மொச்சைக்கொட்டை சுண்டல்

தேதி: January 27, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

Average: 3 (1 vote)

 

மொச்சைக் கொட்டை - 2 கப்
தேங்காய் துருவல் - 5 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
வறுத்து பொடி செய்ய:
எண்ணெய் - 2 தேக்கரண்டி
பெருங்காயம் - சிறு துண்டு
தனியா - 2 தேக்கரண்டி
மிளகாய் வற்றல் - 4
தாளிக்க:
எண்ணெய் - 2 தேக்கரண்டி
கடுகு - ஒரு தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 2
கறிவேப்பிலை


 

மொச்சைக்கொட்டையை தேவையான அளவு உப்பு சேர்த்து குக்கரில் வேக விடவும்.
வறுக்கக் கொடுத்துள்ள சாமான்களை எண்ணெயில் வறுத்து மிக்ஸியில் பொடி செய்யவும்.
வாணலியில் எண்ணெய் சேர்த்து கடுகு, பச்சை மிளகாய், கறிவேப்பிலை தாளிக்கவும்.
அதில் வெந்த மொச்சைக்கொட்டையைப் போட்டு கிளறவும். அதில் பொடியைப் போட்டு, தேங்காய் துருவலையும் சேர்க்கவும்.
நன்கு கிளறி இறக்கவும்.

இந்த சுண்டலில் விருப்பப்பட்டவர்கள் வதக்கிய வெங்காயம், துருவிய கேரட் சேர்த்தும் செய்யலாம். வித்யாசமான சுவையில் ருசியாக இருக்கும். புரோட்டீன் சத்து நிறைந்தது. மொச்சைக்கொட்டை அதிகம் கிடைக்கும் சீஸன் இது. சத்தான இந்த சுண்டல் செய்வதும் எளிது. குழந்தைகள் முதல் முதியோர் வரை அனைவரும் சாப்பிட ஏற்றது.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

மொச்சை இருக்கின்றது. கத்தாரில் இப்போ ரொம்பவே கூலடிக்கிறது மாலை வேலையில் சூடாகச் சாப்பிட அருமையாக இருக்கும்.

குறிப்பை வெளியிட்ட அறுசுவைக்கு நன்றிகள் பல..

கிஃபா...முதலாவதாக வந்து கருத்து சொன்னமைக்கு நன்றி...செய்து பாருங்கள்...

சுண்டல் நல்லா இருக்கு. ஒரு சின்ன சந்தேகம் பச்சை மொச்சை பெரிய அவரைக்காயிலிருந்து தனியா பிரித்து எடுத்து செய்தீங்களா.

வினோஜா மொச்சைக் கொட்டை அவரைக் காயிலிருந்து எடுப்பதில்லை. மொச்சைக் கொட்டை என்ற பெயரிலேயே கிடைக்கும்.அதை வாங்கி உரிக்க வேண்டும். இப்போதான் மொச்சைக் கொட்டை சீஸன். எல்லா ஊரிலும் நிறய கிடைக்குமே?
காய்ந்த மொச்சைக் கொட்டையும் கடைகளில் கிடைக்கும். சீஸன் இல்லாத சமயத்தில் அதை வாங்கி ஊற வைத்தும் இதே போல் சுண்டல் செய்யலாம்.

ராதாம்மா நான் முதல் முறையா உங்க கூட பேசறேன்னு நினைக்கிறேன். உங்களுடன் பேசுவதில் மகிழ்ச்சி. நான் கேட்க நினைத்த கேள்விகளுக்கு முன்னவே பதில் கொடுத்திட்டீங்க. இது கண்டிப்பாக பச்சை மொச்சைதான் இல்லையா? நான் இதை பார்த்தது கூட இல்ல, இங்கே பார்க்க ரொம்ப அழகா இருக்கு... காய்ந்ததில் செய்யும் பொழுது அப்படியே ஊறவைத்து வேகவைக்கணுமா? இல்லை வறுத்து விட்டு ஊறவைத்து வேக வைக்கணுமா? எனக்கு மொச்சை குழம்பு பிடிக்கும்ன்னு செய்வேன்.... சில நேரங்களில் கசப்பது போல இருக்கு... அதற்கு என்ன காரணம்ன்னு தெரிஞ்சா சொல்லுங்களேன்... அப்படியே இதையும் செய்து பார்த்துடுவேன்.

நன்றி உமா....எனக்கும் முதல்முறையாக உங்களுடன் பேசுவது மகிழ்ச்சியாக உள்ளது.

நீங்கள் சொன்ன மாதிரி இது பச்சை மொச்சைக்காய்தான். அதை உரித்தால் இந்த பருப்பு கிடைக்கும். இது கடைகளில் காய்ந்த மொச்சைக்கொட்டை என்ற பெயரில் கிடைக்கும். அதை இரவே ஊறவைத்துவிட்டு (கொத்துக்கடலை போல்) இதே போல் வேகவிட்டு சுண்டல் செய்யலாம்.

பச்சை மொச்சைக்கொட்டையை 3 மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து உரித்தால் உள்ளிருக்கும் பருப்பு கிடைக்கும். இதை வைத்தும் இதே போல் சுண்டல் செய்யலாம். மிக ருசியாக இருக்கும். ஆனால் அதில் வேலை அதிகம்; காயும் நிறய வேண்டும்.

கசப்பதற்கு காரணம் அது சரியான முறையில் காய வைக்கப்படாததால் இருக்கலாம்; அல்லது சில காய்களே கசப்புத் தன்மையுடன் இருக்கலாம். ஊற வைத்த மொச்சைப்பருப்பை வாயில் போட்டுப் பார்த்தால் கசப்பை கண்டுபிடிக்கலாம்.

நீங்கள் எந்த ஊரில் இருக்கிறீர்கள்? இந்த மொச்சை இங்கெல்லாம் இப்பொழுது நிறய கிடைக்கும். அதனாலேயே இந்த சுண்டல் செய்முறை எழுதினேன். செய்து பார்த்து சொல்லுங்கள் உமா!

ராதாம்மா, மொச்சைகொட்டையை பார்த்ததும் டார்ட்டாய்ஸ் சுத்த ஆரம்பிச்சுருச்சி ;) சின்ன வயசுல பாட்டி வீட்ல அவரைக்காயாவே வாங்கி கழுவிட்டு அப்படியே வேக வைப்பாங்க. வேக வைக்கும் போது வரும் மணம் ரொம்ம்ப நல்லாருக்கும். டேஸ்டும் அமோகம். பெரும்பாலும் நைட்ல தான் சாப்பிடுவோம். வாசல்ல நடுவே அவரைக்காய் பாத்திரத்தை வச்சுட்டு சுத்தி எல்லாரும் உட்கார்ந்துட்டு பாட்டி பங்கு போட்டு தர அப்படியே (அதுல,வைட்டமின் ஏ புழு, வைட்டமின் பி வண்டு இப்படி இருந்தாலும் கண்டுக்காம) சாப்பிடுவோம். அதான் அவ்ளோ டேஸ்டா இருந்திருக்கும் போல ;) அதையே உறிச்சு ஓவர் நைட் ஊற வச்சு மேல் தோலை பிதுக்கி எடுத்து மறுநாள் காலை இட்லிக்கு பிதுக்கு பயிர் குருமா வைப்பாங்க பாருங்க..அடாடா... டேஸ்ட்டி..டேஸ்டி... பிதுக்கி எடுக்கறதால பிதுக்கு பயிருன்னு சொல்வாங்க.

உங்க குறிப்பும் ரொம்பவே வித்யாசமா இருக்கு. மிளகாய், தனியா,பெருங்காயம் அரைச்சு போட்டு நல்ல மணமா இருக்கும். ஊருக்கு வந்தவுடனே இதெல்லாம் செய்து பார்க்க போறேன். சாப்பிட கண்டிப்பா உங்களையும் அழைப்பேன். பயப்படாம வரனும் ;) வாழ்த்துக்கள்.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

கல்பனா...எப்போ இங்க வரப்போறனு முன்னாலயே சொல்லிடு....நான் உன் வீட்டுக்கு சாப்பிட ஆஜர் ஆயிடுவேன்.ஆனா.......அந்த முழுசா வேகவைக்கற வேலையெல்லாம் வேண்டாம்!! ( அதுதான் பயமா இருக்கு!!!!) உரிச்சு பருப்பாவே செஞ்சு போடு....நான் சாப்பிட ரெடி!!!

ராதாம்மா சுண்டல் ரொம்ப ரொம்ப சூப்பர் எங்களுக்கு பிடிச்ச சுண்டல் நானும் செய்வேன் ஆனால் வறுத்த பொடி சேர்த்ததில்லை இனி இதுபோல செய்து பார்க்கிறேன் சுவையான சத்தான சுண்டல் வாழ்த்துக்கள்.கைவசம் மொச்சைக்காயும் இருக்கு :))

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

உங்கள் பதிலுக்கு நன்றிம்மா. பச்சைமொச்சைக் பார்த்தது கூட கிடையாது. இங்கு கிடைத்தால் செய்து பார்க்கிறேன்.