தெரிய வேண்டிய நாகரிகம் - பகுதி 2

சின்ன விஷயம் பேசுவோமா?! தோழிகள் எப்பவும் நல்ல விஷயங்களுக்கு "நோ" சொல்ல மாட்டீங்க. அந்த தைரியத்தில் இதை ஆரம்பிக்கறேன். நல்லா துணி உடுத்தி, டிப் டாப்பா இருந்தா நாகரிகமாயிடுமா??!! பழகும் விதம், மற்றவர் முன் நடந்து கொள்ளும் விதம்.... இவை கவனிக்க பட வேண்டாமா?!

தோழிகளே வாங்க... வந்து உங்க பங்குக்கு புலம்புங்க. நம் புலம்பலை படித்து தப்பு செய்யிறவங்க திருத்திக்கட்டும் (நாமும் தான் திருத்திக்கலாம் தப்பு செய்திருந்தா). தெரிந்து செய்திருந்தாலும் தெரியாமல் செய்திருந்தாலும் எது மற்றவர் பார்வைக்கு தவராக படுதுன்னு தெரிஞ்சிக்கிட்டா திருத்திக்க உதவுமே. அதுக்கு தான் இந்த பகுதி.

பகுதி - 1 நான் எதிர் பார்த்ததை விட வேகமாகவே 100'அ தாண்டிடுச்சு... அதான் பகுதி - 2. இங்க வாங்க எல்லாரும். உங்கள் கருத்துகளை இங்கு சொன்ன அனைவருக்கும் என் நன்றிகள். பலருக்கும் நீங்கள் உதவி இருக்கிறீர்கள். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனிதா உங்களுக்கு ஆதரவை அள்ளி அள்ளித்தர வந்திருக்கிறேன்:).பின்ன எத்தனைப்பேர் இது மாதிரி யாரவது திரட் போடமாட்டாங்களா'னு காத்திட்டிருந்த மாதிரியே எல்லாரும் வந்து எப்படி கொட்டிருக்காங்க,இதுக்கு ஆதரவு தராம வேற எதுக்கு தரப்போரோம்.

எனக்கு ஏற்ப்பட்ட அனுபவங்கள் இங்க நிறைய பேருக்கு ஏற்ப்பட்டிருக்குனு நினைக்கும்போது கொஞ்சம் ஆறுதலாகவும் இருக்கு:)

\\சிலருக்கு ஒரு அருமையாக பழக்கம் வீட்டுக்குள் புகுந்தால் அப்படியே வீட்டை மணப்பாடம் பன்னுவார்கள் எதுக்குத் தானோ தெரியவில்லை.ஏதோ புது வீடு அல்லது முதன்முறை வருகை என்றால் சரி ..வீடு கப்போர்ட் கிச்சன் கட்டில் கதவு முதல் கூரையில் ஒட்டடையுண்டா என்பது வரை ஒரு நிமிஷ நோட்டத்தில் மணப்பாடம் பன்னுவார்கள்...அதென்ன அப்படி ஒரு பழக்கம் போகிற இடத்தில் சுற்றி சுற்றி பார்ப்பது.//
தளிகா சொன்ன மாதிரி இங்க‌ ஒரு குடும்ப‌ம் இருக்கு,அவ‌ங்க‌ வார‌ வார‌ம் வீட்டுக்கு வ‌ந்த்ருவாங்க‌ வ‌ந்து, ஒரு சின்ன‌ குண்டூசி புதுசா வாங்கிருந்தாக்கூட சொல்லிருவாங்க, அதுமட்டுமில்லாமல் எப்ப வந்தாலும் வீட்டை ஒரு சுத்தாவது சுத்திரணும்,அதுவும் முக்கியமா கிச்சனை ஒரு பார்வையாவது பார்க்கலைனா அவங்களுக்கு தூக்கமே வராது,பார்ப்பதோட மட்டுமில்லாமல் இந்த சாமானம் இப்படி வைக்கலாம் அப்படி வைக்கலாம்னு இந்த மாதிரி 'அனுசரையான‌ அட்வைஸ்' தாராளமாவே கிடைக்கும்.இவ‌ரை மாதிரி இவ‌ங்க‌ வாரிசையும் வெச்சிருக்காங்க‌,அவ‌ங்க‌ பொண்ணுதான்.அந்த‌ பொண்ணு இப்ப‌தான் 4 வ‌து ப‌டிக்குது அப்ப‌டியே அம்மா மாதிரியே,பொண்ணு இப்ப‌டினா பைய‌ன் அப்ப‌ப்பா அந்த‌ மாதிரி ஒரு வால் பையனை நான் இதுவ‌ரைக்கு பார்த்த‌தேயில்லை.இவ‌ங்க‌ வீட்டுக்கு வ‌ந்தாங்க‌னா நைட் 11 ம‌ணிக்கு மேல‌தான் கிள‌ம்புவாங்க‌,அவ‌ங்க‌ கிள‌ம்பின‌பின்னாடி குழ‌ந்தைய‌ தூங்க‌ வெச்சு,சாப்பிட‌ற‌துகுள்ள‌ போதும‌டா சாமினு இருக்கும்.

இன்னும் உறவுகள் படுத்துபாடெல்லாம் இருக்கு, ச‌மீப‌கால‌மா நெருங்க‌ன‌ உற‌வுக‌ள் அறுசுவைய‌ பார்வையிட்டு கொண்டிருப்ப‌தால்.......சொல்ல‌முடிய‌வில்லை வில்லை வில்லை.:(

வனிதா மேல எழுதிருக்கறது நாந்தான்.இங்க ஒரு தமிழ்காரங்க வந்திருந்தாங்க அவங்க அறுசுவை ஓப்பன் பன்னினாங்க,அவங்க பேரில் லாகின் ஆயிருக்கறதை கவனிக்காம அதிலேயே போட்டுடேன்:)

வனிதா!! ரொம்ப நல்ல விஷயம் பண்ணிட்டீங்க.. அதுதாங்க பகுதி 2 ஆரம்பிச்சிட்டீங்க:) பகுதி 1இல் நான், தலை தப்பியது தம்பிரான் புண்ணியம் என ஓடி வந்திட்டேன்... இங்கே புதுத் தலைப்பு யாரும் பார்க்கமாட்டாங்க இல்ல:)?.

நாம் ஒரு நண்பர் வீட்டுக்குப் போகிறோம் என்றால். அங்கு குழந்தைகள் இருப்பின் மறக்காமல் கொஞ்சக்காசுக்காவது ஏதாவது வாங்கிச் சென்று குழந்தைகளுக்கு கொடுக்கவேணும். வெறுங்கையோடு போகக்கூடாது. அத்தோடு அங்கே வயதான தாத்தா பாட்டி இருப்பின் அவர்களுக்கும் எதாவது கொண்டுபோய் கையில் கொடுப்பது நல்லது. சிலபேர் அவர்களைப்பற்றி யோசிப்பதில்லை. ஒரு நண்பி வீட்டுக்குப் போகிறோம் என்றால், நண்பிக்கும் கணவருக்கும் பிள்ளைகளுக்கும் மட்டும் வாங்கிக்கொண்டு போகாமல், அவர்கள் வீட்டில் வயதானவர்கள் இருப்பின் நிட்சயம் அதைக் கேட்டுத் தெரிந்து, அவர்களுக்கும் கொண்டுபோகவேண்டும். (இது இலாவின் சிக்கனப் பகுதியில் எழுத நினைத்து, விட்டுவிட்டேன்... இதுக்கெல்லாம் சிக்கனம் பார்க்கக்கூடாது...).

சிலர் வீடுகளுக்குப் போவார்கள். தன் நண்பியோடு மட்டும் பேசிவிட்டுத் திரும்பி விடுவார்கள். இது தப்பு. அங்கே வயதானவர்கள் இருப்பின் நிட்சயம் அவர்களிடமும் இரு வார்த்தை பேசுங்கள். படுக்கையில் இருப்பவர்களாயின் பக்கத்தில் சென்று, போய் வருகிறேன் என புறப்படும்போது சொல்லுங்கள், அவர்களுக்கு அது மகிழ்ச்சியாகவும் இருக்கும் எம்மையும் வாழ்த்துவார்கள்.

இங்கே ஒரு வெள்ளைக்காரக் கிழவிமாரும் என்னிடம் தப்புவதில்லை:). எனக்கு சின்ன வயதிலிருந்தே வயதானவர்களில் ஒரு பிரியம் உண்டு. அதிலும் இந்த நாட்டில்(ஸ்கொட்லாந்தில்), வயதானவர்கள் எப்பவும் அழகாக "குயினைப்" போலவே அழகாக அலங்கரித்துக்கொண்டு மோலுக்குள் சுப்பமார்கட்டுக்குள் திரிவார்கள். எப்பவும் சிரிப்பார்கள், தாமே கதை கேட்பார்கள். இப்படி அடிக்கடி சந்திப்பவர்களில் சிலர், நிரந்தர நண்பர்களாகியிருக்கிறார்கள் எனக்கு. சந்தித்தால் கதைத்துப்போட்டு, புறப்படும்போது கட்டிப்பிடித்து கன்னத்தில் முத்தமிட்டு "take care dear, see you soon" எனச் சொல்லி வழியனுப்பும்போது... மனதுக்கு என்ன ஒரு மகிழ்வாக இருக்கும். வெளிநாட்டில் இருப்பதால் வயதானோரை எல்லோருமே மிஸ் பண்ணுகிறோம். எப்பவும் வயதானோரின் ஆசி எமக்கு தேவை என்பதை மறக்கக்கூடாது. கண்ணதாசன் சொல்கிறார்.. இப்போ இளரத்தம் என்னவெல்லாம் செய்யச்சொல்லும்... பெரியோரை எண்ணமாட்டோம்.. ஆனால் நாளை இந்த ரத்தத்தின் துடிப்பும் அடங்கும்.. எமக்கும் வயதாகும்.. அப்போ யாராவது வந்து கதைக்கமாட்டார்களா என மனம் ஏங்கும்.

அடுத்து எப்பவும் கணவனை மனைவியும் மனைவியைக் கணவரும் குறை கூறிக்கொண்டிருக்கக்கூடாது. அடுத்தவரோடு ஒப்பிட்டு எமது கணவனை/ மனைவியைக் குறையாகக் கூறக்கூடாது. ஒவ்வொருவரிலும் ஒவ்வொரு திறமை இருக்கும் அதை எப்பவுமே வாழ்த்த வேண்டும். ஒருவரை ஒருவர் உயர்வாகப் பேச வேண்டும்(தங்களுக்குள்ளே) அப்போதான் எமக்குள்ளும் பாசம் அதிகமாகும். இங்கே ஒரு பெண் எப்பவும் தன் கணவனை ஏசிக்கொண்டிருப்பாராம்... அடுத்தவரை உதாரணம் காட்டி, நீங்களும் தான் இருக்கிறீங்களே இன்னும் எக்ஸ்ஸாம் கூட முடிக்கவில்லை.. அவரைப் பாருங்கள் இவரைப் பாருங்கள்.. இப்படியே ஒரே புலம்பலாம். இதனால் அக் கணவருக்கு தன்னிலே ஒரு நம்பிக்கை இல்லாத்தன்மையாக இருக்கு. சொல்லிக் கவலைப்படுவாராம். இத்தனைக்கும் அவரும் நல்ல தொழிலில்தான் இருக்கிறார். திருமணமாகிவிட்டால் எமக்கு இவர்தானே கடைசிவரை வாழ்க்கைத்துணை.. எனவே துணையை உயர்வாகச் சொன்னால் நல்லதே. ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு திறமை இருக்கத்தான் செய்கிறது.

என் கணவர் எனக்கு இடையிடை சொல்வார் "நீங்கள் என் அம்மா போலவே கதைக்கிறீங்கள்/இருக்கிறீங்கள்" என்று, அவருக்கு, அவர் அம்மாவில் நல்ல விருப்பம். இதைக் கேட்கும்போது, எனக்கு இன்னும் பாசம் அதிகமாகும்... வெளியே காட்டமாட்டேன், உள்ளே பட்டாம்பூச்சிகள் பறக்கும்.. அதைவிட அடிக்கடி சொல்வார்.. "நீங்கள் கதைத்ததுதான் சரி, நான் யோசித்தேன், நீங்கள் சொன்னதுதான் சரி" என்றெல்லாம் சொல்லும்போது இன்னும் இன்னும் ஒற்றுமைதான் அதிகமாகும். மனைவிமாரும் கணவனிலுள்ள நல்ல விஷயங்களை நேரே சொல்லும்போது அது இன்னும் நல்ல விஷயமாகவே எனக்குப் படுகிறது.

ஒரு ஆண்டி என்னுடன் நன்கு கதைப்பா. அவ ஒருமுறை சொன்னா, தான் இப்போ கணவரோடு வெளியே எங்காவது செல்வதைத் தவிர்த்து வருகிறேன் என்று. காரணம் கேட்டபோது. சொன்னா, எந்த வீட்டுக்குப் போனாலும் திரும்பி வந்தவுடன் சொல்வாராம்,,, " நீ இப்படிக் கதைத்திருக்கப்படாது, அப்படிச் சொன்னது தவறு, அது என்ன ஒரு சிரிப்புச் சிரித்தாய், பார்க்கவே அசிங்கமாக இருந்தது...." இப்படி நிறையக் கதைகள். இத்தனைக்கும் அந்த ஆண்டியும் படித்தவர், நன்கு எல்லோருடனும் பேசுவார். கணவனின் இப்படியான செயல்களால் அவவுக்கு வாய் திறந்து கதைக்கவே பயமாக இருக்குமாம், கணவன் என்ன சொல்வாரோ என்ற பயம்தான் மனதில் தோன்றுமாம். வயதாக ஆகப் பிரச்சனை அதிகமாகிறதாம். இக் கதை நினைவிற்கு வந்ததால் தான் மேலே உள்ளவற்றை எழுதினேன்.

நாம் எப்பவும், நாம் செய்வது சரியென நினைத்துத்தான் கதைக்கிறோம், எழுதுகிறோம். அடுத்தவர் சுட்டிக்காட்டினால்தான் எம்மிலுள்ள தவறு எமக்குப் புரியும். எனக்குச் சரியெனப் பட்டதை நான் எழுதியுள்ளேன்..... இன்னும் வரும் நேரமுள்ளபோது..

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

வாங்க கவி வாங்க... இது யாருடா புதுசா இருக்காங்கன்னு நினைச்சேன், நீங்க தானா. :)

அதிரா... சொன்னது அண்ணா'வ தானே...??!?! ;) நான் கண்டு பிடிச்சுட்டனே...

அண்ணா.... வாங்க வாங்க நீங்க பார்க்க மாட்டீங்கன்னு இங்க ஒரு ஆள் இஷ்டத்துக்கும் எழுதிகிட்டு இருக்காங்க. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

இன்று என் நினைவுக்கு வந்த சில:

1. சிலர் வயதில் சின்னவர் என்று பார்த்தால் உடனே "நீ வா போ" என்று பல நாள் பழகிய மாதிரி பேசுவார்கள். சமீபத்தில் ஏர்போர்ட்டில் என்னை ஒரு பெண் இப்படி பேசியதை போனில் கேட்டுவிட்டு என் கணவர் "எவ அவ உன்னை மறியாதை இல்லாம பேசுறது??"னு கோவ பட்டார். முன் பின் அறிமுகம் இல்லாதவர் வயதில் சின்னவராக இருந்தாலும் மரியாதையாக பேசலாமே.

2. ஒரு முறை என் தந்தை நண்பர் வீட்டுக்கு போயிருந்தோம். அப்போது நான் சிறு பிள்ளை. சாஸ்திரம் பார்க்கும் குடும்பம். தப்பில்லை. ஆனால் நான் காப்பி குடிக்கும் போது அந்த வீட்டு பாட்டி "வாய் படாம குடி... ஆச்சாரமா இருப்போம் நாங்க"னு சொன்னதும் எனக்கு என்ன பண்றதுன்னே தெரியல. சூடான காப்பியை உதட்டில் படாம எப்படி ஊத்துறது??!! அது கூட பரவாயில்லை... குடிச்சுட்டு வெச்ச கப்பை என் கண் முன் தண்ணீர் தெளித்து எடுத்தது இன்னும் நினைவிருக்கு. அன்றில் இருந்து இன்று வரை அவர்கள் வீட்டில் சாப்பிட யோசனையாகவே இருக்கும். இத்தனைக்கும் அவர்கள் வீட்டில் அந்த பாட்டி தவிர வேறு யாரும் ஆச்சாரம் பார்ப்பதில்லை, அனைவரும் நன்றாக பழகும் நல்லார்கள். ஆச்சாரம் பார்க்கும் தோழிகளே, தப்பில்லை பாருங்கள்... ஆனால் விருந்தினர் போகும் வரை அந்த கப்புகளை எடுக்காமல் இருக்கலாம், இல்லை அவர்கள் கண்ணில் படாமல் செய்யலாம்.... தீன்டத்தகாதவர் போல் நடத்தப்படுவதை யாரும் விரும்ப மாட்டார்கள்.

3. குழந்தை வளர்க்கும் பெற்றோர், குழந்தை வேறு வீட்டில் தவறு செய்தால் உடனே தனியாக அழைத்து சொல்லி குடுங்க... அதை விட்டு விட்டு மற்றவர் முன் உங்க குழந்தையை அடிக்கவோ, திட்டவோ வேண்டாம். அது மட்டுமல்ல சொந்த தாதா பாட்டி ஆனாலும் சரி, மற்ற உறவினர் ஆனாலும் சரி, நல்ல விஷயத்தை குழந்தைக்கு கற்று தர மட்டுமே வேண்டும், அவர்களை அடிக்கவோ திட்டவோ வேண்டாம். உறவினர் தன்னை திட்டுவதை பார்த்தும் தாய் கண்டுகொள்ளவில்லை என்று பிள்ளை மனம் ஏங்கும். மற்றவர் முன் நம் தாய் நம்மை அடிக்கிறார் என்று அசிங்கப்படும். இது குழந்தைகள் பிடிவாதமாக வளர காரணமாகும். சில பிள்ளைகள் பெற்றோர் பேச்சை கேட்காமல் அவர்களை வெறுக்க கூட காரணமாகிவிடும். குழந்தையை கண்டிப்பது கூட கலை தான். முறையாக செய்தால் தான் குழந்தை நல்ல முறையில் வளரும். சிறு வயதில் அவர்களை மனதளவில் பாதிக்கும் விஷயங்களை தவிர்ப்பது நல்லது. (சிலர் உறவினர் வீட்டில் தான் தான் தன் பிள்ளையை மிகவும் கண்டிப்பாக வளர்ப்பது போல் அடிப்பார்கள், எதுக்கு எடுத்தாலும் திட்டுவார்கள். உறவினர் அடித்தாலும் திட்டினாலும் "போடு நல்லா... நான் சொன்னா கேக்குறதே இல்லை"னு சொல்லுறது.)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நான் இந்த டாபிக் தினமும் படித்து கொண்டு இருக்கிறேன். புதிய பகுதி என்று பார்த்ததும் பதிவு போடவேண்டும் போல இருந்தது :)

எல்லாருடைய கருத்துக்களும் சூப்பர் :) நான் எனக்கு மட்டும்தான் இந்த அடுத்த வீட்டு பசங்க பிரச்சனைனு நெனச்சிட்டு இருந்தேன்! எல்லாருக்கும் இதே பிரச்னைனு தெரிஞ்சதும் கொஞ்சம் நிம்மதியா இருக்கு ;)

எனக்கு ரொம்ப கடுப்பேத்தர விஷயம் (வேற யாராச்சும் சொல்லிட்டாங்களான்னு ந்யபகம் இல்ல)

1) தெருவில நடந்து போயிட்டு இருக்கறச்சே எச்சில் துப்பறது. அன்னிக்கி அப்படித்தான் downtown ல நடந்து போயிட்டு இருந்தேன். என் முன்னால ஒரு இந்தியன் guy போயிட்டு இருந்தார். திடீர்னு எச்சில் துப்பிட்டாறு. I was so taken aback. எனக்கு வந்த கடுப்பில கூப்பிட்டு திட்டனும் போல இருந்தது. பேசாம போயிட்டேன். ரெண்டு அடி நடக்கல. இன்னொரு சைனீஸ் ஆளு நடந்துட்டே இருந்தான் டபால்னு அவனும் துப்பறான். அட ச்சே நமக்கு இன்னிக்கி நேரம் சரியில்லனு நொந்து போயிட்டேன்.

2) ஹேமா போன பதிவுல சொல்லி இருந்ததை தான் நானும் சொல்லனும்னு நினைச்சேன். அது ஏன் இந்தியால இருந்து வர பசங்க நம்பள மொறச்சு மொறச்சு பக்கராங்கனு புரிய மாட்டுது. தனியா போனாலும் சரி புருஷன் புள்ளயோட போனாலும் சரி. மொறச்சி பாக்கறாங்க. Its really rude to stare at other people!!

3) இது போன மாசம் எனக்கு நடந்த விஷயம். இந்த ஊர்ல தெரிஞ்சவங்க ஹக் பண்ற மாதிரி நம்ம ஆளுங்க பண்ண ஆரம்பிச்சிட்டாங்கப்பா. நான் ஒரு ரெண்டு தரம் அந்த மனுஷன பாத்து இருக்கேன். வீட்டுக்கு சாப்பிட கூப்டு இருந்தாங்க. வீட்டுக்கு போன ஒடனே அந்த அம்மா ஒரு ஹக் குடுத்த. அடுத்தது ஐயா ஒரு ஹக் குடுக்கறாரு!! என்னடா வம்ப போச்சுன்னு சாப்பாடு முடிஞ்சி போகரச்சே நான் அம்மா கிட்டயும் போகல ஐயா கிட்டயும் போகல!! என்ன கொடுமைங்க இது! மத்தவங்களுக்கு பிடிக்குமா இல்லையானு யோசிக்கணும் இல்லையா?

மிச்சபடி எல்லாரோட கருத்துக்களையும் நானும் ஒத்துக்கறேன்!! நிறைய நிறைய மாற்றங்கள் வரணும். முக்கியமா உன் சம்பளம் உன் வீட்டுக்காரர் சம்பளம் எவ்வளவு? அங்க வீடு வாங்கிட்டியா? உன் பையன் first rank எடுக்கரானா? இங்க first rank லாஸ்ட் ரேங்க் எல்லாம் கிடையாதுன்னு சொன்னா சொன்னா பேரனோ பேத்தியோ first ரேங்க் தவிர வேறு எதுவும் எடுக்க மாட்டங்கன்னு சொல்றது. இதெல்லாம் விடனும். இதெல்லாம் மத்தவங்களோட personal விஷயம்னு புரியனும். ஒண்ணு மட்டும் எனக்கு புரியல. எல்லாரும் first ரேங்க் எடுத்த யார்தாங்க செகண்ட் third எல்லாம் வராங்க??

முக்கியமா indian way of education is far more superior to other countries அப்டின்னு நம்ப குழந்தைங்க முன்னாலேயே சொல்றத நிறுத்தனும். அது அந்த குழந்தைய எப்படி பாதிக்குதுன்னு பெரியவங்க உணரணும்.

அட போங்க இன்னும் நெறைய இருக்கு. சொல்ல சொல்ல வேதனைதான்.

அன்புடன்
உமா

என்னை ரொம்ப நாளா கோபப் படுத்திக்கிட்டு இருக்கற விஷயத்தை இப்போ கொட்டிடறேன். நாகரீகம் எல்லாம் தனிப்பட்ட மனுஷங்களுக்கு மட்டும் இல்லை. இந்த மீடியாக்களுக்கும் இருக்கு. கையில் ஒரு கேமராவும் ஒரு சேனலின் அடையாள அட்டையும் இருந்தால் என்ன வேனும்னாலும் செய்யலாம்னு இவனுங்க செய்யற அட்டகாசம் தாங்க முடியலை. அதாங்க சிரிக்க மட்டும்தான்னு போட்டுட்டு இவனுங்க செய்யற அடாவடித்தனமான கேண்டிட் கேமரா போன்ற நிகழ்ச்சிகளைத்தான் சொல்றேன். எதுவும் அளவோட அடுத்தவங்களை காயப் படுத்தாம இருந்தா ரசிக்க முடியும். ஒருவரை நடுரோட்டில் சட்டையை கழற்ற வைத்து விட்டு பின்னர் கேமராவைக் காட்டி சும்மாதான் சீண்டினோம்னு சொல்றதா நகைச்சுவை? ஒரு பெரிய ஷாப்பிங் மாலின் வாசலில் காலில் ஒட்டக்கூடிய மேட்டை போட்டு வைத்து அதில் கால் ஒட்டி தடுக்கி விழுந்தவர்களை படம்பிடித்து சிரிக்க மட்டும் என்று சேனலில் போடுகிறார்கள். ஒருவேளை ஒரு கர்ப்பிணி நடந்து வந்து இடறி விழுந்து ஏதாவது ஆகிவிட்டால் என்ன செய்வார்கள்? ஒரு சாரி சொல்வதில் எல்லாம் சரியாகி விடுமா? யாராவது சேனல் காரர்கள் பார்த்து திருந்தினால் சந்தோஷம்.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

சில பல நாட்களுக்கு முன்பு எங்கள் வீட்டில் நான் அருகிலுள்ள ஒரு பஞ்சாபி குடும்பத்தினரை அழைத்து டின்னர் கொடுத்தேன்... நிறைய சொதப்பியிருந்தோம்..... இருந்தும் பொறுத்து கொண்டு சாப்பிட்டு பாராட்டி (!!) விட்டு தான் போனார்கள்... பொழுது இனியதாகவே கழிந்தது.. ஒரே ஒரு குறை... ஹ ஹா... நண்பரின் தந்தை வரும் போது உடன் ஒரு பாட்டில் கொண்டு வந்திருந்தார்... எங்கள் வீட்டிலேயே அவர் தனக்குதானே தண்ணி பார்ட்டியும் வைத்துக்கொண்டார்... எனக்கு கோபம் எல்லாம் வரவில்லை, சிரிப்பு தான் வருகிறது... நம்ம கொள்கைகள் (!!) அவருக்கு தெரியாது தானே... அந்த க்லாஸ்களைஎல்லாம் என் கணவரை கழுவி வைக்க சொல்லிவிட்டேன்... :-)

சில விஷயங்கள் கற்றுக்கொண்டேன்.. (விருந்து நாகரீகத்தில் சேர்த்துக்கொள்ளலாம் தானே)

நம்ம ஆட்கள் என்றால் பரவாயில்லை... மற்ற மாநில நண்பர்களை அழைக்கும் போது தனியே ஒரு கப்பில் அவர்களுக்காக ஸ்பூன்கள் / forks போட்டு வைத்திடுதல் நன்று...

முடிந்தவரை அப்போது செய்யும் அயிட்டம்ஸ் குறைத்துக் கொள்ளுதல் நன்று.. நான் வடையும் சுட்டு, தோசையும் சுட்டு களைத்து போய் விட்டேன்.. அவர்களிடம் சரியாக பேசவும் முடியவில்லை..

அதிராவும் சொல்லியிருந்தார்.. buffet சிஸ்டம் மிக நன்று... அனைவரும் தனக்கு பிடித்ததை வேண்டும் என்ற அளவிற்கு எடுத்து சாப்பிடுவார்கள்... யார் என்னென்ன எவ்வளவு சாப்பிடுகிறார்கள் / வீண் செய்கிறார்கள் என்று நமக்கு தெரிய வாய்ப்பில்லை :-) பரிமாறும் வேலை மிச்சம்.. நாமும் அவர்களோடு உட்கார்ந்து சாப்பிட்டுக்கொண்டே பேசலாம்...

குழந்தைகள் வருகிறார்கள் என்றால் அவர்கள் அம்மாவிடம் கேட்டு அவர்களுக்கென்று பிடித்தமாதிரி ஒன்றிரண்டு ஐடம்ஸ் செய்திடுதல் நன்று... (ஒன்னரை வயது குழந்தை - அது எப்படி நம்ம சாப்பாடு சாப்பிடும்? எனக்கு இது மண்டையில் தோன்றவேயில்லை)..

வீட்டில் விருந்து குடுக்கும் அறையை தயார் செய்யும் போது அறையில் உள்ள உடையக்கூடிய பண்டங்களை வேறு அறைக்கு மாற்றிவிடலாம்... குழந்தை எதை பிடித்து இழுக்கும் என்றே தெரியாது... அதே போல் குழந்தைக்கு பிளாஸ்டிக் கப்/தட்டு கொடுத்தல் நன்று... எப்போது தூக்கி போடும் என்று தெரியாது...

அதே போல் விருந்துக்கென்று ஷாப்பிங் செய்யும் போது அவர்களுக்கென்று ஏதாவது கேம்ஸ் / விளையாட்டு ஏற்பாடு செய்வது நன்று... (எங்கள் வீட்டில் ஏது பொம்மை - எனவே குழந்தை ஓடி ஓடி விளையாடி களைத்து போனது...). எங்கள் உறவினர் வீட்டில் ஒரு முறை பார்த்தேன்.. எளிய டிராயிங் புக்ஸ் வாங்கி வைத்திருந்தார்கள்... குழந்தைகள் கிறுக்கி சலித்துவிட்டார்கள்.. இருந்த இடத்தை விட்டு நகரவேயில்லை... இன்னொருவர் வீட்டில் சற்று பெரிய குழந்தைகள் என்பதால் போர்ட் கேம்ஸ்... மேலும் பொம்மை வாங்குவது என்றால் அவர்களுக்கென்றே (அதாவது அதனை பியித்து போட்டாலும் பரவாயில்லை என்ற எண்ணத்தோடு) எளிய soft toys வாங்கி வைக்கலாம்...

அழைக்கும் போதே யார் யார் என்ன உணவு வகை என்று கேட்டு வைக்கலாம்.. (அவர்கள் வீட்டில் அனைவரும் நான் - வெஜ், அவர்கள் அம்மாவை தவிர.., இது தெரியாமல் போனதால் பெரியதாக வெஜ் ஐய்டம்ஸ் எதுவும் பண்ணவேயில்லை :-( ).. நான் - வெஜ் என்றாலும் சிலர் (என்னை போல) செலக்டிவாக இருப்பார்கள்... அதில் என்னென்ன சாப்பிடுவார்கள் என்று கேட்டுக்கொள்ளவேனும்...

மேலும் உணவை வைக்கும் போதே நான் வெஜ் / வெஜ் அயிட்டங்களை பிரித்து இரு பிரிவாக வைத்திடலாம்.. யாரும் கேட்டு கேட்டு தொந்திரவு பண்ண மாட்டார்கள்...

ஒரு செக் லிஸ்ட் போட்டு வைத்துக் கொள்ளலாம்.. எல்லாம் செய்து விட்டோமா என்று சரி பார்ப்பதர்க்கு... (நான் ட்ராஷ் கான் மாற்ற மறந்து விட்டேன்.. )

கொஞ்சம் பெரிய விருந்து என்றால் (இரண்டு மூன்று நண்பர் குடும்பங்கள்) இங்கு எல்லோரும் மூன்று முறை டேபிள் மேல் உணவு மாற்றுகிறார்கள்.. முதலில் starters அண்ட் ஜூஸ், பிறகு முழு உணவு, இறுதியில் பழ வகைகள் மற்றும் டெசர்ட்... என்னால் இம்முறை அது போன்று செய்ய முடியவில்லை... அடுத்த முறை சரியாக செய்ய வேண்டும்... இவற்றோடு மறக்காமல் தண்ணீரையும் வைத்துவிட வேண்டும்...

நேரம் இருந்தால் அனைவருக்கும் பொதுவான மொழியில் பாட்டுக்கள் / இசை மெல்லிய சத்தத்துடன் போட்டு விடலாம்...

நீங்களெல்லாம் விருந்து கொடுத்து கொடுத்து களைத்து போய் இருக்கீங்க... நான் இப்ப தான் கொஞ்சம் கொஞ்சமா கத்துகிட்டு இருக்கேன்...அதான்... ஏதாச்சும் தப்பிருந்தா மன்னிச்சுக்கோங்க...

இப்படிக்கு,
சந்தனா

இப்படிக்கு,
சந்தனா

குழந்தைக்காக ஏங்கி காத்திருப்பவர்களிடம் சிலர் கேட்கும் கேள்விகள்
1.செக்கப் போனீங்களா? பிரச்சினை உங்களுக்கா இல்லை அவருக்கா?
யார்கிட்ட பிரச்சினைன்னா இவங்களுக்கு என்ன? வந்தமா நல்லதா பேசினோமா போனோமான்னு இருக்க வேண்டியதுதானே. எதற்கு இந்த ஆராய்ச்சியெல்லாம்?
2. எப்படீங்க உங்களுக்கு நேரம் போகுது? நாள் பூரா என்ன பண்ணுவீங்க? எனக்கு மகன்(ள்) இருக்கப் போய் அவங்களை கவனிக்கறதுலேயே நேரம் ஓடிடறது.
நேரத்தை எப்படிப் போக்கினா இவங்களுக்கு என்ன? அவங்கவங்க மனுசுக்கு ஏத்த மாதிரி பிடிச்ச விஷயங்களில் நேரத்தை செலவழிப்பாங்க. குழந்தைகள் இல்லேங்கறதுக்காக என்னேரமும் அழுது வடிஞ்சு புலம்பிக்கிட்டு இருக்கணும்னு ஏதாவது சட்டம் இருக்கா என்ன?
3.உங்களுக்கு தனியா இருக்க கஷ்டமா இல்லையா?
கஷ்டமா இருந்தாதான் இவங்களால என்ன செய்ய முடியும்.
இப்படி கேக்கறதுதான் கஷ்டமே.

பார்ட்டிகளில் அறிமுகப்படுத்தும்போது அறிமுகப் படுத்திவிட்டு திரும்பிய மறுகணம் முதுகுக்கு பின்னால் "இன்னும் குழந்தைகள் இல்லை" என்ற தகவலும் கொடுக்கப்படும்

இவங்க எல்லாம் எப்பதான் அடுத்தவங்க மனசை நோகடிக்காம பேச கத்துப்பாங்களோ?!

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

மேலும் சில பதிவுகள்