தனிமை இராத்திரி... - ப்ரியசகி

தனிமை இராத்திரி..

அரையிருளாய் எரியும் வண்ண விளக்கு
நடுங்கும் நிழலுடன் நனைந்த நான்
அரைகுறையாய் துவட்டிய துண்டை
உன் அவசரக் குளியலுக்கு அபகரித்துப் போவாய்

முதுகின் பின்னால் உன் குறும்புப் புன்னகை
என் இடைதழுவும் விரல்நகங்களில் தெரியும்
கழுத்தில் முடி விலக்கும் உன் மூச்சுக்காற்று
நீ கவனமாய் ரசிப்பதை எனக்கு உணர்த்தும்

நேற்று இரவு தொடக்கம் எண்ணி
பதறும் மனம் வெட்கப்பட்டு
அடுத்து என்ன ஆவல் கொண்டு
தயங்கும் விரல் நகர்த்தையில்
எப்போதும் போல் அவகாசம் தந்து
நீ இப்போதும் என் அவஸ்தை ரசிப்பாய்

எட்டித் தள்ளும் என் பொய்க்கோபம்
உன்னைத் தோல்வி ஏற்று தொடரச் செய்யும்
மணவறை முதல்தொடுகைப் போல்
மறுபடியும் என்னை சிலிர்க்கச் செய்யும்

கொதிப்பாய் வரும் இரு மூச்சு ஓசை
அமைதி இரவின் நிசப்தம் கலைக்கும்
இருவர் மட்டுமான ஏகாந்தம்
இப்போது மட்டும் ரொம்பப் பிடிக்கும்

ஈரக்கூந்தல் சிந்தும் முத்துத்துளிகள்
உன் மார்பில் பட்டுத் தெறிக்கும்
அணைத்த பொழுது நாணம் போல்
அதுவும் மெல்ல மறைந்து போகும்
உன் இரவுக் குளியலின் சோப்பு வாசம்
விடியல் பொழுதில் என்மீது வீசும்

ஒவ்வொரு விடியல் பிறக்கையிலும்
நானும் புதிதாய் பிறந்திடுவேன்
எத்தனை நாள் பிறப்பாய் என்று
இறைவன் பொறுமை இழந்தானோ
இனிக்கும் இரவு நினைவுகளை
சோம்பல் காலையில் டீயுடன் அருந்தி
பறக்கும் முத்தம் கொடுத்தே
அன்றும் பணிக்கு உற்சாகமாய் சென்றாய்

எதற்கோ எங்கோ சென்ற நீ
இரட்டை கோபுரச் சரிவில் சிக்கி
இரண்டு நாட்கள் சென்ற பின்பு
என்னிடம் கட்டிக் கொடுக்கப்பட்டாய்
ஆறடி கட்டிலும் போதாது என்ற நீ
மூன்றடி பையுக்குள் அடங்கியது எப்படி!

இறுகப் பற்றிய செல்போனில்
கடைசியாய் என்னை ஏன் அழைத்தாய்?
இடிந்த கட்டிடம் சுமை தாளாமல்
பகிர்ந்துகொள்ள என்னை அழைத்தாயோ
இல்லை இறுதி மூச்சில் இமை மூடி
நேற்று இரவுநாடகம் நினைத்தாயோ

என்ன அவசரம் என்னவனே..

எண்ணிவிடும் பொழுதுகள் மட்டும்
என்னுடன் இருந்துவிட்டு
எத்தனையோ மாற்றங்களை
என்னுள்ளே விதைத்துவிட்டு
அத்தனையும் ஏமாற்றங்களாய்
விளைய விட்டது நியாயமா?

இனிமை ராத்திரிகள் இனி இல்லையென
பொய்யாய்கூட நீ சொன்னது இல்லை
தனிமை இராத்திரிகள் கொடுமை கணவா
உன் நினைவுகள் மட்டும் போதாது
இனி நீயில்லை என்னும் நிஜம்
என்னையும் மெல்லக் கொல்லும்

- ப்ரியசகி

 

Comments

ஒரு இடைவெளிக்கு பிறகு மறுபடியும் அறுசுவை பக்கம் வருகிறேன். கண்ணில்பட்ட இந்த கவிதையை படிக்கும்போது நானும் கண்கலங்கிவிட்டேன். படிச்சதும் மனதை என்னவோ செய்யுது.

மிகவும் அருமையான கவிதை படித்ததும் கண்கள் கலங்கிவிட்டன. மனம் ரணமாய் வலிக்குதம்மா

அன்புடன்
நஸ்ரின் கனி

very nice...heart touching,bringing tears

Kalai

wowwwwwww..what a lovely kavithai.. very impressive.. how long did u take to write this one?..keep posting this kind of kavithygal.. love it..appeciate if u can develop some kind of yahoo group or something n send out the poems to all.. it is tough to find time to come here n check every day

Arun.. kewlfrend@yahoo.com..

அன்புள்ள ப்ரியசகிக்கு,

உன்மையில் இது வெறும் கவிதை அல்ல.ஒரு பெண்னின் வாழ்க்கை.இதை படிக்கும் ஒவ்வருவருக்கும் கண்ணீர் வரத்தான் செய்யும்.ஆம் எனக்கும் கண்ணீர் வந்தது.

அன்புடன்,
மாணிக்கவள்ளிஅமர்நாத்

படித்தவை, ரசித்தவை பகுதியில் கதைகள் பற்றி மட்டுமே விமர்சனம்
செய்து எழுதமுடியும் இல்லையா? அதுபோல கவிதை ப்பூங்கா பகுதியில்
படித்து ரசித்த கவிதைகள் பற்றி எழுதலாமா? அல்லது நம் சொந்த கற்பனையில்
எழுதும் கவிதைகள்மட்டுமே அனுப்பணுமா? பதில் சொல்லுங்கள் அட்மின் சார்.

ஐயோ பிரியசகி!!!!!!!!!!!!
முதல் பாதி புன்னகையுடன் ரசித்தேன்.

"எதற்கோ எங்கோ சென்ற நீ
இரட்டை கோபுரச் சரிவில் சிக்கி
இரண்டு நாட்கள் சென்ற பின்பு
என்னிடம் கட்டிக் கொடுக்கப்பட்டாய்"

என்னும் வரிகளில் உடலெல்லாம் சிலிர்த்தது. உள்ளங்கால் முதல் உச்சந்தலை வரை இனம் புரியாத ஒருவகை உணர்வு தாக்கி சென்றது.

"இறுகப் பற்றிய செல்போனில்
கடைசியாய் என்னை ஏன் அழைத்தாய்?
இடிந்த கட்டிடம் சுமை தாளாமல்
பகிர்ந்துகொள்ள என்னை அழைத்தாயோ
இல்லை இறுதி மூச்சில் இமை மூடி
நேற்று இரவுநாடகம் நினைத்தாயோ

என்ன அவசரம் என்னவனே.."

வரிகளில் ஒரு நிமிடம் என்னையே மறந்து கண்ணீர் விட வைத்தது.

இப்படிக்கு,
கண்ணீருடன் எழுதும்,

ஆமினா

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

உங்கள் கவிதை மிகவும் அருமை படிக்கும்போது என் கண்ணில் இருந்து தண்ணீர் வழிந்தன.என்னுடைய பாராட்டுக்க்ள்.

அன்புள்ள பிரியசகி,கவிதை மனதை கனமாக்குகிறது.முதல் பாதியில் காதல் ரசம் பின் பாதியில் துயரம் என்னை ஆட்கொண்றது.கவிதை சூப்பர்

பிரியசகி, இப்போ தான் உங்க கவிதை படித்தேன்.... சூப்பர்... வர்னிப்பதற்கு வார்த்தைகள் வரவில்லை மேடம்...

ஒன்று செய், அதுவும் நன்று செய்.
ரங்கலஷ்மி லோகேஷ்

ப்ரியசகி,
இதயம் தொட்ட கவிதை.கண்களை குளமாக்கிவிட்டது.

அன்புடன்
நித்திலா

அன்புடன்
நித்திலா

கவிதையை படிக்கும்பொழுதே, கண்களில் நீர் கோர்த்து விட்டது.
மிக அருமை

அனிதா சுஜி
” உன்னுடைய கண்ணீருக்கு அருகதை உடையவர்கள் யாரும் இல்லை. அந்த அருகதை உள்ளவர்கள் உன்னை கண்ணீர் சிந்த விட மாட்டர்கள் ”

உண்ர்வு பூர்வமான கவிதை..என்னுடைய தோழியின் தற்போதைய மனநிலையை படம் பிடித்துக்காட்டியது போல் உள்ளது. இது போன் றதொரு நிலை யாருக்கும் வரவேண்டாம் என்று பிரார்த்திப்போம். இப்படிக்குப்பூங்காற்று.

நிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.

உணர்வுகளை வார்த்தையில் வடிப்பது கலை. கவிதை மிகவும் மனதை கனக்கச்செய்தது.ப்ரியசகியை வாழ்த்துவதா? தெரியல. எனக்கு இக்கவிதையைச் சுட்டிக்காட்டிய இமாவுக்கு நன்றி !

சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்.

ஜெயந்தி

hi dear friends
Today am joined this website... dontknow how to use this..... can anybody help....wher can i send my message and how can i contact you...and give my suggestion to all....

வலது பக்கக் கீழ் மூலையில் பாருங்கள்...
//அறுசுவை
எங்களைப் பற்றி
கேள்வி பதில்
தொடர்புக்கு
பெயர்ப்பதிவு
நிபந்தனைகள்
தமிழ் எழுத்துதவி// என்று இருக்கும். ஒவ்வொன்றாகத் திறந்து படித்துப் பாருங்கள். தேவையான விபரங்கள் கிடைக்கும்.

உங்கள் கருத்துக்கள் எதுவானாலும், தமிழில் தட்டுங்கள்.

‍- இமா க்றிஸ்

கவிதை மிக மிக அருமைங்க, ஆரம்பத்தில் அழகான வரிகளால் காதலை விவரித்து கடைசியில் வரும் வரிகளால் மனம் கனக்க செய்துவிட்டீர்கள்...

நட்புடன்
குணா

Thoziyin kavithai..arumai..ivlo naal miss panathuku romba varunthukiraen..immama thanks..

Be simple be sample

இன்று தான் இதனை வாசிக்க நேர்ந்தது.ப்ரியசகி இத்தனை உருக்கமாய் கவிதை வடிப்பார் என்று தெரியாமல் போய்விட்டதே.அன்றைய நிகழ்வு இன்று நடந்ததாய் உணர்த்தும் மனதை நெருடும் கவிதை. ப்ரியசகி தொடர்ந்து கவிதை எழுதுங்கள்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

Kavithai manathai varutiyathu. super

ஊரிலிருந்து வந்ததுமே கவிதையைப் படிக்கணும்னு நினைச்சிட்டே இருந்தேன். இன்னிக்குதான் படிச்சேன்.

அழகான‌ அன்னியோன்யத்தில் ஆரம்பித்து, மனசை அதிர‌ வைத்து விட்டது, கவிதையின் முடிவு.

சந்தோஷத்தையும் சோகத்தையும் ஒரே கவிதையில் தந்து விட்டார்.

அன்புடன்

சீதாலஷ்மி