சமையல் அரிச்சுவடி - பாகம் 2


Cooking lessons


பாலில் டீ போடும் முறையைப் பார்த்தோம். பால் பவுடர் உபயோகித்து டீ போடுவது எப்படின்னு தெரிஞ்சுக்கலாமா?

பாலுக்கும், தயிருக்கும் தேவை என்றால் 1 மேசைக்கரண்டி பால் பவுடரை 200 மில்லி தண்ணீரில் கட்டியின்றி கரைத்து, பொங்கி வரும் வரை காய்ச்சி இறக்கினால் பால் ரெடி.

டீ போட வேண்டுமென்றால், 3/4 மேசைக்கரண்டி பால் பவுடரை 200 மிலி தண்ணீரில் கரைத்து அடுப்பில் வைத்து சூடாக்க வேண்டும். லேசாக சூடேறியதும் 1 தேக்கரண்டி டீத்தூள், 2 தேக்கரண்டி (பாலிலேயே கொஞ்சம் இனிப்புத் தன்மை இருக்கும்) சர்க்கரை சேர்த்து டீத்தூள் வேகும் வரை கொதிக்க விட்டு இறக்கி வடிகட்டினால் டீ குடிப்பதற்கு தயார். இதிலும் தூளாக்கிய ஏலக்காயையும், நசுக்கிய இஞ்சியையும் சேர்த்து டீ போடலாம். பால் சூடாகாமல் டீத்தூள், சர்க்கரை சேர்த்தால் சில நேரங்களில் பால் திரிந்து விடும்.

பால் திரிந்தால் என்ன செய்வதுன்னு சொல்றேன்னு சொல்லி இருந்தேனல்லவா? திரிந்து போன பாலை கொஞ்சம் தயிர் அல்லது சில துளிகள் எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலக்கி இன்னும் நன்றாக திரிய வைக்கவும். நன்கு திரிந்ததும் வடிகட்டி, கட்டியாக நிற்கும் பனீரை ஒரு சுத்தமான துணியில் கட்டி, மேலே ஏதாவது வெயிட் வைத்தால் ஒரு மணி நேரத்தில் தண்ணீர் வடிந்து கெட்டியான பனீர் கிடைக்கும். இந்தப் பனீரை வைத்து பனீர் மசாலா, பட்டர் மசாலா இன்னும் எவ்வளவோ செய்யலாம். ரசகுல்லா கூட செய்யலாம்!

திரிந்த பாலில் ரசகுல்லா !

கெட்டியான பனீரை கைகளால் நன்கு தேய்த்து உதிர்த்து விட்டு நீள ஷேப்பில் உருட்டி வைத்துக் கொள்ளவும். 1/2 டம்ளர் சர்க்கரையில் 1/2 டம்ளர் தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து சர்க்கரை கரைந்து, கொதிக்க விடவும். தளதளன்னு நன்கு கொதிக்கும் போது உருட்டிய உருண்டைகளை ஒவ்வொன்றாகப் போட்டு மேலே மிதந்து வந்தபின் அடுத்தது சேர்க்க வேண்டும். எல்லா உருண்டைகளையும் சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கினால் ரசகுல்லா சாப்பிட தயார் தான். அளவு ரொம்ப கம்மியாக இருக்குன்னு பார்க்கறீங்களா? அரை லிட்டர் பால் திரிந்தால் இவ்வளவு தாங்க வரும். இதுக்காக வேண்டுமென்றே அடுத்த முறை பாலைத் திரிய விடக் கூடாது :-)

ஹை, பார்த்தீங்களா? இப்ப ஒரு இனிப்பும் செய்ய கத்துக் கொண்டாச்சு.

இன்னொரு கொசுறு டிப்ஸ்: வடிகட்டிய பின் கிடைக்கும் தண்ணீர்தான் வே வாட்டர் எனப்படுவது. சூப் வைக்க பயன்படுத்தலாம். வயிற்றுப்போக்கு இருப்பவர்களுக்கு வே வாட்டருடன் சர்க்கரை சேர்த்து குடிக்க வயிற்றுப்போக்கு மட்டுப்படும். இந்த வே வாட்டரை 2, 3 நாட்கள் புளிக்க விட்டு, அந்த வே வாட்டரை பாலில் ஊற்றி திரிய வைத்து பனீராக்கி ரசகுல்லா செய்வது தான் பெரிய அளவில் செய்யும் சரியான முறை.

பால் பவுடர் ஸ்கிம்டு மில்க் பவுடராக (SKIMMED MILK POWDER) கொழுப்பு அதிகமில்லாமல் உடம்புக்கு நன்மை பயக்கும்.

காஃபி போட வேண்டுமென நினைப்பவர்களுக்கும் சொல்லித் தர வேண்டுமல்லவா? ஆனால் காஃபியை விட டீ தான் உடம்புக்கு நல்லது. காஃபியை அதிகம் குடிப்பது கெடுதலை உண்டாக்கும்.

காஃபி போடுவதில் 2 வகைகள் உள்ளன.

1. இன்ஸ்டன்ட் தூள் சேர்த்து காஃபி போடுவது,
2. சாதாரண காஃபித்தூளில் டிக்காஷன் போட்டு காஃபி போடுவது.

டிக்காஷன் போட்டு காஃபி போடுவதிலும் 2 வகைகள் உண்டு.

1. ஃபில்டர் காஃபி,
2. சாதாரண வகையில் போடுவது.

இன்ஸ்டன்ட் காஃபிக்கு பாலை நன்கு காய்ச்சிக் கொள்ள வேண்டும். பால் சூடாக இருக்க வேண்டும், பாலில் அதிக தண்ணீர் இருந்தாலும் காஃபி நன்றாக இருக்காது. 1 டம்ளர் காஃபிக்கு 2 1/2 தேக்கரண்டி சர்க்கரையும், ஒரு தேக்கரண்டி இன்ஸ்டன்ட் காஃபித்தூளும் தேவைப்படும். காஃபித்தூளின் அளவு அதனதன் கம்பெனி ப்ராண்டை பொறுத்து மாறுபடும். மிகவும் நைசாக இருக்கும் காஃபித்தூளும் குறைவாகவும், குருணைகாளாக (granules) இருக்கும் காஃபித்தூள் அதிகமாகவும் தேவைப்படும். நல்ல உலர்ந்த தம்ளரில் சர்க்கரையையும் காஃபித்தூளையும் போட்டு சூடான ஆடையின்றி வடிகட்டிய பாலை அதில் ஊற்றி, உடனே ஆற்றவும். நுரை பொங்க ஆற்றி, கோப்பைகளில் ஊற்றி தர வேண்டியது தான்.
எப்போதுமே காஃபியானாலும் டீயானாலும் சூடாக கொடுப்பதுதான் நல்லது. சூடு குறைவாக குடிப்பவர்கள் சிறிது நேரம் ஆற விட்டு குடிக்க முடியும். நாமே சூடின்றி கொடுத்தால் சூடாக குடிப்பவர்களுக்கு குடித்தது போலவே இருக்காது. அதேபோல் பாலாடையும் நிறைய பேருக்கு பிடிக்காது. அதனால் எப்போதும் விருந்தினர்களுக்கு கொடுக்கும் போது சூடாக, பாலாடையின்றி, நுரை பொங்க கொடுத்தால் பார்க்கும் போதே குடிக்க வேண்டுமென தோன்றும்.

இப்போதைக்கு இன்ஸ்டன்ட் காஃபி குடிச்சிட்டு அடுத்த வாரம் வரை சுறுசுறுப்பாக இருங்க. ஃபில்டர் காஃபியும் சாதா காஃபியும் அடுத்த வாரம் பார்ப்போம்.

Comments

செல்வி மேடம் எப்படி இருக்கீங்க? நீங்க சொல்லி கொடுத்துக்கிட்டு வரும் சமையல் அரிச்சுவடி பகுதி ரொம்ப நல்லா இருக்கு. சமையல் தெரியாதவங்க ஒவ்வொருவரும் இதப்பார்த்து சூப்பரான டீ, காபி போட கத்துக்குவாங்க. இப்போதைக்கு உங்களுக்குடைய டீயும், ரசகுல்லாவையும் ருசிச்சு பார்த்துட்டு சொல்றேன். நன்றி.

கஃபியிலேயே கலக்குறீங்க அக்கா,நானும் சமையலில் அரிச்சுவடி தான்,அதனால் எப்பவும் உங்கள் பதிவிற்காக வெயிட்டிங்.ஏதோ சமைத்ததில் நல்லா வந்தா குறிப்பாக கொடுப்பேன்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

ஹாய் வினு,
நல்லா இருக்கேன்.
மிக்க நன்றி. என் பெண் இப்பதான் சமைக்க ஆரம்பிச்சிருக்கா. தினமும் அவளுக்கு நான் சொல்வதை இங்கு எழுத ஆரம்பித்திருக்கேன். அவ்வளவுதான்.

அன்புடன்,
செல்வி.

அன்பு ஆசியா,
எப்படி, எப்படி? அரிச்சுவடியா? ரொம்பத்தான் தன்னடக்கம்:-)
உன்னைப் போல் அனுபவம் உள்ளவர்களுக்கும் பிடித்திருக்கிரது என்றால் மிக்க மகிழ்ச்சி. நன்றி.

அன்புடன்,
செல்வி.

செல்விக்கா டீ, காஃபிக்கெல்லாம் அளவெல்லாம் தெரியாது. ஏதோ குத்து மதிப்பா போடுவேன்:-) நல்லா சொல்லி தர்றீங்க. உங்க அடுத்த பில்டர் காஃபி பகுதிக்காக ஆவலுடன் வெயிட்டிங்.

டியர் செல்விமேடம்,
உங்களுடைய எழுத்துக்களையெல்லாம் பார்க்கும் போது, நீங்க ரொம்ப சுறுசுறுப்பான , பொறுமையான, அனுபவசாலி என்று தோணுது. அன்புள்ள செல்வியக்காவில் ரொம்ப அனுபவமாக பதில் சொல்லியிருக்கீறீர்கள். சமையல் அரிச்சுவடி - ஒரு தொடர். உங்களுக்கு எப்படி நேரம் கிடைக்கிறது? அதையும் கொஞ்சம் சொல்லுங்களேன். அதையும் முயன்று பார்க்கிறேன்.

Save the Energy for the future generation

டியர் செல்வி மேடம், ஒரு சின்ன டவுட் டீத்தூள் போட்டபின் பால் திரிந்துவிட்டால் அதனை ரசகுல்லா செய்தால் டீத்தூள் மணம் வருமே! என்ன செய்வது என்று சொல்லுங்களேன்.

Don't Worry Be Happy.

ரசகுல்லா நான் இதுவரை முயற்சித்ததில்லை..தோழிகள் நம்ம ஊர் பாலில் செய்தால்தான் நன்றாக வரும் என சொல்வார்கள்.அதனால் முயற்சிக்கவில்லை..
கேன் மில்க்கில் செய்யலாமா? என சொல்லுங்கள்
அன்புடன்
இளவரசி

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

திரிந்த பாலில் தான் செய்ய சொல்லி உள்ளார்கள் இளவரசி. பால் திரிகிற வரைக்கும் பொறுமையாக இருங்கள்.

Save the Energy for the future generation

செல்வி அக்கா ரசகுல்லா செய்ய தெரியாமல் எவ்வள்வு பாலை வீனாக்கியிருக்கென்[ஒரெ பீலிங்க இருக்கு இது முதல்லே தெரிந்தால் ஒரு சுவீட் கடையே ஓபன் பன்னி இருப்பேனே]

all is well

hai selvi akka,

pal thirinju poiruchunna cha nu ethana time kettu poiruchunu waste paniruka, ini kandipa waste pana matanla... rasagullah senju asatheran..... hehheehhe

இருப்பதின் அருமை இல்லாத பொழுது தெரியும்.

அன்புடன்
லதாவினீ.

அன்பு வின்னி,
நலமா?
நிறைய பேர் அப்படித்தான். நிதானத்திலேயே சரியாக செய்து விடுவார்கள். அடுத்த பகுதி விரைவில் வரும்.

அன்புடன்,
செல்வி.

அன்பு இந்திரா,
சுறுசுறுப்பு - ஓரளவு.
அனுபவம் - நிறைய இருக்கு.
பொறுமை - 90%
நேரம் இரவில் தான். தூக்கத்தை சிறிது குறைத்துக் கொள்வேன் முடிந்த நாட்களில். பகலில் வேறு வேலைகள் செய்யும் போது யோசித்து வைத்துக் கொள்வேன். இத்தனை நாட்களுக்குள் ஒரு வேலையை முடிக்கணும்னு மனசுக்குள் நினைத்தால், அதற்குள் முடித்தாகணும் எனக்கு:-)
அது தான் எனக்கு பிளஸ், மைனஸ் இரண்டும்.

அன்புடன்,
செல்வி.

அன்பு ஜெயலட்சுமி,
டீத்தூள் போட்டபின் திரிந்தால் ஒன்றும் செய்ய முடியாது. போடாமல் வெறும் பால் திரிந்தால் மட்டுமே ரசகுல்லா செய்யலாம்.

அன்புடன்,
செல்வி.

அன்பு சுந்தரமதி,
ஃபீலிங் வேண்டாம்... போனது போகட்டும். இனி ஸ்வீட் கடை ஓப்பன் செய்து விடலாம். (ஏன் அவ்வளவு பால் வீணாகிறது? எங்கே தவறு?)

அன்புடன்,
செல்வி.

அன்பு லதா,
இனி ரசகுல்லா செய்து அசத்துங்க.

அன்புடன்,
செல்வி.

செல்வி மேடம் எப்படி இருக்கீங்க..?
இதுதான் உங்களிடம் பேசுவது முதல் தடவைன்னு நினைக்கிறேன்.
தத்துபிள்ளைக்கும் புரியும் வண்ணம் உங்கள் ஒவ்வொரு எழுத்துக்களும் உள்ளது.
நிஜமாவே இதை சொல்வதற்க்கும் தனி திறமையும்,பொறுமையும் மிக அவசியம்.
உங்களை போன்றவர்களிடம் தான் நிறைய கற்றுக் கொள்ளவேண்டியது இருக்கும்.
உங்கள் எழுத்து என்னை மிகவும் கவர்ந்து விட்டது.
நமக்கு தெரிந்த விஷயங்களே சில இருந்தாலும் படிக்கும் போதே ரசிக்காமல் இருக்க முடியவில்லை.(நானே காஃபி பைத்தியம் ஃபில்டர் காஃபி பற்றி சொல்லவும் நாவில் எச்சி ஊறாமல் இருக்குமா என்ன..?)
உங்கள் சமையலறையில் நாங்களும் உங்களோடு வலம் வருகிறோம்.
சரியா செல்வி மேடம்?

என்றும் அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

அன்பு அப்சரா,
நலமா? ஆமாம், நாம் பேசுவது இது தான் முதல் முறை. எல்லோரிடமும் பேச எனக்கு ஆசைதான். நேரப்பிரச்னை பெரிய பிரச்னை எனக்கு.

என் எழுத்து உன்னைக் கவர்ந்துள்ளமைக்கு நன்றி.
நீங்கல்லாம் என்னுடன் வந்தால் தானே எனக்கும் எழுத ஆர்வம் வரும். பத்திரமாக அழைத்துச் செல்வேன். பயப்படாமல் வரலாம்:-)

பதிவில் சொல்ல மறந்த விஷ்யம். காஃபி ரொம்ப அதிகம் குடிக்கக் கூடாது. உடலுக்கு கெடுதல், அதற்கு டீ பெட்டர்.

அன்புடன்,
செல்வி.

செல்வி[செல்வின்னு சொல்லலாமா?[ மெடம் போடனுமா அபிடின்னு கூப்பிடா ரொம்ப இடைவெளி இருக்கிரமாதிரி இருக்கு பா]எனக்கு ஒரு சமையல் மெனு டைம்டேபிள் கொடுக்க முடியுமா? தினம் ரோடி,சப்ஜி,இட்லி,ச்ட்னி போர் பா .எனக்கு காம்பினெசன் தெரியாது அதாவது சாதம்+வத்தக்குழம்பு+அப்பள்ம் இந்த மாதிரி வெஜ்ல குடுங்கபா நான் வெஜ் சாப்பிட மாட்டோம் பா ஒரு நியு த்ரெட் வெனும்னானும் ஓபன் பன்னுங்க எல்லோரும் வந்து அவங்கலுக்கு டெரிந்ததை சொல்லட்டும் [ இந்த குரிப்பு என்னை மாதிரி குழ்ம்பி இருப்பவர்கலுக்கு பயன் படும்]

all is well

selvi akka one doubt. vadi katina thanneer way water nu solringaley ethanai vadi katina thaneer. koncham detail please. enaku puriyala. or indha thirintha paalil vadikaina thaneerai next time paneer seiya use pana solringala

பொறுமையையும் தொழுகையையும் கொண்டு இறைவனிடம் உதவி தேடுவோம். நிச்சயம் அவனே மிகச் சிறந்த‌ கொடையாளன்.

ஹாய் செல்விம்மா...
நல்லா இருக்கிங்களா....உங்க குறிப்பை பார்த்து முறுக்கு செஞ்சேன்...ரொம்ப நல்லா வந்தது... முதல் தடவை செய்யும் போதே நல்லா வந்தது...ரொம்ப தேங்க்ஸ் மா.....எனக்கு இன்னொரு ஹெல்ப்..என்னோட குட்டி பையனுக்கு வாங்கின லக்டோஜென் அப்படியே மீதி ஆகிடுச்சு...என்ன பண்ணறதுன்னு தெரியல....plz அத வச்சு என்ன பண்ணலாம்னு சொல்லுங்கம்மா....

SaranyaBoopathi

அன்பு சுந்தரமதி,
செல்வின்னே கூப்பிடலாம்.
நான் தனியா நியூ த்ரெட் ஓப்பன் செய்து இப்ப சொன்னால் அது எங்கேயோ போயிடும். ஆரம்பத்தில் இருந்து சொல்வதால் இத்தொடரில் அதைப் பற்றியும் சொல்லப் போகிறேன். கொஞ்சம் வாரம் ஆகும். அதுவரை பொறுத்துக்கலாம், அல்லவா?

அன்புடன்,
செல்வி.

அன்பு பாத்திமா,
வே வாட்டர் எனப்படுவது, பால் திரிந்தபின் கட்டியான பனீரை வடிகட்டி எடுத்தபின் எஞ்சி நிற்கும் தண்ணீரே.
அந்த தண்ணீரை எடுத்து வைத்து லேசாக புளித்ததும், அதை ஊற்றி புதிய பாலை திரிய வைத்து ரசகுல்லா செய்தால் ரொம்ப சாஃப்ட்டாக வரும்.

அன்புடன்,
செல்வி.

அன்பு சரண்யா,
நல்லா இருக்கேம்மா. நீ நலமா?
முறுக்கு நல்லா வந்தது குறித்து மிக்க மகிழ்ச்சி.
லக்டோஜென் வைத்து கூட மைதா கலந்து குலோப்ஜாமூன் செய்யலாம். மைதாவும், பால்பவுடரும் சேர்த்து பர்பி போலவும் செய்யலாம். பாயசம் செய்யும் போது கரைத்து ஊற்றி கொதிக்க விட்டால் நன்றாக இருக்கும்.

அன்புடன்,
செல்வி.

Selvi akka thank you for your reply.

பொறுமையையும் தொழுகையையும் கொண்டு இறைவனிடம் உதவி தேடுவோம். நிச்சயம் அவனே மிகச் சிறந்த‌ கொடையாளன்.

ஹாய் செல்விம்மா..
ரொம்ப நன்றி ம்மா...நீங்க சொன்னத கண்டிப்பா முயற்சி செஞ்சு பாக்கறேன்

SaranyaBoopathi

செல்வி மேடம். நான் அறுசுவைக்கு புதுசு. உன்மையா எனக்கு சமயல் பத்தி ஒன்னுமே தெரியாது. இந்த ஆரம்ப நிலைக்கு இது ரொம்பவே பயன் உள்ளதா இருக்கு.Thank you so much madam...

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

Informations are very excellent, continue your service, even i giving this information to my mother in India,

செல்வி மேடம்

நான் அறுசுவைக்கு புதுசு. நீங்கள் கொடுத்த சமையல் அரிச்சுவடி எல்லோருக்கும் உதவும். நீங்கள் எங்கே வசீக்கிறர்கள்.

கலைதியாகு

Hi madam,

i need the easy preparation method for kara kulambu, sambar and rasam