பட்டிமன்றம் - 24 : குடும்பத்தில் பொறுப்பு அதிகம் யாருக்கு? கணவனுக்கா? மனைவிக்கா?

அன்பார்ந்த அறுசுவை தோழிகளே மற்றும் தோழர்களே வருக! வருக!

உங்களை இப்பட்டிமன்றத்திற்கு வரவேற்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்.

இந்த பட்டிமன்றத்தின் தலைப்பு :
******************************

**************************************************************************
குடும்பத்தில் பொறுப்பு அதிகம் யாருக்கு? கணவனுக்கா? மனைவிக்கா?
**************************************************************************

”நல்லதொரு குடும்பம் பல்கலைக் கழகம்” என்ற பாடலை அனைவரும் கேட்டிருப்பீர்கள். இந்த பாடலுக்கு ஏற்ப ஒரு குடும்பத்தை பல்கலை கழகமாக மாற்றும் பொறுப்பு யாருக்கு அதிகம்.

குடும்பத்தின் கதாநாயகன் - கணவருக்கா ?

குடும்பத்தின் கதாநாயகி - மனைவிக்கா?

”போற்றுவார் போற்றட்டும் தூற்றுவார் தூற்றட்டும் ஏற்றமிகுக் கருத்து என்னுடையது என்றால் எடுத்துரைப்பேன் நான்” என்று உங்கள் வாதங்களை அள்ளி வீசுங்கள்.

நான் தான் முதல்ல

அப்பறமா சொல்றேன் எந்த பக்கம்னு.

நடுவராக பொறுப்பேற்ற ஹேமாவுக்கு வாழ்த்துக்கள்!

இந்த பட்டி வெற்றி பெற வாழ்த்துக்கள். அதிகமாக பேசுக்கூடிய தலைப்பு தேர்ந்தெடுத்துள்ளீர்கள்!

ரம்ஜான் கொண்டாட்டத்திலனால் முடிந்த அளவு வர முயற்சிக்கிறேன்.

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

ஹேமா வாழ்த்துக்கள் பட்டிமன்றம் சிறப்பாக செல்லவாழ்த்துக்கள், சீக்கரமா வதங்களோடு வருகிறேன், அதற்க்குமுன் அருமையான தலைப்பு, தலைப்புக்கு வாழ்த்துக்கள்.

அன்புடன்
நித்யா

ஆஹா! அருமய்யா! அருமை!

ஆனா நான் எந்தபக்கம் நேக்கு தெர்லை!

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

நல்லாருக்கீங்களா? முதல்முறையா பட்டி ஆரம்பிச்சுருக்கீங்க போலருக்கே, ரொம்ப சந்தோஷம். வாழ்த்துக்கள். எல்லாரும் நல்லா வந்து வாதிட்டு ஜாலியா சண்டை போடாம கருத்துக்கள பரிமாறிக்கொள்ள என் வாழ்த்துக்கள்... எனக்கு பட்டில பேசல்லாம் தெரியாது அதனால எப்பவும் போல எல்லாரோட கருத்துக்களையும் படிச்சுட்டு அப்டியே எஸ்கேப் ஆகிக்கரேன்...

மீண்டும் பேசலாம்...

இருப்பதின் அருமை இல்லாத பொழுது தெரியும்.

அன்புடன்
லதாவினீ.

என் அன்புத் தோழி நடுவர் ஹேமாக்கு என் வாழ்த்துக்கள். நடுவர் அவர்களே இப்ப நைட்டுக்கு பவர் குடுத்திருக்காங்க. நான் கரெண்டு இருக்குவரை வாதத்திற்கு வருகிறேன். பவர் கட் ஆனால என்னால் வரமுடியாது. நான் " குடும்பத்தில் அதிக பொறுப்பு பெண்களுக்கே " என்ற தலைப்பில் பேச வந்துள்ளேன். வாதங்களுடன் வருகிறேன்.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

பட்டிமன்றத்தை ஆரம்பித்து வைத்த ஹேமா அவர்களுக்கு எனது மேலான பாராட்டை தெருவித்து கொள்கின்றேன்.

குடும்பத்தில் அதிக பொறுப்பு பெண்களுக்கே என்னும் தலைப்பில் வாதாட வந்துள்ளேன்.

இல்லற வாழ்க்கையைப் பற்றிப் பெரியவர்கள் அறிவுறுத்தும்போது அன்பும், அறனும் சேர்ந்தால்தான் வாழ்க்கை பண்பும் பயனுமாக இருக்குமென்று சொல்வார்கள். பண்பும் பயனுமான இல்வாழ்க்கையில் இன்றைய காலத்தில் பொருளாதாரமும் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது.

ஒரு ஆண் திருமணத்திற்கு முன்பு தனியாக இருக்கும்போது தன் தேவையை மட்டும் கவனித்துக்கொள்வது, அனாவசியச் செலவுகள் செய்வது என்று பழக்கப்பட்டு விடுகிறான். அவனுக்குத் திருமணமென்று நேர்ந்து குடும்பப் பொறுப்புகள் கூடும் போது கண்ணைக் கட்டி காட்டில் விட்டதாக புது பொறுப்புகளை எதிர் கொள்கிறான். என்னதான் படித்திருந்தாலும் குடும்பத்தை நிர்வாகம் செய்வது எப்படி என்பதை ஒரு தனிப்பாடமாக இன்னும் கட்டாய கல்வியில் கொண்டு வரவில்லைதானே?! ஆனால் பெண்கள் அப்படி இல்லாமல் திருமணத்திற்கு முன்பிருந்தே தன் தாய்- தந்தையின் வாழ்வை கூர்ந்து கவனிப்பவளாக இருந்து, தந்தைக்கு கணக்கு வழக்குகளிலும், தாயாருக்குக் குடும்ப நிர்வாகத்திலும் உதவியாகப் பங்கேற்று பொறுப்புடன் தலைப்பட தொடங்கிவிடுகிறாள். அவளுக்குத் திருமணமாகி போன பிறகு தன் கணவன் ஈட்டி வரும் வருமானத்திற்குள்ளாக செலவு செய்து செவ்வனே குடும்பம் நடத்த இந்த அனுபவம் அவளுக்குத் துணையாக இருக்கிறது.

இது ஒரு உதாரணம்தான். இன்னும் நிறைய சொல்லலாம் நடுவர் அவர்களே! மீண்டும் வருவேன்

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

"மங்கையராய் பிறப்பதற்கே மாதவம் செய்திட வேண்டும்" தாயாய், தாரமாய், சகோதரியாய்,மகளாய்,பாட்டியாய்,உற்ற தோழியாய் இப்படி எல்லாவித அவதாரங்களையும் எடுத்து ஒரு குடும்பத்தின் விடிவெள்ளியாய் குத்துவிளக்காய் இருப்பவள் பெண்தான். இதில் எள் முனையளவும் சந்தேகமில்லை. ஒரு குடும்பத்தில் ஒரு ஆண் சரியில்லையென்றால் அக்குடும்பம் பொருளாதார சூழ்நிலையால் மட்டுமே கஷ்டப்படும். ஆனால், ஒரு பெண் சரியில்லையென்றால் அந்த வம்சமே அழிந்து போகும் ஆபத்து உள்ளது.

பொருளாதார சூழ்நிலையில் ஆண்களை சார்ந்திருந்தெல்லாம் அக்காலம். இந்த காலத்தில் பெண்கள் துணிந்து அனைத்து துறைகளிலும் வெற்றிக் கொடி நாட்டி வருகிறார்கள். ஆண்களுக்கு நிகராக சொல்லப்போனால் அவர்களால் முடியாததை கூட சாதித்து வருகிறார்கள்.

ஒரு குடும்பத்தில் மனைவி இறந்துவிட்டால் அடுத்த நாளே கணவன் புது மாப்பிள்ளை. ஆனால் கணவன் இறந்துவிட்டால் எந்த பெண்ணும் இன்னொருவனை மனதால் கூட நினைத்து பார்க்க மாட்டாள். தன் குழந்தைகளுக்காக வீட்டு வாசற்படியை தாண்டாதவள் கூட வேலைக்கு சென்று குழந்தைகளை காப்பாற்ற நினைப்பாள். ஒரு ஆண் செய்ய வேண்டிய அனைத்து கடமைகளையும் செவ்வனே செய்து முடிப்பாள்.

பிறந்தவுடன் தன்னைப் பெற்ற பெற்றோர்களுக்காக தன் ஆசாபாசங்களை துறப்பாள். திருமணத்திற்கு பிறகு கணவனுக்காக துறப்பாள். பிள்ளைகள் பெற்ற பிறகு பிள்ளைகளுக்காக துறப்பாள். இப்படி ஒவ்வொரு கட்டத்திலும் துறந்து துறந்து ஆசாபாசாங்கள் இல்லாத துறவி போல் வாழ்வாள். தனக்கென எந்த ஆசையையும் வைத்துக் கொள்ளாத சுய நலமில்லாத தியாகத்தின் மறுவுருவம் தான் பெண். அதனால் தாய் நாடு என்கிறார்கள். ஓடும் நதிகளுக்கெல்லாம் பெண்ணின் பெயரையே வைத்துள்ளார்கள். பொறுமையின் சிகரமாக விளங்குவதால் தான் நம்மை தாங்கும் நிலத்தையும் பூமி மாதா என்று அழைக்கிறார்கள்.

பத்து ஆண்கள் இருந்தும் பிரகாசமில்லாத ஒரு வீடு பெண் ஒருத்தி இருப்பாளானால் அந்த வீடே மங்களகரமாக காட்சியளிக்கும். ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னாலும் ஒரு பெண் இருப்பாள்.பெண் என்பவள் அவளுடைய பெற்றோரிடத்தில் இருக்கும் போது அவர்களின் கஷ்டங்களையும் பங்கு போட்டுக் கொண்டு ஒரு ஆண்பிள்ளைக்கு மேலாக இருக்கிறாள். இன்றைய நவீன யுகத்தில் யாரும் பெண் குழந்தைகள் வேண்டாம் என்று சொல்வதில்லை. ஒரு ஆண் செய்யும் அனைத்து கடமைகளையும், தான் புகுந்த வீட்டிற்கு சென்ற பிறகும் செவ்வனே செய்கிறாள். ஒரு சகோதரியாய் தன்னுடன் பிறந்தவர்களை படிக்க வைத்து அவர்களுக்கு திருமணமும் செய்து வைக்கிறாள். திருமணத்திற்கு பிறகு தன் கணவனின் கஷ்ட நஷ்டங்களில் தானும் பங்கெடுத்து கொள்கிறாள். பிறகு பத்து மாதம் பத்தியமிருந்து பிள்ளையை பெற்றெடுத்து இரவு பகல் கண்ணயராது பேணி வளர்க்கிறாள்.

ஒரு பேச்சிலர் ரூமை எடுத்துக் கொள்ளுங்கள். அவர்கள் அணியும் ஆடைகள் ஒருபுறம் உள்ளாடைகள் ஒருபுறம் படித்த புத்தகங்கள்,ஹோட்டலில் இருந்து வாங்கி உண்ட உணவு பொட்டலங்களின் குப்பைகள், சிகரெட் மற்றும் இன்னபிற பொருட்கள் ரூமுக்குள் காலடி எடுத்து வைக்க சகிக்காத அளவுக்கு இருக்கும், அவனுடைய ஆண் நண்பர்கள் யாருக்கும் அந்த அறையை ஒழித்து சுத்தம் செய்ய வேண்டும் என்று தோன்றாது. அவனுக்கு ஒரு பெண் தோழியாக இருந்தால் அவள் அந்த இடத்திற்கு வந்த அடுத்த நிமிடமே அவ்விடத்தை கோவிலாக மாற்றுவாள்.மீன் குஞ்சுக்கு எப்படி நீந்த கற்றுத் தரத்தேவையில்லையோ அது போல ஒரு பெண்ணுக்கும் பொறுப்புகளை பற்றி சொல்லித் தரத் தேவையில்லை. அது அவளுடைய இரத்ததிலேயே ஊறி இருக்கும்.

ஆணிடம் ஒரு நூறு ரூபாய் இருந்தால் அதை எப்படியெல்லாம் செலவழித்து சந்தோஷப்படலாம் என்றுதான் யோசிப்பான். ஆனால் பெண்ணிடம் ஒரு பத்து ரூபாய் இருந்தாலும் அதை எப்படி எல்லாம் சேர்த்தால் நூறு ரூபாய் ஆக்கலாம் என்று யோசிப்பாள். கணவனிடம் தினமும் இல்லை இல்லை என்று சொல்லியே தன்னுடைய பெண்ணின் திருமணத்திற்கு ஆகும் பணத்தை சேமித்து வைப்பாள். நான்கு பெண்கள் சேர்ந்தால் அங்கு வீண் பேச்சு தான் நடக்கும் என்பது அந்தக்காலம். இந்த காலத்து பெண்கள் நான்கு பேர் சேர்ந்தால் தொழிலைப் பற்றியோ, சீட்டு பிடிப்பது பற்றியோ, படிப்பை பற்றியோ தான் பேசிக் கொள்கிறார்கள்.

இன்று நிறைய நிறுவனங்களில் பார்த்தீர்களானால் ஆண்களை விட பெண்களையே வேலைக்கு எடுக்கிறார்கள். ஏனென்றால், பெண்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட பணியை பொறுப்புடனும், சிரத்தையுடனும் செய்து முடிப்பார்கள். ஆண்கள் டீ டைம் என்று ஒன்றை எடுத்து கொண்டு வேலை நேரத்தில் அரட்டை அடித்துக் கொண்டும், தம் அடித்தும் கொண்டும் இருப்பார்கள்.அது மட்டுமன்றி பெண்கள் வளைந்து கொடுக்க வேண்டிய இடத்தில் வளைந்து கொடுத்தும், நிமிர வேண்டிய இடத்தில் நிமிர்ந்தும் சென்று இடத்திற்கு தக்கபடி நடந்துக் கொள்வார்கள். ஆண்கள் எடுத்தோம், கவிழ்த்தோம் என்று முதலுக்கே மோசம் வைத்துக் கொண்டு பின்னாளில் புலம்பிக் கொண்டிருப்பார்கள்.அதற்குத்தான் "பெண் புத்தி பின் புத்தி" என்று சொன்னார்கள். பின் புத்தி என்றால் துன்பம் வந்தபிறகு யோசிப்பவர்கள் என்று அர்த்தம் கொள்ள வேண்டாம் நடுவர் அவர்களே. பின் என்றால் சேப்டி பின். அந்த பின்னின் கூர்மையை போன்றது பெண்களின் அறிவுக் கூர்மை. :)

எனக்கு முதல் பிரசவத்தில் இரட்டை குழந்தைகள் பிறந்தன. அவை வயிற்றில் இருக்கும் போதே, இரண்டும் ஆண் குழந்தையாக இல்லாவிட்டாலும் ஒன்றாவது ஆண் குழந்தையாக இருக்க வேண்டும் என்று விரும்பினேன். நான் பிரசவத்தின்போது தங்கியிருந்த அறையை சுத்தம் செய்ய ஒரு ஆயா வந்திருந்தார். எனக்கு ஒரு பெண் ஒரு ஆண் பிறந்ததை பார்த்து, அவருக்கும் இரண்டு பிரசவத்திலும் அடுத்தடுத்து இரட்டை ஆண்குழந்தைகளாக 4 குழந்தைகள் இருப்பதாக சொன்னார். நான் ஆண் குழந்தையை விரும்புவதை தெரிந்து கொண்டு அவர் ஒரு பேச்சுக்காக என்னிடம், "என் நான்கு ஆண் குழந்தைகளையும் நான் உனக்கு தருகிறேன். நீ உன்னுடைய ஒரு பெண் குழந்தையை தந்துவிடு" என்று கேட்டார். இதிலிருந்து நமக்கு தெரியவில்லையா? பெண்ணின் மகத்துவத்தைப் பற்றி.

ஆண் தனக்கு திருமணம் ஆனவுடன் தன் குடும்பம், தன் பிள்ளைகள் என்று பெற்றோரை தவிக்க விட்டு சென்று விடுவான். இன்னொருத்தனுக்கு வாழ்க்கைப்பட்டு போன பிறகும் தன்னை பெற்றவர்களை கஷ்டப்பட விடாமல் கடைசி காலம் வரை காப்பது பெண்கள் தான்.

உன் கண்ணில் நீர் வழிந்தால்
என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி
என் கண்ணில் பார்வையன்றோ
கண்ணம்மா என்னுயிர் நின்னதன்றோ

உன்னை கரம் பிடித்தேன்
வாழ்க்கை ஒளிமயமானதடி
பொன்னை மணந்ததனால்
சபையில் புகழும் வளர்ந்ததடி

காலச் சுமைத்தாங்கி போலே
மார்பில் எனைத்தாங்கி
வீழும் கண்ணீர் துடைத்தாய்
அதில் என் இன்னல் மறையுமடி
ஆலம் விழுதுகள் போல்
உறவு ஆயிரம் வந்துமென்ன
வேறென நீயிருந்தாய்
அதில் நான் வீழ்ந்துவிடாதிருந்தேன்.

முள்ளில் படுக்கையிட்டு
இமையை மூடவிடாதிருக்கும்
பிள்ளை குலமடியோ எனை பேதமை செய்ததடி
பேருக்கு பிள்ளையுண்டு
பேசும் பேச்சுக்கு சொந்தமுண்டு
என் தேவையை யார் அறிவார் உன்னை போல்
தெய்வம் ஒன்றே அறியும்.

நடுவர் அவர்களே, இந்த பாடலை ஒரு பெண் பாடவில்லை. நொந்து போன ஒரு குடும்பத் தலைவன் பாடியுள்ளான். இதைவிட பெண்ணின் சிறப்பை, பொறுபை,பண்பை,பாசத்தை சொல்ல வார்த்தைகளும் வேண்டுமோ? எனக்கு இந்த பாடலில் எந்த வரிகளை எடுப்பது, எதை விடுப்பது என்று தெரியவில்லை. முழு பாடலும் பெண்ணின் பெருமையை அருமையாக எடுத்துரைக்கிறது. அதனால் முழுமையாக போட்டுவிட்டேன். :)

மீண்டும் பெண்ணாய் பிறப்பேன் !

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

வாவ்... கைத் தட்டுற சத்தம் கேக்குதா கல்பனா மேடம்...

ரொம்ப அருமையா பெண்ணைப் பற்றிச் சொல்லி இருக்கீங்க...

ரொம்ப ரசிச்சிப் படிச்சேன்

நட்புடன் ராதிகா

நடுவரே உங்களுக்கு முதலில் என் நன்றி. என்னைக் கைவிட்டு விடாமால் கைகொடுத்து உதவுனீங்களே அதுக்குத்தான் நன்றி :)

அய்யகோ என்ன கொடுமை. என் சகோதரர்கள் சார்பாக பேச யாருமே இல்லையா... இதோ நான் வருகிறேன் கவலை வேண்டாம் சகோதரர்களே! குடும்பத்தில் அதிகம் பொறுப்பானவர்கள் ஆண்கள்தான் என்ற தலைப்பில் வாதாடப் போகிறேன் :)

இன்றைய கால கட்டத்தில் பெண்களின் தியாகங்கள்(?!) வெளிச்சம் போட்டு காண்பிக்கப் படுகின்றன. அதனாலேயே அவர்கள் பொறுப்பானவர்கள் போன்ற தோற்றம் இருக்கிறது. ஆனால் இந்த அப்பாவி ஆண்கள் இருக்கிறார்களே அவர்களின் தியாகங்கள் எல்லாமே மறக்கப் படுகின்றன. அவன் மெழுகுவர்த்தியாக மற்றவர்களுக்கு வெளிச்சம் கொடுத்து தான் உருகுகிறான்.

ஒரு சின்ன விஷயம். நம்ப ஊர்ல எந்த பண்டிகை வரட்டும் மனைவியும் மக்களும் பட்டும் ஆடம்பர ஆடைகளும் கணவனை அரித்து வாங்கிக் கொள்வார்கள். அந்த அப்பாவி ஜீவன் கணவன் மட்டும் ஒரு டி ஷர்ட் அல்லது கைலி வாங்குவதோடு நிறுத்திக் கொண்டு பொறுப்பாக பட்ஜெட்டில் துண்டு விழாமல் பார்த்துக் கொள்ளும். அதற்காக அந்த அப்பாவியை தலையில் தூக்கி வைத்து கொண்டாட வேண்டாம் அட்லீஸ்ட் காயப்படுத்தாமலாவது இருக்கலாம் இல்லையா. என்ன வாங்கிக் கொடுத்தலும் திருப்தி வராது. அதிலும் ஆயிரம் நொட்டை நொள்ளை சொல்றது...உங்களை கட்டிக்கிட்டு நான் என்ன சுகத்தை கண்டேன். எல்லாம் என் ராசின்னு முகத்தி தோளில் இடித்து ஒரு வெட்டு வெட்டிட்டு போவாங்க.

அடுத்து அவ வீட்டுல அது இருக்கு இது இருக்கு நமக்கும் வாங்கணும்னு சொல்லி நச்சரித்து வாங்குவது பெரும்பாலும் பெண்கள்தான். நமக்குத் தேவையா நம் பட்ஜெட் இடம் கொடுக்குமா அதெல்லாம் கவலையில்லை. அவ வீட்டுல இருக்கு அது நம்ம வீட்டுலயும் இருக்கணும். கணவன் எதிர்த்து ஏதாச்சும் சொல்லிட்டா போது அவ்வளவுதான் "உங்களை கட்டிக்கிட்டு...." அப்படீன்னு பல்லவி பாட ஆரம்பிச்சுடுவாங்க.

பல பொறுப்பான கணவர்கள் இந்த பல்லவிக்கெல்லாம் அசைந்து கொடுக்க மாட்டாங்க. அவர்களுக்கு குடும்ப பொருளாதார சூழல் தெரியும் . அதனால் கடன் வாங்கியெல்லாம் மனைவியின் ஆசையை நிறைவேற்ற மாட்டான். ஆனா அப்படிப்பட்ட கணவனுக்கு சமூகம் கொடுக்கும் பட்டம் கல் நெஞ்சுக் காரன், மனைவியின் ஆசையை மதிக்கத் தெரியாதவன், கஞ்சன், கல்லுளிமங்கன்... மக்களே ஒரே ஒரு நிமிஷம் யோசிங்க. ஒருத்தன் பொறுப்பானவனாக இருப்பது அம்பூட்டு பெரிய குற்றமா?!

கொஞ்சம் இளகிய மனசுக் கணவன் மனைவி ஆசைப்படறாளேன்னு கடன் வாங்கியாவது அதை நிறைவேற்றிக் கொடுப்பான். கடன் சுமை தலைக்குமேல் போய் கழுத்தை நெறிக்கும் போதும் கணவனைத்தான் குற்றம் சொல்லுவாங்க. அவதான் கேட்டான்ன அவனுக்கு புத்தி எங்க போச்சும்பாங்க :(.

அப்புறம் இன்னொரு முக்கியமான விஷயம் மனைவி வேலைக்குப் போகாமல் வீட்டில் இருந்தால் யாரும் அவளை குற்றம் சொல்வது இல்லை. அவளுக்கு சம்பாதிக்க வேண்டும் என்ற பொறுப்பு கிடையாதாம். ஆனால் ஒரு கணவன் வேலைக்குப் போகலைன்னா இந்த சமூகம் சும்மா விடுமா? அந்த பொறுப்பு கணவனுக்க்த்தானாம். குடும்பத்தின் பொருளாதாரத்தேவையை சமாளிப்பது கணவனின் பொறுப்பாம். அதை பெரும்பாலான கணவர்கள் செவ்வனே செய்கிறார்கள். பெண்களும் வேலைக்குப் போய் பொறுப்பை பகிர்ந்து கொள்கிறார்கள் இல்லைன்னு சொல்லலை. ஆனால் அப்படி பகிர்ந்து கொள்ளாதவர்களை யாரும் பொறுப்பிலாதவள்னு சொல்வதில்லை. ஆனால் ஒரு கணவன் ஏதோ சூழ்நிலை காலம் சில நாட்கள் சம்பாதிக்க முடியவில்லை என்றால் குடும்பத்தில் அவன் நிலைமை என்னவாக இருக்கும்? மனைவி சம்பாதித்து கணவன் வீட்டில் இருந்தால் அவன் நிலைமை என்னவாக இருக்கும்? இது என்ன ஆணுக்கு ஒரு நியாயம் பெண்ணுக்கு ஒரு நியாயம்?

காலம் காலமாக பெண்களே பொறுப்பானவர்கள் போன்ற ஒரு மாயத்தோற்றம் உருவாக்கி வைக்கப் பட்டிருக்கிறது. இன்று பல வீடுகளில் உள்ள மாமியார் மருமகள் பிரச்சினைகளுக்கு காரணமே பெண்கள்தான். வரதட்சிணை கொடுமைகளுக்கு காரணம் பெண்கள்தான். இவர்களா குடும்பத்தில் பொறுப்பானவர்கள்?

ஆனந்த விகடனில் டாக்டர் ஷாலினி எழுதும் "உயிர் மொழி" தொடர் படிச்சிருக்கீங்களா? உலகிலுள்ள உயிரினங்கள் எல்லாம் தன் குழந்தைகள் தானே இயங்கும் பருவம் ஆரம்பித்த உடன் தாய் அந்த குட்டியை தனியே அனுப்பி விடும். ஆனால் மனித தாய் மட்டும்தான் தன் குழந்தை எத்தனை பெரிதாக வளர்ந்தாலும் தன் கட்டுக்குள்ளேயே வைத்து சுயமாக செயல்பட விடாமல் செய்கிறார்களாம். இன்று பல கணவன் மனைவிக்கு இடையே வரும் பிரச்சினைகளுக்கு காரணமே இப்படிப்பட்ட தாய்கள்தான்னு சொல்றாங்க. அப்புறம் குடும்பத்தில் பெண்கள்தான் பொறுப்பானவர்கள்னு எப்படி சொல்ல முடியும்?

எல்லாத்தையும் விட கொடுமை கள்ளிப்பால் ஊற்றி பெண் குழந்தைகளைக் கொல்வதும் பொறுப்பான பெண்கள்தான். என்னே பொறுப்பு என்னே பொறுப்பு :(

//ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னாலும் ஒரு பெண் இருப்பாள்.//

அதே மாதிரி ஒவ்வொரு பெண்ணின் வெற்றிக்குப் பின்னும் ஒரு ஆண் இருப்பான். ஆனால் மக்கள் ஏனோ அதை சுலபமாக மறந்து விடுகிறார்கள். இதுதான் ஆண்கள் வாங்கி வந்த சாபம். என்றுமே அவனது தியாகங்கள் வெளிச்சத்திற்கு வருவதில்லை.

பாலைவனத்தில் கொடும் சூட்டில் ரத்தத்தை வியர்வையாக சிந்தி உழைக்கும் பணத்தை ஊருக்கு அனுப்பி வைக்கிறான். சகோதரிகளுக்கு திருமணம் செய்து வைக்கிறான். மனைவி மக்களுக்கு தேவையானதை செய்து கொடுக்கிறான். அவன் பொறுப்பானவன் இல்லையா? ஊஇல் இருக்கும் மனைவியும் கஷ்டப்படுகிறாள் இல்லையென்று சொல்லவில்லை. ஆனால் அவளுக்காவது தோள்சாய சுற்றம் குழந்தைகள்னு பக்கத்திலேயே இருக்காங்க. ஆனா தன்னந்தனியே வெளிநாட்டில் வெந்து கொண்டிருக்கும் ஆணின் தியாகங்கள் கஷ்டங்கள் வெளிச்சத்திற்கு வருவதில்லை. ரொம்ப சிம்பிளாக சொல்லி விடுவார்கள் குடும்பத்துக்குத்தானே செய்தான்னு.

எல்லாத்தையும் நான் தான் கவனிச்சுகறேன்னு தம்பட்டம் அடிக்காமல் எல்லா பொறுப்புக்களையும் செவ்வனே செய்பவர்கள் ஆண்களேன்னு சொல்லி முதல் சுற்று வாதத்தை நிறைவு செய்கிறேன் நன்றி.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

ஆண்களே

அதிகப்பொறுப்பு உடையவர்கள் ஆண்களே. பொண்ணுங்கள உயர்த்தி பேசுவதாக நினைத்து ஆண்களை ஒதுக்கிடாதீங்க. என்னங்க பேசுறீங்க?

நடுவரே!!
ஒரு பொண்ணு வேலைக்கு போவதும்,போகாததும் அவளின் விருப்பத்தை பொறுத்தது.ஆனால் ஒரு ஆண் என்பவன் உழைப்பதற்காகவே பிறந்தவன் என்ற விதியோடு தான் பிறக்கிறான். கண்டிப்பாக அவன் சம்பாதிக்க வேண்டும். அவன் தான் குடும்பத்தை கவனிக்க வேண்டும். அதிக சுமை தாங்கி ஆண் தான். ஒரு மனைவி சொந்தபந்தங்களோடு ஊரில் சந்தோஷத்துல் இருக்கும் போதும் கூட தன் கஷ்ட்டத்தை பாராமல் மேலும்,மேலும் அவர்களின் சந்தோஷத்தை உயர்த்த வேண்டி பாலைவன புழுதியிலும்,போர்,இனவெறி மிகுந்த பகுதியிலும் வாழ்கிறான். யாருக்காக? தனக்காகவா? குடும்பத்தில் அவனுடைய பொறுப்பை அவன் உணர்ந்ததால்...

ஒரு கணவன் மனைவியை கட்டாயப்படுத்தி வேலைக்கு அனுப்பினால் அவள் மறுக்கும் உரிமையும்,ஏற்கும் உரிமையும் பெறுகிறாள். வேண்டாம் என அவள் சொன்னாலும் பிரச்சனை அத்தோடு முடியும். அவனால் அடுத்தவரிடம் சொல்லவும் முடியாது. ஆனால் இதுவே ஒரு ஆண் வேலைக்கு போகாவிடில் மனைவிகள் சும்மா இருப்பாங்களா? சொல்லுங்க!!!

குடும்பத்தில் உள்ளவர்கள் பட்டாடை உடுத்த இவன் படும் பாடு சொல்லிமாளாது. பண்டிகை காலங்களில் தன் மனைவி,மக்களை உள்ளே அனுப்பி துணிக்கடையின் வெளியே நின்று அந்த பொம்மைகளை மட்டும் பார்த்து பெரூமூச்சு விடுவதோடு சரி.தனக்கென தனியாக ஒதுக்கினால் அவர்களை திருப்திபடுத்த முடியாது என அவன் ஆசைகளை மண்ணில் புதைத்துவிட்டு தான் வருகிறான். ஆனால் எவ்வளவு தான் துணிகள் எடுத்தாலும் இந்த பொண்ணுங்களுக்கு பத்தாது.

போன வருஷம் நல்லா இருந்தோம்,அதனால் பட்டுப்புடவை எடுத்தோம். இந்த வருஷத்துல கஷ்ட்டப்படுறோம். சரி ஒரு பூனம்,காட்டன் மட்டும் எடுப்போம்னு சொல்லி சமாளிப்பது இல்லை. பாவம் ஏற்கனவே நொந்துப்போன ஆண்களை “ஒரு நல்ல நாள் பெருநாளைக்கு கூட துணிமணி எடுத்துக்குடுக்க முடியாத நீ எல்லாம் ஒரு மனுஷனா (இன்னும் சிலர் உதை விடவும் மோசமாகதிட்டி பார்த்ததுண்டு)” என அவர்களின் மனதில் மேலும் ரணத்தை விதைப்பது! ஆடிக்கு,கார்த்திகைக்கு,மார்கழிக்குன்னு ஒவ்வோரு மாசத்துக்கும்...பொங்கலுக்கு,புத்தாண்டுக்கு,தமிழ்புத்தாண்டுக்கு,லொட்டு லொசுக்கு என எடுத்ததெல்லாம் அப்போது மறந்து தான் போகும் இந்த பெண்களுக்கு பாவம்....

ஒரு பீரோ எடுத்துக்கோங்கோ. அதுல ஒரு அடுக்கு மட்டும் தான் ஆண்களுடையது. மிச்சம் இருக்குற அத்தனை அடுக்குகளிலும் பட்டு புடவைக்கு தனி அடுக்கு,சாதா சேலைகளுக்கு தனி அடுக்கு, சுடிதார்களுக்கு தனி அடுக்கு, வேலைப்பாடு சேலைக்களுக்கு இன்னொரு தனி பீரோ. இதெல்லாம் வந்தது எதனால்?

குடும்பத்தை நிர்வாக பண்ணுவது பெண்களாம். ஒத்துக்குறேன். ஆனா பணம் இல்லாம எப்படிங்க நிர்வாகம் பன்ணுவீங்க?
உடனே சொல்றது “நீ கொடுக்குற பணத்துலலாம் அடிச்சுக்கோ,புடுச்சுக்கோன்னு பட்ஜெட் போட முடியாது.நீயே போட்டுக்கோ”ன்னு அவங்க தலைல இன்னொரு சுமையை ஏற்றுவது. பல வீடுகளில் அன்றாட செலவுகளுக்கு மட்டும் பணம் கொடுத்து பேங்கில் தனியாக சேர்த்து குடும்பத்தை நல்ல முறையில் நிர்வகிப்பது ஆண்களே!

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

மேலும் சில பதிவுகள்