ஜாம்/மார்மலேட் குக்கீ

தேதி: December 23, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

இந்த குறிப்பினை செய்து காட்டியவர், கனடாவில் வசித்து வரும் இலங்கை தமிழரான <b> செல்வி. விசா </b> அவர்கள். இவர் தற்போது முதுகலை அறிவியல் பயின்று வருகின்றார், கூடவே சமையலும் சமைக்க ஆரம்பித்தது மூன்று வருடங்களுக்கு முன்புதான் என்றாலும், அதீத ஈடுபாட்டின் காரணமாக இன்று பல்வேறு உணவுகளை சுவைபட தயாரிப்பதில் திறன்பெற்றவராய் இருக்கின்றார். கேக், குக்கீஸ் செய்வதை தனது தனித்திறமையாக குறிப்பிடும் இவர், வரைதல், கைவினைப்பொருட்கள் செய்தல் போன்றவற்றை கொண்டு ஓய்வுப் பொழுதினை செலவு செய்கின்றார்.

 

மாவு (all purpose flour) - 2 கப்
சீனி - ஒரு கப்
பட்டர் - ஒரு கப்
உப்பு - 1/2 தேக்கரண்டி (தேவையானால்)
வெனிலா எசன்ஸ் - ஒரு மேசைக்கரண்டி
பாதாம் எசன்ஸ் - 2 மேசைக்கரண்டி
விரும்பிய ஜாம்/ மார்மலேட் - தேவையான அளவு


 

அவனை 250F ல் முற்சூடு செய்து வைத்துக் கொள்ளவும். தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் சீனி மற்றும் பட்டரை போட்டு சில நிமிடங்கள் அடித்துக் கொள்ளவும். பட்டரில் உப்பு சேர்த்திருந்தால் இப்போது உப்பு சேர்க்க தேவையில்லை.
சீனி, பட்டர் இரண்டும் ஒன்றாக சேரும் வரை அடித்தால் போதும். நீண்ட நேரம் அடிக்க தேவையில்லை.
பின்னர் பாதாம் எசன்ஸ், வெனிலா எசன்ஸ் இரண்டையும் சேர்த்து மேலும் சில வினாடிகள் அடித்துக் கொள்ளவும்.
அதன் பிறகு மாவை சிறிது சிறிதாக சேர்த்து ஒரு மரக்கரண்டியால் கிளறி விடவும். பின்னர் கையால் கிளறவும். பிசைய வேண்டாம்.
கலவை உருண்டையாக உருட்டும் பதம் வந்ததும் மாவு சேர்ப்பதை நிறுத்தி விடவும். சில நேரங்களில் மாவு சிறிது மீதமாகலாம்.
கலந்து வைத்திருக்கும் மாவிலிருந்து விரும்பிய அளவில் மாவை எடுத்து உருண்டைகளாக்கி ஒரு பேக்கிங் ட்ரேயில் வைத்து உருண்டைகளின் நடுவில் விரலால் மெதுவாக அழுத்தி விடவும்.
அழுத்திய இடங்களில் விரும்பிய ஜாம் அல்லது மார்மலேட் வைத்து நிரப்பிக் கொள்ளவும். அதிகம் வைத்து நிரப்ப வேண்டாம்.
விரும்பிய வேறு ஜாம்/மார்மலேட் சேர்த்தும் செய்யலாம். மாவு உருண்டைகளை பொடியாக நறுக்கிய முந்திரிபருப்பு அல்லது பாதாம் பருப்பில் உருட்டி பின் நடுவில் அழுத்தி ஜாம்/மார்மலேட் வைத்தும் செய்யலாம்.
செய்து வைத்திருக்கும் குக்கீஸை முற்சூடு செய்த அவனில் வைத்து பொன்னிறமானதும் எடுத்து பரிமாறவும். சுவையான ஜாம்/மார்மலேட் குக்கீஸ் ரெடி.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

டியர் விசா பார்க்க ரொம்ப அழகா கலர் ஃபுல்லா இருக்குப்பா.

உடனே செய்யனும்போல இருக்கு.

அன்புதோழி
ஜெயலக்ஷ்மிசுதர்சன்

ஹாய் விசா, பார்க்க அழகாக இருக்கிறது. விரைவில் செய்து சாப்பிட்டுவிட்டுக் கருத்துச் சொல்கிறேன்.
அன்புடன்
இமா

‍- இமா க்றிஸ்

விசா,
மிகவும் அழகாக இருக்கின்றது. இந்த வாரம் விதவிதமான ஜாம் வாங்கி வந்து செய்திட வேண்டும்.

ஹலோ ஜெயலக்ஷ்மிசுதர்சன் மேடம் மற்றும் இமா மேடம், நன்றிகள் :-) செய்து பார்த்துவிட்டு சொல்லுங்கள் எப்படி இருந்ததென்று.

அன்புடன் விசா

ஹாய் Geetha Achal, நன்றிகள் :-) செய்து பார்த்து சொல்லுங்கள். நான் இதில் உபயோகித்திருப்பது அன்னாசிப்பழ மார்மலேட்டும் (மஞ்சள்) ஸ்ட்ரோபரி ஜாமும் (சிவப்பு) மட்டுமே. பச்சை நிறத்திற்கும் மற்றவற்றுக்கும் அன்னாசிப்பழ மார்மலேட்டில் சிறிது கலரிங் சேர்த்து செய்த்து :-)
அன்புடன் விசா