனைத்து புத்தகத்தையும் படிக்க ஆர்வம் தேடிபார்க்கிறேன் கிடைத்தால் படிக்க ஆர்வமாக உள்ளேன். நீங்க படித்த புத்தகங்களின் உங்களை கவர்ந்த புத்தகத்தை பெயரை சொல்லுங்கள். நானும் அந்த புத்தகங்களை படிக்க ஆர்வமாக உள்ளேன். உங்கள் எழுது நடை சூப்பர்ம்மா..

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

அன்பு ரேவதி,

பதிவுக்கு மிகவும் நன்றி. தில்லானா மோகனாம்பாள் நாவல் பிடிஎஃப் ஆகக் கிடைக்குதுன்னு நினைக்கிறேன்.

புத்தகமாக, ஓவியங்களுடன் வெளி வந்திருக்கிறது. தனியார் லைப்ரரிகளிலும் கிடைக்கிறது.

படித்துப் பாருங்க. உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும்.

அன்புடன்

சீதாலஷ்மி