ஸ்பெஷல் அடை தோசை

இது என்னடா ஸ்பெஷல் அடைதோசை என்று யாரும் குழப்பமடைய வேண்டாம். சேர்மானம், பக்குவம் என்பது வீட்டுக்கு வீடு மாறுபடும். அதனால் ருசியும் மாறும். எங்கவீட்டில் அடை சாப்பிட்டவர்கள் எல்லொருமே "சூப்பர் " என்றே சொல்லுவார்கள். அதனால் தான் இதை ஸ்பெஷல் அடை என்று குறிப்பிட்டுள்ளேன்.

தேவையான பொருட்கள்
இட்டலி அரிசி = 1 கப்
கடலை பருப்பு =1/2 கப்
துவரம் பருப்பு = 1/2 கப்
மிளகாய்வற்றல் = 4 அல்லது 5. ( தேவையான காரத்திற்கு ஏற்ப)
சாம்பார் வெங்காயம் = 6
அல்லது பெரிய வெங்காயம் 1 அல்லது 2.
இஞ்சி = ஒரு துண்டு
கறிவேப்பிலை.
பெருங்காயம்
தேங்காய் = தேவையான அளவு சிறு சிறு பல்லாக வெட்டிக்கொள்ளவும்
உப்பு.

செய்முறை இட்டலி அரிசியை ஒரு பாத்திரத்தில் தண்ணீரில் சுமார் 3 அல்லது 4 மணி நேரம் ஊறவைக்கவும்.
இதைப்போலவே கடலை பருப்பையும், துவரம்பருப்பையும் சேர்த்து போட்டு தனியாக ஒரு பாத்திரத்தில் 3 அல்லது 4 மணி நேரம் ஊறவைக்கவும்.

முதலில் கிரைண்டர் அல்லது மிக்க்ஸியில் ஊறவைத்த அரிசியை குறைவாக தண்ணீர் ஊற்றி அரைக்கவும். பாதி அறைபட்டவுடன் ஊறவைத்திருக்கும் பருப்பையும் மிளகாய் வற்றலையும் அதோடு சேர்த்து போட்டு அரைக்கவும். அடை மாவு தோசை மாவை விட சிறிது கட்டியாக இருக்கவேண்டும். அதற்கேற்றவாறு தண்ணீர் சேர்த்து அரைக்கவும். பருப்பு பிறு பிறு என அரை பட்டவுடன் அரைப்பதை நிறுத்தவும். மாவை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.

வெங்காயத்தை தோலுரித்து விட்டு சிறு துண்டுகளாக வெட்டவும்.

இஞ்சியை தோல் சீவி விட்டு சிறு சிறு துண்டுகளாக வெட்டவும்.

தேங்காயை சிறு சிறு பல்லாக தேவையான அளவுக்கு வெட்டவும்.

கறிவேப்பிலையை தேவையான அளவு இலைகளை மட்டும் எடுத்து கிள்ளி வைத்துக்கொள்ளவும்.

இவை எல்லாவற்றையும் மாவில் போட்டு நன்றாக கலக்கவும். அதோடு தேவையான தூள் உப்பை (இந்த அளவு தோசை மாவுக்கு எவ்வளவு உப்பு போடுவோமோ அதே அளவு உப்பை) அடை மாவில் போடவும். அதோடு வாசனைக்கு சிறிது பெருங்காயம் சேர்த்துக்கொள்ளவும். நன்றாக உப்பு கரையும் வகையில் மாவை நன்றாக கலக்கவும்.

மாவை விரலால் தொட்டு நாக்கில் வைத்து உப்பு, காரம் சரியா இருக்கிறதா என பாருங்கள். இல்லையென்றால் தேவையான உப்பு அல்லது மிளகாய் பொடியை சேர்த்துக்கொள்ளுங்கள்.

அடை கல் அல்லது தோசை கல் நன்றாக சூடானவுடன் அடை மாவை விரும்பும் சைஸ்க்கு ஊற்றி அடை தோசையின் நடுவிலும், சுற்றி நாலைந்து ஓட்டைகளை சட்டகைப்பையின் வால் பகுதியால் போடுங்கள். நல்லெண்ணையை அடை தோசையை சுற்றியும், ஓட்டை போட்ட பகுதியிலும் விடவும். வெந்தவுடன் திருப்பி போடவும். மாவு சிறிது கட்டியாக இருப்பதால் மெல்லிசாக அடை வார்க்க முடியாது. கட்டியாக இருந்தால் தான் ருசியாக இருக்கும். செய்து பாருங்கள்.

இதற்கு எண்ணை ஊற்றிய மிள்காய் பொடி அல்லது சர்க்கரை (சீனி) அல்லது தேங்காய் சட்டனி அல்லது அவியல் சேர்த்து சாப்பிடலாம்.

இதில் புகைப்படத்தை எப்படி சேர்ப்பது என்று தெரியவில்லை. எனது பிளாக்கில் இந்த பதிவை போட்டுள்ளேன்.

உங்களோட சமையல் குறிப்பை அறுசுவை இணைய தளத்திற்கு அனுப்புங்கள் (arusuvaiadmin@gmail.com) by Elaya.G

அடை செய்தேன் ரொம்ப நல்லா இருந்துது. வெளியில் க்ரிஸ்பியாகவும், உள்ளே ஜூஸியாகவும் இருந்தது.. குறிப்பு தந்ததற்கு நன்றி..

KEEP SMILING ALWAYS :-)

இந்த இழை மேற்கண்ட பதிவுடன் நின்றிருந்தால் நன்றாக இருந்திருக்கும். அதனைத் தொடர்ந்த உங்கள் அனைவரது பதிவிலும், நீங்கள் அறுசுவை மீது கொண்டுள்ள அக்கறையும், உரிமையும் எனக்கு தெரிகின்றது. அதற்கு நான் நன்றிகடன் பட்டவனாக இருக்கின்றேன். அதே சமயம், பொதுமன்றத்தில் நீங்கள் இடும் வார்த்தைகள் உங்களைப் பற்றின அபிப்ராயத்தை மட்டும் நிர்ணயிப்பதில்லை, கூடவே அறுசுவை குறித்த மற்றவர்களின் அபிப்ராயத்தையும் அவை முடிவு செய்கின்றன என்ற காரணத்தால், நான் சில விசயங்களை இங்கே குறிப்பிட்டாக வேண்டிய நிலையில் இருக்கின்றேன்.

முதலில் இந்த பிரச்சனை சம்பந்தப்பட்ட ஒரு விசயம். அறுசுவை விதிமுறைகள் ஆரம்பித்த தினம் முதல் ஒரே விதிமுறைகளாக இருக்கவில்லை. தேவைக்கு தகுந்தாற்போல், அதில் பல மாற்றங்களையும், புதிய சேர்க்கைகளையும் அவ்வபோது கொண்டு வந்துள்ளோம். இது தொடர்ந்து நடக்கும். அந்த வகையில் எந்த வெளிதளங்களுக்கான லிங்க்ம் கொடுக்கக்கூடாது என்ற விதி, சில மாதங்களுக்கு முன்பு புதிதாக சேர்க்கப்பட்ட ஒன்று. இந்த இழை தொடங்கப்பட்ட போது அந்த விதி இல்லை. பழைய இழைகள் பலவற்றில் இன்னமும் வெளிதளங்களுக்கான லிங்க்கள் இடம்பெற்றுள்ளன. அவற்றை எல்லாம் தேடிக் கண்டுபிடித்து நாங்கள் நீக்கப்போவதில்லை.. தேவைப்பட்டால் சிலவற்றை நீக்குகின்றோம்.

சரி, இப்போது பிரச்சனைக்கு வருகின்றேன். விதிமுறைகள் நினைவுறுத்தலை இங்கே அறுசுவை நேயர்கள் பலரும் செய்து வருகின்றனர். இதை வனிதா அவர்கள் மட்டும் செய்வதில்லை. அப்படி இருக்கையில் வனிதா அவர்களை குறிப்பிட்டு ராதா பாலு அவர்கள் கொடுத்த பதிவுதான் இந்த பிரச்சனைக்கு தொடக்கம். இதை அவரிடமிருந்து நான் எதிர்பார்க்கவில்லை. :-( அதை படிப்பவர்களால், என்னையும் சேர்த்து, அது விளையாட்டாக கொடுக்கப்பட்ட பதிவாக எடுத்துக்கொள்ள முடியவில்லை. புதிய உறுப்பினர்கள் தவறு செய்யும்போது பலரும் அதை சுட்டிக்காட்டியிருக்கின்றனர். நாகாராம் உட்பட. சில நேரங்களில் அவர் கடுமையாகக்கூட சுட்டிக்காட்டி இருக்கின்றார். அப்படி இருக்கையில் அட்மின் வேலையை அட்மின் மட்டுமே செய்ய வேண்டும் என்ற வார்த்தைகளில் நியாயம் இல்லை. உறுப்பினர்களால் அதிகபட்சம் சுட்டிக்காட்டத்தான் முடியும். அதற்கு மேல் ஏதேனும் செய்ய வேண்டுமென்றால், அது அட்மினால் மட்டுமே முடியும். அதில் சந்தேகம் வேண்டாம். ஆகவே விதிமுறைகளை அறிந்த, அறுசுவை மீது உண்மையான அக்கறை கொண்டுள்ள மூத்த உறுப்பினர்கள் அறுசுவை விதிகளை மீறுபவர்களுக்கு நினைவுறுத்துவதை நான் தவறாக எடுத்துக்கொண்டது கிடையாது. அதற்கான உரிமைகள் நிச்சயம் அவர்களுக்கு இருக்கின்றன.

இங்கே பதிவுகள் கொடுத்தவர்களில் ஒருவர்கூட புதியவர் கிடையாது. எல்லாரும் குறைந்தது சில மாதங்களாவது அறுசுவையில் தொடர்ந்து பேசி வருகின்றீர்கள். பட்டியில் உரையாடி இருக்கின்றீர்கள். ஒருவருக்கொருவர் நன்கு அறிந்தவராகவே இருக்கின்றீர்கள். அப்படி இருக்கையில், நாம் யாருக்கு பதில் கொடுக்கின்றோம் என்பது நன்கு தெரிந்தும், வழிய வேண்டாம் என்பதுபோல் கொடுக்கப்படும் கடுமையான வார்த்தைகள் கண்டனத்துக்குரியது. தவறை சுட்டிக்காட்டுவதிலும் நாகரிகம் இருக்க வேண்டும். நான் மனதில் பட்டதை அப்படியே சொல்கின்றேன் என்று ஒவ்வொருவரும் சொல்லத் தொடங்கினால் கடைசியில் நாறுவது அறுசுவையாகத்தான் இருக்கும். எனவே, தயவுசெய்து உறுப்பினர்கள் அனைவரும் மன்றத்தில் பதிவுகள் இடும்போது சபை நாகரிகத்தை கடைபிடிக்கவும். வார்த்தைகளை கொட்டிவிட்டு, பிறகு எல்லோரும் வருத்தப்படும் நிலையை உருவாக்க வேண்டாம்.

உங்கள் அனைவரைப் பற்றியும், உங்களது படைப்புகள் மற்றும் பங்களிப்புகள் மூலமாக, உலகம் முழுவதும் உள்ள அறுசுவை நேயர்கள் மத்தியில் ஒரு கண்ணோட்டம் உள்ளது. தயவுசெய்து அதனை மனதில் கொண்டு பதிவுகள் கொடுங்கள். மற்றவர்கள் நம்மை குறைவாய் மதிப்பிட நாமே காரணகர்த்தாவாகிவிடக் கூடாது. சொந்த வேலை காரணமாக சென்னையில் இருக்கும் நான், இந்த விசயம் கேள்விப்பட்டு, அவசர அவசரமாக இணைய வசதியை உண்டு செய்து, எழுத்துதவி பக்கம் மூலமாக டைப் செய்து இந்த பதிவை கொடுக்கின்றேன். நிறைய கொடுக்க நினைத்தாலும், தற்போது என்னால் இயலவில்லை. என்னுடைய வேண்டுகோள் இதுதான். அறுசுவையில் தர்மசங்கடத்தை உண்டாக்கும் சூழலை தயவுசெய்து யாரும் கொண்டு வராதீர்கள். பதிவுகள் கொடுக்கும் முன்பு ஒன்றுக்கு இருமுறை யோசித்து பதிவுகள் கொடுங்கள். இந்த இழையை இத்துடன் முடித்துவிடுங்கள். இதற்கு மேல் பதிவுகள் வேண்டாம்.

மேலும் சில பதிவுகள்