மகளும் நானும்.

அன்பு நேயர்களுக்கு வணக்கம். எல்லோரும் எப்படி இருக்கீங்க? இந்த இழையின் மூலம் உங்களை சந்திப்பதில் சந்தோசமாக உள்ளது. இதில் ஒரு தாய்க்கும் மகளுக்குமான பந்தம் பாசம் எவ்வாறு இருக்க வேண்டும்,அதை எப்படியெல்லாம் வளர்த்துக் கொள்ளலாம் அதன் சாத்திய கூறுகள் என்ன என்ன என்று பேசலாம் என்றிருக்கின்றேன். இப்பதிவில் நான் குறிப்பிடப்போகும் கருத்துக்கள் யாவும் ஒரு குறிப்பிட்ட வயதினரை மனதிலிறுத்தி எழுதியவை,அதாவது 10-14 அல்லது 15 வயதிற்குள்ளான பெண் குழந்தைகளின் மனநிலைகளை கண்டும், கேட்டும்,அனுபவித்த குறிப்புகளேயாகும். பொதுவாக கூறினால் அம்மாக்கள் தன் குழந்தைக்கு எது பிடிக்கும் எது பிடிக்காது என்று பார்த்து பார்த்து கொடுக்கும் உணவோடு நிறுத்திக் கொள்வது தான் வழக்கம், மற்றபடி அவர்கள் எவ்வாறு இருக்க வேண்டும், என்ன உடுக்க வேண்டும், என்ன படிக்க வேண்டும், என்றெல்லாம் பெற்றோர் தான் தீர்மானிக்க வேண்டும் என்று கூறுவது எல்லாக் குழந்தைகளிடத்திலும் செல்லுபடியாவதில்லை என்னைக்கேட்டால் அவ்வாறு நினைப்பதே தவறு. பெற்றோர்கள் குழந்தைகளின் உணர்வுகளை புரிந்து நடப்பது தான் எந்த பிரச்சனையையும் வரவிடாமல் தடுக்கும் சரியான அணுகுமுறை என்பேன்.குழந்தைகள் என்பது இப்பதிவில் பெண் குழந்தைகளை மட்டுமே குறிக்கும்.ஆக இப்பதிவில் மேற்கூறிய வயதிலிருக்கும் பெண் குழந்தைகளைக் கொண்ட தாய்மார்களுக்கு உதவும் பதிவாக இது இருக்கும் என்று நினைக்கின்றேன்.அவ்வாறில்லா விடினும் ஒரு விழிப்புணர்வு பதிவாகக் கூட எடுத்துக்கொள்ளலாம் என்று கேட்டுக் கொள்கின்றேன்

இந்த உலகில் ஒவ்வொரு தாயும் தன் மகள் நாளொரு மேனி பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து வருவதைப் பார்த்து பார்த்து பூரித்துக் கொண்டிருக்கும் வேளையில், ஒரு குறிப்பிட்ட வயதை நெறுங்கும் பொது அந்த மகளே அத்தாயின் மன அமைதியை பாதிக்கும் விதமாக நடக்க ஆரம்பிக்கின்றாள். அவளின் பேச்சில்,செய்கைகளில்,தோற்றத்தில்,தோரணையில் என்று அனைத்திலும் ஒரு மாற்றம் வந்துவிடுகின்றது! ஏன் அந்த திடீர் மாற்றம் எங்கிருந்து வந்தது?அந்த மாற்றத்தின் பாதிப்பு நன்மையில் முடிந்தால் சந்தோசமே. ஆனால் அது ஒட்டுமொத்த குடும்பத்தின் அமைதியை அல்லவா பதம் பார்க்கின்றது அப்படியானால் இது யாருடைய தவறு? அதற்கு அடிகோள் இட்டவர் யார்? என்றெல்லாம் பெரும்பாலான குடும்பங்கள் ஒருவரை ஒருவரை குறைக்கூறிக் கொண்டு செய்வதறியாது கலங்கிப் போய் இருக்கின்றார்கள்.ஆனாலும் இதற்கெல்லாம் காரண கர்த்தா பல இருப்பினும், தன் மகளின் போக்கிற்கு தானும் ஒரு காரணம் என்றே அறியாமல் வாழும் அம்மாக்கள் கொண்ட வீடுகளே அதிகம் என்பேன்.

சில நேரத்தில் என்னத்தான் அம்மா தன் மகளின் மீது பாச மழைப் பொழிந்தாலும் புரிதலோடு நடந்துக் கொண்டாலும் அந்த மகளுக்கு தன் அம்மாவின் மீது ஏதாவதொரு சிறிய கருத்துவேற்றுமை இருக்கத்தான் செய்கின்றது ஆனால் அது அந்த சிறிய அளவிலேயே இருந்துவிட்டால் ஒரு பிரச்சனையும்மில்லை ஆனால் ஒட்டுமொத்தமாக எல்லா விசயத்திலும் வேற்றுமைகள் நிறைந்து அதுவே நாளடைவில் பூதாகரமாகி பிறகு தாய் மகள் என்ற உறவு முறிந்து விரோதிகளாக பார்க்கும் அபாயம் நேர்ந்து விடுகின்றது. அந்த தாய் படும் வேதனைக்கும் அளவே இருக்காது. இதனால் பாதிப்பு என்னவோ அம்மாவை விட அந்த பொண்ணுக்குத்தான் அதிகம், தாயின் சிறகிலிருந்து விடுபட்டு சென்ற கோழிக் குஞ்சு பருந்திற்கு இரையாவதுப் போல், அந்தப் பெண்ணிற்குத் தான் அபாயம் சூழ்ந்துக் கொள்ளும். இதை அறியாததனால் தான் பெரும்பாலான குடும்பங்களில் பெண்கள் எதற்கெடுத்தாலும் தர்க்கம் நடதுவார்கள்,அவர்களை ஒட்டு மொத்தமாக குறை சொல்லியும் பயனில்லை இதற்கு ஒரே வழி, தாய் தன் மகளை பொருமையுடன் கையாண்டாலொழிய அக்குழந்தையை சரி செய்ய முடியாது.அதில் முக்கியமாக தாய் தன் உணர்வுகளை மகளிடம் சரியாக வெளிப்படுத்த வேண்டும், அது தவறுவதால் தான் தன் மகளுக்கு அவளே பிரச்சனையாகி விடுகின்றாள் அல்லது அவளுக்கு தன் மகளே பிரச்சனையாகும் அவல நிலை உணடாகின்றது.

மகள் தன் தாயிடம் ஏதாவது கேட்க வந்தாலும் பெரும்பாலானவர், உடனே குடும்ப பஞ்சப் பாட்டை பாடியும், இன்னும் தேவையற்ற காரண காரியங்களைப் பேசுவது மகளின் தேவையைத் தட்டி கழிப்பதற்கு ஒப்பாகிவிடும் இதனால் தாயின் மீது ஒரு வெறுப்பு தோன்றக் காரணமாகிவிடுகின்றது, இது போன்ற சந்தர்ப்பங்களில் பெண்கள் சுலபமாக அப்பாவின் உதவியை நாடி சென்று அதில் ஜெயித்தும் விடுவார்கள்,(அவங்கத் தான் பொன்னாட்டி எப்ப மாட்டுவாள் என்று காத்துக்கிட்டு இருக்காங்களே!!! ஐயோ... கோச்சிக்காதீங்க எல்லா அப்பாமார்களையும் சொல்லலீங்க... அது சொந்த கதை சோகக் கதைங்க!) ஆக அந்த சந்தர்ப்பத்தை தாயே ஏற்படுத்திக் கொடுக்க கூடாது என்று தான் கூறுவேன், இதனால்கூட தாய் தந்தைக்கு கருத்து வேற்றுமைகள் உருவாகி குடும்பமே பிரியக்கூட நேர்ந்துவிடும், ஆகவே இதுப் போன்ற பிரச்சனைகள் நேரா வண்ணம் தாய்மார்கள் தான் திறம்பட தன் மகளை கையாள வேண்டும்.

பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு என்பார்கள் அதைப் போல் தன் மகளின் அடாவடித் தனத்திற்கு எவ்வளவு பொறுமையைத் கடைப்பிடித்தாலும் கிளிப்பிள்ளைக்கு சொல்லுவதைப் போல் கூறினாலும் அது செவிகளுக்கு எட்டுவதில்லை.அதிலும் மேற்கூறிய வயதினர்க்கு புரிய வைப்பது என்பது ஒரு தாய்க்கு மிகப் பெரிய சவால் என்றே கூறுவேன். இன்னும் வேலைக்குப் போகும் தாய்மார்களின் பெண்களுக்கு அவர்களிடம் சரியாக பேசக்கூட நேரம் கிடைப்பது அரிது .என்னைக் கேட்டால் இதுப்போன்ற சாக்கு போக்குகளையெல்லாம் சொல்லுவதற்கு பதில், குழந்தையிலிருந்தே தன் மகளை நல்ல புரிதலோடு நடத்தும் தாய்க்கு அவள் மகளை வளர்த்ததில் பெருமிதம் தான் கொள்வாளே தவிர புலம்ப நேராது. அவ்வாறு அம்மாக்கள் புரிதலோடு தன் மகளை வளர்க்கும் முறையிலிருந்து எனக்கு தெரிந்த ஒரு சில குறிப்புகள் இதோ:

1. தாய் தன் மகளிடம் சகஜமாக ஒரு தோழியைப் போன்று பழக வேண்டும்.
2. தன் மகள் தன்னை பார்த்து பயப்பட வேண்டும் என்று ஒருபோதும் நினைக்க கூடாது.
3. தன் மகளின் விருப்பு வெறுப்புகளை மதித்து அதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
4. தாய்க்கு பிடித்தவாரு தான் தன் மகள் நடந்துக் கொள்ள வேண்டும் என்று இயல்பு நிலைக்கு
ஒத்துவராத எண்ணத்தை மாற்றிக் கொள்ள வேண்டும்.
5. தன் மகளுக்கு வெளி உலகத்திலிருந்தும் மனச்சுமைகள் இருக்கின்றது என்பதை புரிந்து அவளை எப்போதும் அன்போடு நடத்த வேண்டும்.
6. பிடிவாதம் பிடிக்கும் மகளிடம் அவளின் ஆசைகளுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்கு பதில் சூழ்நிலையை விவரித்து புரிய வைக்க முற்பட வேண்டும்.
7. தான் இட்ட வேலையைச் செய்து முடிக்கும் அடிமையைப் போல், மகளை நடத்தும் மனநிலையை தாய் அறவே ஒழிக்க வேண்டும்.
8. அவள் எதிரிலேயே அவளைப் பற்றி மற்றவரிடம் அது உறவினரானாலும்கூட அவளைப் பற்றி குறைக் கூறக் கூடாது.
9. தாயின் கனவுகளையும், எதிர்பார்ப்பையும் அதோடுகூட தனது பயத்தையும் தன் மகள் மீது சுமத்தி வளர்க்கும் போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும்.
10. நல்லது என்று தெரிந்தால் உடனே பாராட்ட வேண்டும், தீயது என்று உணர்ந்தால் உடனே அதைப் பற்றி விரிவாக பேச அவளுக்கு புரிய வைக்க முற்பட வேண்டும்.
11. மகளின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்வது என்பது இயலாத காரியம் என்றாலும் அது ஏன் முடியாது, எதனால் இயலாமல் போனது என்று தெளிவுப்படுத்துவது ஒரு தாயின் பொருப்பு.
12. மகள் கேட்க்கும் உடையாகட்டும்,காலுக்கு ஹீல்ஸ்ஸாகட்டும், தலைக்கு போடும் நிறமாகட்டும்,இன்னும் அவர்களின் வயதை மீறிய முகப்பூசு சாதனங்களாகட்டும் எடுத்தவுடன் இல்லை என்று கூறுவதற்கு மாறாக அவளுக்கு தன் தோற்றத்தின் மீது தன்னம்பிக்கை வளர்க்கும் வகையில் எடுத்துக் கூறி, ஓரளவிற்கு அவளின் ஆசையை நிறைவேற்றிக் கொடுக்க வேண்டும்.
13. மகளின் ஆரோக்கியத்தில் அக்கரைக் காட்ட வேண்டும் அதே நேரத்தில் அவர்களின் எதிர்ப்பார்ப்பையும் புரிந்துக் கொள்ள வேண்டும் இல்லாவிடில் கொடுத்தனுப்பும் லன்ச் குப்பைக்குள் தான் போய் சேறும்.
14. கண்டிப்பு தேவை தான் ஆனால் அதுவே மிகையானால் பிறகு தாய்க்கு தெரியாமல் முகப்பூச்சைக்கூட பள்ளிக்கு எடுத்துச் சென்ற அங்கே போட்டுக் கொள்ளும் நிலைக்கு மகளை தள்ளிவிட்டுடும்.அக எல்லா விசயத்திற்கும் கண்டிப்பும் கட்டுதிட்டமும் எடுபடாது கொஞ்சம் விட்டுத்தான் பிடிக்க வேண்டும்.
15. மகளுக்கு பிடித்த கேலி கேளிக்கைகளில் தாயும் பங்கெடுத்துக் கொள்ளும் சுபாவத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும் இல்லாவிடில் தோழிகளே சதம், அவங்க தான் உலகம், என்று படிப்பைக்கூட புறகணிக்கும் நிலைக்கு ஆளாவிடுவதை தடுக்க முடியாமல் போய்விடும்.
16. மகளின் ஆடை அலங்காரங்களின் ரசனைகளை மறுபரிசீலனை செய்து பார்க்க வேண்டும் இல்லாவிடில் தோழியின் வீட்டிற்கு சென்று உடைமாற்றிச் செல்லும் நிலைக்கு அவர்களை நாமே தள்ளிவிட்டு விடுவோம்,என் மகள் அவ்வாறு செய்ய மாட்டாள் என்பதெல்லாம் குருட்டு நம்பிக்கை அது இந்த காலத்திற்கு மட்டுமல்ல எந்த காலத்திற்கும் ஒத்துவராது.
17. மகள் கேட்கும் எதையும், வேண்டாம் என்று கூறுவதில் தவறில்லை ஆனால் அது நியாயமானதாக இருக்க வேண்டும் ஏன் வேண்டாம் என்பது தன் மகளுக்கு புரிந்திருக்க வேண்டும்.
18. தாய்மார்கள் தன் மகளின் மனநிலையைப் பாதிக்கும்படி மற்ற குழந்தையோடு ஒப்பிட்டு அவள் நன்றாக சமைப்பாளாமே, அவள் நன்றாக பாடுவாளாமே, நீயும் இருக்கியே போன்ற வசை பொழிகளைப் பேசுவது கூடவே கூடாது.
19. அதைபோல் தாய்க்கிருக்கும் மனக் கவலையை தன் மகள் மீது இறக்குவது, குடும்ப பிரச்சனைக்கு பஞ்சாயத்து கூற அழைப்பது போன்ற தன் மகளுக்கு மனச்சுமையை ஏற்படுத்தும் செயலில் தாய் ஈடுபடக் கூடாது,
20. முக்கியமாக தான் கொண்டாடும் தன் அன்பு அப்பாவைப் பற்றி அது தாயேயானாலும் தாறுமாறாக பேசுவதை மகளின் மனது ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது. இதுகூட அந்த மகளைத் தன் தாயிடமிருந்து மனத்தளவில் பிரித்துவிடும் ஆபாயம் உள்ளது.ஆக அவள் அப்பாவைப் பற்றி அவளிடம் குறைகூறாமல் இருப்பது தான் நல்லது.
21. முடிவாக,தன் மகளை அவள் உடன்பிறப்புகளோடு ஆண் பெண் என்ற பாகுபாடு கருதாமல் நடத்துவது தான், அந்த மகளுக்கு தாய் மீதிருக்கும் பாசம் பன்படங்கு அதிகரிக்க வழிவகுக்கும், இல்லாவிடில் அந்த மகளின் வாழ்வின் ஒரே விரோதி அவள் தாய் தான் என்பதில் சந்தேகமில்லை..

இவ்வாறு மேற்கூறியுள்ள குறிப்புகள் யாயும் ஒரே வயதினரானாலும் எல்லா குழந்தைகளுக்கும் பொருந்தும் என்று கூற முடியாது, காரணம் இப்பருவதில் இருக்கும் குழந்தைகள் அவர்கள் வாழும் சூழ்நிலைக்கேற்றவாறு தான் குணநலமும் மாறுபடும், இருந்தாலும் தாய்மார்கள் பொதுவாக இந்த சிறிய சிறிய கருத்துக்களை கருத்தில் கொண்டு செயல்பட்டால் தங்கள் மகளின் மனதிலிருந்து என்றும் விலகாமல் தங்களை காத்துக் கொண்டும் தன் மகளின் நல்வாழ்விற்கு உற்ற துணையாகவும் நல்லதொரு வழிகாட்டியாகவும் விளங்க முடியும். ஏதோ பெற்றோம் வளர்த்தோம் என்றில்லாமல் தன் மகளின் ஒவ்வொரு அசைவிலும் நம்மை ஈடுபடுத்தி அன்பை வளர்த்து வாழ்வதே நிறைவான வாழ்க்கையாக அமையும்.

வீணாக ஊர் உலகம் அக்கம் பக்கம் என்றெல்லாம் பயந்துக் கொண்டு, வளரும் அந்த சின்னஞ் சிறு பறவைகளின் எண்ணச் சிறகுகளுக்கு தடை ஏதும்போடாமல் அவர்களின் மனத்தை அன்பென்னும் நேசக் கரங்களால் மட்டுமே வளைத்துப் பிடித்துக் கொண்டால் பிறகு எந்த சக்தியும் அவளைக் கெடுக்காது அந்த தாயிடமிருந்தும் பிரிக்காது என்று கூறி இத்துடன் முடிக்கின்றேன். அன்பு சகோதரிகள் இப்பதிவைத் தழுவிய தங்கள் கருத்துக்களையும் வந்து பதிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன் நன்றி.

மனோகரி அம்மா, மீண்டும் ஒரு அசத்தலுடன் வந்துட்டீங்க. உங்களை இந்த பதிவின் மூலம் பார்ப்பதில் எனக்கும்(எல்லோருக்கும்) பெருமகிழ்ச்சி.

பெண் குழந்தைகளுக்கு, நன்றாக கூறியுள்ளீர்கள்,மிகவும் நன்றி.என்னை போல் பையன் இருப்போருக்கும் பயனாய் ஏதாவது சொல்லுங்களேன்.

குழந்தைக்கு இரண்டு வயதாகப்போகிறது.... அவனின் அட்டகாசம் என்னால் தாங்கமுடியவில்லை...

மீண்டும் சந்திப்போம்,
நன்றி.

அத்தனையும் அப்பழுக்கற்ற உண்மை,எப்படி உங்களால் மட்டும் இப்படி எல்லாம் எழுத முடிகிறது?எனக்கு இப்ப 13 வயது மகள் இருக்கிறாள்.எனக்குன்னு எழுதின மாதிரி இருக்கு.தெளிவான விளக்கம். மிக்க நன்றி என்ற வார்தைகளோடு நிறுத்தி கொள்வது எனக்கு சரியாக தெரியலை, அதற்கும் மேல்.தொடர்ந்து வந்து இன்னும் நிறைய பயனுள்ள தகவலை தரும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

மனோஹரி அம்மா,

நலமா? வெகு நாட்களுக்கு பின் உங்களுடைய பயனுள்ள ஒரு புதிய இழை. மிக்க மகிழ்ச்சி.

அருமையான, பலருக்கும் உபயோகமான குறிப்புகள். 2+ வயதிலுள்ள என் மானுவை 13வயதில் எப்படி கையாள வேண்டும் என்று இப்போதே கற்றுக் கொடுத்தமைக்கு மிக்க நன்றி.

அப்புறம் உங்களுடைய "மனோஹரியின் பயனுள்ள ஆலோசனைகள்" இழையில் ஒரு கேள்வி கேட்டிருந்தேன். முடிந்த போது பதில் கொடுங்க அம்மா. ப்ளீஸ்.

சுபா
நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதீர்!!!

anbe sivam
மேடம்...
நீங்கள் கூறிய அனைத்தும் பெண் குழந்தை உள்ள அனைத்து தாய்மார்களுக்கும் மிகவும் பயனுள்ள கருத்துக்கள்.எனக்கும் 3 1/2 வயதில் பெண் குழந்தை இருக்கிறாள். அவளது பதின்பருவத்திலும் எப்போதும் அவளுக்கு நான் ஒரு நல்ல அம்மாவாக விளங்கவும், அவள் நல்ல மகளாகவும் விளங்க இப்போதிலிருந்தே நான் முயற்சி செய்கிறேன்.
நன்றி
கவிதாசிவக்குமார்.

anbe sivam

"முக்கியமாக தான் கொண்டாடும் தன் அன்பு அப்பாவைப் பற்றி அது தாயேயானாலும் தாறுமாறாக பேசுவதை மகளின் மனது ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது. இதுகூட அந்த மகளைத் தன் தாயிடமிருந்து மனத்தளவில் பிரித்துவிடும் ஆபாயம் உள்ளது.ஆக அவள் அப்பாவைப் பற்றி அவளிடம் குறைகூறாமல் இருப்பது தான் நல்லது."

100% உண்மை மேடம். அப்பா எவ்வளவு தான் அடித்தாலும், திட்டினாலும் பெண் குழந்தைகள் அப்பாவை விட்டு கொடுப்பதில்லை. நாம் என்ன தான் பாசமாக இருந்தாலும் அவளுடைய கோபத்தை நம்மிடம் தான் காட்டுகிறாள். உங்களுடைய எல்லா கருத்துகளும் நூறு சதம் உண்மை. பாராட்டுக்கள்.
சுஜாதா

very useful message to every mothers, all mothers should know about this useful message to guide her daughter.

Amutha

ஹலோ உமா எப்படி இருக்கீங்க? ஆமாங்க இந்த தலைப்பில் ஏதாவது எழுத வேண்டும் என்று வெகுநாளாகவே நினைத்திருந்தேன் அது நேற்று தான் நிறைவேறியது இப்படி உங்களோடெல்லாம் பேசவும் முடிந்தது என்பதில் எனக்கும் மட்டற்ற மகிழ்ச்சி. நானும் இப்பதிவைப் போடும்போதே ஆண் குழந்தைகளுக்காகவும் எழுத வேண்டும் என்று யோசித்தேன் ஆகவே நிச்சயம் எழுதுகின்றேன். உங்க செல்லத்திற்கு இரண்டு வயதுதானே ஆகின்றது இந்த வயதில் அவங்க செய்யும் அட்டகாசத்தை எல்லாம் ரசிப்பத்தைத் தவிர வேறு என்ன மகிழ்ச்சி ஒரு அம்மாவிற்கு இருக்க முடியும் ஆகவே நீங்களும் அவங்க அட்டகாசத்தில் சேர்ந்துக்குங்க ஒகே... கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி டியர்.

ஹலோ ஆசியா உங்கள் பதிவும் எனக்கு மகிழ்ச்சியைத் தந்தது நன்றி.எப்படி இருக்கீங்க? வீட்டில் அனைவரும் சுகம் தானே? //எப்படி உங்களால் மட்டும் இப்படி எல்லாம் எழுத முடிகிறது?// எழுத்து பிழைகளுடன் தானே! நான் என்னங்க செய்வது மாற்று ஆப்ஷன் இருந்தாலாவது திருத்திவிடலாம் கொஞ்சம் அட்ஜஸ்ட் பன்னிக்குங்க சரியா. உங்களுக்கும் இப்பதிவு உதவும் என்பதில் எனக்கும் மகிழ்ச்சியே. நிச்சயம் என்னால் முடிந்தளவு வந்து பங்களிப்பு செய்கின்றேன். தவறாமல் வந்து கருத்து தெரிவித்தமைக்கு மனமார்ந்த நன்றி.

அக்கா நலமா? நீண்ட நாட்களுக்கு பிறகு உங்களை பார்ப்பதில் மிக்க மகிழ்ச்சி. வழக்கம்போல் ஒரு நல்ல ஆலோசனையோடு வந்து இருக்கிறீர்கள்.

நீங்கள் கூறியுள்ள கருத்துக்கள் அனைத்தும் ஒவ்வொரு பெண் குழந்தைகளின் அம்மாக்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும். மேலும் அம்மாக்கள் பெண்ணின் ஆரம்ப வயதிலிருந்தே இப்படிப்பட்ட குணநலன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். இவ்வளவு பொருமையாக விளக்கியதற்கு மிக்க நன்றி.

டியர் சுபா நீங்களும் என்னை அம்மா என்று அழைப்பதை கேட்க்கவே சுகமாய் இருந்தது, இத்தலைப்பு உங்களுக்கும் பயனுள்ளதாக இருப்பதில் மிக்க மகிழ்ச்சியே கருத்து கூறியமைக்கும் நன்றி. நிச்சயம் நீங்க கேட்டிருக்கும் கேள்வியை பார்வையிட்டு அந்த இழையிலேயே பதிலளிக்கின்றேன் நன்றி மீண்டும் சந்திப்போம்

மேலும் சில பதிவுகள்