இனியொரு பணி செய்வோம் - பகுதி 1

Women in Business


Work from home


ன்புள்ள தோழிகளுக்கு,

இந்தப் பகுதியின் தொடக்கமாக, பெண்கள் வீட்டிலிருந்தபடியே வருவாய் ஈட்டுவதைப் பற்றி கொஞ்சம் எழுதலாம் என்று நினைக்கிறேன். பின்னர் வேலை தேடுவது, நேர்முகத் தேர்வு, இப்படி பல விஷயங்கள் பேச ஆசை.

அறுசுவை அரங்கம் உலகளாவியது, எனினும் நான் இந்தியாவில், தமிழ் நாட்டில் இருப்பதால் இங்கு உள்ள சூழ்நிலையை வைத்து முதலில் எழுதுகிறேன். வீட்டில் இருந்தபடியே என்று ஆரம்பித்ததுமே, ஊறுகாய் போடுவது, தைப்பது, காட்டரிங் என்று ஆரம்பிப்பேனோ என்று பயப்பட வேண்டாம். உண்மையில் இவை யாவுமே விரிவாகப் பேச வேண்டிய விஷயங்கள்தான். இவற்றைப் பின்னால் பார்க்கலாம்.

மருத்துவர், பொறியாளர், கணிணிப் பொறியாளர், ஆசிரியர் என்று “காரியர் உமன்” ஆகவே ஃபோகஸ் செய்து, படித்து, வேலையிலிருப்பவர்களைப் பற்றி அப்புறம் - இப்போது நாம் பார்க்கப் போவது - எதோ ஒரு இளநிலைப் பட்டமோ, அல்லது முதுநிலைப் பட்டமோ வாங்கி, கல்யாணத்தை எதிர்பார்த்துக் கொண்டோ, அல்லது கல்யாணம் செய்து கொண்ட பின், படித்த படிப்பு வேலைக்குச் சென்று சம்பாதிக்க உதவவில்லையே, என்ன செய்யலாம் என்று யோசிப்பவர்களுக்காக!

முதலில் முதல் இல்லாமல் தொடங்குவது, மற்றும் நம்மைத் தயார் செய்து கொள்வது எப்படி, வருமானம் எந்த அளவுக்கு இருக்கும் என்பதைப் பற்றி பார்ப்போம்.

முதலீடு இல்லாமல் தொழில் தொடங்குவது எப்படி?

books

முதலீடு இல்லாமல் எந்தத் தொழிலும் தொடங்கவும் முடியாது, சம்பாதிக்கவும் முடியாது. பின்னே? உங்களுடைய படிப்பறிவும், நீங்கள் உழைக்கத் தயாராக இருக்கும் நேரமும்தான் முதலீடு. நான் சொல்வது, பள்ளிக் குழந்தைகளுக்கு டியூஷன் எடுப்பது பற்றித்தான்.

இவ்வளவுதானா என்று சாதாரணமாக நினைக்க வேண்டாம். அழகாகத் திட்டமிட்டு, செயல் படுத்தினால், நல்ல வருமானமும், கௌவரமும், மதிப்பும் தரும் தொழில் இது. முதலில் நாம் செய்ய வேண்டிய களப் பணித் திட்டங்கள் பற்றி பார்ப்போம். (Base Work and Plans).

உங்களுடைய பட்டப் படிப்பில்/முது நிலைப் படிப்பில் எது சிறப்புப் பாடம்?

மொழி, விஞ்ஞானம், கணக்கியல், கணிதம், உயிரியல், சரித்திரம், கணினியியல் இப்படி எதுவாக இருந்தாலும் பரவாயில்லை. உங்களால் அடிப்படைப் பாடங்களை, 6 வயது முதல் 14 வயது வரை - அதாவது ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை உள்ள பாடங்களை - புரியுமாறு சொல்லிக் கொடுக்க, கண்டிப்பாக முடியும். இதற்கு முதலில் உங்களைத் தயார் படுத்திக் கொள்ளுங்கள்.

உங்கள் வீட்டின் அருகாமையில் உள்ள பள்ளிகளின் பாடத் திட்டம், பெற்றோர், மாணவர்களின் பொருளாதார வசதி, போன்ற சில தகவல்கள் அறிந்து கொள்வது நல்லது. இது தவிர உங்கள் பகுதியிலோ, அல்லது அருகாமையிலோ டியூஷனுக்கு - வகுப்பு வாரியாக - என்ன கட்டணம் வாங்குகிறார்கள் என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்.

உங்களுடைய வீட்டின் இட வசதியைப் பொறுத்து, டியூஷன் எடுப்பதற்கு என்று ஒரு இடத்தைத் தயார் செய்து கொள்ளுங்கள். இந்த இடம் வீட்டில் மற்றவர்களுடைய புழக்கத்திற்குத் தொந்தரவாக இல்லாமலும், படிக்க வரும் மாணவர்களுடைய கவனம் சிதறாமலும் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். (அதாவது தொலைகாட்சிப் பெட்டி, வானொலி இல்லாமல்).
work from home

எந்த நேரத்தில் வகுப்புகள் எடுக்கப் போகிறீர்கள் என்று தீர்மானித்துக் கொள்ளுங்கள். காலையில் 6 மணி முதல் 8 மணி வரை, மீண்டும் மாலையில் 5 மணி முதல் இரவு 9 மணி வரை - இப்படி - வரையறுத்துக் கொள்ளுங்கள். அதிக செலவு பிடிக்காத முறையில் ஒரு அறிவிப்புப் பலகை வீட்டு வாசலில் மாட்ட முடிந்தால் நல்லது. (”இங்கு டியூஷன் வகுப்புகள் எடுக்கப் படும்”)

எடுத்த எடுப்பிலேயே மிகவும் சிறிய குழந்தைகளையோ அல்லது பள்ளியிறுதி வகுப்பில் அதிக மதிபெண்கள் எடுப்பதை எதிர் நோக்கும் மாணவர்களையோ உங்கள் பயிற்சி வகுப்பில் சேர்த்துக் கொள்ள முடியுமா என்பதை நீங்களே தீர்மானியுங்கள். இது உங்கள் பொறுமையையும் கற்பிக்கும் திறமையையும் பொறுத்தது.

வகுப்புகள் எடுக்கும்போது, வீட்டில் தானே இருக்கிறோம் என்று சாயம் போன நைட்டியிலோ, தலை வாராமலோ இருக்காதீர்கள். மாணவர்களிடம் “இந்தக் கணக்கை போட்டுக் கொண்டு இருங்கள், இதோ வருகிறேன்” என்று சொல்லி விட்டு, அடுப்படியில் போய் உப்புமாவுக்கு தாளித்துக் கொட்டாதீர்கள்.

மாணவர்கள் வரும் போது உங்கள் முழுக் கவனமும் அவர்கள் மீது இருக்கும் வகையில், வீட்டு வேலைகளை முதலிலேயே முடித்து விடுங்கள். சுத்தமான உடை உடுத்தி, நன்கு தலை வாரி, பளிச்சென்று இருங்கள்.

மாணவர்களைக் கொண்டு விட வரும் பெற்றோர்கள், அவர்கள் வீட்டுப் பெரியவர்களிடம், மரியாதையோடு, அதே சமயம், அளவோடு பேசுங்கள். தேவையில்லாத, வீண் அரட்டை வேண்டாம்.

பொதுவாகவே டியூஷன் என்பது, பள்ளியில் தரப்படும் வீட்டுப் பாடத்தை செய்யும் இடமாகவே கருதப் படுகிறது. முன்பு படிப்பு வராத மாணவர்களுக்கு டியூஷன் என்ற நிலை மாறி, இப்போது நன்றாகப் படிக்கும் மாணவர்கள் இன்னும் அதிக மதிப் பெண்கள் எடுக்கவும், மற்றும் வேலைக்கு செல்லும் தாய்மார்களின் சுமையைக் குறைக்கவும் டியூஷனுக்கு அனுப்புகிறார்கள். எனவே நீங்கள் சிறப்பாக வகுப்புகள் எடுப்பதன் மூலம் மாணவனின் மதிப்பெண்ணின் தரம் உயர்ந்தால் வாய் மொழியாகவே செய்தி பரவி, அதிக மாணவர்கள் உங்கள் வகுப்பில் சேருவார்கள்.

சேரும் குழந்தைகளை வகுப்பு வாரியாகப் பிரித்து, அவர்களுக்கென்று குறிப்பிட்ட நேரத்திலேயே அவர்கள் வருமாறு பார்த்துக் கொள்ளுங்கள். உதாரணமாக ஆறாம் வகுப்புக் குழந்தைகள் அனைவரும் மாலையில் 5 - 6 , இது போல.

பள்ளிக்கு மட்டுமல்ல - உங்களது வகுப்புகளுக்கும் ஒரு பாடத் திட்டம் வகுத்துக் கொள்ளுங்கள். ஒரு நாள் பள்ளியில் ஏற்கனவே நடத்திய பாடத்தை நடத்துதல், Doubt Clarification ஒரு நாள், புதிய பாடத்துக்கு அறிமுகம், தினமுமே பள்ளியில் தரப் பட்ட வீட்டுப் பாடங்களை சிரமமின்றி முடிக்கிறார்களா என்று பார்த்தல், இப்படியாக திட்டமிட்டுக் கொள்ளுங்கள்.

ஏற்கனவே பள்ளியில் பாடத் திட்ட சுமையால் திணறும் மாணவர்களை மேலும் சுமையேற்றாதீர்கள். Quiz Programme, Open Book Test, Discussion போன்ற முறைகளினால் பாடங்களை விருப்பமுடன் படிக்கத் தூண்டுங்கள். பள்ளியில் தரப்படும் ராங்க் கார்டுகளை நீங்களும் பாருங்கள். அவர்களது முன்னேறத்தைக் கவனியுங்கள்.

பூக்கடையானாலும் விளம்பரம் தேவை, உங்களுடைய கற்பித்தலினால் மாணவனிடம் நல்ல முன்னேற்றம் தென் பட்டால், அதை அவர்களது பெற்றோர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள். முதலில் கொஞ்ச நாள் பொதுவாக எல்லாப் பாடங்களுக்கும் டியூஷன் எடுத்த பிறகு, Time Management, Inter personal Skills எல்லாம் வசமாகி விடும்.

பின் பெரிய வகுப்புகளுக்கு - கணிதம், இயற்பியல், உயிரியல், வேதியல் போன்ற பாடங்களுக்கு மட்டுமே மாணவர்களை சேர்க்கலாம். இதற்கான பயிற்சிக் கட்டணமும் அதிகமாகக் கிடைக்கும். கணிதவியல், கணிதம் போன்ற பாடங்களுக்கு சிறப்பு வகுப்பு எடுக்க முடிந்தால் - அஞ்சல் வழிக் கல்வி பயிலும் கல்லூரி மாணவர்கள், நுழைவுத் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்கள் போன்றவர்களுக்கு வார இறுதி, குறிப்பிட்ட காலத்துக்கு மட்டும் என்று பயிற்றுவிக்கலாம், கணிசமான தொகையும் கட்டணமாகப் பெற்றுக் கொள்ள முடியும்.

சரி, மாதம் எவ்வளவு வருமானம் வரும் என்று நினைக்கிறீர்கள்?

குறைந்த பட்சம் ஐயாயிரத்திலிருந்து - இருபதாயிரம் ரூபாய் வரை சம்பாதிக்கலாம். உங்கள் ஈடுபாட்டையும், திறமையையும் பொறுத்து. எங்கள் ஊரில் Accountancy, Maths இரண்டு மட்டும் கல்லூரி மாணவர்களுக்கு, காலையிலும் மாலையிலும், பயிற்றுவிக்கும் சில கல்லூரி ஆசிரியர்கள் - மாதம் முப்பதினாயிரம் வரை சம்பாதிக்கிறார்கள்! முக்கியமாக, இதற்கு வருமான வரி எதுவும் கிடையாது.

என்ன, தயாராகி விட்டீர்களா?

Comments

உங்கள் ஆலோசனை ரொம்ப நல்லா இருக்கு மேடம். படித்து முடித்து விட்டு என்ன செய்வது என்று யோசிக்கும் தோழிகளுக்கு ரொம்ப பயனுள்ளதாக இருக்கும். வாழ்த்துக்கள், இதே போல் மீண்டும் நிறைய நல்ல ஆலோசனைகளை உங்களிடம் இருந்து எதிர்பார்க்கிறேன்.

அன்புடன்
அனுஷா

நல்ல ஒரு ஆலோசனையை வழங்கியுள்ளீர்கள். மூலதனமே இல்லாத நல்ல ஒரு பணி பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு டியூசன் எடுப்பது. நான் இந்த உயரிய பணியை கடந்த 4 வருடங்களாக செய்து வருகிறேன். படித்த படிப்பை வீணாக்காமல் மற்றவர்களும் பயன் பெற செய்யலாமே அதனால் வரும் லாபமும் அதிகமாச்சே. சீதாலெஷ்மி மேடம் உங்க அனுமதியோட இதில் இன்னும் சில நன்மைகளை சொல்லவா?பணம் சம்பதிப்பது மட்டுமல்லாமல் நற்பெயரையும் சம்பாதிக்கலாம். இப்போது நடத்தப்படும் போட்டி தேர்வுகளுக்கான கேள்விகளே 6 - 10 வகுப்புவரை உள்ள புத்தகத்திலிருந்தே கேட்கப்படுகிறது. மாணவர்களுக்கு கற்று தரும் சார்பில் நாமும் நிறைய விஷயங்களை தெரிந்துக் கொள்ளலாம். நன்றி மேடம்.

நல்ல அருமையான பகிர்வு.நானும் சும்மா இருந்து கொண்டு என்ன செய்வது என்று எப்பவும் யோசித்து நேரத்தை வெட்டியாக செலவு செய்யும் பெண்களீல் ஒருத்தி தான்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

சீதாலக்ஷ்மி... நல்ல பதிவுங்க. நான் கொஞ்சம் வித்தியாசம்... எதாச்சும் செய்யணும், செய்யணும்'னு சொல்லுவேன், ஆனா ஒன்னும் செய்ய மாட்டேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அன்பு அனுஷா,

உங்களுடைய பின்னூட்டத்துக்கு மிகவும் நன்றி. தொடர்ந்து படித்து, உங்களது கருத்துகளை சொல்லுங்கள்.

அன்புடன்

சீதாலஷ்மி

அன்புடன்

சீதாலஷ்மி

அன்பு கௌரிலஷ்மி,

பின்னூட்டத்துக்கு மிகவும் நன்றி. உங்க கருத்தை சொல்ல அனுமதி கேட்க வேண்டுமா என்ன? உங்கள் அனுபவங்கள், மற்றும் நேர நிர்வாகம் போன்றவற்றை நீங்கள் கையாளும் விதம் போன்றவற்றை எழுதினால் அனைத்து தோழிகளுக்கும் கண்டிப்பாக பயனுள்ளதாக இருக்கும். போட்டித் தேர்வுகள் பற்றி நீங்கள் குறிப்பிட்டு இருக்கும் தகவல் சிறப்பாக இருக்கிறது.

அன்புடன்

சீதாலஷ்மி

அன்புடன்

சீதாலஷ்மி

அன்பு ஆசியா,

நீண்ட நாட்களுக்குப் பிறகு உங்களுடன் பேசுவதில் எத்தனை மகிழ்ச்சி தெரியுமா? பட்டி மன்றங்களில் என்னை நீங்கள் உற்சாகப் படுத்தி எழுதியதுதான் எனக்கு இப்போது எனக்குத் தெரிந்ததை பகிர்ந்து கொள்ள தூண்டுகோலாக இருக்கிறது.

நீங்க வெட்டி அப்படின்னு எல்லாம் சொல்லாதீங்க. சமையல் குறிப்பு, ப்ளாக் அப்படின்னு அசத்திட்டு இருக்கீங்க.

தொடர்ந்து படித்து, கருத்து சொல்லுங்க.

அன்புடன்

சீதாலஷ்மி

அன்புடன்

சீதாலஷ்மி

அன்பு வனிதா,

என்னது, ஒண்ணும் செய்யலையா... அறுசுவையில் வித்தியாசமான தலைப்புகளைக் கொடுத்து, எல்லாரையும் பங்கு பெற வைத்து, கலக்கிட்டு இருக்கீங்க, இன்னும் பல திறமைகளைக் கொண்டிருக்கும் ஆல் இன் ஆல் வனிதா இப்படி சொன்னா அப்புறம் நாங்க எல்லாம் என்ன சொல்றது.

பின்னூட்டத்துக்கு மிகவும் நன்றி. தொடர்ந்து படித்து, உங்கள் கருத்துகளை சொல்லுங்க.

அன்புடன்

சீதாலஷ்மி

அன்புடன்

சீதாலஷ்மி

நல்ல பயனுள்ள பகிர்வு சீதாலட்ச்மி மேடம்
நான் இருக்கும் இடத்தில் இப்படி எல்லாம் சம்பாதிக்க முடியாது.
தவிரவும் இந்த பகுதியை பார்ப்பவர்கள், பயன் பெறுவார்கள்.நல்ல தகவல் தந்துள்ளீர்கள்.
தொடர்ந்தும் எழுதுங்கள் என்று வேண்டிக்கொள்கின்றேன்.நன்றி.
அன்புடன் யோகராணி.

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

சீதாம்மா, நல்ல பயனுள்ள பகுதி. தொடர்ந்து எழுதுங்கள். உங்களின் இந்த முயற்சிக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.

சீதாலஷ்மி மேடம்!
உங்களுடைய இந்த பகுதி ரொம்ப அருமையாய் இருக்கு. நிறைய பேருக்கு இதன்மூலமாய் பயனுள்ள ஆலோசனைகள் கிடைக்கும்.
உங்களுடைய இந்த பணியினை பெருமையுடன் வரவேற்கிறோம்!
நன்றி!

சீதாலக்ஷ்மி mam,
உங்க ஆலோசனை மிகவும் பயனுள்ள தாக இருக்கு. நான் software testing துறையில் பணி செய்கிறேன்.
எனக்கு six sigma தேர்வு எழுத நினைக்கிறன். உங்க ஆலோசனை மிக மிக தேவை. google பண்ணினால் எவ்வளவோ விளக்கங்கள் கிடைக்கலாம், ஆனால் உங்க ஆலோசனை என்னை வழி படுத்தும் ... எதாவது institute ல சேர்ந்து படிக்கனுமா? இல்லை நாமவே படிக்கலாமா ?? எவளவு செலவு ஆகும் ...
உங்களிடம் இருந்து டிப்ஸ் எதிர் பார்கிறேன்

அன்பு யோகராணி, வின்னி, சாய் கீதாலஷ்மி,

பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி. தொடர்ந்து படித்து, உங்கள் கருத்துகளைத் தெரிவியுங்கள்.

அன்புள்ள எழில்மதிக்கு,

சிக்ஸ் சிக்மா பற்றிக் கேட்டு இருந்தீர்கள்.

சிக்ஸ் சிக்மா பற்றி சுருக்கமாக சொல்ல வேண்டுமானால், ஒரு Process என்று எடுத்துக் கொண்டால், அதில் தவறுகளே இல்லை என்று சொல்லும் அளவுக்கு, அறிந்து கொள்ளுதல், திட்டமிடுதல், நடைமுறைப் படுத்துதல், மேற்பார்வையிடுதல், சோதனையிடல், மேம்படுத்துதல் இப்படி சொல்லலாம்.

இதன் பயனாக, செலவு குறைத்தல், அதிக இலாபம், திருப்தி என்று சொல்லிக் கொண்டே போகலாம்.

தற்போது job requirementகளில் Mid Level, Senior Level என்று Managerial Cadreக்கு, கிரீன் பெல்ட், பிளாக் பெல்ட் தகுதியைக் குறிப்பிட்டுக் கேட்பதை நீங்கள் பார்த்திருக்க முடியும்.

சிக்ஸ் சிக்மா செர்டிஃபிகேஷன் கோர்ஸ்களில், யெல்லோ பெல்ட், கிரீன் பெல்ட், பிளாக் பெல்ட், லீன் மானேஜ்மெண்ட், என்று படிக்கலாம். இதில் பிளாக் பெல்ட் போகும்போது, ஒரு ப்ரொஜெக்ட் செய்ய வேண்டியதும் அவசியம்.

இதில் யெல்லோ பெல்ட் என்பது, கிட்டத்தட்ட அறிமுக நிலைதான். பட்டதாரியாகவும், வேலையில் இருப்பவராகவும் இருக்கும் பட்சத்தில், நீங்கள் நேரடியாக கிரீன் பெல்ட் கோர்ஸிலேயே சேரலாம்.

கிரீன் பெல்ட் கோர்ஸுக்கு, இந்தியாவில் 20000 ரூபாயிலிருந்து இருபத்து மூன்றாயிரம் வரை கட்டணம் வாங்குகிறார்கள். வெளிநாட்டிலும் கிட்டத்தட்ட இதே தொகைதான் என்று அறிகிறேன்.

4-5 நாட்கள் வகுப்புகள் – காலை முதல் மாலை வரை – ந்டக்கும். சிக்ஸ் சிக்மா பற்றிய அறிமுகம், அதன் பயன் பாடு, அடிப்படைக் கோட்பாடுகள், அப்புறம் முக்கியமாக, இதை பயன்படுத்துவதற்காக வடிவமைக்கப் பட்டுள்ள Stat Tools அடிப்படையாகக் கொண்ட software எப்படி பயன்படுத்துவது என்று விளக்குவார்கள்.

இங்கே இந்தியாவில், சில பெரிய ஐ.டி.கம்பெனிகளில், அவர்களே SAP, Six Sigma போன்றவற்றுக்கு இன் ஹவுஸ் டிரெயினிங் கொடுக்கிறார்கள். வருடாந்திர appraisal நடக்கும்போது, தகுதி உள்ளவர்கள், அடுத்த நிலைக்கு பிரமோஷன் ஆகி செல்ல வேண்டியவர்கள் இப்படி சில விஷயங்களை கவனத்தில் கொண்டு, பயிற்சிக்கு அனுப்புவார்கள்.

நீங்கள் உங்கள் கம்பெனியின் H R Department கூட பேசுங்கள். Promotion கிடைக்க என்ன விதமான கூடுதல் தகுதிகள் தேவைப் படும் என்று அவரே சொல்வார். மேலும் அவர்களே ஸ்பான்ஸர் செய்யவும் வாய்ப்பு இருக்கலாம்.

அல்லது நீங்கள் இன்னும் அதிக சம்பளம், நல்ல பதவி இவற்றைக் கருத்தில் கொண்டு வேறு கம்பெனிக்கு மாற விரும்புகிறீர்கள் என்றாலும் இன்றைய நிலையில் சிக்ஸ் சிக்மா தகுதி நிறைய நிறுவனங்களில் விரும்பப் படுகிறது என்றே சொல்லலாம். பல கம்பெனிகளில் உயர் பதவிகளுக்கு சிக்ஸ் சிக்மா ஒரு கட்டாயத் தகுதியாகவே கருதப் படுகிறது.

தங்களுக்கு என் வாழ்த்துக்கள்.

அன்புடன்

சீதாலஷ்மி

அன்புடன்

சீதாலஷ்மி

சீதாலஷ்மி மேடம் நல்ல பயனுள்ள பகுதி...ரொம்ப நல்லா சொல்லியிருக்கீங்க‌, நானும் வ‌னிதா சொன்ன‌ மாதிரிதா ஏத‌வாது செய்ய‌ணும்னு சொல்லிட்டே இருப்பான்.. ஆனா வ‌னிதா மாதிரி இல்ல‌ நிஜ‌மாவே ஒண்ணும் செய்ய‌மாட்டேன்

அருமையான தொடர்...பொன்னான நேரத்தை பயனுள்ள வகையில் செலவு செய்ய பொன்னான யோசனைகள்...

வாழ்த்துக்கள்

எனக்கு இ-டியூசன்ஸ் எடுக்க ஆசை...இணையத்தில் நம்பதகுந்த தகவல்கள் கிடைக்கவில்லை....

அதுபற்றி உங்கள் ஆலோசனையும்/சரியான இணையத்தள முகவரியும்
தரமுடியுமா?

நன்றி

அன்புடன்
இளவரசி

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

அன்பு கவி,

பாராட்டுக்கு நன்றி. தொடர்ந்து உங்கள் கருத்துகளை சொல்லுங்க

அன்பு இளவரசி,

ஆன் லைன் மூலம் டியூஷன் எடுப்பதைப் பற்றி நானும் வேறுபட்ட கருத்துகள் கேள்விப் பட்டு இருக்கிறேன். உங்கள் பதிவு பார்த்ததும், இங்கே சென்னையில் நாங்கள் இருக்கும் இடத்துக்கு அருகிலேயே அப்படி ஒரு நிறுவனம் இருக்கும் நினைவு வந்தது. அந்த நிறுவனத்தின் இணையதளத்தில் இருந்த தொலை பேசி எண்களைத் தொடர்பு கொண்டபோது 2 எண்களுமே உபயோகத்தில் இல்லை என்று தெரிய வந்தது. சரி, நேரிலேயே போய் விசாரித்து வரலாம் என்று இன்றைக்கு நேரேயே போனேன். அந்த அலுவலகமே அங்கு இல்லை!!! இணைய தளத்திலும் அவர்களது புதிய முகவரி எதுவும் அப்டேட் செய்யப் படவில்லை.

வேறு தகவல்கள் சேகரிக்க முயற்சித்துக் கொண்டு இருக்கிறேன். கிடைத்ததும் பதிவிடுகிறேன்.

அன்புடன்

சீதாலஷ்மி

அன்புடன்

சீதாலஷ்மி

உங்களின் அன்பான பதிலுக்கும் அக்கறையான முயற்சிக்கும் என் பிரியமுள்ள நன்றீ..

தகவல்கள் நானும் முயற்சித்துகொண்டுதான் இருக்கிறேன்..

முன்பு ஒருமுறை online ph.d க்கு washington universitykku netl பார்த்து அப்ளை செய்தேன்...அவர்களும் prospectus அனுப்பினார்கள்..ஆனால் அது எந்த அளவு reliable என்ற தயக்கத்திலேயே response செய்யாமல் இருக்கிறேன்...

உங்களுக்கு தகவல்கள் தெரிந்தால்/கிடைத்தால் கொஞ்சம் சொல்லுங்கள்.
சிரமத்திற்கு மன்னிக்கவும்
அன்புடன்
இளவரசி

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

nalla paiyan ulla karthu.edhae pola padikadhavarukum oru karthu therivikavum

அன்பு அஞ்சனா விஜயகுமார்

பின்னூட்டதுக்கு நன்றி.

அதிகம் படிப்பு இல்லாவிட்டாலும், சமையல், தையல் போன்ற தொழில்கள் கை கொடுக்கும். இன்று எல்லாப் பகுதிகளிலும் மகளிர் சுய உதவிக் குழுக்கள் இயங்குகின்றன. இவற்றில் இணைந்து பணியாற்றும் பெண்கள் பல விதமான தொழில்களை வெற்றிகரமாக செய்து வருகிறார்கள். சமையல் பாத்திரங்கள், டிராக்டர் முதலியவற்றை வாங்கி, வாடகைக்கு விடுவது, தேனிப் பண்ணை, ஆடு மற்றும் கோழி வளர்ப்பு, பால் விற்பனை, காண்டீன் என்று பல துறைகளிலும் இருக்கிறார்கள். முயற்சிதான் முக்கியம்.

அன்புடன்

சீதாலஷ்மி

அன்புடன்

சீதாலஷ்மி

Hi Madam,

I am Deepa and i like all ur articles in this site which is useful to all levels of peoples. I have completed my MBA and i would like to start my own business. I don't know how to join in "PENGAL THOZIL MUNIVOR SANGAM" in Guindy.In which they are giving guidance to womens like me.Could u pls provide me the details if possible.so that it will be helpful for me know more details.

Pls continue ur valuable service....

Thanks for ur support always.

Deepa

அன்பு நண்பர்களே! வணக்கம்!

இண்டர்நெட் மூலம் பணம் சம்பாதிக்க முடியும் என்பதை அறிவீர்களா?
அதுவும் எந்த முதலீடும் இன்றி!

இதில் யாரும் யரையும் ஏமாற்றபோவதில்லை என்பதை மட்டும் உறுதியாக கூறுகிறேன்.

உங்களின் ஓய்வு நேரத்திலும், முதலீடு இல்லாமலும், இணையத்தில் பணம் சம்பாதிக்க இந்த தளம் ஒரு மிகச்சிறந்த வழிகாட்டி.

►►► http://tamilptc.blogspot.in/ ◄◄◄

இது ஒரே நாளில் உங்களை பணக்காரன் ஆக்கி விடாது.

நீங்கள் தனியே செயல்பட்டால் சிறு தொகைதான் கிடைக்கும்.

ஆனால் நண்பர்களோடு இணைந்து நாம் செயல்படும்போது நீங்களே எதிர்பார்க்காத அளவு பெறும் தொகை கிடைக்க வாய்ப்புள்ளது.

வாருங்கள் நண்பர்களே ஒன்றுபடுவோம்!உயர்வோம்!

பணம் சம்பாதிப்பது குறித்து மேலதிக விபரங்கள் தேவைப்படுவோர் கீழ்க்கண்ட மின்னஞ்சல்,செல் போன் வாயிலாக நீங்கள் என்னைத் தொடர்புகொள்ளலாம்.

pratheep.onlineearnings@gmail.com

+91 8608750546

என்றும் அன்புடன்,
அ.பிரதீப்