உளுத்தங்களி

தேதி: March 30, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (9 votes)

 

பச்சரிசி - 4 கப்
தோலுடன் கூடிய உளுத்தம்பருப்பு - 1 கப்
வட்டு கருப்பட்டி - 2
நல்லெண்ணெய் - 1 கப்
நெய் - 1/4 கப்


 

பச்சரிசியையும், தோலுடன் கூடிய கறுப்பு உளுத்தம்பருப்பையும் ஒரு பாத்திரத்தில் ஒன்றாகப் போட்டு, மாவு மிஷினில் கொடுத்து, மாவாகத் திரித்து, வைத்துக் கொள்ளவும்.
இதுதான் களி மாவு.
திரித்த மாவில் இருந்து ஒரு கப் எடுத்துக் கொள்ளவும்.
கருப்பட்டியை, தூளாகத் தட்டி, ஒன்றரை முதல் இரண்டு கப் வரை எடுத்துக் கொள்ளவும்.
அடுப்பில் 2 கப் தண்ணீரைக் கொதிக்க வைத்து, கருப்பட்டித் தூளை அதில் போட்டு, கரைய விடவும்.
கரைந்தால் போதும், பாகு வைக்க வேண்டாம்.
சிறிது ஆறியதும், கருப்பட்டி தண்ணீரை, வடிகட்டியால் வடிகட்டிக் கொள்ளவும்.
குக்கருக்குள் வைக்கக் கூடிய ஒரு பாத்திரத்தில், இந்தத் தண்ணீரை ஊற்றவும்.
இதில், களி மாவைக் கொட்டி, கட்டியில்லாமல் கரைக்கவும்.
அரை கப் நல்லெண்ணெயையும் இதில் ஊற்றி, கலந்து கொள்ளவும்.
குக்கருக்குள் இந்தப் பாத்திரத்தை வைத்து, மூடி, 3 - 4 விசில் வர விடவும்.
ஆவி அடங்கியதும், குக்கரைத் திறந்து, பாத்திரத்தை வெளியே எடுக்கவும்.
ஒரு மரக் கரண்டியால், நன்றாகக் கிளறவும்.
தண்ணீரைத் தொட்டுக் கொண்டு, தொட்டுப் பார்த்தால், அதிகம் ஒட்டாமல், வெந்திருக்க வேண்டும்.
கை பொறுக்கும் சூடு ஆனதும், கைகளில் எண்ணெய் தடவிக் கொண்டு, ஆரஞ்சுப் பழ அளவுக்கு, உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.
பரிமாறும்போது, ஒரு கிண்ணத்தில், ஒரு உருண்டை வைத்து, அதன் நடுவில், கட்டை விரலால் சிறிய பள்ளம் செய்து, அதில் உருக்கிய நெய் ஊற்றி, நெய்யைத் தொட்டுக் கொண்டு சாப்பிடலாம்.


பருவம் அடைந்த பெண்களுக்கு, அத்தை, மாமி முறையுள்ளவர்கள் களி செய்து கொண்டு வந்து தருவார்கள். உளுந்து இடுப்பு எலும்பைப் பலப்படுத்தும். கருப்பட்டி, நல்லெண்ணெய், நெய், குளிர்ச்சியையும் உடலுக்கு வலுவையும் கூட்டும். மாதமொரு முறை, இந்தக் களியை செய்து, சாப்பிடக் கொடுக்கலாம். எலும்புகளைப் பலப்படுத்தி, உடலை வலுவாக்கும்.

இனிப்புப் பொருட்களில், அஸ்கா எனப்படும் சர்க்கரை, மண்டை வெல்லம், அச்சு வெல்லம், பனங்கற்கண்டு, வட்டு கருப்பட்டி என்று பல விதங்கள் உண்டு. ஒவ்வொன்றும் ஒவ்வொரு சுவை. ஒவ்வொரு நிறம்.

உளுத்தங்களிக்கு வட்டுக் கருப்பட்டிதான் நன்றாக இருக்கும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

அருமையான குறிப்பு. உடல் ஆரோக்கியத்தைக் காக்கக்கூடிய பாரம்பரிய சமையலை இக்காலத்தலைமுறையினருக்கு சொல்லித்தரும் உங்களுக்கு நன்றிகள் பல.

அன்புடன்,
ஹலீமா

ரொம்ப நல்ல குறிப்பு. என் விருப்ப பட்டியலில் சேர்த்துட்டேன். Mixie யில் பவுடர் பண்ணலாமா? என் பொண்ணுக்கு செய்து குடுபதற்காக கேட்கிறேன். என்னிடம் கருப்பட்டி இல்லை அதற்கு பதில் வெல்லம் சேர்த்து செய்யலாமா?

அன்பு ummuzain,

வருகைக்கும், பாராட்டுக்களுக்கும் மிகவும் நன்றி.

அன்பு Nithi_Nimal

மிக்ஸியில் பவுடர் பண்ணலாம். நன்றாக நைசாகத் திரிக்கணும்.

வெல்லம் சேர்க்கலாம். அளவு கொஞ்சம் கூடப் போட்டுக்குங்க. இனிப்பு கூடுதலாக இருக்கும்.

இறக்கி வைக்கும்போது, உருட்டும் பதத்தை விட, நெகிழ்த்தியாக இருந்தால், நான் ஸ்டிக் தவாவில் எண்ணெய் ஊற்றி, களியைப் போட்டு, கிளறினால், கெட்டியாகி விடும்.

அன்புடன்

சீதாலஷ்மி

அன்பு சீதாம்மா,

குறிப்பை பார்க்கும் போதே நீங்களா தான் இருப்பீங்கன்னு உள்ளே வந்தேன். கரெக்ட் தான் நீங்களே தான் :) களிமாவு வறுத்து அரைத்து வைக்கலாமா? பச்சை மாவாக வைத்திருந்தால் எத்தனை நாள் நன்றாக இருக்கும்? என் பேரு கேள்வியின் நாயகி. புதுசா வச்சுட்டேன். நீங்க பதில் சொல்லியே ஆகனும் ;) இந்த மாதிரி சத்தான குறிப்புகளை தரத்தான் ஆளில்லாம ஏங்கிட்டு இருக்கோம். இனி நீங்க இருக்க கவலையேன். குட்டிகளுக்கு செய்து தந்து அசத்த போறேன். தொடர்ந்து இதேபோல சத்தான குறிப்புகளை தரவேண்டும். வாழ்த்துக்கள் :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

நன்றி நன்றி நன்றி....... இந்த குறிப்பை தான் நான் ரொம்ப நாளா தேடிட்டு இருந்தேன்...... என்னவர் கல்யாணம் ஆனா நாளில் இருந்து உளுத்தங்களி செய்து கொடுக்கும் படி கேட்டு கொண்டிருக்கிறார்...... நானும் என் பாட்டி, பெரியம்மா என்று கேட்காத ஆளில்லை....... கிடைக்கலியே......
உங்க புண்ணியத்தால இன்னைக்கு எனக்கு இந்த குறிப்பு கிடைத்தது நன்றி...... :)

இதில் மாவு எந்த பதத்தில் கரைக்க வேண்டும்......

சீதாம்மா.
ரொம்ப அருமையான ரெசிபி சொல்லியிருக்கீங்க !!!கல்யாண ஆன புதுசுல கொஞ்ச மாதம் மைசூர் ல இருந்தப்போ ,ராகி களியை அந்த ஊர் மக்கள் செய்யர்ப்போ ஆச்சரியமா பார்ப்பேன். இதுவும் கொஞ்சம் அதே ஸ்டைலில் இருந்தாலும், புதுசாவும் ஆரோகியமானதாவும் இருக்கு.நன்றி மா .

அன்பு சீதாலஷ்மிமா,

மிக நல்ல ஆரோக்கிய‌க்குறிப்பு இது. அருமையான அந்தகாலத்து பாரம்பரிய குறிப்பு கொடுத்ததற்கு மிக்க நன்றி!

எனக்கு சில சந்தேகங்கள். கருப்பட்டிக்கு பதில் வெல்லம் சேர்க்கலாம் என்று சொல்லியிருக்கிங்க. சுமார் எவ்வளவு என்று முடிந்தால் கப் அளவில் சொல்லுங்கள். அப்படியே, அரிசிமாவு, உளுந்துமாவு தனித்தனியே இங்கே கிடைப்பது வாங்கியிருக்கேன். அதை உபயோகிக்க‌லாமா? என்ன அளவில் என்றும் சொல்லுங்கள். (இங்கே மெஷினில் கொடுத்து அரைக்கும் வசதி இல்லை) அதனால்தான் ரெடிமேட் பவுடரில் செய்யலாமா என்று ஒரு எண்ணம். இல்லை கருப்பு உளுந்துதான் போடவேண்டும் என்றால், தனியே வாங்கி மிக்ஸியில் அரைத்து செய்துபார்க்கிறேன். நன்றி!

அன்புடன்
சுஸ்ரீ

அன்பு கேள்வியின் நாயகியே,

கேளுங்க, கேளுங்க, கேட்டுட்டே இருங்க.

வறுக்கணுங்கறது இல்லை, மிஷினில் அரைக்கிற சூடே போதும். 3 மாசம் வரைக்கும் மாவு கெட்டுப் போகாது. பக்குவமாக மூடி வச்சால், 6 மாசம் கூட இருக்கும். அதுக்கப்புறம் என்றால், வண்டு வர்றதுக்கு வாய்ப்பு இருக்கு.
குழந்தைகளுக்கு மட்டும் இல்ல, நமக்கே உடம்புக்கு ரொம்ப நல்லது.
நேரம் கிடைக்கிறப்ப, செய்து பாருங்க.

அன்பு தீபா,

ஒரு டம்ளர் மாவுக்கு, இரண்டு டம்ளர் தண்ணீர் கலக்கலாம். குக்கரில் நல்லா வெந்த்துக்கு அப்புறமும், கொஞ்சம் நெகிழ்த்தியாக இருக்கற மாதிரி தோணினால், நான் ஸ்டிக் தவாவில் களியைப் போட்டு, ஒரு ஐந்து நிமிஷம் கிளறிடுங்க.

எனக்குமே தண்ணீர் அளவு தெரியாமல், ரொம்ப நாள் ட்ரை பண்ணாம இருந்தேன்.

பெரியவங்க செய்யறப்ப, வெண்கல உருளியில் கருப்பட்டி தண்ணீர் கொதிக்க வச்சு, அதில் களி மாவைக் கொட்டி, கீரை மத்தின் குச்சியை, அதில் சொருகி வைப்பாங்க, பிறகு, அதை இறக்கி வச்சு, அழுத்திக் கிளறுவாங்க. அந்த மாதிரி செய்ய, எனக்கு வரலை. அதனால் குக்கரில் செய்து பார்த்தேன். அவங்க செய்யற டேஸ்ட் வரலை. ஆனாலும் ஓ.கே.

அன்பு உத்ரா,

ஆஹா, ராகி களியை ஞாபகப்படுத்திட்டீங்களே, சாப்பிடணும் போல இருக்கு. அதுவும் அந்தக் களிக்கு, தொட்டுக்க, துவரம்பருப்பு அரைச்சு, ஒரு குழம்பு பண்ணுவாங்க பாருங்க, சுடச் சுட, சாப்பிட்டால், சூப்பர் டேஸ்டாக இருக்கும்.
இந்தக் களியும் நன்றாக இருக்கும். செய்து பாருங்க.

அன்பு சுஸ்ரீ,

கருப்பட்டிக்கு பதில் வெல்லம் சேர்க்கலாம். இதே மாதிரிதான், ஒரு பங்கு மாவுக்கு, ரெண்டு பங்கு வெல்லம் சேர்த்துக்குங்க.

அங்கே கிடைக்கும் உளுந்த மாவு, வறுத்துத் திரிச்சதாக இருக்கும்னு நினைக்கிறேன். அது முறுக்கு, தட்டை போன்ற பலகாரங்களுக்கு சேர்க்கலாம்னு நினைக்கிறேன்.

கறுப்பு உளுந்து வாங்கி, வீட்டில் மிக்ஸியில் திரிச்சுக்கலாம். இரண்டு தடவை சலிச்சுட்டு, திருப்பியும் மிக்ஸியில் போட்டு, திரிச்சு எடுக்கலாம். நல்லா வரும். கடையில் வாங்கியிருக்கும் அரிசி மாவுடன் இதைக் கலந்து கொள்ளலாம்.

செய்து பார்த்து, சொல்லுங்க.

அன்புடன்

சீதாலஷ்மி

ஓடிவாங்கோ... இன்று காலை உங்க உளுந்தங்களியை நான் செய்து சுவைத்துட்டேன். என் வீட்டில் எல்லாருக்கும் பிடிச்சுது. நீங்க சொன்ன கருப்பட்டி எனக்கு கிடைக்கல, அதனால் வெல்லம் தான் பயன்படுத்தினேன். ஆனால் சுவை சூப்பர். போட்டோ எடுத்து அனுப்பவே நினைத்தேன்... நேரமின்மை. அடுத்த முறை செய்யும்போது நிச்சயம் படமெடுத்து அனுப்பிடுறேன் :) களி செய்வது கடினமே இல்லைன்னு ஆக்கிட்டீங்க குக்கர் முறை கொடுத்து. சுவையான ஆரோக்கியமான குறிப்புக்கு மிக்க நன்றி சீதாலஷ்மி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

cooker i vida old style than full taste kidaigum