சோமாசா

தேதி: October 2, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

வரவிருக்கும் தீபாவளியை நீங்கள் அனைவரும் இன்சுவையுடன் கொண்டாட, அடுத்த இரண்டு வாரங்களுக்கு தீபாவளி பலகாரங்கள் செய்முறைகள் யாரும் சமைக்கலாமில் இடம்பெறும். தீபாவளி பலகாரங்களில் முக்கியமானது சோமாசா. மற்ற பலகாரங்கள் போல், சாதாரண நாட்களில் இவை செய்யப்படுவது கிடையாது. மிகவும் அரிதாகத்தான் செய்வார்கள். தீபாவளியை நினைவுபடுத்தும் பாரம்பரிய பலகாரமாகிய சோமாசாவுடன் இந்த தீபாவளி சிறப்பு குறிப்புகளை தொடங்குகின்றோம்.

 

மைதா மாவு - ஒரு கப்
பொட்டுகடலை - அரை கப்
சீனி - அரை கப்
டால்டா - கால் கப்
முந்திரி - 6
ஏலக்காய் - 4
எள்ளு - அரை தேக்கரண்டி
தேங்காய் துருவல் - கால் கப்


 

தேங்காயைத் துருவி எடுத்துக் கொள்ளவும். தேவையான இதரப் பொருட்களைத் தயாராய் வைத்துக் கொள்ளவும். பொதுவாக சோமாசா பூரணத்தை சீனி சேர்த்துதான் செய்வார்கள். சிலர் நாட்டுச் சர்க்கரை அல்லது பொடித்த வெல்லம் சேர்த்தும் செய்வதுண்டு.
டால்டாவை உருக்கி மைதா மாவில் ஊற்றவும். சிறிது சிறிதாக ஊற்றியும் பிசையலாம்.
மைதா மாவை நன்கு பிசைந்து, சப்பாத்தி மாவு பதத்திற்கு கொண்டு வரவும். மாவு நன்கு மிருதுவாக இருக்க வேண்டும்.
பொட்டுகடலை, சீனி, ஏலக்காய், முந்திரி ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு பொடி செய்துக் கொள்ளவும். ஏலக்காயை பொடியாக அரைக்க விரும்பாதவர்கள், அம்மியில் வைத்து தட்டி, பிறகு அரைத்த மாவுடன் சேர்த்துக் கொள்ளலாம்.
ஒரு வாணலியில் எண்ணெய் விடாமல் தேங்காய் துருவலை போட்டு 2 நிமிடம் வறுத்து பொன்னிறமாக வறுக்கவும். பிறகு எள்ளையும் அத்துடன் சேர்த்து வறுத்துக் கொள்ளவும்.
அரைத்தப் பொட்டுகடலை கலவையுடன் தேங்காய் துருவல், எள்ளு சேர்த்து கிளறி வைத்துக் கொள்ளவும்.
பிசைந்து வைத்த மாவில் ஒரு எலுமிச்சை அளவு உருண்டை எடுத்து அதை சப்பாத்தி கட்டையில் வைத்து தேய்த்து அப்பளமாக இடவும். மிகவும் மெல்லியதாக இல்லாமல் சற்று தடிமனாக இடலாம். பூரணம் வைப்பதால், பொரிக்கும் போது உடைந்து விடாமல் இருக்க வேண்டும். மிகவும் தடிமனாக இட்டால், வேகுவதற்கு நேரம் எடுக்கும். மொறுமொறுப்பு இருக்காது.
விரித்த மாவின் நடுவில் பூரணத்தை(பெட்டுகடலை கலவையை) வைத்து, ஒரு பாதியை எடுத்து மடிக்கவும்.
ஓரத்தை விரல்களால் அழுத்தி மூடி விடவும். ஓரத்தில் உள்ள மாவினை கத்தி அல்லது சோமாசா கரண்டி வைத்து நறுக்கி விடவும்.
ஒரங்கள் நன்றாக மூடியிருக்க வேண்டும். இல்லையெனில் பூரணத்தில் எண்ணெய் புகுந்து சுவையை மாற்றிவிடும். ஓரத்தை ஒட்டுவதற்கு, தண்ணீரை ஓரங்களில் தடவி விட்டு அழுத்தினால் எளிதில் ஒட்டி விடும். இப்படியே அனைத்து மாவையும் சோமாசாக்களாக தயார் செய்து கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சோமாசாக்களை தடவைக்கு இரண்டு மூன்றாக, வாணலியின் அளவு பொறுத்து, போட்டு பொரித்து எடுக்கவும். 2 நிமிடம் ஆனதும் பொன்னிறமாக இருக்கும் போது எடுக்கவும்.
நாற்பது ஆண்டுகளுக்கு மேல் சமையலில் அனுபவம் உள்ள திருமதி. காஞ்சனா அவர்களின் தயாரிப்பு இது. புதுப்புது உணவு வகைகளை செய்து பார்ப்பதுதான் தனது பொழுதுபோக்கு என்று கூறும் இவர், தற்போது பழக்கத்தில் இல்லாத, காலத்தால் மறைந்து போன, பழங்கால உணவுகள் பலவற்றின் செய்முறையை அறிந்து வைத்திருக்கின்றார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

அம்மா, நான் புதுசு. இப்பதான் அறுசுவையில் சேர்ந்திருக்கிறோன். இந்த ரெசிபியில் டால்டாவிற்கு பதில் நெய் சேர்க்கலாமா?

By
Subhashini madhankumar