சுழியன்

தேதி: October 3, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (2 votes)

தீபாவளிப் பலகாரங்களில் மற்றுமொரு முக்கிய பாரம்பரிய இனிப்பு, இந்த சுழியன். இதனை சுசியன், சுசியம் என்றெல்லாம்கூட அழைப்பர். பெயர் ஊருக்கு ஊர் வித்தியாசப்பட்டாலும் செய்முறை என்னவோ ஒன்றுதான். வெறும் மைதா மாவு இல்லாமல், கூட சிறிது இட்லி (புளிக்காத) மாவு சேர்த்து கலந்து அதில் பூரண உருண்டைகளை தோய்த்து எடுத்து சுட்டால், இன்னும் சுவை அதிகமாய் இருக்கும். மிருதுவாக இருக்கும்.

 

மைதா மாவு - அரை கப்
வெல்லம் - 100 கிராம்
தேங்காய் துருவல் - கால் கப்
கடலைப் பருப்பு - கால் கிலோ
உப்பு - ஒரு சிட்டிகை
ஏலக்காய் பொடி - ஒரு தேக்கரண்டி


 

முதலில் கடலைப் பருப்பை சுத்தம் செய்து ஒரு பாத்திரத்தில் போட்டு மூழ்கும் அளவிற்கு நீர் ஊற்றி, 45 நிமிடம் ஊற வைக்கவும்.
தேங்காயைத் துருவி எடுத்துக் கொள்ளவும். வெல்லத்தை நுணுக்கி கொள்ளவும். தேவையான இதரப் பொருட்களை தயாராய் வைக்கவும்.
ஊற வைத்துள்ள கடலைப் பருப்பை எடுத்து குக்கர் அல்லது பாத்திரத்தில் போட்டு 2 கப் தண்ணீர் ஊற்றி, சுமார் 20 நிமிடம் வேக வைக்கவும். குக்கர் என்றால் மூன்று விசில் வைத்தால் போதுமானது.
பருப்பு வெந்ததும் எடுத்து ஆற வைத்து, கைகளால் அல்லது கரண்டி கொண்டு பிசைந்து உதிர்த்து விடவும்.
நுணுக்கிய வெல்லத்தை ஒரு பாத்திரத்தில் போட்டு ஒரு மேசைக்கரண்டி தண்ணீர் ஊற்றி கிளறி, அடுப்பில் மிதமான சூட்டில் வைத்து பாகாய் காய்ச்சவும்.
வெல்லம் பாகாய் கரைந்ததும் அதில் ஒரு சிட்டிகை உப்பு, ஏலக்காய் பொடி, உதிர்த்து வைத்த்துள்ள கடலைப் பருப்பு, தேங்காய் துருவல் ஆகியவற்றைப் போட்டு கிளறவும்.
பிறகு அடுப்பில் இருந்து இறக்கி, பூரணத்தை எடுத்து ஆற வைக்கவும். மிதமான சூட்டில் இருக்கும்போதே சிறு சிறு உருண்டைகளாக உருட்டவும். நன்கு ஆறிவிட்டால் உருண்டை பிடிப்பது சற்று சிரமமாக இருக்கும்.
ஒரு பாத்திரத்தில் மைதா மாவு போட்டு அரை கப் தண்ணீர் ஊற்றி கரைத்துக் கொள்ளவும். தேவையெனில் ஒரு சிட்டிகை உப்பும் சேர்த்துக் கொள்ளலாம். கரைத்த மாவில் உருட்டி வைத்துள்ள உருண்டைகளைப் போடவும்.
மாவு நன்றாக உருண்டை முழுவதும் படும்படி பிரட்டி விடவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மாவில் தோய்த்த உருண்டைகளை எடுத்து, ஒரு முறைக்கு நான்கு அல்லது ஐந்து என போட்டு வேகவிடவும்.
உருண்டைகளை புரட்டிப் போட்டு இருபுறமும் வேகுமாறு செய்யவும். சற்று பொன்னிறமாக மாறியதும் எண்ணெய்யை வடித்து எடுத்து விடவும்.
சுவையான சுழியன் தயார். இதனைச் செய்து அந்த தினமே சாப்பிட்டு விடவேண்டும். நீண்ட நேரத்திற்கு தாங்காது. விரைவில் ஊசிப் போய்விடும். இந்த பலகாரத்தை தீபாவளியன்று அதிகாலை செய்வதுதான் உத்தமம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

நீங்கள் செய்து காட்டிய சுழியன் செய்தேன். தேங்காய்பூ மட்டும் சேர்க்கவில்லை. ரொம்ப நன்றாக இருந்தது. குறிப்புக்கு நன்றி.