கொத்தமல்லி பிஸ்கட்

தேதி: September 21, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (3 votes)

பிஸ்கட் குறிப்புகளை விரும்பி கேட்ட நேயர்களுக்காக இந்த சுலப பிஸ்கட் தயாரிப்பு செய்முறை. இவையெல்லாம் இரண்டு மூன்று வருடங்களுக்கு முன்பு செய்தது. மற்ற குறிப்புகளை back up disk ல் இருந்து தேடி எடுத்து, பிறகு வெளியிடுகின்றேன்.

 

மைதா - 100 கிராம்
மார்வோ (பிஸ்கட் மார்ஜரின்) - 50 கிராம்
பொடித்த சர்க்கரை - 15 கிராம்
பச்சை மிளகாய் - 1 (நடுத்தர அளவில்)
பால் பவுடர் - 5 கிராம்
உப்பு - 3 கிராம்
அமோனியா அல்லது பேக்கிங் பவுடர் - ஒரு சிட்டிகை
கொத்தமல்லி இலைகள் - (காம்பில்லாமல் நறுக்கியது) 2 தேக்கரண்டி
தயிர் - ஒரு தேக்கரண்டி
லெமன் கலர் - ஒரு சிட்டிகை

மசாலா பிஸ்கட்டாக செய்ய விரும்பினால் கீழ்கண்டவற்றையும் சேர்த்து கொள்ளவும்.

மிளகு - 8 (பொடித்துக் கொள்ளவும்)
புதினா இலை - 12 இலைகள் (பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.)
சீரகம் - கால் தேக்கரண்டி (பொடித்துக் கொள்ளவும்)


 

தேவையான பொருட்களை, சரியாக அளந்து எடுத்துக் கொள்ளவும். பேக்கரிகளில் பிஸ்கட் தயாரிப்பில் பேக்கிங் அமோனியா (அமோனியா பைகார்பனேட், அமோனியா கார்பனேட்) பயன்படுத்துவார்கள். அமோனியா, சோடா உப்பு இவையெல்லாம் leavening agent களாக பயன்படுகின்றன. அதாவது மாவை மிருதுவாக்கி, மேல் எழும்ப செய்கின்றன. அமோனியாவுக்கு மாற்றாக பேக்கிங் பவுடர் அல்லது பேக்கிங் சோடா பயன்படுத்தலாம்.
இந்த படத்தில் உள்ளதுதான் பிஸ்கட் மார்வோ. வெண்ணெய்யையும், வனஸ்பதியையும் சேர்ந்து கலந்தாற்போல் இருக்கும். மிகவும் மிருதுவானது. மைதாவுடன் சேர்த்து பிசையும் போது, அது எவ்வளவு மிருதுவாக உள்ளது என்பதை உணரமுடியும்.
மைதாவை ஒன்றுக்கு இருமுறை சலித்துக் கொள்ளவும். இப்போது மார்ஜரினுடன் மைதாவை சிறிது சிறிதாக சேர்த்து கட்டிகள் இல்லாதவாறு கலந்து கொள்ளவும். மிகவும் அடித்து கலக்கக்கூடாது. கலக்கியால் லேசாக கலக்கினாலே போதுமானது. மார்வோ மிகவும் மிருதுவானது என்பதால் எளிதாக கலந்து விடும். (அப்புறம், கையெல்லாம் அசிங்கமா தெரியுது. பெரிசுபடுத்தாதீங்க. அடுத்த முறை எல்லா விரல்லயும் மோதிரம் போட்டுக்கிட்டு, நெயில் பாலீஸ் எல்லாம் அடிச்சிக்கிட்டு போட்டோ எடுக்க ட்ரை பண்றேன். முடிஞ்சா மெஹந்தியும் போட்டுக்கிறேன். ;-))
பிறகு அதனுடன் நறுக்கின கொத்தமல்லி, மற்ற பொருட்களை சேர்த்து கைகளால் மிருதுவாக பிசையவும். ஒரு சிட்டிகை லெமன் கலரை அரை தேக்கரண்டி நீரில் கரைத்து, மாவுடன் சேர்த்து பிசையவும். தயிர் மிகவும் தண்ணீராக இருக்கக்கூடாது. மாவு மிருதுவாக வரவில்லையென்றால், 20 மில்லிக்கு அதிகமாகாமல், சிறிதளவு தண்ணீர் சேர்த்து பிசைந்து கொள்ளவும். படத்தில் காட்டியுள்ள பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.
பிசைந்த மாவினை ஒரு வழவழப்பான பொருளில் (நல்ல அகலமான எவர்சில்வர் தாம்பலத்தின் பின்புறம் அல்லது எவர்சில்வர் தட்டின் பின்புறம்) மாவை வைத்து, 5 மிமி தடிமனுக்கு தேய்த்துக் கொள்ளவும். பிஸ்கட் கட்டர் கொண்டு அதனை கட் செய்யவும். கட்டர் இல்லையென்றால், ஏதேனும் மூடி அல்லது வேறு பொருட்களைக் கொண்டு, விரும்பிய வடிவில் நறுக்கிக் கொள்ளலாம். பிறகு பிஸ்கட் மேல்புறத்தில், ஒரு fork கொண்டு, மூன்று மூன்று மெல்லிய ஓட்டைகள் விழுமாறு குத்தி விடலாம்.
அடுத்து, அவனில் வைக்கப் போகும் ட்ரேயின் மீது சிறிது வெண்ணெய்யை தடவிக்கொள்ளவும். கட் செய்து வைத்துள்ள பிஸ்கட்களை வரிசையாக அரை இஞ்ச் அல்லது ஒரு இஞ்ச் இடைவெளி விட்டு அடுக்கவும். எல்லாப் பக்கமும் (குறைந்தது) அரை இஞ்ச் இடைவெளி இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும். பிஸ்கட் வெந்த பிறகு அளவில் பெரிதாகும். எனவே இடைவெளி அவசியம்.
ஓக்கே, இப்போது பிஸ்கட் அடுக்கிய ட்ரேயை அவனில் வைக்கவும். அதற்கு முன்பு அவனை 200 டிகிரி C க்கு, உள்ளே எதுவும் வைக்காமல் இரண்டு மூன்று நிமிடங்கள் சூடாக்கிக் கொள்ளவும். இது உள்ளிருக்கும் குளிர்ந்த காற்றை வெப்பமடையச் செய்து, உள்ளே தேவையான வெப்பத்தை உருவாக்கி, அவனை தயார் நிலையில் வைத்திருக்கும்.
170 டிகிரி C ல், 12 நிமிடங்கள் வேகவிட்டு எடுத்தால், சுவையான பிஸ்கட் தயாராகிவிடும். எதற்கும் அடிக்கடி பிஸ்கட் என்ன நிலையில் உள்ளது என்பதை சரி பார்த்துக் கொள்ளவும். பிஸ்கட் விரைவாக சிவக்க ஆரம்பித்தால் உடனே எடுத்துவிடவும். மிகவும் சிவக்க விடக்கூடாது. பிஸ்கட் வெந்து வரும்போது, வெளியில் இருந்து கண்ணாடி வழியாக பார்க்கும்போதே நமக்கு தெரியும். அளவில் சற்று பெரியதாகி இருக்கும். மாவு வெந்து வருவதையும் பார்க்க முடியும்.
லேசாக சிவக்கத் தொடங்கியதுமே எடுத்து காற்று படாமல், அறை வெப்பநிலையில் அப்படியே சில நிமிடங்கள் ஆறவிடவும். சூடு குறைந்ததும், கிரிஸ்ப்பி தன்மை வந்துவிடும். அதன்பிறகு அதனை சாப்பிடலாம். காற்றுபுகாத பாட்டிலில் போட்டு வைக்கலாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

ஆஹா பாபு அண்ணா;-)

கொத்தமல்லி பிஸ்கட் சூப்பரா இருக்குண்ணா;)

மெகந்தி, நெயில் பாலிஸ் எல்லாம் எப்ப போடப்போறீங்க;-)

Don't Worry Be Happy.

//(அப்புறம், கையெல்லாம் அசிங்கமா தெரியுது. பெரிசுபடுத்தாதீங்க. அடுத்த முறை எல்லா விரல்லயும் மோதிரம் போட்டுக்கிட்டு, நெயில் பாலீஸ் எல்லாம் அடிச்சிக்கிட்டு போட்டோ எடுக்க ட்ரை பண்றேன். முடிஞ்சா மெஹந்தியும் போட்டுக்கிறேன். ;-))// மெஹந்தி போடுறப்பவும் குறிப்பு வரும்ல! ;))))

‍- இமா க்றிஸ்

வாவ் கொத்தமல்லி பிஸ்கட் பாத்தாலே சாப்பிடனும் போல இருக்கே.அடுத்த மாசம் நானும் ஒவன் வாங்கனும்னு நினைத்திருக்கிறேன்.அப்ப நீங்க அனுப்பும் குறிப்புகள் தான் எங்க வீட்டில்.நிறய குறிப்புக்கள் அனுப்புங்க பாபு அண்ணா.வாழ்த்துக்கள்.

குறிப்பு சூப்பர். இன்னும் ஒரு வாரத்துல செய்து சாப்பிட்டுவிட்டு வந்து கமண்ட் போடுறேன்.

‍- இமா க்றிஸ்

கொத்தமல்லி பிஸ்கட் பார்க்கவே ஆசையா இருக்கு . சீக்கிரம் முயற்சி செய்து பார்கிறேன் . மார்ஜரின் மிக மிருதுவானதாக இருக்கும் என்று குறிப்பிடிருக்கிறீர்கள் . நானும் பாரிஸ் கார்னரில் ஒரு கடையில் 1 kgயாக கொடுத்ததை வாங்கி வைத்துள்ளேன் . ஆனால் அது நீங்கள் சொல்வது போல் இல்லாமல் மிக மிக கல்லு போல் உள்ளது . பிரீசரில் வைத்துள்ளேன் . வெளியில் வைத்தால் அது வெண்ணையை போல் இளகி விடுமா ?? அல்லது இளகாதா ?? பிஸ்கட் மார்ஜரின் என்று தான் கடையில் கேட்டு வாங்கினேன். வாங்கிய போதுமே அது கல் போல் மிக கனமானதாகதான் இருந்தது .

இல்லை. பிஸ்கட் மார்வோ என்று சொல்லப்படும் பிஸ்கட் செய்வதற்கான மார்ஜரின் மிகவும் இளகிய நிலையில் இருக்கும். நான் அதனை ப்ரிட்ஜில் வைத்ததே கிடையாது. ப்ளாஸ்டிக் பையில் கொடுப்பார்கள். அதை அப்படியே சாதாரணமாக ஒரு டின்னில் போட்டு மூடி வைத்திருப்பேன். நாட்கள் ஆனாலும் கெட்டியாகாது. அதே நிலையிலேயே இருக்கும்.

நான் ஏற்கனவே குறிப்பிட்டது போல், மார்ஜரின் என்று வெளியில் ஒன்றிரண்டு கடைகளில் கிடைப்பது எல்லாம் ஒரே மாதிரியாக இருக்கின்றன. அவை வனஸ்பதி மாதிரிதான் இருக்கின்றன. நானும் ஒருமுறை பெங்களூரில் ஒரு சூப்பர் மார்கெட்டில் மார்ஜரின் என்று வாங்கி வந்தேன். கேக்கில் எண்ணெய் வாடை வந்தது. எதற்கும் நீங்கள் வாங்கி வந்திருப்பதில் கொஞ்சம் எடுத்து, ரூம் டெம்பரேச்சரில் அல்லது சிறிது நேரம் வெயிலில் வைத்துப் பாருங்கள். இலேசாக இளகி வரலாம்.

நான் குறிப்பிட்டு இருந்த பேக்கரிகளில் பயன்படுத்தும் மார்ஜரின்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு அடர்வில் இருக்கும். பிஸ்கட் மார்வோ மிகவும் இளகியதாக இருக்கும். கேக்குக்கு பயன்படுத்துபவை சற்று கெட்டியாக இருக்கும். பப்ஸ்க்கு இன்னொரு வகை. நாளை சென்னை வருகின்றேன். சில நாட்கள் சென்னைவாசம்தான். அங்கு நல்ல மார்ஜரின்கள் எங்கு கிடைக்கும் என்பதை விசாரித்தறிந்து உங்களுக்கு தெரிவிக்கின்றேன்.

கொத்தமல்லி பிஸ்கட் சுப்பர் அடுத்த முறை மெகந்தி நைல் பாலிஷ் எல்லாம் போட்டு கிட்டு வாங்க என் கனவருக்கு காரம் ரொம்ப பிடிக்கும் ஸ்வீட் பிஸ்கட் சாப்பிட மாட்டாங்க இது செய்து ச்ர்ப்ரைஸ் குடுக்கனும் ஆனா மார்ஜரின் இல்ல வாங்கியது செய்யனும் விருப்ப பட்டியலில் சேர்த்துட்டேன்

சகோதரி ரம்யா ஸ்ரீனி அவர்களுக்கு,

சென்னையில் மேடவாக்கம், அடையாறு இந்த இரண்டு இடங்களில் இருப்பேன். ஒருவேளை இதற்கு சற்று அருகாமையில் நீங்கள் இருந்து, என்னை சந்திக்க இயலும் என்றால், இங்கே எனது நண்பரின் பேக்கரியில் இருந்து மார்வோ வாங்கி வருகின்றேன். வந்து பெற்றுக்கொள்ளுங்கள். நீங்கள் இருக்கும் இடம் தேடி வந்து கொடுப்பதற்கு எனக்கு சந்தர்ப்பம் கிடைக்குமா என்பது சந்தேகம். நிறைய ப்ரோகிராம்களை வைத்துக் கொண்டு வருகின்றேன்(வருகின்றோம்:-)).

டீ காஃபிக்கு ஏத்த சூப்பர் பிஸ்கட்
வீட்டிலேயே செய்யும் எளிய முறையில் விளக்கம்
வாழ்த்துக்கள் :)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

கொத்துமல்லி வாசம் இங்கு வரை மனக்குது.

Jaleelakamal

வாவ்.....சூப்பர் அப்பு.....

நல்ல மசாலா சுவையுடன் பிஸ்கட் கமகமக்குது.....

(எனக்கென்னவோ சந்தேகமாகவே இருக்கு......அந்த கையை பார்க்க ஒரு பெண் பிள்ளையின் கை போல இருக்கே?....நீங்க வேற இது இரண்டு மூன்று வருட பழைய குறிப்பு என்று வேற சொல்றீங்க....)

கண்டிப்பாக செய்து பார்த்து விட்டு வந்து (பிஸ்கட் பற்றி மட்டும்) சொல்கிறேன்.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

;))))))))) சந்தேகம்லாம் கேட்கப்படாது. பேக் பண்ணமா, சாப்பிட்டமா, கமண்ட் போட்டமான்னு போய்ட்டே... இருக்கணும். ;)))
//கேட்டவை எல்லாம் நம்பாதே// ;))) இது உங்க வசனம்.

‍- இமா க்றிஸ்

ரொம்ப அருமையா இருக்கு உங்க கொத்தமல்லி பிஸ்கட் ‍குறிப்பு மற்றும் செய்முறை!
தெளிவான படங்கள் + நிறைய துல்லியமான‌ விளக்கங்களுடன் அழகா செய்து காட்டியிருக்கிங்க! வாழ்த்துக்கள்!!

அன்புடன்
சுஸ்ரீ

அட்மின் ,
இப்பொழுது தான் உங்களது தகவலை பார்த்தேன் . தாமதத்திற்கு மன்னிக்கவும்.இமா அவர்களுக்கு எனது நன்றிகள் , அவர்கள் சொன்னதால் தான் கவனித்தேன் . காலை முதல் நெட் வர்க் செய்யவில்லை . சில நாட்கள் சென்னை வாசம் என்று குறிப்பிடிருக்கிறீர்கள் , சனிக்கிழமை முடியுமா ???

சரி தான் இமா....என்னக்கெதுக்கு இந்த வேலை ;)))) (இதை நான் கவனிக்க மறந்துட்டேன் //நம்பினதெல்லாம் சொல்லாதே //)

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

முதலில் வந்து வாழ்த்து தெரிவித்த சகோதரி ஜெயலெட்சுமி அவர்களுக்கு முதல் நன்றிகள். அதனைத் தொடர்ந்து வாழ்த்து & பாராட்டு தெரிவித்துள்ள சகோதரிகள் இமா, சுந்தரி அர்ஜுன், ரம்யா ஸ்ரீனி, மெர்சானா, ரம்யா கார்த்திக், ஜலிலாக்கா, லாவண்யா மற்றும் சுஸ்ரீ அனைவருக்கும் எனது நன்றிகள்.

//அந்த கையை பார்க்க ஒரு பெண் பிள்ளையின் கை போல இருக்கே?....நீங்க வேற இது இரண்டு மூன்று வருட பழைய குறிப்பு என்று வேற சொல்றீங்க....)//

உண்மைதான். போட்டோவில தெரியற கை விசயத்துல கொஞ்சம் சொதப்பி இருக்கேன். இப்பத்தான் நானே கவனிக்குறேன். அந்த கை நம்ம வீட்டுக்கார அம்மா கை... போட்டோவுக்காக எடுத்தது. :-) ஒவ்வொரு குறிப்புக்கும் 20, 25 போட்டோஸ்க்கு மேலே எடுத்து, அதுல செலக்ட்டடா சில போட்டோஸ் போடுறோம். என்னோட கையும் நிறைய போட்டோஸ்ல தெரியும். ஆனா, இந்த கை என்னோடது இல்லை. இந்த மாதிரி சில போட்டோஸ் நான் எடுக்கிறப்ப, அதை செய்யற மாதிரி என் ஒய்ஃபோ, இல்லை ஆபிஸ்ல உள்ளவங்களோ டெமோ காமிச்சு இருப்பாங்க. என் மானிட்டர்ல எல்லா கையுமே என் கை கலர்லதான் தெரிஞ்சது. (கண் பிரச்சனைக்காக ரிசொல்யூசன் கொஞ்சம் டல்லா வச்சிருப்பேன். அதுக்கு மேல anti glare screen வேற இருக்கும். :-)) என் கையுன்னு நினைச்சுதான் அந்த கமெண்ட் கொடுத்தேன். இப்ப இங்க சென்னையில் என் ப்ரதர் வீட்டு சிஸ்டம்ல இருந்து பார்க்கிறப்பதான் (உங்க கமெண்ட் பார்த்துட்டு) எனக்கே தெரிய வந்துச்சு. மத்தபடி செய்தது எல்லாம் நான்தாங்க. அதுல எல்லாம் சந்தேகம் கூடாது. :-)

ரெண்டு மூணு வருசத்துக்கு முன்ன எடுத்ததுன்னு சொன்னதும் உண்மைதான். நான் OTG வாங்கின கையோட வரிசையா நிறைய செஞ்சு எடுத்தது. அது வாங்கியே 3 வருசம் இருக்கும். சென்னை கெட்டூகெதர் முடிஞ்சு ஊருக்கு திரும்பும்போது, ரங்கநாதன் ஸ்ட்ரீட் சரவணா ஸ்டோரில் வாங்கினதா ஞாபகம்.

சகோதரி ரம்யா ஸ்ரீனி அவர்களுக்கு,

மன்னிக்கவும். நான் இன்று காலை புறப்பட்டு மாலை சென்னை வந்துவிட்டேன். நேற்று நெடுநேரமாகியும் தங்களிடம் இருந்து பதில் இல்லாததால், ஒருவேளை நீங்கள் எதுவும் தவறாக நினைத்துவிட்டீர்களோ என்ற சந்தேகம். அப்படி வாங்கி வருகின்றேன் என்று நான் சொல்லி இருக்கக்கூடாதோ என்று வேறு குழம்பினேன். நீங்கள் அந்த பதிவை பார்க்காமல் இருந்திருக்கலாம் என்ற சந்தேகமும் இருந்தது. இந்த குழப்பங்களினால் நான் மார்ஜரின் வாங்கவில்லை. நண்பர் மூலமாக இங்கே சென்னையில் எங்காவது வாங்க இயலுமா என்று பார்க்கின்றேன். இயலாதபட்சத்தில், அடுத்த முறை வரும்போது வாங்கி வருகின்றேன்.

சில நாட்கள் என்று நான் குறிப்பிட்ட கால அளவு, குறைந்த பட்சம் ஒரு வாரம். கண்டிப்பாக ஒரு வாரம் இங்கே இருப்போம். வந்த வேலை முடிய தாமதமானால் 15, 20 நாட்கள் அல்லது அதற்கு மேல் அதிக நாட்கள் இருக்க வேண்டிய நிலை வரலாம். உறுதியாக சொல்ல முடியவில்லை.

பாபு அண்ணா,
ஆஹா வரிசையா குறிப்பு!!!
வாழ்த்துக்கள்.

என்றும் அன்புடன்,
கவிதா

எளிமையான குறிப்பு ஓவன் வெச்சிக்கிட்டு கேக் மட்டும்தான் செய்தேன். இந்த பிஸ்கட்டும் செய்து பார்க்கிறேன் .

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

//அப்புறம், கையெல்லாம் அசிங்கமா தெரியுது. பெரிசுபடுத்தாதீங்க. அடுத்த முறை எல்லா விரல்லயும் மோதிரம் போட்டுக்கிட்டு, நெயில் பாலீஸ் எல்லாம் அடிச்சிக்கிட்டு போட்டோ எடுக்க ட்ரை பண்றேன். முடிஞ்சா மெஹந்தியும் போட்டுக்கிறேன். ;-)// - ஹஹஹா... யார் கை அது? உங்க கை மாதிரி தெரியலயேன்னு நினைச்சேன்... செண்பகா கையா... ஒன்னும் இல்லாமலே அந்த கை அழகா தானே இருக்கு... ;)

ரொம்ப வித்தியாசமான குறிப்பு... கேட்டதே இல்லை இதுவரை. சூப்பரா இருக்கு. ரொம்ப பிடிச்சிருக்கு. ட்ரை பண்ணனும் எல்லாம்... ஊருக்கு போனாதான் அவன் இருக்கும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அட்மின்
மார்ஜரின் வாங்கி வரவில்லை என்றால் பரவாயில்லை. சென்னையில் நீங்கள் சொல்வது போல் உள்ள மார்ஜரின் எங்கு கிடைக்கும் என்று சொன்னால் போதும் . ஏனென்றால் ஒவ்வொருமுறையும் உங்களை வாங்கச்சொல்லி வாங்கினால் நன்றாக இராது . அதனால் அப்படி சொன்னேன் .
இதில் தவறாக நினைப்பதற்கு ஒன்றுமே இல்லை . நான் இந்த அறுசுவை தளத்தை நீண்ட நாட்களாக பார்த்து வருகிறேன் . உங்களிடம் இதற்கு முன் உரையாடியது இல்லை . ஆனால் மற்றவர்களுக்கு நீங்கள் கொடுக்கும் பதில்களை படித்திருக்கிறேன் . அதன் மூலம் உங்களின் மேல் எனக்கு மரியாதை உள்ளதே தவிர தவறாக நினைக்கவரவில்லை .
அது மட்டுமின்றி நீங்கள் நாகபட்டினத்தில் இருக்கிறீர்கள் என்று தளத்தின் மூலம் தெரிந்து கொண்டேன் . நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் சென்னை என்றாலும் , எனது தந்தையின் ஊர் பொறையாறு அருகே உள்ள காட்டுசேரி . எனது அக்கா இருக்கும் ஊர் காரைக்கால் . சென்ற மாதம் இரண்டு முறை காரைக்கால் வந்திருந்தோம் .

சொல்ல வார்த்தைகளே இல்லேன்னா. அவளோ அழகா பண்ணி விளக்கி காட்டி இருக்கீங்க.

பிஸ்கட் மார்ஜரின் - இது ஒன்னு மட்டும் தான் எங்க கிடைக்கும்ன்னு தெரியல. விசாருச்சு பாக்கறேன்னா.... கூட்டாஞ்சோறுக்கு விரைவில் எதிர்பார்க்கிறோம்ன்னா....

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

இந்த குறிப்பு அட்மின் அண்ணாவின் குறிப்பு...இதான் அண்ணாவின் ஐடி..

மாற்றம் ஒன்றே மாறாதது

அபி

நன்றி அபி உங்களுடைய பதிலுக்கு