எனக்கு ஒரு பிரச்சனை

ஹாய் பிரண்ட்ஸ்,
எனக்கு ஒரு பிரச்சனை அதை இங்க பகிர்ந்துக்குறேன். என் மாமா அத்தை எங்க கூட தான் இருக்குறாங்க. அத்தை என்னை சமையல் பண்ணவே விடமாட்டாங்க. மாமாக்கு, அப்புறம் என் கணவரோட கடைசி தம்பி எங்க கூட தான் இருக்கான். அவனுக்குன்னு பார்த்து பார்த்து செய்றாங்க. நாங்க கல்யாணம் ஆனவுடன் தனியா தான் இருந்தோம். இப்ப 3 மாதமா தான் பெங்களூரு வந்துட்டாங்க. நிறைய உரிமைகள் என் கிட்ட இருந்து எடுத்துட்டாங்க. அது மாதிரி நாங்க மாதம் மாதம் எங்காவது வெளிய ஊருக்கு போவோம். ஆனா இப்பலாம் நாங்களும் வரோம் அப்பிடின்னு சொல்லிராங்க. மாமாவால நடக்க முடியாது. மெதுவா மெதுவாதான் நடப்பார். அப்பிடியும் அத்தை அவங்களையும் கூப்டு போலாம் சொல்லிராங்க. பார்க் போனப்ப கூட எல்லாரும் தான் போனோம். ஆனா அவரால நடக்க முடியாம உட்காந்துட்டார். ஆனாலும் இன்னும் நாங்க எங்கயாது போனும்னா முதல் ஆளா கிளம்பிடுரார். அதுனால எங்கையுமே போகல. விட்டுட்டோம். இந்த பிரச்சனையை எப்பிடி தீர்க்கிறதுன்னு தெரில.

அன்பு தோழி... அவங்க வந்து 3 மாசம் தானே ஆகுது... அதான் ஆர்வம். கொஞ்ச நாள் போனா தானா உங்களை சமைக்க விட்டுடுவாங்க. கவலைய விடுங்க. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

என்ன சொல்றதுன்னு தெரியல, பட் அவங்க கிட்ட என்னைக்கும் கோபத்தை வெளி படுத்திடாதிங்க, ஏன்னா மருமகள் இப்பிடி பண்ணிடாலேன்னு மனசுக்குள்ளே வச்சுகுவாங்க, கொஞ்ச நாள் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க, எல்லாம் சரி ஆய்டும்,
அவங்க சின்ன வயசுல எங்கயும் போகம இருந்திருபங்கனு நினைக்கிறன், மகன் கூட வெளிய போய் பாக்கலாம்னு நினைச்சு இருப்பாங்க.

அன்பு மீனு,

நீங்கள் மேலே குறிப்பிட்டவைகளை வைத்து பார்க்கும் போது அது உங்களின் immaturity-ஐ காட்டுகிறது. ஏனென்றால் அவற்றை பிரச்சனைகள் என்றே சொல்ல முடியாது. உங்கள் கணவரின் உடன் பிறந்தவர்கள் எத்தனை பேர் என்று நீங்கள் குறிப்பிடவில்லை. உங்களுக்கு திருமணமாகி ஒருவருடங்கள் இரண்டு மாதங்கள் முடிந்துள்ளன. உங்களின் வயது 25. தோழிகளின் அறிமுக இழையில் நீங்கள் சொன்ன தகவல்களின்படி சேகரித்த விவரங்கள் இவை. திருமணம் முடிந்த நாளில் இருந்து நீங்களும் உங்கள் கணவரும் தனியாக இருந்தீர்கள். கடந்த 3 மாதங்களாக தான் உங்களின் மாமா - அத்தை உங்களுடன் தங்கியிருக்கிறார்கள். உங்கள் அத்தை மற்ற பிள்ளைகளை விட உங்கள் கணவரின் மேல் வைத்த அதிக அன்பின் காரணமாகவும் உங்களை எந்த வேலையையும் செய்ய விடாமல் அவரே பார்த்து பார்த்து தன் பிள்ளைக்கு செய்ய வேண்டும் என்று நினைக்கிறார். இதில் தவறேதும் இல்லையே தோழி. திருமணமாகி 1 வருடம் 2 மாதங்களிலேயே, உங்களவரையும், அவருக்கு செய்யும் பணிவிடைகளையும் உங்களால் விட்டு தர முடியவில்லையென்றால், பெற்று வளர்த்து, ஆளாக்கி, படிக்க வைத்து திருமணம் செய்து உங்கள் முன்னே உங்கள் கணவரை நிறுத்தி இருக்கும் அந்த தாயால் எப்படி விட்டு தர முடியும். யோசித்து பாருங்கள் :) இது திருமணம் ஆன பெண்கள் அத்தனை பேருக்கும் இருக்கும் பொஸசிவ்னஸ். இதில் யாரையும் குறை சொல்ல முடியாது. இருவரும் அவர்களின் அன்பை காட்டுவதில் போட்டி இடுகிறார்கள். அது சம்பந்தப்பட்ட அந்த ஆணை சங்கடப்படுத்தாத வரை சந்தோஷமே :)

//அத்தை என்னை சமையல் பண்ணவே விடமாட்டாங்க//
இப்படி செய்தால் உண்மையாகவே சந்தோஷமாக ஏற்றுக் கொள்ளுங்கள். அவரின் சமையலையும் சிலகாலம் ருசித்து பாருங்கள். அவருடைய பக்குவங்களையும் கற்று கொள்ளுங்கள். உங்கள் அத்தையின் சமையலை உண்டு வளர்ந்தவர் உங்கள் கணவர். அதை நீங்களும் கற்று வைத்துக்கொண்டால் பின்னாளின் எங்கம்மா சமையல் மாதிரி வராது என்று சொல்ல முடியாதல்லவா? திருமணம் ஆன புதிதில் என் மாமியார் கூட என்னை சமைக்க விட்டதில்லை. அதே போல என் கணவருக்கும் அவரே பணிவிடைகளை செய்து வந்தார். நானும் அதை பெரிய குறையாக எடுத்துக் கொள்ளவில்லை. இப்போது வெளிநாட்டில் இருப்பதால் அவருக்கு இந்த ஊர் எல்க்ட்ரிக் ஸ்டவ் சரிபடாததால் சமைக்க முடியவில்லை. அவரால் முடிந்தால் கண்டிப்பாக நான் அவரையே சமைக்க விடுவேன் ;) இப்போதும் என் கணவரை கவனித்துக் கொள்ளும் பொறுப்புகளை அவரிடம் தான் தந்துள்ளேன். எனக்கும் 2006 நவம்பரில் திருமணம் முடிந்து 10 மாதங்கள் வெளிநாட்டில் கணவரோடு இருந்தேன். பிறகு கன்சீவ் ஆனதால் 2 வருடங்கள் இந்தியாவில் இருந்தேன். மறுபடி வெளிநாடு வரும்போது மாமியாரையும் எங்களுடனே அழைத்து வந்து விட்டோம். ஆக நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள். எங்களிருவரின் தனிமை,எங்களுக்கே எங்களுக்கான நேரங்கள் முதலில் நாங்கள் தனியாக இருந்த அந்த 10 மாத வாழ்க்கை தான். இப்போது அந்த ப்ரைவசி இல்லை. எனக்கு இது ஒரு பிரச்சனையாகவே தெரியவில்லை. நாங்கள் எங்கு சென்றாலும் மாமியாரையும் அழைத்துக் கொண்டு தான் செல்வோம். திருமணம் ஆன புதிதில் கூட அப்படிதான். எனக்கு இதில் சந்தோஷமே. தோழியே, சந்தோஷம் என்பது நாம் போகும் இடத்திலோ, வாங்கும் பொருட்களிலோ இல்லை. அது நம்மிடையே தான் உள்ளது. அதை கண்டுபிடித்து வெளியே கொண்டு வர தான் நமக்கு நாளாகிறது. அதை தேடி எங்கேங்கோ அலைகிறோம்.

//என் கணவரோட கடைசி தம்பி எங்க கூட தான் இருக்கான். அவனுக்குன்னு பார்த்து பார்த்து செய்றாங்க//
கணவரின் தம்பிக்கு என்ன வயது என்று சொல்லவில்லை. அவர் திருமண வயதில் இருந்தால், திருமணம் ஆகும் வரை உங்கள் அத்தை தானே அன்பு செலுத்தி கவனிக்க வேண்டி இருக்கும். அதனாலேயே தனிகவனம் செலுத்துகிறார். திருமணத்திற்கு பிறகு அவருக்கென்று வரும் மனைவி அவரை கவனித்து கொள்ளட்டும் என்று பொறுப்புகளை அவரிடம் விடுவார்.

//மாமாவால நடக்க முடியாது. மெதுவா மெதுவாதான் நடப்பார். அப்பிடியும் அத்தை அவங்களையும் கூப்டு போலாம் சொல்லிராங்க. பார்க் போனப்ப கூட எல்லாரும் தான் போனோம். ஆனா அவரால நடக்க முடியாம உட்காந்துட்டார். ஆனாலும் இன்னும் நாங்க எங்கயாது போனும்னா முதல் ஆளா கிளம்பிடுரார்.//

உங்கள் மாமாவுக்கு வயதானபடியால் நடக்க முடியாமல் போயிருக்கும். இல்லையென்றால் அவருக்கு ஏதேனும் உடல் உபாதைகள் இருக்கலாம். அதனால், இருக்கும் வரை நல்லபடியாக எல்லா இடத்துக்கும் போய்வரலாம் என்று ஆசைபட்டிருப்பார். அதனாலேயே உங்கள் அத்தையும் எல்லா இடங்களுக்கும் அவரை அழைத்து செல்கிறார். அவர்கள் வாழ்ந்து முடித்தவர்கள். விரும்புவதை அனுபவிக்கட்டுமே. நாம் இனி வாழப்போகிறவர்கள் இனி வரும் காலங்களில் அது அனைத்தும் நிறைவேற்றிக் கொள்ளலாம்.

தோழியே, எப்போதும் ஒரு பொருள் கையில் இருக்கும் போது அதன் மதிப்பு தெரியாது. அது கையை விட்டு போன பிறகு தான் அதை எந்த அளவிற்கு உதாசீனப்படுத்தினோம், அதை பாதுகாக்காமல் போனோமே என்று வருந்துவோம். உங்களுக்கு புரிந்திருக்கும் என நினைக்கிறேன். ஒரு தோழியாக மட்டுமல்லாமல், ஒரு சகோதரியாக நினைத்தேன். உங்களுக்கு இத்தனை பெரிய அறிவுரையை தந்தேன். இது தவறாக இருப்பின் விட்டு விடுங்கள். சரியாக இருந்தால் சந்தோஷம்.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

//அத்தை என்னை சமையல் பண்ணவே விடமாட்டாங்க// - கல்பணா சொல்றது சரி... நானும் என் மாமியார் வீட்டில் இருந்தா அவருக்கு சமையல் அவங்க தான் செய்வாங்க... காரணம் அவங்க சமையல் அவருக்கு பிடிக்கும், அதனால் நானும் அதில் தலையிட மாட்டேன். அவரா என்னை சமைக்க சொன்னா அன்று என் அத்தையும் எனக்கு அடுப்படியை விட்டு கொடுப்பார்... நான் சமைச்சா அத்தைக்கும் ரொம்ப விருப்பம். இதுல ஃபீல் பண்ண ஏதும் இருக்க மாதிரி எனக்கு தெரியல.

வெளிய வருவது புது ஊருன்றதால் ஒரு ஆர்வம்... கொஞ்ச நாள் போனா அவங்க நீங்க கூப்பிட்டாலும் வரலன்னு சொல்லிடுவாங்க. 3 மாசம் தானே அகுது... இப்பவே இது பிரெச்சனையா??? அவர் நடக்க முடியாதவர் என்று நீங்க சொல்லும் போது பாவம் வயதானவர் ஆசையாக வரேன்னு சொல்பவரை விட்டு போவதா?? வேண்டாம் தோழி... உங்க அப்பா என்று நினைத்து பாருங்க... பிரெச்சனையா தெரியாது. நம்ம அப்பா உடம்பு முடியலன்னா விட்டுட்டு போவோமா??? கூட இருக்க தானே செய்வோம்? எவ்வளவு வசதிகள் செய்து கொடுத்து அவரை அழைத்து போவதுன்னு பாருங்க.

உங்களை தேடி உங்க இடத்துக்கு வந்தவங்க மனசு நோகாம நடந்துக்கங்க. அது அவங்களுக்கு மட்டுமில்லை, உங்க கணவருக்கும் உங்க மேல அன்பை அதிகப்படுத்தும். காலையில் நேரமில்லை, அதான் 3 மாசம் தானே ஆகுது ஏன் கவலைன்னு ஒரே வரியில் சொல்லிட்டு போனேன்... இப்ப தான் நேரம் கிடைச்சுது. நான் ஏதும் தப்பா சொல்லி இருந்தா கோவிக்காதீங்க. உங்க கணவருக்கு நீங்க சமைக்கனும்னு நினைக்கிறது தப்பில்லை.. ஆனா அவங்க இப்ப தானே வந்து ஆர்வமா சமைச்சு போடுறாங்க... கொஞ்ச நாள் விட்டு கொடுங்களேன்னு தான் சொல்றேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அன்பு கல்ப்ஸ்,
எனக்காக இவ்வளவு பெரிய பதிலை பொறுமையோடு தந்தமைக்கு நன்றி. ஆமா நீங்க சொல்ற மாதிரி நான் தான் மெச்சூர் இல்லாம நடந்துக்குறேன்னு நினைக்குறேன். ஏன்னா திடீர்னு எனக்கு இருந்த உரிமை எல்லாம் போய்ட்ட மாதிரி இருக்கும். அதான் அப்ப அந்த டைம்ல ரொம்ப டென்ஷன் ஆய்டுவேன். ஆனா எதையும் வெளிக்காட்ட மாட்டேன், அமைதியா இருந்துடுவேன்.
எங்க அத்தைக்கு 4 பையன், 3 பொண்ணு.
கடைசி தம்பிக்கு 21 வயது ஆகுது. அவனுக்கு என் வீட்டுக்காரர் தான் வேலை வாங்கி கொடுத்தார்.
எங்க மாமாக்கு உடம்பு சரி கிடையாது ஆனாலும் அவர் பண்றத என்னால சில சமயம் சகிக்க முடியாது.
என் வீட்ல நான் 2 பேர். அதுனாலயோ என்னவோ எனக்கு இந்த பொறுமை கம்மி இனி பொறுமையா இருக்க கத்துக்குறேன்.
எனக்கு சமைக்கலாம் கல்யாணம் ஆன புதிதில் தெரியாது. அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா கத்துக்கிட்டேன். அம்மா சொல்ல சொல்ல.
எனக்கு என்ன பயம்னா? அவங்க அம்மா சமையலே சாப்டு என் சமையல் பிடிக்காம போய்டுமோன்னு தான்.
எங்க அத்தை சமைக்கும் போது யாரும் பக்கத்துல இருக்க விட மாட்டாங்க. அப்புறம் சும்மா உக்காந்துருக்கும் போது தான் நான் கேட்டு கேட்டு எழுதிப்பேன்.
இப்ப அறுசுவைல எதா பார்த்து பண்ணலாம்னு நினைப்பேன். ஆனா அது நல்லா வராது இது போட்டா நல்லா இருக்காது, நீ பண்றது தப்பு இப்டி பண்ணு. அளவு தப்பு இப்டி பக்கத்துல நின்னு சொல்லிட்டே இருப்பாங்க. அவங்க டேஸ்ட் தவிர எந்த உணவும் டேஸ்ட் பண்ண மாட்டாங்க. எனக்கு நான் வேலை செய்யும் போது யாரு பக்கத்துல இருந்தாலும் பிடிக்காது. அதான் ரொம்ப கோபம் வரும். அப்புறம் அந்த சமையல் நல்லா வந்தா ஒகே. இல்லேனா சொல்லி சொல்லி காண்பிப்பாங்க. எங்க வீட்ல லாம் இப்டி இருந்தது இல்ல அதுனால எனக்கு ரொம்ப எல்லாம் புதிசா தெரியுது.
இவங்க கிட்ட சொன்னா அவங்க அப்பிடிதான் நீ சும்மா இரு. ரெஸ்ட் எடு எஞ்சாய் பண்ணு. அப்டி சொல்வாரு.

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

அன்பு வனிதா,
நீங்க சொல்றது சரிதான். இனி நான் அவங்கள எங்க அம்மா அப்பாவா நினைக்க கத்துக்கணும். நீங்க சொல்றது எதும் தப்பு இல்ல. நான் தான் என்னை மாத்தணும்.
ஆனா என் மனச அதுக்கு தயார் பண்ணனும்.
இப்ப எங்கையும் அவங்கள விட்டு போறது இல்ல. கோவில் கூட கூப்டு தான் போறோம். நான் பொறுமையா இருந்தா வீடு நல்லா இருக்கும். கண்டிப்பா நீங்க சொல்ற மாதிரி விட்டு கொடுத்துப்போகிறேன்.

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

ஹாய் பிரியா,
பதிலுக்கு நன்றி பா ரொம்ப.
ம் அவங்க எங்கையும் போனது இல்ல. சின்னவயசுல இருந்தே கடுமையா உழைச்சவங்க. அதனால கூட இருக்கலாம். எல்லாம் நாம் அட்ஜெஸ்ட் பண்றதுல தான் இருக்கு. இனி ரொம்ப கண்டிப்பா பொறுமையா இருக்க டிரை பண்றேன்.

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

உங்க மனசு புரியுது... இப்ப தானே உறவுகளோட இருக்க ஆரம்பிக்குறீங்க, அட்ஜஸ்ட் பண்ணிக்க கஷ்டமா தான் இருக்கும். எல்லா பெண்களும் இந்த நிலையை தாண்டி தானே ஆகனும். கவலை வேண்டாம்... ஒரு நிமிஷ கோவம், வெறுப்பு, ஏமாற்றம்... இதை தள்ளி வெச்சுட்டு அமைதியா இருந்து பாருங்க... பழகிடும். அன்பா சொல்லி பாருங்க, அத்தை வாரம் ஒரு நாள் நானே தனியா சமைக்குறேன், எப்படி இருக்குன்னு சொல்லுங்க...னு. கண்டிப்பா விட்டு கொடுப்பாங்க... அதில் ஏதும் குறை சொன்னா அடுத்த முறை மாற்றி பாருங்க.

//இவங்க கிட்ட சொன்னா அவங்க அப்பிடிதான் நீ சும்மா இரு. ரெஸ்ட் எடு எஞ்சாய் பண்ணு. அப்டி சொல்வாரு.// - மனசுக்கு பிடிக்கலன்னா கூட அவர்கிட்ட சொல்லாதீங்க... உங்க மேல கொஞ்ச நாளில் கோவம் வர துவங்கிடும். அவர் சொல்ற மாதிரி பேசாம விட்டுட்டு எஞ்சாய் பண்ணுங்க :)

அவங்க கொஞ்ச நாள் சமைக்கிறதால் உங்க சமையல் பிடிக்காம போகாது... அது வேற சுவை, இது வேற சுவை... அவங்க மேல உள்ல அன்பு வேறு, உங்க மேல உள்ல அன்பு வேறு... அவங்களுக்கு அவர் மனதில் ஒரு இடம் இருக்கும், உங்களுக்கும் அவர் மனதில் ஒரு இடம் இருக்கும்... யார் இடத்தையும் யாரும் பிடிக்க முடியாது. தேவையில்லாம பயப்படதீங்க, குழப்பிக்காதீங்க. சரியா? :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

பிரச்சனைன்னாலும் இந்த இழை படிக்கிறதுக்கே இதமா இருக்கு.

மிகவும் சிரத்தையெடுத்து தெளிவாக பிரித்தாய்ந்து கல்பனா தீர்வு சொல்லிய விதம், எந்தவித ஆட்சேபனையுமின்றி உணர்ந்து அதை ஏற்றுக்கொண்ட தோழியின் மனப்பக்குவம் - எல்லாமே அருமை. விரைவில் எல்லா விதத்திலும் உங்கள் வாழ்க்கை சந்தோசமாக அமைய வாழ்த்துக்கள் தோழி.

பாராட்டுக்கள் கல்பனா. நிறைய பங்களிப்பை சிறப்பாக அளித்துக்கொண்டிருக்கிறீர்கள். தொடர்ந்து செயல்பட வாழ்த்துக்கள்.

அன்புடன்,
இஷானி

ஹாய் வனி,
/////ஒரு நிமிஷ கோவம், வெறுப்பு, ஏமாற்றம்...////
இந்த வார்த்தை ரொம்ப என்னை பாதிக்குது. ஆமால அந்த ஒரு நிமிடம் எப்டி எல்லாம் பிரிச்சிடும் உறவுகள. ரொம்பவே கரெக்ட். வனி ரொம்ப நன்றி. என்னால என்ன மாத்திக்க முடியும்னு எனக்கு இப்ப நம்பிக்கையா இருக்கு. கண்டிப்பா எங்க அத்தை கிட்ட நான் கேக்குறேன். ஒரு நாள் வாரத்துல என் சமையலுக்கு. கேட்டுட்டு அவங்க என்ன சொல்றாங்கனு கண்டிப்பா பதில் போடுறேன். :)))))

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

மேலும் சில பதிவுகள்