இனி ஒரு பணி செய்வோம் - பாகம் 2

Indian artWork from homeமுதல் பகுதியைப் படித்து, உற்சாகப்படுத்திய தோழிகளுக்கு நன்றி.

தோழி யோகராணி, தான் இருக்கும் பகுதியில் டியூஷன் எடுக்க வாய்ப்புகள் இல்லை எனக் குறிப்பிட்டு இருந்தார். தோழி, நார்வே நாட்டிற்கு சென்று, அங்கு அந்த நாட்டு மொழியைக் கற்றுத் தேர்ந்து இருக்கிறீர்கள். உங்களுக்கு ஒரு சிறிய யோசனை. பயன் படுமா என்று பாருங்கள். நிறைய தமிழர்கள் அங்கு இருப்பார்கள். அங்கு உள்ள பள்ளிகளில் அவர்கள் குழந்தைகள் தமிழ் கற்க வாய்ப்பு இருக்குமா என்று தெரியவில்லை. உங்களுக்கு நேரமும், விருப்பமும் இருக்குமானால் அங்குள்ள தமிழ் குழந்தைகளுக்கு, அடிப்படை தமிழ் பேச, எழுத, கற்றுக் கொடுக்கலாமே. ஒரு குழுவாகக் கற்றுக் கொள்ளும்போது, குழ்ந்தைகளும் வேகமாக கற்றுக் கொள்வார்கள் இல்லையா!

இனி, இந்த வாரமும், வீட்டில் இருந்தபடியே, ஓய்வு நேரத்தில் பணி செய்வதற்கான சில யோசனைகளைப் பார்ப்போமா?

அதற்கு முன் சில வார்த்தைகள் – இங்கு நான் பகிர்ந்து கொள்ளும் விஷயங்கள் பெரும்பாலானவை, நான் பார்த்து வியந்த, வெற்றிகரமாக, பொருளீட்டும் பெண்மணிகளின் அனுபவங்கள்தான். அவர்களிடம் பேசி, அறிந்து கொண்ட விஷயஙளையே உங்களிடமும் சொல்ல விரும்புகிறேன்.

அறுசுவைத் தோழிகள் நிறையப் பேர் கை வேலைகள் செய்வதிலும் கற்பனைத் திறன் மிக்கவர்களாகவும் இருக்கிறார்கள். மற்றும் நிறைய சகோதரிகளுக்கு தானே வரைவதிலோ, கை வேலை செய்வதிலோ விருப்பம் இருந்தாலும், சரியாக வர வில்லயென்றால் என்ன செய்வது என்ற தயக்கம் இருக்கலாம். எல்லோருக்குமான யோசனைதான் இது.

work from home

சுவரில் தொங்க விடுவதற்கான துணியினாலான படங்கள் – அடிப்படை வர்ணங்கள் மட்டும் கொண்டவையாக, மெரூன், பிரவுன், கருப்பு முதலிய நிறங்களில் கிடைக்கும். இவற்றை வாங்கிக் கொள்ளுங்கள். (கீதோபதேசப் படங்கள், ராதை-கண்ணன், இயற்கைக் காட்சிகள் இது போல பார்த்திருப்பீர்கள்)

வித விதமான சம்கி, பாசி மணிகள், வண்ணத் துணித் துண்டுகள், பொன் வண்ண, வெள்ளி வண்ண இழைகள், கலர் ஜிகினாத் துகள்கள், இப்படி – உங்களுக்கு எது எல்லாம் கிடைக்குமோ, அவற்றால் இந்தப் படங்களில் பொறுமையாக ஒட்டி, அலங்கரியுங்கள். பிறகு, தரமான, வண்ண மயமான ஃப்ரேம் செய்து கொள்ளுங்கள். இப்போது அழகிய பரிசுப் பொருள் தயார்.

முதலில் சிறிய அளவிலான துணிகளில் கை வேலை செய்து பழகுங்கள். பின் சற்றே பெரிய படங்களை தயார் செய்யலாம். சரி, மாதம் எத்தனை படம் தயார் செய்ய முடியும், இதற்கு எவ்வளவு செலவாகும், இதை யாரிடம் விற்பது, லாபம் கிடைக்குமா என்றெல்லாம் கேள்விகள் எழுகிறதல்லவா?

சொல்கிறேன். அதற்கு முன்னால் சந்தைப்படுத்துதல், பொருள்களின் விலை நிர்ணயித்தல் போன்றவற்றைப் பற்றி கொஞ்சம் பார்க்கலாமா?

Marketing, Price Fixing பற்றியெல்லாம் பேசும் அளவுக்கு நாம் என்ன பெரிய விற்பனை நிறுவனமா நடத்துகிறோம் என்று தோன்றுகிறதா? சம்பாதிப்பது என்று ஆரம்பித்து விட்டாலே, லாபம், அல்லது நஷ்டம் இல்லாமல் விற்பது பற்றியெல்லாம் யோசிக்கத்தான் வேண்டும்.

work from home

கிராமங்களில் மிகச் சிறிய அளவில் பண்டம் விற்பவர்களிடம், என்ன சம்பாதிக்கிறீர்கள் என்று கேட்டால் என்ன சொல்வார்கள் தெரியுமா? “அட என்னம்மா, ஏதோ தம்பிடிக்கு தம்பிடிக்கு லாபம் கிடைக்குது, அவ்வளவுதான்” என்று அலுப்பான குரலில் சொல்வார்கள். இதற்கு என்ன அர்த்தம் தெரியுமா, 100 சதவிகிதம் – அதாவது 10 ரூபாய்க்கு வாங்கியதை, 20 ரூபாய்க்கு விற்கிறார்கள் என்று பொருள்! மிகப் பெரிய தொழில்களில் கூட அதிக பட்சம், 10 முதல் 20 சதவிகிதம்தான் மார்ஜின் நிற்கும்.

நாம் மட்டும் தனிப்பட்ட முறையில் ஒரு தொழில் செய்யும் போது, தனியாக லேபர் சார்ஜ் கிடையாது. நமது வசதிப்படி அதிக நேரம் வேலை செய்ய முடியும். நமது கிரியேடிவிடிக்கு குறுக்கீடுகள், எல்லை கிடையாது. பொருளின் விலையை நாமே தீர்மானிக்கலாம். இப்படி பல நன்மைகள், அதிக லாபத்துக்கு வழியாக இருக்கின்றன.

சரி, இப்போது மீண்டும் விட்ட இடத்துக்கு வருகிறேன். பார்ப்பதற்கு சிம்பிள் ஆகத் தோன்றினாலும், மிகவும் நேரம் எடுத்து செய்ய வேண்டிய வேலை இது. படத்தின் ஒவ்வொரு பகுதியையும் வெவ்வேறு வண்ணங்களாலும், ஜிகினாத் துகள், துணித் துண்டுகள், சம்கி, பாசி போன்ற வேறு பட்ட பொருள்களால் அலங்கரிக்கும் போது, ஒட்டுவதற்கும், காய்வதற்கும், அடுத்த பகுதியில் தொடர்வதற்கும் நேரம் ஆகும். ஒரு மீடியம் சைஸ் படம் ரெடி செய்ய (நமது வீட்டுப் பொறுப்புகளின் மத்தியில்) 10 முதல் 20 நாட்கள் கூட ஆகலாம்.

அலங்கரிக்கத் தேவையான பொருட்களை மொத்தக் கடையில் வாங்கினால் விலை குறைவாக இருக்கும். படம், ஒட்டும் பொருட்கள் இவற்றின் அடக்க விலை 500 ரூபாய் வரைக்கும் ஆகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். அழகான ஃப்ரேம் 300 ரூபாயிலிருந்து 500 ரூபாய் வரைக்கும் ஆகலாம். (நான் சொல்வதெல்லாம் உத்தேசமான செலவுதான்.) இவற்றை கணக்கு போட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள், நீங்கள் விற்கும் போது தாராளமாக 1500 ரூபாயிலிருந்து 2000 ரூபாய் வரைக்கும் விலை வைக்கலாம். ஏனெனில் உங்களின் கற்பனைத் திறன் மற்றும் உழைப்புக்கு இதில் விலை சேர்க்க வேண்டுமே. மேலும் ஒரு பொருள் unique ஆக இருக்கும் போது அதன் மதிப்பு அதிகம் ஆகத்தானே செய்யும்.

சரி, அடுத்தது – மார்கெட்டிங்.

முதலில் தெரிந்தவர்களுக்கு அன்பளிப்பு கொடுக்கும் போது இப்படி நீங்களே செய்த படங்களைக் கொடுங்கள். கண்டிப்பாக மற்ற நண்பர்கள், உறவினர்கள் விசாரிப்பார்கள். வீட்டில் இந்த மாதிரி படங்கள் செய்வதைப் பற்றி சொல்லுங்கள். உங்களுக்கும் வேண்டுமானால் செய்து தருகிறேன் என்று கேளுங்கள். படங்களின் அளவு, அதிகமான, நுணுக்கமான வேலைப் பாடுகள், விலை அதிகமான, தரமான ஃப்ரேம், இவற்றைப் பொறுத்து, படங்களின் விலையும் அதிகமாக நிர்ணயிக்கலாம். மாதம் ஒன்றிரண்டு படங்கள் செய்தாலே நல்ல லாபம் பார்க்கலாம்.

இது தவிர, உங்கள் பகுதியில் மாதர் சங்க விழா போன்றவை நடந்தால் உங்கள் படங்களை காட்சிக்கு வைக்கலாம். இதுவும் வாடிக்கையாளர்களை உங்களிடம் கொண்டு வந்து சேர்க்கும்.

இதில் நீங்கள் மேலும் கவனம் எடுத்துக் கொள்ள வேண்டிய சில விஷயங்கள் – சொன்ன தேதியில் பொருளைக் கொடுத்து விடுங்கள். விலையில் பேரமே வேண்டாம். முதலிலேயே தொகையைச் சொல்லி விடுங்கள். அழகான கலைப் பொருள்களுக்கு விலைமதிப்பு எப்போதுமே அதிகம்தான்.

எனக்குத் தெரிந்த பெண்மணி ஒருவர் ஒரு படத்துக்கு 4000 ரூபாயிலிருந்து 6000 ரூபாய் வரை விலை வைக்கின்றார். அவருக்கு பணத்தேவை என்பது அதிகம் இல்லையென்றாலும், இந்த வேலை மனதுக்கும் திருப்தி, செய்வதற்கும் உற்சாகம், அத்துடன் மற்றவர்களிடம் இருந்து கிடைக்கும் பாராட்டும், பணமும் தனக்கு போனஸ் என்கிறார் அவர்.

நான் மேலே சொல்லியிருப்பது எல்லாம் அடிப்படையான யோசனைகள்தான். மேற்கொண்டு சிறப்பாக எவ்வளவோ உங்களால் செய்ய முடியும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். வாழ்த்துக்கள்!

அன்புடன்
சீதாலஷ்மி

Comments

சீதாலெட்சுமி மேடம்,

மிகவும் பயனுள்ள தகவல்.நீங்க கொடுக்கும் இந்த தகவல்களை எல்லாம் மனதில் சேமித்து வைத்து கொள்கிறேன். இப்போது வேலைக்கு செல்வதால் முடியாமல் போகிறது,ஆனால் கண்டிப்பா எனக்கும் மற்றதோழிகளுக்கும் பயன்படும் நல்ல விஷயம்.

வாழ்த்துக்கள்!!!

சுபத்ரா.

with love

சீதாலஷ்மி.. நீங்க சொல்லி இருப்பது ரொம்ப உண்மை. இவை எல்லாமே வீட்டில் இருந்து கொண்டே பொழுது போக்காக செய்து வரவு பார்க்கும் தொழில். நானும் பல விதமான வழிகளை யோசித்தது உண்டு, ஆனால் எதையும் செயல் படுத்தவில்லை என்பதே உண்மை. வாழ்த்துக்கள்.... நன்றாக சொல்கிறீர்கள். பலருக்கும் பயன் தரும் தகவல். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அழகாகச் சொல்கிறீர்கள் சீதாலஷ்மி. பாராட்டுக்கள். ;)

‍- இமா க்றிஸ்

சுபத்ரா, வனிதா, இம்மா

அன்பு சுபத்ரா, வனிதா, இம்மா

பின்னூட்டத்துக்கு மிகவும் நன்றி.

சுபத்ரா, நீங்க என்ன நினைக்கிறீங்க? வேலைக்குப் போய் சம்பாதிப்பது, வீட்டில் இருந்து சம்பாதிப்பது, எது சுலபம், அல்லது அதிக வருமானம்? சொல்லுங்களேன்.

வனிதா, பொறுமையாகப் பின்னூட்டம் கொடுத்து உற்சாகப் படுத்துவது ரொம்ப சந்தோஷமாக இருக்கு. தொடர்ந்து உங்க கருத்துகளை சொல்லுங்க. இது மேலும் மேலும் எழுத எங்களை உற்சாகப் படுத்தும்.

இம்மா, கை வேலைகளில் அனுபவம் மிக்க நீங்கள் பாராட்டுவது ரொம்பவே மகிழ்ச்சி. தொடர்ந்து படியுங்க. உங்க கருத்தை சொல்லுங்க.

அன்புடன்

சீதாலஷ்மி

அன்புடன்

சீதாலஷ்மி

ஆஹா, எத்தனை பயன் தரும் விஷயங்கள் சொல்லி இருக்கீங்க.பாராட்ட வார்த்தையில்லை. இத்தனை அழகா சொல்ல, அனுபவமும், அறிவும் சேர்ந்து அமைஞ்சது காரணம்னு தெரியுது. அனைவருக்கும் மிகவும் உபயோகமான பகுதி இது. உங்களோட இந்த ஆலோசனைகளையும், அணுகுமுறைகளையும் ரொம்ப எதார்த்தமா சொல்லி இருக்கீங்க. சிறந்த தன்னம்பிக்கை தொடரா இந்தப் பகுதி இருக்கு. இந்த பகுதி மூலம் பெண்களுக்கு மிகவும் நல்ல ஒரு விஷயத்தை செய்யறீங்கன்னு சொன்னால் அது மிகையில்லை. என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

டியர் சீதா மேம்,உங்களுடைய புதிய திரட் நன்றாக உள்ளது.டியூஷன் சொல்லி கொடுப்பது மட்டும் அன்றி என்னை போல் கணிணி படிப்பு படித்துவிட்டு,ஐக்கிய அரபு நாடுகளில் ஹவுஸ் வொய்ப்பாக இருப்பவர்களுக்கு,ஏதாவது ஐடியா கொடுங்க பிளீஸ்

அன்பு தேவா,

மனப் பூர்வமா பாராட்டி இருக்கீங்க. ரொம்ப சந்தோஷமா இருக்கு. இந்தப் பகுதியில் எழுதுவதன் மூலம் நானும் நிறைய விஷயம் கற்றுக் கொள்கிறேன்னுதான் சொல்லணும்.

நன்றி தேவா,

அன்புடன்

சீதாலஷ்மி

அன்புடன்

சீதாலஷ்மி

அன்பின் சீதாலஷ்மி மேடம், இன்று தான் இந்தப் பகுதி கண்ணில் பட்டது. மிகவும் அன்பவம் வாய்ந்த எழுத்துக்கள். எனக்கும் கைவேலைகள் செய்வதில் ஆர்வம். நிறைய செய்தும் இருக்கிறேன்.

//முதலில் தெரிந்தவர்களுக்கு அன்பளிப்பு கொடுக்கும் போது இப்படி நீங்களே செய்த படங்களைக் கொடுங்கள். கண்டிப்பாக மற்ற நண்பர்கள், உறவினர்கள் விசாரிப்பார்கள். வீட்டில் இந்த மாதிரி படங்கள் செய்வதைப் பற்றி சொல்லுங்கள். உங்களுக்கும் வேண்டுமானால் செய்து தருகிறேன் என்று கேளுங்கள். படங்களின் அளவு, அதிகமான, நுணுக்கமான வேலைப் பாடுகள், விலை அதிகமான, தரமான ஃப்ரேம், இவற்றைப் பொறுத்து, படங்களின் விலையும் அதிகமாக நிர்ணயிக்கலாம். மாதம் ஒன்றிரண்டு படங்கள் செய்தாலே நல்ல லாபம் பார்க்கலாம்.///

நீங்கள் சொன்ன ஐடியா நல்லா இருக்கு. மிக்க நன்றி.
வாணி

அன்பு மல்லி,

கணினி படிப்பு என்று குறிப்பிட்டு இருக்கிறீர்கள். பொதுவான யோசனைகள் சொல்கிறேன். உங்களது specializationக்கு எது பொருந்தி வருகிறது என்று பார்த்து, நீங்கள் மேற்கொண்டு என்ன செய்ய முடியும் என்று பாருங்கள்.

சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு வலைத் தளம் அமைத்துக் கொடுக்கலாம். மேலும் அவர்களுக்குத் தேவைப் படும் போதெல்லாம் மேம்படுத்தித் தருவது, பராமரிப்பது போன்ற பணிகள் நீங்கள் வீட்டில் இருந்து செய்ய முடியும்.

நீங்கள் வசிக்கும் நாட்டில் மால்கள், வணிக நிறுவனங்கள் போன்றவை இருக்கும், அவற்றின் கஸ்டமர் டேட்டா பேஸ் தகவல்களைக் கொண்டு, அவ்வப்போது பண்டிகை கால ஆஃபர் மற்றும் இது போன்ற தகவல்களுக்கான மெயில் அனுப்புவது, இதைத் தவிர அவர்களிடம் இருக்கும் தகவல்களின் அடிப்படையில் data analysis(உ-ம்.-விற்பனை, விலை ஒப்பீடு) போன்றவற்றை செய்து கொடுக்கலாம்.

மேலே சொன்னவை நீங்கள் வீட்டில் இருந்து செய்ய முடியும் என்றாலும், ஆர்டர் எடுப்பது, ப்ராஜக்ட் முடித்துக் கொடுப்பது போன்றவைக்காக நீங்கள் உங்களது clientகளை வெளியே சென்று சந்திக்க வேண்டியிருக்கும்.

இன்னும் ஒரு யோசனை – அனேகமாக உங்களுக்குத் தெரிந்து இருக்கலாம். இப்போதெல்லாம் வலைப் பூக்கள் அமைத்து நடத்தினால், அதில் Google ads வெளியிடுவதின் மூலம் வருமானம் கிடைக்கிறது.

மேலே சொன்ன யோசனைகளில் கவனத்தில் கொள்ள வேண்டிய சில விஷயங்கள் – வலைத் தளம் அமைத்துத் தர clientsகளிடம் நேரடியாகத் தொடர்பு கொள்ளுங்கள் அல்லது நம்பிக்கையான நிறுவனம்தானா என உறுதிப் படுத்திக் கொள்ளுங்கள். ஆன் லைன் விளம்பரதாரர்களிடம் கவனமாக இருக்கவும்.

இரண்டாவதாக சொன்ன யோசனையில் நீங்களாகவே நேரடியாக சென்று ஆர்டர் எடுப்பது சிரமமாக இருக்கலாம். அவுட் சோர்ஸிங் முறையில் இந்த முறையில் வேலை செய்பவர்களிடம் தொடர்பு கொண்டு, நீங்கள் வீட்டில் இருந்தே பகுதி நேரமாக வேலை செய்ய முடியுமா என்று பாருங்கள்.

வலைப் பூ அமைப்பதைப் பொறுத்த வரையில் தகவல்கள் இணைய தளத்திலேயே கிடைக்கும். அதே சமயம், உங்கள் வலைப் பூ சுவாரசியமாக இருக்கும் விதமாக அமைப்பது சவாலான விஷயம். ஹிட்ஸ், டிராஃபிக் பொறுத்து விளம்பர வருமானம் இருக்கும்.

உங்களது கருத்துகளை எதிர் பார்க்கிறேன்.

அன்புடன்

சீதாலஷ்மி

அன்புடன்

சீதாலஷ்மி

அன்பு வாணி,

பாராட்டுக்கு மிகவும் நன்றி. தொடர்ந்து படித்து, உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்.

அன்புடன்

சீதாலஷ்மி

அன்புடன்

சீதாலஷ்மி

அன்புள்ள சீதா மேம்,
ரொம்ப நன்றி மேம்,முதலாவதாக சொன்ன யோசனை என்னுடைய சூழ்நிலையின் காரணமாக என்னால் முடியாது என்று நினைக்கிறேன் ஆனால் 2 வதாக சொன்ன யோசனை எனக்கு புரியவில்லை வலை பூ என்பதை ஆங்கிலத்தில் சொல்ல முடியுமா?மேலும் அதை பற்றிய விவரங்களையும் கூற முடியுமா?

மேலும் எனக்கு பங்குச்சந்தையில் சிறிது ஆர்வம் உள்ளது.அதை நான் தெளிவாக கற்றுக்கொள்ள ஏதாவது யோசனை சொல்ல முடியுமா?

சீதாலெட்சுமி மேடம்,

கண்டிப்பா வீட்டில் இருந்து வேலை செய்வதே சுலபம். வருமானம் என்பது நாம் தேர்ந்தெடுக்கும் தொழில் பொருத்தது, அதுமட்டுமின்றி நம் தொழில் நல்ல முயற்சியும்,ஆர்வமும், உழைப்பும் இருந்தால் கண்டிப்பா நல்ல வருமானம்:-)

with love

அன்பு மல்லி,

Part Time work as Data Entry Operator ஆக வேலை கிடைத்தால் வீட்டில் உங்கள் computerல் வேலை செய்து கொடுக்கலாம்.

Blog என்பதைத்தான் வலைப் பூ என்று குறிப்பிட்டு இருந்தேன். google மூலம் blogs எப்படித் தொடங்கலாம், அதில் விளம்பரங்ளை வெளியிடுவதன் மூலம் வருமானம் எப்படிக் கிடைக்கும் என்ற தகவல்கள் கிடைக்கும். Tamil Blogs by Women/Ladies, How to get Google Ads என்று டைப் செய்து Google.comல் தேடினால் எல்லா விவரங்களும் கிடைக்கும். இதைப் பற்றி உங்களுக்குத் தோன்றும் சந்தேகங்களையும் கேள்விகளையும் குறித்துக் கொள்ளுங்கள். இந்த blogs படித்துப் பார்ப்பதன் மூலமே உங்கள் கேள்விகளுக்கு விடைகள் கிடைக்கும்.

ஷேர் மார்க்கெட் பொறுத்தவரை, நீங்கள் இன்வெஸ்ட் செய்ய விரும்பினால் - உங்கள் பகுதியிலேயே ஷேர் புரோக்கிங் அலுவகங்கள் இருக்கும். அவர்களை அணுகினால் நீங்கள் இன்வெஸ்ட் செய்ய விரும்பும் பணத்துக்குத் தகுந்தாற் போல், ஷேர்கள் வாங்க உதவி செய்வார்கள். D mat Account தொடங்குவது பற்றி அவர்களும் உதவுவார்கள். நீங்கள் கணக்கு வைத்து இருக்கும் Bankல் கேட்டாலும் செய்து தருவார்கள். நீங்களே ஷேர் புரோக்கர் ஆக விரும்பினாலும் ஷேர் புரோக்கிங் அலுவகங்களில் கமிஷன் அடிப்படையில் பணியாற்ற முடியும்.
(இன்ஷூரன்ஸ் ஏஜண்ட் போல). ஆனால் அதற்கு முன்னால் அதைப் பற்றிய அடிப்படைத் தகவல்களைத் தெரிந்து கொள்ள, டி.வி.யில் மார்க்கெட் நிலவரம், மற்றும் ஷேர் மார்க்கெட் பற்றிய வெப் ஸைட்ஸ் எல்லாம் தொடர்ந்து பாருங்கள்.

வேறு என்ன தகவல் உங்களுக்கு வேண்டும் என்று சொல்லுங்கள், பேசலாம்.

அன்புடன்

சீதாலஷ்மி

அன்புடன்

சீதாலஷ்மி

சீதாலட்சுமி மேடம் அவர்களூக்கு நான் இங்கு பஹ்ரைனில் உள்ளேன்.எனக்கும் வீட்டில் இருந்தபடியே சம்பாதிக்க ஆசைப்படுகிறேன் தேவை உள்ளது.எனக்கு வழி உண்டா.
குட்டிரெயாமா

அன்பு ராதிகா என்ற குட்டி ரேயம்மா

சென்னையிலிருந்து மூவாயிரம் கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கீங்க. கையில் ஒன்றரை வயதில் ஒரு பெண் குழந்தை, இப்போ 7 மாதம் கர்ப்பமாக இருக்கீங்க. இரண்டாவது பிரசவமும் நல்லபடியாக நடக்க எங்கள் வாழ்த்துகள்.

ஃபைனான்ஸ் ரொம்ப டைட், நான் வேலைக்குப் போயே ஆகணும்னு சொல்றீங்க.

இரண்டு மூன்று இழைகளில் உங்களுடைய இந்தப் பதிவைப் பார்த்தேன். அறுசுவையைப் பொறுத்தவரை, நீங்க யார்கிட்டயும் நேரடியாக பெயர் சொல்லி யோசனை கேக்கணும்ங்கறதே கிடையாது. பதிவைப் பார்த்தாச்சுன்னா, அவங்களுக்கு தெரிஞ்ச விஷயத்தை, உடனே வந்து சொல்லிடுவாங்க.

இனி ஒரு பணி செய்வோம் பகுதியிலும் இந்தக் கேள்வி கேட்டிருக்கீங்க. இந்தப் பகுதியில் வேலைக்குப் போவதைப் பற்றி, சொந்தமாக தொழில் செய்வதைப் பற்றி, வீட்டிலிருந்தே சம்பாதிப்பதைப் பற்றி, ஐடியாக்களைத்தான் டிஸ்கஸ் செய்யறோம். ஆனால் வேலை எங்கே கிடைக்கும், எவ்வளவு சம்பளம் இதெல்லாம் துல்லியமாக சொல்லி, வேலை வாங்கித் தரவோ, அல்லது இந்த இடத்தில் வேலை காலியாக இருக்கு, கிடைக்கும்ங்கற உறுதியான தகவல் தருவதோ, இயலாத காரியம். www.kugli.com என்ற வெப் சைட்டில் பஹ்ரைனில் வேலை வாய்ப்புகள் பற்றிய சில விளம்பரங்களைப் பார்த்தேன். எந்த அளவுக்கு அது உங்களுக்கு உதவியாக இருக்கும்னு எனக்குத் தெரியலை. ஏன்னா, இப்போ இந்தியாவில் பேப்பரில் அது போல நூற்றுக்கணக்கான விளம்பரங்கள் வருது. விண்ணப்பிக்கும் எல்லோருக்கும் வேலை கிடைத்து விடுவதில்லை.

கணவர் ரொம்பவும் சிரமப்படுகிறார், கடனை அடைப்பதற்கு அவரது சம்பளம் சரியாகப் போய் விடுகிறது, அதனால் நீங்களும் உங்களால் முடிந்ததை செய்து, அவருக்கு உதவி செய்யணும்னு நினைக்கிறது ரொம்பப் பாராட்டப்பட வேண்டிய ஒன்று.

இந்த மாதிரி ஒரு பிரச்னை உங்களுக்கு மட்டும் இல்லை, ஏராளமான பெண்கள் இதே மாதிரிதான் சிரமப்பட்டுகிட்டு இருக்காங்க. ஒரு நாளில், ஒரு வாரத்தில், சரி செய்யக்கூடியது இல்லை இது. இது ஒரு தொடர்கதைதான். இந்த இடத்தில் பணம் ஏற்பாடு செய்து, அங்கே உள்ளதை சரி செய்து, பிறகு அதை சரி செய்வதற்கு வேறு இடத்தில் பணம் ஏற்பாடு செய்து..., இப்படித்தான் நிறைய பேர் போராடிக் கொண்டு இருக்கிறார்கள்.

இப்போ உங்கள் உடல் நிலை பற்றி முதலில் யோசியுங்க. சமீப பதிவுகளில் உங்களுக்கு ரொம்ப காது வலி, அதனால் ரொம்ப சிரமப்படுவதாக சொல்லியிருந்தீங்க. இப்போ சரியாகி விட்டதா?

ஃப்ளாட்டில் எல்லோரும் வெகேஷனுக்குப் போய்ட்டாங்க, தனியாக இருக்கேன், குழந்தையை வைத்துக் கொண்டு, அவள் டி.வி.பாத்துகிட்டே இருக்கிறாள், அவள் வளர்ச்சி பாதிக்கப் படுமான்னு ஒரு பதிவு கொடுத்திருக்கீங்க.

இப்ப எல்லா நாட்டிலும், அனேகமாக எல்லாக் குழந்தைகளும், எப்பப் பார்த்தாலும், கார்ட்டூன் சானல்கள்தான் பார்க்கிறாங்க. கர்ப்பமாக இருக்கும் இந்த நேரத்தில், எல்லா விஷயங்களையும் மனதில் குழப்பிக்காதீங்க.

முதலில் வேளா வேளைக்கு உங்களுக்குப் பிடித்த உணவை, சத்துள்ளதாக இருக்கறதாக சாப்பிடுங்க. மனசை ரிலாக்ஸ்ட் ஆக வைத்துக் கொள்ளுங்க. பேசத் தெரியாத குழந்தையாக இருந்தாலும், பசித்தால், அழுது, கத்தி, தனக்கு உணவு வேணும்கறதை நமக்கு உணர்த்தி விடும். வயிற்றில் இருக்கும் சிசு உங்களைத்தான் நம்பியிருக்கு இல்லையா, நீங்க நல்லா, ஹெல்தியாக இருந்தால்தான் அதுவும் சந்தோஷமாக இருக்கும். அதனால் உங்க குழந்தைக்காக உங்க உடல் நிலையை நல்லா கவனிச்சுக்குங்க. இப்போ இதுதான் நீங்க முக்கியமாக கவனிக்க வேண்டியது.

டெலிவரிக்கு அம்மா வந்துடுவாங்கன்னு சொல்லியிருக்கீங்க. பிறந்த வீட்டினர், புகுந்த வீட்டினர்கிட்டயும் பணத் தேவைகளை சமாளிக்கும் வழிகளைப் பற்றி பேச முடிந்தால் பேசிப் பாருங்க. அவங்க ஏதாவது உதவி செய்தாங்கன்னா, பிரச்னை கொஞ்சம் சரியாக வாய்ப்பு இருக்கு. நீங்க வேலைக்குப் போவதைப் பற்றி யோசிக்கும் அதே வேளையில், உங்க கணவருடைய வருமானத்தை அதிகரித்துக் கொள்ள ஏதும் வழியிருக்கான்னு பாருங்க.

நானேதான் சம்பாதிக்கணும் அப்படின்னு உறுதியாக இருக்கீங்களா, உங்களுக்கு என்னென்ன தெரியும்னு நீங்களே சொல்லியிருக்கீங்க. கை வேலை தெரியும், கம்ப்யூட்டர் தெரியும் அப்படின்னு சொல்லியிருந்தீங்க. முதலில் உங்களுக்கு பஹ்ரைனில் தெரிந்தவங்க, உங்க கணவருக்கு தெரிந்தவங்ககிட்ட பேசி, விவரங்கள் கேளுங்க. ஹாஸ்பிடலில் கன்சல்டேஷனுக்குப் போகும்போது, அங்கு உள்ளவர்களிடம் சொல்லி வைங்க, இந்த மாதிரி, நான் வேலை செய்யணும்னு நினைக்கிறேன், என்னுடைய படிப்பு, அனுபவம் இது, ஏதேனும் வாய்ப்பு வந்தால் சொல்லுங்கன்னு சொல்லுங்க. கண்டிப்பாக ஏதாவது ஒரு நல்ல வழி கிடைக்கும். அறுசுவை தோழிகள் – பஹ்ரைனில் இருக்கிறவர்களில் சிலரை நேரடியாகவே உங்களுக்குத் தெரியும்னு உங்க பதிவுகளில் இருந்து தெரிஞ்சுகிட்டேன், அவங்ககிட்டயும் உங்களுடைய படிப்பு, அனுபவம் சம்பந்தமான தகவல்களை, முடிந்தால் ஒரு பயோடேட்டாவாக டைப் செய்து கொடுத்து வைங்க.

உங்களுடைய விடாமுயற்சிக்கு கண்டிப்பாக தகுந்த பலன் கிடைக்கும்.

அன்புடன்

சீதாலஷ்மி

அன்புடன்

சீதாலஷ்மி

:அன்புள்ள சீதா மேடம் உங்கள் பதில் எனக்கு தெளீவாக பல உண்மையை புரிய வைத்தது நன்றீ.
மிகவும் குழப்பமான ஒரு நிலையில் இருந்தேன் இப்பொழுது மிகவும் மனம் நிம்மதியாக உள்ளது.இப்பொழுது எனக்கு என்ன
தேவையோ அதை நல்லமுரையில் புரிய வைத்திர்கள்.தனியாக இருக்கும் எனக்கு உங்கள் பதில் ஆருதலாக உள்ளது.
நான் முதலில் என் பிரசவத்தை நல்ல படியாக பார்த்து கொள்கிறேன்.பிறகு எல்லாம் நல்ல படியாக நடக்க கடவுளை வேண்டி
கொள்கிறேன்.
ராதிகா

vanakkam madem nan BE (ECE) mudichuruken. home la irunthu work pannanum nu yosichu tu iruken.But experience illa entha tholil la eduthu pandrathu eppadi pandrathu nu idea kodunga. nanum business la sathikkanum nu virumburen plz idea kodunga

Anbey kadavul

அன்பு நண்பர்களே! வணக்கம்!

இண்டர்நெட் மூலம் பணம் சம்பாதிக்க முடியும் என்பதை அறிவீர்களா?
அதுவும் எந்த முதலீடும் இன்றி!

இதில் யாரும் யரையும் ஏமாற்றபோவதில்லை என்பதை மட்டும் உறுதியாக கூறுகிறேன்.

உங்களின் ஓய்வு நேரத்திலும், முதலீடு இல்லாமலும், இணையத்தில் பணம் சம்பாதிக்க இந்த தளம் ஒரு மிகச்சிறந்த வழிகாட்டி.

►►► http://tamilptc.blogspot.in/ ◄◄◄

இது ஒரே நாளில் உங்களை பணக்காரன் ஆக்கி விடாது.

நீங்கள் தனியே செயல்பட்டால் சிறு தொகைதான் கிடைக்கும்.

ஆனால் நண்பர்களோடு இணைந்து நாம் செயல்படும்போது நீங்களே எதிர்பார்க்காத அளவு பெறும் தொகை கிடைக்க வாய்ப்புள்ளது.

வாருங்கள் நண்பர்களே ஒன்றுபடுவோம்!உயர்வோம்!

பணம் சம்பாதிப்பது குறித்து மேலதிக விபரங்கள் தேவைப்படுவோர் கீழ்க்கண்ட மின்னஞ்சல்,செல் போன் வாயிலாக நீங்கள் என்னைத் தொடர்புகொள்ளலாம்.

pratheep.onlineearnings@gmail.com

+91 8608750546

என்றும் அன்புடன்,
அ.பிரதீப்