அவசர விளக்கம்

அன்புத்தோழியர்களே என் மகனின் ஆய்வுக்கு உங்கள் உதவி தேவை.

தற்கால இளைஞர்கள் பழைய கலாசாரத்திற்கு மீண்டும் வர விரும்புகிறார்களா? அப்படி என்றால் அதற்கு காரணம் என்னவாக இருக்கும்? உங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யுங்கள்.

நன்றி
இப்படிக்கு
ஜெயந்தி மாமி

நான் இளைஞர்கள் லிஸ்ட் ல வருவனான்னு தெரியல.. என் வயசு 28..

எனக்கு மற்ற தோழிகள் எழுதற மாதிரி அழகா கோர்வையா நான் சொல்ல வர்றத சொல்ல தெரியாது... ஆனா என்னால முடிஞ்ச வரை என்னோட அபிப்ராயம் சொல்றேன்...

என்னை நீங்க இளைஞர்கள் லிஸ்ட் ல சேர்த்தா என்னோட ஆசை பழைய கலாச்சாரத்துக்கு திரும்ப போறதுதான்...காரணம் இந்த அவசர வாழ்க்கை ஓட்டத்துனால வந்த சலிப்புதான்...மேலும் என் சின்ன வயசுல இருந்து கிராமத்து வாழ்க்கையையும் அந்த பழக்க வழக்கங்களையும் பார்த்து வளர்ந்ததா கூட இருக்கலாம்... இப்ப தாத்தா பாட்டி (பழைய காலத்து ஆளுங்க ) இல்லாதனால முன்ன மாதிரி எதையுமே ஃபாலோ பண்றதுல்ல....

நீங்க பழைய கலாச்சாரம்னு சொல்றது நம்ம பழைய வாழ்க்கை முறை, விழாக்கள் கொண்டாடும் முறை இததான் சொல்றீங்கன்னு நினைக்கிறேன்...இன்னம் எதானும் இருந்தா இங்க சேர்த்துடுங்க... உங்க பதில் பதிவுக்கு அப்பறம் மீதி சொல்றேன்...

சங்கீதா சிவகுமார்
இயற்கையை ரசி. அது உன்னிடம் பேசும்.

சங்கீதா சிவகுமார்
இயற்கையை ரசி. அது உன்னிடம் பேசும்.

இப்போது தான் ராஜயோகம் தொடங்கியுள்ளது.ஏன் ராஜாக்களீன் காலத்தில் கூட இத்தகைய கருத்துபரிமாற்றதகவல்கலை அறிய பல நாட்கள் ஆனது. இன்று தொலைபேசி. மின் அஞ்சல் .சாட்டிங்.இதை உபயோகிப்பதை கொன்டு நன்மை,தீமை அமையும். அதனால் தான் கூறுகிரேன், இந்த காலம் தான் சிறந்தது.

alhamdhulillah

தோழிகளே உங்கள் கருத்து தேவை.
அன்புடன்
ஜெயந்தி மாமி

முழுவதுமாக அல்ல. ஒருசில விஷயங்களில் உ.தாமாக உடைகள் விஷயத்தில். தழையதழைய புடவை கட்டிக்கொள்ள பிடிக்கும். அப்புறம் விழாக்கள் கொண்டாடும் விதம்(குடும்பத்தில் அனைவரும் சேர்ந்து) அன்னியோன்யம் இதெல்லாம் இந்த காலத்துல குறஞ்சுட்டு வருது இதுக்காக கொஞ்சம் பழைய கலாச்சரதை மறக்காம இருக்கலான்னு தோணுது..

அன்புள்ள ஜெ'க்கா,
எப்டி இருக்கீங்க?
நலமா?

இன்று உள்ள இளைஞர்கள் பழைய கலாச்சாரத்திற்கு திரும்ப வர விரும்புகிறார்களா?
(இது முற்றிலும் என் கருத்து)

என்னைக்கேட்டால் அது கண்டிப்பாக இல்லை என்று தான் சொல்வேன்...
இன்று உள்ள கலாச்சாரத்தில் ("WHERE IS THE PARTY உங்க வீட்ல PARTY ") பஃப் களும் , பார்ட்டிகளும் அதிகமாகிக் கொண்டு உள்ளது...

மேலும் இன்டெர்னெட் அவர்களுக்கு கண்டதையும் அள்ளித்தரும் "அட்சய பாத்திரமாக" உள்ளது....

மொபைல் என்பது பேனா, பென்சில் போல அதுவும் ஒரு பொருளாக ஆகிவிட்டது....

சினிமா என்பது பெரிய ஊடகம்...
அதில் வரும் பாடல்களில் விரசம் தான் ("DADDY MUMMY வீட்டில் இல்ல தட போடஃ யாரும் இல்ல .." ) உள்ளது...
இப்போது உள்ள இளைஞர்களாகட்டும், குழந்தைகளாகட்டும் அவர்கள் விரும்பும் உடை மட்டும் இல்லாது அனைத்தையும் அவர்கள் விருப்பப் படியே செய்கிறார்கள்...

(நானே அடுத்த (முந்தைய)ஜெனரேஷனாகிட்டேன்!!) என்ன செய்ய???

இதை திரும்ப கொண்டுவருவது என்பது பனை ஓலையில் SMS அனுப்புவது போல ஆகும்...

இதை பற்றி மேலும் பேசலாம்...

மற்றவர்களின் கருத்துக்களையும் அறியலாம்...

அவர் சொன்னது ரொம்ப சரி..இந்த வாழ்க்கை ஓட்டத்தில் வந்த சலிப்பே தான்.
இன்று வேலைவாய்ப்பு என்று பெரிசாக சொல்லிக் கொள்கிறோம்...கொண்டு போய் கால் சென்டெரில் போட்டு விட்டு மூளையை மழுங்கடிக்கிறார்கள்.இரவு நேரம் வேலை செய்தால் தான் உனக்கு வேலை என்ற நிலை இன்று..உடல்நலனை தொலைக்கிறோம்.
நல்லா உக்காந்து யோசிக்கையில் அன்று நாங்கள் பிள்ளைகளாக கிடைத்த சந்தோஷம் இன்று பிள்ளைகளுக்கு இல்லை ஆனால் எதையோ பெரிய காரியம் போல் காசு மேல் காசு போட்டு கண்டதையும் வாங்கி கொடுத்து திருப்தி படுத்த பார்க்கிறோம் அவங்களும் அதை நம்பி வீடியோ கேம்ஸ் கார்டூனே கதின்னு கெடாக்கிறாங்க..ஆனால் அன்றைய நிலை அதுவலல்ல வீட்டுக்குள் முடங்கி கிடப்பது இல்லை..அன்று நாம் கற்றது தான் அதிகம்.
அன்று மரவள்ளி கிழங்கும்,அரிசி உருண்டையும் கண்டால் அது செய்து முடிக்கும்வரை அம்மா பின்னாடியே நின்று காத்திருந்து சுவைத்தது நினைக்கையில் தனிசுகம்..இன்று சிப்ஸ் பிஸ்கட் சாக்கலேட் அதையும் பாதியாக சாப்பிட்டு மீதியை தூக்கிப்போட்டு விட்டு Pஒகிறார்கள்..உடலுக்கும் கேடு தான்
இன்று பிஞ்சுகளை நல்ல ஸ்கூல்களில் என்ற பெயரில் வாட்டு வாட்டுன்னு வாட்டுகிறோம்..அன்று கவர்மென்ட் ஸ்கூளில் கிராமத்தில் வளர்ந்தவர்கள் தான் இன்று சந்தைராயணுக்கு கூட காரணமாக இருக்கிறார்கள்.
இன்று பணத்தாசை பிடித்து சொந்தபந்தம் யாருமே இலலத நிலை..அப்படியே நாமாக ஏங்கி கொஞ்சம் ஒட்ட போனாலும் உண்மையான பாசம் இல்லை ஏதோ ஒரு நோக்கத்துக்காகவே மற்றவர்களுடன் பழக்கத்தை வைக்கிறார்கள்..
மதத்தில் மேல் மதமாக இருக்கிறோம்..வெடிகுண்டு வெட்டு குத்து என்பது இன்று கொஞ்சம் கூடிவிட்டதோ என்று சந்தேகம்..
அன்று நாகூர் ஹனீஃபா பட்டும்,கோயில் பாட்டும் அதிகாலையே ஒலிக்க தொடங்கும் மதபேதமில்லாமல் எல்லோரும் அதை சந்தோஷமாக கேட்டுக் கொண்டு அவரவர் வேலையை கவனித்தார்கள்..இன்று எல்லா விஷயத்திலும் ஒரு வேண்டாத அர்த்தத்தை தினித்து நமகே நாமே குத்தி குத்தருகிறோம்.
கண்டிப்பா அந்தகால வாழ்க்கைமுறை சிறந்தது என்று நினைக்கிறேன்.இது உங்கள் மகனுக்கு உதவுமா என்று தெரியவில்லை ஆனால் எனது மனதில் தோன்றியவை இது தான்
இன்று ரொம்ப அமோகமாக வாழ்கிறோம் என்ற மாயையில் தான் இருக்கிறோம்.ஒருகனம் உட்கார்ந்து சிந்தித்தால் புரியும்

இன்றைய இளைஞர்கள் எங்கே பழைய கலாச்சாரத்தை விரும்புகிறார்கள். இந்த நவநாகரீக வாழ்க்கையில் ஊறிய பின்னர் அவர்களுக்கு அந்த வாழ்க்கையின் அருமை புரிவதில்லை. எனக்கு தோணும் நாம் எப்படி வளர்ந்தோம் அந்த முறையெல்லாம் நினைச்சி பாக்குறப்ப ரொம்ப சந்தோஷமா இருக்கும். நம்ம பாட்டிக்கிட்ட உன் அம்மா இப்படிதான் இருந்தா இப்படிதான் செய்வானு கதை சொல்லுவாங்க. அதுவே என் பொண்ணுக்கு தனிமையைத் தவிர வேறு எதுவும் தெரிவதில்லை. ஆஹா என் பெண்ணுக்கு இந்த ஜங்க்புட்தான் பிடிக்கிம்னு பெருமையா சொல்லிக்கிறோம். தளி சொல்வது போல அம்மா செய்து தரும் பலகாரத்திற்காக அம்மா முந்தானையை பிடித்து கொண்டிருந்த அந்த நாட்கள் இனிவரும் பிள்ளைகளுக்கு பழைய பஞ்சாங்கமாகவே தோன்றும்.

அப்போது இருக்கும் விழாக்கள் மனதிற்கு ரொம்ப மகிழ்ச்சியா இருக்கும். ஆனால் இப்போது அந்த மாதிரி விழாக்களை யாரும் விரும்புவதில்லை. என்மகள் காதுகுத்து விழாவை கொஞ்சமாவது பெருசா வைக்க நினைத்தேன். வீட்டில் அனைவரும் (மாமனார் உட்பட காதுகுத்துவது கம்மல் போடுவதற்கு இதுக்குபோய் ஒரு விழாவா வேண்டாம் என்று வீட்டிலேயே பத்தர கூப்பிட்டு சாதரணமாக குத்தி விட்டார்கள். அவர்கள் சொல்வது ஒருசில நேரம் இதெல்லாம் வீண்விரயம் என்று தோன்றினாலும் எல்லோரும் கூடி மகிழும் அந்த மகிழ்ச்சி கிடைப்பதில்லை. அப்போதெல்லாம் இப்படிதாண்டி செய்வோம் என்று என் அக்கா பெண்ணிடம் (15 வயது) சொன்னால் சுத்த கர்நாடகம் சித்தி நீ என்கிறாள். இண்டெர்நெட்டில் காலம் போகுது என்னபண்ண

அதாவது அவங்க அவங்க சூழ்நிலைகளைப் பொறுத்து சிலர் அப்போதய முறைகளை விரும்புகிறனர். சிலர் இப்போதய கலாச்சாரம் முறைகளை விரும்புகிறார்கள். ஆனால் 80% பேர் பழைய கலாச்சாரத்தை விரும்புவதில்லை என்பது என்னுடைய பொதுவான கருத்து.

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

ஜெயந்திமாமி,
இதுக்குத்தான் மாமி சொல்வார்கள் "தனக்குத் தனக்கென்றால் சுளகு படக்கு படக்கெண்ணுமாம்" என்று. எங்கே மாமி போயிருந்தீங்கள்? உங்கள் சமையல் தலைப்பு ஆரம்பித்து நாட்களாவிட்டதே, நீங்கள் இன்னும் வரவில்லையே எனக் கவலையாக இருந்தது. வந்தது சந்தோஷம். எனக்கு இன்றும் நாளையும் நேரமே இல்லாமல் இருக்கு, இருப்பினும் நீங்கள் கேட்டதால் ஏதோ எனக்கு மனதில் தோன்றியதை எழுதுவோம் என்று வந்தேன்.

நீங்கள் கேட்பது, இன்றைய இளைஞர்கள், பழைய வாழ்க்கையை விரும்புகிறார்களா? இல்லையா என்பதுதானே?
என்னுடைய கருத்து, இல்லை என்பதே.

இளைஞர்கள் என்றால் பெண், ஆண் இருவரும் அடக்கம்தானே? அப்படித்தான் நான் நினைத்து எழுதுகிறேன்.

என்னதான் பழைய வாழ்க்கை பிடிக்கும், ஆசையாக இருக்கிறது என்றெல்லாம் யாரும் சொன்னாலும், அந்த வாழ்க்கையை வாழ, நிட்சயம் யாரும் விரும்பமாட்டார்கள். அதற்கு பல காரணங்கள் இருக்கிறது. நாகரீக வளர்ச்சி, பொருளாதார வளர்ச்சி, அதிக சுகந்திரம் இவற்றைத்தானே எல்லோரும் விரும்புகிறோம். கிட்டத்தட்ட வெளிநாட்டு வாழ்க்கை பிடிக்குமா? ஊரைத்தான் விரும்புகிறீர்களா? என்பதும், இத் தலைப்புக்கும் ஒரே பதில்தான். என்னதான் வெளிநாடு தனிமை, ஊர் மாதிரி வராது என எல்லோரும் சொன்னாலும், வெளிநாட்டை விட்டு யாரும் வரப்போவதில்லை, அதிக வசதிகள், சுகந்திரம் தான் காரணம்.

அப்படித்தான் இன்றைய இளைஞர்கள் தாம் சுகந்திரமாக இருப்பதையே விரும்புகிறார்கள். இக்காலத்தில் ஒரு பிள்ளை எத்தனை மணிக்கு வீட்டுக்கு வந்தாலும் பெற்றோர் பெரிதாக கோபிப்பதில்லை, காரணம் போன் இருக்கிறது உடனுக்குடன் அறிந்துகொள்ளும் வசதி இருக்கிறது. ஒரு குடும்பத்தில் 12/15 வயதின் மேல், அப்பிள்ளை சொல்வதை பெற்றோர் கேட்கிறார்கள். காரணம் அந்தளவு தூரம் பிள்ளையின் மனவளர்ச்சி இருக்கிறது, இதனால் தம்மைத்தாமே பாதுகாக்க, புத்தியாக நடக்க பிள்ளைக்கு மனமுதிர்ச்சி வந்துவிடுகிறது, அதற்கு காரணம், ஊடகங்களின் முன்னேற்றம் என்றும் சொல்லலாம். பெற்றோரால் கற்றுக்கொடுக்க முடியாத பல விஷயங்களை, ஊடகங்கள் இன்று கற்றுக்கொடுக்கிறது. நல்லவை எது, கெட்டவை எது என்பதைப் புரிய வைக்க வேண்டியது மாத்திரமே பெற்றோரின் கடமையாக இருக்கிறது.

ஆனால் அந்தக்காலத்தில், ஒரு பிள்ளை திருமணம் முடிக்கும் வரையிலும், யாரும் பெரிதாக அப்பிள்ளைக்கு மதிப்புக்கொடுப்பதில்லை(அதிக குடும்பங்களில்). பெற்றோரின் கட்டுப்பாட்டிலேயே வளர்கிறார்கள். இதனால் தமது நியாயமான ஆசைகளைக்கூட எத்தனைபேர் குழி தோண்டிப் புதைத்துவிட்டு, பெற்றோரின் விருப்பத்திற்கு ஆளாகி இருக்கிறார்கள்.

உடையை எடுத்துக்கொள்வோம். நாகரீகமாகவே உடையணிய இப்போ எல்லோருமே விரும்புகிறார்கள். அக்காலத்தில் சேலையையும் பாவாடை தாவணியுடனும், வேட்டியுடனும் இளைஞர்கள் எவ்வளவு கஸ்டப்பட்டிருப்பார்கள். இப்போ காலம் முன்னேறிவிட்டது, எத்தனையோ விதமான வாகனங்கள், இவற்றை அனுபவிக்க இக்கால உடையே வசதியாக இருக்கிறது. அக்காலத்தில் பாவாடை தாவணிபோட்டு பல மைல்கள் நடந்தே சென்றிருக்கிறார்கள். ஆனால் இப்போ ஸ்கூட்டர், பஸ், கார் என பல வசதிகள் வந்துவிட்டது, இதற்கு இக்காலத்து உடைகளே வசதியாக இருக்கிறது. இதை விட்டு யாராவது பழைய காலத்து உடைக்கு ஆசைப்படுவார்களா?

உணவு முறையைப் பார்த்தாலும், புதிதாக வரும் உணவுகளையே அதிகம் விரும்புகிறார்கள். சோறு கறி சமைத்து வைத்தால் பத்து தடவை அம்மா கத்த வேண்டும் பிள்ளைக்கு, சாப்பிடு சாப்பிடு என்று. ஆனால் ஒரு பிட்ஸ்ஸா அல்லது கெ எவ் சி சிக்கின் அல்லது பேகர் வாங்கி வைத்துவிட்டுப் பாருங்கள் சொல்லவே தேவையில்லை, எல்லாமே முடிந்துவிடும். அக்காலத்தில் அதிகமாக தானியங்களையே உணவாக்கிக்கொண்டார்கள். ஆனால் இப்போ தானியங்கள் வீட்டில் செய்வதே ஏதும் விஷேட பூஜைகளுக்கு மட்டுமே என்றாகிவிட்டது. காலத்திற்கேற்ப எல்லோரும் மாறப் பழகிவிட்டார்கள் முடிந்துபோன வாழ்க்கையை எண்ணி ஆசைப்படுவதுண்டு ஆனால் அவ்வாழ்க்கை வாழ யாரும் விரும்ப மாட்டார்கள். ஏழைகள் பணக்காரராக ஆசைப்படுவார்கள் ஆனால் பணக்காரர் எப்பவாவது ஏழையாக ஆசைப்படுவதுண்டா? அப்படித்தான் இக்காலத்து இளைஞர்களும். பழமொழி ஒன்று சொல்வார்கள், " இருப்பதை விட்டுவிட்டு, பறப்பதற்கு ஆசைப்படதே" என்று. ஆனால் இக்காலத்து இளைஞர்கள் பறப்பதற்கு ஆசைப்படுவதால்தான் தினம் தினம் புதிது புதிதாக கண்டுபிடிக்கிறார்கள். பழையதை விரும்பினால்.. எந்த முன்னேற்றமும் உலகில் நிகழமாட்டாதென்பது என் கருத்து.

முந்திய காலத்தில் பாடசாலைகளில் எல்லாம், ஆசிரியர்கள் பிள்ளைகளை அடித்துத்தான் படிப்பித்தார்கள். பெற்றோர், 15 வயதுப் பிள்ளையைக்கூட, கண்டபடி கட்டி வைத்து அடித்ததாகவும் கேள்விப்படுகிறோம். ஏன் திருமண வயதில்கூட அடித்து, நீ இப்பிள்ளையைத்தான் முடிக்க வேண்டும் எனச் சொல்லி திருமணங்கள் நடந்திருக்கிறது. அக்காலத்தில் இது சாதாரணமான விஷயம். ஆனால் இக்காலம் அப்படியா? இங்கே பெற்றோரே பிள்ளைகளை அடிக்கக்கூடாதென்று சட்டம் வந்துவிட்டதே. பெற்றோரும் அடிப்பதை விடுத்து அன்பாக வளர்க்க, புத்திசொல்ல பழகிவிட்டார்கள். இக்காலத்தை விட்டு பழைய காலத்திற்கு பிள்ளைகள் ஆசைப்படுவார்களா?.

"கோவணாண்டிகளின் ஊரில், வேட்டி கட்டுபவன் பைத்தியக்காரன்" என்பார்கள். காலத்திற்கேற்ப தம்மை மாற்றி வாழ இளைஞர்கள் பழகிக்கொண்டார்கள். அவர்கள் புதிது புதிதாக கண்டுபிடிக்கவும் வாழவுமே விரும்புகிறார்கள்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நீங்க கேட்ட மாதிரி ஒரு இளைஞனான என் தம்பியிடம் கேட்டேன்,அதுக்கு அவன் நான் ஏதோ கேட்ககூடாத கேள்விய கேட்ட மாதிரி என்ன ஒரு மாதிரி பார்த்தான்,அக்கா உனக்கு ஒண்ணும் ஆயிடலையேன்னு ஒரு கேள்வி வேற:-(
இன்றைய கால கட்டத்துல கம்யூனிகேஷன் எவ்ளோ வேகமா வளர்ந்துட்டு இருக்கு நீ என்னடா ஏதேதோ கேக்றன்னு சொல்லி சிரிக்கறான்.பழைய கலச்சாரத்துக்கு போய் என்ன பண்ண போறேங்கறான்.
மற்றபடி மேல அதிரா சொன்னதுபோல நிறைய காரணங்கள் சொன்னான்.

மாமி,
தற்கால யுவன்களும்,யுவதிகளும் கண்டிப்பாக பழைய கலாசாரதிற்கு வர விரும்ப மாட்டர்கள்.என்ன் நாற்பதை கடந்து விட்ட நம் வயதை உடையவர்களேபழைய கலாச்சார்த்திற்கு வர விரும்ப மாட்டார்கள்.
அந்தக்காலத்தில் "வெள்ளாட போவோமா"என்று கபடியும்,கோலியும்,பம்பரமும்,பெண்கள் ஆனால் தாயகட்டமும்,பல்லாங்குழியும் விளையாடியது போக இப்போது கிராமத்தில் கூட இவைகளை காண முடியாது.கிரிக்கெட் மட்டையுடன் செல்கின்றார்கள்.
விறகு அடுப்பில் சமைத்தால் அலாதி ருசிதான்,மண்பானையில் குழம்பு வைத்தால் அலாதி சுவைதான் என்று நாக்கை மட்டும் சப்புக்கொட்டும் நாம் முயற்சியில் இறங்கி விடுவோமா நாம்?நம்மில் இப்போது எத்தனை பேர் வீட்டில் இவை இருக்கின்றது?
நாமே மாற முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு விட்டோம்.இளைஞர்கள் எப்படி மாறப்போகின்றார்கள்?
அம்மா சுட்டுத்தந்த தோசையும்,உப்புமாவும் சாப்பிட்டவர்கள்,இப்போது பிட்ஸாவும்,பர்கருக்கும் அடிமையாகி விட்டார்கள்.இவர்கள் மாறுவார்களா?மாற்றிவிடத்தான் முடியுமா?
இன்னும் வரும்
ஸாதிகா

arusuvai is a wonderful website

மேலும் சில பதிவுகள்