மரவள்ளி வடை - 2

தேதி: December 29, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.4 (5 votes)

 

துருவிய மரவள்ளிக் கிழங்கு - 2 கப்
அரிசி - ஒரு கப்
கடுகு - ஒரு தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 6
உப்பு - ஒரு தேக்கரண்டி
பெருங்காயத் துண்டு - ஒரு குண்டு மணிஅளவு


 

கிழங்கை துருவி வைத்துக் கொள்ளவும். அரிசியை சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் அரிசியை போட்டு மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி 2 மணிநேரம் ஊற வைக்கவும். இதர பொருட்களை தயாராக எடுத்துக் கொள்ளவும்.
அரிசி ஊறியதும் எடுத்து தண்ணீர் முழுவதையும் சுத்தமாக வடித்து விடவும். பிறகு கிரைண்டரில் அரிசி, துருவிய கிழங்கு இரண்டையும் போட்டு கெட்டியாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
வாணலியில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பெருங்காயத்துண்டை போட்டு பொரித்து எடுத்துக் கொள்ளவும். பிறகு மிக்ஸியில் பச்சை மிளகாய், உப்பு, பொரித்த பெருங்காயத் துண்டு போட்டு விழுதாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
அதே வாணலியில் மீண்டும் ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு போட்டு தாளித்து அதை அரைத்த மாவுடன் போட்டு அதனுடன் அரைத்த விழுதையும் போட்டு நன்கு ஒன்றாக கலந்துக் கொள்ளவும்.
அதன் பின்னர் ஒரு பிளாஸ்டிக் கவரில் எண்ணெய் தடவிக் கொண்டு கலந்து வைத்திருக்கும் மாவை சிறிய எலுமிச்சை அளவு உருண்டையாக எடுத்து வைத்து வடையை விட சற்று மெல்லியதாக தட்டிக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி தட்டி வைத்திருக்கும் வடையை போட்டு பொரிக்கவும். எண்ணெயில் போட்டவுடன் கரண்டியால் எண்ணெயை எடுத்து வடையின் மேல் ஊற்றினால் உப்பி வரும். ஒரு நிமிடம் கழித்து திருப்பி விடவும்.
பிறகு எண்ணெயின் சத்தம் அடங்கியதும் ஒரு நிமிடம் கழித்து கரண்டியால் எடுத்து எண்ணெயை வடிகட்டி விட்டு எடுத்து விடவும்.
சுவையான மரவள்ளிக்கிழங்கு வடை தயார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

ஜெயலக்ஷ்மி மேடம், உங்க குறிப்பெல்லாம் ரொம்ப நல்லாயிருக்கும் நான் விரும்பி பார்த்து செய்வதுண்டு. எனக்கு இந்த வடை கூட ரொம்ப பிடிக்கும்... இதில் சேர்த்து இருப்பது பச்சரிசியா? புழுங்கல் அரிசியா? முடிந்தால் சொல்லுங்களேன்.

மரவள்ளி வடை சூப்பரா இருக்கு! எளிமையான நல்ல குறிப்பு. வாழ்த்துக்கள்!

அன்புடன்
சுஸ்ரீ

எங்க அம்மா இது மாதிரி அரிசி வடை செய்வாங்கே... அந்த நியாபகம் வருது :) சத்தான வடை, மரவள்ளி கிழங்குல இப்படிலாம் செய்யலாம்னு இப்ப தான் தெரிஞ்சுக்கறேன். நல்ல சுவையான குறிப்புக்கு மிக்க நன்றி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா