படித்தவை ரசித்தவை – 10

ஆர். சூடாமணி


Books Review


அன்புத் தோழிகளுக்கு,

மீண்டும் இங்கே உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.

இந்தப் பகுதியில் எழுத்தாளர் ஆர்.சூடாமணியின் சிறுகதைத் தொகுப்பான “சுவரொட்டி” பற்றி கொஞ்சம் சிந்தனைகளை பகிர்ந்து கொள்ள நினைக்கிறேன்.

ஆர்.சூடாமணி அவர்கள் ஒரு நட்சத்திர எழுத்தாளர். ஆம், நட்சத்திரங்களின் நிஜமான ஒளி நமக்குத் தெரியாது. நிலவின் முன் நட்சத்திரங்கள் மங்குவதாக கவிஞர்கள் எழுதுகிறார்கள். ஆனால் நிலவைப் போல சூரியனிடம் கடன் வாங்கி ஒளிர்வதில்லை நட்சத்திரங்கள். நமக்கும் நட்சத்திரங்களுக்குமான அதிக இடைவெளியின் காரணமாக அவற்றின் ஒளி வீச்சின் அளவு நமக்கு புலப்படுவதில்லை. அப்படிப்பட்ட ஒரு ஒளி வீசும் துருவ நட்சத்திரம்தான் ஆர்.சூடாமணி அவர்கள். தனித் தன்மை உள்ள எழுத்து அவருடையது.

சூடாமணி அவர்கள் கல்கி, குமுதம், கலைமகள் என்று எல்லாப் பத்திரிக்கைகளிலும் எழுதியிருக்கிறார். இத்தனை ஜனரஞ்சகமான பத்திரிக்கைகளில் எழுதியிருந்தாலும், நிறைய எழுதியிருக்கிறார் என்று சொல்ல முடியாது. கலைமகள் நாவல் போட்டியில் இவரது நாவல் பரிசு பெற்றிருக்கிறது. தீபாவளி மலர்களில் இவரது சிறுகதை கண்டிப்பாக இருக்கும். தீபாவளி மலர் வந்ததும், பொருளடக்கத்தில் இவரது பெயர் இடம் பெற்றிருக்கும் பக்கத்தைத் தேடிப் பிடித்து, இவர் கதையை முதலில் படிப்பதுண்டு.

மிக நுணுக்கமான மன உணர்வுகளை எழுத்தில் கொண்டு வருவது எப்படி என்று தெரிந்து கொள்ள, ஆர்.சூடாமணி அவர்களின் கதைகளைப் படிக்க வேண்டும்.

தொடர்கதைகளை படிக்கும்போது, ஒரு எழுத்தாளர் அதன் கதைக் களத்திலும், கதாபாத்திரங்களின் தன்மைகளிலும் அதிக கவனம் செலுத்துவார். நமக்கும் நாவல்கள், தொடர்கதைகள் படிக்கும்போது, அவற்றின் தொடர்சம்பவங்கள், அடுத்து என்ன நடந்தது என்ற கதை கேட்கும் ஆர்வம்தான் முன்னால் நிற்கும். ஒரு எழுத்தாளரின் அற்புத எழுத்துத் திறமையை ஆழ்ந்து ரசிக்க வேண்டும் என்றால், அவர் பல்வேறு கால கட்டங்களில், பல விதமான உணர்வுக் கோர்வைகளை விவரிக்கும் வண்ணம் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பை படிக்க வேண்டும்.

வழக்கமாக மிகவும் விறுவிறுப்பாக இருந்தது, சுவாரசியமாக இருக்கிறது, கையில் எடுத்துப் படிக்க ஆரம்பித்தால் கீழே வைக்கவே தோன்றவேயில்லை, அவ்வளவு வேகம் இந்தக் கதையில், ஒரே மூச்சில் படித்து முடித்தேன் - இப்படியெல்லாம் சொல்வோமே, ஆர்.சூடாமணி அவர்களின் “சுவரொட்டி” சிறுகதைத் தொகுப்பைப் படித்தால் இந்த மாதிரி எதுவும் சொல்ல முடியாது. சிந்தனையைத் தூண்டும் எழுத்து என்று இதுவரை எத்தனையோ எழுத்தாளர்களின் படைப்புகளைப் பற்றி நினைத்திருப்பீர்கள். ஆனால் இந்த சிறுகதைத் தொகுப்பைப் படித்து முடித்ததும், இதுவரை உங்கள் சிந்தனைகள் எப்படி இருந்தன, இப்போது இந்தக் கதைகள் உங்களின் சிந்தனையில் என்ன மாற்றங்களை உண்டாக்கியிருக்கின்றன என்பது தெரிய வரும். ஒவ்வொரு கதையையும் மிக நிதானமாக படிக்கத் தோன்றுகிறது. அவை நமக்குள் உண்டாக்கும் எண்ண மாறுதல்கள், மிகப் பெரிய அளவில் இருக்கிறது.

இந்தத் தொகுப்பில் மொத்தம் 17 சிறுகதைகள்.

முதல் கதை ”ப்ரச்னையும் குழந்தையும்”. தாயை இழந்த குழந்தை கண்ணன். அப்பா அழகேசன் மறுமணம் செய்து கொண்டு விட்டான். பாட்டி வீட்டில் இருக்கும் கண்ணனை வளர்க்கும் பொறுப்பை ஏற்றுக் கொள்ள, மாமன் மனைவி, அழகேசனின் புது மனைவியான வள்ளி, இருவருக்குமே மனம் இல்லை. பாட்டி செத்துப் போன மகளை நினைத்து, குமுறுகிறாள். மாமன் மனைவியும் சரி, வள்ளியும் சரி, தத்தம் கணவன்மார்களை மிரட்டுவதைப் பார்க்கும்போது, தாய்மை, பெண்மை, இனிமை இதெல்லாம் பொய்மை என்ற கசப்பான உண்மை முகத்தில் அடிக்கிறது. என்ன செய்ய!

அடுத்த கதை – “மேதையின் மனைவி”.

மிகப் பிரபலமான, மிகச் சிறிய வயதிலேயே காலமாகிவிட்ட இசை மேதை பஞ்சநதம். அவர் காலமாகி, முப்பத்தைந்து வருடங்களுக்குப் பிறகு, அவரது மனைவியிடம் அவரைப் பற்றிய ஒரு கட்டுரைக்காக, விவரங்கள் கேட்டு, வருகிறார்கள் சபாக்காரர்கள். அவர்களுக்குத் தேவை – படிப்பதற்கு சுவையாக இருக்கக் கூடிய “ஹியூமன் இண்ட்ரெஸ்டோடு கூடிய சின்ன சின்ன விவரங்கள்”! அந்த அம்மாள் எதுவும் சொல்லத் தயாராக இல்லை. அவர் எழுதிய பர்ஸனல் கடிதங்கள், அவரது பழக்க வழக்கங்கள் என்று பல கேள்விகள். கணவன் மனைவிக்குள் இருக்கும் கடித விவரங்கள் எதற்கு உங்களுக்கு என்று கேட்கிறார் அந்தப் பெண்மணி. மேதையாக இருந்தாலும், மனைவிக்கு மனதுக்கு நெருங்கிய கணவனாக அவர் இருக்கவில்லை. ஆனாலும், இந்த உரையாடல், அந்தப் பெண்மணியின் நீண்ட நாள் மனக் கசப்பை ஒரு வழியாக ஆற்றி விடுகிறது.

“NO MAN IS HERO TO HIS WIFE” என்று சுஜாதா அவர்கள் சொன்னதுதான் ஞாபகத்துக்கு வருகிறது.

பிரபலமானவர்களைப் பற்றிய “ஹியூமன் இன்டெரெஸ்டோடு கூடிய சின்ன விஷயங்கள்” தேடித் தேடிப் படிப்பது நமக்கு சுவையாக இருக்கலாம், ஆனால் சம்பந்தப் பட்டவர்களுக்கு அது எப்படிப்பட்ட பாதிப்பை ஏற்படுத்தும் என்று ஒரு குற்ற உணர்வு உள்ளுக்குள் உறுத்துகிறது.

“சுவரொட்டி” இந்தத் தொகுப்புக்கு பெயர் தந்திருக்கும் சிறுகதை. நகரெங்கும் ஒட்டப்பட்டிருக்கும் ஆபாச சுவரொட்டிகள் யார் யார் மனதில் என்னென்ன எண்ணங்களைத் தோற்றுவிக்கிறது? காரிலும், பஸ்ஸிலும் போகிறவர்கள், அதை மின்னல் வேகத்தில் கடந்து விடுகிறார்கள். பொழுதை சரியாக செலவிட வாய்ப்பில்லாத குப்பத்து இளஞைர்கள் மனதில் அவை ஊட்டும் விஷம்....! அவர்கள் கூட்டத்தின் அருகில் நின்றவாறு ஒரு பிச்சைக்கார சிறுமி அந்தப் போஸ்டரை பார்த்துக் கொண்டே இருக்கிறாள். காரணமில்லாத எரிச்சலுடன் அவளை அங்கிருந்து துரத்த முயலுகிறார்கள். என்னா பாக்கிறே என்ற அவர்களின் கேள்விக்கு நீங்க பாக்கிறதைத்தான் நானும் பாக்கறேன் என்கிறாள் அவள். இன்னா புரியுது உனக்கு என்ற ஆத்திரமான கேள்விக்கு அந்த சிறுமியின் தெளிவான பதில் – ”அவ ஒரு சொக்காய்க்குள்ளே இன்னொரு சொக்கா போட்டிருக்கா”. சினிமாவின் ரேப் சீன் – பெண்ணின் உள்ளாடை தெரியும் விதமாக கண்காட்சியாக ஒட்டப்பட்டிருக்கும் சுவரொட்டியைப் பார்த்து, போட்டுக் கொள்வதற்கு மேல் சட்டையில்லாத சிறுமியின் புரிதல் இது.

”ஒரு கூட்டுக் கடிதம்” – புற்று நோயால் அவதிப்பட்டு, நோயின் வலியில் துடித்து, துவண்டு போய்க் கொண்டிருக்கும் அம்மா, மகனுக்கு எழுதத் தொடங்கிய கடிதம் – தங்கையால் முடிக்கப் படுகிறது. அம்மாவின் வேதனையை, அவள் அமைதியாக, கொஞ்சம் கொஞ்சமாக செத்துக் கொண்டிருப்பதை, அம்மாவின் அற்புதமான குணத்தை, ஒருவேளை வலி பொறுக்க முடியாமல் அவள் தற்கொலை செய்து கொண்டு விடுவாளோ என்று தனக்குத் தோன்றும் பயத்தை, அப்படியெல்லாம் செய்ய மாட்டாள் என்ற தனக்குத் தானே செய்து கொள்ளும் சமாதானத்தை, அயர்ந்து தூங்கும்போது கூட வலியில் ஐயோ அப்பா என்று அரற்றாமல் ஈசுவரா என்று சொல்வதை, - இதெல்லாம் எழுதி விட்டு, தங்கை சொல்கிறாள் – “நாம் எத்தகைய சொத்துக்கு வாரிசுகள் அண்ணா”! என்று!

“பெயர்கள்”. கைகேயி என்று பெயர் வைக்கப்பட்ட பெண் புலம்பிக் கொண்டே இருக்கிறாள் தன் அப்பாவின் நண்பரிடம். அவள் அப்படி உரிமை எடுத்துக் கொண்டு அந்த நண்பரிடம் பேசுவது அவர் மனைவிக்குப் பிடிக்கவில்லை. கடுகடுத்துக் கொண்டே இருக்கிறாள். ஒரு வழியாக “கைகேயி”க்கு கல்யாணம். அவளை மாதிரியே ஒரு வித்தியாசமான பெயர் மாப்பிள்ளைக்கு ”கசன்”. இந்தக் கல்யாணம் ஏன் நண்பரின் மனைவியை நிம்மதிப் பெருமூச்சு விட வைக்கிறது என்பதற்கும் ஒரு பெயர்க் காரணம் இருக்கிறது. அதை கதையின் கடைசி வரியில் நச்சென்று சொல்லியிருப்பது, நம்மை புன்னகை செய்ய வைக்கிறது.

”இன்னொரு முறை” – அர்த்தமற்ற சண்டைகளின் காரணமாக பிரிந்திருந்த கணவன் – மனைவியை, புத்திமதிகள் சொல்லி, சேர்த்து வைக்கிறார் குடும்ப நண்பர். தயக்கம், பழைய ஞாபகங்கள், திரும்பவும் பிரச்னை வந்து விடக்கூடாதே என்ற ஜாக்கிரதை, இவை யாவையும் தாண்டி, இருவரையும் சேர்த்து வைக்க ஒலிக்கிறது தாரக மந்திரம் ஒன்று.

“பிம்பம்” – சிறுமியாக இருந்ததிலிருந்து மீனாட்சிக்கு எத்தனையோ கனவுகள். ஜான்ஸி ராணி, ஜோன் ஆஃப் ஆர்க், ஹெலன் கெல்லர், லதா மங்கேஷ்கர் இப்படி எத்தனையோ விதமாக தன்னைப் பார்க்க விரும்பும் கனவுகள், ஆசைகள். அமைதியான அம்மா, - அப்பா என்ன சொன்னாலும் வாய் திறக்காமல் அடி பணிந்து சொன்னதை செய்யும் அம்மா. மாண்டிஸோரி அம்மையாரைப் பற்றியும், மதர் தெரஸாவைப் பற்றியும் படித்துக் கொண்டு, அதில் ஒன்றிப் போகும் மகளிடம் அம்மா சொல்கிறாள். “படிக்கறதுன்னா அப்படித்தான், அதிலேயே மூழ்கி விடுவோம், நான் கூட உங்க தாத்தா என்கிட்ட கொடுத்த புக்ஸ் எல்லாத்தையும் அப்படித்தான் படிப்பேன்”. இப்போ அந்தப் புத்தகங்கள் எல்லாம் எங்கே? “உங்க அப்பா எல்லாத்தையும் தூக்கிப் போட சொல்லிட்டார், ரொம்ப அலட்டிக்காதேன்னுட்டார்”. அம்மாவின் முகத்தில் எந்த உணர்வின் சாயலும் தெரியாத இயல்பான ஜாக்கிரதை. மீனாட்சிக்கு வந்த வரன், முதலில் வேலையை விடணும் என்கிறார்கள். கோபப்பட்டாலும் , பிறகு சரி என்கிறாள். கல்யாண வேலைகள் நடக்கிறது. பிறகு, பையனின் அம்மா, இவளை மூக்குக் குத்திக் கொண்டு, மூக்குத்தி போட்டுக் கொள்ள வேண்டும் என்று சொன்னதாக தகவல் வருகிறது. சமாதானப் படுத்திக் கொள்கிறாள். மூக்குத்தி தன் முகத்துக்குப் பொருத்தமாக இருக்குமா என்று பார்க்க ஆசைப்படுகிறாள். உள்ளங்கையில் ஒரு துளி முகப் பவுடரைக் கொட்டி, அதைத் தொட்டு, மூக்கின் வலப்பகுதியில் வைத்துக் கொண்டு, கண்ணாடியில் பார்க்கிறாள். அம்மாவின் சாயல் தெரிகிறது கண்ணாடியில் தன்னைப் பார்க்கும்போது. அம்மாவின் சாயலா, அல்லது அம்மாவின் பிம்பமா?

புத்தகங்களைத் தூக்கிப் போடு, இன்னிக்கு இந்தப் பொரியல் சமைக்காதே, சரி!

வேலக்குப் போகக் கூடாது, சரி. மூக்குக் குத்திக் கொள், சரி.

அவள் தன்னில் காண விரும்பிய பிம்பம் என்ன, இப்போது காணப் போவது என்ன!

அனேகமாக எல்லாப் பெண்களுக்கும் நடந்தது, நடப்பதைத்தான் பார்க்கிறோம் என்று புரிகிறது.

அம்மா, அப்பாவிடம் வெளியூரில் இருக்க, தாத்தா பாட்டியிடம் வளரும் சிறுமியின் தவிப்பு, “தனிமைத் தளிர்” சிறுகதையில் வெளிப்படுகிறது!

“சாவிக் கொத்து” என்ற கதை. வீட்டின் தலைவிக்கான அடையாளமாக சாவிக்கொத்து பல காலமாக சொல்லப்படுகிறது. ஆனால் தலைவியாக ஆக வேண்டும் என்று ஆசைப்படுபவர்கள், அந்தத் தலைமைப் பதவி தரும் பொறுப்புகளின் சுமையை, அதன் அழுத்தத்தைத் தாங்கிக் கொள்ள வேண்டியிருக்கும். இந்தக் கதையில், நாள் பூராவும் வீட்டின் பல அறைகளின் சாவி, பெட்டி சாவி, கார் ஷெட் சாவி, இப்படி பல சாவிக் கொத்தை கையாண்டு, அதன் அழுத்தம் தாங்க முடியாமல், வேண்டுமென்றே சாவிக் கொத்தை தொலைக்கிறாள் அன்னபூரணி. வீட்டில் உள்ள அத்தனை பேரும் தொலைந்த சாவிக் கொத்தைத் தேடிக் கொண்டு, பதறியவாறே இருக்க, இவளோ கண்களை மூடிக் கொண்டு, அந்த தற்காலிக விடுதலையை அனுபவிக்கிறாள்.

இந்தத் தொகுப்பில் உள்ள சில கதைகளைப் பற்றி மட்டுமே இங்கே பகிர்ந்து கொண்டிருக்கிறேன். ஏற்கனவே சூடாமணி அவர்களின் எழுத்துக்களை படித்திருந்தால், மீண்டும் ஒரு முறை மனம் நெகிழ முடியும். இது வரை படித்ததில்லையென்றால், இந்த விவரிப்புகள் அவர் கதைகளைத் தேடிப் படிக்கும் ஆர்வத்தை உங்களுக்கு உண்டாக்கும் என்று நம்புகிறேன்.

உங்கள் கருத்துகளை தெரிந்து கொள்ள காத்திருக்கிறேன்.

அன்புடன்
சீதாலஷ்மி

Comments

சீதாம்மா நலமா?
நான் ஊருக்கு போவதற்குள் படித்தேன் ரசித்தேன் புது பகுதி வந்துவிட்டது. அதனால் படித்துவிட்டே செல்லலாம் என்று படித்தேன். மிகவும் சுவாரஸ்யமான சிறுகதைகள். வாழ்வில் நடக்கும் சாதாரண விஷயங்களை பற்றியே கதை. ரொம்ப அழகா எடுத்து சொல்லிருக்கீங்க. உங்களுக்கு கேக்கவா வேணும்? எல்லா கதாசிரியர்கள் பற்றியும் நீங்க எடுத்துச்சொல்லும் விதம் அருமை. வேலைப்பளுவிற்கு நடுவில் இம்மாதிரி கதைகளை படித்து எங்களுக்காக நாங்களும் அந்த கதாசிரியர் பற்றி அறிந்து கொள்ள மெனக்கிடுகிறீா்கள். மிக்க நன்றி. இப்போது எந்த புத்தகமும் படிக்க நேரம் இருக்காது. இனிமேல் ஊரில் இருந்து வந்து தான் லைப்ரரி பக்கம் போக வேண்டும். அதுவரை அறுசுவைக்கும் விடுமுறை தான். எழுத்தாளர் சூடாமணி பற்றி தகவல் கொடுத்ததற்கு மீண்டும் ஒரு முறை நன்றி சீதாம்மா..

உங்களுக்கு மெயில் பண்ணிருக்கேன். நேரம் இருந்தா ரிப்ளை பண்ணுங்க. பை பை..

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

அன்பு ராதா ஹரி,

வழக்கம் போலவே உங்கள் பின்னூட்டம் மிகுந்த உற்சாகத்தைக் கொடுக்கிறது.

விடுமுறையை நல்லபடியாக என்ஜாய் பண்ணுங்க.

2 மாசம் அறுசுவையைப் பார்க்காமல் இருப்பது ரொம்ப கஷ்டமாகத்தான் இருக்கும் இல்லையா, நேரம் கிடைக்கிறப்ப வாங்க.

அன்புடன்

சீதாலஷ்மி

மேடம்
எழுத்தாளர் சூடாமணி அவர்களைப்ப்பற்றித் தெரிந்து கொள்ள மிகவும் ஆவலாக இருந்தேன். என் தாகத்தைத் தணித்து விட்டீர்கள். மிக்க நன்றி. ஒவ்வொரு கதையையும் பற்றி ரத்தினச் சுருக்கமாகக் கொடுத்திருக்கிற விதம் அற்புதமாக உள்ளது.
எஸ்.ஏ.பூரணி

AnbE Sivam

அன்பு பூரணி,

உங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.

அன்புடன்

சீதாலஷ்மி

அன்பு பூரணி,

எழுத்தாளர் ஆர். சூடாமணி, வாசகர்களின் மனம் கவர்ந்த, எல்லோரது மதிப்பிற்கும், வியப்பிற்கும் உரிய எழுத்தாளர்.

அதிகம் வெளி உலகத்தில் கலந்து பழக, எனக்கு சந்தர்ப்பம் வாய்த்ததில்லை. அதனால் உலகத்தைப் பற்றி தெரிந்து கொள்ள, பல குணாதிசயங்களைப் பற்றி அறிந்து கொள்ள, சிந்திக்க, இப்படியெல்லாம் - எனக்கு ஜன்னலாக, பள்ளிக்கூடமாக, நட்பாக எல்லாமாக இருந்தது பத்திரிக்கைகளும், பல எழுத்தாளர்களின் படைப்புக்களும்தான்.

இன்றைக்கு ஓரளவுக்கேனும் என் சிந்தனைகள் பக்குவப்பட்டிருக்கின்றன என்றால் அதற்கு நான் படித்த எழுத்துக்கள் ஒரு முக்கிய காரணம் என்று தோன்றுகிறது. எழுத்தாளர் ஆர். சூடாமணி அவர்களின் எழுத்துக்கள், பல விஷயங்களில் சிந்தித்துப் பார்க்கவும், தெளிவடையவும் வைத்திருக்கின்றன.

இவரைப் பற்றிய இந்தப் பகுதியை நான் ஆகஸ்ட் மாதத்திலேயே அறுசுவைக்கு அனுப்பி விட்டிருந்தேன்.

இவரைப் பற்றிய தனிப்பட்ட விஷயங்கள் எதுவும் பத்திரிக்கைகளில் வந்ததில்லை. கல்கி, குமுதம் பத்திரிக்கைகளில் அவரது புகைப்படம் வெளியானதைப் பார்த்திருக்கிறேன்.

கடந்த செப்டம்பர் 13ம் தேதி இவர் மறைந்த செய்தியை பத்திரிக்கைகள் வெளியிட்டிருந்தன. த ஹிந்து பத்திரிக்கையில் எழுத்தாளர் அம்பை, எழுத்தாளர் அனுத்தமா இருவரும் இவரைப் பற்றிய தகவல்களுடன் அஞ்சலி கட்டுரை எழுதியிருந்தனர்.

மிகுந்த உடல் நலிவு ஏற்பட்டு, ஹாஸ்பிடலில் அனுமதிக்கப் பட்டு, மறைந்தார் என்று குறிப்பிட்டிருந்தார்கள்.

உடல் நல பாதிப்பின் காரணமாக, அவர் திருமணம் செய்து கொள்ளவில்லை. எனினும் தன் குறையை சுட்டிக் காட்டி, யாரும் அனுதாபமாகப் பேசுவதை அவர் விரும்பியதேயில்லையாம்.

விமரிசகர் ஒருவர், அனுதாபம் காரணமாக, சூடாமணியின் எழுத்தை, தாம் பாராட்டி எழுதுவதாக சொன்னதாக அறிந்தபோது, சூடாமணி சொன்னாராம். “இந்தப் (அனுதாபத்தை முன்னிறுத்திய)பாராட்டு என்னை வருத்துகிறது. இதை விட, அவர் என் எழுத்தை கடுமையாக விமரிசித்திருந்தாலும் ஏற்றுக் கொண்டிருப்பேன்”.

எழுத்தாளர் அனுத்தமா அவ்ர்கள், தன் கணவரின் மறைவுக்குப் பின், எழுதுவதை கிட்டத்தட்ட 15 வருடங்கள் நிறுத்தியிருந்தாராம். மீண்டும் எழுதத் தொடங்கிய போது, 20 அத்தியாயங்களுக்கு மேல் அவரால் எழுத முடியாமல் போய் விட்டதாம். தன்னுள் இருந்த எழுத்தாளர் இனி இல்லை என்று அவர் சூடாமணி அவர்க்ளிடம் சொன்ன போது, சூடாமணி அவருக்கு மிகுந்த மன தைரியம் சொல்லி எழுத வைத்தாராம். எப்படிப்பட்ட அன்புள்ளம்!

சூடாமணி அவர்களிடம் மிகுந்த அன்பும் மதிப்பும் வைத்திருக்கும் என்னைப் போன்ற எத்தனையோ வாசகிகள், அவரின் ரசிகைகள், அவரை சந்திக்க வேண்டும் என்று நினைத்திருப்பார்கள். இதே சென்னையில்தான் அவர் பல நாட்கள் மருத்துவமனையில் இருந்திருக்கிறார். ஆனால், என்னால், அவரை நேரில் பார்க்க முடியாமல் போய் விட்டது. என் மனதில் அவர் மீது உள்ள மதிப்பையும் மரியாதையையும் அவரிடம் தெரிவிக்க முடியாமல் போய் விட்டதே என்று தோன்றுகிறது. என்னைப் போல பலர் இருந்திருப்பார்கள், அவர்களைப் பற்றி, வாசகிகளின் அன்பைப் பற்றி, தெரிந்து கொள்ளாமலேயே அவர் மறைந்து விட்டார்.

எழுத்தாளர் சுஜாதா அவர்கள் மறைந்த போதும், என் மனதில் இப்படித்தான் தோன்றியது.

சூடாமணி அவர்களின் மறைவுக்கு முன்னாலேயே நான் எழுதி அனுப்பிய இந்தப் பகுதி அவருக்கு ஓர் அஞ்சலியாக அமைந்து விட்டது.

சிறந்த எழுத்தாளராக மட்டுமல்லாமல், ஒரு அற்புதமான பெண்மணியாகவும் அவர் வாழ்ந்திருக்கிறார். அவரது எழுத்துக்களின் ரசிகையாக இருப்பதை நினைத்து, பெருமிதமாக இருக்கிறது.

அன்புடன்

சீதாலஷ்மி

. Paalaivana kaattrai parithaviththu paarththean Paravaien uyir urukiyathai kandu...! . Kan moodi thediyathu kanavai mattum alla-en kankalaium kuda... . Eruloodu kalainthathu kanavu mattum alla-en kannearum kuda... . Viraithodiya samayankalil en ithayam virumpi thudiththa tharunankalae un ninaivukal... . Naam uraiyaadiya poluthukalil ennai kalavaadiya nimidankale un ninaivukal... . En kan kadanthu pokum unnai kaana en kankal ennai kadanthu varukirathe... . -sameer.a

. Paalaivana kaattrai parithaviththu paarththean Paravaien uyir urukiyathai kandu...! . Kan moodi thediyathu kanavai mattum alla-en kankalaium kuda... . Eruloodu kalainthathu kanavu mattum alla-en kannearum kuda... . Viraithodiya samayankalil en ithayam virumpi thudiththa tharunankalae un ninaivukal... . Naam uraiyaadiya poluthukalil ennai kalavaadiya nimidankale un ninaivukal... . En kan kadanthu pokum unnai kaana en kankal ennai kadanthu varukirathe... . -sameer.a .sorry mma kavithaiyai yenke pathivu seyya theriyavillai athuthaan....nanti