எவையெல்லாம் இங்கு இடம் பெறும்

இந்த தலைப்பின் கீழ் எவற்றைப் பற்றியெல்லாம் இங்கே உரையாடலாம்?

வயதானவர்களின் உடல் நலம் குறித்தும், அவர்களின் ஆரோக்கியத்திற்கு தேவையானவை குறித்தும், உடல் நலப் பிரச்சனைகள் குறித்தும் இங்கே ஆலோசிக்கலாம். உங்களின் சந்தேகங்களுக்கு இங்கே விடை கிடைக்கலாம். பயனுள்ள தகவல்களை நீங்களும் பரிமாறிக் கொள்ளலாம்.

வீட்டில் உள்ள வயதானவர்களினால் பிரச்சனையா,பாதுகாப்பா,நன்மையா,அல்லது சுமையா, என்று கலந்துரையாடலாம் என்று நினைக்கின்றேன்.ஆகவே நேயர்கள் இதில் பங்கு கொண்டால் எல்லோருக்கும் பயன்படுவதாக இருக்கும். நான் நிறைய அனுபவித்திருக்கின்றேன். அந்த அனுபவத்தினால் உங்களின் அனுபவத்தையும் உங்களுடன் பகிர்ந்துக்கொள்ள நினைக்கின்றேன்.வீட்டுக்கு வீடு வாசற்படி தான். எனவே இவர்களைப் பற்றிப் பேச நாம் தயக்கபட தேவையில்லை.ஆகவே நீங்கள் கண்ட, கேட்ட, அனுபவித்த, அனுபவிக்கின்ற விசயங்களை, கேள்வியாகவோ, கருத்தாகவோ, அறிவுரையாகவோ அல்லது எடுத்துரைப்பது போன்ற முறையில், கூற எல்லோரையும் தயங்காமல் பங்கு பெறும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன். நன்றி.

வயதானவர்களினால் பிரச்சனையா, பாதுகாப்பா, நன்மையா அல்லது சுமையா என்பது அவர்களுடைய பழக்கவழக்கங்களை பொறுத்தது என்று நினைக்கிறேன்.

எனக்கு அனுபவம் ஏதும் இல்லை. ஆனால் நான் கண்டவற்றை இங்கு பகிர்ந்துகொள்ளலாம் என்று நினைக்கிறேன்.

நன்றி...

ஹலோ திருமதி வாணி, எப்படி இருக்கின்றீர்கள்? பதில் எழுதியதற்க்கு மிக்க நன்றி. இந்த தலைப்பை ஏன் எழுதினேன் என்றால் மன்றத்தில் வயதானவர்களுக்கென்று தலைப்பு இருந்த போதிலும் அதில் ஒரு பதிவு கூட இல்லை. ஆகவே இந்த வாயதானவர்களைப் பற்றி உங்களைப் போன்ற இளைய சமுதாயத்தினர் கொண்ட அபிப்பிராயம் என்ன போன்ற பயனுள்ள தகவல்களை பகிர்ந்துக் கொள்ளலாம் என்ற நினைப்புத்தான் எழுதத் தூண்டியது. அதில் உங்களின் ரெஸ்பான்ஸ் கிடைத்தது குறித்து மிக்க மகிழ்ச்சி.கட்டாயம் நீங்கள் கணடவற்றை பகிர்ந்துக் கொள்ளுங்கள். அதனால் யாராவது ஒருவருக்காவது பலன் கிடைக்கும் என்று நிச்சயமாக நம்பலாம்.
நீங்கள் கூறியதுப் போல் வயோதிகரின் பழக்க வழக்கங்களை பொறுத்து தான் அவர்கள் இது போன்ற கேள்விகளுக்கு ஆளாகின்றார்கள். உங்களின் கூற்று முற்றிலும் உண்மை. என்னைப் பொருத்தவரை பழக்கவழக்கம் என்பதை விட பிடிவாதம் என்று கூட கூறுவேன். இவர்கள் ஒருவரை திருப்தி படுத்துவதற்க்குள் நான்கு டீன்னேஜரை திருப்தி படுத்தி வடலாம். அவ்வளவு கடினம்.
அதற்க்கு தான் அந்த காலத்தில் கூட்டு குடும்ப முறைகளால் இது போன்ற பிரச்சனைகளை எளிதில் சமாளித்தார்கள்.ஆனால் இன்றோ பெற்றோர் உடல் ரீதியாக நன்றாக இருக்கும் வரை ஒரு பிரச்சனையும் இல்லை. நம்நாட்டு வழக்கப்படி பெண்களுக்கு பெரியவர்களை கவனித்துக் கொள்ளும் பொருப்பு கணவரின் வீட்டார் மூலமாக வருகின்றது. அதிலும் என் கணவரைப் போல் ஒரே பிள்ளையாய் பிறந்து விட்டால் பொருப்புக்கள் அனைத்தும் அவருக்குத்தான் என்றாகிவிடும். பிறகு திண்டாட்டம் தான்.
எனக்கு என்னுடைய கணவரின் பாட்டியை கவனித்துக் கொள்ளும் பொருப்பு வந்து, நான் அனுபவித்த பிரச்சனைகள், யாருக்கும் வரக் கூடாது என்று தான் கூறுவேன்.அவர்கள் மூலம் பெட் காபி முதல், வெறும் சுகத்தை மட்டுமே அனுபவித்து கொண்டிருந்த நான் அவர்களை ஒரு குழந்தையைப் போல் கவனிக்கும் பொருப்பு வந்து படாத பாடு பட்டு விட்டேன். புடவையை கூட சரியாக கட்ட தெரியாதிருந்த எனக்கு (இரண்டு குழந்தைகள் பிறந்த பிறகு கூட வீட்டில் பாவாடை தாவணி தான் அணிந்திருப்பேன்)கையில் இரண்டு குழந்தைகள் மூன்றாவது குழந்தையாக, படுத்த படுக்கையாக இவரின் பாட்டியம்மா. நினைத்துப் பார்த்தால் இப்பொழுது மலைப்பாய்யுள்ளது. அப்பொழுது அது தெரியவில்லை. அப்பொழுது தெரிந்ததெல்லாம், அதைப் பிறகு எழுதுகின்றேன்.நன்றி.

அன்பு நேயர்களுக்கு, எல்லோரும் எப்படி இருக்கின்றீர்கள்? வீட்டில் உள்ள வயதானவர்களைப் பற்றி கலந்துரையாடலாம் என்று நினைத்ததர்க்கு காரணம், அவர்களின் அரோக்கியம் உடலைவிட மனத்தில் தான் உள்ளது என்று நம்புகின்றேன். ஆகவே அவற்றைப் பற்றி கலந்துரையாடினால் பல நல்ல கருத்துக்கள் கிடைக்கக்கூடும் என்றும் நம்புகின்றேன்
குடும்பங்களில் வயதானவர்களினால் எப்பேற்ப்பட்ட பிரச்சனைகள் வந்தாலும் அதை எதிர்த்து நின்று, அவர்களை கைவிடாமல் பாதுகாப்பது, நமது தலையாய கடமை என்ற நோக்கத்தோடு அவர்களுடன் வாழ்ந்த அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்துக் கொள்வதில் பெருமைப் படுகின்றேன்.
போன பதிவில் எனது பாட்டியால் பட்ட கஷ்டத்தை கூறினேன், அது என்னவென்றால், நான் எனது இரண்டு சின்ன குழந்தைகளையும் வைத்துக் கொண்டு சமாளிக்க முடியாது என்று எனது அத்தை, அவர்களின் அம்மாவை எங்களுடன் அனுப்பி வைத்தார்கள்.அத்தை ஆசிரியராக பணிபுரிவதால் அவர்களால் வர முடியாது என்று பாட்டி வந்தார்கள். நன்றாக ஒரு ஆறு மாதம் மிகவும் சந்தோசமாக ஓடியது.அதன் பிறகு தான் பிரச்சனை ஆரம்பமானது. குழந்தையுடன் வெளி வாசலில் நின்று வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தவர் திடீரென்று கால் தட்டி கீழே விழுந்து விட்டார் கொஞ்சம் கூட அவர்களால் அசையக் கூட முடியவில்லை. வலியில் துடிக்க ஆரம்பித்து விட்டார்கள்.
அப்பொழுது தொலைப் பேசி வீட்டில் கிடையாது. ஆகவே எந்தக் கடையில் உள்ளது என்றும் தெரியாது. ஒரு வழியாக கேட்டு விசாரித்து என் கணவரின் அலுவலகத்திற்க்கு அழைத்து தகவல் கொடுப்பதற்குள், பெரிய பாடாகி விட்டது. தகவல் கிடைத்த உடனே அவரும் அவருடைய கூட்டு காரனும் வந்து விட்டார்கள். ஆனால் பாட்டியோ மன நிலை பாதிக்கப்பட்டவர் போல் பேச ஆரம்பித்து விட்டார்கள்.எதற்க்கும் ஒத்துழைப்பு தர மறுக்கின்றார்கள். வக்கிலைப் போல் எல்லோருக்கும் ஆலோசனைகள் தருபவர், திடீரென்று அவர் பேசும் பேச்சே மாறி விட்டது. நல்லது எதைக் யார் கூறினாலும் கேட்பது இல்லை. அத்தை வந்தால் தான் ஆஸ்ப்பிட்டலுக்கு வருவேன் என்று அடம் பிடிக்கின்றார்கள். அத்தையும் வந்து விட்டார்கள். மருத்துவர் எக்ஸ்ரே எடுத்து பார்த்து விட்டு,இடுப்பின் இணைப்பில் எலும்பு உடைந்து விலகிவிட்டது.உடனே ஆப்பரேஷன் செய்ய வேண்டும், வயதாகி விட்டதால் அறுவைசிகிச்சைக்கு பிறகு அவர்களால் நடக்க முடியாது. நீணட பயிர்ச்சி கொடுத்தால் ஒரு வேளை சிறிது குணம் தெரியலாம்,என்று கூறினார். ஆனால் பாட்டியோ நான் புத்தூர் கட்டு போட்டுக் கொள்கிறேன் ஆப்பரேசன் வேண்டாம் என்று மறுத்து விட்டார்கள். இந்த முறிவு வெறும் கட்டு போட்டால் சரியாகாது. என்று திட்டவட்டமாக கூறி, மேலும் அத்தையின் வற்புறுத்துதலால் ஆப்பரேசனை செய்தார்கள்.நான் போய் வீட்டை பார்த்து விட்டு, விடுமுறை எடுத்துக் கொண்டு வருகின்றேன் என்று கூறி விட்டு அத்தை சென்று விட்டார்கள். என் கணவரோ வேலை, ஆஸ்பிட்டல், வீடு என்று தனிமையில் அவஸ்தைப் பட்டுக் கொண்டுள்ளார்.என்னுடைய வேலை பாட்டிக்கு காலைவுணவு, மத்திய உணவை காலையில் ஆறுமணிக்கே என் கணவரிடம் கொடுத்து விடவேண்டும். அப்பொழுது தான் அவர் ஆஸ்பிடலுக்கு சென்று வேலைக்கும் செல்ல முடியும். ஆறு மணி என்று மிகவும் சுலபமாக கூறி விட்டேன். கனவில் கூட நான்கு மணிக்கு அடுப்பு கொளுத்தியதில்லை. இப்படியே இரண்டு வாரம் சென்றது.ஒரு நாள் ஆஸ்பிட்டல் செல்ல கிளம்பிக் கொண்டிருக்கும் பொழுது வந்த கடிதம் எங்கள் வாழ்க்கையையே திருப்பி போட்டு விட்டது. அதில் என்ன இருந்தது என்று பிறகு சொல்கின்றேன். இது போன்ற உங்களுடைய அனுபவங்களையும், ஆலோசனைகளையும் கூட கூறுங்கள்.பிறர்க்கு நல்ல வழிகாட்டுதலாக கூட இருக்ககூடும்.நன்றி நேயர்களே.

ஹலோ நேயர்களே, வயதானவர்களை பற்றிய தலைப்பில் எனது அனுபவங்களை படித்தீர்களா? ஓரே தடவையாக எழுதினால் உங்களுக்கு வாசிக்க சலிப்பாக இருக்கும் என்பதால் தான் இப்படியாக துண்டு துண்டாக எழுதுகின்றேன். போன் பதிவில் நான் ஒருகடிதத்தை பற்றி குறிப்பிட்டிருந்தேன், அந்த அதிர்ச்சியான கடிதத்தை இவரின் உறவுமுறை அண்ணன் எழுதியிருந்தார். அதில், அம்மாவுக்கு மாரடைப்பு வந்து vellore cmc ல் அட்மிட் செய்திருக்கின்றோம், தந்தி கொடுக்க வேண்டாம் என்று அப்பா கூறியதால் கடிதம் எழுதுகின்றேன், உடனே புறப்பட்டு வரவும் என்று எழுதி இருந்தார்.செய்தியைப் படித்து விட்டு மீண்டும் மீண்டும் படித்து இது நிஜம் தானா என்று உறுதிச் செய்துக் கொண்டேன், எனது கணவருக்கு செய்தி தெரிவித்தேன். அவரும் உடனே வந்து பாட்டியிடம் விசயத்தை தெரிவித்துவிட்டு என்னையும், குழந்தைகளையும் பாட்டியின் உடன் இருந்து அவர்களை கவனித்துக் கொள்ளுமாறு ஏற்ப்பாடுகளைச் செய்து விட்டு அம்மாவைப் பார்க்க புறப்பட்டு விட்டார்.அத்தைக்கு வந்த மாரடைப்பு சாதாரணமாக வந்ததல்ல, ஒரு சிறு அதிர்ச்சியைக் கூட அவர்களால் தாங்க முடியாமல் இதயம் எந்த நேரத்திலும் நின்று விடுமாம், இதயத்தின் ஒரு பகுதி செயல் இழந்து விட்டதாம், ஆகவே அறுவைச் சிகிச்சையால் கூட பிழைக்க வைக்க முடியாதாம் ஆகவே மிகவும் ஜாக்கிரதையாக பார்த்துக் கொள்ள வேண்டும். இது போன்ற வசனத்தை சினிமாக்களில் தான் கேட்டிருக்கின்றேன். அனால் என் வாழ்க்கையிலும் இந்த வசனத்தை கேட்கவேண்டியதாயிற்று. இப்பொழுது பாட்டியை கவனித்துக் கொள்ளும் முழுப் பொருப்பும் நாங்கள் தான். அதன் பிறகு நடந்ததையெல்லாம் எழுத எனக்கு ஒரு ஆயுள் வேண்டும் ஆகவே மிகவும் சுருக்கமாக எழுதுகிறேன்.
தொடர்ந்து வந்த மூன்றாவது மாரடைப்பில், எனது அத்தை இறந்து விட்டார்கள். எனது கணவரோ அம்மாவின் மறைவுக்கு பின்பு நடமாடும் ஜடம் போலாகிவிட்டார். இருந்தாலும் அவருடைய கடமைகளை சிறிதும் யாருக்கும் விட்டுக் கொடுக்க வில்லை. பாட்டியின் உறவினர்கள் எவ்வளவோ எடுத்துக் கூறியும் இவர் யாருடனும் பாட்டியை அனுப்ப மாட்டேன் என்று கண்டிப்பாக கூறிவிட்டார். எல்லாம் முடிந்து மீண்டும் பாட்டியுடன் கேரளாவிற்க்கு சென்று விட்டோம். பிறகு பாட்டியும் மகள் பிரிந்த ஏக்கத்தினால் ஒரு வருடத்தில் அவரும் போய் சேர்ந்தார்கள்.என்னிடம் கடைசி நேரத்தில் அவர் கூறிய வார்த்தை இன்னும் எனது காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கின்றது. அதை உங்களுக்கும் கூறுகின்றேன், எனது இரண்டு கைகளையும் பிடித்துக் கொண்டு அவர்கள் கூறியது நானும், என் பொண்ணும், என்ன புண்ணியம் செய்தோமோ உன்னை எங்கள் மருமகளாகவும், பேத்தியாகவும் அடைவதற்க்கு. நான் கூட யாருக்கும் நீ செய்த பணிவிடைகளை செய்தது இல்லை, இந்த சின்ன வயதில் எங்களுக்கு நீ செய்ததொண்டுகளை எத்தனை ஜென்மம் எடுத்தாலும் அடைக்க முடியாதடியம்மா,உனக்கு ஒரு குறையும் ஆண்டவன் கொடுக்க மாட்டான்.என் பேரனையும், குழந்தைகளையும் நன்றாக பார்த்துக் கொள், இனி நீ தான் அவனுக்கெல்லாம் என்று கூறி என் கைகளை முத்தம் செய்து பிரிந்து விட்டார்கள். இது போன்ற ஆசீரைப் பெற நான் தான் புண்ணியம் செய்திருக்க வேண்டும்.நாங்கள் நினைத்திருந்தால் அவர்களை கவனித்துக் கொள்ள எத்தனையோ ஏற்ப்பாடுகளை செய்து விட்டிருக்களாம். அத்தை உயிரோடு இருக்கும் பொழுதும் சரி, தவறிய பின்பும் சரி, ஆனால் அப்படிச் செய்ய வில்லை. நான் படும் அவஸ்தைகளை பார்க்க பிடிக்காமல் எனது அம்மா எங்களைப் பார்க்க வருவதைக் கூட நிறுத்தி விட்டார்கள். ஆனால் எனக்கோ, என் கடமைகளை தானே செய்கின்றோம், என்னிடம் அவர்கள் காட்டிய பாசத்தை திருப்பிச் செய்கின்றோம் என்ற உணர்வு தான் இருந்தது. அதனால் எவ்வளளவோ அருவெருப்புக்களையும் தாங்கிக் கொண்டு, என் கடமைகளில் கொஞ்சம் கூட குறைவைக்காமல் நடந்துக் கொண்டு, என்னுடைய இண்ணல்களை அவர் காதிலும் போடாமல் பார்த்துக் கொண்டதால்,தான் என் கணவருக்கும் அவர் இழந்த இழப்புகளிலிருந்து தன்னை தேற்றி கொள்ள ஏதுவாக இருந்தது.இல்லையென்றால் வாழ்க்கையில் தொடர்ந்து வந்த பிரச்சனைகளினினால் அவருக்கு பயித்தியம் தான் பிடித்திருக்கும்.ஆகவே அன்பு நேயர்களே வீட்டிலுள்ள வயதானவர்களால் இதுப் போன்ற அல்லது இதற்க்கும் மேலாக கூட பிரச்சனைகள் வரக் கூடும், அப்படி வந்து விட்டால் மனம் சோர்ந்துப் போகாமல் அந்த பிரச்சனைகளை எதிர் கொள்வதும், அவர்களை கவனித்துக் கொள்வதும் வாழ்க்கையில் அதுவும், ஒரு அங்கம் அல்லது நமது கடமை என்ற உணர்வோடு நாம் நடந்தால் இப்பொழுதுள்ள முதியோர் இல்லங்கள் எல்லாம் காணாமல் போய்விடும் என்பது உறுதி.இதுவரை எனது அனுபவத்தை பொருமையுடன் படித்த அனைவருக்கும் நன்றி கூறி முடிக்கின்றேன்.நன்றி.

நலமாக இருக்கிறீர்களா நீங்கள் வயதானவர்கள் என்ற தலைப்பில் உங்கள் வாழ்க்கயில் நடந்த அனுபவத்தை பற்றி எழுது இருந்தீர்கள்.

அதை படித்துவிட்டு எனது கருத்தினை சொல்கிறேன்.எப்படி மேடம் எல்லா விஷயத்திலும் எக்ஸ்பர்டாக இருக்கிறீகள்.

உங்களை வாழ்த்த எனக்கு வார்த்தைகள் இல்லை. எனக்கு உங்களை போல் எந்த அனுபவமும் இல்லை இருந்தாலும் நான் நிறைய வீட்டில் பெரியவர்களை பார்த்து இருக்கிறேன் அவர்கள் அந்த பெரியவர்களை ஒரு பெரிய சுமையாகத்தான் நினைக்கிறார்கள்.

அப்பொழுது நான் நினைப்பேன் வயது ஆகிவிட்டால் அவர்களும் குழந்தைகள் தானே. நாம் நம்முடய குழந்தைகள் தப்பு செய்தால் நாம் பொறுத்து கொள்கிறோம் தானே நம் குழந்தைகள் அசிங்கம் பண்ணினால் நாம் தானே சுத்தம் செய்கிறோம்.

அப்படி இருக்க அந்த பெற்றோர்கள் அந்த மக்களை வளர்த்து ஆளாக்க எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பார்கள். ஆனால் அந்த பிளைகள் மட்டும்
வளர்ந்து ஆளானதும் ஏன் தன் வயதான் பெற்றோர்களை சுமையாகவே நினைக்கிறார்கள் என்று நான் என் அம்மாவிடம் கேட்பேன்.இதை மாதிரி பெற்றோர்களால் கஷ்டம் என்று நினைப்பவர்களை பார்த்தால் எனக்கு வெறுப்பாக இருக்கும்.

ஆனால் நீங்கள் உங்கள் கணவரின் பாட்டியையே ஒரு குழந்தை மாதிரி பார்த்துக்கொண்டவிதம் எனக்கு ரெம்பவும் பிடித்து இருக்கு. உங்களை போல் எல்லோரும் இருந்துவிட்டால் இனி வரும் காலத்தில் முதியோர் இல்லம் என்ற பேச்சுக்கே இடம் இல்லாமல் போய்விடும்

உங்கள் வாழ்வில் எந்த குறையும் இல்லாமல் வாழ வாழ்த்துகிறேன்

ஹலோ திருமதி செய்யத், எப்படி இருக்கின்றீர்கள்,நான் நலமாக இருக்கின்றேன். தங்களின் கருத்தை கூறியதர்க்கு மிக்க நன்றி. தாங்கள் என்னை வாழ்த்தியதை நான் கொஞ்சம் கூட எதிர் பார்க்கவில்லை, இன்ப அதிர்ச்சியாக இருந்தது, மிக்க நன்றி.
நீங்கள் வயதானவர்களின் மேல் கொண்ட அன்பை படிக்கும் பொழுது மிகவும் சந்தோசமாக இருந்தது. நிச்சயமாக அவர்களும் குழந்தைகள் போல் தான் ஆகிவிடுகின்றார்கள். ஆனால் ஒன்று நம் குழந்தைகளின் அசிங்கத்தை சுத்தப் படுத்துவது இனிமை. வயதான குழந்தைகளை சுத்தப் படுத்துவது கொடுமை. ஆகவே நான் அவர்களை ஒப்பிட்டு கூற மாட்டேன். குழந்தைப் போல் என்று உதாரணம் சொல்லலாமே ஒழிய இரண்டுக்கும், மலைக்கும் மடுவுக்கும்முள்ள மிகப் பெரிய வித்தியாசம் உண்டு என்று நானும், அவர்களை வைத்துக் கொண்டு அனுபவிப்பவர்களும் நன்கு உணர்வார்கள்.
என்னுடைய கூற்று என்னவென்றால், யதார்த்தமாக இருந்து விட்டால் ஒரு பிரச்சனையும் இருக்காது. நம் வீடு, நம் மக்கள், என்ற உணர்வு இருந்து விட்டால் இது போன்ற விசயங்களை பற்றி பேசவே வாய்ப்பிருக்காது.குடும்பத்தில் மனைவி மட்டுமல்ல, கணவனும், மனைவியின் குடும்பதாரை மதிக்க வேண்டும். அவர்களுக்கு ஒரு கஷ்டம் வந்து விட்டால் ஓடி சென்று உதவ முன் வர வேண்டும். அப்படி நடந்துக் கொண்டால் தான் மனைவி கணவன் குடும்பத்தையும் மதிப்பாள்.முழு மனதோடு அவர்களை நேசிப்பாள்.
Give & Take policy எல்லாவற்றுக்கும் தான் பொருந்தும். இவ்வாறு இருவரும் இரு குடும்பத்தாரையும், மதித்து நடந்தால் குழந்தைகளும், இதைக் கற்று கொள்வார்கள். தாத்தா பாட்டியை நம் அப்பா அம்மா கவனித்ததுப் போல் நாமும் நம் அப்பா அம்மாவை நன்கு கவனித்துக் கொள்ள வேண்டும் என்று உணர்வோடு வளர்வார்கள்.இல்லையேல் குழந்தைகளுக்கு இது போன்ற உணர்வுகள் வர வாய்ப்பே இல்லை.நம்மைப் பார்த்து தான்பிள்ளைகள் எதையும் கற்றுக்கொள்கின்றார்களே தவிர தானாக வராது.
ஆகவே பெரியவர்களின் உணர்வுகளை மதித்து நடக்க முதலில் நாம் தான் பழக வேண்டுமே ஒழிய மற்றவரைக் குறைக் கூறுவதில் பிரயோசனமில்லை.ஆகவே உங்களைப் போன்று ஒவ்வொருவரும் அவர்களைப் பற்றி நினைத்தாலே போதும் ஆரோக்கியமான சமுதாயம் உருவாகிவிடும் என்று கூறிக் கொள்கின்றேன். நன்றி.

கொஞ்சம் பிஸி. அதனால் தான் என்னால் எதையும் எழுதமுடியவில்லை.

டியர் மனோகரி மேடம்,
உங்க கதை வாசித்தவுடன் நிஜத்திலும் இது சாத்தியமா என்று தோன்றுகிறது. உண்மையில் நீங்கள் ரொம்ப Great. உங்க கிட்ட நிறைய கற்றுகொள்ளவேண்டும்.

இப்பொ இருக்கும் நிறையப்பேர் அத்தை, மாமா என்று அல்ல சொந்த அம்மா, அப்பாவை கூட பக்கத்தில் இருந்தால் கஷ்டம் என்று ஒதுங்கவே நினைக்கிறார்கள்.

நீங்கள் சொன்னது போல பெரியவர்களும் குழந்தைகளும் ஒன்று கிடையாது.
குழ்ந்தைகள் அடம் பிடிப்பதற்க்கும் பெரியவர்கள் அடம் பிடிப்ப்பதற்க்குமே பெரிய வித்தியாசம் உண்டு.
குழந்தைகளுக்கு எதுவும் தெரியாது. பெரியவர்கள் பலர் எல்லாம் தெரிந்தும், இது அடம் பிடித்தால் தான் நிறைவேரும் என்று அடம் பிடிப்பார்கள். அதாவது இவர்கள் பிடிவாதமாக இருப்பதால் மற்ற அனைவருக்கும் பாதிப்பு என்று தெரிந்தால் கூட அவர்கள் நினைத்ததை முடித்துகொள்ள நினைப்பார்கள்.

நன்றி...

ஹலோ டியர், தங்களின் கருத்தை அப்பொழுதே படித்து விட்டேன், தொடர்ந்து மற்ற குறிப்புகளை எழுதிக் கொண்டிருப்பதால் தங்களுக்கு பதில் எழுத நேரம் இல்லாமல் பிறகு ஆர அமர எழுதலாம் என்று இருக்கின்றேன், ஓகே வா நன்றி.

மேலும் சில பதிவுகள்