
தேதி: June 27, 2006
பரிமாறும் அளவு: 4 நபர்கள்
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
அனைவருக்கும் பிடித்தமான ஒரு இனிப்பு. அதிகம் வெண்ணிறமாகத்தான் செய்யப்படும். இங்கே வண்ணம் கலந்து, சுவையும் அழகும் கூட்டப்பட்டுள்ளது.
தேங்காய்ப் பூ - ஒரு கப்
சீனி - ஒரு கப்
முந்திரி - 6
கடலைமாவு - 2 மேசைக்கரண்டி
நெய் - 4 மேசைக்கரண்டி
ஏலக்காய் - 2
கலர் பவுடர் - கால் தேக்கரண்டி
தேங்காயைய் துருவி ஒரு கப் அளவிற்கு தேங்காய்ப்பூ எடுத்துக் கொள்ளவும். மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் தயாராய் எடுத்து வைக்கவும். ஆரஞ்சு வண்ணப்பொடி அல்லது மஞ்சள் வண்ணப்பொடி பயன்படுத்தவும்.

ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் தேங்காய்த் துருவலை கொட்டி, அதில் அரை கப் சீனியையும் கொட்டி, கலர் பவுடர் சேர்த்து கிளறவும். தீயின் அளவு மிதமாக இருக்கவேண்டும்.

இரண்டு நிமிடங்கள் கிளறியவுடன் மீதமுள்ள சீனியையும் கொட்டி மேலும் இரண்டு நிமிடங்கள் விடாது கிளறவும்.

சீனி நன்கு பாகாய் கரைந்து, தேங்காய்த் துருவலுடன் ஒன்று சேர்ந்து சற்று நீர்த்தாற்போல் வரும் வரை கிளறவும்.

ஒரு வாணலியில் நெய் விட்டு உருக்கவும். எல்லா நெய்யையும் ஊற்றாமல், அதில் பாதி அதாவது இரண்டு மேசைக்கரண்டி மட்டும் ஊற்றவும்.

கடலைமாவை அந்த நெய்யில் இட்டு பிரட்டி, சுமார் 2 நிமிடங்கள் விடாது கிளறவும். தேங்காய் சீனிக் கலவை வேகும் போதே, மற்றொரு அடுப்பில் இதை தயாரிக்கவும்.

இரண்டு நிமிடங்கள் கழித்து கடலை மாவு சற்று வெந்ததவுடன் எடுத்து, தேங்காய் சீனிக் கலவையில் சேர்க்கவும். சுமார் 3 நிமிடங்கள் விடாது நன்கு கிளறி வேகவிடவும். மீதமுள்ள நெய்யையும் சேர்த்து கிளறவும். ஏலக்காய் விரும்புகின்றவர்கள் அதை பொடித்து கடலைமாவுடன் சேர்க்கவும்.

எல்லாம் வெந்து சற்று இளக்கமாக வந்தவுடன் எடுத்து, ஒரு நெய் தடவிய தட்டில் கொட்டி சற்று கனமாகப் பரப்பவும்.

பர்பி சற்று சூடாக இருக்கும் போதே விரும்பிய வடிவில் நறுக்கித் துண்டங்கள் போட்டுக் கொள்ளவும்.

மேலே முந்திரி வைத்து அலங்கரிக்கவும். சற்று ஆறியவுடன் துண்டங்களை எடுக்கவும். நாவிற்கு இனிமையான தேங்காய் பர்ஃபி தயார்.

Comments
தேங்காய் பர்பி
கலர்புல்லா சாப்பிட தூண்டும் வகையில் இருந்ததால் செய்தேன். மிகவும் அருமை. பாராட்டுகள்.
லாவண்யா
லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!
Tastyarku
Ana yenaku thundukala vara maritherilaye.ipathan senji mudichen.
Kalam pon ponrathu
மிகவும் இலகுவான குறிப்பு
மிகவும் இலகுவான குறிப்பு தந்தமைக்கு நன்றி,நான் இதை செய்து பார்த்த பின் ருசியை பற்றி கூறுகிறேன்.நன்றி.