படித்தவை ரசித்தவை – 8

துப்பறியும் சாம்புBooks Review


அன்புத் தோழிகளுக்கு

இந்தப் பகுதியிலும் அடுத்த பகுதியிலும் நான் எழுத இருப்பது –அமரர் தேவன் மற்றும் அமரர் எஸ்.வி.வி அவர்களின் படைப்புகள் பற்றி.

பெரும்பாலான வாசகர்கள் எழுத்துலகின் பிரம்மாக்களாக நினைப்பது அமரர் கல்கியையும் திரு.சுஜாதாவையும்தான். இவர்கள் இருவரும் எத்தனையோ எழுத்தாளர்களை உற்சாகப்படுத்தி, எழுத வைத்திருக்கிறார்கள். இவர்களுக்குப் பிடித்த எழுத்தாளர்களாக நிறைய பேரையும் குறிப்பிட்டு இருக்கிறார்கள். சுஜாதா தன்னுடைய பல பேட்டிகளில் தேவனைப் பற்றி குறிப்பிட்டிருக்கிறார். அவரது படைப்புகள் அனைத்தையும் தான் படித்திருப்பதாகவும் சொல்லியிருக்கிறார். திரு.சோ அவர்களும் ஒரு பேட்டியில் தேவனின் “ராஜத்தின் மனோரதம்” நாவலைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தார். மஞ்சரி என்ற புத்தகத்தில் பல வருடங்களுக்கு முன் இந்த நாவலை மிக சுருக்கமாக வெளியிட்டிருந்தார்கள். வீடு கட்ட ஆரம்பிக்கும் தம்பதியினர் சந்திக்கும் பிரச்னைகள், அவர்களுக்கு அதட்டல் பாணியிலேயே உதவி செய்யும் நண்பர் என்று விவரிக்கும் கதை இது. பின்னர் தேவனின் ”துப்பறியும் சாம்பு” காத்தாடி ராமமூர்த்தி அவர்களால் மேடை நாடகமாக நடிக்கப்படுகிறது என்று தெரிந்து கொண்டேன். இப்படி ஒன்றிரண்டு தகவல்கள் கிடைத்தனவே தவிர, அவரது நாவல்கள் முழுமையாக கிடைக்கவில்லை.

கன்னிமாரா லைப்ரரியில் உறுப்பினராக சேர்ந்து, தேவனின் புத்தகங்களை தேடினேன். லக்ஷ்மி கடாட்சம் என்ற நாவலின் முதல் பாகம் மட்டும், கடைசி பக்கங்கள் இல்லாமல், மிகவும் நைந்த நிலையில் கிடைத்தது. இருந்தாலும் அதையும் எடுத்து வந்து படித்தேன்.

சமீபத்தில்தான் அவரது படைப்புகளும், திரு.எஸ்.வி.வி அவர்களின் படைப்புகளும் அலையன்ஸ் பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்டிருக்கின்றன. அவர்கள் தங்கள் முன்னுரையில் இப்படிப்பட்ட உயர்தரமான படைப்புகள் இன்றைய வாசகர்களிடையே சென்று சேராமல் இருந்ததற்கு இவ்வளவு காலமாக அவை மீண்டும் மீண்டும் வெளியிடப்படாமல் இருந்ததுதான் காரணம் என்று குறிப்பிட்டிருந்தார்கள். இப்போது கிழக்கு பதிப்பகமும் தேவன் அவர்களின் படைப்புகளை வெளியிட்டு இருக்கிறது.

தேவன் அவர்கள் ஆனந்த விக்டன் பத்திரிக்கையில் உதவி ஆசிரியராக சேர்ந்து, 23 ஆண்டுகள் பணியாற்றியிருக்கிறார். இதில் சுமார் பதினந்து ஆண்டுகள் விகடனின் நிர்வாக ஆசிரியர் பதவியில் இருந்திருக்கிறார். எழுத்தாளர்கள் சங்கத் தலைவராகவும் இரண்டு முறை பதவியில் இருந்திருக்கிறார். அமரர் கல்கியிடம் பயிற்சி பெற்றதாகவும் சொல்லியிருக்கிறார். இன்றைய ஆனந்த விகடனின் பெருமைக்கு தேவனின் உழைப்பு எந்த அளவுக்கு வலிமையான அஸ்திவாரமாக இருந்திருக்கும் என்று நம்மால் ஊகிக்க முடிகிறது.

தனது 44வது வயதிலேயே காலமாகி விட்டார் தேவன் என்று தெரிந்தபோது, மிகவும் வருத்தமாக இருந்தது.

மனிதர்களின் இயல்பான குணத்தையும், அவர்கள் எப்படி இருந்தால் நன்றாக இருக்கும், எப்படி நடந்து கொண்டால் பிரச்னைகள் வரும், என்பதை தனது கதாபாத்திரங்கள், கதை சம்பவங்கள் மூலமாக் சொல்லி இருக்கிறார்.

துப்பறியும் சாம்பு கதாபாத்திரம் ஓரளவுக்கு எல்லோருக்கும் அறிமுகமாகி இருக்கும் என்று நினைக்கிறேன். ஓவியர் கோபுலுவின் கைவண்ணத்தில், குடமிளகாய் மூக்கு, சற்றே அசட்டுக் களை, கோட்டு, என்று இருப்பார். விளையாட்டாகவும் அசட்டுத்தனமாகவும் இவர் செய்யும் காரியங்களால் திருடர்கள் பிடிபடுவார்கள். இவரது நண்பனாக இன்ஸ்பெக்டர் கோபாலன் வருவார்.

துப்பறியும் சந்துரு – கிட்டத்தட்ட ஜேம்ஸ்பாண்ட் பாணியிலான கதாபாத்திரம்.

மிஸ்டர் வேதாந்தம், ராஜத்தின் மனோரதம், ஜஸ்டிஸ் ஜகன்னாதன், மல்லாரி ராவ் கதைகள் என்று எல்லாப் புத்தகங்களையும் சமீபத்தில் படித்து மகிழ்ந்தேன்.

ஸ்ரீமான் சுதர்சனம் மற்றும் லக்ஷ்மி கடாட்சம் நாவல்களைப் பற்றி இங்கே கொஞ்சம் சொல்கிறேன்.

முதலில் ஸ்ரீமான் சுதர்சனம் நாவல் பற்றி –

மவுண்ட் ரோடில் இருக்கும் பரமேசுவர முதலியாரின் கம்பெனியில் அக்கவுண்ட்ஸ் டிபார்ட்மெண்டில் குமாஸ்தாவாக வேலை பார்க்கிறான் சுதர்சனம். அவன் மனைவி கோமளம் அன்பானவள், அழகி. சுதர்சனத்துக்கு மனைவியை வசதியான வீட்டில் குடியிருக்க வைத்து, வேண்டியதை வாங்கிக் கொடுத்து, சந்தோஷமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று ரொம்ப ஆசை. ஆனால் போதாத சம்பளம். அவன் அலுவலகத்தில் உழைப்பதில் ஒன்றும் குறையில்லை. அக்கவுண்டண்ட் கங்காதரம் பிள்ளை அவனிடம் நன்றாக வேலை வாங்கிக் கொள்வார். ஆனால் முதலாளியிடம் அவனைப் பற்றி எதுவும் எடுத்து சொல்ல மாட்டார். மற்ற சகாக்கள் சுதர்சனத்தை காக்காய் என்று கிண்டல் செய்து கொண்டே இருக்கிறார்கள்.

சம்பளம் உயர்த்திக் கேட்க வேண்டும், அல்லது வேறு வேலைக்குப் போக வேண்டும் என்று மனைவியிடம் சொல்கிறான் சுதர்சனம். அலுவலகத்தில் கங்காதரம் பிள்ளையிடம் இது பற்றி கேட்க, அவர் அலட்சியப் படுத்துகிறார். மனம் புண்பட்ட சுதர்சனம், மானேஜிங் டைரக்டர் பரமேசுவர முதலியாரிடம் சென்று கேட்கிறான். நேரடியாக அவரிடம் பேசியதை அவர் ரசிக்கவில்லை. சரியான பதிலும் சொல்லவில்லை. ஏதோ ஒரு வேகத்தில் வாடிக்கையாளரான ஜில் & கம்பெனியிலிருந்து வந்த பணத்தை கணக்கில் காட்டாமல் எடுத்துக் கொள்கிறான் சுதர்சனம். கோமளம் விரும்பிய பட்டுப் புடவை, வேப்பேரியில் ஹைதர் காலனியில் உள்ள வீட்டுக்கு குடி போக அட்வான்ஸ் என்று செலவழிக்கிறான். கோமளத்துக்கு பணம் எப்படி வந்தது என்று தெரியாது. சந்தோஷப் படுகிறாள். அவள் அக்காவுக்கும் அம்மாவுக்கும் கடிதம் எழுதுகிறாள். அக்காவும் அவள் கணவனும் வந்து செலவு வைக்கிறார்கள்.

இடையே அலுவலகத்தில் ஜில் & கோ கணக்கை எம்.டி.கேட்க, சுதர்சனம் பயந்து நடுங்குகிறான். ஆனால் அதிர்ஷ்டவசமாக தப்பிக்கிறான். ஆனாலும் நேர்மையான முதலாளியை ஏமாற்றியது உறுத்துகிறது.

அடுத்தாற்போல மாமனார், மாமியார் வந்து சேர்கிறார்கள். மாமியாருக்கு கண் ஆபரேஷன், மாமனாருக்கு பல் வலி, என்று செலவு எல்லாம் சுதர்சனம்தான். கோமளத்துக்கோ தன் அம்மா, அப்பாவுக்கு எல்லாம் செய்கிறோம் என்று ஒரே பெருமை.

செலவுக்குப் பணம்? இந்த முறையும் அலுவலகப் பணத்தில் எடுத்து செலவு செய்கிறான். இந்தத் தடவையும் மாட்டிக் கொள்ளவில்லை. ஆனால் எப்படியும் ஆடிட்டர் வந்தால் தெரிந்து விடுமே என்று ஒரே பயம். வேறு வேலைக்குப் போய் விடலாம என்று அவன் நினைக்கும்போது, முதலாளி அவனைக் கூப்பிட்டு, சம்பளம் அதிகப்படுத்தியிருப்பதாக சொல்லி, இன்னும் நன்றாக வேலை செய்ய வேண்டும் என்று சொல்கிறார்.

சுதர்சனத்தின் ஊர்க்காரர் ஒருவர் அவனை தற்செயலாகப் பார்த்தவர், ஊருக்குப் போய் அவன் பெற்றோர்களிடம் வத்தி வைக்கிறார். அங்கே அவன் தங்கை பிரசவத்துக்கு வந்திருக்கிறாள். மாமனார், மாமியாருக்கு ராஜ உபசாரம் செய்கிறான் மகன் என்று தெரிந்ததும், ஆத்திரத்துடன் மகளையும் அழைத்துக் கொண்டு, சென்னைக்கு வந்து விடுகிறாள் சுதர்சனத்தின் அம்மா.

வீட்டில் எப்போது பார்த்தாலும் வாக்குவாதம், சுதர்சனத்தின் அப்பாவும் தங்கையின் கணவனான ஆதிகேசவனும் இங்கே வருகிறார்கள். ஆதிகேசவன் படுத்தும் பாடும் ஆர்ப்பாட்டமும் சுதர்சனத்தால் சமாளிக்கவே முடியவேயில்லை. வம்புச் சண்டை ஒன்றை ஆரம்பித்து, பெரிதாக்குகிறான். அவனை சமாதானப்படுத்த, சுதர்சனமும் கோமளமும் மயிலாப்பூருக்கு அவனைக் கூட்டிக் கொண்டு போய் பட்டு வேஷ்டி, பட்டு சேலை என்று எடுக்கிறார்கள். தங்க மோதிரம் வேறு கேட்டு வாங்கிக் கொள்கிறான் அந்த அழகு மாப்பிள்ளை.

அலுவலகத்தில் கங்காதரம் பிள்ளைக்கு உடம்பு சரியில்லாததால், சுதர்சனத்துக்கு வேலை அதிகம். வீட்டிலும் பணப் பிரச்னைகள், அத்துடன் சுதர்சனத்துக்கு, தான் பணம் கையாடியது, மனதில் உறுத்திக் கொண்டே இருக்கிறது. பரமேசுவர முதலியாரையும் அவர் மனைவி பார்வதி அம்மாளையும் மயிலாப்பூர் ஜவுளிக்கடையில் சந்திக்கிறார்கள் சுதர்சனமும் கோமளமும். அவர்களிடம் மிகவும் அன்பாகப் பேசுகிறார் அந்த அம்மாள்.

நிஜத்தில் பரமேசுவர முதலியார் கருணை மனம் படைத்தவர். ஆனால் அலுவலகத்தில் எல்லோரிடமும் மிகவும் கண்டிப்பாக இருப்பார். கோள் சொல்கிறவர்களை நம்ப மாட்டார். மனிதர்களை சரியாக எடை போட்டு விடுவார். அதே சமயம் தவறு செய்தவனாக இருந்தாலும், காரணங்களை ஆராய்ந்து, மன்னிக்கக் கூடியவர்தான்.

வீட்டில் மளிகை பாக்கி, ஜவுளிக்கடை பாக்கி, இன்னும் பிரசவ செலவு, எல்லாவற்றுக்கும் சேர்த்து, இன்னும் பணம் தேவைப்படும் என்கிறாள் கோமளம். சுதர்சனத்துக்கு தலை சுற்றுகிறது. அலுவலகத்தில் ஆடிட்டிங் ஆரம்பித்து விடுகிறது. ஆடிட்டர் அவரது இரண்டு உதவியாளர்களுடன் மும்முரமாக இருக்கிறார். கங்காதரம் பிள்ளைக்கு நாளுக்கு நாள் உடல் நலம் குறைகிறது. அதிக நேரம் ஆஃபிஸில் இருக்க முடியவில்லை அவரால். சுதர்சனம்தான் அதிகாலையில் வந்து, இரவில் நேரம் கழித்து வீடு திரும்புகிறான். சதா துப்பறியும் நாவல்களை ஆஃபிஸிலேயே படித்து, பொழுதைக் கழிக்கும் கிருஷ்ணமூர்த்தி, சுதர்சனத்துடன் ஒத்துழைக்க மறுக்கிறான். இதை பரமேசுவர முதலியார் பார்த்து விடுகிறார். ஆனால் எதுவும் சொல்லவில்லை.

நான்காவது முறையாக, ஆஃபிஸ் பணத்திலிருந்து பெரிய தொகையாக ஆயிரம் ரூபாய் எடுக்க முடிகிறது சுதர்சனத்திற்கு.

தங்கை சம்பகாவிற்கு குழந்தை பிறக்கிறது. பிரசவ செலவு, புண்யகவசனம் என்று பணம் பறக்கிறது.

சுதர்சனத்திற்கு மனதில் நிம்மதியே இல்லை. கங்காதரம் பிள்ளை ஒரு நாள் அவனை தாறுமாறாகப் பேச, ரோஷப்பட்டு, அவனும் எதிர்த்து பேசி விடுகிறான். தற்செயலாக அங்கு வந்த பரமேசுவர முதலியார் , அவனை சஸ்பெண்ட் செய்வதாக சொல்கிறார். ஏற்கனவே பேப்பரில் பார்த்து, ஒரு வேலைக்கு மனு போட்டிருக்கிறான் சுதர்சனம். அந்த விலாசத்தில் துரைராகவன் என்பவனை சந்திக்கிறான். அவன் சுதர்சனம் வேலையில் வந்து சேர்ந்து கொள்ளலாம் என்று சொல்கிறான்.

பரமேசுவர முதலியார் வீட்டில் மனைவியிடம் ஆஃபிஸில் நடந்ததை சொல்கிறார். அவரைப் போலவே நல்ல மனம் படைத்தவர் பார்வதி அம்மாள். கோமளத்தைப் பார்த்த போதே அவளை பார்வதி அம்மாளுக்கு மிகவும் பிடித்து விட்டது. சுதர்சனத்துக்கு சம்பளம் கூடுதலாகக் கொடுக்கும்படியும், சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்யும்படியும் சொல்கிறார் அவர்.

கங்காதரம் பிள்ளை ஆடிட்டரின் உதவியாளர்களிடம் விசாரிக்கிறார். அவர்கள் நடந்ததை சொல்லி, சுதர்சனத்துக்கு ஆதரவாகப் பேசுகிறார்கள்.

மறு நாள் சுதர்சனம் ஆஃபிஸுக்கு வருகிறான். முதலாளியிடம் தான் ராஜினாமா செய்வதாக சொல்கிறான். அவர் அன்பாகப் பேசுகிறார். வேறு வேலை கிடைத்து விட்டதா, என்ன சம்பளம் என்றெல்லாம் விசாரிக்கிறார். நல்ல சம்பளம் என்றால் அவன் முன்னேற்றத்தை தான் தடுக்க விரும்பவில்லை என்றும், இங்கே மாதக் கடைசி வரை இருந்து வேலைகளை முடித்துக் கொடுத்து விட்டு, சுதர்சனம் விலகிக் கொள்ளலாம் என்றும் சொல்கிறார்.

அவர் காட்டும் தூய்மையான அன்பு, சுதர்சனத்தின் மனதை மேலும் மேலும் சுடுகிறது. இவ்வளவு உயர்ந்த மனம் படைத்தவரிடம் திருடியிருக்கிறோமே என்று மனம் நோகிறான்.

பரமேசுவர முதலியார் சுதர்சனத்தை அழைத்து, எண்பதாயிரம் ரூபாய் இருக்கும் பெட்டியைக் கொடுத்து, அதை மறு நாள் வங்கியில் கட்டி விடும்படி சொல்கிறார்.

ஆஃபிஸ் பையன், தன்னுடன் நட்பாக இருக்கும் இரண்டு கேடிகளிடம் இதைச் சொல்ல, அவர்கள் அந்தப் பணத்தை கொள்ளையடிக்க திட்டமிடுகிறார்கள். மறு நாள் ஆஃபிஸ் வாசலில் வண்டியில் ஏறிய சுதர்சனத்தை அவன் தலையில் பலமாகத் தாக்குகிறார்கள். ஆனால் சுதர்சனம் ரத்தம் கொட்டும் நிலையிலும் பணப் பையை காப்பாற்றி விடுகிறான். கொள்ளையர்கள் பிடிபடுகிறார்கள். உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் சேர்க்கப் பட்டு, முதலியாரின் அன்பான உதவியால், நலமடைந்து, வீடு திரும்புகிறான் சுதர்சனம்.

சில நாட்களுக்குப் பிறகு, ஆஃபிஸ் சென்று, முதலியாரை சந்திக்கிறான் அவன். பணத்தைக் காப்பாற்றி தந்ததற்காக இரண்டாயிரம் ரூபாய் அன்பளிப்பாகத் தருகிறார் அவர். அவ்வளவுதான், சுதர்சனத்தால் தாங்கவே முடியவில்லை. இந்தப் பணத்தை தான் முதலிலேயே எடுத்து விட்டதாகவும், அதற்கு தண்டனையாகத்தான் தலையில் அடி வாங்கினதாக தான் நினைப்பதாகவும் சொல்லி, அவரிடம் மன்னிப்பு கேட்கிறான். தனக்கு எல்லாம் தெரியும் என்கிறார் அவர் அமைதியாக. ஆடிட்ட்டர்கள் ஏற்கனவே அந்த விஷயங்களை அவரிடம் சொல்லியிருக்கிறார்கள். அவர்களுக்கும் பணம் எடுத்தது யாரென்று தெரியவில்லை. கையெழுத்து போட்டிருக்கும் மூன்று பேரில் ஒருவர் எடுத்திருக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள்.

பரமேசுவர முதலியார் அவனை சமாதானம் செய்கிறார். ஆனாலும் சுதர்சனம் பிடிவாதமாக, தான் துரைராகவனிடம் வேலைக்கு சேரப் போவதாக சொல்கிறான். அவர் அன்று வந்த ஒரு கடிதத்தை அவனிடம் காண்பிக்கிறார். துரைராகவனிடமிருந்து வந்திருக்கும் விண்ணப்பம் அது. சுதர்சனம் என்பவர் ராஜினாமா செய்யவிருப்பதால், அந்த வேலைக்கு தன்னை எடுத்துக் கொள்ளும்படி அவன் கேட்டிருக்கிறான்!!!

பரமேசுவர முதலியார், சுதர்சனத்துக்கு பதவி உயர்வு, கூடுதல் சம்பளம் எல்லாம் தருகிறார். கோமளத்திடம் நடந்த எல்லாவற்றையும் சொல்கிறான் சுதர்சனம். தவறு செய்தபின் தன் மனம் பட்ட பாட்டை சொல்லி, இப்போது கிடைத்திருக்கும் நிம்மதி மிகவும் சுகமாக இருப்பதாக சொல்கிறான்.

என்ன, கதை முழுவதுமே சொல்லி விட்டேனே என்று நினைக்கிறீர்களா! தாஜ்மஹாலையும், தஞ்சை பெரிய கோவிலையும், புகைப்படமாக எடுத்து உங்களிடம் காட்டினால், நேரே பார்த்த அனுபவம் கிடைக்குமா! கிட்டத்தட்ட முன்னூறு பக்கங்கள் கொண்ட ஒரு அற்புதமான வாழ்க்கை சித்திரத்தை, என்னால் எப்படி வெறும் ஐந்து பக்கங்களில் சொல்ல முடியும். அதுவும் தேவன் அவர்களின் எழுத்தின் சுவையை, படித்தால்தான் தெரிந்து கொள்ள முடியும்.

கண் டாக்டர், பல் டாக்டர், லேடி டாக்டர் இவர்களின் கதாபாத்திரங்களை தேவன் சித்தரித்த்ருப்பதை, கோமளத்தின் அக்கா, அத்திம்பேர், மாமனார், மாமியார், சுதர்சனத்தின் அம்மா, அப்பா, தங்கை கணவன் ஆதிகேசவன் இவர்களின் காரக்டர்களை, நாமே படித்தால்தான் ரசிக்க முடியும்.

நான் மிகவும் ரசித்துப் படித்த, இன்னும் அடிக்கடி படிக்க வேண்டும் என்று விரும்பும் இன்னொரு நாவல் – தேவன் அவர்களின் ‘லக்ஷ்மி கடாட்சம்’ . கிட்டத்தட்ட எண்ணூறு பக்கங்களுக்கும் மேல் கொண்டது இந்த நாவல். நாவலின் அளவைப் பற்றி அல்ல, அதன் சுவையை, அதன் தாக்கத்தை, தேவனின் அபாரமான, அற்புதமான படைப்பாற்றலை, இங்கே சுருக்கமாக என்னால் சொல்ல முடியுமா என்று மலைப்பாக இருக்கிறது. இருந்தாலும் ஒரு சில வரிகள் மட்டும் சொல்கிறேன்.

காந்தாமணி, இவள்தான் கதையின் நாயகி. தாயை இழந்து, சிற்றன்னை அபிராமியின் வெறுப்பில் வளர்ந்த பெண். இவளை நடராஜ பிள்ளை என்னும் வயதானவருக்கு இரண்டாம் தாரமாக கல்யாணம் செய்து கொடுத்து, வீட்டுக் கஷ்டத்தை தீர்த்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறாள் அபிராமி. காந்தாமணியின் எண்ணத்தில் அவளது சிறு வயது விளையாட்டுத் தோழன் துரைசாமி இருக்கிறான். எங்கோ சென்னையில் இருக்கும் அவன், கும்பகோணத்துக்கு வந்து, அவளை சந்திக்கிறான். திருமணமும் செய்து கொள்கிறான்.

துரைசாமியின் நண்பன் வேங்கடாசலம். அவன் மனைவி சரோஜா. நல்ல குடும்ப நண்பர்கள். துரைசாமியும் வேங்கடாசலமும் ஒரே அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்கள். இவர்களது முதலாளி கோவிந்தன்.

துரைசாமி வேலை காரணமாக மலாயா செல்கிறான். மிகப் பெரும் பணக்காரரான கல்யாணசுந்தரம் பிள்ளையை சந்திக்கிறான். குணத்திலும் உயர்ந்தவரான அவர் அன்பும் கிடைக்கிறது அவனுக்கு.

பல சோதனைகள், வேதனைகள். இதையெல்லாம் தாண்டி, மிக நீண்ட பிரிவை சந்தித்து, பின் துரைசாமியும் காந்தாமணியும் இணைகிறார்கள்.

நாம் எதைத் தேடிக் கொண்டு இருக்கிறோம் என்று பல சமயங்களில் நமக்கே தெரிவதில்லை. பணம் இன்னும் கிடைத்தால் நிம்மதி என்று ஆசைப் படுகிறோம். பணம் படைத்தவர்களைப் பார்த்து, பெருமூச்சு விடுகிறோம். ஆனால் பணம் உள்ளவர்கள் எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்களா என்று நமக்கு தெரிவதில்லை. எப்படி அந்தப் பணத்தை சம்பாதிப்பது என்ற மர்மமும் புரிவதில்லை. தேவன் அவர்கள் இந்த நீண்ட நாவலில் அந்த ரகசியத்தை நமக்கு புரிய வைக்கிறார்.

அவருடைய வார்த்தைகளிலேயே சொல்வதானால் –

“மனதை தாராளமாக வைத்துக் கொள்ள வேண்டும். மனதில் பகை, பொறாமை ஒன்றும் இல்லாமல் இருக்க வேண்டும், அப்புறம் தனக்கு என்று பணம், பண்டம் வேண்டும் என்று தனிப்பட ஆசைப்படக் கூடாது. எல்லோருக்கும் கொடுப்போம், எல்லோரும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று அள்ளிக் கொடுக்க வேண்டும். அட்டா, இவர் மற்றவர்களுக்குக் கொடுப்பதற்கென்று அப்படியே பெட்டியை கவிழ்த்து விடுகிறாரே என்று பயத்துடன் பார்க்கும்போது, திரும்பவும் பெட்டி நிறைய பணம் இருக்கிறது! தைரியமாக ஒருவன் தர்மம் செய்தால், துணிவாக அவனுக்கு செல்வக் கடவுள் லக்ஷ்மியின் அருள் கிடைக்கிறது. அதுதான் “லக்ஷ்மி கடாட்சம்”’

என்கிறார் தேவன்.

நம்மால் பணத்தைக் கொடுக்க முடியுமோ இல்லையோ தெரியவில்லை. அன்பை மற்றவர்களுக்கு அள்ளித் தர முடியும் இல்லையா!

இந்த நாவலில் பல சம்பவங்களை, கதையில் வரும் துணைக் கதாபாத்திரங்கள் தங்கள் கடிதங்களில் மற்றவர்களுக்கு தெரிவிப்பதைப் போன்ற உத்தி, நன்றாக இருக்கிறது. கதை ஆரம்பத்திலும், கதையின் நிறைவிலும் இந்த உத்தியை அழகாக பயன்படுத்தியிருக்கிறார் தேவன் அவர்கள்.

தேவன் அவர்களின் கதைகளை நம் தோழிகள் ஏற்கனவே படித்திருந்தால், நான் இங்கு சொன்னது ஒரு துளிதான் என்று உடனே சொல்லி விடுவீர்கள்..

அவரைப் பற்றிய தகவல்கள் கிடைக்கும் விக்கிபீடியா பக்கத்திற்கான தொடுப்பினை தந்திருக்கிறேன். அவரது படைப்புகளை உடனே படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை அந்த பக்கம் உங்களுக்கு ஏற்படுத்தும்.

http://ta.wikipedia.org/wiki/ஆர்._மகாதேவன்

அமரர் திரு.எஸ்.வி.வி அவர்களின் படைப்புகளைப் பற்றி அடுத்த பகுதியில் பேசுவோம்.

அன்புடன்

சீதாலஷ்மி

Comments

அன்புள்ள சீதாலக்ஷ்மி அம்மா
வணக்கம்.

நலமாக இருக்கிறீர்களா?இப்படி ஒரு நல்ல இழையை எததனை நாள் நான் தவற விட்டுவிட்டேன்!அய்யகோ!

ஒவ்வொரு எழுத்தாளரகளையும் விரல்நுனியில் வைத்திருக்கிறீர்கள்!
அந்த வரிசையில் சேரக்கூடிய ஒரு இன்னோரு எழுத்தாளர் நீங்கதான்...
என்னைபோன்ற இலக்கியதாகம் கொண்டவனுக்கு இதுபோன்ற இழையும்,நூலகமும் ஒரு விருந்து!
தேசத்தலைவர்களையும் சுதந்திரபோராட்ட தியாகிகளையும் மறந்து வருவதுபோல் இலக்கியமும் மறக்கப்பட்டு,மறுக்கப்பட்டு வருகின்றன!
அதை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டிருக்கும் உங்களைபோன்ற நல்ல உள்ளங்களுக்கு என் இதயம் கனிந்த வாழ்த்துக்கள்!

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

நலமா? பேரம் எப்படி இருக்கிறார்?

எனக்கு கதை நாவல்கள் படிக்கும் பழக்கம் இல்லை. பழக்கம் இல்லை என்பதை விட படிப்பு படிப்பு என்று இருந்ததாலோ என்னவோ இதற்கு நேரம் ஒதுக்க முடிந்ததில்லை. இனி படிக்கும் ஆர்வம் இல்லை என்றுதான் நினைத்து கொண்டிருந்தேன். ஆனால் உங்களின் இந்த பகுதியை பார்க்கும் போதுதான் படிக்கணும் என்ற ஆர்வம் மிகுதியாகிறது.

உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.

அன்புடன்
பவித்ரா

சீதாலக்ஷ்மி

வழக்கம் போல இந்த பகுதியும் அருமை.. சீக்கிரமே வெளியிட்ட பாபுக்கு நன்றி ;)..

இரண்டு நாவலும் அருமை.. பணத்தை திருடிவிட்டு அவர் பாடுபடுவதும்.. செலவழிக்க ஆள் ஒன்று இருந்துவிட்டால் அலைப் பாயும் உறவுகளும்.. முதலாளியின் நல்ல குணமும்.. என நல்ல கதை.. அதை சுருக்கி, சுவை குறையாமல் தந்ததற்கு நன்றி

அடுத்த நாவலையும் மிக சுருக்கமாக கூறுனீர்கள்.. நூல் கோர்த்ததை போல.. பல உறவுமுறைகளையும் பலதரப்பட்ட மனிதர்களையும் ஒரு மரத்தின் கிளை போல உருவாக்கிவிடுகிறார்கள் இந்த எழுத்தாளர்கள் இல்லையா.. அவர்களுக்குமென முக்கியத்துவம் அவர்களை சுற்றி ஒரு கதை என அனைத்துமே..

வாழ்த்துக்கள்..

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

சீதாமேடம்,
இந்த தொடர் மூலம் நிறைய எழுத்தாளர்களை பற்றி தெரிந்து கொள்ள முடிகிறது.அழகாகவும், சுருக்கமாகவும் எழுதி முழுக்கதையும் படித்த உணர்வை ஏற்படுத்திவிட்டீங்க.

படித்தவை, ரசித்தவை மூலம் உங்கள் எழுத்துக்களால் எங்களையும் அந்த
கதைக்களத்திற்கே அழைத்துச் செல்கிரீர்கள். தேவன் அவ்ர்களின் கதைச்சுருக்கத்தை
நீங்கள் எழுதியிருக்கும் விதம் முழு கதையுமே படித்த திருப்தி கிடைத்தது.
எழுத்தாளர்களை அஅறிமுகப்படுத்தும் விதமும் ரசிக்கும்படி உள்ளது. உங்கள்
எழுத்து என்னைப்போன்ற படிப்பார்வம் உள்ள அனைவருக்குமெ மிகவும்
உபயோக மாக இருக்கு.

சீதாம்மா நலமா? வீட்டில் பேரன் பேத்தி மற்றும் அனைவரும நலமா? உங்களிடம் முதன் முதலில் படித்தவை ரசித்தவை மூலம் தான் பேச ஆரம்பித்தேன். அறுசுவைக்கும் வர ஆரம்பித்தேன். அன்றிலிருந்து இன்றுவரை சீதாம்மா என்றால் ஒரு தனி மரியாதை வந்துவிடுகிறது. தங்களிடம் பேச நேரம் வாய்க்கவே இல்லை. நான் பேச ஆரம்பித்ததிலிருந்து நீங்கள் அறுசுவைக்கு வருவதும் குறைவாகப்போய்விட்டது. எப்போது பேசப்போகிறேன் உங்களிடம்? தெரியவில்லை :(

தேவன் அவர்களின் நாவல் நான் இதுவரை படித்ததில்லை. ஆனால் துப்பறியும் சாம்பு அவர் எழுதிய நாவல் தான் என்றவுடன் அவரின் நாவல் படிக்கவேண்டும் என்ற ஆசை வந்துவிட்டது. சாம்பு என்றால் அந்த மூக்கும் கோமாளித்தனமும் தான் ஞாபகம் வருகிறது. நீங்கள் கூறியிருக்கும் கதை கூட படிக்கும் போது மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறது. இங்கு அவருடைய புத்தகங்கள் கிடைக்குமா என்று தெரியவில்லை. லைப்பரரி சென்று தேடிப்பார்க்கிறேன்.

லஷ்மி அவர்களின் கதைகள் அதிக அளவில் இங்கு இருக்கிறது. ஆனால் நீங்க சொன்ன கதைகள் மட்டும் இல்லை. ஒருமுறை அவருடைய கதையை படிக்க வேண்டும் என்று எண்ணியுள்ளேன்.

மிக்க நன்றி சீதாம்மா. நேரம் கிடைக்கும்போது பின்னுாட்டம் கொடுங்க. நீங்க அறுசுவையை கவனித்துககொண்டுதான் இருக்கிறீா்கள் என்று தெரியும். ஆனால் எங்களோடு எப்போது பேச வருவீர்கள். நேரம் கிடைத்தால் மெயில் பண்ணுங்க. நன்றி...

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

அன்பு திரு ஷேக் அவர்களுக்கு,

உங்க பின்னூட்டம் பார்த்து ரொம்ப ரொம்ப சந்தோஷமாக இருக்கு.

கதை, கவிதைகள் படைத்து, ஒவ்வொரு முறையும் வித்தியாசமான களம் அமைத்து, சிறுகதைகள் எழுதறீங்க. ஒரு எழுத்தாளராக மட்டும் அல்லாமல், ரசிகராகவும் இந்த இழையை நீங்க பாராட்டியிருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சி!

வாழ்த்துகளுக்கும், பாராட்டுகளுக்கும் மிகவும் நன்றி, ஷேக்.

அன்புடன்

சீதாலஷ்மி

அன்புடன்

சீதாலஷ்மி

அன்பு பவித்ரா,

பேரன் நலமாக இருக்கிறார் பவி.

புத்தகம் படிக்கிற பழக்கம் இல்லைங்கறதுக்கு என்ன காரணம்கறதை அழகாக சொல்லிட்டீங்க. இன்றைய வேகமான உலகில், நிதானமாக படிக்க, படித்ததை ரசிக்க, எங்கே நேரம் இருக்கு! நியூஸ் பாக்கறதுன்னா கூட, ஹெட் லைன்ஸ் மட்டும் பாத்துட்டு(கேட்டுட்டு) சானல் மாத்தறோம்!

பொறுமையாக இந்தப் பகுதியைப் படிச்சு, பின்னூட்டம் தந்திருக்கீங்க, பவி. ரொம்ப சந்தோஷமாக இருக்கு.

அன்புடன்

சீதாலஷ்மி

அன்புடன்

சீதாலஷ்மி

அன்பு ரம்யா,

உங்க ரசனையை அழகாக எழுதியிருக்கீங்க. காலங்கள் மாறினாலும், மனிதர்களின் அடிப்படை குணங்களில் சில எப்போதுமே மாறுவதில்லை. தேவன் அவர்களின் நாவல்களைப் படிக்கும்போது, அவை பல பல வருடங்களுக்கு முன்னால் எழுதப்பட்டவை என்ற எண்ணமே நமக்கு வராது. அவர் கதாபாத்திரங்களை படைத்திருக்கும் விதம் அப்படி.

அன்புடன்

சீதாலஷ்மி

அன்புடன்

சீதாலஷ்மி

அன்பு ரீம்,

இந்தப் பகுதி உங்களுக்குப் பிடிச்சிருக்குங்கறது ரொம்ப சந்தோஷமாக இருக்கு.

சாதாரணமாக மாகஸின்கள் படிக்கறப்போ, இப்ப எழுதும் எழுத்தாளர்களின் படைப்பை ரசிச்சுப் படிப்போம். அவங்களுக்குப் பிடிச்ச எழுத்தாளர்களைப் பற்றி அவங்க சொல்லும்போது, நமக்கும் அவற்றைத் தேடிப் படிக்கத் தோணும். தேவன், எஸ்.வி.வி., இவங்களுடைய எழுத்துகளைப் பற்றி, பிரபல எழுத்தாளர்கள் சொல்லியிருந்ததைப் படிச்சுதான், எனக்கும் இவர்களுடைய படைப்புகளை படிக்கத் தோன்றியது.

சந்தர்ப்பம் கிடைத்தால், இவர்களுடைய நாவல்களைப் படிச்சுப் பாருங்க. நிச்சயம் பிடிக்கும்.

அன்புடன்

சீதாலஷ்மி

அன்புடன்

சீதாலஷ்மி

அன்பு உமா,

இந்தப் பகுதியின் மூலம், உங்க அனைவருடைய பாராட்டுகளையும் பெறுவது, எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கு. மிகவும் நன்றி, உமா.

தேவன் அவர்களின் படைப்புகள், நீண்ட காலத்துக்குப் பின், இப்ப சமீபத்தில் வெளியிடப் பட்டிருப்பதால், அனேகமாக எல்லா லைப்ரரிகளிலும் கிடைக்குதுன்னு நினைக்கிறேன். நேர்த்தியான அச்சு, படிப்பதற்கு ஆர்வத்தை அதிகப் படுத்துது.

டைம் இருக்கும்போது படிச்சுப் பாருங்க, உமா.

அன்புடன்

சீதாலஷ்மி

அன்புடன்

சீதாலஷ்மி

அன்பு ராதாஹரி,

வீட்டில் எல்லோரும் நலமே.

இந்த ரெண்டு மாதமும் வீட்டில் நேரம் சரியாக இருந்தது. அதனால்தான் பின்னூட்டங்கள் அதிகம் கொடுக்கலை. ஆரம்பத்தில் நான் பார்வையாளர்தான். அதிகம் பின்னூட்டங்கள் கொடுத்ததில்லை. பட்டிமன்றத்தில் ஆர்வம் ஏற்பட்டு, பங்கெடுத்துகிட்டேன். இப்ப ஓரளவுக்கு மற்ற பகுதிகளில் பின்னூட்டங்கள் கொடுக்கறேன். இனிமே டைம் கிடைக்க ஆரம்பிச்சதும், அரட்டையிலும் வரலாம்னு ஆசைப்படறேன்.

எவ்வளவு பிஸியாக இருந்தாலும், அறுசுவை ஓபன் செய்து பாக்கறது, டெய்லி ரொடீன் வேலைகளில் ஒன்று:):):) (நம்ம எல்லாருமே அப்படிதான்னு நினைக்கிறேன்)

லஷ்மி அவர்கள் நிறைய எழுதியிருக்கிறார். நேரம் கிடைக்கிறப்போ படித்துப் பாருங்க, ராதா.

அன்புடன்

சீதாலஷ்மி

அன்புடன்

சீதாலஷ்மி

அன்பு சீதா லக்ஷ்மி நான் எப்போதும் உங்கள் பதிவை படித்து பார்ப்பேன் துப்பரியும் சாம்பு என்ன ஒரு அருமையான கதை நான் மிகவும் ரசித்து படித்த கதைகளீல் இதுவும் ஒன்று.

life is short make it sweet.

அன்பு கீதாஜி,

வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் மிகவும் நன்றி.

நேற்று நீங்க அரட்டை அரங்கத்தில் இருந்தது பார்த்து, உங்களுக்கு ஒரு பதிவு கொடுத்தேன், ஆனா, அதுக்கப்புறம் உங்களைப் பாக்க முடியலை.

வீட்டில் அனைவரும் நலம்தானே!

அன்புடன்

சீதாலஷ்மி

அன்புடன்

சீதாலஷ்மி

தேவன் அவர்கள் கதைகளில் நான் படித்தது மிஸ் ஜானகி, மைதிலி & லட்சமி கடாட்சம் என நினைக்கிறேன் :-)

கதை ரொம்ப நினைவில் இல்லை... மீண்டும் படிக்க வேண்டும் ;-)

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

அன்பு பிந்து,

எனக்கே இன்னொரு முறை தேவனின் எல்லாக் கதைகளையும் படிக்கணும் போல இருக்கு:)

இப்போ இருக்கும் இடத்தில் அருகில் லைப்ரரி இனிமேல்தான் தேடணும்.

அன்புடன்

சீதாலஷ்மி