சிநேகிதியே..!!

செக்கச் சிவந்த பந்தாய் பகலவன் மேற்குத் தொடர்ச்சி மலையினுள் மறைந்து கொண்டிருந்தான். சிலுசிலுவென்ற மாலைக் காற்றில் உற்சாகம் பொங்க நடை போட்டுக் கொண்டிருந்த என் கால்கள் எங்கள் குடியிருப்பு பகுதியில் புதிதாக பூத்து புன்னகைத்த “வாடகை நூலகம்” முன் சென்று நின்றது.

நான் தயங்கியபடி நின்றிருக்க, என்னை பரிவாய் உள்ளே அழைத்தது ஒரு முதிய குரல். உள்ளே சென்று சுற்றிலும் பார்வையை ஓட்டினேன். ஓர் சிறிய அறைக்குள் இத்தனை புத்தகங்களா என மலைத்து நின்றேன். யவனராணியும், கடற்புறாவும் என்னை காந்தமாய் ஈர்க்க என்னுள்ளம் இளஞ்செழியனோடு புகார் கடற்கரையில் நடை போட்டு, காஞ்சனா தேவியாய் நகரும் கப்பலிலிருந்து கரை நோக்கி காதலனை அழைத்து கதறி புகாரிற்கும், கலிங்கத்திற்கும் இடையே ஊஞ்சலாடியது.

உறுப்பினராக இணையச் சொல்லி அவர் கூறிய அனைத்து நிபந்தனைகளுக்கும் உதடுகள் தானாய் சரிசரி என்று கூறிக் கொண்டிருக்க, என் கைகளோ புத்தகங்களை ஓர் பரவசத்துடன் தொட்டுப் பார்த்துக் கொண்டிருந்தது. அகமகிழ்ந்தவராய் அம்முதியவர் என்னை புத்தகம் எடுத்துக் கொள்ளுமாறு கூற, ஓர் வழியாக என் பரவச நிலையில் இருந்து வெளிவந்து பிறகு வந்து எடுத்துக் கொள்வதாகக் கூறி அந்த சின்ன சுவர்க்கத்தில் இருந்து வெளி வந்தேன்.

வரும் முன் காற்றில் படபடத்த புத்தகம் என்னை வா என்று அழைத்தது. சங்க இலக்கியம், சரித்திரக் கதைகள், குடும்பக்கதைகள் என்று நகர்ந்த என் வாசிப்பு பயணத்தில் புதிதாக இணைந்தது பத்திரிக்கைகள். குமுதம் சிநேகிதி, அவள் விகடன், மல்லிகை மகள், லேடீஸ் ஸ்பெஷல், தேவதை, தோழி என்று அந்த பட்டியல் நீண்டு என் புத்தகத் தோழிகளே என் அறையை முழுவதுமாக ஆக்கிரமித்துக் கொண்டனர்.

சமையல், கைவினை, அழகு, தோட்ட பராமரிப்பு, சுயதொழில்கள் என என் அன்புத் தோழிகள் கற்றுத் தந்தது ஏராளம். குருவாய் வழிகாட்டிய தோழிகள் நான் சோர்வுறும் போதெல்லாம் மயிலிறகாய் என் மனம் வருடி இதம் சேர்த்து புன்னகைப்பர். என்னுலகம் மிக மிக அழகானது என் சிநேகிதிகளால். எனக்கு புதிய தோழிகளை பெற்றுத் தந்த நூலகத்திற்கு இன்றும் சென்று வருகிறேன். புத்தகங்களின் நட்போடு அம்முதியவரின் நட்பும் கிடைக்கப் பெற்று அக்கால நிகழ்வுகளை அறியும் வாய்ப்பும் கிடைக்கப் பெற்றேன்.

சில தோழிகளைப் பெறுவதே பேரானந்தம் என்றால், பலநூறு தோழிகளை ஒரே இடத்தில் சந்திக்கும் பேற்றை என்னவென்று சொல்வது! புத்தகக் கண்காட்சி என்று கேட்டு விட்டால் பல புதிய தோழிகளை சந்திக்கப் போகிறோமென்று மனம் ஆனந்த நர்த்தனம் புரியும். புதுத் தோழிகளை என்னில்லம் அழைத்து வந்து ஆராதிப்பேன். என் தோழிகளை பிறருடன் பகிர்ந்து கொள்வதில் எனக்கு கொஞ்சமும் விருப்பம் இருந்ததில்லை. அழகான என் தோழிகளை உருக்குலைத்து உருமாற்றித் தந்தால் தாங்குமா இந்த தோழியின் நெஞ்சம்??

பிரியமான தோழிகளோடு பயணிக்கையில், ஓர் நாள் புதிதான சமையல் குறிப்பொன்றைத் தேடி இணைய வெளியில் உலாவிக் கொண்டிருந்த போது என் வழியில் எதிர்பட்டது கண்ணைக் குளிர்விக்கும் பச்சைப் பசேலென்ற நிறத்தில் அறுசுவை இணையதளம்! சமையல் களஞ்சியம்! அறுசுவையோடு, பல்சுவையும் பரிமாறப்படும் அற்புதத்தளம்! முதல் பார்வையிலே மலர்ந்து விட்ட காதல் போல என்னுள்ளத்திலே ரோஜா பதியனிட்ட அன்புத்தளம்!! இருகரம் நீட்டி என்னை அன்புடன் அழைத்துக் கொண்ட அன்புள்ளங்கள் அநேகம்.

வந்த நோக்கம் மறந்து, பட்டிமன்றம், கவிதை, கதை என்று எழுத்துச் சிறகு விரித்து பறந்தேன். என் வானில் இணைந்தது பல கூட்டுப் பறவைகள். என் உலகமெங்கும் நாளும் ஆனந்த தோரணம்!! என்னுலகம் இருளும் போது தாய் மடியாக,வெற்றி பவனி காணும் போது கரவொலியாக உருமாறும் நேச நெஞ்சங்களுக்கு உதடுகள் சொல்லும் நன்றி பாதி, ஈரவிழிகள் சொல்லும் நன்றி மீதி புத்தகத் தோழிகளோடும், அறுசுவைத் தோழிகளோடும் அழகான ஒரு பயணத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறேன்.

நல்லதோர் நட்பு வாழ்வை வளமாக்கும்!!

அன்புடன்,
நித்திலா

5
Average: 4.9 (10 votes)

Comments

நித்திலா, அறுசுவையின் பந்தத்தை அழகாக, உங்களுக்கே உரிய கவித்துவமான வார்த்தைகளால் விளக்கி இருக்கீங்க :) வாழ்த்துக்கள் :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

ஹாய் அருள்,என் வலைப்பூவிற்கு அன்புடன் வரவேற்கிறேன் :)

உங்கள் அன்பான பாராட்டிற்கு மிகவும் நன்றி அருள்.

முதல் வருகைக்கும்,பதிவிற்கும் மீண்டும் எனது நன்றி :)

அன்புடன்
நித்திலா

இங்கும் கவிதை நடை அழகு நித்தி

Be simple be sample

உங்கள் வருகைக்கும்,பாராட்டிற்கும் மிகவும் நன்றி தோழி :)

அன்புடன்
நித்திலா

அழகான வர்ணனைகளுடன் அசத்தலான ஆரம்பம், மேலும் தொடர வாழ்த்துக்கள்ங்க :-)

நட்புடன்
குணா

அருமையான எழுத்து... அழகான வார்த்தை பயன்பாடு. அசத்துங்க நித்திலா. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

உங்கள் அழகுத்தமிழ் அறுசுவையில் இந்த வலைபதிவில் கொஞ்சி விளையாடப்போவதை ஆவலுடன் படிக்க விழைகிறேன்..
அருமை...!!!
வாழ்த்துக்கள்

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

வாவ், நித்தி, ரொம்ப நேர்த்தியான எழுத்துக்கள், ரொம்ப அழகா எழுதிருகீங்க, அருமையான பகுதி, வாழ்த்துக்கள், 5 ஸ்டார் கொடுத்தாச்சு.

அன்புடன்
பவித்ரா

வணக்கம் குணா,

//அழகான வர்ணனைகளுடன் அசத்தலான ஆரம்பம்//

மிகுந்த மகிழ்ச்சி,மிகவும் நன்றி குணா.

தங்கள் வருகைக்கும்,கருத்திற்கும்,வாழ்த்திற்கும் மீண்டும் எனது நன்றிகள் :)

அன்புடன்
நித்திலா

ஹாய் வனிதா,

//அருமையான எழுத்து... அழகான வார்த்தை பயன்பாடு//

ரொம்ப சந்தோஷமாயிருக்கு,மிகவும் நன்றி வனிதா.

தங்கள் வருகைக்கும்,கருத்திற்கும் மீண்டும் எனது நன்றி :)

அன்புடன்
நித்திலா

ஹாய் பிரின்சஸ்!!!

உங்க பதிவு பார்த்து ரொம்ப சந்தோஷப்பட்டேன்.எதிர்பார்க்கவே இல்லை,நீங்க

வருவீங்கனு,ரொம்ப ரொம்ப நன்றி பிரின்சஸ் :)

என் எழுத்தை மிளிரச் செய்யும்,உள்ளத்தை குளிரச் செய்யும் உங்கள்

வரவிற்காக இந்த நிலவு காத்திருக்கும்.

அன்பு நிறைந்த வாழ்த்திற்கு ஆயிரமாயிரம் நன்றிகள் :)

அன்புடன்
நித்திலா

ஹாய் பவி!!

என்ன இப்படி ஒரு இன்ப அதிர்ச்சி கொடுத்துட்டீங்க,ரொம்ப ரொம்ப நன்றி பவி.

//ரொம்ப நேர்த்தியான எழுத்துக்கள், ரொம்ப அழகா எழுதிருகீங்க//

ரொம்ப ரொம்ப சந்தோஷமாயிருக்கு,ரொம்ப நன்றிடா பவி.

//5 ஸ்டார் கொடுத்தாச்சு// ஸ்பெஷல் தேங்க்ஸ்டா பவி.

எதிர்பாராத மழையால எவ்வளவு சந்தோஷப்படுவோம்,அப்படி ஒரு

சந்தோஷத்தை எனக்கு கொடுத்திருக்கீங்க,நன்றி பவி.

வருகைக்கும்,கருத்திற்கும்,வாழ்த்திற்கும் எனது மனமார்ந்த நன்றிகள் :)

அன்புடன்
நித்திலா

நித்திலா
எப்போதும் போல் அசத்தும் கவிநடை. வாழ்த்துகள்.

அன்புடன் மஞ்சுளாஅரசு
எப்போதும் சிரித்திரு

ஹாய் மஞ்சுளா,

நீண்ட நாட்களுக்கு பிறகு காண்பதில் மகிழ்ச்சி.

//எப்போதும் போல் அசத்தும் கவிநடை// மிகவும் நன்றி தோழி.

தங்கள் வருகைக்கும்,வாழ்த்திற்கும் மீண்டும் எனது நன்றி :)

அன்புடன்
நித்திலா

அறுசுவை உடன் தொடங்கிய நட்பை ஒரு கதையாக கொடுத்தது அருமை இதில் நித்தியின் வருணனை உடன் அழகு ஆரம்பத்தில் படிக்கும் போது இது புத்தகங்களை வைத்து வருகிறது என்று நினைத்தேன் ஆனால் முடிவு நம் சிநேகிதி அறுசுவை பற்றியது இதை எதிர்பார்கவில்லை நான் அருமை

உன்னால் எப்போதும் எதுவும் முடியும் என்று நம்பு அது கண்டிப்பாக நடக்கும்

அன்பு நித்தி
எப்பவும் போல முதல் பாரா வர்ணனை அனுபவித்து படித்தேன்.
புத்தங்கள் நம் உற்ற தோழி என்பது உண்மையே நித்தி.
புத்தகங்கள் அறிவு சுரங்கத்தின் திறவு கோல்கள்.
இன்ப பூங்காவின் நுழை வாயில்கள்
அறுசுவையும் அந்த வரிசையில் நமது இணைபிரியா தோழியாகி விட்டது உண்மையே தோழி.
கதையின் கருத்து மட்டுமின்றி,ஒவ்வொரு உவமையும் வர்ணனையும் ரசிக்கும்படி படைத்திருக்கீங்க நித்தி
வாழ்த்துக்கள் தோழி

அன்பு நித்திலா,

நம் அனைவரின் அன்புத் தோழியான அறுசுவையைப் பற்றி, அருமையாக வர்ணித்து எழுதியிருக்கீங்க. கொஞ்சும் கவிதை நடை, எப்பொழுதும் போல ரசிக்க வைத்தது.

அன்புடன்

சீதாலஷ்மி

ஹாய் தனு,

உங்க பதிவு பார்க்க ரொம்ப சந்தோஷமாயிருக்கு,ரொம்ப நன்றி தனு :)

தொடர்ந்து எனக்கு ஆதரவு கொடுக்கிறதுக்கு ரொம்ப நன்றிடா.

//அறுசுவை உடன் தொடங்கிய நட்பை ஒரு கதையாக கொடுத்தது அருமை//

ரொம்ப நன்றிடா தனு.

//இதில் நித்தியின் வருணனை உடன் அழகு//மீண்டும் மீண்டும் நன்றி.

உங்கள் வருகையால் மிகவும் மகிழ்ந்தேன்,நன்றி தனு :)

அன்புடன்
நித்திலா

ஹாய் நிக்கி,

வாங்க,வாங்க :)

//எப்பவும் போல முதல் பாரா வர்ணனை அனுபவித்து படித்தேன்//

உங்கள் ரசனைக்கு எனது நன்றி நிக்கி :)

//புத்தகங்கள் நம் உற்ற தோழி என்பது உண்மையே நித்தி.
புத்தகங்கள் அறிவு சுரங்கத்தின் திறவு கோல்கள்.
இன்ப பூங்காவின் நுழை வாயில்கள்//

அனைத்தும் சத்தியமான வார்த்தைகள் நிக்கி :)

//அறுசுவையும் அந்த வரிசையில் நமது இணைபிரியா தோழியாகி விட்டது//

ஆம் தோழி :)

//கதையின் கருத்து மட்டுமின்றி,ஒவ்வொரு உவமையும் வர்ணனையும் ரசிக்கும்படி படைத்திருக்கீங்க//

மீண்டும் எனது நன்றி நிக்கி.உங்கள் வருகை என் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கியது.

அன்புடன்
நித்திலா

வணக்கம் சீதாம்மா :)

எனது வலைப்பதிவிற்கு அன்புடன் வரவேற்கிறேன் :)

உங்கள் பதிவைக் கண்டு மிகவும் மகிழ்ந்தேன்.உங்கள் பதிவு எனக்கு விருதிற்கு

இணையானது,மிகவும் நன்றி சீதாம்மா.

//அருமையாக வர்ணித்து எழுதியிருக்கீங்க. கொஞ்சும் கவிதை நடை, எப்பொழுதும் போல ரசிக்க வைத்தது//

மனம் இப்போதே நிறைவடைந்தது.உங்கள் வருகைக்கும்,பதிவிற்கும் எனது

மனமார்ந்த நன்றிகள் :)

அன்புடன்
நித்திலா

ஹை! கலக்குது நித்திலா.
அறுசுவைக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது.

‍- இமா க்றிஸ்