ஓமப் பொடி

தேதி: October 17, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

Average: 5 (2 votes)

தீபாவளிக்கு செய்யப்படும் காரங்களில் ஓமப்பொடியும் ஒன்று. ஓமம் சேர்த்து செய்யப்படுவதால், மற்ற பலகாரங்களைச் சாப்பிடுவதால் உண்டாகும் ஜீரணக் கோளாறுகளை சரிசெய்யும்.

 

கடலை மாவு - அரைக் கிலோ
அரிசி மாவு - கால் கிலோ
ஓமத்தண்ணீர் - கால் லிட்டர்
லெமன் கலர் - கால் தேக்கரண்டி
உப்பு - ஒன்றரை மேசைக்கரண்டி
பெருங்காயத்தண்ணீர் - 25 மில்லி


 

கடலை மாவை சலித்து எடுத்து ஒரு பாத்திரத்தில் கொட்டவும்.
அத்துடன் சலித்த அரிசி மாவினையும் சேர்க்கவும்.
மாவின் மத்தியில் குழி போன்று செய்து கொண்டு அதில் வண்ணப் பொடியைப் போடவும்.
அத்துடன் உப்பையும் சேர்க்கவும். பின்னர் பெருங்காயத்தண்ணீர் ஊற்றவும்.
பிறகு ஓமநீரை ஊற்றி அனைத்தையும் ஒன்று சேர பிசையவும். சிறிது சிறிதாக சாதாரண நீர் சேர்த்து மாவினை மிகவும் இளக்கமாக இல்லாதவாறு பிசைந்து கொள்ளவும்.
பிசைந்த மாவினை ஓமப்பொடி அச்சில் எடுத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு கொதித்ததும், அதனுள் அச்சினை விட்டு திருகி, ஓமப்பொடியினை பிழியவும். கடைகளுக்கு செய்யும்போது சற்று பெரிய வகை அச்சினை பயன்படுத்துவார்கள். வீடுகளுக்கு முறுக்கு அச்சினை பயன்படுத்திக் கொள்ளலாம். உள்ளே இடும் அச்சு மாத்திரம் மெல்லிய துளைகள் கொண்ட (ஓமப்பொடி) அச்சாக இருக்கவேண்டும்.
வாணலி முழுவதும் ஓமப்பொடி படரும் அளவிற்கு பிழிந்து விடவும். பிழிந்த மாவு உடனேயே வெந்து மேலே வலை போன்று மிதக்க ஆரம்பிக்கும்.
மிகவும் மெல்லியதாக இருப்பதால் விரைவிலேயே வெந்து விடும். சாரணி கொண்டு அதனை மடித்து எண்ணெய்யில் இருந்து எடுக்கவும். சிறிது நேரம் எண்ணெய்க்கு நேராக சாரணியைப் பிடித்து எண்ணெய் வடியவிடவும்.
பின்னர் எண்ணெய் வடிகட்டியில் போட்டு மீதமுள்ள எண்ணெய்யையும் வடியவிடவும். இப்போது சுவையான, மொறுமொறுப்பான ஓமப்பொடி தயார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

செய்முறை, படம் மற்றும் விளக்கங்களும் ரொம்ப அருமை! ஓமத்தண்ணீர் என்றால் என்ன? ஓமத்தை நீர்விட்டு கொதிக்கவைத்து எடுத்துக்கொள்ளும் தண்ணீரா? அப்படியானால், எவ்வளவு ஓமத்திற்கு எவ்வளவு தண்ணீர் சேர்த்து கொதிக்கவிட்டு எடுக்கவேண்டும்? அல்லது ஓமத்தண்ணீர் என்று தனியாக கிடைக்குமா?

ஓமப்பொடி அச்சு முறுக்கு உரலில் உள்ளது அவ்வளவு மெல்லியதாக இல்லை. நாம் ஆர்டர் கொடுத்தால், வீட்டில் செய்யுமளவுக்கு சற்று சிறிய அளவில் ஓமப்பொடி அச்சும், காரசேவு பலகையும் கிடைக்குமா? காரசேவை சாரணி கொண்டு செய்யும்போது கை ரொம்ப வலிக்கிறது. வெளியிலும் வழிகிறது.அதனால்தான்!

மதிப்பிற்குரிய அறுசுவை நிர்வாகிக்கு,
உடனுக்குடன் பதிலும், தெளிவும், ஆலோசனைகளும் கொடுக்கும் நீங்கள், சுமார் ஒரு வாரத்திற்கும் மேலாக இதற்கு பதில் தரவில்லையே..........?!!! அடிக்கடி சந்தேகம் கேட்பதால் ரொம்ப தொந்தரவாக உள்ளதா? அல்லது ரொம்ப பிஸியா?

இன்றுதான் உங்களின் இரண்டு பதிவுகளையும் பார்த்தேன். இத்தனை நாட்கள் எப்படி தவறவிட்டேன் என்றுத் தெரியவில்லை. நீங்கள் ஆயிரம் கேள்விகள் கேட்டாலும் தொந்திரவாக எண்ணமாட்டேன். உங்கள் கேள்விகள் இரண்டிற்கும் விசாரித்து அறிந்து, நாளை பதில் கொடுக்கின்றேன். தாமதத்திற்கு தயவுசெய்து மன்னிக்கவும்.

தாமதத்தினால் ஒன்றும் பிரச்னையில்லை! ஆயிரம் கேள்விகள் வேண்டுமானாலும் கேட்பதற்கு வாய்ப்பளித்தீர்களே! சந்தோஷம்! ரொம்ப நன்றி சார்!

கொஞ்சம் தாமதமாக பதில் கொடுப்பதற்கு மன்னிக்கவும். கடைகளில் ஓமநீர் என்றே கிடைக்கின்றது. அதை பயன்படுத்தவும். படிகாரக்கல் போன்ற ஒன்றை கரைத்து ஓமநீர் தயாரிப்பதாக சொல்கின்றார்கள். தயாரிக்கும் முறையை பார்த்தால்தான் தெரியும். நாம் காராசேவிற்குப் பயன்படுத்தும் ஓமத்தை (சிறிய விதைகள் போன்று உள்ளவற்றை) கரைத்து பயன்படுத்தக் கூடாது என்கின்றார்கள். ஓம வாட்டர் என்று கடைகளில் கிடைப்பதை வாங்கி பயன்படுத்தவும்.

அடுத்து நீங்கள் கேட்டவாறு சிறிய அளவில் அச்சுக்கள் கிடைப்பதாக தெரிகின்றது. ஆர்டர் கொடுத்து செய்வதென்றால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். ஒன்று, இரண்டு என்றால்தான் கடினம். கொஞ்சம் பெரிய அளவு பலகையை வாங்கி, தகரம் வெட்டுதல், பற்ற வைத்தல் வேலை செய்யக் கூடிய கடைகளில் கொடுத்து நமக்கு விரும்பிய வடிவில் மாற்றிக் கொள்ளலாம்.

சென்னையில் பாய்க்கடை தெரு (பூக்கடை ஏரியா, சென்ட்ரலுக்கும் பாரிஸ்க்கும் இடையில்) அருகில் ஒரு தெரு முழுக்க பாத்திர கடைகளாக இருக்கும். அங்கே எல்லா சைஸிலும் கிடைப்பதாக சொல்கின்றார்கள். சென்னை வரும்போது அல்லது சென்னையில் உள்ள தெரிந்தவர்களை வைத்து வாங்க முயற்சிக்கவும்.

ரொம்ப ரொம்ப நன்றி சார். தாமதமானாலும் அழகான விளக்கம் அட்ரஸோடு கொடுத்தீர்கள்.
ஓம வாட்டர் வெளிநாடுகளில் கிடைக்காதே? ஓம விதையை நீரில் போட்டு வேகவைத்து எடுத்துக்கொள்ளகூடாதா? வேற ஐடியா இல்லையா?

perungaya thaneer enral enna?

arusuvai