அழகுக்குறிப்புகள் - தலைமுடி பராமரிப்பு

தலைமுடி பராமரிப்புBeauty tips

அழகுக்கு அழகு கூட்ட உதவிடும் பகுதி.

அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள். அழகு என்பது வெறும் வெளித்தோற்றம் சார்ந்த விசயம் மட்டும் அல்ல. மேக்கப் சாதனங்களால் வண்ணங்களை பூசி, உண்மை தோற்றத்தை மறைத்து, போலி அலங்காரம் கொடுக்கும் விசயமும் அல்ல. உள்ளத்தூய்மையும், உடல் தூய்மையுமே உண்மையான அழகு. உள்ளத் தூய்மை என்பது மனம் சார்ந்த விசயம். அது ஒரு தனிக்கடல். இங்கே உடல் தூய்மையை கருவாய் எடுத்துக்கொண்டு, தலை முடி முதல் பாதம் அடி வரை உடல் உறுப்புகளை எவ்வாறு பராமரிப்பது, அவற்றை அழகாய், ஆரோக்கியமாய் வைத்துக் கொள்வது எப்படி என்பதை திருமதி. தேவா அவர்கள் விளக்குகின்றார். அறுசுவை மன்றத்தில் பல வருடங்களாக அழகுக் குறிப்புகள் கொடுத்து, அனைவருக்கும் பரிச்சயமாய் இருக்கும் தேவா அவர்களுக்கு அறிமுகம் தேவையில்லை. ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு உறுப்புகளை பராமரிப்பது பற்றி இங்கே விளக்குகின்றார்.

'அறிவை கூந்தலின் நறியவும் உளவோ' என்ற குறுந்தொகை காலந்தொட்டு, கார் குழல், கருமேகக் கூந்தல் என்று இன்றளவும் தலைமுடிக்கு கவிஞர்கள் முக்கியத்துவம் கொடுத்து வருகின்றார்கள். அதில் நியாயம் இருக்கின்றது. புறத்தோற்றத்தை சிறப்பாய் காட்டுவதில் முதன்மை வகிப்பது தலைமுடிதான். அதனால்தான், வாழ்க்கையில் எதை இழந்தும் கவலைப்படாத பலர், தலைமுடி உதிர்வதற்கு வாழ்க்கையே தொலைந்ததுபோல் வருத்தப்படுவார்கள். உடலின் உச்சியில் இருக்கும் அந்த அதிமுக்கியத்துவம் வாய்ந்த தலைமுடி பராமரிப்பில் இருந்து இந்த பகுதி தொடங்குகின்றது.

தலைமுடி

முடி உதிரும் பிரச்சனை, பொடுகுத் தொல்லை, வழுக்கை என்று பலருக்கும் தலைமுடி சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் இருக்கின்றது, குழந்தையின் க்ராடில் க்ராப்பிலிருந்து வயதானவர்கள் வரை தலை முடி சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏராளம். காலம் காலமாக நமது வீடுகளில் பல இயற்கை முறைகளை பின்பற்றி வந்தாலும், தலைமுடி பிரச்சனை இன்னமும் இருந்து கொண்டேதான் இருக்கிறது. முக்கியமாக வெளிநாடு செல்பவர்கள், எனக்கு இந்த தண்ணீர் ஒத்துக்கொள்ள மாட்டேன் என்கிறது என்று சொல்லக் கேட்டிருக்கின்றோம். ஓரளவிற்கு தண்ணீரால் முடி கொட்டும் என்பது உண்மையென்றாலும், நாம் சாப்பிடும் உணவு, கடைபிடிக்கும் சில வழிமுறைகள் மூலமாக இந்தப் பிரச்சனையை தவிர்க்கலாம்.

baby bath

தொட்டிலில் தொடர்ந்து படுப்பதால், பிறந்த குழந்தைகளுக்கு பொடுகு தொல்லை ஏற்படும். இதனை போக்க தலையில் எண்ணெய் வைத்து 10 நிமிடம் போல் ஊறவிட்டு பிறகு அலசவேண்டும். தொட்டில் துணியை அடிக்கடி மாற்ற வேண்டும். ஒரே இடத்தில் தொடர்ந்து தூங்கினால் சிறிது இடம் மாற்றிப் போடவேண்டும்.

தலைமுடி உதிரும் பிரச்சனைக்கு ஆண்களைப் பொறுத்த வரை பரம்பரையும் ஒரு காரணமாக இருக்கிறது. அதற்கு ஹேர் வீவிங் போன்ற சில சிகிச்சை முறைகளைத்தவிர வேறு எந்த மருந்தும், உணவும் தீர்வாக சொல்லப்படவில்லை. சின்ன வெங்காயம் தடவுவது, மூலிகை எண்ணெய் தடவுவது போன்ற சிகிச்சை முறைகள் சொல்லப்பட்டாலும் அதன் பலன் 100% இருப்பதாக யாரும் சொல்ல முடியாது. பெண்களைப் பொறுத்தவரை வழுக்கை என்ற விஷயம் இல்லாவிட்டாலும் முடி கொட்டுவது என்பது பொதுவான பிரச்சனையாக இருக்கிறது. முடி கொட்டுவதற்கு நாம் உட்கொள்ளும் உணவும் நல்ல சமச்சீரான, சத்தான உணவாக இருப்பது அவசியம். தைராய்டு பிரச்சனை இருப்பவர்களுக்கும், இரத்த சோகை இருப்பவர்களுக்கும் முடி கொட்டுதல் அதிகமாக இருக்கும். மருத்துவரை கலந்து ஆலோசித்து அவர் சொல்லும் வழிமுறைகளை பின்பற்றுவதே இதற்கு நல்ல தீர்வு. நாம் கூந்தலை சரியான முறையில் பராமரிக்கும் போது முடி கொட்டுவதை தவிர்க்கலாம். பொடுகு தலையில் இருந்தாலும் முடி கொட்டும்.

Hair care

தலையை வாரம் இரு முறை அலசினால் போதுமானது. ஷாம்பூ போட்டு அலசும் போது நமது முடி இழக்கும் ஈரப்பதத்தை மீண்டும் ஈடுகட்டவும், முடியின் pH அளவை சமச்சீராக வைத்திருக்கவும், முடி ஸ்மூத்தாக இருக்கவும் கண்டிஷனர்(conditioner) உதவுகிறது. கண்டிஷனரை வேர்க்கால்களில் படாமல் அப்ளை செய்வது நல்லது. மேலோட்டமாக மண்டையில் படாமல் ( 1 செ.மீ அளவேனும் இடைவெளி விட்டு) முடிக்கு மட்டும் படுமாறு கண்டிஷனர் அப்ளை செய்தால் முடி கொட்டாமல் ஸ்ட்ராங்காக இருக்கும். அடிக்கடி அல்லது தினமும் தலை குளிப்பவர்கள் மிகவும் மைல்டான ஷாம்பூ உபயோகிப்பது நல்லது. இப்போது டெய்லி கேர் ஷாம்பூக்கள் (daily care shampoo) பல மார்க்கெட்டில் கிடைக்கின்றன. தினமும் கண்டிஷனர் உபயோகிப்பது நல்லதல்ல. ஆண்ட்டி டாண்ட்ரப் ஷாம்பூக்களை தினமும் உபயோகப்படுத்துவது முடியை பாதிக்கும். வாரம் ஒரு முறை உபயோகப்படுத்தினால் போதுமானது. தலைக்கு அடிக்கடி பெர்மிங் (perming), ஸ்ட்ரெயிட்னிங் (straightening) என்று ப்யூட்டி ட்ரீட்மெண்ட் எடுத்துக் கொள்வதும் முடியை பாதிக்கும்.

Hair treatment

வீட்டிலேயே சீயக்காய் தயாரித்துக் கொள்ள கீழ்க்கண்ட பொருட்களை சேர்த்து அரைத்தால் நல்ல பலன் கிடைக்கும்.

சீயக்காய்- 1 கிலோ
செம்பருத்திப்பூ- 50
பூலாங்கிழங்கு( நாட்டுமருந்து கடைகளில் கிடைக்கும். ஷாம்பூ போல நுரை வரும்) - 100 கிராம்
எலுமிச்சை தோல் (காய வைத்தது. பொடுகை நீக்கும்)- 25
பாசிப்பருப்பு (முடி ஷைனிங்குக்கு) - கால் கிலோ
மருக்கொழுந்து (வாசனைக்கு) - 20 குச்சிகள்
கரிசலாங்கண்ணி இலை(முடி கருப்பாக) - 3 கப் அளவு

மேற்கண்ட அனைத்தையும் வெயிலில் காய வைத்து மிஷினில் கொடுத்து அரைத்து வைத்துக் கொண்டால் வெறும் தண்ணீர் மட்டும் கலந்து தலைக்கு தடவி அலசலாம். சாதக் கஞ்சி தேவையில்லை. வெளிநாட்டில் இந்தப் பொருட்கள் கிடைப்பது அரிது.

பொடுகை நீக்க எத்தனையோ வழிமுறைகள் இருந்தாலும் பெரும்பாலானோர் புலம்புவது ஏன் இத்தனை ட்ரீட்மெண்ட் எடுத்தும் மீண்டும் மீண்டும் பொடுகு வருகிறது என்றுதான். நன்றாக கவனமாக இருந்தோமென்றால் நிச்சயம் பொடுகை அறவே ஒழிக்க முடியும். பொடுக்கு எத்தனையோ ஆண்ட்டி டாண்ட்ரஃப் ஷாம்பூக்கள் இருக்கின்றன. Head & Shoulder, Clinic All clear மற்றும் மருந்துக் கடைகளில் கிடைக்கும் ஷாம்பூக்கள் என்று அத்தனையுமே பொடுகை நீக்கினாலும் நாம் கவனமாக இல்லாவிட்டால் மீண்டும் வந்துவிடும். இயற்கையான ட்ரீட்மெண்ட் என்றால் எலுமிச்சை சாறு மிகச்சிறந்த மருந்து. தலையில் தடவும்போது எரிச்சல் ஏற்படும். ஆனால் பொடுகை அறவே நீக்கும். மிளகு அரைத்து தயிரில் கலந்து தடவுவதும் நல்ல பலனை தரும்.

பொடுகுக்கு ட்ரீட்மெண்ட் எடுக்க வேண்டும் என்று நினைத்தவுடன் முதலில் அதனை மீண்டும் வர விடாமல் இருக்க செய்ய வேண்டிய முன்னேற்பாடுகளை செய்து கொள்ளுங்கள். சீப்பு, பெட்ஷீட், போர்வை, துண்டு, தலையணை உறை எல்லாவற்றையும் கழுவி அல்லது புதிதாக உபயோகப்படுத்துக்கள். இல்லாவிட்டால் நீங்கள் ட்ரீட்மெண்ட் எடுத்த பிறகு சீப்பு வழியாகவோ, தலையணை மூலமாகவோ மீண்டும் பரவிவிட வாய்ப்பு அதிகம். தலை மிகவும் வறண்டு இருந்தாலும் பொடுகு வரும். கண்டிஷனரை தலையில் முடி வேர்வரை போட்டாலும் பொடுகு வரும்.

Hair combing

முடியை பெர்மிங் செய்வதாக இருந்தாலும், ஸ்ட்ரெயிட்னிங் செய்வதாக இருந்தாலும், வீட்டில் நீங்களாகவே முயற்சிப்பதற்கு முன்பு, சலோன் (parlour) சென்று ஆலோசனை பெறுங்கள். ஒவ்வொரு முடியும், முக அமைப்பும் வேறு. ஒருவருக்கு பொருந்தின ஹேர் ஸ்டைல் இன்னொருவருக்கும் பொருந்தும் என்று சொல்ல முடியாது. முடியின் தன்மை, முகவெட்டுக்கு தகுந்தாற்போல் ஹேர்ஸ்டைல் செய்துக் கொள்ளுங்கள். நம்மால் பராமரிக்க முடிந்த ஹேர் ஸ்டைல் செய்து கொள்வது நல்லது.

அதிக ஃப்ரிஞ்சஸ், ஸ்டெப் கட், லேயர்ஸ் போன்றவை எல்லோராலும் எளிதாக பராமரிக்க முடியாது. ஒரே ஹேர் ஸ்டைலில் இல்லாமல் வித விதமான ஹேர்ஸ்டல் செய்து கொள்வது எப்போதும் ஒரு புதிதான தோற்றத்தை கொடுக்கும். இழுத்துப் பிடித்து சடை போட்டுக் கொள்வது பிடிக்கிறது. அதையேதான் பின்பற்றுவேன் என்று இல்லாமல் ஒரு வித்தியாசத்திற்கு மாறுதலான ஒரு ஹேர்ஸ்டைல் செய்து பாருங்கள். சில ட்ரெஸ்களுக்கு லூஸ் ஹேர் மிகவும் அழகாக இருக்கும். அப்படி லூஸ் ஹேர் வேண்டுமென்றால அதற்கு ஒன்று ஹேரை ஸ்ட்ரெயிட்னிங் செய்து செட் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் முடி பறக்காவண்ணம் செட் செய்வதற்கென்றே உள்ள ஸ்ப்ரே அல்லது க்ரீம் உபயோகப்படுத்தலாம். ஆனால் வேர்க்கால்களில் படாமல் உபயோகிக்க வேண்டும். தலை குளிப்பதால் இழக்கும் முடியின் ஈரப்பதத்தை பாலன்ஸ் செய்ய இப்போது ஹேர் ஸ்ப்ரே, மூஸ் (mousse) என்று பல ரகங்கள் கிடைக்கின்றன. அவற்றில் உங்களது சலோன் கண்சல்டண்டின் ஆலோசனை கேட்டு உங்கள் கூந்தலுக்கேற்ற தயாரிப்பை வாங்குங்கள்.

சில இயற்கை முறைகளைப் பற்றியும் குறிப்பிட விரும்புகிறேன். நல்லெண்ணெய் உடல் சூட்டை குறைப்பதுடன் முடியை கருப்பாக்க மிகவும் உதவும். ஆனால நல்லெண்ணெய் முகத்திற்கு போடுவது சரும நிறத்தை கருமையாக்கும். விளக்கெண்ணெய் கண் புருவம், இமை முடிகள் வளர தடவலாம். முட்டை முடிக்கு நல்ல ஷைனிங் தரும். அடிக்கடி உபயோகித்தால் முடி வறண்டு விடும். பேரிச்சை, கீரை போன்ற இரும்பு சத்து நிறைந்த உணவுகள் முடி வளர்ச்சிக்கு மிகவும் நல்லது. நெல்லிக்காயை காயவைத்து பொடி செய்து சீயக்காயுடன் சேர்த்து இயற்கையான கருமை நிறத்துக்கு உபயோகிக்கலாம். மருதாணி முடிக்கு மிகவும் நல்லது. இயற்கையான சாயத்திற்கும், குளிர்ச்சிக்கும் மிகவும் நல்லது. உப்புத் தண்ணீர், சூடான தண்ணீர் போன்றவை முடிக்கு நல்லதல்ல.

hair care kit

பேன் பிரச்சனைக்கு மருந்து போடுவது நல்லது. பொடுகு ட்ரீட்மெண்ட் போலவே இதற்கும் ட்ரீட்மெண்ட்டுக்குப் பிறகு கவனமாக தலையணை உறை முதற்கொண்டு மாற்றுவது அவசியம். ஏதேனும் விசேஷங்களுக்கு இடிமுடி வைத்து பின்னுவதாக இருந்தாலும் தரமானதாக உபயோகியுங்கள். முடிந்தவரை தவிர்த்துவிடுங்கள். கரிசலாங்கண்ணி இலை, நெல்லிக்காய், கருவேப்பிலை மூன்றையும் அரைத்து வடைகளாகத் தட்டி நிழலில் காயவைத்து தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து அந்த எண்ணெயை தலையில் தடவி வந்தால் முடி கருமையாக நன்றாக இருக்கும். சூடத்தை (கற்பூரம்) தேங்காய் எண்ணெயில் போட்டு தடவி வந்தால் பொடுகு நீங்கும். வெந்தயத்தை தேங்காய் எண்ணெயில் போட்டு ஊறவைத்து அதனை தலைக்கு தடவினால் உடல் குளிர்ச்சிக்கு நல்லது.

நல்ல தூக்கம், நல்ல சாப்பாடு, நல்ல தண்ணீர், நல்ல பராமரிப்பு தலை முடிக்கு மிகவும் அவசியம். எவ்வளவு அழகான முகமாக இருந்தாலும் ஹேர்ஸ்டைல் நன்றாக இல்லாவிட்டால் எடுப்பாக இருக்காது. நல்ல மேக்கப்பையும் மோசமான ஹேர்ஸ்டைல் பாழ்பண்ணிவிடும். எனவே தலை முடிக்கு தனியான கேர் கொடுப்பது மிக அவசியம். யாருக்கு என்ன ஸ்டைல் நன்றாக இருக்கும் என்று நான் இங்கே குறிப்பிடவில்லை. காரணம், ஸ்டைலை விட அதை மெயிண்டெயின் பண்ணுவது முடியுமா என்ற விஷயத்தை யோசித்துவிட்டு தேர்ந்தெடுப்பது அவசியம்.

Comments

good idea. i try this and i will give the suggestions to you

with regards
"He who has health has hope. And he who has hope has everything.” - Arabian proverb
sumithra vijayakumar

ஆரம்பமே அமர்க்களம்.தொடருங்கள்.மிக்க நன்றி.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்ன ஹேர் ஸ்ப்ரே அல்லது க்ரீம் உபயோகப்படுத்தலாம்? எதை உபயோகப்படுத்தினால் இயற்கையாக் இருக்கும் ?

ஹாய் Sofia, தலைக்கு குளித்து முடித்து , டவலால் முடியை துவட்டிய பிறகு DELVA Revitalising Moisturising Lotion போடலாம். இது இழந்த ஈரப்பதத்தை மீட்டுத் தரும். இது சலோனில் கிடைக்கும். System Professional Brands ல் கிடைக்கும் மற்ற மூஸ், லோஷன்களும் உபயோகிக்கலாம். ட்ரீட்மெண்ட், ஸ்ட்ரெயிட்னிங், பர்மிங் மற்றும் மற்ற ஸ்டைலிங்குங்களுக்கு தனித் தனியாக ஜெல், க்ரீம் அல்லது ஹேர் ஸ்ப்ரே உபயோகியுங்கள். முடிந்த வரை ஸ்ப்ரே உபயோகிப்பதை தவிருங்கள். அதற்கு பதிலாக செட் செய்யும் ஜெல்கள் கிடைக்கின்றன. அதனை சலோனில் கேட்டுத் தெரிந்துக் கொண்டு உபயோகியுங்கள். Polish Cream நன்றாக செட் செய்ய உதவும். இதில் Pearl Finish, Diamond Finish இரண்டுமே முடிக்கு பளபளப்பான லுக் தரும். முடியும் கலையாது. முடிந்த வரை இப்படிப்பட்ட ப்ராடக்டுகளை சூப்பர் மார்க்கெட்டில் வாங்காமல் சலோனில் அல்லது ஹேர் ப்ராடக்ட்ஸ்கென்று தனியாக உள்ள கடைகளில் வாங்குங்கள். அங்கே இருக்கும் கண்சல்டண்ட்ஸ் உதவுவார்கள். அடுத்த முறை உங்கள் நிறை குறைகளையும் சொல்லலாம். தரமான பொருட்களாகவும் வாங்கலாம்.

நன்றி sumithra vijayakumar. நிச்சயம் செய்து பார்த்துவிட்டு உங்கள் பின்னூட்டத்தை எழுதுங்கள்.

ஹாய் ஆசியா, எப்படி இருக்கீங்க? நீங்க ஹேமாவுக்கு எழுதின பின்னூட்டம் இங்கே தவறுதலாக பதிவாகிவிட்டதா அல்லது பேர் மாறிடுச்சான்னு தெரியல. உங்க சமையல் குறிப்புகள் அத்தனையுமே சூப்பர். நாம பேசி ரொம்ப நாளாச்சு. வீட்டில் அனைவரும் நலமா?

அன்பு தேவா மேடம்... உங்க சீயக்காய் கலவை குறிச்சு நேத்து இரவே அம்மா'ட குடுத்துட்டேன், இந்த முறை இப்படி தான் அரைக்கனும்'னு சொல்லிட்டேன். ;) பயன்படுத்தி எப்படி இருக்குன்னு நிச்சயம் சொல்றேன். உங்களுக்கு பதிவு தான் இரவு போட முடியல... எங்க ஏரியா பவர் சப்லை அப்படி டென்ஷன் பண்ணுது.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹாய் தேவா மேடம், எனக்கு பொடுகு தொல்லை அதிகமாக இருந்துச்சு. உங்க டிப்ஸ் படி வீட்டு வைத்தியமா எலுமிச்சைச்சாறும், தயிரில மிளகு ஊற வைச்சு தேய்ச்சு குளித்தப்பிறகு இப்போ பொடுகு ரொம்ப இல்ல. சில நேரங்கல பொடுகு அதிகமா இருக்குபோது கண் இமைகள பட்டு கண் முடியும் கொட்டுது. இதுக்கு ஏதாவது டிப்ஸ் சொல்ல முடியுமா?

hi deva, h r u? in my face there is light black mark pimples&black circle under the eye. can u tell the solution for this?pimples r recently formed.

எப்படி இருக்கீங்க? சீயக்காய் பொடி எப்படி இருந்ததுன்னு தெரியப்படுத்துங்க. அந்த பொடியை தேய்ச்சு குளிச்சுட்டு, முடியைக் காய வெச்ச பிறகு தலை நல்ல வாசனையாக இருக்கும். அதோட சூப்பரா தூக்கமும் வரும் :-). முடி அடர்த்தியாக வளர நிச்சயம் இந்தப் பொடி உதவும்.

ஹாய் Vinoja17, நீங்க பொடுகுக்கு எலுமிச்சை சாறு தடவினாலே பொடுகு முற்றிலும் போய்விடும். அதிகமான அளவில் உள்ள பொடுகுக்கு வாரம் ஒரு முறை பொடுகு போகும்வரை எலுமிச்சை சாறு தடவுங்கள். மறுமுறை வராமல் இருக்க நான் மேலே சொல்லி உள்ளபடி துண்டு, தலையணை, சீப்பு என்று எல்லா பொருட்களின் உபயோகத்திலும் கவனமாக இருங்கள். இது எதற்கும் கட்டுப்படவில்லையெனில் தலை மிகவும் ட்ரையாகவோ அல்லது மன அழுத்தமோ இருக்கலாம். அதற்கு தகுந்த மாய்ச்சுரைசிங் க்ரீம் அல்லது மூசை தலைக்கு தடவுங்கள்.
பொடுகு மிக அதிகமானால் அது கண் அரிப்பிலும், தொடர்ந்து கண் முடி கொட்டுவதிலும்தான் போய் முடியும். அதனால் பொடுகை முழுவதுமாக ஒழித்துக் கட்டிய பிறகே கண்ணை கவனிப்பதில் பலன் ஏற்படும். முடி மீண்டும் வளர தினமும் விளக்கெண்ணெய் கண்ணுக்கு தடவுங்கள். லேசாக இமை முடியின் வேர்க்கால்களில் Buds கொண்டு தடவலாம். எதாவது சந்தேகம் இருந்தால் கேளுங்கள்.

தங்கள் பதிலுக்கு நன்றி தேவா மேடம். உடல் சூடினால என் தலை ரொம்பவும் ட்ரையாகிடும். இதனால் தான் பொடுகு அதிகமாகிடுச்சு. இப்போ ஓரளவு பொடுகு இல்லாமல் இருக்கு. நீங்க சொன்னபடி விளக்கெண்ணெயை கண்ணில் தடவி பார்க்கறேன். பொடுகு போகுவதற்காக நிறைய ஆண்ட்டி டாண்ட்ரஃப் ஷாம்பு யூஸ் பண்ணினேன். கருப்பா இருந்த முடியின் நிறமும் ப்ரவுன் நிறமா மாறிகிட்டு வருது. இனி ஷாம்பு யூஸ் பண்ணுவத நிறுத்திட்டு உங்க முறைப்படி சீயக்காய் தயாரிச்சு வைச்சுக்க போறேன் மேடம். நன்றி.

ஹாய் azifarah, எனக்கு தங்களது கேள்வியில் ஒரு சந்தேகம். தங்களுக்கு பருக்களினால் வந்த கரும்புள்ளிகள் உள்ளதா அல்லது கருப்பு நிறமான பருக்கள் உள்ளதா? கொஞ்சம் விளக்கம் தர முடியுமா? எனக்கு கேள்வி சரி வர புரியவில்லையென்பதால் இரண்டுக்குமே இங்கே விளக்கம் தருகிறேன்.

பருக்களினால் வந்த கரும்புள்ளிகளுக்கு சிறந்த மருந்து Retinol- A என்ற க்ரீம்தான். ப்ரிஸ்க்ரிப்ஷன் இருந்தால் எளிதாக மருந்துக் கடைகளில் கிடைக்கும். அதைத் தவிர சிறந்த மருந்து எதுவும் இல்லையென்றே சொல்வேன். எனக்கு சமீபத்தில் சிக்கன் பாக்ஸ் வந்தபோது ஏற்பட்ட தழும்புகள் கூட இந்த க்ரீம் போட்டு முற்றிலும் சரியாகி விட்டது. எனக்கு சிக்கன் பாகஸ் வந்திருந்தது என்று சொன்னால் கூட யாரும் நம்புவதில்லை. ஆனால் இந்த மருந்து உபயோகிக்கும்போது எக்காரணம் கொண்டும் சூரிய ஒளியில் வெளியே போகாதீர்கள். இந்த மருந்து சருமத்தின் தோலை கொஞ்சம் கொஞ்சமாக உரிய வைத்து தழும்பை நீக்குவதால் சூரிய ஒளியில் செல்லும்போது ஸ்கின்னுக்கு பாதிப்பு ஏற்படும். இரவு நேரங்களில் மட்டும் உபயோகித்தால் போதுமானது. முடிந்த வரை முகத்தில் அடிக்கடி கையை வைக்காதீர்கள். இது பல வித சரும நோய்களைத் தடுக்கும்.

பருத்தொல்லை அதிகம் இருந்தால், இரவு Ultra Clearsil க்ரீமை பொட்டு, பொட்டாக பருக்களின் மீது தடவி வர சரியாகும். தினமும் முகம் கழுவ Clearsil Face Wash உபயோகப்படுத்துங்கள். அதிக எண்ணெய்ப் பசை நீங்கி, பருக்கள் வராமலிருக்கும். தங்களுக்கு மேலே சொன்ன இரண்டு பிரச்சனைகளும் இல்லையென்றால் பிக்மெண்டேஷன் தொல்லையா என்பதை தெரியப்படுத்துங்கள்.

கண் கருவளையத்திற்கு ஏற்கனவே பல பதிவுகளில் பதில் சொல்லி இருக்கிறேன். நல்ல தரமான Under Eye Gel அல்லது க்ரீம் உபயோகியுங்கள். எனக்கு தெரிந்து Garnier Eye Gel ரொம்ப நல்ல பலனைத் தருகிறது. இயற்கையான மருந்து என்றால் உருளைக்கிழங்கு சாறு அல்லது தயிர் தடவுங்கள். பன்னீரை பஞ்சில் நனைத்து தடவுவதாலோ அல்லது டீ பேக் கண்ணில் வைப்பதாலோ கண்ணின் அயர்ச்சி நீங்குமே தவிர கருவளையம் போகாது. க்ரீம் போடும்போது ஆள்காட்டி விரலில் எடுத்து, அதிக அழுத்தம் கொடுக்காமல் கண்ணின் வெளிப்புறத்திலுருந்து உள்பக்கம் நோக்கி அடியில் தடவுங்கள். கண்ணுக்கு கீழே உள்ள சருமம் மிகவும் மிருதுவானது. ஸ்க்ரப், ப்ளீச் போன்றவை இந்த இடத்தில் படாமல் போடுவது அவசியம்.

அருமையான அழகு குறிப்புகள்....

எனக்கு மிகவும் அடர்த்தியான நீளமான கூந்தல்..

இந்த நாட்டிற்கு வந்ததிலிருந்து அதிகம் கொட்டுகிறது...தண்ணீர்தான் காரணமா
தெரியவில்லை...

அங்கங்கே வெள்ளி மணிகள் (இளநரை) தலைகாட்டுகிறது...இதற்கு ஏதாவது
டிப்ஸ் சொல்லமுடியுமா தேவா...

உங்களுக்கு ஒரு 5/6 பதிவுகள் தனிப்பட்ட முறையில் பழைய அருசுவையில் போட்டேன்..ஆனால் பதிலில்லை...பார்க்கவில்லையா/நேரமில்லையா என தெரியவில்லை..

ஒரு வழியாக தெளிவான ஒரு நீண்ட இமெயிலை உங்கள் பெயருள்ள வேறோரு அறுசுவை தோழிக்கு தவறுதலாக போட்டு பதில் வரவில்லை என பார்த்து பிறகு அவர் அது நான் இல்லை என சொன்னபின் அமைதியாகிவிட்டேன்..

சில நேரங்களில் சிலரோடு நட்பு வைத்து கொண்டே ஆக வேண்டுமென நம் கட்டுப்பாட்டையும் மீறி நம் மனது அடம் பிடிக்கும் அல்லவா..?ஒரு உள்ளுணர்வின் அதீத உந்துதல் ...!!..??

அதுபோல்தான் உங்கள் விசயத்திலும்...

மற்றபடி தனிப்பட்ட காரணம் ஏதுமில்லை...

அன்புடன்
இளவரசி

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

முடி கொட்டாமல் இருக்க இப்படி ஒரு தீர்வு இருக்குன்னு தெரிஞ்சு இருந்தா நான் என்னுடைய முடியல்லாம் இழந்திருக்க மாட்டேன் என்னுடைய முதல் வேலையே இந்த சீயக்காய் தயாரிப்பது தான். தலை குளித்தாலே முடி ரொம்ப சருகு போல் ஆகிடுது நான் உபயோகிப்பது டவ் சாம்பூ தான். சைனிங்காகவும் தலைக்குளிக்கும் போதெல்லாம் அதிகம் வரட்சி ஆகாமலும் இருக்க என்ன செய்யலாம். ஜெல் உபயோகப்படுத்தலாமா அப்படியானால், சில இந்திய ப்ராடக்டா இங்க கிடைப்பது போல சொல்லுங்க தேவா. அடுத்து இளவரசி சொன்ன அதே பிரச்சனை(சேம் பின்ச் இளவரசி) எனக்கும் இளநரை இரண்டொரு முடிகள் தலைக்காட்டுகிறது.
தேவா ப்ளாக்ஹெட்ஸ் பத்தி கேட்கனும் இங்க கேட்கலாமான்னு தெரில. இதுவே அதிக கேள்விகள் கேட்டது போல இருக்கு. கோவிச்சுக்காதீங்க.

தேவா!
எப்பிடியிருக்கீங்க? சிறிது நாட்களுக்கு முன்பு உடம்பு சரியில்லேன்னு அறுசுவையில் படித்தேன்.
உங்க ஆலோசனைகள் வழக்கம்போல் தொடர்வது சந்தோஷம்.
கொஞ்சம் நாட்களாய் நீங்க வராமல் ,"நானெல்லாம் அழகுக்குறிப்பு சொல்ற நிலைக்கு அறுசுவை நிலைமை ஆய்டிச்சேன்னு" வருத்தமாய் இருந்தது.
மீண்டும் வருகைக்கு நன்றி!

தேவா மேம் எனக்கு முடி ரொம்ப தின்னா நெருக்கம் இல்லமலும் இருக்கு.சிக்கிரம் உடைந்தும் போகிரத்து . தலையின் முன் பக்கம் முடி நிரைய குரைகிரது. நேர் வகிடு எடுப்பென் அந்த இடத்தில் சில சமயம் அரிப்பு எடுக்கிரது.எனக்கு உஙலிடம் கெட்க தயக்கமாக இருந்த்தது. சடைபோட்டால் ரெம்ப ஒல்லியா இருக்கு.என் வெயிட்டுக்கு என் முடி மிகவும் அசிஙமாக இருக்கு.சடைதன் போடுவென் முடிய லூசா விட மாடென் இருந்த்தும் இப்பிடி இருக்கு.என் பொன்னுக்கு இப்பொ முடி கொஞம் நன்ராக இருக்கு அதை நல்லா எப்டி பாத்துகாகிரது சொல்லுஙக பா.னான் டெல்லில இருக்கென் இங்க கரிசலன்கன்னி கிடைகாது அதுஇல்லாமலும் நின்க சொன்ன என்னய் தயாரிக்கலாமா தயவு செய்து விள்க்கம் அளீக்கவும்

all is well

ஹாய் deva mam , உங்க குறிப்புகள் எல்லாமே சூப்பர், தலை முடி softஆ இருக்குறதுக்கு ஏதாவது டிப்ஸ் சொல்லுங்களேன்,

Ramyasrinivasan

ஹாய் இளவரசி, எப்படி இருக்கீங்க? வீட்டில் அனைவரும் நலமா?நான் தங்களது ஒரு பதிவினை மட்டும்தான் பார்த்தேன். அப்போது அறுசுவையில் புதிய தளத்திற்கான வேலை நடந்து கொண்டிருந்ததால் என்னால் அதற்கு பதில் அடிக்க முடியவில்லை. மேலும் அப்போதெல்லாம் அறுசுவையை பார்வையிட வரவே முடியாதபடி வேலை. லீவ் நாட்களில் நிறைய டைப் செய்ய வேண்டும் என்று நினைத்தபோது என் பையனுக்கு சிக்கன் பாக்ஸ். அவன் மறந்தும் கூட கைகளால் சொரிந்து விடக்கூடாதேன்னு பக்கத்திலேயே உட்கார்ந்திருந்தேன். இப்போது ஓரளவு குணமாகிவிட்டது. நான் இதுவரை எடுத்த 3 Annual Leave லும் உடல்நலக் குறைபாடுதான். அதனாலேயே இப்போதெல்லாம் லீவ் என்றாலே பயமாகவும் இருக்கிறது. முதல் லீவில் போன வருடம் எனக்கு சிக்கன் பாக்ஸ். அடுத்த லீவில் முதுகு காலி. இப்போது பையன். அதுவுமில்லாமல் அலுவலகத்திலும் சரி வேலை. உடனடியாக பதில் அனுப்பாததற்கு மன்னிச்சுக்குங்க. உங்க நட்பு கிடைத்தது மனதுக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.

இளம் நரை ஏன் வருதுன்னு அறிவியல் பூர்வமாக ஆராய்ச்சி செய்து கண்டுபிடிக்காட்டியும், நான் இதுவரை பார்த்ததில் காப்பி, டீ குடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு மிக எளிதாக நரை சிறுவயதிலேயே ஆரம்பமாகிவிடுகிறது. என் வீட்டிலேயே அதிகமாக காப்பி குடிக்கும் அக்காவிற்கு 23 வயதில் இளநரை ஆரம்பித்துவிட்டது. காப்பியை இதுவரை டேஸ்ட் செய்து கூட பார்த்திராத எனக்கு இன்னும் ஒரு முடியும் நரைக்கவில்லை. மேலும் காப்பி, டீ மட்டுமல்ல பாண்டா, கோக், பெப்சி போன்றவற்றை அதிகம் குடிப்பவர்களுக்கும் இப்படி இளநரை வந்துவிடுகிறது. சொன்னால் நிறைய பேர் இது நிரூபிக்கப் படாத விஷயம் என்று சொல்லக்கூடும். ஆனால் நீங்கள் குடும்ப நபர்களையும், நண்பர்களையும் பார்த்தேகூட இதனை அறிய முடியும். நரை வந்தப் பிறகு அந்த நரைத்த முடியை எதுவும் செய்ய முடியாது. ஆனால் ஓரளவுக்கு வராமல் வேண்டுமானால் தடுக்கலாம். நான் மேலே சொல்லியுள்ளபடி நெல்லிக்காய்,கீரை போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். அதிக சூடாக டீ, காப்பி குடிப்பதை தவிருங்கள். காலையில் எழுந்ததும் பல் விளக்கிவிட்டு நிறைய தண்ணீரை கொப்பளிப்பதுபோல் உள்ளே கொண்டு சென்று துப்பினால் வாமிட் வருவதுபோல் இருக்கும். அப்போது வயிற்றில் உள்ள பித்தம் (அப்போது சாப்பிட்டிருக்காததால் பித்தம் மட்டுமே வரும்) வாமிட்டாக வந்துவிடும். வாய்க் கசப்பிலேயே இதனை உணரலாம். யோகா செய்பவர்கள் பொதுவாக செய்யும் தினசரி பழக்கம் இது. தண்ணீர் கொண்டு வாமிட் வர செய்ய இயலவில்லையென்றால் விரலைக் கொண்டு குமட்டல் வருமாறு செய்யுங்கள். கேட்பவர்களுக்கு இது சிரிப்பை வரவழைத்தாலும் வயிற்றை சுத்தப்படுத்த இது சிறந்த வழி. பித்தநரையையும் தடுக்கும். ஏற்கனவே வந்த நரையை மறைக்க மஸ்காரா கொண்டு லேசாக நரையின் மேல் ஒரு ரோல் செய்யுங்கள். போதும். டை தேவையில்லை. ஹென்னாவும் போடலாம். இதன் வழிமுறையை விளக்கமாக ஏற்கனவே ஒரு பதிவில் குறிப்பிட்டிருக்கிறேன். தலைக்கு கருவேப்பிலை, நெல்லிக்காய், கரிசலாங்கண்ணி சேர்த்து அரைத்த பேக்கும்போட்டு ஊறவைத்து குளிக்கலாம்.

தலை குளிக்கும் முன்பு நல்லெண்ணெயை வைத்து ஸ்கால்ப் மசாஜ் செய்யுங்கள். முடி நன்கு கருமையடையும். முடி கொட்ட தண்ணீர் ஒரு காரணமாக இருந்தாலும் உணவுன் மூலமும், சில பழக்கங்கள் மூலமும் தவிர்க்கலாம். அடிக்கடி பேரிச்சை மில்க் ஷேக் அல்லது தினமும் 5 பேரிட்சை சாப்பிடுங்கள். தலைக்கு குளித்தப் பிறகு கடைசியாக குடிக்கும் நீர் ஒரு பாட்டில் அளவு தனியாக தலையில் எல்லா இடங்களில் படுமாறு அலசுங்கள். இது உப்புத் தண்ணீர் தலையில் தேங்காமல் ஓரளவுக்கு தடுக்கும். தலைக்கு என்று தனியாக அதிக அளவு பயன் படுத்த முடியாவிட்டால் இவ்வாறு செய்யலாம். இதில் எதுவும் சந்தேகம் இருந்தால் கேளுங்கள்.

ஹாய் சுந்தரமதி, கவலை வேண்டாம். நிச்சயம் உங்க முடி கொட்டற பிரச்சனை சரியாகும். முடி கொட்டும்போதுதான் இப்படி தலை அரிப்பு ஏற்படும். ஆண்களுக்கு தலை வழுக்கை ஆரம்பிக்கும் முன்பு இப்படி அரிப்பு ஏற்படும். அதனைக் கொண்டே அவர்களுக்கு முடி கொட்ட ஆரம்பிக்கப் போகிறது என்பதனை கண்டறியலாம். உங்களுக்கு நான் சொல்வது நல்ல இரும்பு சத்துள்ள உணவு மற்றும் மசாஜ், மசாஜ், மசாஜ் தான். ஸ்கால்ப் மசாஜ் அடிக்கடி பண்ணுங்க. மசாஜ்னா உடனே எண்ணெய் தடவி தலையில் மசாஜ் பண்றது மட்டுமில்லை. சும்மா டீவி பார்க்கும்போதும் கூட தலையில் விரல் விட்டு ஸ்கால்பை லேசாக விரல் நுனிகளால் அழுத்தி விடுங்க. இது சிறந்த பலனைத் தரும். ரத்த ஓட்டம் அதிகரிப்பதால் முடியின் வளர்ச்சியும் தூண்டப்படும். இளவரசிக்கு, மேலே சொன்ன பதிலில், முடி கொட்டாமலிருக்க மேலும் சில வழிமுறைகளும் சொல்லி இருக்கேன். அதனையும் பின்பற்றுங்க.

உங்க பொண்ணுக்கு வயது 10 க்குள்ள இருந்தால் Johnson Junior Shampoo with Conditiioner உபயோகியுங்க. நல்லா ஷைனிங்கா முடி ஹெல்தியா இருக்கும். சாப்பாட்டில் மீன், முட்டை, கோழி, கீரைன்னு நல்ல ப்ரோட்டீன் மற்றும் இரும்பு சத்துள்ள உணவுகளை சேருங்கள். மறக்காமல் தினமும் 5 பாதாம்பருப்புகளை சாப்பிட வைங்க. குழந்தைகளின் சருமத்துக்கும் மிகவும் நல்லது. எதாவது கதை போல் சொல்லியாவது இதையெல்லாம் சாப்பிட வைங்க. சூடாக தலைக்கு தண்ணீர் ஊத்தாதீங்க. வாரம் ஒரு முறை எண்ணெய் தடவி ஊறவிட்டு தலைக்கு குளிக்க வைங்க. மதிய நேரமாக இருந்தால் எண்ணெயை கொஞ்ச நேரம் மசாஜ் செய்து ஊறவைத்துக் குளிப்பாட்டலாம். காய்ச்சிய எண்ணெயை தலைக்கு உபயோகிக்க வேண்டாம். சிலருக்கு ஒவ்வாமை ஏற்பட்டு அதனால் முடி கொட்டும். முடிந்தவரை VVD Coconut Oil உபயோகியுங்கள். எண்ணெயில் நான் சொன்னதில் கரிசலாங்கண்ணி தவிர்த்து மற்றவற்றை தட்டிப் போடுங்கள். அதிக நறுமணமுள்ள ஆயில் வேண்டாம். கேசவர்த்தினி மிகவும் நல்லது. அதனை எண்ணெயில் கலந்தும் உபயோகிக்கலாம். எப்போதும் அவளுக்கு என்று தனி துண்டையே உபயோகியுங்கள். புதிதாக துவைத்த துண்டுதானே என்று கூட மற்றவர்களின் துண்டுகளை பயன்படுத்தாதீர்கள். அதே போல் அவளது துண்டுகளையும் மற்றவர்கள் ஒரு போதும் உபயோகப்படுத்தவிடாதீர்கள். இது எப்போதும் அடுத்தவரது பொடுகு, சரும நோயை அவளுக்கு பரவவிடாமல் தடுக்கும். சந்தேகம் இருப்பின் கேளுங்கள்.

ஹாய் கெளரிலக்ஷ்மி, எத்தனை கேள்வி வேணும்னாலும் கேளுங்க. பரவாயில்லை. நான் எதுவும் நினைச்சுக்க மாட்டேன். இளவரசிக்கு சொன்ன பதிலில் உங்க இளநரைக்கான பதில் இருக்கு. அதில் சந்தேகம் இருந்தால் கேளுங்கள். தலைமுடி, தலை குளித்தப் பிறகு சருகு போல் தோற்றமளிக்க காரணம், ஈரப்பதம் இல்லாமல் இருப்பதுதான். எனவே Dove Conditioner ம் ஷாம்பூ போட்டு அலசிய பிறகு உபயோகியுங்கள். முடியை டவல் ட்ரை செய்து விட்டு பிறகு மாய்ச்சுரைசிங் லோஷன் தடவுங்கள். நான் உபயோகிப்பது Delva Revitalising Moisturising Lotion. இந்தியாவில் சென்னையில் Alsa Mall, Cissons, Spencer, இசஃபானி செண்டர், பர்மா பஜார்னு எல்லா இடங்களிலும் இப்ப ஃபாரின் அயிட்டம்ஸ் எளிதாக கிடைக்கிறது. என்னுடைய குறிப்புகளை நீங்கள் ஆரம்பத்திலிருந்து படிப்பவராக இருந்தால் ஒரு விஷயம் புலப்படும். அது, எக்காரணம் கொண்டும் நான் எனக்கு தெரியாத, இதுவரை மற்றவருக்கோ, எனக்கோ உபயோகப்படுத்திப் பார்க்காத பிராண்டுகளைப் பற்றியோ, வேறு புத்தகங்களில் படித்ததை மட்டும் வைத்தோ, ட்ரை செய்யாமல் எழுதியதில்லை. அதனால் இந்திய பிராண்டுகளில் நான் உபயோகப்படுத்திய மூஸ் எதுவும் இல்லை. ஏனென்றால் அங்கே இருந்தவரை அம்மா அரைத்துக் கொடுத்த சீயக்காய் பொடி, ரெவ்லான் கண்டிஷனர் (அப்போது சிங்கப்பூரிலிருந்துதான் அதையும் வாங்கி வர வேண்டும். நம்ம ஊரில் கண்டிஷனர் முதலில் விற்க ஆரம்பித்ததே சன்சில்க் தான்.) மட்டும்தான் உபயோகப்படுத்தி இருக்கிறேன். இந்தியாவில் இப்போது கிடைக்கும் கார்னியர் தலை சம்பந்தமான பிராண்டுகளில் முதன்மையானதுன்னு சொல்வேன். ஏன்னா இங்கேயே அதனை நான் உபயோகித்துப் பார்த்திருக்கிறேன். அதில் தலைக்கான Revitalising Serum கிடைக்குதான்னு பாருங்க. அது நல்ல பலன் கொடுக்கும். L'oreal ம் கார்னியரும் ஒரே க்ரூப் ப்ராடக்ட்ஸ்தான். நீங்கள் இதனை கடைகளில் கேட்கும்போது கன்ஸ்யூமர் ப்ராடக்ட்ஸ் இல்லாமல் Professional Products என்று கேளுங்கள். சென்னையின் பிரபலமான சலோன் Bounce ல் அத்தனை அயிட்டமும் இருக்கிறது. இது இசஃபானி செண்டரில் இருக்கிறது. மற்ற பார்லர்களிலும் கேளுங்கள். முடி வறண்டு போகாமல் இருக்க, முட்டை அதிகம் தலைக்கு தடவாதீர்கள். முடி ஷைனிங்காக இருக்க நல்ல கண்டிஷனரும், மாய்ச்சுரைசிங் லோஷன் அல்லது மூஸ் போதும். இந்திய பிராண்டுகளில் அதிக அளவில் இப்படி ஹேர் ப்ராடக்ஸும் இல்லை. முடி விஷயத்தில் கண்ட பிராண்டுகளை உபயோகிப்பதும் நல்லதல்ல. முழுதுமாக தங்களுக்கு உதவ முடியாததற்கு மன்னிக்கவும்.

பிளாக் ஹெட்ஸ் வராமல் தடுக்க, முகத்துக்கு ரெகுலராக பேஷியல், பேக் போதும். ஏற்கனவே பேஷியல் பற்றி விரிவாக ஒரு பதிவு எழுது இருக்கிறேன். அதில் உங்களுக்கு எல்லா விளக்கங்களும் இருக்கும். பேக் போட தேவையான பொடியின் தயாரிப்பும் ஒரு குறிப்பில் இருக்கிறது. இப்போது என்னால் அதனை தேடி லிங்க் கொடுக்க நேரமில்லை. நேரம் கிடைக்கும்போது நிச்சயம் பதிவு செய்கிறேன். பரு வந்தால் எக்காரணம் கொண்டும் கிள்ளாதீர்கள். முகத்துக்கு தயிர் கலந்த பேக் போடுங்கள். வாரம் ஒரு முறை முகத்தை ஸ்க்ரப் செய்யுங்கள். ஆலிவ் ஆயில் முகத்துக்கு ஒத்துக் கொண்டால் தினமும் தடவலாம். ப்ளாக் ஹெட் நாளடைவில் போய்விடும். பாதாம் பருப்பு தினமும் சாப்பிடுங்கள். முகத்தை தூங்கு முன்பு அவசியம் கழுவுங்கள். நாள்பட்ட பிளாக் ஹெட்ஸ்க்கு Fadeout Cream Original உபயோகியுங்கள்.

எப்படி இருக்கீங்க? உங்க வீட்டு செல்லம் எப்படி இருக்கா? நீங்கதான் சகலகலாவள்ளியாச்சே. அழகுக் குறிப்பும் தெரிஞ்சதாலதானே சொல்லி இருப்பீங்க. உங்க சமையல் அயிட்டமெல்லாமே எனக்கு ரொம்ப பிடிக்கும். அதை ஈசியா குழந்தைகளுக்கு பிடிச்ச மாதிரி செய்யற உங்க பாணி ரொம்ப பிடிக்கும். குழந்தைகள் சமையல் ஸ்பெஷலிஸ்ட்னா அறுசுவையில் நீங்கதானே. உங்க பதிவு பார்த்து மிkaவும் மகிழ்ச்சி. நான் இதே போல் ஒழுங்காக அப்பப்ப பதில் சொல்ல வருவதுபோல் ஒர்க்லோட் இருந்தால் சந்தோஷம். எப்பவும் முடியும்னு சொல்ல முடியல. ஆனால் இப்ப நான் பதிவுகளைத் தேடிப் போய் பதில் சொல்ற வேலையில்லாமல், இப்ப நேரடியா லிங்கை க்ளிக் செய்து சொல்வது எளிதாக இருக்கிறது. நம்ம அட்மினுக்குதான் நன்றி சொல்லணும்.

இது யாரு எங்க வீட்டு செல்லமா? Profile பார்த்தால் அப்படித்தான் தோணுது. அப்படி இருந்தால் Deva Mam வேண்டாம். சித்ரா வதனை தான் சரி. அதோட நேரில் பாக்கும்போது நானே வாங்கிட்டு வந்து கொடுத்துடறேன். வேற ரம்யாவா இருந்தால், இங்கே பதில் மட்டும் சொல்றேன்.

தலைமுடி சாஃப்ட்டுக்கு நல்ல கண்டிஷணர் போதும். இங்கே ஆஸ்திரேலியாவில் L'Oreal Elvive Anti Frizz Conditioner கிடைக்குது. ஷாம்பூவும் அதே ரேஞ்சில் இருக்கு. ரெண்டுமே தி பெஸ்ட். டவ்வைக் காட்டிலும் ரொம்ப நல்லா இருக்கு. என்ன ஷாம்பூ போட்டாலும் இந்த கண்டிஷனர் போட்டால் முடி சாஃப்டாயிடுது. முடி கொட்டறது இல்லை. Anti Dandruff ஷாம்பூ உபயோகித்தால் அவசியம் கண்டிஷனர் யூஸ் பண்ணணும். இந்த Elvive ஷாம்பூ, கண்டிஷர், Revitalising Serum எல்லாமும் சேர்ந்து ஒரு செட்டாகவே கிடைக்குது. BIG W வில் விலை எப்போதும் எல்லா இடங்களையும் விட ரொம்ப கம்மி. சில சமயம் Priceline லும் நல்ல டிஸ்கவுண்ட்டில் வாங்கலாம். Priceline ல் எல்லா ஹேர் ப்ராடக்ட்ஸ்ம் இப்படி செட்டாகவே கிடைக்கும். ஒவ்வொண்ணும் தனித்தனியா வாங்க வேண்டியதில்லை. அதுவுமில்லாம இப்படிப்பட்ட கண்டிஷனர்களை அதே பிராண்டு ஷாம்பூக்களுடன் உபயோகிக்கும்போது நல்ல பலன் தரும். System Profssional பிராண்டும் நல்லா இருக்கும். அதில் நிறைய வெரைட்டி இருக்கு. ஷாப்பிங் செண்டரில் உள்ள சலோனுக்கு வாரம், ஒரு சில நாள் மட்டும் ஹேர் கன்சல்டண்ட்ஸ் வருவாங்க. அவங்ககிட்ட கேட்டால் நமக்கேற்ற அயிட்டம்ஸ் சரியா சொல்லிடுவாங்க. ஆனால் கடைகளில் உள்ள சேல்ஸ் கேர்ள்ஸ் ஒவ்வொருவரும் ஒருமாதிரி சொல்லி குழப்பிடுவாங்க. அதனால கன்சல்டண்ட் இருக்கும்போது போய் பாருங்க. இதுக்கு தனியா பணம் கொடுக்க வேண்டியதில்லை. கொஞ்சம் சாம்பிளும் அப்ளை செய்து பார்க்கலாம். அவங்க கடையிலேயே நாம வாங்கறதால இது எல்லாமே ப்ரீதான்.

தலை முடி சஃப்ட்டாக இருக்க, முதல் நாள் இரவே சிறிது வெந்தயத்தையும், சிறிது முழு உளுத்தம் பருப்பையும் ஊற வைத்து அரைத்து, புளித்த தயிர் மற்றும் சீயக்காயுடன் கலந்து தலை அலசினால் முடி ரெம்ப சாஃப்ட்டா இருக்கும். இது என் அனுபவத்தில் கண்டது.

priyamudan sangops

உங்களின் உடனடி பதிலுக்கு நன்றி

பையனுக்கு இப்போது எப்படியிருக்கிறது...?

உங்கள் ஹெல்த் எப்படியிருக்கிறது?

உங்களின் நேரமின்மையும் சூழ்நிலையையும்ம் புரிந்துகொண்டேன்.

உங்கள் பதிலில் நீங்கள் சொல்லியுள்ள முதல் விசயம் என் all time favourite
coffee .....:-)

முன்னாடி வேலை பார்க்கும்போது ஒரு நாளைக்கு 4/5 என இருந்தது இப்போது 2 என்ற அளவில் குறைத்திருக்கிறேன்....

அதை முழுவதும் விடுவதற்கு முயற்சிக்கிறேன்..இப்போதுகூட குடித்து கொண்டுதான் இந்த வரிகளை படித்தேன்....:-)

உண்மையில் காபிக்கும் ,நரைக்கும் சம்பந்தம் உண்டு என எனக்கு தெரியாது.

உங்கள் கருத்துக்கும் ஆலோசனைக்கும் நன்றி...

உங்கள் டிப்ஸ் அனைத்தும் முயற்சித்து பார்க்கிறேன்.

நல்ல பதிலுக்கு நன்றி

என்றும் நட்புடன்

இளவரசி

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

அச்சச்சோ!
தேவா மேடம் நான் கீதாச்சல் இல்ல. நீங்க அவங்கன்னு நினைச்சு பதில் போட்டிருக்கீங்க.
நான் சாய்கீதாலஷ்மி. ஆஹா! என்னைப்போய் சகலகலாவல்லின்னு புகழ்ந்திட்டீங்களேன்னு சந்தோஷமாய் இருக்கு.
தகுதியில்லாத பட்டமாய் இருந்தாலும் திருப்பித்தர்ற ஐடியா இல்ல!
ரொம்ப நன்றி!

நன்றீ தேவா மேம். நாங்கல் நான் வெஜ் சாப்பிட மாட்டோம். அதனால முட்டை,சப்பிட முடியாது. இனி கேசவர்த்தினி உபயொகிக்க ஆரம்பிக்கிரென் டீ குரைக்கிரென்.னான் தலைக்கு இப்பொ ஜன்சொன் சாம்பு தான் உபயேகிகிரென் [அதுவும் உங ஆ குரிப்பில் தான் பார்த்தென் பழையதை எல்லம் படித்து விட்டென்] என் பொன்னுக்கும் அதுதான் உபயொகிகிரென். என் முடி தலைசீவும் போது வேரிலிருந்து கொட்டுது. சாம்பூ நான் இதுவே உபயோகிகலாமா? கன்டிசனர் உபயோகிக வென்டியது அவசியமா?ஏதாவது மாதிரைக்கல்; எடுக்க வேன்டியிருக்குமா? உஙலுக்கு நெரம் கிடைக்கும் போது பதில் போடுஙல் oil alomendrops or coconut oil than use pannuran pls help me

all is well

ஹாய் தேவா மேம் உங்கள் குறிப்புகள் மிக அருமையாக உள்ளது, நீங்கள் குறிப்பிட்டுள்ள சீயக்காய் பொடியில் சீயக்காய் தவிர மற்ற பொருட்கள் நான் வசிக்கும் இடத்தில் கிடைப்பது அரிது. இந்த பொடி தயாரித்து சென்னையில் விற்பனை செய்கிறார்களா??? எங்கே கிடைக்கும் என்று ஆலோசனை கூறுங்கள்.

எனக்கு முடி கொட்டும் பிரச்சனை உள்ளது. முன் நெற்றியில் முடி குறைவாக உள்ளது முடி வளர என்ன செய்ய வேண்டும். சமீபமாக பேன் மற்றும் பொடுகு பிரச்சனை உள்ளது. அடிக்கடி தலை அரிப்பு எடுக்கிறது. தலைக்கு குளித்தால் முடி வறண்டு நற நற வென்று இருக்கிறது, எனக்கு எந்த shampoo and conditioner உபயோகப்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும். DELVA Revitalising Moisturising Lotion பற்றி கூறியிருந்திருந்தீர்கள். இதை எப்படி பயன்படுத்த வேண்டும். நான் உபயோகிக்கலாமா... தயவுசெய்து கூறுங்களேன் ப்ளிஸ்....

கருவளையம் போக என்ன செய்ய வேண்டும். வீட்டில் எளிய முறையில் செய்யக்கூடிய பேஷியல் பற்றி கூறினால் உதவியாக இருக்கும். என்னை போல் அலுவலகம் செல்பவர்களுக்கும், வீட்டிலிருந்தபடி பேஷியல் செய்து கொள்ள பயன்படும்.
நன்றி.

i dont use shikakai because of my sinus problem i live in the place where indian products are not easily available my hair was v long and thick but now its receding plz tel me some good packs i await for ur further articles regarding haircare hope u wud reply me

என்றும் அன்புடன்,
கவிதா

ஹாய் தேவ mam , ஹேர் soft ஆ ஆவதற்கு நீங்க சொன்ன டிப்ஸ்க்கு ரொம்ப நன்றி, இவ்வளோ டிப்ஸ் கைவசம் வச்சிருக்க நீங்க உங்க தலைமுடிய எவ்வளோ அழகா வச்சிருப்பீங்க? உங்க தலைமுடிய பத்தியும் அத நீங்க எப்படி maintain பண்றீங்கன்னு கொஞ்சம் சொல்லுங்களேன்,,,

Ramyasrinivasan