தேதி: October 17, 2006
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
உடனடி குலோப் ஜாமூன் மாவுகளை வாங்கி, தண்ணீர் ஊற்றி பிசைந்து, உருட்டி, பொரித்து எடுத்து ஜாமூன் செய்வது இன்றைய காலக்கட்டத்தில் மிக எளிதாக இருக்கின்றது. ஆனால், நிறையப் பேருக்கு அதில் திருப்தி இருப்பதில்லை. என்னதான் மாவை மட்டும் வாங்கி ஜாமூன் தயாரித்தாலும், கடைகளில் ஜாமூனையே வாங்கிச் சாப்பிட்டதுபோல் ஒரு உணர்வு தோன்றும். தாங்கள் தயாரித்த திருப்தி இருக்காது. இன்ஸ்டண்ட் மாவுகள் எதுவும் இல்லாமல் நீங்களாகவே குலோப் ஜாமூன் தயாரிப்பது எப்படி என்பது இங்கே விளக்கப்பட்டுள்ளது.
மைதா மாவு - முக்கால் கப்
சீனி - ஒரு கப்
ஏலக்காய் - 3
பால் - கால் லிட்டர்
கலர் பவுடர் - கால் தேக்கரண்டி
சோடா உப்பு - ஒரு சிட்டிகை
டால்டா - 2 மேசைக்கரண்டி
நல்ல சுத்தமான, தண்ணீர் கலப்பில்லாத பாலாக வாங்கிக் கொள்ளவும். இதரப் பொருட்களை தயாராய் வைத்துக் கொள்ளவும். மைதாவுடன் சோடா உப்பு சேர்த்து, சலித்து எடுத்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி நன்கு காய்ச்சவும். அடிபிடிக்காவண்ணம் தொடர்ந்து கிளறிவிட்டபடி இருக்கவும். ஒரங்களிலும் பால் படியாதபடி வழித்துவிட்டு கிளறவும்.

கால் லிட்டர் பால் நன்கு சுண்டி வரும் பொழுது அதில் மைதா மாவை போட்டு கட்டி விழாமல் கிளறிக் கொண்டே இருக்கவும்.

பாத்திரத்தில் ஒட்டாமல் திரண்டு வரும் போது இறக்கி வைத்து மிருதுவான பதம் வரும் வரை டால்டாவை சேர்த்து கைகளால் பிசையவும்.

மாவு நன்கு மிருதுவாக இருக்கவேண்டும். கட்டிகளாக இருக்கக்கூடாது. மாவை அடித்துப் பிசையக் கூடாது.

பிசைந்த மாவினை சிறிது சிறிதாக கிள்ளி, ஒரே அளவிலான சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.

ஒரு பாத்திரத்தில் சீனியை போட்டு கலர் பவுடர் சேர்த்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி கரைத்து பாகு காய்ச்சிக் கொள்ளவும். அதில் ஏலக்காயை தூள் செய்து போடவும்.

வாணலியில் எண்ணெய் ஒன்றரை கப் ஊற்றி காய்ந்ததும், உருண்டைகளை போட்டு பொரித்து எடுக்கவும்.

உருண்டைகள் பொன்னிறமாக சிவந்ததும் எடுத்து, சீனிப் பாகில் போட்டு ஊறவிடவும்.

இரண்டு மணி நேரம் ஊறிய பிறகு எடுத்து சாப்பிட்டால் மிருதுவாக இருக்கும்.

நாற்பது ஆண்டுகளுக்கு மேல் சமையலில் அனுபவம் உள்ள திருமதி. காஞ்சனா அவர்களின் தயாரிப்பு இது. புதுப்புது உணவு வகைகளை செய்து பார்ப்பதுதான் தனது பொழுதுபோக்கு என்று கூறும் இவர், தற்போது பழக்கத்தில் இல்லாத, காலத்தால் மறைந்து போன, பழங்கால உணவுகள் பலவற்றின் செய்முறையை அறிந்து வைத்திருக்கின்றார்.

Comments
குலோப் ஜாமூன்
thank u for this recipe.
sajuna
gulab jamoon
குலோப் ஜாமூன்
வீட்டிற்கு கெஸ்ட் வராங்க என்று இந்த குலோப் ஜாமூன் செய்தேன்.நன்றாக வந்தது.எனக்கு கடை மாவை விட இந்த மாதிரி வீட்டில் செய்வது தான் பிடிக்கும்.
இதுவரை எப்படி செய்வது என தெரியாமலிருந்தேன்.
நன்றி
உமா.
udaiyamal iruka
gulab jamun seeni paagil podum podhu udaindhu vidugiradhu..udaiyamal iruka enna seivadhu
safinamubarak