கேக் அலங்காரம்

தேதி: December 6, 2013

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

ரோஜாக்கள்
முட்டை - 1
மெல்லிய ப்ரஷ்
வெள்ளைச் சீனி - கால் கோப்பை
இடுக்கி
கத்தரிக்கோல்


 

சீனியை ப்ராசெசரில் போட்டு நான்கைந்து சுற்று ஓட விட்டுப் பொடித்து எடுக்கவும். அதிலிருந்து ஒரு மேசைக்கரண்டி அளவு எடுத்து ஒரு தட்டில் வைத்துக்கொள்ளவும். (முழுவதற்கும் சேர்த்து கால் கோப்பை சீனி கூடத் தேவைப்படாது. ஆனால் கொஞ்சமாகப் போட்டால் ப்ராசெசரில் பொடிப்பது சிரமமாக இருக்கும்.)

முட்டை அறை வெப்பநிலையில் இருக்க வேண்டும். வெள்ளைக்கருவைத் தனியே பிரித்தெடுத்து நான்கைந்து துளி நீர் சேர்த்து கையால் அடிக்கவும்.

இதழ்களின் மேல் ப்ரஷ் கொண்டு மிக மெல்லிதாக முட்டை வெள்ளைக்கருவைத் தடவி, பொடித்து வைத்துள்ள சீனியைத் தூவவும். பூக்களின் பின் பக்கம் சீனி தூவ வேண்டியது இல்லை.

பூவைத் திருப்பிப் பிடித்து மெதுவே கையில் தட்டினால் மேலதிகமான சீனி கொட்டிவிடும்.

மீதிப் பூக்களையும் மொட்டுக்களையும் இதே போல் தயார் செய்து ஒரு தட்டில் எடுத்து வைக்கவும்.

இலையின் விளிம்பில் சுற்றிலும் முட்டை வெள்ளைகருவைத் தடவவும். நரம்புகளை மெல்லிய கோடாக வரைந்து கொள்ளவும். உலருமுன் சீனியைத் தூவி மேலதிகமானதைத் தட்டிவிடவும். கையால் அழுத்த வேண்டாம். இலைகளைப் பிடிக்க இடுக்கியைப் பயன்படுத்தவும்.

கேக்கின் மேல் அனைத்தையும் விருப்பம் போல வைத்து அலங்கரித்துக் கொள்ளவும்.

இயற்கை ரோஜாக்களை வைத்து செய்த திடீர் கேக் அலங்காரம் இது


பூக்கள் பூச்சிநாசினிகள் எதுவும் தெளிக்கப்படாது இருப்பது மிக முக்கியம். வீட்டுத் தோட்டத்து மலர்களானால் நல்லது. அன்று விரிந்த பூக்களாகத் தெரிந்துகொள்ளவும். இலைகள் அதிகம் முற்றாமலும் பிஞ்சாக இல்லாமலும் இருக்க வேண்டும். இளம் இலைகள் விரைவில் துவண்டுவிடும். முற்றிய இலைகள் பார்க்க அழகாக இராது. எதிலும் பூச்சிகள் இல்லை என்பதை நிச்சயம் செய்துகொள்ளவும்.

பூக்கள் எவ்வளவு நேரம் வாடாமல் இருக்கும் என்பது பூக்களையும் அன்றைய அறை வெப்பநிலையையும் பொறுத்தது. தேவைக்கு அரைமணி முன்னால் பூக்களைத் தயார் செய்யலாம். தயார் செய்ய பத்து நிமிடங்களுக்குள்தான் ஆகும். கேக்கை மட்டும் முன்பாகவே ஐஸ் செய்து தயாராக வைத்துக்கொள்ளவும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

Super imma

இன்றுதான் இதை பார்க்க நேர்ந்தது. மிக அழகு. :)
இந்த மலர் கொத்தை எப்படி கேக்கின் மேல் ஓர் கார்னரில் செட் செய்வதென்பதை சமயம் கிடைக்கையில் இங்கு தட்டி வையுங்கள் இமா. வாய்ப்பு அமைகையில் செய்து பார்க்க வேண்டும்.
நன்றி

நானும் பூக்களை ஒரு மூலையில்தான் வைத்திருந்தேன் வாணி. படம் பெரிதாக இருந்தால் பூக்கள் தெளிவாகத் தெரியவில்லையென்று பூக்கள் மட்டும் தெரியும்படியாக இருந்த படத்தை அனுப்பினேன். அப்பாவின் பிறந்தநாளுக்காக பாடசாலையிலிருந்து வந்ததும் சட்டென்று செய்து எடுத்துப் போன கேக் இது.

//மலர் கொத்தை// பூக்கள், இலைகள் அனைத்தும் கொத்தாக இராமல் தனித்தனியாகவே இருக்கும்.

//கேக்கின் மேல் ஓர் கார்னரில்// பட்டர் க்ரீம் ஐஸிங்/பட்டர் ஐஸிங் இரண்டினுள்ளும் காம்புகள் சுலபமாக இறங்கும். சரிவாகச் சொருக வேண்டும். அல்லாவிட்டால் டூத்பிக் கொண்டு துளைகளை ஏற்படுத்தியும் சொருகலாம். முதலில் தெரிவு செய்த மூலையில், பின் பக்கம் பெரிய பூக்களைச் சொருகுவதிலிருந்து ஆரம்பிக்க வேண்டும். அதன் முன்னால், சிறிய பூக்களையும் மொட்டுக்களையும் சொருகலாம். இலைகளில் பெரியவற்றைப் பெரிய பூவின் பின்னாலும் மீதியை அளவைப் பொறுத்து முன்னாலும் இடையிலும் சொருகலாம்.

கேக்கிக்கிற்கு ஐஸிங் பூசிய பின் மீந்திருக்கும் ஐசிங்கை பூக்கள், இலைகளை ஒட்டுவதற்கான க்ளூ போல பயன்படுத்தலாம். ஒரு முறை நன்கு கலந்துவிட்டு எடுக்க வேண்டும். காய்ந்திருந்தால் சிறிது நீர் அல்லது பால் சேர்த்து இளக்கிவிட்டு ஒட்டலாம்.

ரெடிமேட் ஐஸ்ட் கேக் வாங்கி அலங்கரிக்க நினைத்தால், ஒரு கரண்டி ஐஸிங் சீனியுடன் துளித்துளியாக நீர் சேர்த்துக் குழைத்தால் (க்ளேஸ் ஐஸிங்) பசை போல வரும். இதையும் ஒட்டுவதற்குப் பயன்படுத்தலாம்.

ஒட்டுவதற்காக பயன்படுத்தும் ஐஸிங் பார்வைக்குத் தெரியாத விதமாக இருக்க வேண்டும்.

இங்கு இருந்த படத்தைக் காணோம். :-) முடிந்தால் அறுசுவை ஃபான்ஸ் க்ரூப்பில் போட்டு விடுகிறேன்.

‍- இமா க்றிஸ்