
தேதி: July 2, 2006
பரிமாறும் அளவு: 4 நபர்கள்
ஆயத்த நேரம்: 15 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 25 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
சாம்பார் சாதம், ரச சாதம், தயிர் சாதம் என்று எல்லா வகை சாதத்திற்கும் தொட்டுக்கொள்ள ஒரு சுவையான வறுவல் இந்த வாழைக்காய் வறுவல். மிக எளிதாக கால் மணி நேரத்தில் செய்து விடலாம். இதன் செய்முறையை உங்களுக்கு படங்கள் மூலம் சொல்லித் தருகின்றார் திருமதி. சித்ரா செல்லதுரை அவர்கள்.
சிறிய வாழைக்காய் - மூன்று
எண்ணெய் - மூன்று டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை - இரண்டு கொத்து
சோம்பு - ஒரு டீ ஸ்பூன்
பூண்டு - மூன்று பல்
சின்ன வெங்காயம் - இரண்டு
உப்பு - ஒரு டீ ஸ்பூன்
மிளகாய்த்தூள் - ஒரு டேபிள் ஸ்பூன்
மஞ்சள் பொடி - அரை டீ ஸ்பூன்
பூண்டு, வெங்காயத்தை தோலுரித்து எடுத்துக் கொள்ளவும். தேவையான இதரப்பொருட்களையும் தயாராய் வைத்துக் கொள்ளவும்.

வாழைக்காயை மேல்தோல் நீக்கி சற்று கனமான துண்டுகளாக நறுக்கவும்.

சோம்பு, பூண்டு, சின்னவெங்காயம் ஆகியவற்றை மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து, சிறிது தண்ணீர் விட்டு விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

அரைத்த விழுதை வாழைக்காய்த் துண்டுகளில் சேர்த்து, பிறட்டி சுமார் பதினைந்து நிமிடம் ஊற வைக்கவும்.

அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி, கறிவேப்பிலை போட்டு, மசாலாவில் பிறட்டி வைத்துள்ள வாழைக்காய் துண்டுகளை போட்டு பிறட்டவும். அடுப்பை சிம்மில் வைத்து அடிக்கடி கிளறி பத்து நிமிடம் வேக வைக்கவும்.

நன்றாக வெந்து சிவந்ததும் இறக்கவும். இறக்கும் சமயம் ஒரு டீ ஸ்பூன் அரிசி மாவு வேண்டுமானால் தூவி மேலும் மூன்று நிமிடம் பிறட்டி இறக்கலாம். ருசியான வாழைக்காய் வறுவல் தயார்.

இந்தக் குறிப்பினை அறுசுவை நேயர்களுக்காக வழங்கி, அதன் செய்முறையையும் படங்களுடன் விளக்கியுள்ளவர், குவைத்தில் வசிக்கும் திருமதி. சித்ரா செல்லதுரை அவர்கள். அறுசுவை நேயர்களுக்காக நூற்றுக்கும் மேலான செட்டிநாடு மற்றும் பாரம்பரிய தமிழ் உணவுகளை வழங்கியுள்ள இவர், தொடர்ந்து ஏராளமான குறிப்புகளை படங்களுடன் உங்களுக்கு தர இருக்கின்றார்.

Comments
நல்ல சுவை. நன்றி
இவ்வளவு கனமான துண்டுகள் வெந்து விடுமா? என்கிற சந்தேகத்துடன் தான் செய்து பார்த்தேன். நன்றாக வெந்து, மிக சுவையாக வந்தது. முறுகலாகவும் இருந்தது.
நன்றி
Portia ManoharI dont get
Portia Manohar
I dont get raw banana like india in jakarta,does this recipe goes well with potato.Pls do let me know Mrs.Chitra.
Thanks in Advance
Portia Manohar